Search This Blog

31.1.11

இந்தித் திணிப்பு ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் (4)
இந்தி எதிர்ப்பு என்பதன் பின்னணி என்ன?
- கலி.பூங்குன்றன்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற பொழிவு-மொழி காப்பு நாள் என்ற அடிப்படையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக இந்தி எதிர்ப்பு என்பதுதான் அதன் மய்யப் புள்ளியாகும்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்தி திணிப்பு என்பது ஏதோ ஒரு மொழியை எதிர்ப்பது என்பது அல்ல!

இந்தித் திணிப்பு என்பது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு என்பதைத் தெளிவுபடுத்தினார். சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியைத் திணிப்பதன் மூலம் திராவிடர்கள் மீது பார்ப்பனீய பண்பாட்டுத் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்பதைத் தெளிவுப்படுத்தினார். இந்தக் கருத்தினை அந்தக் காலகட்டத்திலேயே தந்தை பெரியார் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

1938 ஏப்ரல் 21 ஆம் தேதி சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரால் (அப்பொழுது பிரதம அமைச்சர்) இந்தித் திணிப்புக் குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே குடிஅரசு இதழில் (7.3.1926) தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும் என்ற கட்டுரையை எழுதினார்.
அந்தக் கட்டுரையில் தந்தை பெரியார் தெளிவாகவே குறிப்பிடுகிறார்:

இனி கொஞ்ச காலத்திற்குள் ஹிந்தி பிரச்சாரத்தின் பலனை அனுபவிக்கப் போகிறோம். பிராமணர் அல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் ஹிந்தியும் ஒன்றாய் முடியும் போல் இருக்கிறது. பொதுவாய் ஹிந்தி என்பது வெளி மாகாணங்களில் பிராமண மதப் பிரச்சாரம் செய்ய தர்ப்பித்து செய்யும் வித்தையாய் விட்டது. இந்த இரகசியத்தை நமது நாட்டுப் பாரமர ஜனங்கள் அறிவதேயில்லை -என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் ஹிந்தி என்பது பார்ப்பன மதப் பிரச்சாரத்துக்கு வழி வகுப்பது என்பதைத் தெளிவு படுத்திவிட்டார் தந்தை பெரியார்.

இந்தி என்பது பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புரட்டு என்பதைத் தவிர அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை

******

இந்தி என்பது அனேகமாக வடமொழியின் சார்போ அல்லது திரிபோ ஆகும். இந்த நாட்டில் ஆரியர்கள் உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்துபோன குண்டூசிக்கும் பயன்படாத பாஷையாகிய வடமொழிக்கு இவ்வளவு பணம் செலவழியச் செய்து வருகின் றனர் என்பது தமிழ் மக்கள் வெகு நாளாகக் கவனித்து வரும் சங்கதியாகும். இப் பொழுது மறைமுகமாய் வடமொழியை ஆதரிக்கவும், ஆரிய நாகரிகம், சமயக் கொள்கை ஆகியவைகளை நிலை நிறுத்தவும் இந்தியை அதிகமாக ஒவ்வொருவருக்குள்ளும் புகுத்தப் பார்ப்பது எவ்வளவு வஞ்சகமான காரியம் என்பதை நமது சோணகிரிகள் அனேகர் இன்னும் உணரவேயில்லை. இந்தி பாஷையில் கபீர்தாஸ் எழுதிய இராமாயணத்தை எதற்குப் படிக்க வேண்டும்? என்று கேட்கிறார் தந்தை பெரியார் (குடிஅரசு 10.5.1931).

1931இல் நன்னிலத்தில் கூட்டப்பெற்ற வட்டார சுயமரியாதை மாநாட்டிலும் (சாமி சிதம்பரனார் முன் மொழிய எஸ்.இராமநாதன் அவர்கள் வழிமொழியப்பட்ட தீர்மானம்) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதோ:


பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வடமொழி முதலிய மொழிகளை நமது மக்கள் படிக்கும்படிச் செய்வது பார்ப்பனீயத்துக்கு மறை முகமாக ஆக்கம் தேடுவதாகுமென இம்மாநாடு கருதுகிறது

1938இல் ஆச்சாரியார் (ராஜாஜி) இந்தியைத் திணிப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்களை எச்சரிக்கும் தீர்மானமாக இது நிறைவேற்றப் பட்டுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.


சென்னை மாகாணத்தில் இந்தியைத் திணிக்க ஆயத்தமான பிரதம அமைச்சர் ஆச்சாரியார் (ராஜாஜி) 1936ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி சென்னை இந்து தியாலாஜிகல் பாட சாலையில் பேசும் போது பச்சையாகவே குறிப்பிட்டார்:

இந்தியை நாம் கற்போமானால், சமஸ்கிருத எழுத்துகளைக் கற்றவராகின்றோம். இறுதியாக சமஸ்கிருதத் தையும் கற்றவராகின்றோம்

(விடுதலை 20.8.1938 பக்கம் 2) -என்று பேசினாரே! இதன் மூலம் கோணிப்பைக் குள்ளிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்ததா- இல்லையா?

இந்தியைத் திணிப்பது முதற்கட்டம். அதன் வழியாக சமஸ்கிருதத்தையும் நுழைப்பது அதன் உள்நோக்கம். அதன்மூலம் வருணாசிரமக் கருத்துகளை, பஞ்சாங்கக் குப்பைகளைத் தமிழர்களின் மூளைக்குள் திணிப்பதுதான் மறைமுகத் திட்டமாகும்.

அதனைத்தான் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்தி திணிப்பு என்பது பண்பாட்டுப் படையெடுப்பு என்று அழகாகக் குறிப்பிட்டார். ராஜாஜியைவிட திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் இதுகுறித்து மிகப் பச்சையாகவே வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்:

என் கைக்கு அதிகாரம் வந்தால்-நான் சர்வாதி காரியானால்-இந்தியர்களை இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அத்தனைப் பேரும் கட்டாயம் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் உடன் ஏற்படுத்திவிடுவேன். ஏனெனில், காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இராம ராஜ்ஜியம் ஏற்பட்டுவிட வேண்டும் என்பது என் ஆசை. இராம ராஜ்ஜியம் என்பது வருணாசிரம தர்மத்தை-அவரவர் அவர்தம் ஜாதி முறைப்படியே தொழில் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு திராவிடக் கவியாகிய கம்பரே இதை ஒப்புக்கொண்டும் இருக்கிறார். இது பற்றிய மொழி இலக்கியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தும் இருக்கிறார். இராமராஜ்ஜியம் ஏற்பட வேண்டுமானால் எல்லோரும் சமஸ்கிருதம் படித்துத் தீரவேண்டும் (தமிழன் தொடுத்தபோர்!-மா.இளஞ்செழியன் பக்கம் 80-81)

இதைவிட பச்சையாக யாரால்தான் சொல்ல முடியும்? இதில் இன்னொரு கருத்துக் கதைக்கப்படுகிறது-இந்திதான் இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்ற கூற்று. உண்மையைச் சொன்னால் இவர்கள் கூறும் இந்தியில் 81 பிரிவுகள் உள்ளன. ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. போஜ்புரி பேசுபவர்கள் கோசாவி பிரிவினர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாது.

அந்தப் பிரிவுகளின் பட்டியல் இதோ:

1.இந்தி, 2.உருது 3.இந்துஸ்தானி 4. பிகாரி 5.மைதிலி 6.ராஜஸ்தானி 7.பிரஜ்பாஷா 8.பக்ரி 9.மேவாரி 10.ஜெய்புரி 11. மால்வி 12.சாட்டிஸ்கரி 13.மார்வாரி 14.ஆஜ்மீரி 15.பந்தேலி 16.பலாகி 17.லோடி 18.இராகி 19.ரகோபான்சி 20.தமதி 21.ஜடி 22.பர்தேசி 23.கலாரி 24.பாடு 25.பங்கி 26.கோசாவி 27.ஓகி 28.அவதி 29.நுனியா 30.பைகனி 31.பாண்டோ 32.அதுகுரி 33.பஸ்தாரி 34.மிர்கனி 35.மகேஸ்வரி 36.போயாரி 37.கிர்சார் 38.ராஜ்காடி 39.நிமாதி 40.யல்டா 41.மராரி 42.போவாரி 43.சடாரி 44.பான்சாரி 45.ராஜபுதானி 46.கோர்க்காலி 47.மாதுரி 48.குருமாலி 49.மீர்சாபுரி 50.ஹோஷங்காபாடி 51.அபு 52.பாபி 53.முசல்மானி 54.லோதாந்தி 55.போபாலி 56.கோட்வாரி 57.பூலியா 58.ஜங்கலி 59.ரங்கடி 60.அகிரி 61.புவானி 62.வாணி 63.கந்தால் 64.ரிவை 65.பரத்பூரி 66.கோத்யானி 67.பிரதாப்காடி 68.கங்கேரி 69.கங்காபாரி 70.ஆக்ராவாலி 71.மேர்வாரி 72.தேவநாகரி 73.உத்தாரி 74.பாமி 75.உத்கேதிபோலி 76.பூலி 77.கோரக்பூரி 78.சார்ரேலி 79.பான்சாரி 80.கோர்த்தி 81.போஜ்புரி

இவ்வளவு மொழிகளையும் சேர்த்து இந்தி இந்தி என்று தம்பட்டம் அடிக்கின்றனர். மொத்தமாக 81 மொழிகளைப் பேசுவோரை இந்தி பேசுவோர் என்று பொய் தகவல் கொடுத்து பெரும்பான்மையோர் பேசும் மொழி இந்தி என்கின்றனர்.

குறிப்பாக சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழக வரலாற்றில் அண்ணாவும், கலைஞரும் என்னும் தலைப்பில் மொழி காப்பு நாளில் (25.1.2011) ஆற்றிய சொற்பொழிவு செறிவான கருத்து மணிகளையும், திரளான தகவல் முத்துகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட அழகிய பேழை என்றே சொல்ல வேண்டும்.


இன்றைய நிலையில் இவற்றையெல்லாம் எடுத்துக் கூறுவதற்குத் தமிழர் தலைவரே இருக்கிறார் என்பதும் உண்மையே!

---------------கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை (நிறைவு) --”விடுதலை”30-1-2011

நாத்திகம் வெற்றி - பெரியார் உலகமயமாகிறார்

நாத்திகம் வெற்றிபெற்று வருவதால்
பெரியார் உலகமயமாகிக்கொண்டிருக்கிறார்

-நாத்திகம் வெற்றி பெற்று வருவதால் பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

திருச்சியில் 8.1.2011 அன்று நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டையொட்டி இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இராமன் எப்படி பிறந்தான்? இராமன் முதலில் தசரதனுக்குப் பிறந்தானா? என்று ஒரு கேள்வியைக் கேட்டாலே செத்துப்போய்விடுவான்.

இராமன் பிறப்பைச் சொன்னாலே போதுமே!

அவதாரமான ராமன் எப்படி பிறந்திருப்பான்? பிறக்காத ராமன் பெயரைச் சொல்லி ராமன் பாலம் என்று பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை சிலர் தடுக்கப்பார்க்கின்றனர். இது எவ்வளவு பெரிய கொடுமை? இந்த மூடநம்பிக் கையின் விளைவு-ஆத்திக நம்பிக்கையின் விளைவு.

நம்முடைய வளர்ச்சியை, நம்முடைய முன்னேற்றத்தை எவ்வளவு பாழ்படுத்துகிறது இந்த மூடநம்பிக்கை என்பதை நினைத்துப் பாருங்கள். எங்களுக்கு மேளா, கீளா என்பதெல்லாம் கிடையாது. பார்ப்பனர்கள் எழுதிய இராமாயணத் திலிருந்துதான் சொல்லப்போகின்றேன்.

அவர்களுக்கு கடவுள் ஒரு கருவி!

அவர்கள் கடவுளை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள். வெறும் தியரி, எத்திசம் - (Athiesm) நாத்திகத்தை மட்டும் எடுத்துச் சொல்லி விட்டுப் போகவில்லை.

இந்த ஜாதியைக் காப்பாற்றுவது மட்டுமல்ல. கடவுள் கருத்தையும் பின்னால் தள்ளி உயர்ஜாதியை உருவாக்கியிருக்கிறான். சமஸ்கிருத ஸ்லோகம் பாருங்கள்: தெய்வாதீனம் ஜகத் சர்வம் என்ன இதற்கு அர்த்தம்? இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.

மந்த்ராதீனம் தூ தைவதம்

இதற்கு என்ன அர்த்தம்? கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது.

மூன்றாவதுதான் மிக முக்கியம்

தன்மந்த்ரம் பிராமணாதீனம் இதற்கு அர்த்தமென்ன? மந்திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. தஸ்பத் பிராமணம் பிரபு ஜெய அப்படியென்றால் என்ன அர்த்தம்? பார்ப்பானை முன்னுக்கு வைத்து கடவுளைத் தள்ளி விட்டான்

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர். மந்திரம் பார்ப்பன ருக்குக் கட்டுப்பட்டது. எனவே பிராமணரை நீங்கள் வணங்க வேண்டும். கடவுளை அல்ல என்று சொல்லி கடவுளை பின்னாலே தள்ளிவிட்டான். பார்ப்பானை முன்னால் வைத்துவிட்டான்.

இந்த இடத்தைத்தான் பெரியார் கண்டு பிடித்தார். அதனால்தான் பெரியாரிசத்தை அசைக்க முடியவில்லை. பெரியார் என்கிற மாமருந்து இருக்கிறதே, அது நாத்திகத்திற்கு மட்டுமல்ல; மனித வாழ்வினுடைய உயர்வுக்கு-பேதமற்ற பெருவாழ்வுக்கு அடித்தளமாக இருந் திருக்கிறது. ஆகவே பெரியாருடைய சிந்தனைகள் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

காவி கழுத்தை வெட்டும்!

அமெரிக்காவிலே பெரியாருடைய கருத்தை ஆராய்ச்சி செய்திருக்கிறார் பவ்லாரிச்சின் என்ற அமெரிக்கப் பேராசிரியை. இராமாயணத்தைப் பற்றி பெரியாரின் மாறுபட்ட கருத்துகளை எடுத்துச்சொல்லியிருக்கிறார்.

அண்மையிலே அந்த அம்மையாரை நான் சிங்கப்பூரிலே சந்தித்தேன். அந்த அம்மையார் சொல்லுகிறார்-காவி கழுத்தை வெட்டும் என்பதைப் பற்றிச் சொன்னார். இதை எல்லாம் கனிமொழி அவர்கள் சொன்னார்.

கடவுள் இல்லை!

தமிழ்நாட்டில்தான் கடவுள் மறுப்பு வாசகத்தை ஒவ்வொரு பெரியார் சிலையிலும் நீங்கள் பார்க்கலாம். கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்று எழுதினார்.

இதுதான் தமிழகத்தில் உள்ள தந்தை பெரியார்சிலையின் கீழ் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சொற்கள் எங்கள் மனதை புண்படுத்துகிறது என்று சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் தார்கள்.

நீதிபதி ஒரு பெரிய பக்திமான். அவர் ஒரு கடவுள் நம்பிக்கையாளர். அவர் ஒரு சிறந்த தீர்ப்பைக் கொடுத்தார். பெரியார் என்ன விரும்பினாரோ, எது அவருடைய கொள்கை என்று சொன்னாரோ. அதைத்தானே அவருடைய சிலையின் கீழே வைக்க முடியும்? இதில் உங்களுக்கு ஒன்றுமில்லையே! என்று சொல்லி தீர்ப்பளித்தார்.

பெரியார் சிலைக்குக் கீழே சங்கராச்சாரி கருத்தையா வைக்க முடியும்? பெரியார் சிலைக்குக் கீழே பெரியார் சொன்ன கருத்தைத்தானே போட முடியும்? சங்கராச்சாரி சொன்னதையா போடுவான்? ஒழுங்காக வழக்கை வாபஸ் வாங்குங்கள்; இல்லாவிட்டால் அபராதம் விதிப்பேன் என்று சொல்லி தீர்ப்பைச் சொன்னார்.

பெரியார் அங்கும் வெற்றி பெற்றார் (கைதட்டல்). ஆகவே தமிழ்நாட்டில்தான் இதை நீங்கள் பார்க்க முடியும். பெரியாருடைய கடவுள் மறுப்புக்கொள்கையை நீதிமன்றமே சரி என்று ஒத்துக்கொண்டிருக்கிறது. இராமாயணத்தை வால்மீகி எழுதினார். அதுதான் ஒரிஜினல், முற்பட்டது. துளசிதாஸ், கம்பன் எழுதிய இராமாயணங்கள் பிறகு திருத்தி எழுத்தப்பட்டவை.

சச்சின் இராமாயணத்தை-உண்மை இராமாயணத்தை அரசாங்கம் தடை செய்தது. பிறகு வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் சொன்னது: பெரியார் தனது கருத்துகளைச் சொல்வதற்கு உரிமை படைத்தவர். அவர் இராமாயணத்தைப் பற்றி தனது கருத்து களைச் சொல்லுவதற்கு முழு உரிமை படைத்தவர். ஆகவே பெரியாரின் சச்சி இராமாயணத்திற்கு உத்தரப்பிரதேசம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது.

அதுவும் நெருக்கடி காலத்திலே வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றவர்களால் அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. பெரியார் ஏன் இராமாயணத்தை நினைத்தார்? ஒன்றே ஒன்றைச் சொல்லு கின்றேன்.

உத்தரகாண்டத்தை வெளியிட மறுப்பதேன்?

உத்தரகாண்டத்தையே வெளியிட மாட்டேன் என்கிறார்கள். அந்த உத்தரகாண்டத்தில்தான் மனுதர்ம தத்துவம் இருக்கிறது. ராம ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம் என்று சொல்லுகிறார்களே, இந்த இராம இராஜ்ஜியம் வந்தால் எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளம் பாருங்கள்.

ராமராஜ்ஜியம் நடக்கிறது. ராமராஜ்ஜியத்தில் ஒரு குழந்தை இறந்துபோய் விட்டது. உத்தர காண்டத்தில் இருப்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லுகின்றேன். இராமா! உன்னுடைய ராம ராஜ்ஜியத்தில் இவ்வளவு பெரிய அநீதி நடக்கலாமா? தர்மத்திற்கு கேடு வரலாமா? என்று கேட்கிறார்கள்.

என்னுடைய பிராமணக் குழந்தை இறந்து போனான். ஏன் இறந்து போனான் தெரியுமா? யார் உன்னுடைய குழந்தையை கொன்றது என்று கேட்கிறார்கள்.

தர்மத்திற்கு விரோதமாக சம்பூகன் என்று சொல்லக்கூடிய ஒரு சூத்திரன் தவம் செய்கிறான். தவம் செய்வது என்றால் நேரடியாகக் கடவுளைத் தொழுவது.

சூத்திர சம்பூகன்
கடவுளைத் தொழுததால்...

சூத்திர சம்பூகன் கடவுளை நோக்கித் தவம் செய்தான். அந்த அதர்மத்தால் என்னுடைய குழந்தை இறந்தது என்று ராமனிடம் முறை யிட்டார்கள்.

ஆகவே, இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் சூத்திர சம்பூகன் கழுத்தை வெட்டு என்று சொன்னார்கள். உடனே ராமன் விசாரணை எல்லாம் செய்யவில்லை. நேராக இராமன் போகிறான். சூத்திர சம்பூகன் கழுத்தை இரண்டு துண்டாக வெட்டுகின்றான். உடனே இந்தக் குழந்தை பிழைத்துக்கொண்டது என்று சொல்லுகின்றான். சூத்திரனை ஒழிப்பது?

இதுதான் இராமாயணத்தில் இருப்பது. அப்படியானால் அதன் தத்துவம் என்னவென்று சொன்னால் சூத்திரரை ஒழிப்பது. அதனால்தான் ஞானசூரியன் என்னும் நூலை எல்லோரும் படியுங்கள் என்று கலைஞர் சொன்னார்.

ஞானியானாலும், மூடனானாலும் சூத்திரனுக்குத் தெய்வம் பிராமணனே ஆவான். இதுதான் மனுதர்மத்தில் இருக்கின்ற ஸ்லோகம். சூத்திரனுக்கு நேரடியாகக் கடவுளைத் தொழ உரிமை இல்லை-இந்து வர்ணாஸ்ரம தர்ம மனுதர்மப்படி. ஆகவே சூத்திர சம்பூகனின் கழுத்தை வெட்ட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லுகின்றான்.

ஏகலைவன் கதையும் அதே!

அதே போன்ற கருத்து. ஏகலைவன் கதை- பாரதத்தில் உங்களுக்குத் தெரியும். ஏகலைவன் குறிபார்த்து அம்பு எய்து ஒரு நாயை வீழ்த்தினான். நேற்று இரண்டு பார்ப்பன நீதிபதிகளே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ஏனய்யா கட்டை விரலை வெட்டிக்கொடு என்று துரோணாச்சாரியார் கேட்டதை இந்தக் காலத்தில் எவராவது ஒத்துக்கொள்வார்களா?

பெரியார் அங்கும் வெற்றி பெறுகிறார். பெரியாருடைய தத்துவங்களை ஆரம்பத்தில் மறுத்தவர்களாலே இன்றைக்கு முடியாது என்று காட்டக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள்.

பெரியார் உலகமயமாகிறார்

பெரியார் உலகமயமாவது மட்டுமல்ல. எந்தெந்த இடத்தில் எல்லாம் பெரியாருடைய கருத்துகள் தடுக்கப்பட்டனவோ, எங்கெல்லாம் பெரியாருடைய தத்துவங்கள் மறைக்கப்பட்டனவோ, எங்கெல்லாம் பெரியாருடைய கருத்துகளை ஏற்க தயக்கம் இருந்ததோ அங்கெல்லாம் கூட பெரியா ருடைய ஒளி இன்றைக்குப் பரந்து பாய்ந்து கொண்டிருக்கிறது.

நாத்திகத்தின் வெற்றி

அது நாத்திகத்தின் வெற்றி. ஆத்திகத்தின் தோல்வி என்பதை இந்த மாநாட்டின் மூலம் பிரகடனப்படுத்துவதுதான் இந்த மக்கள் வெள்ளத் தில் மிகப்பெரிய பணி என்று கூறி நாளைய நிறைவுரையில் பல முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

-------------------”விடுதலை” 31-1-2011

இந்துக்களே வடகலையும், தென்கலையும் ஒன்றாகச் சேர்க்க முடிந்ததா?

இந்துக்களே, ஒன்று சேர்வீர்! என்று சொல்லும் கூட்டமே!
முதலில் வடகலையும், தென்கலையும் ஒன்றாகச் சேர்க்க முடிந்ததா?
திருச்சி நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் கேள்வி

இந்துக்களே, ஒன்று சேருங்கள் என்று சொல்லும் இராமகோபாலன் கூட்டமே முதலில் வடகலையையும், தென்கலையையும் உன்னால் ஒன்றாக சேர்க்க முடிந்ததா?என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

திருச்சியில் 8.1.2011 அன்று நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டையொட்டி இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

காஞ்சிபுரம் யானைக்கு நாமம்...!

கடவுளுக்காக காஞ்சிபுரம் கோயிலுக்கு யானை கொடுத்தார்கள். அந்த யானைக்கு நாமத்தைப் போட்டார்கள். யானைக்கு வடகலை நாமத்தைப் போடுவதா? தென்கலை நாமத்தைப் போடுவதா? என்று இந்தச் சண்டை 150 வருடங்களாக நடக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. வெள்ளைக்கார நீதிபதிக்கு வடகலை என்றாலும் தெரியவில்லை. தென்கலை என்றாலும் தெரிய வில்லை. ஏன் இந்த இரண்டு பிரிவினரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். நாமம் என்றால் என்ன? பிரிவி கவுன்சிலில் பிரிட்டிஷ் நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நாமத்தைப் பற்றித் தெரியாது.

புத்திலிசாலி வழக்குரைஞர் ஒருவர் நீதிபதியிடம் விளக்கி சொன்னார், மைலார்டு! நீதிபதி அவர்களே, இவர்கள் இரு பிரிவினருக்கும் ஏற்பட்டுள்ள சண்டைலு க்கும் ரு க்கும் ஏற்பட்டுள்ள வழக்கு சண்டை என்று சொன்னாராம். ஆங்கில எழுத்து Y என்பது பாதம் வைத்த நாமம். U என்பது பாதம் வைக்காத நாமம் என்று சொன்னாராம். அன்றைக்கு ஏற்பட்ட இந்த வழக்குச் சண்டை இன்றைய வரைக்கும் தீரவில்லை.

இந்துக்கள் முதலில் ஒன்றாக இருக்கிறீர்களா?

இந்து மதம் ஒரே மதம் என்று சொல்லுகின்றான். இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லு கின்றான். இந்துக்களை ஒன்று சேர்ப்பது அப்புறம் இருக்கட்டும். வடகலைக்காரரையும், தென்கலைக் காரரையும் ஒன்று சேர்க்காத உன் மதம், என்ன மதம்? எச்சக்கலை மதம் அல்லவா, உன் மதம்? (சிரிப்பு-கை தைட்டல்).

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்தை யாராவது எள்மூக்கு முனையளவுகூட மறுத்துவிட முடியுமா? தந்தை பெரியாருடைய கருத்து உலகம் பூராவும் பரவுகிறது என்று சற்று நேரத்திற்கு முன்பு சொன்னோம். இதோ என்னுடைய கையிலே இருக்கின்ற ஆதாரம்-நவீன இந்தியாவை உரு வாக்கியவர்கள்- என்கிற புத்தகம் இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு உயர் ஜாதியைச் சார்ந்தவர். எங்களுக்கு ஜாதிப் பிரச்சினையைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர் பெரியார் கருத்துக்கு மாறுபட்டவர், பெரியாரிஸ்ட் அல்ல.

பெரியாரைப் புறந்தள்ள முடியவில்லை

பெரியாரிஸ்டாக அல்லாதவர்கள்கூட இன்றைக்குப் பெரியாரைப் புறந்தள்ள முடியவில்லை. (கைதட்டல்) பெரியாரை மறைத்துவிட முடிய வில்லை. பெரியாரைக் கொண்டுவர வேண்டி யிருக்கிறது.


எப்படி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நோய்க்கு உரிய மருந்தைத் தேடுவார்களோ அதே போல கடவுள், மதம், ஜாதி என்ற நோய்க்கு உரிய மருந்தைத் தேடுகிறார்கள் என்றால் அதுதான் பெரியார் என்கிற தத்துவம் (கைதட்டல்). ராமச்சந்திர குகா என்பவர்தான் மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இண்டியா என்ற புத்தகத்தை எழுதி யிருக்கின்றார்.

ஆங்கில நூலில் பெரியார் பற்றி....

19 முக்கிய நபர்களைப் பற்றி எழுதியிருக்கின்றார். முக்கியமாக அவர் தேர்ந்தெடுத்தது-ஒன்று, சமுதாயத்துறையிலே ஜோதிபா ஃபுலே டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர். அதே வரிசையிலே தென்நாட்டிலேயிருந்து ஒரே ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கின்றார். அவர்தான் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்று மிகத்தெளிவாக இந்த நூலிலே பெரியார் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

இவ்வளவு காலம் ஆங்கில நூல்களிலே பெரியார் இடம்பெறுவதில்லை. பெரியார் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தார். ஆனால் இன்றைக்கு முடியவில்லை. எவ்வளவு காலத்திற்கு அவர்களாலே தடுக்க முடியும்? தடுக்க முடிய வில்லை.

காற்றுக்குத் தடை போட முடியுமா?

காற்றுக்கு எப்படி ஒருவர் தடை போட முடியாதோ அதே போலத்தான் பெரியார் கொள்கைக்கும் எவரும் தடை போட முடியாது என்று சொல்லக்கூடிய அளவிலே இன்றைக்கு வந்திருக்கிறது.

The Radical Reformer E.V.Ramasamy என்று தலைப்பு கொடுத்திருக்கிறார். பெரியாரைப் பற்றிச் சொல்லும்பொழுது, தீவிரமான புரட்சியாளர் சீர்திருத்தவாதி-அவர்தான் புரட்சியாளர் என்று அர்த்தம்.

1938ஆம் ஆண்டிலிருந்து ஈ.வெ.ராமசாமி, பெரியார் என்று அழைக்கப்பட்டார். பெரியார் என்றால் தலைசிறந்த மாமனிதர். அதற்கு காரணம் பெண்களின் உரிமைக்காகப் போராடினார். மூடநம்பிக்கை ஒழிப்புக்காக அரும்பாடு பட்டார். கர்ப்பத்தடை-குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தினார். நாத்திகக் கருத்துகளை அறிவியல் உண்மைக் கருத்துகளை மக்களிடத்திலே எடுத்துச் சொன்னார். அதுமட்டுமல்ல; தென்னாட்டிலே இந்தியை கட்டாயமாகத் திணிக்கின்ற அந்த ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்து மிகப்பெரிய அளவுக்கு ஒரு போராட்டத்தைத் தொடங்கி இறுதியிலே பெரியார் வெற்றி பெற்றார்.

பெரியாரின் தனிச் சிந்தனை

மேலும் பெரியார் அவர்கள் மிக ஆழமாக இராமாயணத்தைப் பற்றி சிந்தித்து விமர்சனம் செய்தார், எழுதினார், ஆய்வு செய்தார். யாருக்கும் இல்லாத துணிவோடு இராமாயணத்தை ஆய்வு செய்தார்.


பெரியாருடைய தனித்த சிந்தனையை, சிறப்பைப் பற்றி இந்த நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது ஒரு செய்தியை மிக அழகாகச் சொன்னார். பெரியாரின் போர் முறைக்கும், மற்றவர்களுடைய போர் முறைக்கும் இருக்கின்ற வித்தியாசம் ஒன்று.

பெரியாரின் போர் முறை

பெரியாரின் போர் முறை இருக்கிறதே அது மூலபலத்தைத் தெரிந்து முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று சொன்னார். அதாவது நேரடியாக இருக்கிற எதிரியைவிட அந்த மூலம் எங்கேயிருக்கிறது, நோய் நாடி நோய் முதல் நாடக்கூடியது-அந்த அடிப்படையிலே போகக் கூடியவர் அவர்.

பார்ப்பனர்களுக்கு புரசீஜர் கோட்

ஜாதி எப்படியிருக்கிறது? ஜாதிக்கு என்ன அடையாளம்? பார்ப்பனர்களைப் பொறுத்த வரையிலே சங்கராச்சாரியார் கொஞ்ச நாள்களுக்கு முன்பு சொன்னார். சங்கராச்சாரி சொன்னது மட்டுமல்ல; அவர் சனாதனத்திலே- ஆத்திகத்திலே சங்கராச்சாரியார் சொன்னார். அரசியலிலே இருந்த ராஜகோபாலாச்சாரியார் சொன்னார். எப்பொழு தெல்லாம் பார்ப்பனர்களுக்கு சங்கடங்கள் வருகிறதோ. அப்பொழுதெல்லாம் வெளியே வருவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்றால் புரசீஜர் கோட் என்று எப்படி நாம் சட்டத்தைப் புரட்டுகின்றோமோ- அதே போல நமக்குள்ள புரசீஜர் கோட் என்னவென்றால் இராமாயணம் தான். அந்த இராமாயணத்திலே எப்படி நடந்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்த இராமாய ணத்தைப் பின்பற்றுங்கள் என்று சொன்னார்.

கனிமொழி அழகாகச் சொன்னார்

அதைத்ததான் கவிஞர் கனிமொழி அவர்கள் அழகாகச் சொன்னார். நம் கையைக் கொண்டே நம் கண்களைக் குத்த ஏற்பாடு செய்திருக்கின்றான். அதிலே விழிப்பாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை அவர்கள் சொன்னார்களே, அதற்கு என்ன அர்த்தம்.


நமது சமுதாயத்திலே துரோகிகளைப் பிடித்து நம்மால் விளம்பரப்படுத்தப்பட்டவர்கள், நம்மால் ஆளாக்கப்பட்டவர்கள் - நம் இனத்தவர்களையே பிடித்துக் காட்டுவார்கள்.

அதுதான் விபீஷ்ணன், அதுதான் அனுமார். உலக நாத்திகர் மாநாடு என்றவுடன், நடப்பதற்கு முன்னாலே அவர்களுக்கு அதிர்ச்சி.

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்! என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

உலக நாத்திகர் மாநாட்டை இவ்வளவு பெரிதாக திருச்சியிலே நடத்துகிறார்களே என்ற ஆத்திரம் -பார்ப்பனர்களுக்கு. நான் காலையில் சென்ற பொழுது ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன்.

இராமாயண் பஜன் மேளாவாம்!

வருகிற 23ஆம் தேதி இந்து முன்னணியினுடைய தலைவர் ராமகோபாலய்யர் என்ன பேசுவார் என்றால் இராமாயண் பஜன் மேளா! என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இந்திக்காரர்களுக்கு இந்தி மொழியில் சொல்லுகிறோம். வங்கத்தில் இருந்து வந்தவருக்கு அந்த மொழியில் சொல்லுகின்றோம். பஞ்சாப் காரருக்கு பஞ்சாப் மொழியில் சொல்லுகின்றோம். தெலுங்கு மொழிக்காரர்களுக்கு தெலுங்கு மொழியில் சொல்லுகிறோம் -அது வேறு. உடனே ஒரு மாற்று சொல்ல வேண்டும் என்பதற்காக இராமாயணத்திற்குச் செல்லு கின்றான். நம்முடைய மக்களை அடிமைப்படுத்த வேண்டும், நம் மக்களுக்கு மூளைச் சாயத்தை ஏற்ற வேண்டும் என்பதற்காக இராமாயணத்தைச் சொல்லுகின்றான். இராமாயண் பஜன் மேளா? நடைபெறும் என்று எழுதி வைத்திருந்தான். நாங்கள் என்ன சாதாரண ஆளா? மாவட்ட தலைவரைக் கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே கூப்பிட்டேன். 24ஆம் தேதி நீங்கள் ஒரு விளம்பரம் போடுங்கள்! (கைதட்டல்).

இராமாயணப் புரட்டைப் பற்றி வீரமணி பேசுவார்!

வீரமணி இராமாயணப் புரட்டைப் பற்றி திருச்சியில் ஓர் ஆராய்ச்சி உரையாற்றுவார் என்று போடுங்கள் என்று சொன்னேன் (கைதட்டல்). நான் கன்னா, பின்னா என்று யாரையும் தனிப்பட்ட முறையில் பேசமாட்டேன். இராமாயணத்தில் இராமன் பிறந்த ஒரு கதையைச் சொன்னாலே போதும் (பலத்த கைதட்டல்). அதே போல சீதைக்கு ஏற்பட்ட ஆபத்து என்ன என்று சொன்னாலே தெரிந்துவிடும்.

அண்ணா அழகாகச் சொன்னார்

அண்ணாவே ரொம்ப அழகாகச் சொன்னார். கம்பன் பாடியதையே எடுத்துச் சொன்னார். மனத்தினால், வாக்கினால் மறு உற்றேன் எனினும் சினத்தினால் தீயேன்! என்று கம்ப இராமாயணத்தில் உள்ளதை எடுத்துச்சொன்னார்.

சீதையைப் பற்றி இராமன் சந்தேகப்படுகின்றான். சீதை சொல்லுகிறாள்: நான் மனதால் தப்புப் பண்ணவில்லை. அதே மாதிரி வாக்கினால் சொல்லினால் நான் தப்புப் பண்ணவில்லை. சினத்தினால் தீ சுடும் என்று சொல்லுவார்கள்.

அண்ணா இந்த இடத்தில் ரொம்ப அழகாகச் சொன்னார். அண்ணா, தந்தை பெரியார் பள்ளிக் கூடத்தில் படித்தவரல்லவா? ராமகோபாலய்யருக்கு வெட்கம் இல்லையே!

சமஸ்கிருதத்தில் மனோ, வாக்கு, காயம். மன தினால் தப்பு பண்ணவில்லை. உள்ளத்தினால் தப்பு பண்ணவில்லை. வாக்கினாலே-சொல்லினாலே தப்பு பண்ணவில்லை. காயத்தையும் சேர்த்துத்தானே கம்பன் சொல்லியிருக்க வேண்டும்.

ஏன் கம்பன் காயத்தை விட்டான்? அண்ணா சொன்னார். ரொம்ப அழகாக-கம்பன் காயத்தைத் தெரிந்தே விட்டுவிட்டான் கவிதையிலே-காரணம் காயம் காயப்பட்டுவிட்ட காரணத்தினாலே என்று சொன்னார் (கைதட்டல்).

இந்த ஒன்றைச் சொன்னால் போதாதா? ராமகோபாலய்யருக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இராமாயணத்தை இனிமேல் எவராவது கையிலே தூக்குவார்களா?

-----------------------தொடரும் -"விடுதலை” 30-1-2011

30.1.11

வரலாற்றில் போர் நடைபெற்றதற்குக் காரணமே மதங்கள்தான்!

வரலாற்றில் போர் நடைபெற்றதற்குக் காரணமே மதங்கள்தான்!
திருச்சியில் தமிழர் தலைவர் பேச்சு

வரலாற்றில் பெரும்பாலும் கலவரத்துக் காரணமே மதம்தான் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.


திருச்சியில் 8.1.2011 அன்று நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டையொட்டி இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

உலக நாத்திகர் மாநாட்டு இரண்டாம் நாள் நிகழ்ச்சி

மிகச் சிறப்போடு நடைபெற்றிருக்கக்கூடிய உலக நாத்திகர் மாநாடு என்ற இந்த மாநாட்டில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக வேறு எந்த மாநாடுகளிலும் நடக்காத ஒரு புதுமை இந்த மாநாட்டிலே நடைபெற்றிருக்கிறது.

இந்த உலக நாத்திகர் மாநாட்டிற்கு வெளிநாட்டில் பல நாடுகளிலிருந்து பேராளர்கள், அறிஞர் பெருமக்கள் வந்திருக்கிறார்கள். அதே போல இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பேராளர்கள் வந்திருக்கிறார்கள். எப்படி பெரியாரு டைய தொண்டர்கள் அவருடைய கொள்கையை அப்படியே பின்பற்றி வாழ்கிறார்கள் என்பதைப்பார்த்திருப்பீர்கள்.

கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்ன பெரியாருடைய கொள்கை எப்படி இன்றைக்கு நடைமுறையில் பயன்பட்டிருக்கின்றன என்பதை இங்கே விளக்கினார்கள்.


பெரியாரின் மனிதநேயம் உலகை ஆளும்

தந்தை பெரியாருடைய மனிதநேயம் உலகை ஆளும் என்பதை வெளிப்படுத்தினார்கள். கடவுள் பல வகையாகப் பிரிக்கப்பட்டன. மதங்கள் பல வகையாகப் பிரிக்கப்பட்டன. ஜாதி பல வாரியாகப் பிரிக்கப்பட்டன.

ஆனால், பெரியார் மனித குலம் எல்லோரையும் ஒன்றிணைக்கிறார். நாத்திக நன்னெறி நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது (கைதட்டல்). மனிதநேயம் ஒன்றிணைக்கிறது.

நாத்திகம் என்பதன் மறுபெயர்

நாத்திகம் என்பதன் மறுபெயர்தான் மனித நேயம் என்பது. பெரியார் உலகமயமாகிறார் என்று சொல்லக்கூடிய அளவிலே மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ள நிகழ்வுகளையும் நான் பின்னாலே சொல்லுகின்றேன். இந்த இரண்டாம் நிகழ்ச்சியிலே மாலையில் சிறப்பான ஒரு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எண்ணற்ற கருஞ்சட்டைத் தோழர்களும், தோழியர்களும் பங்கேற்று மூடநம்பிக்கைகளைப் பற்றி பேரணியில் எடுத்து விளக்கினார்கள்.

மூடநம்பிக்கைப் பைத்தியங்களைத் திருத்த

இதிலே ஒரு ஒரு சங்கடம் என்னவென்று சொன்னால் இந்த மூடநம்பிக்கைப் பைத்தியக்காரர்களைத் திருத்துவதற்கு-பழகிய யானையை அனுப்பி, பழகாத யானையை பிடிப்பது போல, நாம் அவர்களுக்காக சங்கடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதே!


நான் சங்கடத்தோடு இருந்தேன்

நாங்கள் மேடையிலே அமர்ந்து அதை வேடிக்கை பார்த்தபொழுது மனச்சங்கடத்தோடு நான் அமர்ந்திருந்தேன். தோழர் ஒருவர் கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு தேங்காயை வேகமாக தலையில் உடைத்துக்காட்டினார்.


பொதுவாக மூளைப்பகுதி இருக்கிற இடத்தில்-தலையில் தேங்காயை வேகமாக உடைப்பது என்பதிருக்கிறதே, அது அறிவியல் சார்ந்ததல்ல. உடலுக்கும் நல்லதல்ல.

பக்தியாளர்களால்தான்....!

பக்தியாளர்களால்தான் இதைச் செய்ய முடியும், சகித்துக் கொள்ள முடியும் என்பதல்ல. அதைப் பொய் என்று காட்டுவதற்காக நாங்களும்கூட அதற்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவிலே செய்கிறோம் என்று எங்கள் தோழர்கள் தலையில் தேங்காயை உடைத்ததைப் பார்த்தபொழுது எனக்குச் சங்கடமாக இருந்தது.

நாமும் பைத்தியமும் ஆக வேண்டுமே!

ஏனென்று சொன்னால், இந்தப் பைத்தியக்காரர்களுக்காக நாமும் பைத்தியக்காரர்களாக ஆக வேண்டும் என்பதற்கு நாத்திகம் அதற்காக ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறதே என்பதைப் பார்த்தோம்.

இங்கே தீச்சட்டி எடுத்ததைப் பற்றிச் சொன்னார்கள். ஆகவே அது சுடாது. அதைப் பற்றிக் கவலை இல்லை. அதே நேரத்திலே நெருப்பிலே இறங்கும்பொழுதும் அப்படித்தான்.


வெளிநாட்டுக்காரர் தீமிதித்தார்

பஞ்சாபிலே இருந்து வந்த நண்பர் ஒருவர்-நம்முடைய பேராளர் தீமிதித்தார். அவர் நெருப்பிலே இறங்கித்தானே நடந்து வந்தார். நம்மோடு. அந்தப்படம் கூட இன்றைய விடுதலையில் வந்திருக்கிறது. பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் தீக்குண்டம் மிதிக்கின்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அது போலவே நார்வேயிலிருந்து வந்த நண்பர் அவரும் திடீரென்று நான் இறங்கப்போகிறேன் என்று சொல்லி அவரும் தீக்குண்டத்திலே இறங்கி நடந்து வந்தார்.


தி.க. கொடியைப் பிடித்துக்கொண்டு வந்தார்

ஒருவர் பஞ்சாபிலே இருந்து இந்த மூடநம்பிக்கைப் பணியைச் செய்ய வந்தார். அதே போல நார்வேயிலிருந்து ஒருவர் மூடநம்பிக்கைப் பணியை செய்வதற்கு வந்தார்.

நேற்று அதைப் பார்த்தோம். இன்றைக்கு இந்த ஊர் வலத்திலே என்ன தனி சிறப்பு என்று சொன்னால்... பஞ்சாபிலே இருந்து வந்த பேராளர் தலைப்பாகையோடு திராவிடர் கழக கொடியை கையிலே ஏந்திக்கொண்டு வீறுநடை போட்டு வந்தார். அதே போல நார்வேயிலிருந்து வந்த வெளிநாட்டு நண்பர் அவரும் திராவிடர் கழக கொடியைப் பிடித்துக்கொண்டு வந்தார். வெளிநாட்டவர், வெளி மாநிலத்தவர், இன்றைக்கு திராவிடர் கழகத்தினுடைய கொடியை ஏந்துகிறார் என்று சொன்னால் பெரியார் உலக மயமாகிவிட்டார் என்பதற்கு இதைவிட ஆதாரப் பூர்வமான சான்றாக வேறு எதையும் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை (பலத்த கைதட்டல்).

உலகம் முழுக்க பெரியார் தேவைப்படுகிறார்

இன்றைக்கு உலகம் முழுவதும் பெரியார் தேவைப்படுகிறார். ஏனென்றால் கடவுள்களால், மதங்களால் மக்களுக்கு அமைதியைக் கொடுக்க முடியவில்லை.
பயங்கரவாதம் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு என்ன காரணம்? பயங்கர வாதத்தினுடைய தாய், தந்தையர்கள் யார்? இன்றைக்கும் நம்மாலே எங்கும் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியவில்லை. காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கு இன்னும் சிக்கல்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை என்ன?

ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னாலே காவல் துறைக்கு இருந்த பொறுப்பை விட, இருந்த பணிச்சுமையை விட ரொம்ப அதிகமானது. காவல்துறையிலே இருக்கக்கூடிய நண்பர்கள் இப்பொழுது அதிக அளவுக்கு மன அழுத்தத்துக்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று சொன்னால் எல்லோரையும் சோதித்துதான் அனுப்பவேண்டியிருக்கிறது.

யாரையாவது திடீரென்று ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் கூட எஸ்.எம்.எஸ் கொடுக்கிறான். இந்த மேடையில் குண்டு வைத்திருக்கிறார்கள் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினால் காவல்துறையினர் அலட்சியமாக இருக்க மாட்டார்கள். உடனே மோப்பநாய் வரை கொண்டு வந்து பரிசோதித்து மற்றவர்களை அனுப்ப வேண்டும். எல்லா இடங்களிலும் மோப்ப நாயை வைத்து சோதனை போட வேண்டும்.

ரயிலில் குண்டு என்று சொன்னால்...

ரயிலில் குண்டு இருக்கிறது என்று சொன்னால் உடனே காவல்துறையினர் ரயிலை நோக்கி விரைந்து செல்லவேண்டும். எல்லோரும் ரயிலை விட்டு இறங்குங்கள் என்று இறக்கிவிட்டு ரயிலை சோதனை போட வேண்டும். இது எவ்வளவு காலத்திற்குள் ஏற்பட்டது.

இது எதனால் வந்தது?

தயவு செய்து நினைத்துப்பார்க்க வேண்டும். காலையிலே காஷ்மீரிலிருந்து வந்த ஒரு சிவில் எஞ்சினீயர் மிகத் தெளிவாகப் பேசினார். எங்கே? எங்களுடைய பல்கலைக் கழகத்திலே. அவர் பேசும்பொழுது மிகச் சிறப்பாகச் சொன்னார்.

தமிழ்நாடு எங்களுக்கு இவ்வளவு அன்பு காட்டுகிறது. பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் இவ்வளவு அன்பாக இருக்கின்றீர்கள். காஷ்மீருக்கும் பெரியார் தேவைப்படுகிறார். இப் பொழுது அதிகமாகத் தேவைப்படுகிறார். மிக அதிகமாகப் படித்து அங்கே ஒரு பெரிய அதிகாரியாக இருக்கக்கூடியவர் சிவில் எஞ்சினீயர் காஷ்மீர் கலவரத்திற்குக் காரணம் என்ன?

அவர் பேசும்பொழுது சொன்னார். குறைந்தது இந்த 20 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் நீங்கள் அன்போடு காஷ்மீரைப் பார்க்க வந்ததெல்லாம் போய் இன்றைக்கு காஷ்மீருக்கு வருவதற்குப் பயப்படுவதற்கு என்ன காரணம் என்று சொன்னால் மதவெறி. மதவெறி உள்ளே நுழைந்ததால் ஜம்மு-காஷ்மீரிலே இவ்வளவு சிக்கல்கள். அந்த மக்களுக்கு சரியான விடிவு கிடைக்க வேண்டுமானால் பெரியார் அங்கும் வரவேண்டும். காஷ்மீருக்கு வரவேண்டும். கன்னியாகுமரியில் இருந்தால் மட்டும் போதாது என்று வெளிப்படையாக எடுத்துச் சொன்னார்.

ஏனென்றால் மதங்களால்தான் பயங்கரவாதம். பயங்கரவாதம் எதனாலே உருவாகியிருக்கிறது. பாபர் மசூதியை ஒருவன் இடிக்கிறான். அதுபற்றி வழக்கு வருகிறது. இன்னொருவர் அதற்குப் போட்டியாக இன்னொன்றை நடத்துகிறார் என்றால் அடிக்கடி நான் சொல்லுகிற கருத்தைச் சொல்லுகிறேன். இதுவரையிலே கடவுள் உண்டு என்பவர்களிடத்திலேதான் போர் நடந்திருக்கிறது. போர் நடந்ததற்கு அடிப்படை காரணம் என்ன?

வரலாற்றில் போர் நடந்ததற்கு அடிப்படைக் காரணம் என்ன? எல்லாமே மதப்போர்கள். சிலுவைப் போர்கள். இவை எல்லாம் யாரிடையே நடந்திருக்கிறது. மதவாதிகளிடையே நடந் திருக்கிறது. கடவுள் உண்டு என்பவன்தான் சம்மட்டியைத் தூக்கிக்கொண்டு அலைகிறான்.

ஒரு கடவுளுக்கும், இன்னொரு கடவுளுக்கும் சண்டை. இந்த மதத்தவனுக்கும் அந்த மதத்தவ னுக்கும் சண்டை. அவ்வளவு தூரம் போக வேண்டாமய்யா. பக்கத்திலே இருக்கிற சிறீரங்கம் இங்கேயிருக்கிற கடவுள் பெக்கூலியர் கடவுள் பக்கத்திலே இருக்கிற சிறீரங்கம் கடவுள். மற்ற கடவுள்கள் எல்லாம் விழித்துக்கொண்டிருக்கின்ற கடவுள். இந்தக் கடவுள் எப்பொழுதுமே தூங்கிக்கொண்டிருக்கின்ற கடவுள்.

கடவுள்களிடையே சண்டை

ஏன் பள்ளிகொண்டீரய்யா சிறீரங்கநாதரே என்று கேட்கிறார்கள். உங்களுடைய இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள். கோடிக் கணக்கான கடவுள்கள். தூங்கும் கடவுள், நடக்கும் கடவுள் என்று இப்படி ஏராளமான கடவுள்கள்.

திருச்சி சிறீரங்கநாதர் கடவுள்தான் தூங்கிக் கொண்டேயிருக்கின்ற கடவுள். இதிலே நாமம் போடுவதிலே தகராறு. வடகலைக்காரனுக்கும், தென்கலைக்காரனுக்கும் நெற்றியில் டிராயிங் போட்டுக்கொள்கிறவன் உலகத்திலேயே நம் முடைய நாட்டைத் தவிர வேறு எங்கும் கிடையாது.

------------------------தொடரும்..................."விடுதலை” 29-1-2011

பஜ்ரங்தள் கும்பலின் தலைவன் தாராசிங் தண்டணையும் -தேவையான சிந்தனையும்


தாராசிங் தண்டனையும்
தேவையான சிந்தனையும்

ஒரிசா மாநிலம் மனோகர்பூரில் உலகமே வெட்கித் தலைகுனியும் ஒரு கோரச் செயல் நடைபெற்றது. அதற்குக் காரணமான அமைப்பு - சங்பரிவார்க் கும்பலின் கூர்மையான படையான பஜ்ரங்தள் (குரங்கு என்று பொருள்) ஆகும்.

தொழு நோயாளிகளுக்காக தொண்டூழியம் செய்து வந்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் (வயது 58) அவர்தம் மகன்கள் பிலிப்ஸ் (வயது 9), திமோத்தி (வயது 6) ஆகியோர் ஒரு கிராமத்தில் தொண்டூழியம் செய்து இரவில் ஜீப்பில் தூங்கிக்கொண்டு இருந்தபோது பஜ்ரங்தள் கும்பலின் தலைவன் தாராசிங் தலைமையில் ஒரு காட்டு விலங்காண்டிக் கூட்டம் ஜீப்போடு கொளுத்தி தமது இந்துமத வெறித்தனத்தைக் குடித்துத் தீர்த்தது. (23.1.1999)


தொழுநோயாளிகளுக்கு உதவி செய்யலாமா? இந்து மதத் தத்துவப்படி அது கர்ம பலன் ஆயிற்றே!

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்கூட இது கர்மபலன் ஆண்டவனே, பிச்சை போடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு இந்துத்துவாவின் கீழ்மை பாதிக்கப்பட்ட மக்களின் மூளையில்கூட நம்பும்படித் திணிக்கப்பட்ட கொடுமை!


இந்தக் கொடுஞ் செயலுக்குக் காரணமான தாராசிங் என்பவனுக்கு மாவட்ட நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. மேல் முறையீட்டால் உயர்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதற்கு மேலும் கொலையாளி உச்சநீதிமன்றம் சென்றபோது ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், கொலை செய்யப்பட்ட அந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த புண்ணியவான் லால்கிஷண் அத்வானி.


தான் பொறுப்பு வாய்ந்த ஓர் உள்துறை அமைச்சர் என்பதைக் கூடப் புறந்தள்ளிவிட்டு, தான் ஒரு இந்துமத ஆர்.எஸ்.எஸ். வெறியர் என்ற உணர்வோடு என்ன சொன்னார் தெரியுமா?

பஜ்ரங்தள்காரர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இதுபோன்ற காரியங்களைக் செய்திருக்க மாட் டார்கள் - என்றாரே - என்னே கொடுமை!


இவர் நற்சான்று கொடுத்த கும்பலின் தலைவனுக்கு நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறதே - அத்வானி இதற்காக நாணிக் குறுக வேண்டாமா? மக்கள் மத்தியில் தான் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்புக் கோர வேண்டாமா?

ஸ்டெயின்ஸ் பாதிரியார் பரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டபோது பஜ்ரங்தள் என்ற அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சுரேந்திர ஜெயின் என்பவர் என்ன கூறினார் தெரியுமா?

இந்துக்களை அழிக்க நினைப்பவர்கள் எங்களை நினைத்துக் கதி கலங்க வேண்டும். அவர்கள் எங்களை நினைத்துப் பீதி அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசாங்கமே எங்களைப் பார்த்துப் பயப்படுகிறது என்றாரே! தாராசிங்குக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள் ளதே - இதனைப் பார்த்தாவது அவர்களுக்கு நல்ல புத்தி ஏற்படுமா?

இப்பொழுது ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட இதே தாராசிங் கும்பல்தான் அதே ஒரிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், தாகூர் முண்டா பகுதியில் 1999ஆகஸ்ட் 29ஆம் தேதி (ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொல்லப்பட்டதற்கு ஏழு மாதங்களுக்குப் பிறகு) ஷேக் ரகுமான் என்ற 32 வயதுடைய ஆயத்த ஆடை (ரெடிமேடு) வியாபாரம் செய்து கொண்டிருந்த முசுலிம் இளைஞனை பட்டப் பகலில் பயங்கரமான முறையில் சித்திரவதை செய்து கொன்றனர்.

முதலில் கைகளை வெட்டினார்கள். அவ்விளைஞன் துடிக்கத் துடிக்கக் கதறியபோது தீ வைத்துக் கொளுத்தினார்கள் என்றால், அதனை - 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது படித்தாலும், நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறதே!

ஷேக் ரகுமான் என்ற இந்த முசுலிம் இளைஞன் இப்படிக் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டபோதுகூட, அதே உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?

கொலையாளிகளை ஒரிசா மாநில காங்கிரஸ் அரசு இதுவரை கைது செய்யவில்லை. அது அம்மாநிலத்தில் சட்ட -ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. ஒரிசா மாநில முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார்.

எவ்வளவு தகிடுதத்தம் - பித்தலாட்டம்! படுகொலைக் குக் காரணம் தமது அமைப்பைச் சார்ந்தவர்கள் என்கிறபோது அந்தப் பிரச்சினைக்குள் போகாமல் அதிலும் அரசியல் செய்வது எத்தகைய அநாகரிகம்?

1999இல் படுகொலைகள் செய்யப்பட்டும் இறுதித் தீர்ப்பு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது என்றால் - நிருவாகம், நீதிமன்றத்தின் இத்தகைய கால தாமதத்தால் ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து இதே திசையில் ஏராளமான மதவெறியாட்டங்கள் திட்டமிட்டு நடத்தப் பட்டன. அம்மாநிலத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தில் 1,25,000 தொண்டர்களும், 1,50,000 ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், 50 ஆயிரம் பஜ்ரங்தள்காரர்களும் இருக்கிறார்கள் என்றால், இந்தக் கேடு கெட்ட வளர்ச்சிக்குக் காரணம் - குற்றவாளிகளுக்கு உரிய காலத்தில் தண்டனை அளிக்கப்படாததே!

2007இல் அம்மாநிலத்தில் எந்த அளவுக்குக் கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறை திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டது.

இதேபோல 1992இல் டிசம்பர் 6இல் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான கும்பல்மீது இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதன் விளைவுதான் நாட்டில் அன்றாடம் நடக்கும் வன்முறைத் தாண்டவங்களும், குற்றுயிர் குலை உயிருமான படுகொலைகளும்.


பாபர் மசூதி இடிப்புக்கு முன் இந்தியா - அதற்குப்பின் இந்தியா என்று கோடு போட்டுப் பார்க்க வேண்டிய அவலம் அல்லவா நாட்டில் தலை தூக்கி நிற்கிறது?

ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களாக!

--------------- "விடுதலை” தலையங்கம் 29-1-2011

29.1.11

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் வீரமணி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர்

திரும்பிப் பாருங்கள், இளைஞர்களே!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம்- அண்ணா இருக்கை சார்பில் ஏ.சி.தொழில்நுட்பக் கல்லூரி மொழிக்காப்பு நூலையொட்டி நடத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் 102ஆம் ஆண்டு நினைவுப் பொழிவாக தமிழர் தலைவர் கி.வீரமணி தமிழக வரலாற்றில் அண்ணா-கலைஞர் என்னும் தலைப்பில் உரையாற்றினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் தலைமை தாங்க, பேராசிரியர் பா.உதயகுமார் வரவேற்புரையாற்றினார் 25.1.2011


மொழி காப்பு நாளையொட்டி (சனவரி 25) தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழத்தில் அண்ணா இருக்கை சார்பில் அண்ணாவின் 102ஆம் ஆண்டு நினைவுப் பொழிவு, பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கல்யாணி அன்புச்செல்வன் தலைமையில் 25.1.2011 அன்று காலை 9 மணிக்கு ஏ.சி. தொழில்நுட்பக் கல்லூரி இராமன் அரங்கில் நடைபெற்றது. அண்ணா இருக்கை பேராசிரியர் முனைவர் பா.உதயகுமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

அவர்தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

இது திராவிட இயக்க உணர்வுள்ள பல்கலைக் கழகம் என்றார். பொதுவாக நம் மக்களுக்குத் திரும்பிப் பார்க்கும் உணர்வு கிடையாது. அப்படித் திரும்பிப் பார்த்தால்தான் யாரால் நாம் இந்த அளவு கல்வி பெற்றோம். பதவி பெற்றோம் என்ற உண்மை தெரியும். 40, 50 வயதினைக் கடந்தவர்களுக்கு அப்படி திரும்பிப் பார்க்கும் உணர்வு இல்லை.

வீரமணி என்றால் தி.க. என்று தெரிந்து வைத்திருப்பார்கள். அந்தத் தலைவர் எதற்காகப் பாடுபட்டார் எவற்றையெல்லாம் சாதித்தார்-எத்தனை எத்தனைப் போராட்டங்களை நடத்தினார், சிறை சென்றார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார். இந்தி யாரால் திணிக்கப்பட்டது? அது எப்படி முறியடிக்கப்பட்டது என்பதை குறித்தெல்லாம் பேராசிரியர் உதயகுமார் தம் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

தலைமை வகித்த துணைவேந்தர் முனைவர் பேராசிரியர் கல்யாணி அன்புச்செல்வன் உரையாற்றியதைத் தொடர்ந்து,

தமிழக வரலாற்றில் அண்ணாவும் கலைஞரும் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கருத்துரை வழங்கினார்.

இந்தத் திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் இரண்டரை லட்சம் பேர் படிக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எல்லோருக்கும் கல்வி நீரோடை பாய வேண்டும் என்பது தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்து. திறந்த வெளிப் பல்கலைக் கழகம் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்வது பாராட்டத்தக்கது.

அண்மையில் வெளிவந்த ஓர் ஆணை என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் படித்துப்பட்டம் பெற்றவர்கள், பட்டம் பெற்றாலும் அரசு பணிகளுக்குச் செல்லமுடியாத ஒரு நிலையைத் தோற்றுவிக்கிறது. (திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தேர்வு எழுதி பட்டம் பெறலாம் என்ற நிலையை அரசு உருவாக்கியபின் அவர்கள் அரசுப் பணிகளில் சேரமுடியாது என்பது எந்த வகையில் நியாயம்?)

அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் அவர்கள் வெற்றி பெற்று, நேர்முகத் தேர்வுக்குச்செல்லும் நிலையில், அவர்களுக்கு அந்தத் தகுதி கிடையாது என்று சொன்னால், அது எப்படி என்ற வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர்.

அதே நேரத்தில் கருநாடக மாநிலத்தில் இந்தப் பட்டம் செல்லும் என்ற நிலை இருக்கிறது. இதுபற்றி அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார் கழகத் தலைவர்.

திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் பெரும்பாலும் படித்துப் பட்டம் பெறுவோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களுக்கு உள்ள உரிமைகளை மறுப்பது சமூகநீதிக் கண்ணோட்டத்திலும் தவறுதானே!

(ஒவ்வொருநாளும் திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் நேரில் வந்து பதிவாளரைச் சந்தித்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாட்டினைக் கூறிக் கண்ணீர் சிந்துவதாக திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் பதிவாளரும் கூறினார்)

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நம்நாட்டில் கல்விவாய்ப்பு வளர்ந்த வரலாற்றை விரிவாக எடுத்துக்கூறினார்.

சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் மனுதர்மம். திராவிடர் இயக்கம், நீதிக்கட்சி தான் அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி கிடைப்பதற்கான வாய்ப்பைத் திறந்துவிட்டது என்று அவர் கூறினார். இந்த வரலாறு இன்று படித்து உயர்நிலை பெற்று இருக்கும் நம் மக்களுக்குத் தெரியாது என்ற கசப்பான உண்மையையும் அவர் வெளியிடத் தயங்க வில்லை.

அவர் கூறியதன் பின்புலத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.

1916ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி அதன் முதல் கொள்கையாகக் குறிப்பிட்டது என்ன தெரியுமா?

தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர் அல்லாத சமுதாயங்கள் ஒவ்வொன்றும் கல்வி, சமூகவியல், பொருளியியல், அரசியல், அறவாழ்வு ஆகிய துறைகளில் முன்னேற்றமடைச் செய்தல் என்பதைத்தான் முதற் கொள்கையாக அறிவித்தது.

வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் (1916 டிசம்பர் 16) கூட கல்வியின் இன்றியமையாமையை வலி யுறுத்தியுள்ளார்.

விழிப்படைந்த பிராமணர் அல்லாதார்கள் விரைந்து செயலாற்ற முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அவர்களுடைய பிற்காலம் அவர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் செய்யவேண்டிய காரியம் மிகப்பெரிது. அத்துடன் மிக அவசரமானது மாகும். முதல் வேலையாக சிறுவர், சிறுமிகளை இன்னும் அதிகமான அளவில் நாம் படிக்க வைக்கவேண்டும். பல இடங்களில் சங்கங்களை தோற்றுவித்து, பார்ப்பனர் அல்லாதாருக்கு எந்தெந்த சலுகைகள் உண்டு என்பதை எடுத்துக்கூறி, அதிகமானவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும். நிதி திரட்டி ஏழைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.

கல்வித் துறையில் நாம் முன்னேற கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். அதனால் இப்பொழுது நாம் அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று பார்ப்பனர் அல்லா தார் கொள்கை அறிக்கையில் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் குறிப்பிட்டதை நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் வாய் வார்த்தைகளோடு, அறிவிப்புகளோடு நீதிக்கட்சி நின்று விடவில்லை.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பஞ்சமர்கள் என்று ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை சேர்க்க முனையப்பட்டது. அப்பொழுது பார்ப்பன ஏடான இந்துநேசன் (18.1.1918) என்ற ஏடு என்ன எழுதியது தெரியுமா? தாழ்த்தப்பட்டவர் குழந்தைகளுக்கு தனிப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட வேண்டும். மற்ற ஜாதியாரோடு படிக்க அனுமதிக்கக் கூடாது என்று எழுதியது என்றால் அந்தக் கால நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் வெட்கம் சிறிதும் இன்றி அன்னிபெசண்ட் பெயரால் பெசண்ட் நகரங்களைத் தோற்றுவித்துள்ளார்களே- அந்த அயர்லாந்து அம்மையார் அன்னிபெசண்ட் பார்ப்பனர்களின் சுவீகாரப் புத்திரியாக இருந்து என்ன சொன்னார் தெரியுமா?

பஞ்சமர்கள் படிப்பில் தாம் செய்த தீவினைகளை இப்பிறப்பில் அனுபவிக்கிறார்கள். உயர்ஜாதி பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப்பிள்ளைகள் பொதுக்கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும் என்றெல்லாம் குறிப்பிட்டார்.

இந்த எதிர்ப்புகளையெல்லாம் புறந்தள்ளி நீதிக்கட்சி சூத்திர பஞ்சம மக்களின் கல்விக்காகப் பாடுபட்டது; பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் பள்ளிகளுக்கு வர ஒரு உந்துதலை ஏற்படுத்தினார்.

பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவ-மாணவிகளைச் சேர்க்காவிட்டால் அப்பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப் படும், இழுத்து மூடப்படும் என்று ஆணைப்பிறப்பித்தவர் தாலுகா போர்டு தலைவராக இருந்த சிவகங்கை இராமச்சந்திரனார்.


ஆதிதிராவிடர் சமுதாயமக்கள் கல்வியில் மேலே வர வேண்டும் என்பதற்கு நீதிக்கட்சி பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல-ஆக்க ரீதியாக அவர்களின் செயல்பாடுகளில் இதோ ஒன்றிரண்டு.

தாழ்த்தப்பட்டோரின் கல்விக் கண்ணைத் திறந்த நீதிக்கட்சி!


கல்வித்துறையில் ஆண்டாண்டுகாலமாய் ஒடுக்கப் பட்டு தற்குறிகளாக்கப்பட்டு கீழ் நிலையில் வைக்கப்பட்ட அச்சமுதாயத்தினருக்கு கல்விக் கண்ணைத் திறப்பது மிகவும் அவசியம் என்று கருதி, அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கியது நீதிக்கட்சி.

ஆதிதிராவிட ஆண்கள், பெண்களுக்கு எல்லாம் கல்வி கற்பிக்கவென்றே தொழிலாளர் நலத்துறை மூலம் பல பள்ளிகளை ஏற்பாடு செய்து, அவர்களைப் படிக்கும்படித் தூண்டியது. சுமார் 1000 பள்ளிகளுக்கு மேற்பட்டு இப்படி துவக்கப் பெற்று நடந்து வந்தன.

தொழிலாளர் நலத்துறை அல்லாது, தனியார்கள் நடத்தி வந்த பல பள்ளிகளுக்கும்கூட, மான்ய உதவி கொடுத்து ஆதிராவிட மாணவ, மாணவிகளை மற்றவர்களுடன் சேர்த்து படிக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆணைகள் போடப்பட்டன.

உள்ளாட்சித் துறையினாலோ, தனியார் நிறுவனங் களாலோ நடத்தப்பட்டு வந்த எந்தக் கல்விக் கூடம், ஆதிராவிடர் மாணவ, மாணவிகளைச் சேர்க்க மறுத்தாலும் அவைகளுக்கு மான்ய உதவி உடனே நிறுத்தப்படும் என்று கூறி, மான்யம் பெறுவதற்கே இதை ஒரு முன் நிபந்தனை, நடைமுறை நிபந்தனையாக ஆக்கி, மற்ற சாதியினருடன் இப்பிள்ளைகளும் இணைந்து சமமாக அமர்ந்து படிக்கச் செய்தனர். அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 1936இல் 9614 என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

புத்தகங்கள் வாங்குவதற்கும், உடைகள் வாங்குவதற்கும், அப்பிள்ளைகளுக்கு தொழிலாளர் நலத்துறை மூலம் மான்ய உதவி தரப்பட்டது. துவக்கத்தில் தனியார் பள்ளிகளில் சேர்ந்தவர்களுக்கு அரைச் சம்பளம் கட்ட வேண்டும் என்று இருந்த விதியும்கூட மாற்றப்பட்டு, முழுச் சம்பளமும் அரசே அவர்களுக்கு கட்டிவிட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு செல்லும் ஆதிதிராவிட மாணவன் தேர்வுக்கென்று கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. தேர்வு எழுதினால் போதும் என்றும் ஆணைகளை நீதிக்கட்சி ஆட்சி போட்டு, அவர்களை ஊக்கப்படுத்தியது!

இதோடு, உதவித்தொகைகள்-ஸ்காலர்ஷிப்பு களையும்- அம்மாணவர்களுக்கு தாராளமாக, ஏராளமாக அளிக்க முன் வந்தது!

கல்லூரியில் சேர்ந்து படிக்க முன்வரும் அம்மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்புகள் வழங்கும் திட்டமும் ஏற்படுத்தப்பட்டது. சில படிப்புகளுக்கு ஸ்டைபென்டுகள் படிப்பதற்கு ஆகும் செலவுத் தொகையில் பெரும் பகுதி அவர்களுக்குத் தருவது என்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர்களில் ஆசிரியர்களாக வர விரும்புகிறவர்கள் பயிற்சி பெறுவதற்கு இந்த ஸ்டைபென்ட் திட்டம் மூலம் வாய்ப்பு அதிகம் ஏற்பட்டது.

ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு வசதியாக விடுதிகள் ஏற்படுத்தத் திட்டமிட்டு 1936இல் 5 விடுதிகள் துவக்கப்பட்டு அவைகளில் மாணவர்கள் சேர்ந்து படித்தனர்.

1920 முதல் 1936 வரை தொடர்ந்து இப்படிப் பல அமைதிப்புரட்சியினை கல்வித்துறையிலும், ஏனைய துறைகளிலும் நீதிக்கட்சி செய்யத் தவறியதே இல்லை.


52 லட்ச ரூபாய்களை 1935-லேயே தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் கல்விக்கு மட்டுமே ஒதுக்கியது. அன்றைய நிலையில் இது மிகப்பெரும் ஒதுக்கீடு என்பதை எவர்தான் மறுக்க முடியும்?

(நீதிக்கட்சி பவள விழா மலரில் (1992) திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து)

வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வந்து தங்கிப் படிக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதிகள் கிடையாது. பார்ப்பனர் உணவு விடுதிகளில் எடுப்பு சாப்பாடு எடுத்துவர இவர்களுக்கு உரிமை உண்டே தவிர தங்கி சாப்பிட முடியாது.

சென்னை நகர உணவு விடுதிகளில் பஞ்சமர்களும், நாய்களும், பெரு நோய்க்காரர்களும் நுழையக்கூடாது என்று அறிவிப்புப் போடப்பட்டிருந்தது. (குடிஅரசு 5.3.1936) என்றால், அந்தக்கால நிலையினைத் தெரிந்துகொண்டு விடலாமே!

1912இல் டாக்டர் சி.நடேசனார் வெளியூர்களிலிருந்து சென்னையில் படிக்க வரும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி ஒன்றினை ஏற்படுத்தினார் என்றால் அது சாதாரணமானதல்ல.

பிற்காலத்தில் மாவட்ட நீதிபதியாக வந்த சிவ சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள் அந்த விடுதியில் தங்கிப் படித்த மாணவர்கள் என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த முட்டுக்கட்டையை உடைத்தெறிந்தது நீதிக்கட்சி ஆட்சிதான்-பிரதம அமைச்சர் பனகல் அரசர்தான் என்பது எத்தனை டாக்டர்களுக்கு இன்று தெரியும்?

சிறப்புக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழர் தலைவர் அவர்கள் பேராசிரியர் க.ப அறவாணன் எழுதிய ஒரு நூலிலிருந்து ஒரு தகவலை எடுத்துக்காட்டினார்.

1918 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கல்வி கற்றோர் நிலை என்றும் ஒரு சதவிகிதம் தான் என்று குறிப்பிட்டார்.

1918ஆம் ஆண்டில் நம் மக்களின் கல்வி நிலை என்ன இதோ ஓர் எடுத்துக்காட்டு.

நூற்றுக்கு மூவர்களான பார்ப்பனர் அதிகமாக கல்வித்துறையில் எப்படி இருந்தனர் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.

1610இல் மதுரையில் படித்த 10,000 மாணவர்களும் பார்ப்பனர்கள் என்று ராபர்டி நொபிலி கூறுகிறார்.

2009 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் (எம்.பி.பி.எஸ்) திறந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்-தந்தை பெரியார் மற்றும் திராவிடர் இயக்கத்தின் உழைப்புக்கான வெற்றி முரசாகும். பச்சைத்தமிழர் காமராசரின் செயல்பாட்டுக்கான பட்டயம் ஆகும்.

திறந்த போட்டியில் மொத்த இடங்கள் 460

பிற்படுத்தப்பட்டோர் 300

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72

தாழ்த்தப்பட்டோர் 18

முசுலிம்கள் 16

உயர்ஜாதியினர் 54

சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் க.திருவாசகம் அவர்கள் சென்னை-பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழாவில் (20.11.2010) பேசுகையில் தந்த புள்ளிவிவரம் நம்மை ஆனந்த வானில் பறக்கச் செய்கிறது.


சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உள்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவ, மாணவிகள் 1,45,450-சதவிகித கணக்கில் 89 விழுக்காடாகும்.

நடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் என்று தமிழர் தலைவர் கூறியதற்கான பொருள் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே! 69 சதவிகிதம் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்பதற்கு திராவிடர் கழகம் அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் உழைத்த உழைப்பின் அறுவடையல்லவா இது.

சந்தாக்கள் அளிப்பு


பல்கலைக் கழகத்திற்கு இயக்க ஏடுகளைப் பெறுவதற்காக மூன்று ஆண்டுக்கு விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு ஆகியவற்றிக்கான தொகையை காசோலையாக பல்கலைக் கழகத் துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் அவர்கள் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பலத்த கர ஒலிக்கிடையே அளித்தார்.

--------------வளரும் “விடுதலை” 27-1-2011


சூத்திரர்களுக்கும் கீழ் பெண்கள்!பஞ்சமர்கள் பிறப்புப் பற்றியும் சாஸ்திரக் குறிப்பு கிடையாது. இது பற்றி தந்தை பெரியாரிடம் பொதுக்கூட்டம் ஒன்றில் அப்படியானால் பஞ்சமர்கள் எங்கு பிறந்தார்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது அதற்குத் தந்தை பெரியார் பளிச்சென்று பதில் கூறினார்.

அவர்கள்தான் முறைப்படி அவரவர் அப்பா அம்மாவுக்கு பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தார்கள் என்று கூறினார்.

பெண்கள் ஏன் இந்து மதத்தில் வருண தர்மத்துக்குள் கொண்டு வரப்படவில்லை-பெண்கள் ஏன் அவர்கள் கண்ணோட்டத்தில் புறக்கணிக்கப்பட்டனர்? என்ற வினாவுக்கு வரலாற்று ஆய்வில் திராவிடர் கழகத் தலைவர் ஒரு கருத்தினைக் கூறினார்.

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தியாவுக்குள் கைபர், போலன் கணவாய்கள் வழியாக வந்தார்கள். அப்பொழுது பெண்களை அழைத்துக்கொண்டு வரவில்லை. நாளடைவில் இங்கு வாழ்ந்த பெண்களோடு தொடர்பு கொண்டார்கள்.

பெண்களைப் பொறுத்தவரை இன்பம் அனுபவிப்புக்கான ஒரு பொருளாகக் கொண்டார்களே தவிர, அவர்களும் மானுடத்தின் ஒரு கூறு என்று நினைக்க வில்லை என்று குறிப்பிட்டார்.

அது எந்த அளவு உண்மை என்பதையும் பார்ப்பனார் களால் எழுதி வைக்கப்பட்ட சான்றுகளிலிருந்து தெளிவாகவே புரிந்துகொள்ளலாம்.

குறிப்பாக மனுதர்மம் என்ன கூறுகிறது?

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல். ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது (மனுதர்மம்-அத்தியாயம் 5, சுலோகம் 148)

பெண்களையும், பிராமணர் அல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது (மனு- அத்தியாயம் 11, சுலோகம் 65)

கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீ லோலனயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதைகளான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது (மனு- அத்தியாயம் 5 சுலோகம் 154)

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (மனுதர்மம்-அத்தியாயம் 9, சுலோகம் 17)

பூணூல் தரித்த பிறகு பார்ப்பனர்கள் துவிஜாதி (இருபிறப்பாளர்) ஆகிறார்கள். அந்த வாய்ப்பும் உரிமையும் கூட ஆண்களுக்கே தவிர பெண்களுக்குக் கிடையாது. பெண்களுக்கு உப நயனமான பூணூல் தரிப்புக் கிடையாது. அதனாலே பெண்கள் கீழ் ஜாதியாகக் கருத்தப்பட்டனர்.

இராமாயணத்தில் கூட சீதைதான் தீக்குளிக்கச் செய்யப்படுகிறாள். சீதையைப் பிரிந்து இராமன் ஒழுக்கவானாக இருந்தானா என்ற கேள்வி எங்கும் எழுப்பப்படவில்லையே- அந்தக் கேள்வியை எழுப்பும் உரிமை பெண்ணாகிய சீதைக்கு இருந்திருக்குமேயானால் இராமனையும் தீக்குண்டம் இறங்கச் சொல்லியிருப்பாரே!

இந்தக் கேள்வியை தந்தை பெரியார் எழுப்பியதுண்டு. வளர்ச்சி, விழிப்புணர்வு தலை தூக்கியதாகக் கூறப்படும். இந்தக்காலகட்டத்திலும்கூடஆண்-பெண்களுக் கிடையான ஏற்றத்தாழ்வு ஏதோ ஒரு வகையில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நீண்ட காலமாக சமூக அமைப்பில் பெண்களை அடிமைப்படுத்தி வந்த நிலையின் பாதிப்பேதான்!

ஆனால், பேச்சில் மட்டும் மொழியைத் தாய்மொழி என்பார்கள். பூமியைப் பூமாதேவி என்பார்கள். கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று கூறுவார்கள். ஆண்டுதோறும் சரஸ்வதி பூசை கொண்டாடுவார்கள்.

திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான் சுருக்கென்று தைப்பது போல ஒரு கேள்வியைக் கேட்டார்.

சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோமே-ஆண்டு தோறும். சரஸ்வதி என்ற பெயருடைய நம் பாட்டிக்கு சரஸ்வதி என்று கையொப்பம் போடத் தெரியுமா? என்ற வினாவை எழுப்பிய போது பார்வையாளர்கள் பகுதியே அதிர்ந்தது! சிரிப்பொலியும் கையொலியும் போட்டிப் போட்டன!

ஆண் ஆதிக்கமனப் பான்மை இன்று முற்றாக விலகிவிடவில்லை. இல்லா விட்டால் நாடாளுமன்றத் திலும், சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் 1996 முதல் நிலுவையில் இருக்குமா?

இன்றைக்குக் கூட விதவைப் பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பானவர்கள் என்று கூறுகிறவர்கள் ஜெகத் குருக்களாக இருக்கிறார்களே- வேலைக்கு போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர் கள் என்று கூறும் சங்கராச்சாரியார்கள் நடமாடுவது எப்படி?

மனுவின் மிச்ச சொச்சங்களாக சோ.ராமசாமி போன்றவர்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

ஓர் எடுத்துக்காட்டு:

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்பிராயம்தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள் (துக்ளக் 18.3.2009)

பெண்களை பார்ப்பனர்கள்-இந்து மத சனாதனிகள் பார்க்கும் பார்வை, போடும் எடை இதுதான்.

தந்தை பெரியார் அவர்கள்தான் தன்மான இயக்கத்தின் கொள்கைகளில் பெண்ணுரிமைக்கு முக்கிய இடம் கொடுத்தார். 1929 செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி தமிழர் தலைவர் எடுத்துக்கூறினார்.

பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் 1989 இல் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகுதான் நாடாளுமன்றத்தில் இந்தியா முழுமைக்குமான சட்டம் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் ஏன் விலக நேரிட்டது? இந்து சீர்திருத்த சட்டம்- பெண்களுக்குச் சொத்துரிமை தொடர்பான பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுதானே! பதவி பெரிதல்ல கொள்கை பெரிதென வெளியேறினார்.

1928ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டிலேயே ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாட்டிலும் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தச் செங்கற்பட்டு மாநாட்டில், பெண்கள் உரிமைகளுக்கான முக்கியத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

11 ஆவது தீர்மானம்:

பெண்களின் கலியாண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டும் என்றும், மனைவி, புருஷன் இருவரில் ஒருவருக்கொருவர் ஒத்து வாழ இஷ்ட மில்லாதபோது, தம்முடைய கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ள உரிமையிருக்க வேண்டுமென்றும், விதவைகள் மறு விவாகம் செய்து கொள்வதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும், கலியாணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் ஜாதி, பேதமின்றித் தங்கள் தங்கள் மனைவி புருஷர்களைத் தேர்ந் தெடுத்துக்கொள்ள பூரண உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கேற்றவாறு கல்யாணச் சடங்குகள். திருத்தப்பட வேண்டும் என்றும், கல்யாணம் முதலிய சடங்குகள் சொற்ப பணச் செலவில் நடத்தப்பட வேண்டும் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு நாளைக்கு மேலாவது, ஒரு விருந்துக்கு மேலாவது நடத்தக்கூடாதுதென்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்-13:

பள்ளிக்குப் போகத்தக்க சிறுமிகளுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி மாத்திரம் பொது நிதிகளிலிருந்து போதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் எண்-25:

பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நிமியக்கப்படுவதற்கு தக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், ஆரம்பக் கல்வி கற்றுக்கொடுக்கும் உபாத்தியாயர் வேலைக்குப் பெண்களையே நியமிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இதுபோன்ற தீர்மானங்கள் 80 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்களால் நிறை வேற்றப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன. அவை பிற்காலத்தில் அரசுகளால் சட்டங்களாகவும் ஆக்கப்பட்டு பெண்கள் இப்போது அனுபவித்தும் வருகின்றனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களுக்கு வாய்ப்புக்கொடுத்தால் அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள்-நிரூபித்தும் வருகிறார்கள் என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், அதற்கு எடுத்துக் காட்டாக இங்கே நம் துணைவேந்தர் இங்கே இருக்கிறார் என்று அவர் சொன்னபொழுது பலத்த கரஒலி!

------------------வளரும் “விடுதலை”28-1-2011
தி.மு.க. வெறும் அரசியல் கட்சியல்ல!

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் (3)

தமிழக வரலாற்றில் அண்ணாவும் கலைஞரும் எனும் தலைப்பில் தமிழர் தலைவர் உரையாற்றியபோது- தி.மு.க.வுக்கு உள்ள தனித்தன்மை என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

திராவிடர் கழகத்தைவிட்டு தி.மு.க. பிரிந்த போது கூட இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்-என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்.

அதற்குக் காரணம் என்ன? திராவிடர் கழகத்தின் சமுதாயக் கொள்கைகளிலிருந்து தி.மு.க. எந்த நிலையிலும் விலகிவிடாது என்பதற்கான உத்தரவாதம் அது.
ஆட்சிக் கட்டிலில் அண்ணா அமர்ந்து ஆட்சி செய்தது குறுகிய காலமே என்றாலும், அந்தக் குறுகிய காலகட்டத்தில் அவர் செய்த மூன்று சாதனைகள்- தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னாரே-அதனை நிரூபிக்கக் கூடியவைகளாக அமைந்துவிட்டன.

அந்த மூன்று சாதனைகள் என்ன? பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் விளக்கினார்.

1. சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்ட பூர்வமான அங்கீகாரம்.
(இதற்கு முன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் செல்லுபடியாகும். (RETROSPECTIVE EFFECT)

2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்.

3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடம்இல்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே!


அண்ணாவின் இந்த ஆட்சியின் சாதனைகள்- காலத்தை வென்று கல்வெட்டாக நிமிர்ந்து நிற்கக் கூடியவை. வெறும் அரசியல்வாதியாக அண்ணா இருந்திருந்தால் இந்தச் சிந்தனை வந்திருக்க முடியாது. அதற்கு முன் ஆண்டவர்களுக்கு இந்தச் சிந்தனை வரவில்லையே!


இந்தச் சாதனைகள் எத்தகையவை என்பதை அண்ணாவின் வாயால் கேட்பதுதான் சுவை ததும்பக் கூடியதாகும்.


என் ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதால் அதனைச் செய்துவிடலாம்.


அதே நேரத்தில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் செய்த இந்த மூன்று சாதனைகளின் மீது கைவைத்திட எந்தக் கட்சி ஆட்சியினருக்கும் துணிவுண்டா? கை வைத்தால் என்ன ஆகும்? என்ற அச்சம் அவர்களை உலுக்கும். அந்த அச்சம் இருக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டு கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம் என்று சொன்னாரே-இது உண்மைதானே!
அதே நிலையில் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் ஆட்சி சாதனைகளைக் காண முடியும்-

(1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

(2) தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம்

(3) தமிழ் செம்மொழி அங்கீகாரம்

(4) நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

(5) சிதம்பரம் கோயில் தீட்சிதர் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டு, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்தது. (அதற்கு முந்தைய ஆட்சிகளில் எவ்வளவோ முயன்றும் சாதிக்க முடியாத நிலை இருந்தது)

(6) வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளால் உண்டாக்கப்பட்ட சத்திய ஞான சபையில் ஜோதி வழிபாடு என்ற நெறிமுறைக்கு முரணாக, உருவ வழிபாட்டினைத் திணித்து ஆட்டம் போட்ட ஆரியத்தை வெளியேற்றிய சாதனை!

(7) பெண்களுக்குச் சொத்துரிமை-இவையெல்லாம் அசாதாரண சாதனைச் சிகரங்கள் அல்லவா!


சாலை போடுவதும், பாலம் கட்டுவதும் எந்த ஆட்சியிலும் செய்யக் கூடியவைதான். ஆனால் சமூக மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பார்வையில், திராவிடர் இயக்க சிந்தனையின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்தச் சாதனைகள்தானே காலத்தின் உச்சியில் கதிரவனின் ஒளியாக மின்னிக்கொண்டிருக்கும்!


இது பெரியார் அவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்ட அரசு என்று அண்ணா அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிரகடனப்படுத்தினார் என்றால்,
இது சூத்திரர்களின் அரசு என்று கலைஞர் அவர்கள் சட்டப்பேரவையில் சூளுரைத்தாரே!

தி.மு.க.வினர் பகுத்தறிவுக் கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்-பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அண்மைக்காலமாகக் கூடுதல் கவனத்துடன் அழுத்தமாகச் சொல்லி வருகிறார்.

டில்லி-பெரியார் மய்யம் திறப்பு விழாவில் வாஸ்து பார்ப்பது கோவிலுக்குச் செல்லுவதையெல்லாம் தி.மு.கவினர் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரையாக அல்ல; கட்டளையாகச் சொல்லுகிறேன் என்றாரே!

எந்த இடத்திலும், நிலையிலும் தந்தை பெரியார் அவர்களைச் சுட்டிக் காட்ட வேண்டிய இடத்தில் மறவாமல் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுவதைத் தன் கடமையாகக் கொண்டிருக்கிறார் மானமிகு கலைஞர் அவர்கள்.

சென்னையில் கலைவாணர் அரங்கில் ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, கொட்டங்கச்சி ஏந்தல், நாட்டார்மங்கலம் போன்ற ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்டோர் தேர்தலில் நிற்க முடியாத ஒரு தீண்டாமை தலைவிரித்தாடியது.

5 ஆம் முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சிப் பீடம் ஏறிய நிலையில், அந்தஊராட்சிகளில் எல்லாம் தேர்தலை நடத்தி, தந்தை பெரியாரின் தலைசிறந்த மாணாக்கர் என்பதை நிரூபித்துக்காட்டினார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்களுக்குப் பாராட்டு விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. (13.11.2006) அந்த விழாவில் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் ஒன்றைக் குறிப்பிட்டார்:

நாங்கள் அழகாக எழுதி, அண்ணாவைப் போல் எழுத முயற்சித்து, அண்ணாவைப் போல எழுதிப் பார்த்து புரட்சிக்கவிஞர் போல் எழுத வேண்டுமென்று முயற்சித்து அதைப் போல கவிதைகளை எழுதி, எவ்வளவு எழுதினாலும், அத்துணையும் தந்தை பெரியார் அவர்களுடைய அந்தச் கொச்சைத் தமிழுக்கு முன்னால் என்றைக்கும் நின்றதில்லை. (கைதட்டல்). அந்தக் கொச்சைத் தமிழ்தான் இன்றைய ஜாதி ஒழிப்புக்கு, மதமாச்சரியங்களால் ஏற்படுகின்ற மடமைகளைக் கொளுத்துவதற்குப் பயன்பட்டிருக்கிறது -என்று எவ்வளவு அழகாக, மிக உண்மையான கருத்தொன்றைப் பதிவு செய்திருக்கிறார் மானமிகு கலைஞர்.

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஓர் அரசியல் கட்சிக்காவது தி.மு.க.வைப் போல சமுதாயக் கொள்கைகள் உண்டா என்று சவால் விட்டுக் கேட்க முடியும்.

அரசியலுக்கு வந்த காரணத்தால் சமுதாயத்தில் புரட்சியையும், நாம் மறந்துவிடவில்லை. ஆனால் இப்பொழுது ஏற்படுகின்ற புதிய கட்சிகளைப் பாருங்கள். திராவிட என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு, பெயரை வைத்தாலுங்கூட, சமுதாயத்தைப் பற்றிப் பேசப் பயப்படுவார்கள்; கடவுளின் பெயரால் நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க அஞ்சுவார்கள். ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற சதிச்செயல்களை எல்லாம் வீழ்த்த வேண்டுமென்று சொல்கிற தைரியமும், அந்த அஞ்சாமையும், அந்தத் துணிவும் எந்தத் திராவிடர் இயக்கத்திற்கு ஏற்படுமென்றால், திராவிடர் கழகத்திற்கு நிகராக-அடுத்தபடியாக அந்த உணர்வு ஏற்படக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை மறந்துவிடக்கூடாது என்றாரே! (முரசொலி 15.9.2006)

இந்தத் தனித்தன்மையைத் தான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், வேறு எந்த ஆட்சியும் பாலம் கட்டலாம், சாலைகள் போடலாம்; ஆனால் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி சாதித்துள்ள சமுதாய ரீதியான சாதனைகளை வேறு யாரால் செய்ய முடியும்? என்ற கேள்வி மூலம் உறுதிப்படுத்தினார்.

தனக்குப் பின்னர் தி.மு.க.வின் பகுதியை தம்பி கருணாநிதி எழுதி முடிப்பார் என்று அண்ணா அவர்கள் மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் கூறியதை மிகவும் பொருத்தமாகக் கையாண்டார் கழகத் தலைவர்.

அது எந்த அளவுக்குத் துல்லியமானது என்பதை நாடு கண்டுகொண்டுதான் இருக்கிறது.


அறிஞர் அண்ணா, கலைஞர் இருவருக்கும் இடையே உள்ள நகைச்சுவை உணர்வுகளை பல நிகழ்வுகளின் மூலம் எடுத்துக்காட்டினார்.

பேருந்துகளில்,

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
சொல் இழுக்குப் பட்டு


என்ற திருக்குறள் எழுதப்பட்டு இருந்தது பற்றி சட்டப்பேரவையில் ஓர் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இக்குறள் யாருக்காக எழுதப்பட்டுள்ளது? என்பது அவரின் கேள்வி.


முதல் அமைச்சர் அண்ணா என்ன பதில் சொன்னார்?


யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ அவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது என்றார்.


கேள்வி கேட்டவரே விழுந்து விழுந்து சிரித்தார்.


புளி விலை குறைந்தது யாருடைய சாதனை? என்பது கேள்வி. புளியமரத்தின் சாதனை! என்பது அண்ணாவின் பதில்.


இதே போல முதல்வர் கலைஞர் அவர்களின் பல பதில்களும் உள்ளன.


நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அசையும் சொத்து எவ்வளவு? அசையாச் சொத்து எவ்வளவு? என்று சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குக் கலைஞர் கம்ப்யூட்டர் போல அளித்த பதில் என்ன தெரியுமா? அசையும் சொத்து அங்கு வந்துபோகும் பக்தர்கள்; அசையாச் சொத்து ஆஞ்சநேயர் என்றார். சட்டமன்றமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரே வாய்விட்டுச் சிரித்த தகவல் ஒன்று உண்டு.

திருச்செந்தூர் முருகன் கோயில் நகைகளும்-வைரவேலும் கொள்ளை போனதைக் கண்டித்து கலைஞர் அவர்களும், தோழர்களும் நடைப்பயணம் சென்றார்கள். அந்தப் பயணம் முடிவுற்றது. அதற்குப் பிறகு சட்டப்பேரவையும் கூடியது.

அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்: கருணாநிதி திருச்செந்தூருக்கு முருகனைத் தேடிக்கொண்டு போனார். அங்கு கோயிலுக்கு இவர் சென்றவுடனே இவரைப் பார்க்க விரும்பாமல், திருச்செந்தூர் முருகன் இராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டார் என்றார். எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர் எழுந்தார். இதுவரை திருச்செந்தூரில் வைர வேல்தான் காணாமல் போய்விட்டது என்று சொல்லப்பட்டது. நானும் இதுவரை அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது முருகன் சிலையும் காணாமல் போய்விட்டது என்றும், அது இராமாவரத்தில்தான் உள்ளதென அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் அப்ரூவராக மாறிய செய்தி இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன், நன்றி என்று பதிலடி கொடுத்தாரே பார்க்கலாம். முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சி-எதிர்க்கட்சி என்று இல்லாமல் அனைவருமே சத்தம் போட்டுச் சிரித்தனர். கலைஞர் அவர்களுக்கு இத்தகைய நகைச்சுவை உணர்வு என்பது இயல்பானதாகும்.

போரூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அனுமதிக்கப்பட்டார். மயக்கமருந்து (ANAESTHESIA) கொடுக்கப்பட்டு இருந்தது. தண்ணீர் கொடுக்கக்கூடாது என்பது மருத்துவர்களின் உத்தரவு. தண்ணீர் தாகம் எடுத்த நிலையில் செவிலியரை அழைத்துத் தண்ணீர் கேட்டார் கலைஞர். நாக்கை நீட்டச் சொல்லி சொட்டுச் சொட்டாகத் தண்ணீரைக் கொடுத்தார். அப்பொழுது அந்தச் செவிலியரைப் பார்த்து கலைஞர், உன் பெயர் காவேரியா அம்மா? என்று கேட்டார்.

சாதுரியமாக சமயத்துக்கு ஏற்ற நிலையில் நகைச்சுவை உணர்வோடு உடனுக்குடன் வெளிப்படுத்துபவர் கலைஞர்.

தமிழக வரலாற்றில் அண்ணாவும், கலைஞரும் எனும் தலைப்பின் கீழ் இது போல சுவையான தகவல் களையும் நினைவூட்டப்பட வேண்டிய தகவல்களையும், சமுதாயக் கருத்துகளையும் எடுத்துரைத்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

-------------------வளரும்--விடுதலை” “29-1-2011

---------------கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை

பார்ப்பனர்களை இழித்துப் பேசலாமா?சட்டப்படி சரியா?


புலியை இடற வேண்டாம்!

கேள்வி:- எல்லோருக்கும் பொதுவானவர் ஒரு மாநில முதலமைச்சர் அவரே பூணூல்,பஞ்சகச்சம்,ஆரியம், திருடன் என்று பிராமணர்களை மோசமாக இழித்துப் பேசலாமா?சட்டப்படி சரியா?


பதில்: முதல்வரின் பல பேச்சுக்கள் இந்தியன் பீனல் கோட் விவரித்துள்ள குற்றங்கள் சிலவற்றின் கீழ்வருபவைதான்

----------(துக்ளக் 26.11.2011 பக்கம் 20)

நமது விளக்கம்:

பிராமணன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொள்வதைவிட பெரிய குற்றம் வேறு எதுவாக இருக்க முடியும்? நீவிர் பிராமணன் என்றால் நாங்கள் யார்? நீ பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்றால் நான் பிர்மாவின் பாதத்தில் பிறந்தவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமே. நான் சூத்திரன் என்றால் உன் மனு தர்மப்படி எங்கள் நிலைப்பாடு என்ன? நாங்கள் விலைக்கு வாங்கப்பட்ட வர்கள், விபச்சாரி மகன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமே. (மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) என்னை விபச்சாரி மகன் என்று சொல்லும் பிராமணனாகிய நீ குற்றவாளியா? சுயமரியாதை உணர்வின் அடிப்படையில் அதனை எதிர்க்கும் கலைஞர் குற்றவாளியா? கலைஞர் சொன்னது இந்தியன் பீனல்கோட் விவரித்துள்ள குற்றங்கள் சிலவற்றின் கீழ்வரும் என்று உறுதியாக நீவிர் கருதினால், உமக்குத் துணிவிருந்தால், அறிவு நாணயம் இருந்தால் கலைஞர்மீது வழக்குத் தொடு பார்க்கலாம். அதைத்தானே நாங்களும் எதிர் பார்க்கிறோம். வீதியில் முழங்குவதை நீதிமன்றத்தில் முழங்குவோமே! தோலை உரித்து மஞ்சள் பொடி தடவிக் காயப் போட்டு விடுவோமே!

முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அரசியலில் - ஆட்சியில் இருப்பதால் சிலவற்றைக் கூறிடத் தயக்கம் காட்ட முடியும்.

எங்களுக்கு என்ன வந்தது? எங்களிடம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை.

இனத் தலைவர் தந்தை பெரியார் இடித்துச் சொல்லி விட்டும் போய்விட் டார் - அதுவும் தன் இறுதி உரையிலே - மரண சாசனமாக (19.12.1973).

நண்பர் வீரமணி சொன்னதுபோல, கிறிஸ்தவன், முஸ்லிம், பார்சி தவிர, மற்றவன் எல்லாம் இந்து. நூற்றுக்கு மூன்று பேர் பார்ப்பனர் தவிர பாக்கி 97 பேர் தேவடியாள் மக்கள், பார்ப் பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுதி வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? திருப்பிச் சொல்லாத காரணம், அவர்களைக் கண்டிக்காத காரணம்; பார்ப்பானைக் கண்டால் வாப்பா, தேவடியாள் மகனே, எப்ப வந்த? என்று கேட்க வேண்டும். ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? என்றால் நீ எழுதி வைத்ததடா என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே, உன்னைத் தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும்! அதில் என்ன தப்பு? என்று ஈரோட்டு எரிமலை, தன்மான உணர்வை தமது இறுதி உரையிலே சொல்லி விட்டுச் சென்றுள்ளாரே அடுத்த கட்டம் இதுதான் நடக்கப் போகிறது.

கலைஞரை மிரட்டலாம் என்று நினைக்க வேண்டாம். கருஞ்சட்டைப் பட்டாளத்தை முதலில் சந்தித்து விட்டுத்தான் அவரை அணுக வேண் டும் எச்சரிக்கை!

கடவுள் இல்லை என்று சொல்பவனின் தலையை அறுக்க வேண்டும் என்று உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார் (நாலாயிரப் பிரபந்தம்) கூறுவான். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - எதிர்த்து ஒரு கருத்துக்கூட கூறக் கூடாது. பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களின் கற்பை அழிக்க வர வேண்டும் என்று உங்கள் திருஞான சம்பந்தன் பாடுவான் _ அதனையும் பயபக்தியோடு நாங்கள் பவ்யமாக ஏற்க வேண்டும். இவற்றையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்டால் இந்தியன் பீனல் கோட் காட்டி அச்சுறுத்துவீர்களா?

இந்திய அரசியல் சட்டம் அசல் மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று அரசியல் நிர்ணய சபை கூடி அதனைத் தயாரித்து வெளியிட்ட நேரத்திலேயே எங்கள் ஆசான் அய்யா அடித்துச் சொல்லி விட்டாரே! சட்டத்தை நானே உருவாக்கியிருந்தாலும், அதைக் கொளுத்துவதிலும் நான்தான் முதல் மனிதனாக இருப்பேன் என்று அண்ணல் அம்பேத்கர் மாநி லங்களவையிலேயே பதிவு செய்தாரே - அதுவும் இந்த அடிப்படையில்தான். 6 பேருக்கு 4 பார்ப்பனர்கள் அரசமைப்புச் சட்டத் தயாரிப்பில் பங்கு கொண்டிருந்தால் அது அசல் மனுதர்ம சாஸ்திரமாகத்தானே இருக் கும்? சமூகப் புரட்சித் தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் அதனால்தான் இதில் ஒரே கருத்தில் சுருதிப்பேதம் இல்லாமல் சொல்லியுள்ளனர்.

இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், உரிமையற்றவர்கள் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ள வேதங்களை, (சுருதிகளை), உபநிஷத் துக்களை, மனுதர்ம சாஸ்திரங்களை (ஸ்மிருதிகளை) இதிகாசங்களை, புராணக் குப்பைகளைக் கொளுத்தாமல், அவற்றை உச்சி மோந்து தலையில் தூக்கி வைத்து ஆடும் பார்ப்பனர்கள், சட்டத்தைக் காட்டி மிரட்டுவார்கள் என்றால், அடுத்த கட்டத்தைப் பற்றி பெரும்பான்மையான மக்கள் யோசித்துத்தான் தீர வேண்டும்.

பார்ப்பனர்களின் வக்கீலாக இன்றைய தினம் சோ ராமசாமி களத்தில் நிற்கப் பார்க்கிறார்.

பச்சையாக மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கி எழுதிக் கொண்டும் இருக்கிறார். நம்மைத் தேவடியாள் மக்கள் என்று சொல்லாமல் சொல்லுகிறார். மறைக்காமல் உண்மையாக பார்ப்பனர்களின் புத்தியைக் காட்டிக் கொள்வதற்காக ஒரு வகையில் அவரைப் பாராட்டக் கூடச் செய்யலாம்.

இப்பல்லாம் பார்ப்பனர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் எப்பொழுதோ மாறி விட்டனர்? என்று சொல்லக் கூடிய அதி மேதாவிகள் பார்ப்பனர் அல்லாதாரில் பலரும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

அவர்களுக்கு அடையாளம் காட்ட அடையாளப் பூர்வமாக ஒருவரைக் காட்டித் தொலைக்க வேண்டாமா? அதற்கு சோ ராமசாமிதான் பொருத்தமானவர். எனவே அசல் அவாளாக பிராமணராக ஆரியப் புத்திரராக பூணூலை உருவிக் கொண்டு தம் அடையாளத்தைக் காட்டட்டும் _ அதுதான் நம் மக்கள் இனவுணர்வு மழுங்காமல் இருக்கப் பெரிதும் பயன்படும்.

கேள்வி: பிராமணர்கள் ஓட்டு எல்லாம் திமுகவுக்குத்தான் என்று பிராமணர்கள் முடிவெடுத்தால் கருணாநிதி, தனது பிராமண எதிர்ப்புக் கொள்கையையும், கடவுள் மறுப்புக் கொள்கையையும் மாற்றிக் கொள்வாரா?

பதில்: அதோடு மட்டுமல்ல; இலவச பூணூல் திட்டம்கூட கொண்டு வருவார்.
(துக்ளக் 26.1.2011)

நமது விளக்கம்:

அப்பொழுதுகூட பார்ப்பனர்கள் தங்களின் ஜாதி ஆணவத்தை பிறப்பின் அடிப்படையில் நாங்கள் பிராமணர்கள் தான் எனும் ஆணவத் திமிரை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை அந்த ஆணவத்தைக் குறிக்கும் பூணூலை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர்களின் சாணக்கியரான ஆச்சாரியார் என்ன சொன்னார்?

பிராமணர்களே, பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லவில்லையா? அப்பொழுது அண்ணா இலவசமாகப் பூணூல் தருவேன் என்றா தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்?

ஆச்சாரியாரைத் தான் சாணக்கியர் என்று சொல்வார்கள். அந்தச் சாணக்கியரையே சட்னியாக்கி, தேர்தல் வெற்றியை, திருச்சியில் இருந்த தந்தை பெரியாரை நோக்கிச் சென்று காணிக்கையாக ஆக்கினாரே அறிஞர் அண்ணா _ நினைவிருக்கிறதா?

இப்பொழுது எகிறிக் குதிப்பது போலத்தான் 1971 தேர்தலிலும் இதே சோ கும்பல் தினமணி திரிக் கூட்டம் ஆட்டம் போட்டது.

ஆரியர் _ திராவிடர் யுத்தமே நடந்தது. முடிவு என்ன? 1967-இல் 138 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 1971இல் 183 இடங்களை யல்லவா கைப்பற்றியது?

இராமனை செருப்பாலடித்த கட்சிக்கா ஓட்டு என்று பிரச்சாரம் செய்து பார்த்தீர்களே! கோயில் கதவு பெரிசு சுவரொட்டிகளை ஒட்டினீர்களே! துக்ளக் சிறப்பிதழே வெளியிட்டதே! பிள்ளை பிழைத்ததா? விளக்கெண்ணெய்க்குத்தானே கேடாய் முடிந்தது?

இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. நாட்டை விட்டே வெளியேறத் தீர்மானித்து விட்டார்கள் என்று உங்கள் மூதறிஞர் குல்லுகப்பட்டர் ராஜாஜி சரணாகதி அடையவில்லையா? அவரை விடவா நீங்கள்?

புலியை இடறிப் பார்க்க ஆசைப் பட வேண்டாம். எச்சரிக்கை!

-------------------மின்சாரம் அவர்கள் 29-1-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

28.1.11

தீண்டாமை க்ஷேமகரமானது என்றவருக்கு மணி மண்டபமா?
காஞ்சிபுரத்தையடுத்த ஓரிக்கை என்னும் இடத்தில் காஞ்சிபுரம் 68ஆவது பீடாதிபதி என்று கூறப்படும் சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவருக்கு மணி மண்டபம் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் இன்று செய்யப்படுகிறதாம்.

கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவ துண்டு. மணி மண்டபத்துக்குக் கும்பாபிஷேகம் என்றால் இதன் பொருள் - புதிய கடவுள் ஒன்று சிருஷ்டிக்கப்படுகிறது என்று பொருள்.

இந்த மணி மண்டபத்தில் கர்ப்பக்கிரகம் உண்டாம். அதில் சந்திரசேகரேந்திரரின் சிலா மூர்த்தமும், பாதுகையும் பிரதிஷ்டை செய்யப்படுமாம். புரிகிறதா? சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் உருவமும், செருப்பும் (பாதுகை)யும் பூஜைக்கு வைக்கப்படுகின்றன என்பது இதற்குப் பொருள்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனுக் குருவின் செருப்புக்கு ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கின்றனர் என்றால், இந்த ஜாதித் திமிரை - பார்ப்பன குரூரப் புத்தியை என்னவென்று சொல்லுவது!

2011ஆம் ஆண்டிலும் இப்படிப்பட்ட அசிங்கமான - மனித உணர்வுகளை - புத்தியைக் கொச்சைப்படுத் துகிற காரியங்களைப் பார்ப்பனர்கள் துணிந்து செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கேவலமான காரியத்துக்குப் பார்ப்பனர்கள் அள்ளிக் கொடுப்பதைவிட, பார்ப்பனர் அல்லாதார் கொட்டிக் கொடுக்கும் கோடிகள் எத்தனை எத்தனையோ!

இந்தச் சங்கர மடமும், சங்கராச்சாரியார்களும் நம்மையெல்லாம் வருண தரும அடிப்படையில் சூத்திரர்கள் என்று நினைப்பவர்கள் மட்டும் அல்லர்; அது நிலைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அமைப்புகளை வைத்திருக்கக்கூடியவர்கள்.

மிக வெளிப்படையாக தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறியவர்தான் இந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி. பாலக்காட்டில் காந்தியாரை மாட்டுக் கொட்டகை யில் வைத்துப் பேசியவர். தீண்டாமை ஒழிப்புக்காக காந்தியார் எவ்வளவோ மன்றாடியும் தீண்டாமை என்பது சாஸ்திர சம்பந்தமானது; அதனை ஒழிக்கக் கூடாது; ஒழிக்க நினைத்தால் சாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்களின் மனம் நோகும் என்று காந்தியாரிடமே முகத்துக்கு முகம் சொன்னவரா யிற்றே!

இன்னும் சொல்லப் போனால் தீண்டாமையை ஆதரித்து வலியுறுத்திய குற்றத்துக்காக பிணையில் வெளிவர முடியாத குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் அவர். அவர் பகவானாம்! தெய்வீக ஒளி அவர் முகத்தில் அப்படியே ஜொலிக்கிறதாம்! அடேயப்பா.. இந்தப் பார்ப்பனப் புளுகர்கள் தங்களிடம் ஊடகங்கள் கைகளில் வசமாக இருக்கின்றன என்பதற்காக எப்படியெல்லாம் ஊதிப் பெருக்கிக் காட்டுகிறார்கள்? பக்திப் போதையில் குளித்த இந்தப் பாழாய்ப் போன தமிழர்களும் அவர்களின் வஞ்சகப் புத்தியையும், சூட்சமத்தையும் புரிந்து கொள்ளாத ஏமாளிகளாக இருந்து பெரியவாள் என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்களே, எவ்வளவுக் கேவலம் - இழிவு!

சிருங்கேரி மடத்தின் கிளை மடம் கும்பகோணமடம் - அதைத்தான் பிற்காலத்தில் காஞ்சி மடம் என்று கூறி, தலைமை இடத்தை மாற்றி திருகுதாளம் செய்தார்கள். இதுகுறித்து சிருங்கேரி மடத்துக்கும் காஞ்சி மடத்துக்கும் வழக்குக்கூட நடந்ததுண்டு. இப்படி ஏமாற்று வேலை செய்தவர்களுக்கெல்லாம் இந்த நாட்டில் கோயிலா? கோயில்கள் எப்படியெல்லாம் தோன்றி இருந்திருக்க வேண்டும் என்பதற்கு நம் கண்ணெதிரே ஓரிக்கையில் இன்று கும்பாபிஷேகம் செய்யப்படுகிறதே - இதைப் பார்த்தாவது புரிந்துகொள்ள வேண்டாமா?

இந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி எந்த அளவு மனிதாபிமானம் கொண்டவர்? நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்று கூறும் அளவுக்கு மனிதாபிமானம் கொண்டவர். இப்படிப்பட்ட மானுட வெறுப்பாளர்தான் லோகக் குருவாம்.

ஆண்டாளின் தீக்குறளை சென்றோதோம் என்ற திருப்பாவையின் வரிக்கு திருக்குறளைப் படிக்க மாட்டோம் என்று பொருள் சொன்ன பெரிய மனுஷர் (?) இவர்.
குறளை என்றால் புறஞ் சொல்லுதல் என்று பொருள். அந்தப் பொருளில்தான் ஆண்டாள் பாடியுள்ளார். தமிழ்மீதும் தமிழர்கள்மீதும் கடும் வெறுப்புக் கொண்ட பார்ப்பனக் கூட்டத்தின் தலைவர் - தன் மன அழுக்கை, துவேஷத்தை - இதன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

காஞ்சி சங்கர மடத்தில் பல பெயர்களில் டிரஸ்ட்டுகள் நடத்தப்படுகின்றன. வேத ரக்ஷண டிரஸ்ட், சஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட், கன்னிகாதான டிரஸ்ட் போன்ற டிரஸ்டுகள் ஏராளம் உண்டு.

இவை அத்தனையும் பார்ப்பனர்களுக்காக மட்டுமேயல்லாமல் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

உண்மையைச் சொல்லப் போனால் ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் அவர்கள் சொன்னது போலவே, காஞ்சிமடம் என்பது பார்ப்பன மடம் - பார்ப்பனர்களுக்கு எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சு, பார்ப்பன திருமணம் ஏற்பாட்டு நிலையம்.

அந்த மடத்துக்கு எந்த ஒரு வகையிலாவது ஒரு துரும்பு அளவு லாபம் பார்ப்பனர் அல்லாதாரால் ஏற்படுமேயானால் அதைவிட தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்வது - தற்கொலைக்குச் சமமானது வேறொன்றும் இருக்கவே முடியாது - எச்சரிக்கை!

------------------”விடுதலை” தலையங்கம் 28-1-2011