Search This Blog

12.6.11

கோத்திரம் என்றால் அது என்னவாம்! யார் இந்த ரிஷிகள்?


கவுரவக் கொலைக்குத் தூக்குத் தண்டனை!

இந்து மதம் என்னும் மனித விரோத மத அமைப்பில்தான் எத்துணை எத்துணைக் கொடுமைகள்! பிறப்பில் பேதம் என்னும் நச்சு விதை ஊன்றப்பட்ட இந்தச் சமூக அமைப்பில் பிறப்பு முதல் சாவுவரை வெறுப்பும் - பகைமையும் குரோதமும்தான் கொடிகட்டிப் பறக்கிறது!

பார்த்தால் தீட்டு, நெருங்கினால் தீட்டு, தொட்டால் தீட்டு என்னும் ஜாதீய ஒடுக்குமுறை இந்து மதத்தின் ரத்த ஓட்டமாகும்.

வடமாநிலங்களில் கவுரவக் கொலை என்ற கோரமான படுகொலை ஒன்று அரங்கேறி வருகிறது.

ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக் கூடாதாம்!

கோத்திரம் என்றால் அது என்னவாம்! ரிஷிகளைத் தங்கள் சந்ததிக்கு முதல்வராகக் கொண்ட பிரிவாம்! யார் இந்த ரிஷிகள்? அவர்களுக்குள்ள வரலாறு என்ன என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அவர்கள் கூறும் ரிஷிகளுக்குப் புராணங்கள்தான் ஆதாரம். அந்தப் புராணக் குப்பைகளைப் படித்து புரட்டிப் பார்த்தால் வயிற்றுக்குள்ளிருக்கும் குடல் புரட்டிக் கொண்டு வெளியில் வந்து விழுந்து விடும். அவ்வளவு மூடத்தனமும், ஆபாசமும் நிறைந்தவை அவை. கலைக்கோட்டு ரிஷி, மானுக்கும், ஜம்புகர், நரிக்கும், அகஸ்தியர், குடத்துக்கும், மாண்டவியர், தவளைக்கும், காங்கேயர், கழுதைக்கும், சவுனகர், நாய்க்கும், கணாதர், கோட்டானுக்கும், சுகர், கிளிக்கும், ஜாம்புவந்தர், கரடிக்கும், அஸ்வத்தாமன், குதிரைக்கும் பிறந்தானாம். இப்படிப் பிறக்க முடியுமா என்கிற அறிவார்ந்த கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்; இப்படிக்கூட கற்பனை செய்துள்ளார்களே. அவர்களின் அருவருப்பான அறிவினை எந்தப் பட்டியலில் சேர்ப்பது! இப்படிப் பிறந்த ரிஷிகள்தான் இந்து மதத்தின் கோத்திரங்களுக்கான முன்னோர்களாம். ஒவ்வொரு ரிஷியையும் முன்னிலைப்படுத்தி, அவர் வழிவந்தவர்கள் சென்று சொல்லுவதுதான் இந்தக் கோத்திரப் புண்ணாக்குக் கதைகள்! இப்படிப்பட்ட கோத்திர சமாச்சாரத்தில் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களிடையே திருமணம் செய்து கொண்டால் அவர்கள் சகோதர சகோதரிகள் ஆகி விடுகிறார்களாம். அப்படி ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டால் உள்ளூரில் அவர்களுக்கு மரண தண்டனை அளித்து விடும் கொடுமை உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் சர்வ சாதாரணமாகும். சொந்த மக்களை சொந்த குடும்பத்தாரே கொலை செய்யும் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல! இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம் என்று சங்கராச் சாரிகளும், பார்ப்பன ஊடகங்களும் சொல்லக்கூடும். இத்தகு கொலைகளுக்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் கூறியதுண்டு.

உத்தரப்பிரதேசம் ஜலிகார் பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 18) என்ற பெண் அதே பகுதியைச் சேர்ந்த உதய்பால்சிங் என்பவரை 2008ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாம். அதனால் பெண்ணின் குடும்பத்தார் திருமணத் தம்பதிகளையும், உதய்சிங்கின் உடன் பிறப்பான சத்யான் சிங்கையும் சுட்டுக் கொன்று விட்டனர். இது நடந்தது 2008 நவம்பர் 13ஆம் தேதியில்.

இது கொலை வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அண்மையில் உச்சநீதிமன்றம் இதுபோன்ற குற்றவாளி களுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கலாம் என்று கருத்து கூறியதற்கு ஏற்ப, இடா மாவட்ட நீதிபதி ராஜேந்திரபாபு சர்மா, கவுரவக் கொலையில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை ரமேஷ்பால் சிங், அவரது உடன்பிறப்பு அஜய்பால் சிங் மற்றும் உறவினர்கள் 8 பேர் (மொத்தம் 10 பேர்களுக்கு)களுக்கும் தூக்குத் தண்டனை அளித்துத் தீர்ப்புக் கூறினார். பெண்ணின் மைனர் சகோதரர் இருவர்மீது அவர்கள் சிறுவர்கள் என்பதால் தனியே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவர் நீதிமன்றத்தில் தனியே வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் வழங்கப்பட்ட பத்து பேர் களுக்குத் தூக்குத் தண்டனை என்னும் தீர்ப்பு வடமாநிலங்களில் நடைபெறும் கவுரவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த வழக்குபற்றி வடமாநிலங்களில் நல்ல அளவு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இளைஞர்கள் ஒன்று திரட்டப்பட்டு, மறுமலர்ச்சிக்கான அமைப்பினை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நல்ல அளவுக்குப் பயனும், மாற்றமும் விளையும்.

இந்தத் தண்டனையை அரசே எல்லா ஊடகங்களுக்கும் விளம்பரமாக அளித்துகூடப் பிரச்சாரம் செய்யலாமே! அதன்மூலம்தான் இந்து மதத்தின் இந்தப் பிற்போக்குத் தனத்துக்கு சமாதி கட்ட முடியும்.

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதி முதல் அமைச்சராக உள்ளார். மற்றவ களைவிட இவர் இதில் ஆர்வம் காட்டுவது பொருத்தமான தாகக்கூட இருக்குமே!


--------------”விடுதலை” தலையங்கம் 11-6-2011

0 comments: