வியாபாரக் குடும்பத்தில் பிறந்தாய் உனை விலை கொடுத்து வாங்க யாருக்கும் தகுதியில்லை என்று தந்தை பெரியாரைப் பற்றிய வரிகள் உண்டு.
நேற்று என்பது நடந்து முடிந்த தேர்தலோ நாளை என்பது வரப் போகிற தேர்தலோ அல்ல. அது வந்து வந்து போகிற வரலாற்றில் ஒரு பகுதி. என்னிடம் ஏன் பழைய வரலாறுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று அடிக்கடி கேட்கிறார்கள் எங்களுக்கென்று வரலாறு உள்ளது பேசுகிறோம் என்பேன். வரலாறு இல்லாதவர்களைப் பற்றிக் கவலையில்லை. எவன் ஒருவன் வரலாற்றை அறிந்து வைத்திருக்கிறானோ அவனால்தான் வரலாற்றைப் படைக்க முடியும். வரலாற்றை அறியாதவர்கள் ஒரு நாளும் வரலாற்றை உருவாக்க முடியாது.
ஊடகங்கள் ஒரு விசயத்தை ஊதிப் பெரிதுபடுத்துகின்றன. நடந்து முடிந்த தேர்தலில் அந்த அணி அபார வெற்றி பெற்று விட்டதாகவும் இந்த அணி படு தோல்வி அடைந்து விட்டதாகவும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதி களின் எண்ணிக்கையில் அப்படிச் சொல்கின்றன. நம்மில் பலரும் அப்படித்தான் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் 203 தொகுதிகளும் இந்த அணி 31 தொகுதியும் பெற்றிருக்கும்போது அப்படித்தான் எண்ணத் தோன்றும்.
தேவை விகிதாச்சார தேர்தல்
ஆனால் உண்மையில் நடந்தது என்ன? இது குறித்து 60-களிலே நடந்த தேர்தல் குறித்து அறிஞர் அண்ணா சொன்னார். அதாவது தேர்தல் என்பது விகிதாச்சாரத்தைப் பொறுத்து இருக்க வேண்டும் என்றார். அந்த அணி 234- தொதிகளிலும் இப்போது பெற்றிருப்பது ஒரு கோடியே 62-லட்சம். இந்த அணி பெற்றிருப்பது ஒரு கோடியே 45- லட்சமாகும். அதா வது கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி வாக்காளர்கள் நம் பக்கத்திலும் பின்னாலும் இருக்கிறார்கள்.
அரசியல் ஆய்வுகளில் தேர்தல் முடிவுகள் குறித்து சொல்லும்போது ஒரு விசயத்தை சொல்லியிருக் கிறார்கள். அதாவது தேர்தலில் ஒரு கட்சியில் இருந்து மாறி வாக்களிப்ப வர்கள் 10- சதவிகிதம் பேராகும். ஆனால் நாம் தேர்தலில் இழந்தி ருப்பது அதாவது நமக்கு மாறி வாக்களித்திருப்பது 5சதவிகிதம்தான். அதை மக்களிடம் பெறுவதற்கு 5ஆண்டுகள் காத்திருக்கத் தேவை யில்லை. மிகச் சரியாக உழைத்தால் அய்ந்தே மாதங்களில் மக்களிட மிருந்து அதனைப் பெற்று விடலாம்.
தா. பாண்டியனுக்குப் புரியவில்லையே!
சமச்சீர்கல்வியில் அந்த அம்மையாரின் முடிவை நாம் எதிர்க்கிறோம் என்பது வேறு. ஆனால் தா.பாண்டியனுக்குப் புரிய இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. பாவம் அவர். மக்கள் நல வாழ்வுத் திட்டங்களை நடைமுறைப் படுத்தாமல் யாரும் ஆட்சி செய்ய முடியாது. தலைவர் கலைஞர் அவர்கள் அந்தம்மையாரையும் அந்த வழிக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவில் நலத்திட்ட உதவிகளுக்காக செயல்படுத்தப்பட்ட தொகை ரூ.32 ஆயிரம் கோடி. அதில் தமிழகத்துக்கு மட்டும் பெற்றுத் தந்தது ரூ.2 ஆயிரம் கோடிகளாகும். அதைச் சொல்லி வாக்குகள் கேட்டோம்.
ஆனாலும் ஜாதியை ஒழித்த இயக்கம் நம் திராவிட இயக்கம் என்று சொல்லி வாக்குகள் கேட்க நம்மில் பலருக்கும் தயக்கம். பயந்தார்கள். இயக்கத்தின் பெருமைகளை அறியாததால் வந்தது இது. இடுப்புத் துண்டை எடுத்து தோளில் போட வைத்தது திராவிட இயக்கம். தெருக்களிலே செருப்புகளை அணிந்து கொண்டு ஆண்களும் பெண்களும் சமமாக நடக்கலாம் என்கிற உரி மையைப் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம்.
தெரியுமா குலக்கல்வித் திட்டம் பற்றி
இன்றைக்கு நம் பிள்ளைகள் எல்லாம் அனைத்துக் கல்வியையும் கற்று வைத்திருக்கிறார்கள். உலகில் உள்ளவர்கள் எல்லாம் வியக்கும் வண்ணம் கல்வி கற்றிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கல்வி எப்படி கற்றுக் கொள்ள முடிந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. குலக்கல்வி என்றால் அடுத்த தலைமுறைக்குத் தெரியுமா? ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப் பட்ட நம் சமூகத் திற்கு கல்விக்கண் எப்போது திறக்கப் பட்டது என்பது தெரியுமா? எந்த இயக்கம் அதற்காகப் பாடுபட்டது என்பது தெரியுமா? யார் இன்று வளரந்திருக்கிறார்களோ யார் இன்று பலன் பெறுகிறார்களோ அந்தக் குழந்தைகளிடத்திலே போய் கல்வியில் மாற்றம் தேவை என்றால் அவர்களுக்கு என்ன புரியப்போகிறது?
மாற்றம் என்பது எப்போதும் வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும். வளர்ச்சியை நோக்கியதாக இருந்தால் மட்டுமே அது மாற்றம். இல்லையேல் அது ஏமாற்றம் தடுமாற்றம் ஆகும். இந்த மாற்றம் என்பது எங்கேயிருந்து வந்தது அந்த மாற்றத்திற்கு திராவிட இயக்கம் என்ன செய்தது நாளைக்கு எங்கே செல்ல வேண்டும் என்கிற வரலாற்றை நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அது இப்போது தக்க தருணமாகும். நாம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத நேரம். தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வு என்று சொன்னது ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு எப்போதும் கோப்புகளைப் புரட்டுவதிலிருந்து ஓய்வு. மக்கள் நலப்பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறவர் இல்லை. அவரது பணிக்காக அவரைத் தாங்கிப் பிடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
இந்தத் தருணத்திலேதான் திராவிட இயக்க வரலாற்றைத் தட்டி எழுப்பி மறுபடியும் இளைஞர்களி டத்திலே கொண்டு சேர்க்க வேண்டும். நம் பக்கத்திலே இருக்கிற திருவையாறில் இருக்கிற தமிழ்க் கல்லூரி எப்போது யாரால் எந்த இயக்கத்தால் தமிழ்க்கல்லூரியாக ஆனது என்பது இன்றைய இளைஞர்களுக்குத் தெரியுமா? அங்கு படிக்கிற பிள்ளைகளுக்கே தெரியாது. 1937ஆம் ஆண்டு வரை வெறும் சமஸ்கிருதம் மட்டும் தான் கற்பிக்கப்பட்டது. வேறு எந்தப் பாடமும் இல்லை. என்ன காரணம் என்று சொன்னபோது அவர்கள் சொன்னார்கள் மன்னன் தன் உயிலில் தன் பணமும் தான் எழுதி வைத் திருக்கிறதும் சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிற படியால் அந்த பாடம் மட்டுமே சொல்லித்தர முடியும் என்று சொல்லி விட்டார்கள். மன்னனிடுடைய உயில் வாங்கிப் படிக்கப்பட்டது. யாருக்கும் புரிய வில்லை. அந்த உயில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது. உடனே கரந்தை தமிழ்க் கல்லூரியில் பணியாற்றிய உமாமகேசுவரனும் செல்வ சேகர் முதலியார் அவர்களும் அந்த உயிலை எடுத்துக் கொண்டுபோய் ஞானியார் இடத்திலே கொண்டு போய்க் கொடுத்தனர். அவர் படித்துப் பார்த்து விட்டு இந்த உயிலில் சமஸ்கிருதத் திற்குத்தான் என்று எந்த இடத்திலும் எழுதவில்லை என்றார்.
மன்னன் உயிலில் எழுதியிருந்தது கல்விக்கு மட்டும்தான் என்று எழுதி யிருக்கிறது என்றார். மறுபடியும் அய்யர்களிடத்திலே போய்க் கேட்டபோது இதில் சந்தேகம் வேண்டாம் சமஸ்கிருதம் என்றால் கல்வி. கல்வி என்றால் சமஸ்கிருதம். என்றார்கள். யாரால் மாற்றம் செய்யப் பட்டது என்றால் அன்று தந்தை பெரியாரிடத்தில் இருந்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் என்பவர் வெள்ளைக்காரர்களிடத்திலே கொண்டுபோய் இது இப்படி இருக்கிறது. இவர்கள் எங்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று சொன்னதற்குப் பிறகு 1938-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தமிழ்க் கல்லூரியாக மாறியது. திராவிட இயக்கம்தான் இந்த மண்ணில் தமிழுக்காகப் போராடியது.
தன் சுயத்தையே இழந்தவர் பெரியார்
தந்தை பெரியாருக்கு இருக்கும் பெருமையே தன் நாட்டுக்காக தன் சுயத்தையே இழந்திருக்கிறார் என்பதுதான். அவர பணக்காரராகப் பிறந்தார். கடைசிவரை ஏழைகளுக்காகப் பாடுபட்டார். அதேபோல் அவர் ஆணாய்ப் பிறந்தார். பெண்களுக்காகப் பாடுபட்டார். அவர் உயர்ந்த ஜாதி என்கிற ஜாதியில் பிறந்தார். கடைசிவரை ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மிகவும் பிறபடுத்தப் பட்ட மக்களுக்காகப் பாடுபட்டார். அவர் பிறப்பால் கன்னடர் என்று பழிதூற்றுகிறார்கள். ஆனால் கடைசிவரை தமிழர்களுக்காக உழைத்தார். அதனால் கடைசிவரை தன் சுயத்தை எல்லாம் இழந்தார். இந்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தோற்றுவித்த இந்த இயக்கம் இருக்கிறதே இதை அழித்துவிட வேண்டும் என்று இன்றைக்கு நேற்றல்ல கடந்த எழுபது ஆண்டுகளாக வரிசையில் நின்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு தேர்தலா நம்மை அசைத்து விடும்?
பொதுவுடைமை இயக்கத் தோழர்களைக் காப்பாற்றியோர் யார்?
அதைவிட கொடுமையான பல தடங்களை நாம் பார்த்திருக்கிறோம். 1949ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்திலே இந்தியா முழுவதும் தடை செய்யப் பட்டிருந்த பொதுவுடைமை இயக்கம் தமிழகத்திலும் தடை செய்யப் பட்டிருந்தது. பொதுவுடமைத் தோழர்கள் விரட்டிவிரட்டி வேட்டையாடப்பட்டார்கள். யார் காப்பாற்றி னார்கள். யார் அடைக்கலம் கொடுத்தார்கள்? தந்தை பெரியாரைத்தவிர அறிஞர் அண்ணாவைத் தவிர. அவரைப் பின்பற்றி வந்த தலைவர்களைத் தவிர வெறு யாரும் அடைக்கலம் கொடுக்கவில்லை. கலைவாணர் வீட்டில் சாமியார் வேசத்தில் தோழர் ஜீவானந்தம் ஒளிந்திருந்தார். தடை நீக்கப் பட்டது. அதற்கு முன் 22-தோழர்கள் வெள்ளையர்களின் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியானார்கள். சூன் 27 1951ஆம் தேதியில் தோழர் கல்யாணசுந்தரம் எழுதிய கடிதத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்து எங்கள் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் திராவிட இயக்கத் தோழர்களால்தான் வெளியில் வர முடிந்தது என்று எழுதுகிறார். கடைசி மூச்சு இருக்கிறவரை திராவிட இயக்கத்தையும் சுயமரியாதை இயக்கத்தையும் மறக்க மாட்டோம் என்று எழுதுகிறார். நன்றியோடு இருப்போம் என்று எழுதியவர் 52-ஆம் ஆண்டே பிரிந்து போய் நின்று வேறு அணியில் கூட்டுச் சேரந்து நின்று கொண்டு அதே கல்யாணசுந்தரம் இந்த திராவிட இயக்கத்தை அழிக்காமல் ஓய மாட்டேன் என்று சொன்னார். அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள் இனி கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதனை அழிக்கும் வேலையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்றார். திராவிட இயக்கத்தை அழிக்கத் தோன்றித் துவங்கிய கட்சிகள் காணாமல் போய் விட்டன.
----------------நன்றி:- பேரா சுப. வீரபாண்டியன்- “விடுதலை” ஞாயிறுமலர் 18-6-2011
0 comments:
Post a Comment