காயத்ரி
ஆண்டு தொடக்கத் திலேயே ஆரம்பித்து விட்டார்களய்யா, ஆரம்பித்து விட்டார் களய்யா!
நாளை புத்தாண்டு சனி மகா பிரதோஷத்துடன் ஆரம்பமாகிறது. மேலும் துவக்க மாதமான ஜனவரியில் மூன்று பிர தோஷங்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு அன்று கோயில்களில் கூட்டம் அலை மோதும். இவ்வாண்டின் துவக்கத்திலேயே சனி பிரதோஷம் வருவதால், கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும். ஒரு சனி பிரதோஷத்தன்று சிவனைத் தரிசித்தால், சாதாரண பிரதோஷங்களைவிட அதிக பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. நரசிம்மரையும் இந்த நேரத்தில் தரிசிப்பர்.
இந்த ஆண்டில் 25 பிரதோஷங்கள் வருகின்றன. இதில் ஜனவரி 1, ஏப்ரல் 30 ஆகிய இரண்டே நாட்கள்தான் சனி மகா பிரதோஷம்.
ஜூலையில் 1,17, 31 ஆகிய தேதிகளிலும், மார்ச்சில் 2,17,31 ஆகிய தேதிகளிலும் மூன்று பிரதோஷங்கள் வருவது குறிப்பிடத்தக்கது - என்று பார்ப்பன ஏடுகள் விலாவாரியாக எழுதுகின்றன.
அது என்ன பிரதோஷம்? திரியோதசியின் பொழுது அஸ்தமிக்குமுன் மூன்றே முக்கா நாழிகை தொடங்கி அஸ்தமித்து, மூன்றே முக்கா நாழிகை பரியந்தமுள்ள நேரம் என்று புராணிகர்கள் கூறுகின்றனர்.
இப்படியெல்லாம் சொல்லுவதற்கு என்ன ஆதாரம்? யார் சொன்னார்கள்? என்கிற கேள்விகளைக் கேட்கக் கூடாது. எந்தப் பக்திமான்தான் கேட்டிருக்கிறான்? கேட்டால் பதில் சொல்ல யாருக்குத்தான் தெரியும்?
மக்களின் சிந்தனைகளை எதையாவது புரியாத சொற்களை அடுக்கிச் சொல்லி, அந்தத் தூண்டிலுக்குள் கச்சிதமாகச் சிக்க வைத்து, அவர்கள் தலையில் மிளகாய் அரைக்க வேண்டும், அவ்வளவுதான்!
எதையாவது பிரச்சாரம் செய்து கோயில் குளம் என்று அலையச் செய்து புத்தியையும், பொருளையும், பொழுதையும் கரியாக்க வேண்டும் - புரோகிதக் குதிருக்குள் அடைக்கலம் ஆக ஏற்பாடு செய்யப்பட்ட சுரண்டல் திட்டம்தான் இந்தப் புண்ணாக்குகள் எல்லாம்.
இதைத்தான் பழுதற - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மிக அழகாக - துல்லியமாக நம் கண் முன் - கருத்துகள் அசைபோட படம் போட்டுக் காட்டுகிறார். அதற்கு அவர்கள் பாஷையிலே காயத்ரி மந்திரம் என்றும் நறுக்கென்று சொல்லியிருக்கிறார் அய்யா.
நமது மக்கள் ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர் லோகம், மறுபிறப்பு என்கிற சொற்களை அயோக்கியர்களின் உற்பத்தி என்றும், மடையர்களின் பாவிப்பு என்றும் கருதி தங்கள் உள்ளத்திலிருந்து அடியோடு விலக்கிவிட வேண்டும். மற்றும் புராணக் கடவுள்கைள ஒழிக்க அவைகளை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்தி, மக்கள் மனதில் நினைத்தாலே மானங் கெட்டத்தன்மை என்று கருதும்படியாகச் செய்து அவைகளை ஒழித்துக் கட்ட வேண்டும்.
இந்த இரண்டு காரியம் செய்வதன் மூலம்தான் நமது பிறவி இழிவு (ஜாதி) என்பதை ஒழித்துக்கட்டி, நாம் மானமுள்ள மனித சமுதாயமாக ஆக முடியும், இவற்றில் ஒரு சிறிதளவை விட்டு வைத்தாலும் நாம் உண்மையிலேயே இழி மக்களாகத்தான் இருந் தாக வேண்டும்.
இதுதான் நமக்குக் காயத்ரியாகும்.
--------------- ஈ.வெ. ராமசாமி, விடுதலை 15-3-1971
புத்தாண்டு பிறந்ததும் பிறக்காததுமாக தங்கள் கோயில் கடைகளைத் திறந் திருக்கின்றனர். அதுவும், இங்கிலீஷ் ஆண்டு பிறப்புக்கும், இந்த இந்துக்களுக்கும் என்ன உறவு? அதுதான் அவர்கள் பார்வையிலே மிலேச்ச பாஷையாயிற்றே!
அதையெல்லாம் தங்கள் வசதிக்கு மாற்றிக் கொள்வார்கள் - எச்சரிக்கை! பெரியார் சொல்லியுள்ள காயத்ரி மந்திரம் முக்கியம், மிக மிக முக்கியம்!
------------ மயிலாடன் அவர்கள் 1-1-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment