Search This Blog

10.1.11

இனிவரும் உலகம் பெரியார் உலகே! - இராமாயணம்பற்றி வீரமணி

இராமாயணம்பற்றி வீரமணி பேசுகிறார்

இன்றைய தினம் இதே திருச்சியில் சுவரில் ஒரு விளம்பரத்தைக் கண்டேன். வருகின்ற 23ஆம் தேதி திருவாளர் இந்து முன்னணி ராமகோபாலன் இராமாயணம் பற்றிப் பேசப் போகிறாராம். இராமாயண் பஜன் மேளா என்று சுவரில் எழுதப்பட்டுள்ளது.


இந்த மாநாட்டில் ஒன்றை இப்பொழுது நான் அறிவிக்கிறேன்.


இராம. கோபாலன் இராமாயணம் பற்றி உரையாற்றி முடிந்த மறுநாளே 24ஆம் தேதி இராமாயணம்பற்றி ஆய்வுச் சொற்பொழிவை நான் நிகழ்த்துவேன் (பலத்த கரவொலி!).


நாத்திக மாநாட்டின் எதிரொலிதான் அவர்களை வெளியே வரச் செய்திருக்கிறது.
முதல் கேள்வி இராமன் எப்படி பிறந்தான் என்று ஆரம்பிப்போமே!
பெரியார்பற்றி அண்ணா சொன்னார் - பெரியாரின் போர் முறைபற்றி சொன்னார் - மூல பலத்தோடு போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர் முறை என்றார்.
இராமாயணம்பற்றி தந்தை பெரியார் எழுதியவற்றிற்கு, பேசியதற்கு இதுவரை எவராவது பதில் கூறியதுண்டா?


இராமாயணம் என்பது பார்ப்பனர்களுக்கு புரோசிஜர்கோட். பிராமணர்களுக்கு நெருக்கடி வரும்பொழுதெல்லாம் இராமாயணத்தை எடுத்துப் படிக்க வேண்டும். ராஜாஜியே சொல்லியி ருக்கிறாரே!

தந்தை பெரியார் எழுதிய இராமாயண பாத்திரங்கள் என்னும் நூல் இந்தியில் சச்சி இராமாயணம் என்று உத்திரப் பிரதேசத்தில் இந்தியில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. அதனைத் தடை செய்தது நீதிமன்றம் என்றனர் நூலை வெளியிட்டவர்கள்.


வழக்கின் முடிவு என்ன தெரியுமா? தடை செய்தது செல்லாது என்று உச்சநீதி மன்றத்தில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணஅய்யர் தீர்ப்புக் கொடுத்து விட்டாரே. அதுவும் எந்தக் காலகட்டத்தில்? நெருக்கடி நிலை அமலில் இருந்த அந்தக் கால கட்டத்தில். பெரியார்தானே வென்றார் - அதுவும் உச்சநீதிமன்றத்திலேயே வெற்றி பெற்று விட்டாரே!


சீதையைக் கம்பனாலேயே காப்பாற்ற முடியவில்லை, ராம கோபால அய்யர் வாளா காப்பாற்றப் போகிறார்?


சீதையின் கற்பின்மீது சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் சொல்லுகிறான் ராமன்.
தீ வளர்க்கப்படுகிறது. என்ன சொல்லித் தீயில் இறங்கினாள்

கனத்தினால் பூண் முலை -
கைவளை மனத்தினால்
வாக்கினால் மறுஉற்றேன் எனின்
சினத்தினால் சுடு தீயால் தீச்செல்வா என்றனள்
வனத் துழாய் கணவற்கும்
வணக்கம் போக்கினாள்
- என்று கம்பன் பாடியிருக்கிறான்.


மனம், வாக்கு என்ற இரண்டில் குற்றம் நான் செய்திருந்தால் நெருப்பே என்னை சுட்டுப் பொசுக்குவாய் என்றுதான் சீதை கூறுகிறாள்.


மனம், வாக்கு, காயம் என்பதில் சீதை ஏன் காயத்தைக் குறிப்பிடவில்லை? காயம் என்றால் உடம்பு. சீதை காயத்தை விட்டுவிட்டுச் சொன்னதற்குக் காரணம் காயம், காயப்பட்டு விட்டதுதான் என்றார் அண்ணா. இன்று வரை பதில் உண்டா? (பலத்த கைதட்டல்)

---------------(திருச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையிலிருந்து 8.1.2011). "விடுதலை” 9-1-2011


எல்லாக் களங்களிலும் பெரியாருக்கே வெற்றி! இனிவரும் உலகம் பெரியாருக்கே! உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் முழக்கம்

நீதிமன்றங்கள் உள்பட பல களங் களிலும் தந்தை பெரியார் வெற்றி பெற்று வந்துள்ளார். இனி வருகின்ற உலகம் என்பது பெரியார் கொள்கைக்கே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார்.


திருச்சியில் நேற்று மாலை (8.1.2011) நடைபெற்ற உலக நாத்திகர் திறந்த வெளி மாநாட்டுக்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது:


உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் மட்டுமல்ல; இன்று காலை தஞ்சாவூர் - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலும் சிறப்பாக நடைபெற்றது.

கடவுளை மற - மனிதனை நினை!

கடவுளை மற - மனிதனை நினை என்று சொன்னார் தந்தை பெரியார் அதனை எப்படி செயல்படுத்துகிறோம். வெளிநாட்டுப் பேராளர்களும், வெளி மாநிலப் பேராளர்களும் பல்கலைக் கழக வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டனர். சுற்றுச் சூழல் என்பது மனித குலத்துக்கு மிகவும் அவசியமானதாயிற்றே!


இதுதான் தந்தைபெரியார் சிந்தனை என்பது!


இந்த மாநாட்டிற்கு அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து நாத்திக நன்னெறி அறிஞர்கள் வந்துள்ளனர்.


காஷ்மீர், பஞ்சாப், ஆந்திரா, கேரளா, கருநாடகா முதலிய வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை தந்துள்ளனர். மற்ற நாடுகளிலும், மாநிலங்களிலும் இது போன்ற பொதுக் கூட்டங்களை நடத்துவது கிடையாது. தேர்தல் நேரங்களில் மட்டும் பொதுக் கூட்டங்கள் நடப்பதுண்டு.


ஆனால் தமிழ்நாட்டில் இரவு 11 மணி வரை பொதுக் கூட்டங்களை நடத்தி, அதில் கருத்து களைப் பேசுவது என்ற முறையை உண்டாக்கிக் கொடுத்தவர் தந்தை பெரியார்.

பகுத்தறிவே ஒரே மொழி!

இங்கு பல மொழிகளைப் பேசுபவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த மொழிகள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் நமக்கெல்லாம் உள்ள ஒரே மொழி - இணைக்கும் மொழி பகுத்தறிவே! இந்தப் பகுத்தறிவும், மனித நேயமும் தான் சகோதரத் துவத்தை உருவாக்கக் கூடியதாகும்.


கடவுளும், மதமும் மனித குலத்தைப் பிரிக்கின்றன. தந்தை பெரியார் கூறும் பகுத்தறிவும், மனித நேயமும் மக்களை இணைக்கின்றன. நம்மைப் பிணைத்திருக்கும் எல்லா வகையான விலங்குகளையும் உடைக் கின்றன.

பெரியார் கண்ட இலட்சியப் பெண்

இங்கே பேசிய கவிஞர் கனிமொழி பெரியார் கண்ட இலட்சியப் பெண் ஆற்றல் மிக்க நாத்திக முத்திரையைப் பொறித்து வரும் மனிதநேய பகுத்தறிவுக் கவிஞர் எங்கள் செல்வம்! சிறப்பான கருத்துகளை எடுத்துரைத் துள்ளார்.


ஒரு சிறப்பான மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடந்து முடிந்துள் ளது. பல்வேறு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் செயல் முறைபடுத்தப் பட்டுள்ளன.

தலையில் தேங்காய் உடைக்கலாமா?

கோயில்களில் பக்தர்களின் தலை யில் தேங்காய்களை உடைப்பதுண்டு. இந்தப் பேரணியிலும் அவ்வாறு உடைத்துக் காட்டினார்கள்.


தலையில் தேங்காய் உடைப்பதால் அது மூளைப் பகுதிக்குச் சேதாரத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறு கின்றனர்.


பக்திப் பயித்தியங்களைத் திருத்துவதற்கு நாமும் கொஞ்ச நேரத்திற்கு பயித்தியங்களாக ஆகித் தீர வேண் டியுள்ளதே என்று வருத்தமாக இருக்கிறது.

தீக்குண்டம் இறங்கிய வெளிநாட்டவர்

நேற்று மாலை திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் தீக் குண்டம் இறங்கிக் காட்டப்பட்டது. பஞ்சாபைச் சேர்ந்தவர்களும், நார்வேயைச் சேர்ந்தவர்களும் கூட தீண்குண்டத்தில் இறங்கிக் காட்டி னார்கள்.

கழகக் கொடியை ஏந்தி வந்த நார்வேகாரர்

பேரணியில் பஞ்சாப் தோழரும், நார்வே தோழரும் கழகக் கொடியை ஏந்தி வந்தனர். தந்தை பெரியார் உலகமாயமாகி வருகிறார் என்பதற்கு இது ஆதாரம். உலகம் முழுமைக்கும் தந்தை பெரியார் இன்று தேவைப்படுகிறார். கடவுள், மதத்தால் மக்களுக்கு அமைதியைக் கொடுக்க முடியவில்லை. பயங்கரவாதம் (Terr.rism) இதற்குத் தாய், தந்தை யார்? மதமும், கடவுளும் அல்லவா?
இதனால் காவல் துறையினருக்கு எவ்வளவு சிக்கல்? ஒவ்வொருவரையும் சோதிக்க வேண்டி யுள்ளதே. கைப்பேசி மூலம் ஒரு குறுஞ் செய்தியை (SMS) குண்டுவெடிப்பு என்ற புரளியைக் கிளப்பி விட்டால் போதுமே - அலட்சியமாகக் காவல்துறையினரால் இருக்க முடியுமா?


கடவுளையும், மதத்தையும் எதிர்க்கக் கூடியவர்களால் இந்தத் தொல்லைகள் உண்டா?

காஷ்மீருக்குப் பெரியார் தேவைப்படுகிறார்

இன்று காலையில் வல்லம் - பெரியார் மணி யம்மை பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் காஷ்மீரிலிருந்து சிவில் என்ஜினீயராக இருக்கக் கூடிய நாத்திகப் பேராளர் வந்து கலந்து கொண்டார்.


20 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீருக்குச் சுற்றுலா செல்ல ஆசைப்பட்டனர் - இப்பொழுது அங்குள்ள நிலவரம் - கலவரம்தான். காரணம் என்ன? மதம், மதம், மதம்தான். எங்களுக்கு காஷ்மீருக்கு ஒரு தந்தை பெரியார் தேவைப்படுகிறார் என்றாரே! (பலத்த கரவொலி!). குமரி முதல் காஷ்மீர் வரை தந்தை பெரியார் தேவை என்ற உணர்வு ஏற்பட் டுள்ளது.


கடவுள் உண்டு - கடவுள் நம்பிக்கை உண்டு என்போர்கள். மத்தியில்தான் போர்கள் நடை பெற்றுள்ளன. சிலுவைப் போர் என்பதும் அது தானே!

ஒரு மதத்துக்குள்ளேயே போர்

அதுகூட இருக்கட்டும்; ஒரு மதத்துக்குள்ளேயே சண்டை நடக்கிறதே. இந்த ஊருக்குப் பக்கத்தில்தான் சிறீரங்கம் இருக்கிறது. அங்கு ஒரு தூங்கும் கடவுள் - பள்ளி கொண்டிருக்கும் கடவுள் இருக்கிறார்.


அந்தக் கடவுளுக்கு யானை எல்லாம்கூட உண்டு. அந்தக் கோவில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென் கலை நாமம் போடுவதா என்கிற சண்டை 150 ஆண்டு காலமாக நடக்கிறதே?


