Search This Blog

31.1.11

இந்தித் திணிப்பு ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் (4)
இந்தி எதிர்ப்பு என்பதன் பின்னணி என்ன?
- கலி.பூங்குன்றன்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற பொழிவு-மொழி காப்பு நாள் என்ற அடிப்படையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக இந்தி எதிர்ப்பு என்பதுதான் அதன் மய்யப் புள்ளியாகும்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்தி திணிப்பு என்பது ஏதோ ஒரு மொழியை எதிர்ப்பது என்பது அல்ல!

இந்தித் திணிப்பு என்பது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு என்பதைத் தெளிவுபடுத்தினார். சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியைத் திணிப்பதன் மூலம் திராவிடர்கள் மீது பார்ப்பனீய பண்பாட்டுத் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்பதைத் தெளிவுப்படுத்தினார். இந்தக் கருத்தினை அந்தக் காலகட்டத்திலேயே தந்தை பெரியார் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

1938 ஏப்ரல் 21 ஆம் தேதி சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரால் (அப்பொழுது பிரதம அமைச்சர்) இந்தித் திணிப்புக் குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே குடிஅரசு இதழில் (7.3.1926) தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும் என்ற கட்டுரையை எழுதினார்.
அந்தக் கட்டுரையில் தந்தை பெரியார் தெளிவாகவே குறிப்பிடுகிறார்:

இனி கொஞ்ச காலத்திற்குள் ஹிந்தி பிரச்சாரத்தின் பலனை அனுபவிக்கப் போகிறோம். பிராமணர் அல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் ஹிந்தியும் ஒன்றாய் முடியும் போல் இருக்கிறது. பொதுவாய் ஹிந்தி என்பது வெளி மாகாணங்களில் பிராமண மதப் பிரச்சாரம் செய்ய தர்ப்பித்து செய்யும் வித்தையாய் விட்டது. இந்த இரகசியத்தை நமது நாட்டுப் பாரமர ஜனங்கள் அறிவதேயில்லை -என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் ஹிந்தி என்பது பார்ப்பன மதப் பிரச்சாரத்துக்கு வழி வகுப்பது என்பதைத் தெளிவு படுத்திவிட்டார் தந்தை பெரியார்.

இந்தி என்பது பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புரட்டு என்பதைத் தவிர அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை

******

இந்தி என்பது அனேகமாக வடமொழியின் சார்போ அல்லது திரிபோ ஆகும். இந்த நாட்டில் ஆரியர்கள் உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்துபோன குண்டூசிக்கும் பயன்படாத பாஷையாகிய வடமொழிக்கு இவ்வளவு பணம் செலவழியச் செய்து வருகின் றனர் என்பது தமிழ் மக்கள் வெகு நாளாகக் கவனித்து வரும் சங்கதியாகும். இப் பொழுது மறைமுகமாய் வடமொழியை ஆதரிக்கவும், ஆரிய நாகரிகம், சமயக் கொள்கை ஆகியவைகளை நிலை நிறுத்தவும் இந்தியை அதிகமாக ஒவ்வொருவருக்குள்ளும் புகுத்தப் பார்ப்பது எவ்வளவு வஞ்சகமான காரியம் என்பதை நமது சோணகிரிகள் அனேகர் இன்னும் உணரவேயில்லை. இந்தி பாஷையில் கபீர்தாஸ் எழுதிய இராமாயணத்தை எதற்குப் படிக்க வேண்டும்? என்று கேட்கிறார் தந்தை பெரியார் (குடிஅரசு 10.5.1931).

1931இல் நன்னிலத்தில் கூட்டப்பெற்ற வட்டார சுயமரியாதை மாநாட்டிலும் (சாமி சிதம்பரனார் முன் மொழிய எஸ்.இராமநாதன் அவர்கள் வழிமொழியப்பட்ட தீர்மானம்) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதோ:


பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வடமொழி முதலிய மொழிகளை நமது மக்கள் படிக்கும்படிச் செய்வது பார்ப்பனீயத்துக்கு மறை முகமாக ஆக்கம் தேடுவதாகுமென இம்மாநாடு கருதுகிறது

1938இல் ஆச்சாரியார் (ராஜாஜி) இந்தியைத் திணிப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்களை எச்சரிக்கும் தீர்மானமாக இது நிறைவேற்றப் பட்டுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.


சென்னை மாகாணத்தில் இந்தியைத் திணிக்க ஆயத்தமான பிரதம அமைச்சர் ஆச்சாரியார் (ராஜாஜி) 1936ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி சென்னை இந்து தியாலாஜிகல் பாட சாலையில் பேசும் போது பச்சையாகவே குறிப்பிட்டார்:

இந்தியை நாம் கற்போமானால், சமஸ்கிருத எழுத்துகளைக் கற்றவராகின்றோம். இறுதியாக சமஸ்கிருதத் தையும் கற்றவராகின்றோம்

(விடுதலை 20.8.1938 பக்கம் 2) -என்று பேசினாரே! இதன் மூலம் கோணிப்பைக் குள்ளிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்ததா- இல்லையா?

இந்தியைத் திணிப்பது முதற்கட்டம். அதன் வழியாக சமஸ்கிருதத்தையும் நுழைப்பது அதன் உள்நோக்கம். அதன்மூலம் வருணாசிரமக் கருத்துகளை, பஞ்சாங்கக் குப்பைகளைத் தமிழர்களின் மூளைக்குள் திணிப்பதுதான் மறைமுகத் திட்டமாகும்.

அதனைத்தான் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்தி திணிப்பு என்பது பண்பாட்டுப் படையெடுப்பு என்று அழகாகக் குறிப்பிட்டார். ராஜாஜியைவிட திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் இதுகுறித்து மிகப் பச்சையாகவே வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்:

என் கைக்கு அதிகாரம் வந்தால்-நான் சர்வாதி காரியானால்-இந்தியர்களை இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அத்தனைப் பேரும் கட்டாயம் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் உடன் ஏற்படுத்திவிடுவேன். ஏனெனில், காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இராம ராஜ்ஜியம் ஏற்பட்டுவிட வேண்டும் என்பது என் ஆசை. இராம ராஜ்ஜியம் என்பது வருணாசிரம தர்மத்தை-அவரவர் அவர்தம் ஜாதி முறைப்படியே தொழில் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு திராவிடக் கவியாகிய கம்பரே இதை ஒப்புக்கொண்டும் இருக்கிறார். இது பற்றிய மொழி இலக்கியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தும் இருக்கிறார். இராமராஜ்ஜியம் ஏற்பட வேண்டுமானால் எல்லோரும் சமஸ்கிருதம் படித்துத் தீரவேண்டும் (தமிழன் தொடுத்தபோர்!-மா.இளஞ்செழியன் பக்கம் 80-81)

இதைவிட பச்சையாக யாரால்தான் சொல்ல முடியும்? இதில் இன்னொரு கருத்துக் கதைக்கப்படுகிறது-இந்திதான் இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்ற கூற்று. உண்மையைச் சொன்னால் இவர்கள் கூறும் இந்தியில் 81 பிரிவுகள் உள்ளன. ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. போஜ்புரி பேசுபவர்கள் கோசாவி பிரிவினர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாது.

அந்தப் பிரிவுகளின் பட்டியல் இதோ:

1.இந்தி, 2.உருது 3.இந்துஸ்தானி 4. பிகாரி 5.மைதிலி 6.ராஜஸ்தானி 7.பிரஜ்பாஷா 8.பக்ரி 9.மேவாரி 10.ஜெய்புரி 11. மால்வி 12.சாட்டிஸ்கரி 13.மார்வாரி 14.ஆஜ்மீரி 15.பந்தேலி 16.பலாகி 17.லோடி 18.இராகி 19.ரகோபான்சி 20.தமதி 21.ஜடி 22.பர்தேசி 23.கலாரி 24.பாடு 25.பங்கி 26.கோசாவி 27.ஓகி 28.அவதி 29.நுனியா 30.பைகனி 31.பாண்டோ 32.அதுகுரி 33.பஸ்தாரி 34.மிர்கனி 35.மகேஸ்வரி 36.போயாரி 37.கிர்சார் 38.ராஜ்காடி 39.நிமாதி 40.யல்டா 41.மராரி 42.போவாரி 43.சடாரி 44.பான்சாரி 45.ராஜபுதானி 46.கோர்க்காலி 47.மாதுரி 48.குருமாலி 49.மீர்சாபுரி 50.ஹோஷங்காபாடி 51.அபு 52.பாபி 53.முசல்மானி 54.லோதாந்தி 55.போபாலி 56.கோட்வாரி 57.பூலியா 58.ஜங்கலி 59.ரங்கடி 60.அகிரி 61.புவானி 62.வாணி 63.கந்தால் 64.ரிவை 65.பரத்பூரி 66.கோத்யானி 67.பிரதாப்காடி 68.கங்கேரி 69.கங்காபாரி 70.ஆக்ராவாலி 71.மேர்வாரி 72.தேவநாகரி 73.உத்தாரி 74.பாமி 75.உத்கேதிபோலி 76.பூலி 77.கோரக்பூரி 78.சார்ரேலி 79.பான்சாரி 80.கோர்த்தி 81.போஜ்புரி

இவ்வளவு மொழிகளையும் சேர்த்து இந்தி இந்தி என்று தம்பட்டம் அடிக்கின்றனர். மொத்தமாக 81 மொழிகளைப் பேசுவோரை இந்தி பேசுவோர் என்று பொய் தகவல் கொடுத்து பெரும்பான்மையோர் பேசும் மொழி இந்தி என்கின்றனர்.

குறிப்பாக சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழக வரலாற்றில் அண்ணாவும், கலைஞரும் என்னும் தலைப்பில் மொழி காப்பு நாளில் (25.1.2011) ஆற்றிய சொற்பொழிவு செறிவான கருத்து மணிகளையும், திரளான தகவல் முத்துகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட அழகிய பேழை என்றே சொல்ல வேண்டும்.


இன்றைய நிலையில் இவற்றையெல்லாம் எடுத்துக் கூறுவதற்குத் தமிழர் தலைவரே இருக்கிறார் என்பதும் உண்மையே!

---------------கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை (நிறைவு) --”விடுதலை”30-1-2011

0 comments: