Search This Blog

24.6.11

சாயிபாபா மரணத்தையே சந்தேகிக்கும் பக்தர்கள்!

சாயி கோட்டைக்குள் நால்வர் பாபா மரணத்தையே சந்தேகிக்கும் பக்தர்கள்!

நமது சிறப்புச் செய்தியாளர்

ஓர் அரை நூற்றாண்டுக்குமுன் எங்குப் பார்த்தாலும் புட்டபர்த்தி சாயிபாபாவைப்பற்றியே பேச்சு!

கண்ணாடி போட்டு வைக்கப்பட்ட சாயிபாபாவின் படத்திலிருந்து திருநீறு கொட்டியது என்று ஒரு திட்டமிடப்பட்ட பிரச்சாரம் நாடு தழுவிய அளவில்.

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்சவரம்பாக எட்டு நாள்கள்தான் எல்லைக்கோடு வைத்திருந்தனர். நாளடைவில் அந்தப் புரூடா தானே அடங்கிக் கொண்டது.

படித்தவர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் என்று விசுவாசிகளை உருவாக்கி, அவர்கள் மூலமாகவும் சாயிபாபாவின் அற்புதங்கள்பற்றி அள்ளிவிட ஏற்பாடு செய்யப்பட்டதுண்டு.

ஜப்பானிலிருந்து சீக்கோ வாட்ச் வரவழைத்துக் கொடுத்ததாகப் பரப்பப்பட்ட தகவல் - அவர் முகமூடியைக் கிழிக்கத்தான் பயன்பட்டது.

இதுகுறித்து ஏடுகளில் வெளிவந்த செய்தியைப் படித்த டாக்டர் கோவூர் அவர்கள் சம்பந்தப்பட்ட ஜப்பான் நிறுவனத்துக்கே எழுதிக் கேட்டபோது, சாயிபாபா சீக்கோ கைக்கடிகாரம் வரவழைத்துக் கொடுத்ததாகச் சொல்லப்படுவது சுத்த பொய்யில் வறுத்தெடுக்கப்பட்டது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

சாயிபாபாவுக்கு அலாதியான சக்தியிருக்கிறது என்று கூறி, அதற்கு விஞ்ஞான பூர்வமான கருத்துகள் ஆதாரம் உண்டு என்று நிரூபிக்கப் படாத பாடுபட்டனர்!

தூய்மையான மனநிலையில் இருக்கும் ஒருவரது மூளையில் இருந்து சுரக்கும் பிட்யூட்டரி சுரப்பி எனப்படும் ஒரு வகைத் திரவம் பெரும் ஆற்றலுடையது என்று கண்டறியப்பட்டது. இந்தச் சுரப்பி பாபாவுக்கு எதிரே உள்ளவர்களின் செல்களைச் சென்றடைந்து, அவர்கள் நினைத்தது நிறைவேறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றெல்லாம்கூடப் பரப்பினர். (இது எந்த விஞ்ஞானியால், எந்த விஞ்ஞானக் கூடத்தில் நிரூபிக்கப்பட்டது? அந்தச் சுரப்பி பாபாவுக்கே பயன்படாமல் அல்லவா மாண்டு போனார்?)

தண்ணீரைப் பெட்ரோலாக்கினார் என்றுகூட பரப்புரை செய்தனர். சாயிபாபா காரில் சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாமல் கார் நின்று போய் விட்டதாம். உடனே பாபா என்ன செய்தாராம்? ஒரு வாளியில் தண்ணீரைக் கொண்டு வரச் சொல்லி அதில் கையை வைத்தாராம்! என்ன ஆச்சரியம்! தண்ணீர் பெட்ரோலாக மாறி விட்டதாம்! (முதல் கேள்வி பாபா பயணம் செய்யும் கார் பெட்ரோல் இல்லாததால் நிற்கலாமா?

இரண்டாம் கேள்வி - தண்ணீரைப் பெட்ரோலாக்கும் சக்தி பாபாவுக்கு இருப்பது உண்மையென்றால், ஒரே நொடியில் விலைவாசியைக் கட்டுப்படுத்தி சாதனை நிகழ்த்தலாமே! பாபா அதை ஏன் செய்யவில்லை? பாபாவின் காலடியில் உட்காரும் பிரதமர்கள் அதனை ஏன் பயன்படுத்திக் கொள்ள வில்லை?)

வெளிநாட்டில் இருந்தும்கூடப் பக்தர்கள் வந்தனர். (முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே சொந்தமா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்வியை இங்கு நினைத்துக் கொள்ளலாம்).

தால்பரூக் என்ற அமெரிக்கர் புட்டபர்த்தி வந்தார் தங்கினார். இயேசுவின் மறு அவதாரமே சாயிபாபா என்று மனதாரவே நம்பினார்.

பிறகுதான் சாயியின் அசிங்கமான அந்தரங்கத்தை நேரடி அனுபவத்தின்மூலம் தெரிந்துகொண்டார். தன் பிறப்பு உறுப்பை அவர் தூண்டியது கண்டு அருவருப்பு அடைந்தார். அதற்குக் குண்டலினி சக்தியை எழுப்பும் செயல் என்று ஓர் ஆன்மீக மகுடத்தைச் சூட்டினார்கள். அதையும் சகித்துக் கொண்டார்.

சாயி போர்டிங் பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் சாயிபாபா ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதைப் பட்டாங்கமாக நேரில் அறிந்து புட்டபர்த்தியைவிட்டு வெளியேறினார்.

அவதார் ஃஆப் தி நைட் என்ற 200 பக்கங்களைக் கொண்ட நூலை வெளியிட்டு பாபாவின் மற்றொரு ஆபாசமான பக்கத்தை அம்பலப்படுத்தினார்.

1992 ஆம் ஆண்டு 22 ஆம் தேதியை சாயிபாபாவால் மறக்கவே முடியாது.

பல கோடி ரூபாயில் கட்டப்பட்ட தமது திருமண மண்டபத் திறப்பு விழாவிற்கு அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அழைக்கப்பட்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் கையசைப்பில் தங்கச் சங்கிலி ஒன்றை பாபா வரவழைத்தார்.

பாபாவின் ஏமாற்றுச் சக்தியைவிட விஞ்ஞானத்தின் வீடியோவுக்கு அதிக சக்தி உண்டு என்பதை சாயிபாபா தெரிந்து வைத்திருக்கவில்லையோ!

சாயிபாபாவின் உதவியாளர் தந்திரமாக சங்கிலியை பாபாவிடம் கொடுத்தது வீடியோவில் பதிவாகிவிட்டது. அந்த வீடியோ வெளியுலகுக்கு வந்து சாயிபாபாவின் சாகசம் அசல் பித்தலாட்டம் என்று ஊருக்கும், உலகுக்கும் தெரிந்துவிட்டது.

டெக்கான் கிரானிக்கல் ஏடு அதனைப் படத்தோடு வெளியிட்டதே!

இதுபோல எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் உண்டு.

ஆனாலும், பக்தியால் புத்தியைப் பறிகொடுத்த மக்கள் நாட்டில் ஏராளம் உண்டே! பக்தர்களும் திரண்டனர் - பணமும் திரண்டது. ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து என்றால் சாதாரணமா?

95 வயதுவரை வாழ்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்த சாயி 85 வயதிலேயே மரணம் அடைந்தார். நான்கு வார காலம் சொல்லொண்ணா நோய்த் துன்பத்திற்கு ஆளானார்.

ஆசீர்வாதத்தால் மற்றவர்களின் நோயைக் குணப்படுத்துவதாகச் சொன்னவருக்கே இப்படி ஒரு நோயின் கொடுமை!

அவரது மரணம் - அதன் பின்னணி - மரணத்துக்குப்பின் அவர்தம் திரண்ட சொத்துகள் - யார் கையில் அவை சரணடையப் போகின்றன என்பது குறித்து ஒவ்வொரு நாளும் திடுக் திடுக்கென்று திகிலூட்டும் கதைகளாக நாளும் வந்து கொண்டிருக்கின்றன.

ஏப்ரல் 24 ஆம் தேதி சாயிபாபா மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு 19 நாள்களுக்கு முன்பே அவரை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டி (5.4.2011) பெங்களூருவிலிருந்து புட்டபர்த்திக்கு வந்து சேர்ந்துவிட்டதே! அப்படி என்றால் அவர் செத்தது எந்த நாள்? செத்ததாக அறிவிக்கப்பட்டது எந்த நாள்? இதற்குள் ஏதோ மர்மம் இருக்கிறது - இந்த 19 நாள்களில் என்னென்ன உள்ளுக்குள் நடந்தன? என்ற கேள்விகள் மக்கள் மத்தியிலே வெடித்துக் கிளம்பின.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட அன்றைக்கே புட்டபர்த்தியில் உள்ள தேவனஹள்ளி விமான நிலையத்தில் சந்தேகப்படும்படி நடந்த இருவரின் கைப்பெட்டியை காவல்துறையினர் சோதித்துப் பார்த்தபோது வைர, தங்க நகைகள் பிடிபட்டன. மரணம் அடைந்த அன்றைக்கே கடத்தல் வியாபாரம் தொடங்கப்பட்டுவிட்டது.

அதனைத் தொடர்ந்து மேலும் மேலும் திடுக்கிடும் தகவல்கள்.

35.5 லட்ச ரூபாய் கருநாடக மாநில எல்லைப் பகுதியில் பிடிபட்டுள்ளது.

இது தொடர்பாக பொறியாளர்கள் ஹரிஷ் ஆனந்த் ஷெட்டி, சாயிபாபா அறக்கட்டளை உறுப்பினர் வேணு சீனிவாசனின் (டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவர்) ஓட்டுநர் சந்திரசேகர், பெங்களூருவைச் சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் ஷோகன் ஷெட்டி திடுக்கிடும் ஒரு தகவலைக் கசிய விட்டுள்ளார்.

நான் கருநாடக மாநில முன்னாள் டி.ஜி.பி. உமாநாத் ஷெட்டியின் மகன். வேனில் உள்ள பணக் கற்றைகளை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். உமாநாத் உங்களிடம் பேசுவார் என்று கூறினார் என்பதிலிருந்து இந்தப் பகாசுரக் கொள்ளையில் பல திமிங்கலங்கள் ஈடுபட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.

இந்தப் பிரச்சினையின் ஈரம் காய்வதற்கு முன்னதாக இதைவிட அதிர்ச்சியூட்டும் ஒரு கொள்ளை பற்றிய செய்தி!

கடந்த ஞாயிறு (19.6.2011) அதிகாலையில் புட்டபர்த்தியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் 10 கோடி ரூபாய் நோட்டுகள் சிக்கியது. கோணிப் பைகளில் பணத்தை மூட்டையாகக் கட்டி சொகுசுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்ட தொகை இது.

இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாயிபாபாவின் அந்தரங்க யஜுர்வேத அறையினைத் திறந்து பார்த்தபோது மலைபோல் குவிந்து கிடந்தன தங்கக் கட்டிகளும், வெள்ளிக் கட்டிகளும், வைர நகைகளும், ரூபாய்க் கற்றைகளும்!

(98 கிலோ தங்கம், 300 கிலோ வெள்ளிக் கட்டிகள், 12 கோடி ரூபாய் கரன்சி நோட்டுகள்).

இப்படி கண்டுபிடிக்கப்பட்ட இரு நாள்கள் கழித்துத்தான் 35.5 லட்ச ரூபாயும், அதனை அடுத்து 10 கோடி ரூபாய் நோட்டுகள் கடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் அறக்கட்டளை உறுப்பினர்களின் ஆள்கள் (ஓட்டுநர் உள்பட) என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

இவ்வளவு நடந்தும் புட்டபர்த்தியில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) நரசிம்மலு அரசுக்கு எந்தவிதத் தகவலையும் தெரிவிக்காதது - ஏன்? தொடர்புச் சங்கிலி எங்கெங்கேயோ போகிறதா இல்லையா? இந்தக் காவல்துறை அதிகாரி உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டார்.

அறக்கட்டளையின் உறுப்பினரும், சாயிபாபாவின் அண்ணன் மகனுமான ஆர்.ஜெ. ரத்னாகர் (காங்கிரஸ் பிரமுகர்), அறக்கட்டளையின் உறுப்பினரும், சென்னை டி.வி.எஸ். குடும்பத்துக்காரருமான வேணு. சீனிவாசன் ஆகியோருக்கு விசாரணைக்காக ஆந்திர மாநிலக் காவல்துறை தாக்கீது அனுப்பியுள்ளது.

இதற்கிடையே சாயிபாபாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சாயிபாபா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாள்கள்வரை எங்களுக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? சாயிபாபாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலேயே எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. பாபா எழுதி வைத்த உயில் எங்கே?
உயில் ஏதும் இல்லை என்பதை ஏற்க முடியாது என்று சாயிபாபாவின் சகோதரி வெங்கம்மாவின் மகன் சங்கர் ராஜு. - இவ்வாறு பிரச்சினையைக் கிளப்பி இருக்கிறார்.

தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது - என்னைக் கொல்ல சதி நடக்கிறது என்று சாயிபாபாவின் சகோதரியின் மகளும், பிரசாந்தி நிலையத்தில் நடைபெறும் ஈஸ்வரம்மா பெண்கள் நல அறக்கட்டளையின் தலைவியுமான சேத்தனாராஜு சொல்லியிருப்பது - பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற திகில் நிலவும் பூமியாக புட்டபர்த்தி மாறிவிட்டது.

பிர்லா மாளிகை மர்மம் என்று ஒரு காலத்தில் பேசப்பட்டது. அவற்றையெல்லாம் தூக்கி அடிக்கும் மர்மங்கள் ஒவ்வொன்றாக புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் புட்டபர்த்தியில் தங்கி இருக்கும் வெளிநாட்டுப் பக்தர் அய்சக் டிரிசேட் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

உயில் எழுதி வைத்திருந்ததாக பாபா தன்னிடம் கூறியுள்ளார் என்று அவர் சொல்லப் போக, அறக்கட்டளை உறுப்பினர்கள் திகிலில் உறைந்து போய்விட்டனர்.

முறையாக பாபாவின் உயிலை வெளியிடாவிட்டால், இன்னும் ஆறு வாரங்களில் தானே அந்த உயிலை வெளியிடுவதாக அறிவித்துவிட்டார். (அவர் உயிர் பத்திரம்!).

பகவான் சாயிபாபாவின் கதை இப்படி நாற்றமெடுத்துக் கொண்டு இருக்கிறது. பார்ப்பன ஏடுகள், ஆன்மீக ஊடகங்கள் உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்தி போல, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளன.

கொலை வழக்கில் சங்கராச்சாரி சிக்குண்டு சிறையில் கம்பி எண்ணிய விவகாரத்துக்குப் பிறகு - ஆன்மீக உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சாயிபாபாவின் சங்கதி இப்படி சந்தி சிரிக்கிறதே என்று புலம்பிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்,

புட்டபர்த்திக்குள் அடியெடுத்து வைத்தது திராவிடர் கழகப் படை!

21.6.2011 செவ்வாய் இரவு 8.30 மணிக்கு சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து புட்டபர்த்திக்குப் புறப்படும் ஆந்திர மாநிலப் போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்தில் அந்தப் படை பயணித்தது.

பன்னிரெண்டரை மணி பேருந்துப் பயணத்துக்குப் பின் அவர்கள் புட்டபர்த்தி பேருந்து நிலையத்தில் காலடி எடுத்து வைத்தனர் - மறுநாள் காலை 8.45 மணிக்கு.

அவர்கள் யார் - யார்?

அவர்கள் யார் யாரைச் சந்தித்தனர்?

மர்மமான திகிலூட்டும் - ஓர் மயான அமைதியான நிலை அங்கு நிலவுவதற்குக் காரணம் என்ன? பொதுமக்கள் அபிப்ராயம் என்ன? வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள்?

வெளிநாட்டுக்காரர்களின் மனதில் என்ன இருக்கிறது? மாணவர்கள் மனதில் என்ன குடிகொண்டு இருக்கிறது? அறக்கட்டளையை அரசு எடுத்துக் கொள்ளவேண்டுமா? அறப்பணிகள் தொடர்ந்து நடைபெறுமா? யார் யார் கைது செய்யப்படக் கூடும்?

ஆன்மீகக் குடையின்கீழ் கொண்டுவரப்பட்ட புட்டபர்த்தியின் இன்றைய நிலவரம் - கலவரம் என்ன?

நாளை சந்திப்போம்!

காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட அறக்கட்டளை உறுப்பினர்
வேணு சீனிவாசன் (டிவிஎஸ் குடும்பம்)


------------- மின்சாரம் அவர்கள் 24-6-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Anandha said...

kadavul illai yenru solbavargalai nambi vidalam kadavul irukiraar yenru solbavarayum nabalam naandhan kadavul yenru solbavanai nambave koodathu koodave indha alle looya kostikalayum patri visaariyungal