Search This Blog

11.6.11

மதம் ஏன் ஒழிய வேண்டும்?மதம் என்பதைப் பற்றி இதற்கு முன் குடி அரசு, புரட்சி முதலிய பத்திரிகைகளில் அநேக வியாசங்கள் பல தலைப்புகளில் கீழ் எழுதப்பட்டிருப்பது யாவருக்கும் தெரியும்.

மதமானது இன்று உலகில் மனித சமுகத்தின் வாழ்வைத் துக்க மயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்று உள்ள பகுத்தறிவை அடிமைப்படுத்தி ஒற்றுமையைக் குலைத்து, மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது என்பதற்கு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றோம்.

தேசிய சிங்கங்களான அலிசகோதரர்கள் ஒரு காலத்தில் நாங்கள் முதலில் மகம்மதியர்கள், பிறகுதான் இந்தியர்கள் அதாவது முதலாவது மதம், பிறகு தான் தேசம் என்றும், உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா காந்தி நானே இந்து மதத்தில் உருவம்! நான் மூச்சுவிடுவதும், வாங்குவதும் இந்து மதத்திற்காகவே!! நான் உண்பதும், உயிர் வாழ்வதும் இந்து மதத்திற்காகவே!!! மதத்தைக் காக்கவே நான் சுயராஜ்ஜியம் கேட்கின்றேன்!!!!

அதாவது இந்து மதம் தான் எனக்கு முதலும், கடைசியும், என்றும், பழைய காங்கிரஸ் வாதி, மாசற்ற தேசாபிமானி, ஒப்பற்ற தியாகி என்று சொல்லப்பட்ட, பண்டித மதன் மோகன மாளவியா எனது மதத்தையும், எனது ஜாதியையும் காப்பதே எனது முதல் வேலை என்றும், அதாவது வருணாசிரமத்தைக் காக்கத்தான் நான் தேசியவாதி என்றும், சொல்லும்படி செய்துவிட்டது என்றால் மதத்தின் ஆதிக்கத்திற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.

பெருத்த தேசாபிமானிகள், தேசத்துக்காகச் சகலத்தையும் தியாகம் செய்தவர்கள் என்று சொல்லும்படியான இவர்களே அவரவர்களின் மதத் தத்துவத்தை உள் எண்ணமாக வைத்து, அவற்றின் கொள்கைகளைக் காப்பதற்காகவே அவர்களது தேசாபிமானமும், உயிர் வாழ்வும் இருந்து வருகின்றது என்றால் மற்ற சாதாரணமான அதாவது மதத்தைத் தவிர மற்றொன்றும் அறியாத பாமர மக்களின் யோக்கியதையைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.

வட்ட மேஜை மகாநாடு உடைந்துபோனதும் அரசியல் சீர்திருத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றுபடாமல் போனதும் இந்து முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் அரசியலில் தனித் தொகுதி வேண்டுவதற்கும், காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் தனித்தொகுதி கேட்பதற்கும் கூட்டுத் தொகுதியில் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படவேண்டும் என்று கேட்பதற்கும், மக்களை மக்கள் தீண்டப்படாதவராய் கீழ் மேல் ஜாதியாராய் கருதப்பட்டு வருவதற்கும் மதமே காரணமாய் இருந்து வருகின்றது என்பதையும் எவராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் மனித சமுக வாழ்வுக்கு ஏற்ற சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் என்பவைகளில் பெரும்பான்மையான மக்களால் அவசியம் என்றும், அறிவுக்கு ஏற்றது என்றும் கருதப்படும் அனேக விஷயங்களைப் பற்றி சட்டங்கள் செய்யவோ, சட்டங்கள் செய்தாலும் அமலுக்குக் கொண்டுவரவோ தடையாய் இருந்து வருவதற்கு மதங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றதா, இல்லையா என்று கேட்கின்றோம். ஆகவே மனித வாழ்க்கைக்கு மதங்கள் இதைவிட வேறு என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.

இப்படிப்பட்ட இந்த மதம் ஒன்று இரண்டு என்று இல்லாமல் நூற்றுக்கணக்காய் இருந்துகொண்டு பலவித கடவுள்களை சிருஷ்டித்து பலவித மேல் உலகங்களையும் மோட்ச நரகங்களையும் கற்பித்து அவரவர் கடவுளுக்குத் தனிப்பட்ட குணங்களும், அவரவர் மேல் உலகங்களுக்கு தனிப்பட்ட பூகோளங்களும், அவரவர்கள் மோட்ச நகரங்களுக்குத் தனிப்பட்ட வருணனைகளும் கற்பித்து மக்களை மயக்கி வருவதோடு வாழ்க்கை ஒழுக்கம், நடத்தை என்பவைகளும் அவரவர் மதத்துக்கு ஒவ்வொருவிதமாய் கற்பிக்கப்பட்டு நடந்து வருவதும் அறிஞர்கள் அறியாததா?

இப்படிப்பட்ட மதத்தை மக்களுக்குள் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு சில நபர்கள் பாதிரி என்றும், முல்லா என்றும், தம்பிரான் என்றும், சங்கராச்சாரி என்றும், ஜீயர் என்றும், சாமியார் என்றும், பெயர்கள் வைத்துக் கொண்டு, உலகச் செல்வத்தில் தனிப்பெரும் பாகத்தை வீணாக்கி மக்களுக்குப் போதை ஊட்டிவருவதானது எவ்வளவு அவிவிவேகமான காரியம் என்பது சுய அறிவோடு பரிசுத்த தன்மையில் இருந்து யோசிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. இவைகளைப் பற்றி இன்னமும் விவரிக்குமுன் மதம் என்றால் என்ன என்று நாம் கருதிக் கொண்டு அதைப்பற்றி இவ்வளவு எழுதுகின்றோம் என்பதை வாசகர்களுக்கு விளக்க ஆசைப்படுகின்றோம்.

1. மதம் என்பது இவ்வுலக மானிட வாழ்வுக்கு ஏற்ற சட்ட திட்டங்கள் என்று சொல்லப்படுமானாலும்,

2. அல்லது மதம் என்பது இவ்வுலகில் மக்கள் கூடி வாழ்வதற்கு ஏற்ற ஒழுங்கு முறைகளைக் கொண்டது என்று சொல்லப்படுமானாலும்,

3. அல்லது (ஒருவர் கூறியபடி) மதம் என்பது மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படுமானாலும், அவைகளைப் பற்றியெல்லாம் நாம் அதிகக் கவலைக் கொண்டு மதங்களை எதிர்க்க ஆசைப்படுவதில்லை.

அப்படிக்கெல்லாம் அல்லாமல்.

1. மதமானது மனிதனுடைய ஜட சம்பந்தத்தை விட்டு விட்டு ஜடம் நீங்கின.

ஆத்மாவைப் பொறுத்ததென்றும்.

2. மதமானது இவ்வுலக வாழ்வை இன்ப துன்பத்தைத் துச்சமாக மதித்து விட்டு மேலுலக வாழ்வை முக்கியமாகப் பொறுத்ததென்றும்.

3. மதமானது கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள சம்பந்தத்தை விளக்குவதைப் பொருத்ததென்றும்.

4. மதமானது பஞ்சேந்திரியங்களுக்கு விளக்கக்கூடியது என்ற தத்துவத்தைவிட்டு பச்சேந்திரியங்களாலும் உணர முடியாத ஆத்மார்த்தம் ஆவிதத்துவத்தை, அசரீரியை அடிப்படையாகக் கொண்டது என்றும்,

5. மதமானது உலக போக போக்கியம் இன்ப துன்பம் ஆகியவைகளை அலட்சியம் செய்து கடவுளின் பாதார விந்தத்தை அடையவும், மோட்ச சாம்ராஜ்யத்தைப் பெறவும், ஏற்ற மார்க்கம் என்றும் சொல்லப்படும் மதங்களையும், மதத் தத்துவங்களையும் பற்றி நாம் பேசுகின்றோம், என்றாலும் முதலில் கூறப்பட்டதாவது,

மதம் மனித வாழ்க்கைக்கு ஏற்ற சட்டதிட்டங்களுக்கோ மக்களின் கூட்டுறவு வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுங்குமுறைக்கோ ஏற்பட்டது என்கின்ற விஷயங்களிலும் கூட நமது ஆட்சேபணையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அதாவது இன்று நாம் மதங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவைகளில் மேற்கண்ட குணங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், இந்தக் காரியங்களுக்காக மக்கள் செலவில் நடைபெறும் அரசாங்க நிருவாகமும், சிவில் கிரிமினல் சட்டதிட்டங்களும் அவைகளை நிறைவேற்ற நியாயதலம், தண்டனை, சன்மானம் ஆகிய முறைகளும் இருந்து வரும்போது இவைகள் அல்லாத ஒரு சாதனம் அதாவது மதம் என்கின்ற விஷயம் எதற்காக இருக்க வேண்டும்?

அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை கண்டனை முதலியன இல்லாமல் மனித சமுகம் எப்படிப்பட்ட மதத்தினாலாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழ முடியுமா? என்பதை யோசித்தால் மதம் மேல்கண்ட காரியங்களுக்கு உண்மையாய் பயன்படுகிறதா என்பது விளங்கும். இன்று எந்த தேசத்திலும், எந்த மதத்திலும், எந்த சமுகத்திலும் உள்ள மக்களின் சொத்தும், சரீரம் காப்பாற்றப்படுவது மதத்தினாலா, அரசாங்க சட்ட திட்டங்களினாலா என்பதை யோசித்துப் பார்த்தாலே, மதத்தின் காப்பும் நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் விளங்கிவிடும்.

மதம் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாய் காருண்யத்துடன் இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றது என்று மதக்காரர்கள் சொல்லக்கூடும். ஆனால் மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் பற்றித் கவலைப்படாமல் மற்ற ஜீவராசிகளைக் கொல்லவும், தின்னவும், இம்சிக்கவும் தனக்கு இடையூறு என்று கருதினால் அழிக்கவும் செய்கிறான். ஆனால் மனிதனை மாத்திரம் அந்தப்படி செய்வதில்லை. இதற்குக் காரணம் மதமா? அல்லது அரசாங்க சட்டதிட்டமா? என்று கேட்கின்றோம்.

மனிதனை அந்தப்படி எங்கோ ஒன்று இரண்டு சமயம் செய்வதாக வைத்துக் கொண்டாலும் அதற்காகத் தண்டனையை அடைகின்றான்.

ஆதலால் மதம் எங்கே பொதுவான ஒழுங்கு முறையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றுகின்றது என்று கேட்கின்றோம்.

மதம் மனிதனுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படுவதும் மிகுதியும் பொருத்தமற்றது என்றே கருதுகின்றோம்.

மனிதனுக்கும் மற்ற ஜீவவர்க்கத்துக்கும் உள்ள வித்தியாசம் எந்தத் துறையினாலும், அறிய வேண்டுமானால், பிராணிவர்க்கத் தத்துவம் கொண்ட நூல்களைப் பார்த்தால் தாராளமாக மதசம்பந்தம் இல்லாமலே அவைகளைத் தெரிந்து கொள்ளலாம். அப்படியில்லாமல் மதத்தின் மூலம் அறிந்த ஜீவத் தத்துவங்கள் இன்று சிரிப்புக் கிடமாகத்தான் இருந்து வருகின்றன.

மதம் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் கற்பிக்கின்றது. மிருகங்களை, பட்சிகளை, பூச்சிகளை, புல் பூண்டுகளை மனிதனைவிட உயர்வாய் மதிக்கின்றது. ஒரு மிருகத்தை உயர்வாய், ஒரு மிருகத்தை தாழ்வாய் கற்பிக்கின்றது. இந்த விஷயங்களுக்குப் பிராணி சாஸ்திரமே முக்கியமானதும், சரியானதுமே தவிர, மதத்தின் மூலம் அறியக் கூடியதாய் இருக்கும் தன்மை மிகவும் மோசமானதும், மூர்க்கத் தனமானதும், முட்டாள் தனமானதுமென்றே சொல்லுவோம்.

மேற்கண்ட 1, 2, 3 விஷயங்களைப் பற்றிய வரையிலாவது மதத்தை ஒப்புக் கொள்ள செய்யலாமென்று பார்த்தாலும் கூட, அதுவும் அறிவுக்குப் பொருத்தமற்றதும், மூர்க்கத்தனம் கொண்டதுமான கருத்துக்களால் பாதகமடைகின்றது.

அதாவது எந்த மதக்காரனும் தன்தன் மதத்தைப் பற்றிய ஆதாரங்களும், கொள்கைகளுமே எந்த தேசத்துக்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்றும், அவைகளில் ஒரு முற்றுப்புள்ளிக் குறிப்புக் கோடு கூட மாறக் கூடாது என்றும், தன்தன் மதத்துக்குத் தலைவன் என்பவன் எவனோ அவனே உலக மதத்தலைவனாக இருக்க வேண்டும் என்றும் செய்யப்படும் பிடிவாதங்களும் முரட்டுத் தனங்களும் எந்த மதத்தையும் மனித சமுக வாழ்வுக்கு வழிகாட்டி என்று ஒப்புக் கொள்ள முடியாமல் செய்கின்றது.

ஆகவே மனித சமுகக் கூட்டு வாழ்வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங்களை விட அரசாங்கத் சட்டதிட்டங்களையே ஆதாரமாகக் கொள்வதுதான் அறிவுடைமை என்று கூறுவோம். அதுதான் இன்று உலகமெங்கும் அனுபவத்தில் இருக்கின்றது என்றும் சொல்லுவோம்.

ஏனெனில் அவைகளில் காலத்துக்கும், தேசத்துக்கும், ஒத்தபடி, அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்றபடி, மாற்றிக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் உரிமை இருக்கின்றது. மதங்களில் அவை காணவே முடியாது அப்படி ஏதாவது முயற்சித்தாலும் கலகம், கொள்ளை, கொலை முதலியவைகளை உண்டாக்கி விடுகின்றது.

எனவே இந்த விஷயங்களே அதாவது இந்த உலக பிரத்தியட்ச மனித வாழ்வு சம்பந்தப்பட்ட இந்த விஷயங்களை மதத்தின் பயனாக இப்படி இருந்தால் இனி மேலுலக மனிதனுடைய கண்ணுக்கும் மனதுக்கும் பஞ்சேந்திரிங்களுக்கும் எட்டாத விஷயங்களைப் பற்றிய மத போதனைகள் என்ன பயனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்? எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.

மற்றபடி மதம் உடல் சம்பந்தத்தை விட்டு விட்டு ஆன்மாவைப் பொறுத்தது என்று சொல்லப்படுவதைப் பற்றியதென்றால் இந்தக் காரணத்துக்காகவே மதங்களை எல்லாம் அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஆத்மா என்பதை இதுவரை ஒரு மனிதனும் அர்த்தத்தோடு உறுதிப்படுத்தவேயில்லை.

4+3=10 என்று சொல்லிவிட்டு அந்த பத்தைப் பற்றியே விவரித்துக் கொண்டிருக்கின்றது போலவே, அதாவது 10அய் யார் யாருக்கு எப்படி பங்கிடுவது எங்கு எங்கு வைப்பது என்று வேண்டுமானால் பேசு. அதற்குமேல் 4+3 எப்படி 10 என்று மாத்திரம் கேட்கக்கூடாது என்கின்ற நிலையில்தான் இன்று ஆத்ம தத்துவம் இருந்து வருகின்றது.

அதாவது ஆத்மா என்றால் என்ன? அது எப்படி சரீரம் பெற்றது? அதற்கு எப்படி கருமம் ஒட்டிற்று? அதன் நடத்தைக்குக் காரணம் என்ன? அது எப்படி மோட்சம் போகின்றது? அது எப்படி மறுபடியும் சரீரம் பெற்று எழுகின்றது? மனித ஆத்மா, மிருக ஆத்மா. பட்சி ஆத்மா, புழு பூச்சி ஆத்மா ஆகியவைகளில் உள்ள வித்தியாசம் என்ன? என்பனவற்றைப் பற்றி எல்லாம் பேசலாம், விவரிக்கலாம்.

வால்யம், வால்யமாக புஸ்தகம் எழுதலாம். ஆனால் ஆத்மா என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அப்படி ஒன்று இருக்க விஞ்ஞான சாஸ்திரம் (சையன்ஸ்) அல்லது ஜீவ தத்துவ சாஸ்திரம் இடம் கொடுக்கின்றதா? என்பதைப் பற்றி யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்கக்கூடாது.

ஆத்மா இருப்பதாக அவர் சொன்னார், இவர் சொன்னார், மகமது சொன்னார், கிறிஸ்து சொன்னார், கிருஷ்ணன் சொன்னார், புத்தர் சொன்னார்,... என்று சொல்லி விடுவதும் ஆத்மாவை நம்பாதவர் கடவுளை நம்பாத நாஸ்திகனை விடக் கேடானவன். மடையன், மட்டி என்றும் கடவுளை நம்பாவிட்டால் ஆத்மாவை நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லி விடுகிறார்களே ஒழிய காரண காரியங்களுடன் அறிவு அனுபவங்களுடன் பேசுகின்றவர்களே காணக் கிடைப்பதில்லை.

இது ஒரு புறமிருந்தாலும், ரூபம் இல்லாத வஸ்து தத்துவமில்லாத மனதுக்குப் புரியாத விசயத்துக்காக இவ்வுலக பிரத்தியட்ச வாழ்க்கையையும், அடையும் இன்ப துன்பங் களையும் பற்றிய கவலை கூடாது என்றோ அல்லது இக்கவலையை விட ஆத்மா கவலையே பிரதானமென்றோ, பெரியதென்றோ சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட மதத்துக்கு உலகில் மனித ஜீவன்கள் இடம் கொடுக்கலாமா என்றுதான் கேட்கின்றோம்.

நிற்க மதமானது மேல் உலக வாழ்வுக்கு ஆதாரமானது என்று சொல்லப்படுமானால் முதலாவதாக மேல் உலகம் என்பது என்ன என்பதைப் பற்றி இதுவரை யாராவது, எங்காவது விளக்கி, இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.

பூகோள சாஸ்திர நிபுணர்கள், பூமியின் கீழ் மனதிற்கு எட்டக்கூடிய அளவு வரையும், பூமியின் மேல் ஆகாய மார்க்கமாக மனதிற்கு எட்டக் கூடிய அளவு வரையிலும் ஆராய்ந்து பார்த்து லட்சக் கணக்கான மைல் ஏன் கோடிக்கணக்கான மைல் தூரம் வரையில் ஆராய்ச்சி செய்து மேல் கீழ் நிலைமையை விளக்கி இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் ஒரு நிபுணத்துவர்கள் என்கின்ற நிலையிலும் அனேக வருஷ காலம் அதற்காகப் பாடுபட்டு உழைத்து அனேக கருவிகளின் உதவியைக் கொண்டு கண்டுபிடித்தும் சொன்ன பிரத்தியபடி அனுபவ ருஜுப்பிக்கக் கூடிய உண்மைகளே ஒழிய ஞான திருஷ்டி அதாவது ஒரு மனிதனுடைய புத்திக்கு திடீரென்று தோன்றிய விஷயம் என்று சொல்லப்படுவது போல் சொல்லப் பட்டதல்ல.

அன்றியும் பள்ளிக்கூடங்களில், அல்லது பூகோள புஸ்தகங்களில் முறையே கற்பிக்கப்படாததும், காணப்படாததுமான விஷயங்களுமல்ல.
அப்படியிருக்கும்போது இந்த பிரத்தியட்ச உலக விஷயத்தை விட்டுவிட்டு மேலுலக விஷயத்தை பற்றிப் பேசுவது என்றால் அதில் அடங்கியிருக்கும் மவுடீகத் தன்மைக்கு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

இதுவரையில் மனிதன் மேல் உலகத்தை எப்படிக் கண்டு பிடித்தான்? அதன் விஸ்தீரனத் தன்மை என்ன? என்பவைகளைப் பற்றிய உண்மை எதுவும் சொல்லப்படாமல் முதலில் மேல் உலகத்தை நம்பு. பிறகு எப்படி வேண்டுமானாலும், அதாவது மோட்சம் எப்படிப்பட்டது? நரகம் `எப்படிப்பட்டது? தண்டனை எப்படிப்பட்டது? அது யாருக்குச் சொந்தம்? பரமபிதாவா, அல்லாவா, வைகுண்ட நாதரா? கைலாச வாசரா? யார் அதற்கு எஜமான்? என்பதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வாதம் செய் என்று கற்பிப்பதாய் இருப்பதைத் தவிர வேறு என்ன உண்மை, அல்லது அறிவுடைமை மேல் உலக விஷயத்தில் இருக்கிறது என்று கேட்கின்றோம்.

அதுபோலவே மதம் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள் சம்பந்தத்தை விளக்குவது என்று சொல்லப்படும் வார்த்தையும், அர்த்தமற்றதாகவே இருக்கிறது.

கடவுளைப் பற்றி அதாவது, கடவுள் என்றால் என்ன என்பதைப் பற்றி இதுவரை ஒரு ஆஸ்தீகனாவது, அல்லது கடவுள் தன்மை பெற்ற பெரியவர்களாவது விளக்கினவர்களே அல்ல. கடவுள் என்றால் கண்ணுக்கும், மனதுக்கும் எட்டாதது. ரூபமும் குணமும் இல்லாதது, சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளது என்று சொல்லிவிடுவதும், அதைச் சொல்லுகின்றவர்களே அந்தக் கருத்தை நம்பாமல் இருப்பதும் பிறகு அதற்கு முரணாகப் பேசுவதுமான காரியங்களுக்கே இதுவரை கடவுளைப் பற்றிய வாதங்களின் முடிவுகள் இருந்து வந்திருக்கின்றன.

மனத்துக்குட்படாத கடவுளைப் பற்றி மனிதன் எப்படி எந்த இந்திரியத்தினால் உணர்ந்தான் என்று கேட்டால் அதற்குப் பதிலே இல்லை. குணமும் ரூபமும் இல்லாத வஸ்துக்குச் செய்கை எது என்று கேட்டால் அதற்கும் பதிலே இல்லை.

சர்வசக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் செயலில் நன்மை, தீமை, துன்பம் - இன்பம், மேல் - கீழ், சுகம் - துக்கம், மோட்சம் - நரகம், எப்படி உண்டாயிற்று என்று கேட்டால் இதற்கு பதில் இல்லை. அதைப்பற்றியெல்லாம் யாரும் கேட்கக் கூடாது கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவன் நாஸ்திகன் நம்பாவிட்டால் நரகம், அரச தண்டனை - ஆஸ்திகர்கள் கண்டனம் கிடைக்கும் என்று மிரட்டுவதும், உருட்டுவதும் தவிர கடவுளைப் பற்றி வேறு விளக்கமே இல்லை.

சர்வ சக்தி சர்வ வியாபகம் உள்ள கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான் ஏன் கடவுளை அறியமுடியவில்லை? ஏன் கடவுளே இல்லை? என்று சொல்லுகிறேன், என்று ஒருவன் கேட்டால், அது உன்னுடைய அகம்பாவம், உன்னுடைய மடமை, உன்னுடைய பாவச் செய்கை என்று சொல்லிக் கடவுளை விட அவனைப் பெரியவனாக மதித்து இகழ்வதாயிருக்கின்றதே தவிர வேறு சமாதானமில்லை.

இப்படிப்பட்ட தத்துவங்கள் கொண்ட மதங்களைப் பற்றி, மக்கள் வேற்றுமை உணர்ச்சி கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்து பலாத்காரச் செய்கைகள் செய்து மக்களைத் துன்புறுத்துவதென்றால் மதத்தை ஒழிக்காமல் இருக்க யாருக்குத்தான் மனம் வரும் என்று கேட்கின்றோம்.

மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற்படுகின்றதே ஒழிய சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.

கிறித்தவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்குக் குடிஅரசு பத்திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி, எழுதினதற்காக புரட்சிப் பத்திரிகை நிறுத்தப்பட்டு போயிற்று.

இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினம்தோறும், நிமிஷம் தோறும் அடைந்துவரும் தொல்லையும், நசுங்கு சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது. பார்ப்பனர்களை உத்தியோகதர்களைக் கொண்ட போலீஸ் இலாகா, போஸ்டல் இலாகா, ரயில்வே இலாகா, நீதி இலாகா, நிர்வாக மற்றும் அனேக துறைகளில் கீழே இருந்து ஹைகோர்ட் நிர்வாகசபைவரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம், சித்திரவதைக்கொப்பாக இருந்து வருகின்றது.

நாம் மாத்திரமல்லாமல் நம்மைப் போல் கஷ்டப்படும் மக்கள் கோடிக்கணக்காக எல்லா மதங்களிலும் இருந்து வருகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

மதமானது பணக்காரத் தன்மையைப் பிரதிபலித்துக் கொண்டும், அதை ஆதரித்துக் கொண்டும் இருந்து வருகின்ற சாதனமாய் இருப்பதால் அதற்கு இவ்வளவு ஆதிக்கம் இருந்து வருவதில் அதிசயமில்லை. ஆதலாலேயேதான் மதங்கள் ஒழிக்கப்படுவதாலேயே மனித சமுகத்துக்கு ஒற்றுமையும் சாந்தியும் ஏற்படும் என்று கருதுவதோடு, பணக்காரத் தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருதுகின்றோம்.

சென்றவாரத்தில் சென்னைக் கடற்கரையில் நடந்த மத சம்பந்தமான ஒரு முஸ்லீம் கூட்டத்தில் கலகம் ஏற்பட்டு ஒரு முஸ்லீமை ஒரு இந்து குத்திவிட்டானாம். முஸ்லீமும் அதனால் செத்துவிட்டான். நாளைய தினம் ஒரு கிறிஸ்தவன் அதை விசாரித்து உண்மை கண்டு இந்துவை தண்டிக்கப் போகிறான் என்றாலோ அதில் அதிசயமில்லை.

ஒரு கிறிஸ்தவன் முகம்மது நபியைப் பற்றி ஏதோ எழுதிவிட்டால் முகம்மதியர்களுக்கு ஆத்திரம் வருகின்றதும், ஒரு முகம்மதியன் கிறிஸ்துவைப் பற்றி எழுதிவிட்டால் கிறிஸ்தவனுக்கு ஆத்திரம் வருவதும், இது போலும் இந்துக்களுக்கும், கிறிஸ்து முகம்மதியர்களுக்கு நேருவதும், அதற்காக கொலை, கொள்ளை, கொடுமைகள் நடப்பதுமான காரியங்கள், அதுவும் இன்று நேற்று அல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக, அதுவும் இந்தியாவில் மாத்திரம் அல்லாமல் அய்ரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய எல்லா தேசங்களிலும் நடந்து வருகின்றது என்றும் மதம் மக்களுக்கு கூட்டு வாழ்க்கையையும், ஒற்றுமையையும் சகிப்புத் தன்மையையும் வாழ்க்கை ஒழுங்குகளையும், ஒழுக்கங்களையும் போதித்து வருகின்றதா? என்றும் கேட்கின்றோம்.

மதங்களில் உள்ள ஒழுக்கங்கள்


இந்து மதமும், இஸ்லாம் மதமும் ஒழுக்கத்தைப் பற்றி போதிப்பதில் ஒன்றுக்கொன்று நானே சிறந்த ஒழுக்கத்தையுடையது - என்று போட்டி போடுகின்றன.

ஒழுக்கயீனங்களிலெல்லாம் மிகக் கேடானதாக, குற்றங்களில் எல்லாம் மிக இழிவான குற்றமாகவும் கருதப்படும், குற்றமாகிய பெண்களைப் பலாத்காரம் செய்து கற்பழித்தல், மானபங்கம் செய்தல் என்னும் குற்ற விஷயத்தில் இரு மதஸ்தர்களும் வங்காள மாகாணத்தில் எப்படி நடந்து இருக்கின்றார்கள் என்பதைக்காட்ட மாடர்ன் ரிவியூ பத்திரிகையில் வெளியாகி உள்ள ஒரு புள்ளி விவரத்தை இங்கு குறிப்பிட்டு விட்டு இதை முடிக்கின்றோம்.


மதம் ஒழுக்கத்தை, கூட்டு வாழ்க்கை ஒழுங்கு முறையை மனிதர்களிடத்தில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை எங்கே எப்படி கற்பித்து இருக்கின்றது என்று மதபக்தர்களைக் கேட்கின்றோம்.

------------------பெரியார் -" பகுத்தறிவு" -தலையங்கம்- 9.9.1934

0 comments: