Search This Blog

30.6.11

பூணூல் மத அடையாளமா? அரசை ஆட்டிப் படைக்கின்ற ஆயுதமா?


பூணூல் மகிமை

கடந்த 25.6.2011 சென்னை பதிப்பு சிட்டி எக்ஸ்பிரசில் சங்கராச்சாரிய சிறீசிறீராகவேஸ்வர பாரதி மகா சுவாமிஜி ஓர் அரிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்திய மாநிலங்களைச் சநாதன தர்மத்தின் வழி ஒன்றி ணைப்பது என்பது அக்கட்டுரையின் நோக்கமாகும். அக்கட்டுரைக்கு ஆங்கிலத்தில் இடப்பட்டிருந்த தலைப்பு UNITING NATIONS THROUGH SANATHANA DHARMA என்பதாகும்.

இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு மாநிலமும் ஒரு தேசிய இனத்தின் அடையாளம் தானே! ஜனநாயக யுகத்தில் சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்கள் - வெகு மக்களாக - எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற நிலையில் - இவர் களுக்கெல்லாம் வாக்குரிமை வழங்கப்பட்டு இருக்கிறபோது இப்படிப்பட்ட தலைப்பில் எழுதுவதற்கு ஆச்சாரியாருக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? அவர் என்னதான் அப்படி எழுதினார் என்கிறீர்களா? அக்கட்டுரையின் சாரம் இதுதான்.

பெருவெள்ளம் வருகிறது. மக்கள் எல்லாம் அடித்து செல்லப்படுகிறார்கள். அவர்களுள் ஒரு சிலர் அவ்வெள்ளத்தை எதிர்த்து நீந்தி கரை சேருகிறார்கள். ஆனால் அரிதான ஆத்மாக்களே அப்பெரு வெள்ளத்தின் திசையையே மாற்றி விடுகிறார்கள். தம்மையும் பிறரையும் காப்பாற்றுகிறார்கள்.

இங்கே பெருவெள்ளம் என்று எழுதப்பட்டு இருப்பது சமண, பவுத்த மதங்களின் எழுச்சியையாகும். இந்த எழுச்சியின் விளைவாக நமது தாய்நாடு இருளில் மூழ்கியது. வேத தர்மம் கண்டனம் செய்யப்பட்டது.

நமது மரபு, பழக்க வழக்கங்கள், சடங்குகள் எல்லாவற்றையும் மக்கள் நிராகரிக்கத் தொடங்கினர். பெரும்பாலான மக்கள் சமண, பவுத்த மதங்களையே போற்றினர். அவை இரண்டும் அரசுகள் போற்றுகின்ற மதங்களாகவும் இருந்தன.

இதனால் மக்களிடையே ஒற்றுமையின்மையும், சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களை வணங்குகிற பக்தர் களிடையே வேறுபாடுகள் தோன்றின. இப்படிப்பட்டதாய் இருந்தது அப்பெரு வெள்ளம்.

அதனைத் திசை திருப்பி மக்களைக் காப்பாற்றியவர் ஆதி சங்கரர். அதனால்தான் சிவருமானே அவதாரம் எடுத்து சங்கரராக கேரளத்தில் உள்ள காலடியிலே பிறந்தார். 32 ஆவது வயதில் மறைந்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கொள்கைகளை எடுத்துச் சொல்ல அவருக்கு உகந்த உறுதுணை இல்லை. அரசுகளின் ஆதரவும் இல்லை. ஆனால் ஆதிசங்கரர் சமண, பவுத்தர்களை வென்று வேத தர்மத்தை தனி மனிதராக இந்நாட்டில் நிலைநாட்டினார். எப்படி அவரால் இந் நாட்டில் அப்படிப்பட்ட சிறந்த மனிதராக தனிநபராக ஈடுபாடு கொண்டு வேத தர்மத்தை நிலைநாட்ட முடிந்தது?

ஆதிசங்கரரைப் போன்ற மகான்களிடம் உள்ள உள்ளுணர்வு மிக பலம் வாய்ந்தது. இன்னும் முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் புறக்கருவிகளைவிட அகவுணர்வு மிகபலத்தோடு அவருக்கு ஆதரவை நல்கியதால் அவர் அந்த வெள்ளத்தை எதிர்த்து வேத தர்மத்தை நிலைநாட்டினார். ராமன், ராவணனது மாபெரும் ராணுவத்தை, யானைகளையும், ராட்சதர்களையும் கொண்ட ராணுவத்தை எப்படி வெற்றிக் கொள்ள முடிந்தது?

அதுவும் குரங்கு, கரடிகளின் கூட்டத்தை வைத்துக் கொண்டு என்றால் அவனது ராமனது உள்ளுணர் வாலும் அவன் பக்கம் சரியான நியாயம் இருந்ததாலும் ஆகும். அதே போன்றது தான் ஆதி சங்கரருடைய நிலையும்! அவர் ஆன்ம பலத்தினால் தான் வெற்றி பெற்றார். அவர் வாக்கு பலத்தாலும், தவ வலிமையானலும், ஆத்ம பலத்தாலும் ஆன்மிகப் புரட்சியைச் செய்தார்.

எப்போது தர்மம் அழிக்கப்படுகிறதோ அப்போது கடவுள் தோன்றி அந்தத் தர்மத்தைக் காப்பாற்றுவார். ஆகையினால் தான் சமண, பவுத்த வெள்ள காலத்தில் சிவனான கடவுள் சங்கரராக அவதரித்தார். அதாவது கேரளாவிலுள்ள காலடியில் பிறந்தார். ஆகவேதான் சங்கரக் குழந்தை அதன் 8 ஆவது வயதிலேயே நான்கு வேதங்களிலே பெரும் தேர்ச்சி பெற்றது. 12 வயதிற்குள் எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தது.

தனது 16 வயதிற்குள் உபநிடதங்களுக்கும், கீதைக்கும் விளக்கவுரையை எழுதியது அந்த ஞானக் குழந்தை! 16 வயதிற்குள் ஞானத்தைப் பெற்றுக் கொண்ட சங்கரர் என்ன செய்தார்?

அவர் உயிர் வாழ்ந்த மேலும் 16 ஆண்டுகளுக்குள் இப்பரந்த பாரத தேசத்தில் பயணம் மேற்கொண்டு சநாதன தர்மத்திற்குப் புதிய எழுச்சியை உருவாக்கினார். அப்படி மேற்கொண்ட பயணத்தின் போது அவர் நிகழ்த்திய தருக்கதினால் நாட்டில் இருந்த மற்ற சிந்தனை நெறிகளையும் மதக் கொள்கைகளையும் வென்றார். அவரது போராட்டம், தத்துவங்களின் வழியான அறப்போராட்டம்.

சங்கரரை வெல்வதற்குப் பகைவர்கள் இல்லை. அவர் பகையை வென்றெடுத்தார். சங்கரர் தம் கர்மத்தினாலே உயர் ஞானம் பெற்று வாதிட்டு வென்றதைப் போலவே மந்தன மிஸ்ராவையும் வென்றார். அவர் சங்கரரின் சீடரானார். சங்கரர்க்கு என எந்தப் பட்டமும் இல்லை. சித்து விளையாட்டுகளும் அவரிடத்தில் இல்லை.

அவர் லோககுரு; அத்வைதக் கொள்கையை நிலைநாட்டி அதற்கு மாமன்னராய் விளங்கி வருபவர். நாட்டில் இருந்த அறியாமையைப் போக்கியவர். அவர் கொளுத்திய அறிவு ஜுவாலை எப்போதும் சுடர்விட்டுக் கொண்டே இருக்கும். பாரத தேசத்தில் எத்தனையோ குருக்கள் பிறந்திருக்கிறார்கள்.

ஆனால் ஆதி குரு என்று சொல்லக் கூடியவர் சங்கராச்சாரி யார் மட்டுமே. ஆதிசங்கரரருடைய மாபெரும் கொடை என்னவென்றால் மதத்தின் மூலமாகவும் கலாச்சாரத்தின் மூலமாகவும் பாரத தேசத்தை ஒருங்கிணைத்து இருக்கிறார். மக்கள் கடவுளின் பெயராலும், மதங்களின் பெயராலும் அதன் தத்துவங்களின் பெயராலும் சண்டை யிட்டுக் கொண்டு இருந்தனர்.

கோவில்களை அழித்தனர். வேதங்களை எரித்தனர். அப்போது சங்கரர் ஒரே மேடையில் எல்லா கடவுள்களையும் வழிபடுவதற்குரிய பஞ்சயாதன பூசையை ஒன்றாகச் சேர்ந்து வழிபட நெறிப்படுத்தினார்.

இப்பஞ்சயாதன பூசையில் அய்ந்து தெய்வங்களை மட்டும் புனிதக்கல் வடிவத் தில் வழிபாடு நிகழ்த்த பிரநிதித்துவப்படுத் தப்பட்டது. சிவன் லிங்க வடிவத்திம், விஷ்ணு சாளக்கிராம வடிவத்திலும், துர்க்கை சொர்ணமுகி கல் வடிவத்திலும், கணேசருடைய உருவம் ஷோனபத்ரா கல்லிலும், சூர்யனின் வடிவம் சப்திகா விலும் வடிக்கப்பட்டன. இக்கற்கள் எல்லாம் பாரத தேசத்தின் பல பகுதிகளிலிருந்து எடுத்து வரப்பட்டன.

பாரதத்தின் ஒருமையை ஒரு சின்னமாக எடுத்துரைப் பதற்காக! நாம் எப்போது பஞ்சயாதன பூசை செய்கிறோமோ அப்போது நாம் பாரத மாதாவை வழிபடுகின்றோம் என்று பொருள். ஆதி சங்கராச்சாரியார் மற்றொரு கொடையை நாட்டிற்கு அர்ப்பணித்து இருக்கிறார்.

சநாதன தர்மத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக மடங்களை நிறுவியதுதான் மாபெரும் சிறந்த பணியாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோகர்ணத்தின் அருகே நிறுவிய அஷோக் என்ற இடத்தில் ஸ்ரீரகோத்தமா மடத்தை நிறுவிய தாகும். இப்போது இதனை சிறீராமச் சந்திரபுரம் மடம் என்று கூறுகிறார்கள்.

நாம் ஒரு நாடு, ஒரு ராணுவம், ஒரு பொருளாதாரக் கொள்கை, ஒரே அரசாங்கம் என்று கூறுகின்றோம். ஆனால் நாம் அப்படி இப்போது இல்லை. ஆனால் ஆதிசங்கராச்சாரி யார் வாழ்ந்த காலத்தில் அங்கம், வங்கம், கலிங்கம் எனப் பல நாடுகளாக இருந்ததை அவரால் சநாதன தர்மத்தின் மூலமாக ஒரே நாடாக ஒன்றி ணைக்க முடிந்தது. இன்றைய தினம் அப்படி நாம் இணைவதற்கு - இணைக் கப்படுவதற்கு - நமக்கு அப்படி ஒரு சக்தி - அதிகாரம் தேவைப்படுகிறது.

அரசியல் சட்டத்தில் மதச்சார்பின்மையைப் பற்றி எழுதி வைத்து விட்டு அல்லது திருத்தம் செய்துவிட்டு சநாதன தர்மத்தின் மூலம் எப்படி இந்தியாவை இணைக்க முடியும்? இங்கே இருக்கிற மதச் சிறுபான்மையினர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் என்னாவது?

அவர்கள் இந்த நாட்டைவிட்டு எங்கே போவார்கள். (வர்ணாசிரம) சநாதன தர்மம் என்றால் என்ன? சில பேர் அந்த சமூக முறை இன்னமும் இருக்கிறதா என்று கேட் கிறார்கள். அதுவும் விவரம் தெரிந்தவர்கள் கூட இப்படிப் கேட்கிறார்கள்.

அது பார்ப்பனர்களின் வாழ்வியல் முறை - ஓசை எழுப்பாமல் கடிக்கின்ற நாகத்தைப் போல இருக்கும். இதனை இன்னும் வெகு அழகாகவும் ஆழமாகவும் விதைக்காமல் விளைகின்ற கழனி என்றார் அறிஞர் அண்ணா!

ராமச்சந்திரபுரம் சங்கராச்சாரி யார் ஏன் இப்போது பாரததேசம் சநாதன தர்மத்தின் மூலம் இணைக்க வேண்டும் என்று எழுதுகிறார்? ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்பரிவார்களின் முழக்கங்களும் அது தானே! அதுதான் பூணூல் மகிமை; அந்த நூலில் என்ன இருக்கிறது? அதை ஏன் புதுப்பிக்கிறார்கள்? என்பதை யெல்லாம் நாம் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். பூணூல் அணிவது மத அடையாளம் மட்டும் அன்று; அது அரசியல் ஆதிக்கத்தின் அடையாளம்! அது எப்படி என்பதைப் பார்ப்போம்.

--------------------(தொடரும்) --"விடுதலை” 28-6-2011

பூணூல் மகிமை

கடந்த 29.5.2011 அன்று பெரியார் திடலில் எம் அருமை நண்பர் திருவாரூர் இரா.தியாகராசன் (சின்ன குத்தூசி) அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் எந்த ஒரு பத்திரிகை யாளருக்கும் இப்படிப்பட்ட ஓர் இரங்கல் கூட்டம் நடைபெற்றதில்லை. அவ்வளவு சிறப்பாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவரைப் பற்றி பேசுகிற போது தொடக் கத்திலேயே ஒன்றை நாம் குறிப்பிட் டோம். பார்ப்பனப் பெற்றோர்க்குப் பிறந்த தியாகராசன் சூத்திரராக மரித்தார் என்று பேசினோம். அது எப்படி என்பதை எம்மால் அக்கூட்டத்தில் மிக விளக்கமாக எடுத்துச் சொல்ல முடியவில்லை; போதுமான நேரமில்லை.

பிராமண, ஷத்திரிய , வைசிய, சூத்திர நால்வர்ணத்தில் முதல் மூன்று பிரிவினருக்கு பூணூல் அணியும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. சரி, பூணூல் என்பது எங்கிருந்து வந்தது? படைப்புக் கடவுளான பிரம்மா பிறக்கிற போதே பூணூலோடு தோன்றினார். அதனால் நால்வர்ண வரிசையில் முதல் முப்பிரிவினர் உயர்ந்தோர் ஆதலால் பூணூல் அணிகிற பழக்கம் உண்டாயிற்று. அதற்கென்று மரபு, சம்பிரதாயங்கள், யாகங்கள், மந்திரங்கள் என்று தோன்றலாயின. பூணூல் அணிவதைப் பூணூல் கல்யாணம் என்றும் உபநயனம் என்றும் கூறுவர்.

பூணூலை அணிந்த பிறகுதான் பார்ப்பனப் பெற்றோர்க்குப் பிறந்தாலும் வேதத்தைக் கற்பதற்கு அனுமதி பெற்றது போன்றது ஆகும். ஆகவே தான் வேதத்தைக் கற்பதற்கு வேத விதிப்படி செய்ய வேண்டிய ஸம்ஸ்காரம் உபநயனம் எனப்படும் பூணூல் அணிகிற முப்பிரிவினையும் துவிஜர்கள் எனப் படுவார்கள். அப்படி என்றால் என்ன? தாயிடம் முதல் பிறப்பும் உபநயனத்தின் போது மவுஞ்சீ பந்தனத்தால் (பூணூல் அணிவதால்) இரண்டாவது பிறப்பு இம்மூவருக்கும் ஏற்பட்டு விடுகிறதாம். இதனால் இவர்களை துவிஜர்கள் - இரு பிறப்பாளர்கள் என்று கூறு கிறார்கள். இந்த மூன்று பிரிவினருக்கும் பூணூல் அணிவதற்கு வயது நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிராமண, ஷத்திரிய, வைசியர்கள் முறையே 8,12,16 வயதிற்குள் அதாவது காமம் மனத்தில் புகுவதற்கு முன் உபநயன தீட்சை பெற்றுவிட வேண்டும். வேதங்களுக்கு PROCEDURE CODE கள் பல உண்டு. அதை அவர்கள் சுருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் விதிக்கப் பெற்ற நித்திய கருமங்கள் என்று கூறிச் செல்வர். மேலே நாம் குறிப்பிட்டுள்ள வயதிற்கு விதிவிலக்குகளும் வழங்கி இருக்கிறார்கள். பிராமணனுக்குப் 16 வயது வரை உபநயனத்தை ஒதுக்கி வைக்கலாம். அவ்வாறே ஷத்திரியனுக்கு 22 வயது வரையிலும், வைசியனுக்கு 24 வயது வரையிலும் ஒதுக்கி வைக்கலாம். பூணூல் அணிவதில் ரிக்வேதிகளும், சாமவேதிகளும் இருக்கிறார்கள். உபநயனம் செய்விக்கிற புரோகிதர் - வாத்தியார் யாருக்கு உபதேசம் செய்து பூணூலை அணிவிக்கிறாரோ அப்போது அவர் கீழ் வருமாறு கூறுகிறார்.

இந்த குமாரனுக்குப் பிறந்தது முதல் இந்த வினாடி வரை பிற ஜாதி தாதியிடமும் செவிலித் தாயிடமும் பாலுண்டதாலும், பிறஜாதி ஹைவாஸ ஸஹபோஜனத்தாலும், தகுதியற்ற கூட்டத்தின் போஜனத்தாலும், உச்சிஷ்ட போஜனத்தாலும்,

தொடத்தகாதவற்றைத் தொட்டதாலும், அந்தந்த காலத்திற்குரிய பரிசுத்தமின்மையாலும் ஏற்பட்ட
எல்லாப் பாவங்களுக்கும் பிராயச்சித்த வாயிலாக காயத்திரி ஸ்வீகாரத்திற்கும் எனக்கு காயத்திரியை உபதேசிப்பதற்கும், யோக்கியதை சித்திக்க அனுக்கிரகம் செய்தருள வேண்டும்.

மேலே காயத்திரியை உபதேசிப்பதற்கு என்று கூறப்படுவது ரிக்வேத மந்திரம். அது சூரியனைப் புகழ்ந்து பாடுவது போன்றதாகும். காயத்திரி என்றால் துர்க்கை, சரஸ்வதி என்றும் பொருள்படும். இந்த மந்திரங்களைக் சொல்லி பிராமண பெற்றோர்க்குப் பிறந்த பிள்ளைக்கு அதற்குரிய வயதில் அல்லது சலுகைத் தரப்பட்ட வயதில் பூணூலை அணிவித்தால் தான் வேதங்களைப் படிக்கிற தகுதி அப்பிள்ளைக்குக் கிடைக்கிறது. மற்ற இருவருக்கு ஷத்திரிய - வைசியர்க்கு பூணூல் அணிகிற பெருமை மட்டுமே உண்டு. இன்னுஞ் சொல்வதானால் வைசியர், ஷத்திரியர் அப்பெருமையோடு மட்டும் நிறுத்திக் கொண்டனர். அதற் குரிய காரணங்களை இங்கே விளக்கினால் கட்டுரை மிகப் பெரிதாகிவிடும். ஆனால் பிராமண, ஷத்திரியர்களுக்குப் பூணூல் அணிவது என்ன உரிமையை சமூகத்தில் அவர்களுக்கு வழங்குகிறது?

பிராமண தருமம் ஞான விருத்தி செய்வது, ஷத்திரிய தருமம் அய்ஸ்வரிய விருத்தி செய்வது.இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று ஆதரவாயிருக்க வேண்டும் என்று அவர்களுடைய PROCEDURE CODE கள் விளக்கமளிக்கின்றன. வைசியன் உற்பத்தியான பொருள்களை மக்கள் நுகர்ச்சிக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்து பொருள் ஈட்டுபவனாக இருப்பான். மேல் அடுக்கு இரண்டின் ஆதரவு எப்போதும் அவனுக்கு உண்டு, கிடைக்கும். சூத்திர பிரிவுக்கும் நால் வர்ணத்திற்கு அப்பாலுள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பூணூல் அணியும் உரிமை வழங்கப்படவில்லை. சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்கள் தான் எண்ணிக்கையில் அதிகமானவர்கள், நுகர்ச்சிக்கான உற்பத்தி பொருள்களை உருவாக்குபவர்கள். இவர்கள் தான் சமூகத்தின் அடிப்படை. இந்த வெகு மக்களின் உற்பத்திப் பொருள்களைப் பகிர்ந்து கொள்வதிலும், அவர்களை ஆள்வதிலும் நேரடியாக ஈடுபடுவர்கள் ஆட்சியாளர்கள் - ஷத்திரியர்கள்! அவர்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். அவர்களை வழிநடத்துபவர்கள் பார்ப்பனர்கள். கடவுளோ, தெய்வமோ பார்ப்பனர்களின் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். அது ஒரு கற்பனையான கருதுகோள் தானே. உழைக்கிற சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஞானம் பெறவும், அய்ஸ்வரியத்தை உருவாக்கிக்கொள்ளவும் உரிமை இல்லை. ஆனால் எல்லா உழைப்பும் அவர்களு டையதே!

வர்ணாசிரம சநாதன தர்மம் என்பது மதப்போர்வையில் உள்ள ஓர் அரசியல் அமைப்பு முறையே ஆகும். இதற்குக் கடவுள்கள் பயன்படுத்தப்பட்டு இருக் கிறார்கள். கோவில்கள் இவ்வமைப்பு முறைக்கு மய்யமாக இயங்கி வந்து இருக்கின்றன. சமணம், பவுத்தத்திற்கு முந்தியது, ஆனாலும் புத்தரின் இயக்கம் அமைப்பு முறையாக இயங்கிய அறிவு இயக்கமாகும். அதனால்தான் இந்த மதம் - இயக்கம் சிறப்புற்றிருந்த காலத்தைப் புனிதத் தென்றல் வீசிய காலம் என வர்ணிக்கிறார் பண்டித நேரு! உலகிலேயே அமைப்பு முறையாக முதன் முதலில் இயங்கிய மதம் புத்தமதமே! இதனைத்தான் பிற மதங்கள் பின்பற்றத் தொடங்கின. சமணமும், பவுத்தமும் எழுச்சி பெற என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பூணூல்தான் காரணம்! எப்படி?

மொத்த மக்கள் தொகையிலிருந்து ஆளுகிறவர்களை வேறுபடுத்தி அறிவ தற்காக காயத்ரி வழிபாட்டின் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டு அணிவிக்கப் பட்டது தான் - பூணூல் என்பது! இதை ராகுல சாங்கிருத்யாயன் மொழியில் சொல்வதானால் கீழ்க்காணும் விதத்தில் குறிப்பிடலாம்.

பிரமாணர், ஷத்திரியர், வைசியர் ஆகிய சொத்துடைமை வர்க்கத்தாரின், தனிச்சொத்துடை மையைப் பாதுகாப்பதற்காகவே, அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே,செய்வினைப் பயன் என்ற மதத் தத்துவத்தை நியாயப்படுத்துவதற்காகவே, தனிச் சொத்தின் காவல்காரனான அரசின் கரங்களை மதத்தின் மூலம் வலுப்படுத்துவதற்காகவே மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவினரின் பிறப்புகளுக்கும் விசேஷஅந்தஸ்து அளிக்கப்பட்டது.

இந்த மூன்று பிரிவினரின் அதிகாரங்கள், அக்கிரமங்கள் அதிகரித்ததன் விளைவாக அறிவு பூர்வமாகச் சிந்திக்க தொடங்கினர் ஷத்திரியர்கள். அதன் விளைவாகத் தோன்றியதுதான் சமணமும், பவுத்தமும்! இவ்விரண்டு அமைப்பு களையும் தோற்றுவித்தவர்கள் அரசர் களாய் இருந்தவர்களே! இவ்விரு மதங்களின் எழுச்சியைத்தான் இந்தியன் எக்ஸ்பிரஸின் சிட்டி எக்ஸ்பிரஸ்சில் எழுதிய சங்கராச்சாரியார் கட்டுரை, வெள்ளம் என்று கூறுகிறது. அத்தகைய வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சநாதன தர்மத்தை நிலைநாட்டியவர் தான் ஆதிசங்கரர். அது போல இப்போதுள்ள மாநிலங்களை இந்த ஜனநாயக ஊழியில் ஒன்றிணைக்க வேண்டும் என்று ஒரு சங்கராச்சாரியார் எண்ணி கட்டுரை எழுதுகிறார் என்றால் வர்ணாசிரம சநாதன தர்மம் முழுவதுமாக இயங்கிய கால கட்டத்தில் பூணூலின் மகிமை என்னவாக இருந்திருக்கும் என்பதை நம்மவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூணூல் என்பது மத அடையாளம் மட்டுமல்ல, அது அரசையே ஆட்டிப் படைக்கின்ற ஆயுதம், அந்தப் பூணூலையே அணியாமல் அதற்குரிய சடங்குகளை செய்து கொள்ளாமல் அதைப் பற்றி நன்குணர்ந்து புறக்கணித்துவிட்டு சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தம் வாழ்நாள் முழுவதும் போராட்ட எழுத்துக்களாக எழுதிக் குவித்த திருவாரூர் இரா.தியாகராசனை (சின்ன குத்தூசியை) எப்படிப் பார்ப்பனர் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?

ஆகவே அவரைப் பற்றிய இரங்கலுரையை ஆற்றுகிறபோது பார்ப்பன பெற் றோருக்குப் பிறந்த திருவாரூர் இரா. தியாகராசன் சூத்திரராய் மரித்தார் என்று மட்டுமே பேசினோம். விளக்கமாகப் பேச முடியவில்லை. பார்ப்பதற்கு நூலாய்த் தெரியும். அதனுள் எத்தனை நுட்பங்களை எப்படியெல்லாம் திணித்து வைத்து இருக்கிறார்கள். ஆவணி அவிட்டம், காயத்ரி ஜபம், உபநயனம் - பூணூல் கல்யாணம் என்பதில் எல்லாம் அரசியல் உள்ளதே இதனை நம்மில் ஒருவரும் கவனிப்பதில்லையே! எவ்வளவு தந்திரமாக ஒரு சமூக ஏற்பாட்டை மதத்தோடு பிணைத்து அரசியலோடு இணைத்து இருக்கிறார்கள். உலகிலேயே இப்படி ஒரு சமூக ஏற்பாட்டைப் பார்க்க முடியாது.

மேல்நாட்டிலும் ‘CHURCH AND STATE’ என்று சொல்வதுண்டு. அதன் பிணைப்பும் இத்தகைய இறுக்கமான ஒன்றே. ஆனால் அவர்கள் அதனை சநாதனம் என்று கூறிக்கொண்ட தில்லை. ஒரு சாதியை மட்டும் - வர்ணத்தை மட்டும் மேலாண்மை உடையதாக ஆக்கிக் கொள்ள வில்லை. இங்கே அப்படி இல்லை. கீதை வர்ணசங்காரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று போதிக்கிறது. வர்ணசங்காரம் என்பது பிராமணன் ஷத்திரியானா கவோ, ஷத்திரியன் வைசியனாவோ, வைசியன் பிராமணனாகவோ, சூத்திரன் இதர வர்ணத்தானாகவோ மாறக்கூடாது. அதாவது வர்ணக் கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது. திருமண உறவுகள் நிகழ்ந்துவிடக்கூடாது. இதனைத்தான் வர்ண சங்காரம் என்று குறிப்பிடுகிறது கீதை. அந்தந்த வர்ணத்தானுக்குரிய வேலையை அவனவன் செய்ய வேண்டும். இதுவே வர்ணாசிரம தருமம் - முறை. இதை அழிவுறாமல் காப்பாற்ற வேண்டும். அப்போது தான் அம்முறை நிலைத்து இயங்கும். அதுவே சநாதனம் என்று கூறப்படுகிறது. அதற்கு அழிவில்லா தது என்று பொருள். இப்படி பூணூல் ஆளும் வர்க்கத்தின் அடையாளமாக மதப்போர்வையில் இருக்கிறது.

முரணியக்கத்தைக் கூறுகின்ற காரல் மார்க்ஸ் எந்த ஒரு சமூக நிகழ்வும் அரசியல் இல்லாமல் இல்லை என்று கூறியதைப் பூணூலுக்குப் பொருத்திப் பாருங்கள். எவ்வளவு துல்லியமாக ஒவ்வொரு சமூக நிகழ்வையும் அவர் மதிப்பிட்டு எழுதி யிருப்பார் என்பதை இந்த ஒரு எடுத் துக்காட்டைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். ஆக, ஒருவன் பார்ப்பனப் பெற்றோருக்குப் பிறந்ததால் மட்டுமே பிராமணன் ஆகிவிட முடியாது. பூணூல் தரிக்க அதற்கான சடங்கு களைச் செய்து அணிந்து கொள்ளும் போது தான் அவன் இரு பிறப்பாளன் - பிராமணன் ஆகிறான். அதனை இந்தக் காலத்திலும் நடைமுறைப் படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் இருந்தாலும் அதைக் கொண்டே இந்தியாவை இணைக்க வேண்டும் என்கிற ஆசை சிறீராமச்சந்திரப்புரத்து சங்கராச்சாரியாருக்கு இந்த ஜனநாயக யுகத்திலும் தோன்றி இருப்பது பூணூலின் பழைய மகி மையை அவர் நினைத்துப் பார்த்து கொண்டதன் விளைவே ஆகும்.

------------------(நிறைவு) -"விடுதலை” 30-6-2011 இல் க. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய கட்டுரை

29.6.11

அரசியல் மாற்றங்களுக்கும் பெரியார் தேவைப்படுகிறார்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை பெரியார் திடலில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

பெரியார் ஒளி விருதுபெற்ற தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை குறிப்பிடத்தகுந்ததாகும்.

தந்தை பெரியார் விருது பெறுவது எனக்குப் பெருமை அளிக்கக் கூடியதாக இருந்தாலும், தந்தை பெரியார் அவர்களின் பணிகளுக்கு முன், நான் ஒரு தூசு என்று மிக அடக்கமாகக் கூறிய பேராசிரியர் அவர்கள், இந்த மேடையிலே நாம் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம் என்றால், இந்த மன்றத்திலே இவ்வளவு திரளாகக் கூடி நமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடிகிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார் - அவர் இல்லாவிட்டால் நாம் எவரும் இலர் என்று அழுத்தந்திருத்தமாகக் கருத்தினைப் பதிவு செய்தார்.

தந்தை பெரியாரை எந்தக் காலத்திலும் தமிழர்கள் மறக்கக் கூடாது - அவர் கருத்தினைப் பின்பற்றத் தயங்கக் கூடாது என்று குறிப்பிட்டார்கள்.

அரசியலில், தேர்தலில் நேற்று நாம் தோல்வி அடைந்தோம் என்றால், அது நாம் அணிந்திருந்த சட்டை கிழிந்துபோனது போன்றது - அது ஒரு கட்சியின் தோல்வியாகும்.

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் ஏற்படுத்திய உணர்வு- சுயமரியாதை இயக்கக் கொள்கை என்பது வேறு - அது தோல்வி அடைந்ததாகப் பொருளாகாது என்றார் பேராசிரியர். இதே கருத்தைத்தான் திருவாரூர் நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் குறிப்பிட்டார் என்பது கருத்தூன்றத்தக்கதாகும்.
இதனைத்தான் துக்ளக் போன்ற பார்ப்பன ஏடுகள் - அவர்களின் வட்டாரங்கள் கேலி செய்கின்றன.

மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கும் வருணாசிரமம் கொடியது. நான்கு வருணங்களையும், பிரம்மாவின் முகத்தில் பிராமணன், தோளில் சத்திரியன், தொடையில் வைசியன், பாதங்களில் சூத்திரன் பிறந்தான் என்று எந்த மதத்தில் கூறப்பட்டுள்ளது?

மிகப்பெரிய வன்னெஞ்சம் படைத்தது பார்ப்பனர்களின் வேதங்களும், அவர்களின் சாத்திரங்களும். அவற்றை ஆணிவேர் வரை சென்று மூல பலத்தைத் தாக்கியவர் தந்தை பெரியார் என்பதால், நமக்குப் பெரியார் மிகவும் தேவைப்படுகிறார்.

தமிழன் என்ற ஓரினக் கோட்பாடு, இனச் சிந்தனை - ஒற்றுமை உணர்வு வருவதற்கு, வளர்வதற்குத் தடையாக இருப்பது ஜாதி உணர்வுதான் - ஜாதி நிலவும்வரை இனவுணர்வு வளராது.

தொடக்க காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியிலும், துணி துவைக்கும் சலவைத் தொழிலாளர்கள் பகுதியிலும்தான் திராவிடர் கழக - சுயமரியாதைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கும். தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிகளில் நடக்கும் திருமணங்களில் கலந்துகொண்டு அவர்கள் வீட்டில் சாப்பிட்டு வருவதைக் கட்டாயக் கடமை என்று கருதப்பட்டதை பேராசிரியர் எடுத்துக் காட்டியது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

ஜாதியின் கொடுமை தலைவிரித்தாடும் ஒரு சமூக அமைப்பில், இத்தகைய நடவடிக்கைகள்தான் - ரத்த ஓட்டத்தில் ஆண்டாண்டு காலமாகக் கலந்துவிட்ட அந்த ஜாதியின் பிடியைத் தளர்த்தும் - மன மாற்றத்தையும் கொண்டுவரும்.

அந்தக் காலகட்டத்தில் அதனைச் செய்வதற்கு ஒரு மனப் பக்குவம், துணிவு தேவை. அந்தப் பக்குவத்தை உண்டாக்கியவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் கண்ட தன்மான இயக்கமான திராவிடர் கழகமுமாகும்.

இன்றைக்கும்கூட சில கிராமங்களில் தேநீர்க் கடைகளில் இரு டம்ளர்கள் உண்டு என்றால், அந்தக் காலகட்டத்தில் சேரிப் பகுதிகளில் சென்று அவர்கள் வீட்டில் உணவருந்தியது எவ்வளவுப் பெரிய சாதனையாக இருந்திருக்க முடியும்!

அந்த உணர்வு மேலும் தூண்டப்படவேண்டும் - இளைஞர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புச் சிந்தனை விதைகள் விதைக்கப்படவேண்டும்.

ஜாதிக்கு மூல ஆதாரமானவைகள்பற்றிக் கடுமையான விமர்சனங்களை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும். அதன்மூலம் இனவுணர்வை ஏற்படுத்திவிட்டால் அரசியலிலும்கூட இனமானப் பார்வை ஏற்பட முடியும்.

அந்த உணர்வு குன்றியதால்தான் இனமல்லாதார் ஆட்சி அதிகாரத்தில் அமரும் நிலை ஏற்படுகிறது.

மிகப் பொருத்தமாக இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் புரட்சிக்கவிஞர் பாடல் வரிகளை எடுத்துக் கூறினார்.

தமிழாய்ந்த தமிழ் மகன்தான்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும்

என்ற தமிழியக்கப் பகுதியில் அமைந்த அந்தப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டினார்.

அரசியல் உள்பட எல்லா வகையிலும் தமிழன் தலை எடுக்க தந்தை பெரியார் தேவைப்படுகிறார் - அவர்தம் கொள்கைகள் தேவைப்படுகின்றன என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் விருது வழங்கும் விழாவின் சாரமாகும். வெறும் ஆர்ப்பாட்டமாக விழாக்கள் அமையக் கூடாது என்பதில் கருத்து செலுத்திய தோழர் தொல். திருமாவளவன் அவர்களையும் பாராட்டுகிறோம்.

----------------"விடுதலை” தலையங்கம் 29-6-2011

28.6.11

எது திராவிட இயக்கத்தின் கொள்கை?


திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா? (3)

எது திராவிட இயக்கத்தின் கொள்கை? தி.மு.க. என்பது திராவிடத்தைக் காப்பாற்ற வந்த இயக்கம் என்றால், திராவிடப் பகுதிகளான ஆந்திரம், கருநாடகம், கேரளம் இங்கெல்லாம் போய் தேர்தலில் நின்று ஓட்டுக் கேட்கத் தயாரா?

திராவிடம் திராவிடம் என்று சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிற இவர்களுக்கு, திராவிடம் என்ற சொல்லை அதன் உண்மையான அர்த்தத்தில் உச்சரிக்கிற தகுதி உண்டா? எங்கே இருக்கிறது திராவிடமும் அதன் கொள்கைகளும்? - என்று தீப்பொறி பறக்க எழுதுகிறது துக்ளக். ஆந்திரம், கருநாடகம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து சென்னை மாகாணமாக இருந்த கால கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் திராவிடர் இயக்கம். மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நிலையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமிழ்நாட்டு அளவில் திராவிடர் இயக்கம் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறது - பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. எல்லைகள் மாறியதால் இனப் பெயர் மாறுமா? குற்றாலத்தில் குடியிருந்தவன் கும்பகோணத்திற்குக் குடிபெயர்ந்து விட்டதாலேயே அவன் அப்பா பெயரும், அம்மா பெயரும் மாறி விடுமா? அப்படி சொல்லப் போனால் இந்தியா முழுமையும் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்கள் - பரவியிருந்தவர்கள் திராவிடர்கள்தானே! அதற்காக பாகிஸ்தானில் இப்போது உள்ள அரப்பா பகுதியில் தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று கேள்வி கேட்பார்களோ இந்த அ(ச)திபுத்திசாலிகள்?

ஆந்திரா உட்பட சென்னை மாநிலமும் இணைந்த மாநிலத்துக்கு பிரதமராக இருந்த பனகல் அரசர் (இராமராய நிங்கர்) காலத்தில்தான் மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்றிருந்த பார்ப்பன சதி, சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது என்பது துக்ளக் பார்ப்பன வட்டாரம் அறியுமா? சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த குப்புசாமி சாஸ்திரிக்கு மாத சம்பளம் ரூபாய் 300 என்றும், தமிழ்ப் பேராசிரியராக இருந்த கா. நமசிவாய முதலியார் அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.81 என்றிருந்த வருணாசிரமப் பேதத்தை ஆணை போட்டு சமன்படுத்தியவரும் திராவிட இயக்கத்தின் தளகர்த்தர்களுள் ஒருவரான அதே பனகல் அரசர் என்ற சரித்திரத்தை அறிவார்களா சதுர்வருணக் கூட்டத்தார்? கோயிலில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை பொட்டுக் கட்டி தேவதாசிகள் என்று அவர்களுக்குப் பெயரிட்டு, கோயில் புரோகிதப் பார்ப்பனர்களுக்கும், ஊர் மைனர்களுக்கும் வைப்பாட்டியாக்கிய கேவலத்தைச் சட்டம் போட்டுத் தடுத்ததும் திராவிட இயக்க ஆட்சிதான் என்ற சேதி தெரியுமா இந்தச் சிண்டர்களுக்கு? அதை எதிர்த்த சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரைதான் இந்தத் துக்ளக் கூட்டம் - நினைவில் வைக்கவும்.

பார்ப்பனர்களின் உக்கிராணமாக இருந்த கோயில்களை, அதன் திரண்ட சொத்துக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த குடுமிகளின் கையிலிருந்த ஆதிக்கத்தை தனிச் சட்டம் போட்டுத் தடுத்து, இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்ததும் திராவிடராகிய பனகல் அரசர்தான் என்பதை நினைவூட்டுகிறோம். அந்தத் திராவிட இயக்கத் தொடர்ச்சியாக அய்ந்தாம் முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்தான் தீட்சதர்களின் ஆனந்தத் தாண்டவ பூமியாக - சுரண்டல் சுரங்கமாக இருந்து வந்த சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தார் என்பதும் - அந்த ஆத்திரம்தான் துக்ளக் கூட்டத்தை - நான்கு கால் பாய்ச்சலாகப் பாயச் செய்திருக்கிறது என்கிற பாடத்தையும் நாங்கள் அறிய மாட்டோமா? ஆண்டு ஒன்றுக்கு சிதம்பரம் கோயில் வருமானம் ரூ.33199 என்றும், அதில் செலவு ரூ.33 ஆயிரம் என்றும் மீதித் தொகை ரூ.199 என்றும் நீதிமன்றத்தில் இந்தத் தீட்சதர் கூட்டம் அறிவித்ததே! அதே நேரத்தில் சிதம்பரம் கோயில், தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறைக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் கோயில் வருமானம் ரூ. 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் (டாலர்கள், தங்கம், வெள்ளி போன்ற காணிக்கைகள் நீங்கலாக இந்த வரவு) என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டதே! ஒருவரி துக்ளக் கும்பல் தீட்சதர்களின் மோசடியைப்பற்றி எழுதியதுண்டா? திராவிட இயக்கம் என்றால் என்ன என்று இப்பொழுது புரிகிறதா? கலைஞர்மீது காட்டுவிலங்காண்டித்தனமாகத் தாக்குவதன் தாத்பரியம் இதுதான். திராவிடம் என்ற சொல் அதன் உண்மையான அர்த்தத்தில் உச்சரிக்கத் தகுதி உண்டா என்று வினா தொடுக்கிறதே துக்ளக் அந்த வினாவுக்கு விடைதான் இந்தத் திராவிட இயக்க ஆட்சியின் சாதனைகள்!

திராவிடம் என்ற சொல்லை அதன் உண்மையான அர்த்தத்தில் உச்சரிக்க வேண்டும் என்ற உண்மையான கவலையில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
ஆரியர் - திராவிடர் என்பதெல்லாம் வெள்ளைக்காரன் கற்பனை என்று இதே கூட்டம் இன்னொரு இடத்தில் கூறுகிறது. மற்றொரு இடத்திலோ திராவிட இயக்கம் உண்மையான அர்த்தத்தில் அதனை உச்சரிக்கிறதா என்று கேள்வி கேட்கிறது?

பரிதாபம்! திராவிட இயக்கம் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தின் ஆணிவேரையல்லவா அழித்திருக்கிறது! உச்சிக் குடுமியோடு, பூணூல் உடலோடு இன்று ஊரில் நடமாட முடியாது - கோலி விளையாடும் சிறுவன்கூட கேலி செய்யும் நிலையை ஏற்படுத்தியது திராவிடர் இயக்கமே!

ஆத்திரம் வராதா - அனலில் விழுந்த பூச்சிகளாகத் துடிக்க மாட்டார்களா? என்ன செய்வது, நமது மக்களுக்கு இன்னும் தெளிவும், புத்தியும் வரவில்லையே! தோல்வி, திராவிட இயக்கக் கொள்கைக்கு அல்ல என்று கலைஞர் அவர்கள் கூறியிருப்பது - மேலும் தீவிரமாக திராவிட இயக்கக் கொள்கையைப் பரப்ப வேண்டும் என்ற அர்த்தத்தில்தான்; இளைஞர் அணி, மாணவர் அணிகள் தீவிரமாகட்டும். அதுதான் துக்ளக் கும்பலுக்குக் கொடுக்கும் உண்மையான சவுக்கடி!

வாழ்க பெரியார்!

வளர்க திராவிட இயக்கக் கொள்கைகள்!

------------------”விடுதலை” தலையங்கம் 28-6-2011

27.6.11

திராவிடக் கொள்கை எது தெரியுமா?பார்ப்பனர்களுக்கு ஏன் தேள் கொட்டுகிறது?


திராவிடக் கொள்கை எது தெரியுமா? (1)

திராவிடக் கொள்கை எது என்ற வினாவை எழுப்பியுள்ளது துக்ளக் (22.6.2011).

சரியான கூட்டணி அமைந்ததால், சரியாகவே ஜனங்கள் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால், உலகம் போகிற போக்குத் தெரியாமல் கருணாநிதி இன்னமும் திராவிடம், திராவிட இனம் என்று, கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி அதையே சொல் லிக் கொண்டு திரிகிறார். இன்றுள்ள இளைஞனும் திராவிடம் என்றால் கிலோ என்ன விலை என்றுதான் கேட்பான் என்று எழுதுகிறது துக்ளக்.


இதே கேள்வியை துக்ளக் அண்ணா திமுகவை நோக்கிக் கேட்குமா? அந்தக் கட்சியின் பெயரிலும் திராவிட இருக்கிறதே - திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் அண்ணாவின் பெயரும் அந்தக் கட்சியில் உள்ளதே - அக்கட்சியைத் தேர்தலில் ஆதரித்த - ஆதரித்தும் கொண்டிருக்கிற துக்ளக் அறிவு நாணயத்துடன் கேட்க வேண்டுமா, வேண்டாமா,


அப்படியெல்லாம் அதிமுகவைச் சீண்டிப் பார்த்தால் உருட்டுக் கட்டைதான் பரிசாகக் கிடைக்கும்.


இன்னொன்றும் காரணமாக இருக்கலாம்; வெறும் பெயர்தானே திராவிட அண்ணா என்பதெல்லாம் அ.தி.மு.க.வுக்கு. அதனால் ஆரியர்களுக்குத் தொல்லை கிடையாதே - இன்னும் சொல்லப் போனால் திராவிட என்னும் பதாகைக்குள் ஆரிய சமாச்சாரங்கள்தானே தாம் - தூம் என்று நடக்கின்றன - எனவே கண்டு கொள்ள மாட்டார்கள்.


ஆனால் தி.மு.க.வோ, அதன் தலைவர் கலைஞரோ திராவிட என்பதற்கான பொருள் தெரிந்தவர்கள். அதற்கான சித்தாந்தம் தெரிந்தவர்கள் என்பதால் நமக்கு ஆபத்தானவர்கள் என்பதை திராவிடர்களின் எதிரிகளாகிய ஆரியர்கள் - பார்ப்பனர்கள் - துக்ளக் வட்டாரத்தினர் தெரிந்து வைத்துள்ளனர். அதனால் தான் திராவிடர் திராவிடம் என்ற சொற்களைக் கேட்ட மாத்திரத்திலேயே, படித்த மாத்திரத்திலேயே புழுங்கிச் சாகிறார்கள்.


இன்றுள்ள இளைஞர்கள் திராவிட இனம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார்களாம். ஒரு வகையில் உண்மைதான். அந்த உணர்வை இந்த இளைஞர்கள் பெற்றிருப்பதால் தான் துக்ளக்குகள் விலை போகின்றன. திராவிட இனவுணர்வு பெறாத காரணத்தால்தான் நண்பர் யார்? எதிரிகள் யார் என்ற அடையாளம் தெரியாமல் அரசியலில் வாக்களிப்பதில் கூடத் தவறு செய்து விடுகிறார்கள்.


துக்ளக் ஏடு கிண்டல் செய்யும் அளவுக்கு நம் மக்கள் இனவுணர்வற்றுப் போயிருக்கிறார்கள் என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம். இதற்குப் பதிலடி என்பது - நம் மக்களிடம் திராவிட இனவுணர்வை வலுவாக அழுத்தம் திருத்தமாக ஊட்டுவதுதான் - அதற்காகப் பல வகைகளிலும் பிரச்சாரம் செய்வதுதான்.


திராவிடம்பற்றி கலைஞர் பேசினால் அக்னி மயமாகி, நச்சுத் துண்டுகளை எழுத்தாக்கி, வியாபாரம் செய்யும் துக்ளக் பிராமணர்கள் சங்கம் வைத்து தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று பகிரங்கமாகத் தீர்மானம் போடுகிறார்களே, அப்பொழுது அவர்களை நோக்கி ஏனப்பா, திராவிடத்தை உசுப்பிவிட ஆசைப்படுகிறீர்கள்? என்ற வினாவை எழுப்பி இருக்க வேண்டாமா?


திராவிடம், திராவிடர் என்ற மாத்திரத்திலேயே அந்த இடத்திலேயே அதனை அமுக்கி விட வேண்டும்; அது வளர்ந்தால் தங்களுக்கு ஆபத்து, மகா ஆபத்து என்பதை நன்கு உணர்ந்தவர்கள் அவர்களாயிற்றே!

ஆதி சங்கரர், திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று வருணித்திருக்கிறாரே. எப்பொழுதாவது துக்ளக் வகையறாக்கள் அதற்கு மாற்றுக் கருத்துகள் சொன்னதுண்டா? நாட்டுப் பண்ணாகிய ஜனகனமன பாடலில் திராவிட உத்கலவங்கா என்று நோபெல் பரிசு பெற்ற கவி இரவீந்திரநாத் தாகூர் குறிப்பிட்டுள்ளாரே - அதுபற்றி விமர்சித்ததுண்டா துக்ளக்? மொகஞ்சதாரே, ஹரப்பா நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று அய்ராவதம் மகாதேவன் (அய்யர்) போன்றோர் சொன்னபோது இவர்களின் பேனாக்கள், முனை மழுங்கிப் போய் விட்டனவா? சிந்து நாகரிகத்தில் திராவிடர்களின் எருதைக் குதிரையாக கணினி மூலம் மாற்றி, அது ஆரியர் நாகரிகம் என்று காட்டியதே பா.ஜ.க. ஆட்சி. அதன் பொருள் என்ன? திராவிடர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள், ஆரியர்கள் வடமேற்குக் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் ஆடு மாடுகளை ஓட்டி வந்தவர்கள் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் வகுப்புப் புத்தகத்தில் இடம் பெற்றதை யெல்லாம் சாமர்த்தியமாகப் பார்ப்பனர்கள் நீக்கி விட்டனர் - அந்தத் தைரியத்தில்தான் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறது துக்ளக்; இதனை சவாலாக எடுத்துக் கொண்டு இனவுணர்வு வெப்பத்தை எழுப்புவதுதான் சரியான பதிலடியாக இருக்க முடியும் - அதனைச் செய்வோம்!

------------------"விடுதலை” தலையங்கம் 25-6-2011


திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா? (2)

திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத் தில் கலந்து கொண்டோமா, ஏதோ நாலு வார்த்தை பேசி விட்டுச் சென்றோமா என்று கருணாநிதி வந்திருக்கலாம். தேர்தல் தோல்வியைப்பற்றிப் பேசுகிறேன் என்று ஏதோதோ உளறிக் கொட்டி யிருக்கிறார் முத்தமிழர் வித்தகர் - என்று துக்ளக் எழுதுகிறதே (22.6.2011) - ஒரு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் எதைப் பேசுவது எதைப் பேசக் கூடாது என்பதைத் துக்ளக் சோ ராமசாமி அய்யரைக் கேட்டுக் கொண்டுதான் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்களா பார்ப்பனர்கள்?

தி.மு.க. தலைவர் எதைப் பேசினாலும், எழுதினாலும் சொந்தமாக பேசக் கூடியவர் - திராவிட இயக்கத் தலைவர்களின் கருத்துகளை ஆதாரம் காட்டிப் பேசக் கூடியவர்தான்; திராவிட இன உணர்வு கருத்துகளை மக்கள் மத்தியில் வைக்கக் கூடியவர் தான்; அந்த அடிப்படையில்தான் திருவாரூர் பொதுக் கூட்டத்திலும் பேசியிருக்கிறார்.

பார்ப்பனர்களுக்கு ஏன் தேள் கொட்டுகிறது?

திருவாரூர் பொதுக் கூட்டத்தில் ஏதேதோ உளறிக் கொட்டியிருக்கிறார் தி.மு.க. தலைவர் என்று துக்ளக் குமுறுகிறதே - அப்படி என்ன ஏதேதோ பேசியிருக்கிறார்?

தி.மு.க. இந்தத் தேர்தலில் தோற்றுவிட்டது என்று யாராவது சொன்னால் நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, தோற்பது திராவிட இயக்கத்தில் உணர்வு, கொள்கைகள் அல்ல என்று பேசி விட்டாராம் மானமிகு கலைஞர் - அது பொறுக்க மாட்டாமல் தான் துக்ளக் பார்ப்பன வட்டாரம் தாண்டிக் குதிக்கிறது.

தமிழ்நாட்டில் தன்மான இயக்கமும், திராவிட இயக்கமும் ஊட்டிய இனவுணர்வு கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பார்ப்பன அல்லாத உணர்வு என்பதற்கான ஒரு குறியீடுதான் வரலாற்று ரீதியான திராவிடர் என்பதாகும். பார்ப்பனர் வேறு பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம் வேறு என்று பிரித்துக் காட்டுவதற்கான எல்லைக் கோடுதான் அது.

வரலாற்றில் பார்ப்பன அல்லாத மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்று இழித்தும், பழித்தும், உரிமை பறித்தும், வேசி மக்கள் என்று ஒடுக்கியும் ஆதிக்கம் செலுத்தினார்களே, அந்த நிலையிலிருந்து விடுபட்டு மானமும், அறிவும் உள்ள மக்களாக, உரிமை படைத்த இனத்தவர்களாக பார்ப்பனர் அல்லாத மக்கள் வெடித்துக் கிளம்ப வேண்டும் என்ற வெப்ப உணர்வை ஊட்டும் வரலாற்றுச் சுக்கான்தான் திராவிடர் என்பதாகும்.

அதனை நினைவூட்டலாமா? அதனை நினைவூட்டிக் கொண்டே இருந்தால் அது ஆரியப் பார்ப் பனர்களுக்கு ஆபத்தாயிற்றே - அவர்களின் ஆதிக்க ஆணி வேரில் வைக்கப்படும் வெடி மருந்தாயிற்றே - அதனைத் தி.மு.க. தலைவர் செய்து கொண்டிருக் கிறாரே என்று ஆத்திரத்தில் எழுதும் அமில வரிகள் தான் ஆரிய ஏடுகளுடையது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிடர் பல்கலைக் கழகம் தோன்றுவதற்கு முக்கிய வேராக இருந்த வருமான டாக்டர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் 2001ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை (பா.ஜ.க.) சந்தித்து திராவிடியன் என்சைக்ளோ பீடியோ என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

அந்நூலைப் பெற்றுக் கொண்ட ஜோஷி, அந்நூலின் பெயரில் உள்ள திரவிடியன் என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி.அய். சுப்பிரமணியம் மத்திய அமைச்சரை நோக்கி நீங்கள் நாட்டுப் பண்ணி லிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கி விடுங்கள்; நானும் திராவிடர் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கி விடுகிறேன் என்றாரே!

துக்ளக் பார்ப்பனரிலிருந்து மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய பா.ஜ.க. பார்ப்பனர் வரை ஒரே மாதிரியாகவே சிந்திக்கிறார்கள் என்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய திராவிடர்கள் தெரிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால் கலைஞர் அவர்கள் திருவாரூரில் ஆற்றிய உரையில் இடம் பெற்றுள்ள சாரத்தின் அருமை நன்றாகவே புரியும் - ஆரியம் ஏன் துடிக்கிறது என்கிற சூட்சமும் விளங்கும்.

----------------"விடுதலை” தலையங்கம் 27-6-2011

26.6.11

மதப்போட்டி - யாரைப் பார்த்து யார் காப்பியடித்தார்?


மதங்கள் என்பவைகளுக்கெல்லாம் ஒரு கடவுள் இருந்தாகவேண்டும்; மோட்சம், நரகம் இருந்தாக வேண்டும். கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள், குருமார்கள் இருந்தாக வேண்டும்.

இவை இல்லாமல் உலகில் எந்த மதமும் இருக்க முடியாது. இந்து மதத்துக்கோ இவைகள் மாத்திரம் போதா. அதாவது பல கடவுள்கள் வேண்டும்; பலவிதமான மோட்சங்கள், பலவிதமான நரகங்கள் வேண்டும். மற்றும் பலவிதமான பிறப்புகள் முன் பின் ஜன்மங்கள் வேண்டும்; பலவிதமான அவதாரங்கள், பலவிதமான குருமார்கள் வேண்டும்; இவ்வளவும் போதாமல் கடவுளை நேரில் கண்டு மோட்சத்திற்குப் போன பலவிதமான பக்தர்கள் வேண்டும்.

இந்தக் காரியங்கள் சிறப்பாக இந்து மதத்தின் உட்பிரிவு மதங்களானச் சைவ மதம், வைணவ மதம் என்று சொல்லப்படும் இரண்டு உட்பிரிவு மதங்களுக்கும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்து வருகின்றன.

பெயர்களைப் பொறுத்த வரையில் சில மாறுதல்கள் இருக்கலாமே ஒழியக் காரியங்களைப் பொறுத்த வரையில் ஏறக்குறைய ஒருவரைப் பார்த்து ஒருவர் காப்பியடித்தது போலவேதான் இருக்கின்றன.

உதாரணமாக, வைணவத்தில் ராமாயணம் ஏற்பட்டதற்குக் காரணம் விஷ்ணுவும் அவரது மனைவியாகிய லட்சுமியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது என்றால், சைவத்துக்குக் கந்தபுராணம் ஏற்பட்டதற்குக் காரணம் சிவனும் அவரது மனைவியாகிய பார்வதியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது.

எப்படியெனில், விஷ்ணுவும் லட்சுமியும் பகல் நேரத்தில் கலவியில் இருந்தபோது சில ரிஷிகள் படுக்கை அறைக்குள் பிரவேசித்து விஷ்ணுவைக் காண ஆசைப்பட்டதாகவும், துவாரபாலகர்கள் தடுத்ததாகவும் அதற்கு அவர்களை ரிஷிகள் சபித்த தாகவும், அந்தச் சாபம் தீரவேண்டியதற்காகவே ராமாயணம் முதலியவை ஏற்பட வேண்டிய தாயிற்றாம்.

அதுபோலவே, பரமசிவன் பார்வதியோடு பல நூறு வருஷங்கள விடாமல் கலவி செய்து கொண்டு இருந்ததாகவும் அதனால் ஏற்படும் வீர்யமும், கர்ப்பமும் மிகக் கொடுமையான காரியத்தைச் செய்யக் கூடியதாகிவிடும் என்று, தேவர்கள் முறையிடக் கலவி முற்றுப்பெறுவதற்கு முன்பாகவே கலவியை நிறுத்திக் கொள்ள வேண்டியதாகி, அதனால் இந்திரியம் நிலத்தில் விழுந்து பிறகு என்னென்னமோ ஆபாசமாகிக் கடைசியாக சுப்பிரமணியர் தோன்றிக் கந்தபுராணம் ஏற்படவேண்டிதாயிற்று என்றுமே கதைகள் இருக்கின்றன.

அன்றியும் பூபாரம் தீர்க்கவும். ராட்சதர்களை அழிக்கவும் விஷ்ணு ராமராய்த் தோன்றினார்.


அதுபோலவே பூபாரம் தீர்க்கவும் அசுரர்களை அழிக்கவும் சிவன் சுப்பிரமணியனாகத் தோன்றினார்.

ராமன் பிறப்பதற்காகத் தேவர்கள் விஷ்ணுவை வேண்டினார்கள்.

சுப்பிரமணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டினார்கள்.

ராமன் ராட்சதர்கள் என்பவர்களைக் கொன்றான்.

சுப்பிரமணியன் அசுரர்கள் என்பவர்களைக் கொன்றான்.

ராமன் ராட்சதர்களைக் கொல்லும்போது (மூலபலம்) கொல்லக்கொல்ல உற்பத்தியாகிக்
கொண்டே வந்தனர்.

சுப்பிரமணியன் அசுரர்களைக் கொல்லும்போது கொல்லக் கொல்ல அசுரர்கள் தலைகள் முளைத்துக் கொண்டே வந்தன.

ராமன் பெண்ஜாதி சீதை ஒரு வளர்ப்புப்பெண். சமுத்திரத்தில் கண்டெடுக்கப்பட்டவள்.


சுப்பிரமணியன் பெண் ஜாதியும் ஒரு வளர்ப்புப் பெண், வள்ளிச் செடிக்கடியில் கண்டெடுக்கப்பட்டவள்.

சைவத்துக்கும் வைணவத்துக்கும் இனியும் அனேக விஷயங்களில் கடவுள்களைப் பற்றிய கதைப் பொருத்தங்கள் காணலாம்.

அதுபோல சைவ, வைணவ ஆச்சாரியார்கள் விஷயங்களிலும், சைவத்துக்கு நாயன்மார்களாகவும், வைணவத்துக்கு ஆழ்வாராதிகளாகவும், ஏற்படுத்தப் பட்டிருப்பதோடு அல்லாமல், பல பக்தர்களையும் அவர்கள் செய்த காரியங்கள் அவற்றின் பயனாய் அவர்கள் அடைந்த முக்திகள் ஆகிய விஷயங்களிலும் ஒன்று போலவே கதைகள் கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

வைணவ பக்தர்கள் விஷயத்துக்குப் பக்த லீலாமிருதம் என்னும் புத்தகம் போலவே சைவ பக்தர்கள் விஷயத்துக்குப் பெரியபுராணம் என்னும் புத்தகமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


வைணவ பக்தரில் ஒரு குயவர் இருந்தால், சைவ பக்தரிலும் ஒரு குயவர் இருக்கிறார்.


எப்படி எனில், வைணவக்குயவர் கோராகும்பராய் இருந்தால், சைவக்குயவர் திருநீலகண்டராய் இருக்கிறார்.

இருகுயவ பக்தர்களுடைய கதையும் ஒன்று போலவே அதாவது, கோராகும்பரும் தன் பெண் ஜாதியுடன் பேசாமல் இருந்து கடைசியாக மகாவிஷ்ணுவே இருவரையும் பேசும்படி செய்து சேர்த்துவைக்கிறார்.

திருநீலகண்ட குயவனாரும் தன் பெண்ஜாதியோடு பேசாமல் இருந்து கடைசியாகச் சிவபெருமான் வந்தே இருவரையும் பேசும்படி செய்து சேர்த்துவைக்கிறார்.

மற்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பதிலும் வைணவ மதத்திற்கு சோக்கமாலா என்கின்ற தீண்டாத ஜாதி பக்தர் ஒருவர் இருந்து அவரைக் கோவிலுக்குள் விடாமல் தடுக்கப்பட்டு கனவு கண்டு கடைசியாக விஷ்ணு வந்து அழைத்துப் போகிறார்.

சைவத்திலும் தீண்டப்படாத வகுப்புக்கு நந்தன் என்பதாக ஒருவர் இருந்து பரமசிவன் வந்து கனவில் சொல்லிச் சாமி தரிசனம் செய்யப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இரண்டுமத புராணங்களிலும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் ஒரே மாதிரியான உயர்வும், மற்றவர்களுக்கு இழிவும் ஏற்படுத்தப்பட்டிருப்ப தோடு ஜாதிப் பாகுபாடுகளைப் பற்றி ஒரே மாதிரி யாகவே குறிப்பிட்டுப் பலப்படுத்தி இருக்கிறது.

இவற்றுள் சைவத்தைப் பார்த்து வைணவர்கள் காப்பி அடித்தார்களா ? அல்லது வைணவர்களைப் பார்த்து சைவர்கள் காப்பி அடித்தார்களா? என்பது ஆராய்ச்சி வேலையாய் இருக்கலாம்.


அதில் பிரவேசிக்க நமக்கு இஷ்டமில்லை. ஏனெனில், தமிழ் நாட்டில்தான் சைவத்தைப்பற்றிப் பிரபலமாய்ப் பேசப்படுகின்றதே ஒழிய, மற்றபடி இந்தியாவின் வடபாகம் முழுவதும் ஆந்திரதேசம் உள்பட வைணவமே மேலோங்கி இருக்கிறது. வடநாட்டில் வைணவர் என்றால்தான் மாமிசம் சாப்பிடாதவர் என்று அருத்தமாகும்.

ஆகையால், இவை இரண்டிற்கும் மதக் கிரந்தங்கள், மதக் கதைகள், மத பக்தர்கள், மதக் கடவுள்கள் என்பவைகளில் ஒன்றை ஒன்று காப்பி அடிப்பதோ அல்லது இருவரும் ஒன்றாய் உட்கார்ந்து கூடிப்பேசியோ ஒரு முடிவுக்கு வந்துதான் இப் பெரும் புளுகு மூட்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது அறியக்கிடக்கின்றது.

---------சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் தீட்டிய கட்டுரை -"குடிஅரசு" -14.04.1945

சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?

தோழர்களே, இன்று இங்கு நடைபெறப் போகும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. மற்ற திருமணங்களுக்கும் அடிப்படையாக என்ன மாறுதல் இருக்கின்றது என்று பாருங்கள்.

அனாவசியமாக சிலர் சுயமரியாதைத் திருமணமா? என்றாலே அதிசயப்படுவதும் ஏதோ முழுகிவிட்டதுபோல் வெறுப்படைவதுமாயிருக்கின்றதே தவிர வேறு என்ன மாறுதல் இருக்கின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.

விவாகம் அல்லது திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையை கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்கு பலர் அறிய, செய்யக் செய்துகொள்ளும் அல்லது செய்யப்படும் காரியமே ஆகும். இதைச்சிலர் அதாவது பழைய முறைக்காரர் சடங்கு என்கிறார்கள். சிலர் அதாவது, புதிய முறைக்காரர்கள் ஒப்பந்தம் என்கிறார்கள்.

சடங்கு என்று சொல்லுகின்றவர்கள் உண்மையிலேயே சடங்காகவே கருதி காரியங்களில் லட்சியமில்லாமல் நடத்துகிறார்கள். அதாவது, கலியாணத்தில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் எவ்வித உரிமையும் இல்லை. அதுபோலவே சடங்கிலும் கலியாணக்காரருக்கும் சடங்குக்கும் யாதொரு உரிமையுமில்லை. எப்படியென்றால் தம்பதிகளின் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களைப் பெற்றோர்களோ அல்லது இந்தப் பெற்றோர்களுக்கு வேண்டியவர்களோ பார்த்து இன்ன பெண்ணுக்கு இன்ன மாப்பிள்ளை அல்லது இன்ன மாப்பிள்ளைக்கு இன்ன பெண் என்று தீர்மானித்துவிட்டால் அதைத்தம்பதிகள் மணமக்கள் ஆட்சேபிக்க முடியாது.

அது மாத்திரமல்ல இன்னொரு அநியாயம் என்னவென்றால் திருமணம் என்பது நடக்கும் நிமிஷம்வரையில் மாப்பிள்ளை பெண்ணைப் பார்த்திருக்க மாட்டார். பெண் மாப்பிள்ளையைப் பார்த்திருக்க மாட்டார். 100க்கு 99 திருமணத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசி இருக்கவே மாட்டார்கள்.

அங்க லட்சணம், அறிவு லட்சணம், யோக்கியதை லட்சணம் ஆகிய எதையும் பார்க்காமலும் தெரியாமலும்தான் திருமணம் தீர்மானிக்கப்படுகிறது.

இவர்கள் இருவர்கள் விஷயத்தில் ஏதாவது ஒன்று கவனிக்கப்படுகின்றதா என்றால் இருவர் பிறந்த நேரம் என்று சொல்லப்படும் அது சரியான நேரமோ தப்பான நேரமோ என்பதைப்பற்றி கவலை இல்லாமல் ஒரு காலத்தை குறிப்பில் வைத்து அதன் மூலமாகவே ஒரு பொறுப்பற்ற நபரால் இருவருக்கும் பொருத்தம் உண்டா இல்லையா என்பது முடிவு செய்யப் பட்டுவிடும். சில சமயங்களில் பிறந்த காலம் நேரங்கள்கூட கவனிக்கப்படாமல் பெண்ணின் பெயரின் முதலெழுத்தையும் மாப்பிள்ளையின் பெயரின் முதலெழுத்தையும் ஆதாரமாக வைத்து பொருத்தம் முடிவு செய்யப்பட்டு விடும்.

மற்றும் சில சமயங்களில் அதுகூட இல்லாமல் கோவிலில் பூ வைத்து கேட்பது மூலமோ, கருடன் பறப்பது மூலமோ, பல்லி கத்துவது மூலமோ, இருவர் பெயர் எழுதப்பட்ட சீட்டுகளின் மீது ஈ (பறவை) உட்காருவதன் மூலமோ, அல்லது கோவில்களில் ஏதாவது ஒருவன் சாமியாடி வாக்கு சொல்லுவதன் மூலமோ கலியாணம் தீர்மானிக்கப்பட்டு விடும். எவ்வளவு காட்டு மிராண்டித்தன வாழ்வில் நமது மக்கள் இருந்து வருகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை.

இதுபோலவே, சடங்குகள் விஷயத்திலும் இந்தச் சடங்குகள் எதற்காக என்றாவது இந்தச் சடங்கின் அர்த்தம் என்ன என்றாவது இச்சடங்குகளுக்கு அவசியமோ, ஆதாரமோ ஆரம்பகாலமோ பொருத்த மோ என்னவென்றாவது மணமக்களுக்கோ, பெற் றோர்களுக்கோ, மற்றும் பந்து மித்திரர்களுக்கோ யாருக்குமே தெரியாது.

ஆனால், சுயமரியாதைக் கலியாணம் என்பது இந்தப்படிக்கல்ல. மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அர்த்தமும், பொருத்தமும் அவசியமும் இல்லாமல் வெறும் சடங்கு பழக்க வழக்கம் என்பதற்காக மாத்திரமே ஒன்றையும் செய்யக்கூடாது என்பது மேயாகும்.
இவை மாத்திரமல்லாமல் திருமணம் சம்பந்தமாக செலவு மெனக்கெட்டு வீண் கஷ்ட நஷ்டம் ஆகியவைகளைப்பற்றி பழையமுறைத் கலியாணங்களில் லட்சியமே செய்யப்படுவதில்லை. ஆடம்பரத்துக்காகவே வீண் செலவுகளைத் தகுதிக்கு அதிகமாக கடன் வாங்கியாவது செய்யப்பட்டு வருகின்றது.

திருமணத்திற்காக 3 நாள், 4 நாள், 5 நாள், சிலர் 7 நாள்கூட மெனக்கெட்டு அயலூர் பந்து மித்திரர் களையும் தருவித்து மெனக்கெடச்செய்து 5 விருந்து, 10 விருந்து என்பதாகச் சாப்பாட்டுச் செலவும், பந்தல், மேளம், சங்கீதம், ஊர்வலம், பானம் என்பதாக வீண் காரியங்களும் குடிகாரர்கள் குடித்த போதையில் தாருமாராய் நடப்பதுபோல் கலியாண போதையில் சிக்கி பணங்கள், நேரங்கள் கஷ்டங்கள் ஆகியவைகள் தாருமாறாக செலவாக்கப்பட்டு வருகின்றன.

2, 3 நாளைக்கு ஆக சிலர் பார்த்து புகழ்வதற்காக என்று செய்யப்படும் இப்படிப்பட்ட தாருமாரான ஆடம்பரச் செலவுகள் கலியாணத் தம்பதிகள் தலையிலோ அல்லது குடும்பத்தார்கள் தலையிலோ விழுந்து கலியாணக் கடன் பார்வைகளால் வெகுநாளைக்கு அவதிப்பட வேண்டியிருப்பதால் சில குடும்பங்கள் கலியாணச் செலவாலேயே பாப்பராகி மீளாக்கடன் காரர்களாகக் கூட ஆகவேண்டியதாகி விடுகின்றன. இப்படிப்பட்ட கொடுமைகளும் முட்டாள்தனமான காரியங்களும் கூடாது என்பதுதான் சுயமரியாதைத் கலியாணம் என்பதின் முக்கியாம்சங்களாகும்.

மற்றும் கலியாணம் செய்துகொள்ளும் விஷயத்தில் தம்பதிகளைவிட மூன்றாவதவர்களுக்கே சகல சுதந்திரமுமிருந்து வருகிறது. செய்து வைப்பதற்கு ஒரு புரோகிதன் வேண்டும். இன்ன இன்ன மாதிரி செய் என்பதற்குப் பெற்றோர்கள், பந்து மித்திரர்கள் வேண்டும். இவர்கள் சொன்னபடி யெல்லாம் தம்பதிகள் நடக்கவேண்டும்.

சுயமரியாதைக் கலியாணம் என்பதில் இந்த முறையில்லை. மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களை ஒருவருக்கொருவர் சொல்லி சம்மதித்ததற்கு அறிகுறியாக மாலையிட்டுக் கொள்வது என்பதுடன் முடிவுபெற்று விடுகின்றது.

மற்றும் இவற்றையெல்லாம்விட ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் கலியாண விஷயத்தில் மணமக்களின் வாழ்க்கைச் சம்பந்தம் முக்கியமானது. லட்சியமானது அல்லவென்றும் அதிலும் ஏதோ ஒரு தெய்வீக சம்பந்தம் இருக்கிறதென்றும் அதுவேதான் திருமணத்தின் லட்சியமென்றும் ஆதலால் அப் பெண்ணும், மாப்பிள்ளையும் அத்தெய்வீக சம்பந்தத்துக்காக ஒருவர் குற்றங்களையும் அநீதிகளையும் மற்றவர்கள் பொருத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதிலும் சிறப்பாக மாப்பிள்ளை செய்யும் கொடுமையையும் அநீதியையும் பெண் பொறுத்துக்கொண்டு வாழ்நாள் முழுமையும் மாப்பிள்ளைக்கு பெண் அடிமையாய் பக்தியாய் இருக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.
ஆனால், சுயமரியாதைக் கலியாணம் என்பதில் அப்படி இல்லை.

திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமென்றும் அவ்வொப்பந்த விஷயம் பெண்ணையும், ஆணையும் மாத்திரமே பொருத்ததே ஒழிய வேறு எவ்வித தெய்வீகத்துக்கோ அல்லது எவ்விதக் கட்டுப்பாட்டுக்கோ சம்பந்தப்பட்டதல்ல என்றே சுயமரியாதைக் கலியாணத்தின் தத்துவமாகும்.

மேலும், பழையமுறை கலியாணமானது ஆணுக்கும் பெண்ணுக்கும் கலியாணம் ஏற்பட்ட பிறகு தான் ஒருவர் மீது ஒருவர் ஆசைகொள்ளுவதோ காதல் கொள்வதோ ஏற்பட வேண்டுமே ஒழிய அதற்கு (கலியாணத்துக்கு) முன்னால் ஒருவர் மீது ஒருவருக்கு ஆசையும், காதலும் ஏற்படுவது கூடாதென்றும் குற்றமென்றும் அது விபசாரத்துக்குச் சமானமானதென்றும் கூறப்படுகின்றது.

சுயமரியாதைக் கலியாணத்திலோ, கலியாணத்துக்கு முன்பாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவருக்கொருவர் ஆசையும் காதலும் ஏற்பட்டு அதன் பின்னரே கலியாணம் நடக்க வேண்டும் என்றும், மற்றபடி கலியாணம் ஆனபிறகு கலியாணம் ஆய்விட்டதே என்கின்ற காரணத்திற் காக அங்க ஈனராய் இருந்தாலும் வியாதிக்காரராய் இருந்தாலும், கொடியவராய் இருந்தாலும் ஒருவருக் கொருவர் ஆசையும் காதலும் கொண்டுதான் ஆகவேண்டுமென்றும் சொல்வதைக் கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளுவதில்லை.

மற்றும், பழையமுறை கலியாணங்கள் ஒரு தடவை கலியாணமாகிவிட்டால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுபடியும் பிரியக் கூடாதென்றும் இப்படிக் கூறாவிட்டாலும் ஆணுக்கு பிரித்துவிடவோ பிரிந்துகொள்ளவோ உரிமை உண்டு. பெண்ணுக்குத் தான் உரிமையில்லை.) என்றும் பெண்ஜாதி செத்துப்போனால் புருஷன் மறுவிவாகம் செய்துகொள் ளலாம் என்றும் பெண்ஜாதி உயிருடன் இருக்கும் போதே புருஷன் மாத்திரம் பல பெண்களைக் கலியாணம் செய்துகொள்ளலாம் என்றும் பெண்கள் மாத்திரம் எந்தக்காரணம் கொண்டும் புருஷன் எவ்வளவு கொடியவனாகவும் மனுஷத்தன்மை அற்றவனாகவும் எவ்விஷயத்துக்கும் பொருத்த மில்லாமல் கொடுமையும் சித்திரவதையும் போன்ற கஷ்டத்தையும் கொடுப்பவனாலும் புருஷனைவிட்டுப் பிரியக் கூடாதென்றும் வேறு கலியாணம் செய்துகொள்ளக் கூடாதென்றும் புருஷன்தான் பக்குவமாவதற்குமுன் தனது 5ஆவது 10ஆவது வயதிலேயே இறந்துபோனாலும் வேறு புருஷனைக் கலியாணம் செய்துகொள்ளாமல் விதவை என்னும் பெயருடன் உலக சுகபோகங்கள் எல்லாவற்றையும் வெறுத்து மக்கள் கண்ணுக்கும், மனதுக்கும் வெறுப்புத்தோன்றும் தன்மையில் வாழவேண்டும் என்றும் சொல்லுகின்றது.

சுயமரியாதைத் கலியாணத்தில் இவ்வித அக்கிரமும், அயோக்கியத்தனமும் அறியாமையும் கொடுமையும் மூர்க்கத்தனமும் காட்டுமிராண்டித் தனமும் இல்லை. வாழ்க்கைக்கும் மனதுக்கும் ஏற்ற தம்பதிகளானால் கூடிவாழலாம். அவைகளுக்கு ஒவ்வாத வாழ்க்கையே நரகம் போன்றதான தம்பதிகளானால் பிரிந்து மனதிற்கு ஏற்றவர்களை மணந்து இன்ப சுகவாழ்வு வாழ உரிமை உண்டு என்பதோடு புருஷனோ மனைவியோ யார் இறந்துபோனாலும் மறுவிவாகம் செய்துகொள்ளலாம் என்று கூறுகிறது.

பழையமுறை கலியாணப்படி பெண்களுக்கு சொத்து உரிமை இல்லை. வாழ்க்கையில் சரிபங்கு ஆதிக்க உரிமை இல்லை என்று கூறப்படுகிறது. சுயமரியாதை கலியாணத்தில் சொத்திலும் வாழ்க்கை ஆதிக்கத்திலும் பெண்ணுக்கு ஆணைப்போலவே சரிபங்கு உரிமை இருக்கின்றது என்பதுடன் இவைகளே கலியாண ஒப்பந்தத்தின் ஷரத்துக் களாகும்.

அநேகமாய் கலியாண தத்துவம் பழையதும் புதியதும் ஒரு மாதிரிதான். எப்படி எனில் இங்கு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் கலியாணம் செய்துகொண்டார்களே ஒழிய ஆணும் ஆணும் சேர்ந்தோ, பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ கலியாணம் செய்துகொள்ளவில்லை.

ஆதலால் இவ்விதத் திருணமத்தைப் பற்றி யாரும் கவலையோ, ஆத்திரமோ படவேண்டியதில்லை. பெண்மக்களில் பலருக்கு இவ்விஷயத்தில் ஏதாவது மனசஞ்சலம் இருந்தாலும் இருக்கலாம். ஆண்களில் படித்தவர்கள் வித்வான்கள் என்று சொல்லப்படுபவர் களிலேயே சில அழுக்குமூட்டைகள் இருந்து கொண்டு விஷமப் பிரசாரம் செய்துவரும்பொழுது பெண்களில் இதுவிஷயமாய் அதிருப்தி உள்ளவர்கள் இருப்பது அதிசயமல்ல.

ஏனெனில், பெண்களை நாம் எப்படி வைத்திருக்கின்றோம். அவர்களில் 100-க்கு 99-பேருக்கு அடுப்பங்கரையையும், படுக்கை வீட்டையும் மாத்திரமே காட்டி நகை மாட்டுகின்ற ஸ்டேண்டுபோல் நகைகளை மாட்டி இது என் பெண்ஜாதி (அடிமை) இது உன் பெண்ஜாதி என்று கண்காட்சி காட்டுகின்றோமே ஒழிய, வேறு அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு கணக்கு வழக்குப் பார்க்காமல் பிள்ளை களைப் பெறுவார்கள். இதற்கு ஒரு உபாத்தியாயரோ, அறிவோ வேண்டியதில்லை. எவ்வளவுக்கெவ்வளவு மடமை உண்டோ அவ்வளவுக்கு அவ்வளவு பிள்ளைகள் பிறந்துவிடும். எவ்வளவுக்கெவ்வளவு அடிமைத்தன்மையில் மோகம் உண்டோ அவ்வளவுக்கவ்வளவு நகைகளை மாட்டிக்கொள்ளுவார்கள்.

தங்களை விகாரமாய் சிங்காரித்துக் கொள்ளுவார்கள். இவைகளையும், இவைபோன்றவைகளையும் தான் நாம் அவர்களுக்குத் தாய் தந்தையர்கள் என்கின்ற முறையில் கற்றுக் கொடுத்திருக்கிறோம்.

ஆகவே, இப்படிப்பட்ட பெண்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும், செல்வமும், நாகரிக ஞானமும், கௌரவமும் உள்ள சுற்றத்தார்களுக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும் நிரம்பவும் கர்நாடக முறையில் பட்டிக்காட்டு கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்துகொள்வதைப் பார்த்தால் நமக்கு எவ்வளவு சங்கடமாயிருந்தது என்பது அவரவர் களுக்கே தெரிந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால் அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நமது மக்களுக்கு ஏன் மனிதத்தன்மை இல்லை, சுய மரியாதை இல்லை என்றால் அவற்றிற்கெல்லாம் முக்கியத்திலும் முக்கியமான காரணம் இப்படிப்பட்ட தாய்மார்களால் பெறப்பட்டு வளர்க்கப்பட்டதேயாகும்.

கடைசியாக தோழர்களே ஒன்று சொல்லி முடித்துவிடுகிறேன். கலியாணமானவுடன் பெற் றோர்கள் பிள்ளைகளை எதிர்பார்ப்பார்கள். சுற்றத்தார் எத்தனை ஆயிற்றென்று கணக்குக்கூட்டி வரு வார்கள். தம்பதிகள் பிள்ளை பெறுவதினால் படும் கஷ்டம் காயலா அசௌகரியம் வாலிபம் பாழாவது அதிகப் பிள்ளைகள் பெறுவதினால் தரித்திரம், துன்பம், வியாகூலம், விசாரம், மனங்கெட நேருவது சுயமரியாதை இழந்தாவது வாழ ஆசைப்படுவது ஆகிய காரியங்களைப் பற்றியெவரும் சிந்திக்கமாட்டார்கள்.

யாதொரு பொறுப்பும் அறிவும் அற்று இன்று மணமக்களைப் பார்த்து 16 பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்று சொல்லுகிற வர்கள் நாளைக்கு ஒரு குழந்தைக்கு அரைச்சங்கு பால் வார்க்கக்கூட சம்மதிக்கமாட்டார்கள்.

ஏதாவது கஷ்டம் வந்தால்கூட பக்கத்து வீட்டில் குடி யிருந்துகொண்டு கணக்குக்கூட்டிப் பார்த்து அசூசையும் வெறுப்பும் அடைவார்களே தவிர, சிறிது பரிதாபம்கூட காட்டமாட்டார்கள். ஆதலால் மணமக்கள் குழந்தைகளைப் பெறும் விஷயத்தில் சிறிது ஜாக்கிரதையாகவும், அறிவுடைமையாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

-------------------08.06.1934ஆம் தேதி சென்னை சவுகார் பேட்டையில் நடந்த சுயமரியாதைத் திருமணத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு
- "புரட்சி" - சொற்பொழிவு - 17-06-1934

25.6.11

கூண்டிலேற்று ராஜபக்சேவை! திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள்

ஈழத் தமிழர்களின் உரிமைக்காக எத்தனையோ போராட்டங்களை, மாநாடுகளை திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. அதில் ஒரு சில இதோ:

18.6.1983 சனி மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி தமிழின மக்களின் உணர்வை வெளிப்படுத்தியது. 2.7.1983 அன்று சென்னை அண்ணா நகரில் புல்லா ரெட்டி அவின்யுவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட பிரமாண்ட எழுச்சிப் பொதுக் கூட் டத்தை நடத்தியது. அநேகமாக அக்கால கட்டத்தில் இப்பிரச்சினைக்காகத் துவக்கப்பட்ட ஒரு முக்கிய நிகழ்ச்சி இது என்றே குறிப்பிட வேண்டும்.

*****************

1983 ஆகஸ்டு 15-ஆம் நாளைத் துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் அன்று கறுப்புச் சின்னம் அணிந்தும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்க விட்டும், பொது இடங்களில் கறுப்புக் கொடி ஏற்றியும் நமது துக்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் 8.8.1983-இல் சென்னையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டம் முடிவு செய்தது.

*****************

தமிழன் இறைச்சிக் கடைகளைத் திறந்திருக்கும் ஜெயவர்த்தனே டில்லி வந்த பொழுது, எதிர்த்துக் கறுப்புக் கொடி! கழகப் பொதுச் செயலாளரும், கழகத் தோழர்களும் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டனர் (23.11.1983).

*****************

ஈழத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர்கள் உணர்ச்சி எரிமலையாக விண்ணில் ஒரு காலும் - மண்ணில் ஒரு காலும் வைத்து கிளர்ந்து நிற்கின்றனர். என்பதை உலகுக்குக் காட்டும் மாநாடுகள் மதுரை மாநகரில் (17,18-_12_-1983) நடத்தப்பட்டன. அந்த ஈழ விடு தலை மாநாட்டில் தோழர் குமரிநாடன் ஈழ விடுதலை கொடியை ஏற்றினார்.

*****************

இங்கிலாந்தில் பிரிட்டிஷ் நாடாளு மன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினையில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, அவர்கள் கையொப்பமிட்டு கூட்டு அறிக்கை வெளியிடச் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் கி. வீரமணி, ப. நெடுமாறன், எல். கணேசன் எம்.பி., ஆகியோர் இப்பணியில் உடனிருந்தனர். (29.7.1984).

*****************

ஈழத் தமிழர் பிரச்சினை-யில் இந்திய நடுவணரசு காட்டி வரும் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து ஆகஸ்டு 15 சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து நாடெங்கும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. திருச்சியில் பொதுச் செயலாளர் அதற்காகக் கைது செய்யப் பட்டார். நாடெங்கும் அய்யாயிரம் தோழர்கள் கைதாயினர்.

ஈழப் பிரச்சினை என்ற முறையில் டெசோ உருவாக்கப்பட்டது. (TESO - TAMIL EALEM SUPPORTERS ORGANISATION) உருவாக்கப்பட்டது. (13.5.1985)

*****************

இல்லினாய்ஸ் கருத்தரங்கில் 15.7.1986: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழக மண்டபத்தில் ஈழத் தமிழர் குறித்த கருத்தரங்கம் - டாக்டர் இளங்கோ ஏற் பாட்டில் நடந்தது. இதில் 25 நிமிடங் கள் ஆங்கில உரையாற்றிய தமிழர் தள பதி - இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழமே தீர்வு என வலியுறுத்தினார்.

*****************

பெங்களூர் சார்க் மாநாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே வந்தபோது நமது எதிர்ப்புணர்வைக் காட்டும் வகையில் தமிழ்நாடெங்கும் ஜெயவர்த்தனே கொடும்பாவி கழகத் தோழர்களால் எரியூட்டப்பட்டது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (17.11.1986).

*****************

ஈழப் போராளிகளின் தொலைத் தொடர்பு கருவிகளை எம்.ஜி.ஆர் அரசு பறி முதல் செய்தபோது கழகம் கடுமை யாக கண்டித்தது. அரசின் நடவடிக் கையை எதிர்த்து விடுதலைப்புலிகளின் தளபதி தம்பி பிரபாகரன் உண்ணா விரதம் மேற்கொண்டார். உண்ணாவிர தத்தை பொதுச் செயலாளர் கண்டித்து எழுதி னார். மருத்துவமனையிலிருந்து விடுவிக் கப்பட்ட அன்றே பொதுச் செயலாளர் நேரில் வீட்டுக்குக்கூட செல்லாமல் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் (23.11.1986).

*****************

டெசோ சார்பில் ரயில் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து தமிழ் நாட்டையே வெறிச்சோடச் செய்யப் பட்டது. (30.8.1985).

*****************

ஈழத் தமிழர்கள்மீது சரித்திரம் காணாத துரோக ஒப்பந்தத்தைத் திணித்த இந்திய அரசைக் கண்டித்தும், ஒப்பந்தத்தை எதிர்த்தும், ராஜீவ்காந்தி -_ -ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எரித்து அதன் சாம்பல் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது (2.8.1987) திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங் கிரசும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின. நாடெங்கும் பல்லாயிரக் கணக்கில் தோழர்கள் கைது செய்யப் பட்டனர்.

*****************

9.10.1987 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் பார்ப்பன உணர்வோடு செயல்படும் இலங்கைத் தூதர் தீட்சத்துக்குப் பதில் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டுகோள் விடப்பட்டது.

*****************

25.1.1988 இந்தியக் குடியரசு நாள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்தி யப் பிரதமர் ராஜீவ் காந்தியால் அழைக் கப்பட்டார். அதனைக் கண்டிக்கும் வகையில் சனவரி 26 அன்று கருப்புக் கொடி ஏற்றவும் - ஜெயவர்த்தனேயின் கொடும்--பாவியைக் கொளுத்தவும் திராவிடர் கழகம் அறிவித்தது. எங்கெங் கும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கழகத் தோழர்கள் கைது செய்யப் பட்டனர். சென்னையில் கொடும் பாவியைக் கொளுத்த முயன்றபோது காவல்துறையினர் தடியடி நடத்தினர். கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி உள்பட கழகத் தோழர்கள் பலரும் காயம் அடைந்தனர். கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர் கள் கைது செய்யப்பட்டனர். 7.6.1988 பிரபாகரன் உயிருக்குக் குறி வைக்காதே! என்று குரல் கொடுத்து சென்னையில் உள்ள தென் மண்டல இராணுவம் தலைமையகம்முன் ஆர்ப்பாட்டம்

*****************

28.7.1988 - 22.8.1988 உலக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல் படும் சக்திகளின் முகத்திரைகளைக் கிழித்தெறிந்திட கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கனடா, அமெரிக்கா சுற்றுப் பயணம்.

*****************

10.9.1988 கால் ஊனமுற்று வீட்டில் இருந்த விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவைச் சந்திக்கச் சென்ற திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் கைது.

*****************

14.5.1989 இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாட் டில் கழகப் பொதுச் செயலாளர் கலந்து கொள்ளல் (29,30.4.1989) வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்புப் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பங்கேற்பு (14.5.1989).

*****************

24.7.1989 மாவீரன் பிரபாகரன் சுட்டுக்கொலை என்று கோழைத்தன மாகக் கிளப்பப்பட்ட புரளியை எதிர்த்து உலகிற்கு உண்மையை எடுத்துரைத்த முதல் தலைவர் வீரமணி. முதல் ஏடு விடுதலை (24.7.1989).

*****************

1.8.1995 ஈழத் தமிழர் படுகொலை யைத் தடுத்து நிறுத்த அய்.நா.விடம் கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திராவிடர் கழகம் இன்று தொடங்கியது. 31.9.1995 அன்றுவரை இப்பணி நடைபெறும் என்று அறிவிக் கப்பட்டது.

*****************

28.5.1997 சென்னை பெரியார் திடலில் ஈழத் தமிழர்ப் பிரச்சினை பற்றி முடிவு எடுக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திராவிடர் கழகம் கூட்டியது.

*****************

26.7.1997 தமிழக மீனவர் பாதுகாப்பு, கச்சத் தீவு மீட்புரிமை மாநாடு இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி. வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண் டசு, மருத்துவர் ச. இராமதாசு, பழ. நெடுமாறன், கா. ஜெகவீரபாண்டியன், டாக்டர் இரா.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து-கொண்டனர்.

29.7.1997 கச்சத்தீவு உரிமை தமிழக மீனவர் பாதுகாப்பு கோரி திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. (வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது).

*****************

14.12.1997 ஈழத் தமிழர் ஆதரவு பன் னாட்டு மாநாடு டில்லி-யில் நடை பெற்றது. முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களை அமைப் பாளராகக் கொண்ட அம்மாநாட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடு மாறன் மற்றும் பன்னாட்டுத் தலை வர்கள் பங்கு கொண்டனர். அரங்கில் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் பெர்னாண்டசு இல் லத்தில் நடத்தப்பட்டது. நடுநிலை யாளர்கள் முன்னிலையில் விடுதலைப் புலிகள் -_ இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

*****************

22.12.2006 ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்புக் கோரி தமிழ்நாடெங்கும் மனிதச் சங்கிலி அறப் போராட்டம் திராவிடர் கழகத்தால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. திமுக., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியினர் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், மதிமுக சார்பில் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு அணி வகுக்கப்பட்டது.

ரயில் மறியல் உள்ளிட்ட போராட் டங்கள் இன்னும் ஏராளம் உண்டு.

உரத்த குரலும் - உதிரத் துடிப்பும்! ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-இல் போடப்பட்டது (ஜூலை 29) வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக் கப்பட வேண்டும். தமிழர்களின் தாயகப் பூமி அது என்ற முறை யில் வரவேற்கப்பட்ட ஒன்று.

அதில் கை வைக்க சந்திரிகா அம்மையாரோ, ரணில் விக்ரமசிங்கோ துணியவில்லை.

ராஜபக்சே என்ன செய்தார்? உச்சநீதிமன்ற நீதிபதி என்னும் தகுதியில் சரத்சில்வா என்னும் ராஜபக்சேயின் கைப்பாவை ஒருவர் இருக் கிறார்.

சிங்கள வெறி அமைப்பான ஜே.வி.பி. எப்பொழுதோ தொடுத்த வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு தவறு என்ற வழக்குக்கு உயிரூட்டி ஒரு தீர்ப்பையும் பெற்று விட்டனர். (2006 அக்டோபரில்)

அந்த இணைப்பு தவறு என்று தீர்ப்புப் பெற்றாய் விட்டது. நியாயப்படி -_ ஏன்சட்டப்படியும்கூட இந்திய அரசு அதனை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்க வேண்டாமா? கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பினை - 1988-ஆம் ஆண்டு முடிவுக்குள் எடுக்க வேண் டும் என்று ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கூறுகிறதே - அதன்படி இலங்கை அரசு ஏன் நடக்கவில்லை என்று இந்திய அரசு கேட்கத் தவறியது ஏன்?

இரண்டு நாடுகளுக்கிடையே ஏற் பட்ட ஒப்பந்தத்தை விசாரணை நடத்த ஒரு நாட்டு நீதிமன்றத்திற்கு அதிகார மும் உண்டா? அது சர்வதேச சட்டத் தின் கீழ் அல்லவா வர வேண்டும்?

இதுபற்றியெல்லாம் இந்திய அரசோ, அதற்கு ஆலோசனை கூறும் ஆசாமி களோ சிந்திக்காதது ஏன்? சிந்திக்க மனம் இல்லாமல் போன மர்மம் தான் என்ன? வடக்கு - கிழக்கு இணைப்பு செல் லாது என்ற தீர்ப்பைப் பெற்றதுடன், கிழக்கு மாகாணத்துக்குத் தனியே தேர்தல் நடத்தி (2.5.2008) விடுதலைப் புலிகளுக்குத் துரோகம் செய்த கருணா குழுவி லிருந்து பிள்ளையான் என்ற ஒருவரை - பிடித்து வைத்த கொழுக் கட்டையாக முதல் அமைச்சராகவும் ஆக்கி, இலங்கை யில் பட்டொளி வீசிப் பறக்கும் பரந்த ஜனநாயகத்தைப் பாரீர்! என்று உலகத்தை ஏமாற்றிட மிளகாய்ப் பொடி தூவினார் அதிபர் ராஜபக்சே!

தமிழர் தாயகமான கிழக்கு மாகாணத்தில் 1948-இல் இலங்கை சுதந் திரம் அடைந்தபோது சிங்களர்களின் சதவிகிதம் வெறும் எட்டே! இப்பொ ழுது அது 30 சதவீதமாக பெருகியது எப்படி? இலங்கை அரசின் திட்டமிட்ட ஏற்பாடு அல்லவா!

இப்படிப்பட்ட ஜனநாயக நாட்டின் குடியரசு தின விழாவில் பங்கேற்கத்தான் இந்தியப் பிரதமர் செல்வதாக இருந்தார்.

அதனை எதிர்த்து திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் (31.12.2007) வீண் போகவில்லை.

என்றாலும், இந்தியாவின் கரிசனம் எப்பொழுதுமே இலங்கை அரசின் பக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது.

செக் குடியரசு நாட்டிலிருந்து 10 ஆயிரம் ஏவுகணை களையும், பீரங்கிக் குண்டுகளையும் வாங்கியது இலங்கை அரசு. ஈரான், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் பெரிய அளவில் ஆயுதங்களை வாங்கிக் குவித்தது.

பாகிஸ்தானிலிருந்து இராணுவத் தினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. உக்ரைன் நாட்டுக்காரர்கள் இலங்கையின் போர் விமானங்களை இயக்கினார்கள்.

சீனாவிடமிருந்து ரேடார்களையும், பிற கருவிகளையும் வாங்கிக் குவித்தது.

இந்நிலையில், இந்தியாவும் தன் பங்குக்கு இலங்கைக்கு போர் ஆயுதங்களை வழங்கியது.


2008 ஜூன் மாதத்தில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர்மேனன் பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜயசிங் ஆகியோர் கொழும்புக்குச் சென்றனர்.

சீனா மற்றும் பாகிஸ்தானிலிருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கக் கூடாது; மாறாக இந்தியாவிலிருந்து தான் வாங்க வேண்டும் என்று சொன்னதாகச் செய்திகள் வெளிவந்தன.
அதற்கு முன்பே இரு ரேடார் கருவிகளையும், தற்காப்பு ஆயுதங் களையும் இலங்கைக்கு இந்தியா வழங்கியது.

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டதும் உண்டு.


டேராடூன், புனே, தேவவாலி, அகமத் நகர், ஜபல்பூர், வதோதரா, மவ் ஆகிய இடங் களில் வழங்கப்பட உள்ள தாகச் செய்திகள் வெளி வந்தன.

தமிழ்நாட்டிலும் அத்தகு பயிற்சி அளிக்கப்படும் என்ற செய்தி வெளி வந்தபோது, வெடித்த எதிர்ப்புக் குர லால் அது தவிர்க்கப்பட்டதும் உண்டு.

தீவிரவாதிகளை எப்படி எதிர்ப்பது, காட்டுப் பகுதிக் குள் சண்டை போடுவது எப்படி? என்பதற்கெல்லாம் மிசோரம் மற்றும் மேகாலயா ஆகிய இடங்களில் பயிற்சியளிக்கப்பட்டது.

இலங்கை பல நாடுகளிலிருந்தும் ஆயுதங்களை வாங்குவது எதற்காக? இந்தியா இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதெல்லாம் எதற்காக?

இலங்கைக்கு எந்த நாட் டின் மூலம் ஆபத்து? சீனா படையெடுக்கத் துடிக்கிறதா? பாகிஸ்தான் பாய்ந்திட திட்டமிட்டுள்ளதா?

இந்தியாதான் இலங்கை மீது படை எடுக்கப் போகிறதா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது என்பது அறியாப் பிள்ளையும் அறிந்த செய்தியாகும். இவ்வளவு ஆயுதக் குவிப்புகளும், பயிற்சிகளும் எதற்காக? இலங்கைத் தீவில் உள்ள அந்த மண்ணுக்கே உரிய தமிழர்களை முற்றாகக் கொன்று ஒழித்து, புதைகுழிக்குள் தள்ளி இலங்கை என்றால் சிங்கள நாடே! சிங் களவர்கள் மட்டும்தான் இங்கே வாழ வேண்டும் என்கிற வெறித்தனத்துக்கு முடி சூட்டத்தானே இந்த மூர்க்கத் தனம்?

இலங்கை அரசு அப்படியென்ன இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டிக் கிழித்து விட்டது? இந்தியா - சீனா யுத்தத்தின் போதோ, இந்தியா - பாகிஸ் தான் போரின் போதோ இந்தியாவின் பக்கம் நின்றதா என்ன? 1965-இல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது கூட காட்டுநாயகா விமானத் தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள நடைபாவாடை விரிக்கவில்லையா?

இந்தியாவே என்ன சொல்லுகிறாய்? சீனாவுக்கோ பாகிஸ்தானுக்கோ, ஏன் அமெரிக்காவுக்கோ இராணு வத் தளம் அமைக்க இடம் கொடுத்து விடுவேன் - ஜாக்கிரதை என்ற இலங்கையின் மிரட்டலுக்கு தமிழர்களைப் பலி கொடுக்க இந்தியா சித்தமாகி விட்டது என்ற குற்றச்சாட்டு அலட்சியப்படுத்தப் படக் கூடியதல்ல! ஈழத்தில் வாழும் தமிழர்களுக்குத்தான் இந்தக் கொடூரம் என்றால், கடலில் மீன் பிடிக்கச் செல் லும் தமிழக மீனவர்களையும் சிங்களக் கடற்படை வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்களை அயிரை மீனாகக் கருதி குழம்பு வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டுக்குச் சொந்த மான கச்சத் தீவை - தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறா மலேயேகூட தூக்கிக் கொடுத்து விட்டது. அதன் பலன் தமிழக மீனவர்கள் தங்களுக்குரிய கச்சத் தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை.

தமிழகத்தின் அனுமதி யில்லாமல் தூக்கிக் கொடுக் கப்பட்ட பகுதியில் -தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையைக்கூட, ஒரு சுண் டைக்காய் அரசிடமிருந்து பெற்றுத் தர முடியவில்லை இந்தியாவால்.

உலகில் பத்துக் கோடிக்கு மேற் பட்ட தமிழர்கள் வாழ்ந்தாலும் - சொந்தத்துக்கென்று ஒரு நாடு இல்லாத நிலையில் இதனையெல்லாம் தட்டிக் கேட்க, தடுத்து நிறுத்த நாதியில்லாமல் போய்விட்டது என்பதுதானே உண்மை!

ஒரு கொடுங்கோலனைக் கூண்டில் ஏற்றுவோம்!

கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சே கூண்டில் ஏறும் காலம் வந்துவிட்டது; பல்லாயிரக்கணக்கான தமிழர் களைப் பலி கொண்ட பாதகன் பாரோர் பரிகசிக்கும் வகையில் பன் னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. - கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர். இதனைத் தெரிவித்திருப்பது சிறீலங்கா அரசின் கச்சேரி (Local Govt., Office) என்ற அமைப்பாகும்.

இவர்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்களே சிறீலங்கா படை யினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நாவின் ஒச்சா அமைப்பின் கணிப்புக் கூறுகிறது.

எஞ்சிய 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் எங்கே போனார்கள்?

மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரர் சூசை அடிகளார், சேவியர் குலூஸ் அடிகளார் ஆகியோர் இந்த விவரத்தை மகிந்த ராஜபக்சே அமைத்த குழுவின் முன் (LLRC) தெரிவித்துள்ளனரே!

உண்மை இவ்வாறு இருக்கும்போது, இலங்கை இராணுவம் அறிவித்த மூன்று பாதுகாப்பு வளையங்களுக்குள் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 70 ஆயிரம் மட்டுமே என்று குறைத்துக் கூறியதன் மர்மம் என்ன?

படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் - எண்ணிக்கையை மறைப்பதற்குத் தானே!

இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற தமிழர் களையாவது காப்பாற்றினார்களா? கண்மூடித்தனமான பீரங்கித் தாக்கு தலால் கொலைகார ஹிட்லர்கள் சிட்டுக் குருவிகளை போல சுட்டுத் தீர்த்தனரே!

ஆயிரம் கோயபல்சுகளும் இந்தக் கொடிய ராஜபக்சேவுக்கு ஈடாக முடியுமா?

விடுதலைப்புலிகளிடம் சிக்கிய மக்களை, ஒருவரைக்கூடக் கொல்லாமல் (with Zero Civilian casuality) அனை வரையும் மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக நாக் கூசாமல் கூறியதை என்ன சொல்ல!

அய்.நா. அமைத்த மூவர் கொண்ட வல்லுநர் குழு - ராஜபக்சே கூறியது பொய்! பொய்!! பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பட்டவர்த் தனமாக அறிவித்துவிட்டதே!

இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்ச்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக் காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென் ஆப்பிரிக்க அறிஞர் யாஷ்மின் சூக்கா ஆகிய இருவர் அடங் கிய குழு தனது அறிக்கையை அய்.நா .வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் அளித்துவிட்டது (13.4.2011)

இந்த அறிக்கையை சிங்கள அரசு நிராகரிக்கிறதாம்; இந்த அறிக்கைக்கு எதிராக சிங்கள மக்களைக் கிளர்ந் தெழச் செய்யும் கீழ்த்தரமான வேலை யில் இறங்கி விட்டார் ராஜபக்சே!.
குருதியை உறையச் செய்யும் குரூரமான செயல்களை அய்.நா. வல்லுநர் குழு அறிக்கை பட்டியலிட்டு விட்டது. போர்க் குற்றங்களைக் கண்டிப்பாகச் செய்தது சிங்கள இராணுவம் என்பதற்கு ஏராளமான தகவல்களை வாரிக் கொட்டியுள்ளது.

கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட் டன - அய்.நா.வால் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த உணவு வழங்கப்படும் மய்யங் கள்கூட இராணுவத்தின் தாக்குதலுக் குத் தப்பவில்லை - மருத்துவமனைகளும் குறி பார்த்துத் தகர்க்கப்பட்டன.

சிங்கள இராணுவத்தின் வெறியாட் டம் வெளி உலகத்தில் வெளிச்சத்துக்கு வரக்கூடாது என்பதற்காக ஊடகக் காரர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சமாதான வெண் கொடியை ஏந்திச் சென்ற விடுதலைப்புலிகள் இயக்கத் தைச் சேர்ந்த நடேசன் போன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவ்வளவையும் செய்துவிட்டு, டைம்ஸ் ஏடு கணிக்கும் ஆற்றல் - வாய்ந்த உலகத்தில் உள்ள நூறு பேர் களுள் தாமும் ஒருவர் என்று அறிவிக் கப்பட வேண்டும் என்று சூழ்ச்சி செய்து, அய்.நா. மன்றத்து முயற்சியின் கண் களில் மண்ணை அள்ளிப் போடலாம் என்று திட்டமிட்டார் - அந்தோ! பரி தாபம், அது கருவிலேயே சிதைந்து விட்டது.

இப்பொழுது ராஜபக்சேயின் ஒரே நம்பிக்கை - இந்தியா, சீனா, ருசியா, பாகிஸ்தான் நாடுகள் நம்மை எப்படியும் கைவிடாது என்பதுதான்.

அய்ரோப்பிய ஒன்றிய 17 நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி, இலங்கை அதிபர்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட்டு வதைபடும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் அடிநாதம் (26.5.2009).

இந்த மனிதநேயத் தீர்மானத்தை முன்னின்று தோற்கடித்ததில் முதல் இடம் இந்தியாவுக்குத்தான்.

இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங் கரே என்பவர் அய்.நா வில் என்ன பேசினார் தெரியுமா?

இந்தக் கூட்டமே அவசியமற்றது; உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித் ததற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, அதனைத் தண்டிக்க, கண்டிக்க முயற்சிக்கக் கூடாது என்று பேசினாரே!

சீனா, ருசியா, பாகிஸ்தான் உள் ளிட்ட நாடுகள் கொடுங்கோலன் ராஜபக்சேயின் பாசிசப் போக்கிற்குப் பச்சைக் கொடி காட்டி, வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் தங்களுக்கான இடங்களை முன்பதிவு செய்து விட்டனர். இதைவிட கேவலம் - இலங்கை அரசு கொண்டு வந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான்.

பான் கீ முன் அமைத்த வல்லுநர் குழு இதுபற்றிக் கூறியுள்ள கருத்து மிக மிக முக்கியமானது.

2009 மே 26 அன்று நிறைவேற்றப் பட்ட தீர்மானம் (எண் A/HRC/8-11/L.I (Rev2) மாற்றியமைக்கப்பட வேண் டும்; இதற்காக அய்.நா.வின் மனித உரிமைக் குழு கூட்டப்பட வேண்டும் என்று இந்த வல்லுநர் குழு தெரிவித் துள்ளது.

இப்பொழுது நம்முன் உள்ள பிரச்சினை மட்டுமல்ல; உலக நாடுகள் முன் மனித உரிமை, மனிதநேயம் ஆகிய பண்புகள் முன் உள்ள ஒரே ஒரு பிரச்சினை - அய்.நா.வின் வல்லுநர் குழு அறிக்கையின்படி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பன்னாட்டு நீதி மன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப் பட்டு போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

பிரிவினை வந்தது எப்பொழுது?

1956இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி (only Sinhala Act) என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை எதிர்த்து 1956 ஜூன் 5 ஆம் நாள் தந்தை செல்வா தலைமையில் தமிழரசு கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

கொழும்பில் உள்ள காலிமுகத் திடல் என்னும் இடத்தில் அறவழியில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்கள வெறியர்கள் வெறி கொண்டு தாக்கினர். சிலரை பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் தூக்கி ஏறிந்தனர்.

குருதி சொட்டச் சொட்ட அடிபட்ட தமிழர்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது பிரதமராக இருந்த பண்டார நாயகா அடிபட்டவர்களைப் பார்த்து கேலியாகச் சிரித்தார். எதற்காக இப்படி உதைபடுகிறீர்கள்? சிங்கள வர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள். இனிமேல் சிங்களம்தான் ஆட்சி மொழியாக இருக்கும் என்றார்.

தனியீழம் கேட்டது எல்லாம் பிற் காலத்தில்தான். எல்லா வகைகளிலும் அறப்போரில் ஈடுபட்டு கடைசிக் கட்ட மாகத்தான் பிரிவினைக் கோரிக்கையை கையில் எடுத்தனர்.


இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகிறார்

இலங்கையின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் என்சில்வா முகாமைப் பார்வையிட்டுச் சொன்னார். இவ்வளவுக்கும் அவரும் ஒரு சிங்களவர் தான்.

நமது நாட்டின் சட்டத்தின்மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது -தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. இலங்கையில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் பச்சைப் பொய்கள். இவைகளை நான் பகிரங்க மாகவே வெளிப்படுத்துகிறேன். இந் நிலை நீடித்தால் விடுதலைப்புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம். இப்படிச் சொல்வதன்மூலம் இலங்கை அதிகாரி களால் நான் தண்டிக்கப்படலாம் கவலையில்லை என்று கூறினாரே - இதிலிருந்து ஈழத் தமிழர்களின் நிலையை அறியலாமே!

முகாம்களின் நிலை

முகாம்களில் முடக்கப்பட்டுக் கிடந்த தமிழர்களின் 24 ஆயிரம் பேர்களுக்கு அம்மை நோய், 4000 பேர்களுக்கு மஞ்சள் காமாலை நோய். 5 பேர் தங்கக் கூடிய குடிசையில் 20 பேர்களாம். இவர்களைக் கண்காணிக்க 1200 சிங்கள இராணுவத்தினர்.

அடிப்படை வசதிகள் எதுவும் செய் துத் தரப்படவில்லை. ஆனால் ராஜ பக்சே என்ன கூறுகிறார்?

The largest humanitarian rescue operation in human history என்கிறார்.

(மனித குல வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களைக் காக்கும் மகத்தான நடவடிக்கையாம்) வன்னிப் பகுதியை மீட்டுருவாக்க 19 பேர் கொண்ட குழுவாம். குழுவின்

ஆலோசகர் யார் தெரியுமா?

அதிபர் ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சேதான் குழுவின் தலைவராம். ஆட்டு மந்தைக்குச் சட்டாம்பிள்ளை நரியாம் அவரின் இன்னொரு உடன் பிறப்பும் இராணுவ ஆலோசக ருமான கோத்தபய ராஜபக்சே குழுவின் உறுப்பினராம். மொத்தம் 19 பேர்களில் 18 பேர் சிங்களவர்கள் மற்றும் ஒருவர் முசுலிம். ஈழத் தமிழர் யாரும் கிடையாது.

போர்க் குற்றவாளிகள்

சூடான் நாட்டின் அதிபர் அல்பஷீர் சூடான் மக்கள்மீது மனித உரிமைகளுக்கு மாறான குற்றங்களை, வன்முறைகளை இழைத்ததற்காக பன்னாட்டு நீதிமன்றத்தார் பிடிவாரண்டுக்கு ஆளாக்கப்பட்டதுண்டு.

*****************

8000 செர்பிய முசுலிம்களைப் படுகொலை செய்த ஜெனரல் ராட்கோ மிலாடிக் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார்.

*****************

அந்த வரிசையில் ராஜபக்சேவுக்கு அதிக வாய்ப்பு உண்டு.

பார்ப்பனர்களின் நிலைப்பாடு

கேள்வி: ஜெயலலிதா ஆட்சியின்போது புலி ஆதரவு மாவீரர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்?

பதில்: ஜெயலலிதா ஆட்சியின்போது புலி ஆதரவாளர்கள் எங்கே போக வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள்; மவுனம் சாதித்தார்கள். அதனால்தான் அவர்கள் அப்போது எங்கே போயிருந் தார்கள் என்று இப்போது கேட்கிறீர்கள்.

(துக்ளக் 25.2.2009)

--------------- தொகுப்பு:- மின்சாரம் - “விடுதலை” 25-6-2011

பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள்பற்றி... அசிங்கம்... அசிங்கமாக....


நேற்றைய தொடர்ச்சி.....

ஊரில் இறங்கியவுடன் முதலில் நாம் சந்திப்பது பிச்சைக்காரர்களைத்தான். சத்தியபாபாவால் இதை ஒழிக்க முடியவில்லையோ என்ற எண்ணம்தான் வந்தது.

இப்பொழுது பிரச்சினை வியாபாரிகளுக்குத்தான். கூட்டம் குறைந்துவிட்டது. ஒவ்வொரு கடையிலும் சாயிபாபாவின் படம் உண்டு. சாயி என்றோ பாபா என்றோ அடையாளப் பெயர் இல்லாத கடைகள் கிடையவே கிடையாது.

சாயிபாபா இருக்கும் போது ஒவ்வொரு நாளும் வியாபாரிகள் ஒவ்வொருவரும் அங்கு சென்று அவரைத் தரிசித்து விட்டுத் தான் கடையைத் திறப்பார்களாம்!

சும்மா சொல்லக் கூடாது! மனுஷன் ஆன்மீகக் குடையின்கீழ் ஊரை நிறுத்தி வைத்திருக்கிறார். (மேல் மருத்தூர் அம்மாவும் அதே வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்).

பாபாவால் தானே கூட்டம்! அதனால்தானே பிழைப்பு - விசுவாசமாக இருக்க மாட்டார்களா?


ஊரில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்தது, மருத்துவமனை கட்டியது, கல்விக் கூடங்கள் திறந்தது உள்பட பல நல்ல காரியங்களைச் செய்துள்ளார். அந்த விசுவாசத்தோடு மக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

தன்னை எந்த ஒரு நிலையிலும் ஓர் இந்து மத சாமியாகக் காட்டிக் கொண்டதில்லை. நுழைவு வளைவில் கூட இந்துக் கடவுள்கள் மற்றும் புத்தருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மாத இதழான சனாதன சாரதியின் அட்டைப்படம் நிரந்தரமானது. அதில் சர்வமதப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந் நிலையில் ஆர்.எஸ்.எஸ். போன்ற சங்பரிவார்கள் உரிமை கொண்டாடும் ஒருசூழ் நிலையை உண்டாக்கிக் கொடுக்கவில்லை என்பது சாமர்த்தியமான அம்சமாகும்.

சமயங்களுக்கு அப்பாற்பட்ட சாயிபாபா என்ற ஒரு நிலையை நிறுவியுள்ளார் என்றே கூற வேண்டும்.

பிரசாந்தி வளாகத்துக்குள் விநாயகர் கோயில் இருக்கிறது ஆல மரத்தடியின்கீழ் நம்ம ஊரில் உள்ள கடவுள்களின் உருவங்கள் சிறிது சிறிதாக அணி வகுத்து நிற்கின்றன.

எல்லாவற்றுக்கும் மஞ்சள் பூச்சு!

பார்ப்பன ஊடுருவலை அது வெளிப்படுத்துவதாகக் கூடக் கருதலாம்.

ஆயிரக்கணக்கானோர்க்குத் தரிசனம் - அளிக்கும் வகையில் அழகான மண்டபம்! கலை வேலைப்பாடுகள் கண்களைக் கவர்கின்றன!

மதிய உணவு வெறும் 6 ரூபாய்க்கே அளிக்கப்படுவது ஆச்சரியம்தான்! சிற்றுண்டி வெறும் இரண்டே ரூபாய்தான் - நம்ப முடியவில்லையா? (சிக்கனம் கருதி மதிய உணவை அங்குதான் உண்டோம்!)

பல மாநிலங்களிலிருந்தும் ஆண் - பெண் இருபாலர்களும் 15 நாள் தங்கியிருந்து சேவை செய்து திரும்புகின்றனர் - இந்தச் சேவை பிரசாந்தி நிலையத்தில் மட்டுமல்ல - மருத்துவமனைவரை நீள்கிறது. (மனதைப்பறி கொடுத்து விட்டால் சேவை செய்வதை ஒரு பாக்கியமாகத்தானே கருதுவார்கள்)

மக்களின் மூடப் பக்தியை மூடநம்பிக்கையை ஆழமாக நன்கு பயன்படுத்திக் கொண்டு வருவாய் நதிகள் கரை புரண்டு வருமாறு செய்தது ஒரு வகையில் சாதனைதான் அல்லது சாமர்த்தியம் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.

அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் இந்தப் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வகையில் அறப்பணிகளுக்கும் வாய்க்கால் திறந்து விடப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அங்குள்ள மக்களின், வியாபாரிகளின் கவலையெல்லாம் - முன்பு போல புட்டபர்த்திக்கு மக்கள் வருகை குறைந்து போனால் நம் பிழைப்பு என்னாவது என்பதுதான்.
பாபா சமாதியை எழுப்பி அதனைப் பிரபலம் அடையச் செய்யும் ஒரு திட்டம் இருப்பதாகத் தெரிகிறது.

கதையை அவிழ்த்துவிட வேண்டியதுதானே! சாயிபாபாவைப்பற்றி ஆரம்பத்தில் அவிழ்த்துவிட வில்லையா? அதே பாணியில் பாபா சமாதியின் மகிமையோ மகிமை! அங்கு சென்று தரிசித்தால், கும்பிடு போட்டால், காணிக்கைகளைக் குவித்தால் பிள்ளைவரம் கிடைக்கும், வியாபாரம் பெருகும், மலைபோல் வரும் துயரங்கள் பனிபோல் விலகிவிடும்; வியாதிகள் பஞ்சாய்ப் பறக்கும் என்று ஆங்காங்கே ஆள்களை ஏற்பாடு செய்து பிரச்சாரம் செய்விக்க வேண்டியதுதானே!

(ஒரு கோடி ரூபாய் கொடு. கழுதையை மகான் ஆக்கிக் காட்டுகிறேன் என்று தந்தை பெரியார் சொன்னதை நினைவிற் கொள்க!)

கருநாடக மாநிலம், மாண்டியாவில், புட்டபர்த்தி சாயிபாபா மீண்டும் அவதரிப்பார் என்று இப்பொழுதே அஸ்திவாரம் போட்டு வைத்துள்ளார்கள். ஏதோ ஒரு திட்டமிட்ட மோசடி - சதிப்பின்னல் அரங்கேற்றப்பட உள்ளது (எச்சரிக்கை!)

பக்தி என்பது மனிதனின் மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அடிக்கடி சொல்லுவதைப் புரிந்து கொண்டால், மக்களை, மாக்களாக்கி அடி பணிய வைக்கும் யுக்தியில், கருவியில் பக்திதான் முதல் இடத்தில்!

இதனை எதிர்த்து வெற்றி கொள்வது என்பது எளிதானதல்ல. இதில் வெற்றி கண்டார் ஒரு தலைவர் என்று எண்ணிப் பார்க் கும் பொழுதுதான் தந்தை பெரியார் தம் மகத்துவத் தின் மாண்பு மலைப்பாக இருக்கிறது.

பக்தியின் பெயரால் பகவான் என்று நம்பி பணத்தைத் தருகிறார்கள் - அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு மறுப் பாகப் பகுத்தறிவைப் போதித்த தலைவரை பகுத்தறிவுப் பகலவனாகப் போற்றி அன்பளிப்புகளைக் குவித்தது - தந்தை பெரியார் விஷயத்தில் மட்டுமே நடந்திருக்கிறது.

தந்தை பெரியார் தம் கொள்கைகளை ஏற்காதவர்களைக் கூடக் கவர்ந்திருக்கிறார் - மதிக்கும்படிச் செய்திருக்கிறார்.

கடவுளைத் தூக்கி எறிந்து கடுமையாக விமர்சித்து பகுத்தறிவைப் போதித்த இந்தப் பகலவன், ஒழுக்கத்தை வலியுறுத்தியதும், ஒழுக்கத்தின் இலக்கணமாகவே வாழ்ந்து காட்டியதும்தான் அவர்தம் இமாலய வெற்றிக்கும் இணை கூற முடியாத ஒட்டு மொத்த சமூகத்தின் மதிப்புக்கும், விழுமிய காரணங்களாகும்.

ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற்கில்லைதான். சாஸ்த்திர, ஸம்பிரதாய விதிகளாகிற ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள் தாம் என்பதால் இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மதஸ்தாபனங்களில் இருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் Personal Life -இல் (தனி வாழ்க்கையில்) சத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆட்சேபிப்பதற்கில்லை.

ஓரளவிற்கு படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!!

- இவ்வாறு கூறி இருப்பவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல் - 3ஆம் பாகம் பக்கம் 336).

தந்தை பெரியார் அவர்களின் சமகாலத்தோடு வாழ்ந்தவர் என்ற முறையில் அவர் தந்தை பெரியார் அவர்களை மனதிற் கொண்டே இதனைச் சொல்லியிருக்க வேண்டும்.

தந்தை பெரியாரின் சொத்துகள் அவர் காலத்திலேயே அறக்கட்டளையாக ஆக்கப்பட்டு, அவர்களின் மறைவிற்குப் பிறகும் தக்க பாதுகாப்புடனும், வளர்ச்சிப் போக்குடனும், எதிரிகள் பொறாமைப்படும் அளவுக்கும், நாட்டு மக்கள் மதிக்கும் அளவுக்கும் நிர்வகிக்கப் படுவதையும் ஒரு பக்கத்தில் பார்க்கட்டும்!

சாயிபாபா அறக்கட்டளையின் சந்தி சிரிப்பையும், சீர் தூக்கிப் பார்க்கட்டும்.

கடத்தல் பூமியாக புட்டபர்த்தி ஆகிவிட்டது. பாபா பணமா - கறுப்புப் பணத்தின் கிடங்கா என்று சாதாரண மக்கள் பேசும் நிலைக்கு ஆளாகி விட்டதே!

பாபா பகவான்(?) என்பது உண்மையென்றால் நல்ல நிருவாகி என்பதும் உண்மையானால் இந்தக் கேவலங்கள் நர்த்தனம் ஆடுமா?

ஒருவர் பற்றிய மதிப்பீடு - அவர் இல்லாத காலத்திலும் அவர் நிறுவனம் எப்படி நடைபோடுகிறது என்பதைப் பொறுத்ததாகும் என்பதை நாள்குறிப்பின் முகப்பில் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

பாபாவின் அறக்கட்டளை உறுப்பினர்கள் என்று வான வீதியில் மிதந்து கொண்டிருந்தவர்களின் யோக்கி யதையை.. நாடு தெரிந்து கொள்ளட்டும்!

இதோ புட்டபர்த்தி உள்ளூர் மக்கள் பேசுகிறார்கள். (ஒளிப்பதிவு: பெரியார் வலைக்காட்சி) அக்கம் பக்கம் பார்த்துதான் பேசுகிறார்கள். அறக்கட்டளைப் பேர் வழிகள் பொல்லாதவர்கள் என்று கூறுகின்றனர். இதன் காரணமாக பெயர்கள் இங்கு மாற்றிக் கொடுக்கப் படுகின்றன.

முடி திருத்தும் தொழிலாளி


யஜூர் மந்திர் என்று சொல்லப்படுகிற பாபாவின் அறைக்கு இரண்டு பகுதிகள் உள்ளன. அதில் ஒன்றிலிருந்துதான் தங்கம், பணம் ஆகியவை சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இன்னொன்று பற்றி எனக்குத் தெரியாது. தற்போது, பாபாவுக்கு சமாதி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரவில் மட்டும் பணிகள் நடைபெறுகின்றன. அங்கு ஏதோ சுரங்கம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்பது மர்மம்தான். அதன் அருகில் யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது. ரத்னாகர் பற்றி மற்றவர்கள் சொல்வது சரியா, தவறா என்று தெரியாது. நடக்கின்ற தவறுகள் அனைத்துக்கும் ட்ரஸ்ட் உறுப்பினர்கள்தான் காரணம் என்று தெரிகிறது.

மரியா (இளைஞர்) அர்ஜென்டினா

சும்மா இங்கே நடப் பவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம் (நான்கைந்து பேர் ஒன்றாக வந்திருந்தனர்). நான் சாய்பாபாவின் பக்தன் அல்ல. நாங்கள் அர்ஜென்டினாவிலி ருந்து வந்திருக்கிறோம். எனக்கு சாய்பாபாவின் அருள் வாக்கின் மீது நம்பிக்கை இல்லை. நான் ஒரு கடவுள் மறுப்பாளன்.

லட்சுமண்ணா (40 வயது)


ட்ரஸ்ட்ல இருக்கிற அத்தனை பேருமே திருட்டுப் பசங்க. 420 -நல்லவங்க யாருமே கிடையாது. சாமியார் சாகறதுக்கும் அவங்கதான் காரணம். சாமியார் 29ஆம் தேதியே செத்திட்டாரு. ஆனா வெளியே வச்சா பிரச்சினை ஆகும்னு சும்மா உள்ளேயே வச்சிருந்தாங்க. லாரியெல்லாம் கொண்டு வந்து பணத்தை எடுத்துட்டு போறாங்களே தவிர எல்லாம் சாமிதுதான்.

சாமியோட பி.ஏ.சத்யஜித் கொஞ்ச நல்ல பேரு இருக்குது. உயிலு, டைரி அதெல்லாம் டிரஸ்ட் காரங்கதான் பண்ணியிருக்காங்க.

இந்த ட்ரஸ்ட்லிருந்து எங்க மண்டலத்திற்கு எதுவுமே செய்யல. அவங்கவங்களுக்குத் தேவையானதை பண்ணிக்கிட்டாங்க. பகவான் இருக்கும் போது கூட எங்களுக்கு ஒண்ணும் பண்ணல. கூலி வேலை செஞ்சுதான் பொழைக்கிறோம்.

மருத்துவமனை பரவாயில்லை. தமிழ்நாடு, கர்நாடக மருத்துவர்கள் வந்து போறாங்க. நல்லா நடக்குதுன்னு சொல்றாங்க. அவரு இருக்கும்போது தமிழ்நாட்டுக்காரங் களுக்குத்தான் அதிகாரம் குடுத்திருந்தாங்க. சாமி இருக்கும்போது நல்லது பண்ணனும்னு சொல்வாரே தவிர பண்ணக்கூடாதுன்னு சொல்லமாட்டாரு.

ரெங்கன் - இரவு காவலாளி


ஜானகிராமன் மீட்டிங்கில் பேசி பேசி உடம்பு சரியில்லாம போயி, 7 வருசத்துக்கு முன்னாடி மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து முடியாம இறந்துட்டாரு.

சாமிக்கும், அவருடைய தம்பி ஜானகிராமனுக்கும் நல்ல உறவு இருந்துச்சு. ஜானகிராமன் இருக்கும்போது எல்லாருக்கும்; நல்லது செஞ்சிருக்காரு. அவரு செத்தாலும் வைகுண்டம்தான். இருந்தாலும் வைகுண்டம் தான். ஒரு வாக்கு கொடுத்தா தவறமாட்டாரு. யாராவது தவறு செஞ்சா கண்டிப்பாரு. ஆனா, திருப்பி கூப்பிட்டு அன்பு காட்டுவாரு.

ராமகிருஷ்ணா ரெட்டி (40 வயது) கிருஷ்ணா மாவட்டம்


நாங்க ஜகன்மோகன் ரெட்டி அவர்களின் பாத யாத்திரைக்காக இங்கு வந்திருக்கிறோம். புட்டபர்த்தி சாயி பாபா இருந்த இடத்தில் நாங்களும் இருப்பதே ஆனந்தமாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதுகிறோம். இங்கு ஏதேதோ நடப்பதாக வரும் செய்திகள் பற்றி என்ன சொல்வது! பொதுவான மனிதனாக தகுந்த சாட்சிகள் இல்லாமல் அதைப்பற்றி நாம் எப்படி கருத்து சொல்ல முடியும்?

மதராஸ் ஸ்வாஸ் தேவ் ( 35 வயது) சிறீகாகுளம் மாவட்டம்


சாமியார் இருக்கும்போது மனசுக்கு கவலையா இருந்தாலும் இங்க வந்தா நிம்மதியா இருக்கும். செய்திகள் என்னென்னவோ வருது. அது உண்மையா இல்லாம இருந்தா நல்லாயிருக்குமுன்னு நினைக் கிறோம்.

ஆட்டோ ஓட்டுநர் (நடுத்தர வயது)


இங்கிருக்கிற மருத்துவமனையைப் பொருத்த வரையில் பாபா இருக்கும்போது பார்த்த மாதிரிதான் இப்பவும் பார்க்கறாங்க. சீனியாரிட்டிபடிதான் மருத்துவம் செய்யறாங்க. நான் இங்க இருக்கிறதுனால மத்ததப் பத்தி எதுவும் தெரியாது.

(இவர் மருத்துவமனையின் முன்புள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருப்பவர்)

தனியார் டி.வி. இளைஞர்


பாபா இருந்தபோது நல்லா இருந்துச்சு. அவரு போன பிறகு, இந்தத் திருட்டுப் பசங்க ஏதேதோ செய்றாங்க. உள்ளிருந்து கொண்டு வந்ததாக ரூ.37 லட்சத்தை பிடிச்சதா செய்திகள் வந்திருக்கு. வெளிப்படையா இப்படின்னா? உள்ள என்னென்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்? அரசாங்கம் இந்த ட்ரஸ்ட் ஏற்று நடத்தினா இதே பிரச்சினைதான் வரும் ட்ரஸ்ட் மெம்பருங்க நல்லவங்களா இருந்தா, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதில் உறுப்பினர்களாக இருந்தால் நல்லாயிருக்கும். இப்ப இருக்கிற ட்ரஸ்ட்டிங்க மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. மத்தியில் உள்ள தமிழ்நாட்டு அமைச்சர்தான் பின்னணியில் இருக்கிறார்.

சாயிபாபா பிறந்த இடம் இன்று சிவன் கோயிலாக இருக்கிறது - அந்தக் கோயிலின் அர்ச்சகர்

இதுதான் சாய்பாபா பிறந்த இடம். இந்த இடம் கொஞ்சம் பிரபலமானவுடன், பாபாவே ஈஸ்வரன் சிலையை இங்கு நிறுவி, பாபாவின் பிறந்த கிழ மையான ஒவ்வொரு வியாழக்கிழமையும் அவரே இந்த இடத்திற்கு வந்து பூசைகள் செய்திருக்கிறார். இன்னும் அந்த பூசைகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி அன்று ட்ரஸ்ட் உறுப்பினர்களும், பாபாவால் அழைக்கப்படும் முக்கியஸ்தர்களும் கூடி சிறப்புப் பூசைகள் செய்வது வழக்கம். இப்போது முன்பு போல கூட்டம் வருவதில்லை. அவரு இருக்கும்போது அவருதான் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சிகிட்டு இருந்தார்.

இந்திய அளவுல, உலக அளவுல பல முக்கியஸ்தர்கள் இங்க வந்து பாபாகிட்ட ஆசி வாங்கிட்டு போயிருக்காங்க. இப்ப அதெல்லாம் பார்க்க முடியலே. இப்பொழுது பாபாவோட சமாதியை சிருடி சாய்பாபா சமாதி போல அமைக்க ட்ரஸ்ட் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் மூலமாக எதிர்காலத்தில் கூட்டம் வரலாம். வராமலும் போகலாம்.

அவரு அறையிலிருந்து பணம் போனது பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் சம்பளம் ஏதுமில்லை. பக்தர்கள் தருகிற காணிக் கையில்தான் இதை ஒரு சேவையா செஞ்சுட்டு இருக்கேன்.

பாபாவின் அப்பா பெயர்: பெத்த ரங்கம்மா ராஜூ

அம்மாவின் பெயர்: சிறீவதி மேசுகாரு

வளர்ப்பு அம்மா கர்ணம் சுப்பம்மா

பாபாவின் குடும்பம் ராஜூ வகையைச் சார்ந்தது. ட்ரஸ்ட் தொடர்ந்து நடைபெறுவது சாய்பாபாவின் ஆசியில்தான் இருக்கிறது. இப்பொழுது ட்ரஸ்ட் உறுப்பினர்கள் பற்றி பல செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை ரத்னாகர் வல்லவர். அவரது வீட்டுக்கு அருகில்தான் எனது வீடும் இருக்கிறது.

இந்தக் கோயிலினுள் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாது. ட்ரஸ்ட் உறுப்பினர்கள் கூட நுழைய முடியாது.இங்கு பிராமணர்கள்தான் தொடர்ந்து அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர்.

பழ வியாபாரி (65 வயது)


பாபா இருந்த வரையில், அவர் இந்த ஊருக்கு பல நன்மைகள் செய்திருக்கிறார். அவர் இறந்த பிறகு, புட்டபர்த்தியில் வியாபாரம் நன்றாக இல்லை. ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறோம். எனக்குத் தெரிஞ்சு ட்ரஸ்ட் உறுப்பினர்கள் எதுவும் செய்ய மாட்டாங்க. எனக்கு படிப்பறிவு இல்ல. எந்த வித வசதியும் இல்ல. இந்த ஊரப்பத்தியும், எதப் பத்தியும் கவலைப்படாம ஆசிரமத்தில் இருக்கிறவங்கதான் கிடைச்ச வரைக்கும் சுருட்டிக் கிட்டுப் போறாங்க.அவரு இருந்த வரையில் இங்க திருட்டு பயமே இல்லை. ஆனா, இப்ப ஆசிரமத்திலேயே திருடு போகுது. ஆட்டோவுல, கார்ல, எதுல கிடைக் குதோ அதுல திருடிட்டு போறாங்க. அவரு இருந்த போது யார வேணும்னாலும் கூப்பிட்டுப் பேசுவாரு. கஷ்டம்னா ஏதாவது உதவி பண்ணுவாரு. ஆனா, இப்ப ஆசிரமத்துக்குள்ளேயே போக முடியல. ஏன்னா, பணமும் நகையும்தான் அவுங்க கண்ணுக்குத் தெரியுது. உள்ளூர்க்காரங்க யாரும் அவங்க கண்ணுக்குத் தெரியல.

குமார் - கல்லூரி மாணவர்

(சாயிபாபா நிறுவிய கல்லூரியிலேயே படிக்கிறார்)

சாயிபாபா பல நல்லது செஞ்சிருக்காரு. இனிமே என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியாது. நாங்களும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போட இருக்கோம். ஆசிரமத்துல நடக்கிறதுபத்தி எங்களுக்குத் தெரியாது. (பயத்துடன்)

ஜனக்கம்பள்ளி கூலித் தொழிலாளி (இளைஞர்)


ட்ரஸ்டிலிருந்து பணம் நகை வெளியே போறது உண்மைதான். அதுதான் தினம் தினம் பத்திரிகையில் போட்டோவோட செய்தி வருதே. முன்னாடி இங்க வந்து கூலி வேலை செஞ்சிட்டு போனோம். இப்ப, அந்த மாதிரி இல்லை. உள்ளூர்காரங்களே வேலை இல்லாம இருக்காங்க. அருகில் இருந்த மற்றொரு இளைஞர் குறுக்கிட்டு, இதெல்லாம் ஏண்டா சொல்றே? என்று கூற விஜயகுமார், எனக்கென்ன பயம்? ட்ரஸ்ட்லி ருக்கிறவங்க எல்லாம் திருட்டுப் பசங்கதான் என்கிறார் அழுத்தமாக.

அவரோட சகோதரி மகள் சேத்னா ராஜூ தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியது உண்மைதான். சேத்னாராஜூ பாபா கூடவே இருந்தவர். அதனால், அவருக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். ஆகவே, ரத்னாகரை அவர் தட்டிக் கேட்டிருக்கிறார். பாபாவையும் ட்ரஸ்ட்ல இருக்கிறவங்கதான் கொலை செய்து இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமா உணவு மூலமாகவும், மருந்துகள் மூலமாகவும் விசம் கொடுத்து கொன்றுவிட்டார்கள் என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

மேலும், ஊரில் திருமணம் ஆகாத இளம் பெண்களின் திருமண செலவுக்கு 2 லட்சமும், வேலை இல்லாத ஏழை விவசாய இளைஞர்களுக்கு ஒரு லட்சமும் கொடுப்பதாக பாபா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பலருக்குப் பிடிக்க வில்லை. அவருடைய அறையிலிருந்து பணம் பறி போனது அவர் கோமாவில் இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாற்றி வைத்துவிட்டார்கள். ஆனால் வெளியில் கொண்டு செல்ல இயலவில்லை. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

80 வயது கேரளவாசி


நான் இங்கே வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. பகவான்தான் என்னை இங்கே வரச் சொன்னார். இப்ப, எனக்கு வேலை எதுவும் கிடையாது. எனக்கு 3 பையன்கள். அவங்கதான் எல்லாத்தையும் கவனிச் சிக்கிறாங்க. மூணு பேரும் ட்ரஸ்ட்லேயே வேலை பார்க்கிறாங்க. பகவான், இந்த ஊருக்கு நிறைய காரியங்கள் செஞ்சிருக்காரு.

முதல்ல . . இங்க குடிக்கிறதுக்கு தண்ணீர் இல்ல. அவருதான் கொண்டு வந்தாரு. வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்காரு. இப்ப அதெல்லாம் நடக்காது. அதான், சாமி இல்லையே. அவங்கவங்க சவுகரியத்தைப் பார்த்துட்டு, அவங்கவங்க போறாங்க. நான் வரும்போது ஆசிரமம் இல்ல. பிறகுதான் ஒவ்வொன்னா தொடங் கினாரு. நான் ஓய்வு பெற்ற பிறகு, சாமி என்னைப் பார்த்து, என்ன வேணும்னு கேட்டாரு. நான் ஒன்றும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

சாமி இருக்கும்போது எல்லாம் செஞ்சாரு. இப்ப இருக்கிற நிலைமையில எதுவும் சொல்ல முடியாது. பத்திரிகையில ஏதேதோ வருது. ஆனா, அதப்பத்தி எதுவும் சொல்ல முடியாது. நான் சாமிகிட்ட விபூதி வாங்கியிருக்கேன். பிறகு, நிறைய பேர் வந்து நாங்களும் அந்த மாதிரி செஞ்சு காட்றோம்னு சொன்னாங்க. எனக்கு நினைவு இல்லை. எனக்கு படிப்பு கிடையாது. நாலஞ்சி மொழி தெரியும். இப்ப எதுவும் சொல்றதுக்கு இல்ல. அவ்வளவுதான் சமாச்சாரம்.

இப்ப ரத்னாகரைப் பற்றி பேப்பர்ல என்னென்னவோ வருதுன்னு சொல்றாங்க. எல்லாரும் ரத்னாகர் மேலதான் சொல்றாங்க.

அலெக்சி பரோஸ்கி - ரஷ்ய இளைஞர்


நான் ரஷ்யாவில் பிறந்தேன். பல ஆண்டுகள் இந்தோனேசியாவில் வாழ்ந்தேன். தற்போது நேபாளில் இருந்து இந்தியா வந்துள்ளேன். மீண்டும், நேபாள் சென்று விசாவை நீட்டித்துக் கொண்டு, மீண்டும் புட்டபர்த்தி வர இருக்கிறேன். காரணம் புட்டபர்த்தி உலக அளவில் சிறப்புப் பெற்ற இடம். சாய்பாபா நீண்ட காலமாக இங்கு இருந்துள்ளார். நான் சாய் பகவானின் அருளை நம்புகிறேன். மற்றவர்கள் இடத்தில் இல்லாத ஒரு சக்தி அவரிடம் உள்ளது. நான் அதில் உறுதியாக இருக்கிறேன். அவர் கடவுளாகவே இருந்தாலும், அவருக்குப் பல நோய்கள் இருந்தன. காரணம், நமது உடல் அய்ந்து பூதங்களால் ஆனது. இயற்கையின்படி இது நிகழ்ந்துள்ளது. இதை மக்கள் அறியாமல், தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள போராடுகின்றனர். (பக்திக் கிறுக்கு இந்தியாவுக்கு மட்டும் சொந்தமா?)

சைக்கிள் பழுது பார்ப்பவர்


சாய்பாபா இறந்த பிறகு, வெளிநாட்டுக்காரங்க வருவது குறைந்து போய் வியாபாரம் படுத்துவிட்டது. அவரு 20 நாட்களுக்கு முன்பே இறந்து போய் - பின்னர் இறந்ததாக அறிவித்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பாபாவைப் பொருத்தவரையில் இந்து, முசுலிம், கிருஸ்துவர்னு பேதம் பார்க்கிறதில்ல. அவருக்கு எல்லாரும் ஒண்ணுதான்.

ஒரு மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்று புட்டபர்த்திக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்டிய (Report) அந்தத் திராவிடர் கழகப் படையினர் யார்? கவிஞர் கலி. பூங்குன்றன், செந்தில், உடுமலை வடிவேலு, பாஸ்கர் ஆகியோர்.

கடைசி செய்தி


இன்று புட்டபர்த்தியில் வியாபாரிகள் பொது மக்கள் ஒன்று சேர்ந்து பந்த் நடத்துகின்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அறக்கட்டளையை அரசு எடுத்துக்கொள்ளவும் கோரி முழு அடைப்பு இது- பலே, பலே!

ஜெகன்மோகன் ரெட்டி புட்டபர்த்தி வந்த போது... (22.6.2011)

---------------- மின்சாரம் அவர்கள் 25-6-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை