Search This Blog

21.6.11

பெரியாரின் பகுத்தறிவும் - சாயிபாபாவின் ஆன்மிகமும்


சாயிபாபாவின் ஆன்மிகமும் - தந்தை பெரியாரின் பகுத்தறிவும்

வாழும் காலத்தில் தந்திரக்கலையை பக்தி முலாம் பூசி மக்களை ஏமாற்றி மோசடி செய்து பெரும் பணத்தைக் குவித்த புட்டபர்த்தி சாயிபாபாவின் சமாச்சாரம் - இப்பொழுது ஊர் சிரிக்கும் - நகைக்கும் நிலையில் இருக்கிறது.

பகவான் சாயிபாபாவுக்கு பணம் ஏன், சொத்து ஏன் என்ற கேள்விக்கே முதலில் பதில் சொல்லியாக வேண்டும். நாணயமான முறையில் இதுவரை யாரும் பதில் சொல்ல முன்வரவில்லையே!

மக்களிடம் மோசடியாக சுரண்டியதை மூடி மறைக்கவே பல தர்ம காரியங்களை மேற்கொண்டார் என்பதுதான் உண்மை. புட்டபர்த்தியில் மிகப் பெரிய மருத்துவமனை கட்டினார் என்பது நல்ல செயல் என்றாலும்கூட, பகவான் சாயிபாபா அதைச் செய்தது - அவரது பகவான் சக்தியையே கேள்விக் குறிக்கும், கேலிக் குறிக்கும் ஆளாக்கிவிடவில்லையா?

அளவுக்கு மீறி சுரண்டப்பட்ட அந்தச் சொத்துகளைக் கபளீகரம் செய்வதில் ஒரு கூட்டம் நான் - நீ என்று முண்டியடித்துக் கொண்டு நிற்கிறது என்கிற செய்திகள் இப்பொழுது அம்பலத் துக்கு வந்துள்ளன.

அவர் மரணம் அடைந்த நாள் முற்கொண்டே சாயிபாபா அறக்கட்டளை பற்றி பல்வேறு தகவல்கள் கசிய ஆரம்பித்தன. அடுத்து அறக்கட்டளையின் தலைவர் யார்? வங்கிக் கணக்குகளை நிருவாகம் செய்வோர் யார்? என்பது பற்றியெல்லாம் முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தன. சாயிபாபாவின் சகோதரர் மகன் இதில் முக்கிய அங்கம் வகித்தார். அவர் மூலம் பல செய்திகள் உலவ விடப்பட்டன.

ஏப்ரல் 24ஆம் தேதி சாயிபாபா மரணம் அடைந்த பிறகு இம்மாதம் 17ஆம் தேதி சாயிபாபாவின் தனிப்பட்ட அறை திறந்து பார்க்கப்பட்ட போது தங்கக் கட்டிகளும், வைரங்களும், வெள்ளிக் கட்டிகளும் ரூபாய் நோட்டுக் கற்றைகளும் குவிந்து கிடந்தன.

இவையெல்லாம் கண்டிப்பாக சாயிபாபாவின் கையசைப்பால் வந்து குவிந்தவையல்ல; மக்களின் அறியாமை, பக்தி மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திச் சுரண்டப்பட்ட பெருந் தொகையாகும்.

இப்படிக் குவிக்கப்பட்ட பெரும் பணத்தை தனிப்பட்டவர்கள் சுருட்டிக் கொள்ளும் பெரும் முயற்சி ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.

இம்மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமை காலை சொகுசு காரில் கடத்தப்பட்ட 35 லட்ச ரூபாய் பறி முதல் செய்யப்பட்டது.

அதேபோல 19ஆம் தேதி காலை தனியார் பேருந்தில் இரண்டு கோணிப்பைகளில் 10 கோடி ரூபாய் நோட்டுகள் கடத்தப்பட்ட நிலையில் அதுவும் சாமர்த்தியமாகப் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் முழுவதும் சாயிபாபா ஆசிரமத்தி லிருந்துதான் கடத்தப்பட்டதாக உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

ரூபாய்களைக் கடத்திய ஒருவர் சோகன் ஷெட்டி என்றும், அவர் கருநாடக மாநில முன்னாள் காவல் துறை இயக்குநர் உமாநாத் ஷெட்டியின் மகன் என்றும் தெரிய வருகிறது. நடந்திருக்கும் செயல் களைப் பார்க்கும் பொழுது கடத்தல் திட்டம் பலமான ஒரு பின்னணியில் பின்னப் பட்டு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

பறிமுதல் செய்யப்பட்டது பனிப்பாறையின் ஒரு முனையாகக்கூட இருக்கலாம்; வேறு பல வகை களிலும் பெரும் பணம் கடத்தப்பட்டு இருக்குமோ என்று சந்தேகிக்கக்கூட இடம் இருக்கிறது அல்லவா!

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொன்ன பழுத்த நாத்திகரான தந்தை பெரியார் அவர்கள் தம் சொத்துகள் முழுமையும் அறக்கட்டளையாக்கி, தக்காரை அறக்கட்டளையில் நியமனம் செய்ததும்,

தந்தை பெரியார் நம்பிக்கை மிகவும் சரியானதே என்ற தன்மையில் தந்தை பெரியார் விரும்பியபடி பெரியார் அறக்கட்டளையின் சொத்துகள் உரிய வகையில் மக்களுக்குப் பகுத்தறிவும், கல்வியும் கிடைக்கும் வகையில் துல்லியமாகப் பயன்பட்டு வருகிறது என்பதையும் பார்க்கும் பொழுது, ஆன்மிகத்துக்கும் அறிவு நாணயமிக்க பகுத்தறிவு கோட்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

ஆன்மிகத்தில் பக்திக்கு (மூடநம்பிக்கைக்கு) மட்டுமே இடம் உண்டு. பகுத்தறிவிலோ பகுத்தறிவுக் கும், ஒழுக்கத்துக்கும் இடம் உண்டு என்பதைப் புட்ட பர்த்தியைப் பார்த்தாவது பொது மக்கள் தெரிந்து கொள்ளட்டும்!

----------------”விடுதலை” 21-6-2011

0 comments: