இரு மசோதாக்கள்
யார் வகுப்புவாதிகள்?
முன்னேற்றத்துக்கு யார் முட்டுக்கட்டை!
பார்ப்பனீயத்தின் விளைவு
யார் வகுப்புவாதிகள்?
முன்னேற்றத்துக்கு யார் முட்டுக்கட்டை!
பார்ப்பனீயத்தின் விளைவு
இந்தியாவில் இன்று இரண்டு வகுப்பார்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சிறிது கூட விவகாரமே இருக்காது என்று கருதுகிறோம்.
அதாவது ஒன்று : பெண் மக்கள். இரண்டு : தீண்டப்படாத மக்கள் என்பவர்கள்.
இவ்விரு கூட்டத்தாரும் கல்வியில் 100க்கு ஒருவர் இருவர் கூட படித்தவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லத்தக்கதாகத்தான் இருக்கிறார்கள். செல்வத்திலோ பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. ஏனெனில் சட்டப்படியே பெண்களது வாழ்க்கை என்பது ஆண்களுக்கு அடிமை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். பெண்கள் கற்று இருப்பதும் சொத்து வைத்திருப்பதும் மிக அருமையாகத்தான் இருக்கும்.
அதுபோலவே தீண்டப்படாதவர்கள் என்கின்றவர்கள் நிலையும் சமுதாய ஒழுங்குப்படியே மனிதத்தன்மை அற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் பிறவித் தொழிலாளிகள், செல்வம் சேர்க்க சந்தர்ப்பமும், சமசுதந்திரமும் இல்லாதவர்கள். சட்ட நிர்பந்தத்தினாலல்லாது படிக்கவோ அரசியல் ஸ்தானம் பெறவோ முடியாதவர்கள். இப்படிப்பட்ட இரு சமூகத்தாரையும் பற்றி அரசாங்கம் கவனித்ததல்லாமல் இதுவரை எந்த ஜனத் தலைவர்களும் பொது நல ஸ்தாபனங்களும் கவனிக்கவே இல்லை.
சமூகப் புரட்சி ஸ்தாபனமாகிய ஜஸ்டிஸ் கட்சி அதாவது பார்ப்பன ரல்லாதார் இயக்கம் ஒன்று தோன்றி அதன் கிளர்ச்சியின் பயனாகவும் அது பார்ப்பனர்களுக்கும் காங்கிரசுக்கும் எதிராக அரசியலிலும் சமூக இயலிலும் சிறிது ஆதிக்கம் பெற்றதின் பயனாகவுமே இந்த இரு கூட்டத்தாருக்கும் இப்போது சிறிது காலமாய் பல நன்மைகள் ஏற்பட வசதி ஏற்பட்டிருக்கிறது.
அதாவது பெண்கள் அரசியலில் பங்கு பெறவும் ஓட்டர்களாகவும் ஸ்தானம் பெறவும் நிர்பந்தமாய் சில இடங்களில் படிக்கவும் சௌகரியம் ஏற்பட்டிருக்கிறது.
தீண்டப்படாதவர்கள் என்பவர்களும் அரசியலில் கலந்து கொள்ளவும் ஓட்டர்களாகவும், கண்டிப்பாய் சிலராவது உத்தியோகம் பெறவும் தெருவில் நடக்கவும், கிணறு, குளம், சாவடி ஆகியவைகளை பயன்படுத்திக்கொள்ளவும், பள்ளியில் சேர்ந்து படிக்கவுமான முதலிய சௌகரியங்களை சட்ட பூர்வமாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவை பெரிதும் சென்னை மாகாணத்தில் மாத்திரமே அதுவும் ஜஸ்டிஸ் கட்சி ஆதிக்கத்தில் இருந்த காரணத்தினாலேயே என்று சொல்லுவோம்.
இந்த சௌகரியங்களும் மற்ற மாகாணங்களில் சரியாக இல்லை என்பதோடு இனியும் அனேக சௌகரியங்கள் அவர்களுக்காகச் செய்ய வேண்டியிருக்கிறது.
இப்படியிருக்க இது விஷயத்தில் காங்கிரசுக்காரர்கள், தேசீயவாதிகள், சுதந்தரவாதிகள் என்பவர்களில் ஒருவராவது சட்டபூர்வமாய் எதுவும் செய்வதற்கு இதுவரை முயற்சிக்கவே இல்லை என்பதோடு அவர்களுக்கு சந்தர்ப்பமும் சௌகரியமும் இருந்தபோதெல்லாம் அலட்சியமாய் இருந்தது மாத்திரமல்லாமல் கூடுமானவரை எதிர்த்து முட்டுக் கட்டையாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஏதோ ஒரு சிறு அளவுக்கு பெண்கள் விஷயமாயும் தீண்டப்படாதார்கள் என்பவர்கள் விஷயமாயும் சில சௌகரியங்களுக்கு மாத்திரம் அதாவது பெண்களுக்கு சொத்துரிமை இருக்கவும் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு சமூக வாழ்க்கையில் சம சுதந்தரத்துக்கு இடையூறு இருக்கக்கூடாது என்பதற்கு ஆகவும் இரு சட்டங்கள் செய்ய முறையே தோழர்கள் தசமுக் அவர்களாலும் எம்.சி.ராஜா அவர்களாலும் இந்திய சட்ட சபைக்கு இரு மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தார் இவற்றைப்பற்றி பொதுஜன அபிப்பிராயம் கேட்டுவிட்டு இருக்கிறார்கள்.
இப்படிக் கேட்டு இருப்பதை நாம் தவறு என்றே சொல்லுவோம். ஏனெனில் ஒரு பிரஜையினுடைய சுதந்தரத்துக்கு ஆக மற்றொரு பிரஜையின் அதுவும் அப்பிரஜையுடைய பிறவி எதிரிகளின் சம்மதம் கேட்பதானது போகாத ஊருக்குத் தடம் கேட்பது போலவேயாகும். ஒருவருடைய செல்வத்தில் மற்றவர்களுக்கு சுதந்தரம் உண்டாக்கிக் கொடுக்க வேண்டுமானால் அப்பொழுது மற்றவர்களை கேட்கலாம். அப்படிக்கில்லாமல் ஒரு மனிதனுக்கு மனிதத்தன்மை அளிப்பதைப்பற்றி மற்ற மனிதனை அனுமதி கேட்பது நல்ல எண்ணமென்றோ நல்ல அரசாட்சியின் தன்மை என்றோ நாம் ஒருநாளும் சொல்லமாட்டோம். தனி உடமை உலகில் மக்கள் யாவரும் ஆணானாலும் பெண்ணானாலும் செல்வம் சொத்து வைத்திருக்கவும் பெறவும் அருகதையுடையவர்களேயாவார்கள். இது இன்றைய உலகில் எல்லா நாட்டிலும் இருந்து வரும் முறையேயாகும். அப்படி இருக்க இந்தியாவில் மாத்திரம் இப்பொழுதுதான் இந்த விதி கவனிக்கப்படுகிறது. இந்த கால தாமதத்துக்கு பார்ப்பனீயமே காரணமாகும் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.
தீண்டப்படாதார் என்பவர்களின் குறைகளும் 1000 வருஷத்துக்கு முன்பே அதாவது இந்து ஆட்சி மனுதர்ம ஆட்சி ஒழிக்கப்பட்டு முஸ்லீம் ஆட்சி இந்த நாட்டுக்கு வந்த உடனே தீர்ந்திருக்க வேண்டிய விஷயமாகும். அப்படி இருந்தும் முஸ்லீம் ஆட்சியில் தங்கள் மதத்தைப் பெருக்கப் பாடுபட்டார்களே ஒழிய மனிதத் தன்மை இல்லாத மக்களுக்கு மனிதத் தன்மை சுதந்தரம் அளிக்க அவர்கள் சரியானபடி முயற்சித்திருப்பதாகச் சொல்லுவதற்கில்லை. ஆனால் தங்கள் மதத்தைப் பெருக்கும் விஷயத்தில் கவலை எடுத்ததின் மூலமாவது ஒரு அளவுக்கு பல கோடிக்கணக்கான மக்களின் இழிவும் அசௌகரியமும் ஒழிக்கப்பட்டது பற்றி பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அதன்பின் இங்கிலீஷ் ஆட்சி வந்து 200 வருடங்கள் ஆகியும் இது வரையும் அவர்கள் இவ்விஷயத்தில் கவலை இல்லாமல் இருந்ததையும் நாம் அலட்சியப் புத்தியால் என்றோ நல்ல எண்ணத்தால் என்றோ ஒருநாளும் சொல்ல முடியாது. மதத்தைப் பெருக்கும் விஷயத்திலும் சரியானபடி நடந்துகொண்டார்கள் என்றும் சொல்லமுடியாது. ஏனெனில் 200 வருஷ காலத்துக்கு 50, 60 லட்சம் மக்களே இந்தியாவில் கிறிஸ்தவர்களாகி இருக்கிறார்கள். அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆதலால் பிரிட்டிஷ் ஆட்சி தீண்டாமை ஒழிப்பதில் மத விஷயத்திலோ மனிதத்தன்மை விஷயத்திலோ இந்தியாவுக்கு செய்த நன்மை மிகமிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படிப்பட்ட நிலையில் மேல்கண்ட இரு தோழர்களும் கொண்டு வந்திருக்கும், மசோதாக்கள் இரண்டும் இந்திய மக்களால் பொன்னேபோல் போற்றி ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனுடையவும் கடமையாகும். அப்படி இருக்க வழக்கம்போல் பார்ப்பனர்கள் இவ்விஷயத்தில் தங்கள் ஜாதிப்புத்தியைக் காட்ட முன்வந்துவிட்டார்கள். அதாவது ஊர்கள் தோறும் கூட்டம் கூட்டி எல்லா பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து இவ்விரு மசோதாக்களையும் கண்டித்துத் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்துக்கு அனுப்புகிறார்கள். இது நியாயமா என்று கேட்கின்றோம்.
பார்ப்பனர்கள் தாங்கள்தான் இந்தியாவுக்கு தர்மகர்த்தாக்கள் என்றும், பார்ப்பனர்கள் எல்லோருமே காங்கிரஸ்காரர்கள் தேசபக்தர்கள் என்றும், பார்ப்பனர்கள் தான் மனித சுதந்தரத்துக்கும் தேச விடுதலைக்கும் அன்னிய ஆட்சி ஒழிப்புக்கும் பாடுபடுபவர்கள் என்றும், வகுப்பு உணர்ச்சி இல்லாதவர்கள் என்றும், பார்ப்பனரல்லாத மக்கள் தேசத் துரோகிகள் வகுப்புவாதிகள் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஏழைமக்களுக்கும் பார்ப்பனரல்லாதார்களே விரோதிகள் என்றும் இதுவரை சொல்லிக்கொண்டு வந்த பார்ப்பனர்கள் இப்பொழுது வெட்கமில்லாமல் தைரியமாய் இம்மாதிரி தோழர்கள் தசமுக் பெண்கள் சொத்துரிமை மசோதாவையும், எம்.சி. ராஜாவின் தீண்டாமை விலக்கு மசோதாவையும் எதிர்த்து கண்டிக்கிறார்கள் என்றால் இதைக் கவனிக்கும்படி பொது ஜனங்களை வேண்டுகிறோம்.
இந்த மசோதாக்களை ஆதரித்தோ பார்ப்பனர்களின் இவ்விஷமங்களை கண்டித்தோ இதுவரை ஒரு தேசிய பத்திரிகையாவது, ஒரு காங்கிரஸ் வாதியாவது பேச்சு மூச்சு கூட காட்டவில்லை. இந்த சிறிய சீர்திருத்தத்துக்கு உடன்படாமல் எதிர்க்கும் இப்பார்ப்பனர் களும் மறைமுகமாய் இவர்களை ஆதரிக்கும் தேசீய பத்திரிகைகளும், காங்கிரஸ்காரர்களும் நாளை இந்தியாவுக்கு "பூரண சுயேச்சை"யோ ராம ராஜ்யமோ வந்து விட்டால் எப்படி நடந்து கொள்ளுவார்கள் என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். இத்தனை பார்ப்பனர்கள் மீட்டிங்கு கூடி அந்த மசோதாக்களை கண்டிப்பதை காங்கிரஸ்காரர்கள் பார்த்துக்கொண்டு இருந்தும் சிறிதாவது வாய்திறக்கிறார்களா என்பதை நினைக்கும்போது காங்கிரஸ் பார்ப்பனர்களின் ஆயுதம் என்பதும் காங்கிரசிலுள்ள பார்ப்பனரல்லாதார் அப்பார்ப்பனர்களின் குலாம்கள் என்பதும் கல்லின்மேல் எழுத்துப்போல் விளங்கவில்லையா என்று கேட்கிறோம்.
ஆகவே சுயநல வகுப்பார்களும் வகுப்புவாதிகளும் யார் என்று காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதாரைக் கேட்கின்றோம்.
--------------தந்தைபெரியார் -"குடி அரசு" துணைத் தலையங்கம் 26.07.1936
0 comments:
Post a Comment