இந்தச் சண்டையையே இந்து முன்னணிகளால் தீர்க்க முடியவில்லை. இந்தக் கூத்தில் இந்துக்களை ஒன்று சேர்க்கப் போகிறார்களாம் (பலத்த கரவொலி!)

இது என்ன மதம் - எச்சக் கலை மதம்?

பெரியார்பற்றி ஒரு எழுத்தாளர்?


ராமச்சந்திர குகா என்பவர் பார்ப்பனர்தான் - பெரியாரிஸ்ட் அல்ல. அண்மையில் நூல், ஒன்றை எழுதியுள்ளார். மாடர்ன் மேக்கர்ஸ் ஆஃப் இந்தியா என்பது அந்த நூலின் பெயர். இந்த நூலிலே 19 பேர்கள் பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
வடக்கே அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபாபுலே - தெற்கில் தந்தை பெரியார் பற்றி மட்டுமே குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

இருட்டடிக்க முடியவில்லை

ஆங்கில நூல்கள் எப்பொழுதும் நம்மை இருட்டடிக்கும் அதையும் கடந்து ஆங்கிலத்தில் இருட்டடிக்கப்பட முடியாத தலைவராக தந்தை பெரியார் உயர்ந்து நிற்கிறாரே! The Radical Reformer E.V. Ramasamy என்று குறிப்பிட்டுள்ளார்.


1930 முதல் பெரியார் நாத்திகக் கொள்கை, பெண்ணுரிமைக் கொள்கை குடும்பக் கட்டுப்பாடு - கர்ப்ப ஆட்சிபற்றி கருத்துத் தெரிவித்துள்ள சுயசிந்தனையாளர் பெரியார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது அந்த நூலில்.


இந்தியை எதிர்த்தார் இறுதியில் பெரியார்அதில் வென்றார் என்று குறிப்பிட்டுள்ளார். ராமனைக் காட்டி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியுள்ளனர். மதமும், கடவுளும் மக்கள் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன என்பதற்கு இது ஒன்று போதாதா?

கடவுளுக்குமேல் பார்ப்பான்!

கடவுளைவிட பார்ப்பான்தான் உயர்ந்தவன் என்று வேதத்திலே எழுதி வைத்திருக்கிறானே.


தேவாதினம் ஜகத் சர்வம்
மந்த் ராதினம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரமணாதினம்
தஸ்மத் பிராமணா பிரபு ஜய
இதன் பொருள் என்ன?


இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்தி ரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே, பிராமணர்களே நமது கடவுள், தெய்வம், அவனையே வணங்க வேண்டும் என்பதுதானே பார்ப்பனர்கள் வேதம்?


மூலபலத்தைக் கண்டுபிடித்தே பெரியார் போர் தொடுத்தார் - வெற்றி பெற்றார்.

பெரியார் சிலை பீடத்தில் கடவுள் மறுப்பு

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலை பீடங் களில் கடவுள் மறுப்பு வாசகம் பொறிக்கப்பட் டுள்ளது.

கடவுள் இல்லை,கடவுள் இல்லை,
கடவுள் இல்லவே இல்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்.
பரப்பியவன் அயோக்கியன்.
வணங்குகிறவன் காட்டுமிராண்டி


என்று பொறிக்கப்பட்டுள்ளது.


எங்கள் மனம் புண்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.


வழக்கை விசாரித்த நீதிபதியும் ஆன்மீகவாதிதான். நீதிபதி என்ன கேட்டார்?

வழக்கு தள்ளுபடி!

அந்த வாசகங்கள் பெரியார் சொன்னதுதானே? என்று கேட்டார். மனுதாரரின் வழக்கறிஞர் ஆமாம் என்று சொன்னார்.


பெரியார் சிலை பீடத்தில் பெரியார் சொன்னதை எழுதாமல் சங்கராச்சாரியார் சொன்னதையா பொறித்து வைப்பார்கள் என்று கேட்டு, வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டாரே. ஒவ்வொரு களத்திலும் பெரியார் வெற்றி பெற்றுதான் வருகிறார்.

இனிவரும் உலகம் பெரியார் உலகே!

---------------------- “விடுதலை” 9-1-2011

0 comments: