Search This Blog

11.6.11

திராவிட இயக்கத்தையும் காமராசரையும் மோதவிடும் நரித்தந்திரம்

விழிப்பாக இருப்போம் - வெப்பமாகத் தகிப்போம்!

மின்சாரம்

சாதி பேதங்களைக் களைந்து, மத வேறுபாடுகளை நீக்கி, சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அகற்றியதற்குக் காரணம். சமூகநீதிப் பிரச்சாரமும் பகுத்தறிவுவாதமும்தான் என்று திராவிட இயக்கத்தினர் தங்களது சாதனையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இன்றைய சமுதாயத்தில் ஜாதி - மத வேறுபாடுகளை உடைத்தெறிந்து, ஏற்றத் தாழ்வுகளைப் பெருமளவு அகற்றி யதன் அடிப்படைக் காரணமாக பெருந் தலைவர் காமராஜின் கட் டாயக் கல்வித் திட்டமும், அந்தத் திட்டம் வெற்றி பெற அவர் கையாண்ட இலவச மதிய உணவுத் திட்டமும் தான் என்பதே பேசப் படாத நிதர்சன உண்மை என்று தினமணி தலையங்கம் தீட்டுகிறது.

தினமணி தலையங்கத்தின்படி திராவிட இயக்கத்தின் சுயமரியாதைப் பிரச்சாரம், மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம், பகுத்தறிவுப் பிரச்சாரம் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. சமுதாயத்தில் ஏற்றத் -தாழ்வுகள் களையப்படுவதற்குத் தாங்கள்தான் காரணம் என்று தம்பட்டம் அடித்துக் கொள் கிறார்களாம் திராவிட இயக்கத்தினர்.

தினமணி ஆசிரியர் தொடக்கத்தில் அரசல் புரசலாக ஒளிந்திருந்த ஆர்.எஸ்.எஸ். புத்தியை, பார்ப்பன நரித் தந்திரத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். இப்பொழுது தன் பூணூல் கோத்திரத்தை துக்ளக் ஏட்டில் திருவாளர் சோ ராம சாமி அய்யரால் மனுதர்ம சல்லடையில் சலித்து எடுக்கப்பட்ட பேர்வழி என்பதை மிக வெளிப்படையாகவே சட்டைக்கு உள்ளிருந்த பூணூலை சட்டைக்கு வெளியே தூக்கிப் போட்டுக் கொண்டு திமிராகத் திரிகிறார் என்பதற்கு அடையாளம்தான் இந்தத் தலையங்கம்.

இதில் இன்னொரு விடயம் என்ன வென்றால் திராவிட இயக்கத்தையும் காமராசரையும் மோதவிடும் நரித் தந்திரம்தான்.

காமராசர் பச்சைத் தமிழராக, கல்வி வள்ளல் காமராசராக சொல்லப்படுவது - விளக்கப்படுவது எந்த அடிப்படையில்? கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார்; காரியம் காமராசர் என்று ஆனந்த விகடன் எழுதியதற்கு என்ன பொருள்?

காமராசர் பற்றிக் குறிப்பிடும்போது, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி, அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தாரே - ஆச்சாரியார் ராஜாஜி அதனையும் குறிப்பிட்டு இருக்க வேண்டுமே _ அதனைக் குறிப்பிட்டு இருந்தால்தானே காமராசர் பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் ஆன வரலாற் றின் பின்னணி உண்மையானதாக இருக்க முடியும்?

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்படுவதற்கு யார் காரணம்? தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா _ திராவிடர் இயக்கம் அல்லவா!

ஆச்சாரியாரைப் பதவியை விட்டு விரட்டிய சூழலில் காமராசர் முதல் அமைச்சர் ஆசனத்தில் அமர்ந்தது அதற்குத் துணிவு கொடுத்தது _ மக்கள் மத்தியில் அவரைக் கொண்டு சென்றது யார்? இயக்கம் எது?

கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டதே - அதன் பின்னணி என்ன?

காமராசரை ஆட்டுவிப்பவர், வழி நடத்துபவர் பெரியார் என்று கல்கியே ஒப்புக் கொண்ட பிறகு இந்த வைத்தியநாதய்யர்கள் யாவர்? அந்தக் கால கட்டத்தில் டவுசர், போட்டிருந்தாரோ என்னவோ!

மதிய உணவுத் திட்டம் காமராசர் காலத்தில் மட்டுமல்ல -_ நீதிக்கட்சித் தலைவர் பி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட சமூக நீதித் திட்டம் என்ற வரலாறு தினமணிகளுக்குத் தெரியுமா?

காமராசரை இந்தத் தினமணிக் கூட்டம் எப்படி யெல்லாம் கரித்துக் கொட்டியது என்பது நமக்குத் தெரியாதா? தமிழர்கள் அறிய மாட்டார்களா?

காமராசரால் கல்வி வளர்ச்சி பெற்றது. ஏற்ற தாழ்வு போக்கப்பட்டது என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்தக் கூட்டம் இலவசக் கல்வி கொடுத்ததாலும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதாலும் தகுதி -திறமை கெட்டுப் போய் விட்டது என்று கூச்சலிடவில்லையா?

அந்த நேரத்தில் இந்த பார்ப்பனக் கூட்டத்தைப் பார்த்து காமராசர் எழுப்பிய வினாக்கள் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கின்றனவே!

பறையனைப் படிக்க வச்சேன் என்ஜினீயர் ஆனான்; - எந்தப் பாலம் இடிந்தது சொல்!

பறையனைப் படிக்க வச்சேன். டாக்டர் ஆனான்; அவன் ஊசிப் போட்டு எந்தப் பிள்ளை செத்தது சொல்!

உன் தகுதியும் தெரியும், திறமையும் தெரியும். உனக்குச் சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும். என்னை அழிக்க நினைத்தால் உன் அஸ்திவாரத்தையே ஒழித்து விடுவேன் - ஜாக்கிரதை! என்று காமராசர் சங்கநாதம் செய்தாரே -_ ஞாபகம் இருக்கிறதா!

இது யார் பேச்சு? பெரியார் பேச்சா _ காமராசர் பேச்சா? என்று விடுதலை தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிட்டதெல்லாம் தெரியுமா - தினமணி திரிநூல்களுக்கு?

தி.மு.க. ஆட்சி போய் விட்டது. அதிமுக ஆட்சி வந்து விட்டது. இனி ஆனந்தராகம்தான் நமக்கு_ அவாள் கூடாரத்துக்குள்ளேயே ஒட்டகம் நுழைந்துவிட்டது.

திராவிடர் இயக்கத்துக்குள் ஊடுருவல் நடந்து விட்டது. புத்த மார்க்கத்தைத் தீர்த்துக் கட்டியது போல நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்று கணக்குப் போடுவதாக தெரிகிறது _ பூணூல் வளையம் பலமாக வைக்கப் படுகிறது.

உண்மையான திராவிடர் இயக்கங்களுக்கு உண்மையாகவே வேலை அதிகமாகிவிட்டது. எச்சரிக்கைகளும் அதிகமாகி விட்டன.

விழிப்பாக இருப்போம். வெப்பமாகத் தகிப்போம்!

நமது போராயுதமான விடுதலையும், வெளியீடுகளும் தமிழர்களின் வீட்டுக்கு வீடு போய்ச் சேர்ந்தாக வேண்டும் _ வீரர்களே தயாராவீர்! தயாராவீர்!!

--------- --------------மின்சாரம் அவர்கள் 11-6-2011 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

0 comments: