Search This Blog

5.1.11

பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் திறனாய்வு


பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் 24,25-1938 திறனாய்வு

தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகளையும் பேச்சுகளையும் கால வரிசைப்படி தொகுத்து வருங்கால சமுதாயம் பயன்படக்கூடிய வகையில் வெளியிடுகின்ற அரும்பணியினை அருமை இளவல் தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டு பெரியார் களஞ்சியம் - குடிஅரசு என்ற தலைப்பில் முதல் தொகுதி வெளிவரவிருப்பதும், அதனைத் தொடர்ந்து ஏனைய தொகுதிகள் வரவிருப்பதும், பெரிதும் வரவேற்றுப் பாராட்டத்தக்கதாகும் என்று 2009இல் பெரியார் களஞ்சியம் வெளியீட்டிற்குத் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழங்கிய அணிந்துரையில் குறிப்பிட்ட வாழ்த்துக்கேற்ப, அப்பணி தொடர்ந்து, தொய்வில்லாமல், தடைகளின்றி நடைபெற்று வருவதன் சான்றுகள்தான் குடிஅரசு தொகுதிகள் 24, 25 - 1938 அய்யாவின் நினைவு நாளில் 24.12.2010இல் வெளிவருவது என்பதாகும்.

இதுபோன்ற பணி உலகிலேயே எந்த நாட்டிலும் எவரும் செய்யாத பணி - எந்தத் தலைவர் வரலாற்றிலும் காணக் கிடைக்காத பணி - சொல்லப்போனால் காந்தியடிகளுக்கு வேண்டுமானால் ஓரளவு குறிப்பிடலாம். "Collected works of Mahatma Gandhi" என்று வெளிவந்துள்ளது.

இப்பணியைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடாக வெளியிட்டுவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பாராட்டவும் போற்றிப் புகழவும் வேண்டும். போற்றுவதோடு, வாழ்த்துவதோடு நின்று விடாமல் ஒவ்வொருவர் இல்லத்திலும் அகராதி நூல் இருப்பது போல், கலைக்களஞ்சியங்கள் போல் இடம் பெறவேண்டும்.

ஏனென்றால் பெரியாரின் சிந்தனைச் சிதறல்கள், மேடைகளில் எடுத்து வைத்த மேன்மையான கருத்து மணிகளைக் காற்றில் கலந்து போய் விடாமல் அறுவடை செய்து சேர்த்து வைத்த கருத்துக் களஞ்சியம், கருத்துக் குதிர்கள்தாம் குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு, புரட்சி, "Revolt" முதலிய பெரியார் நடத்திய ஏடுகள் ஆகும்.

நூலின் சிறப்பு

தலைவர் கலைஞர் அவர்களே தம் அணிந்துரையில் சுட்டிக் காட்டியதைப்போல் இந்த நூலின் சிறப்பு அம்சமாகத் தந்தை பெரியார் அவர்கள் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களும் அவர் கலந்து கொண்ட எண்ணற்ற நிகழ்ச்சிகளும் எந்தத் தேதியில் என்னென்ன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பதற்கான விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் எல்லாம் வருங்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் - திராவிட இயக்கத்தைச் சில கோணல் புத்தியாளர்கள், குறுக்குச் சிந்தனையாளர்கள் தவறாகப் பிழையாகக் காட்டுகின்ற நேரத்தில் - முறையாகவும் சரியாகவும் தெரிந்து கொள்ளவும் பெரிதும் உதவிடும் என்பதில் அய்யமில்லை.

தொடரும் பணி

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு தொகுதிகள் வெளியிடும் பணி ஏதோ அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்திடும் பணி அல்ல என்பதையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் - தொடரும் பணி. இன்று குடிஅரசு வெளிவருவது - நாளை விடுதலையாக மலரும்.


இப்பதிப்புகள் வெளிவரும் நேரத்தில் புரட்சிக்கவிஞர் பாடிய சித்திரச் சோலைகளே உம்மைத் திருத்த இப்பாரினிலே எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ என்று சோலைகளைப் பார்த்துப் பாடிய பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

இந்தத் தொகுப்பினைச் செப்பமுற வெளிக்கொணரக் கடும் உழைப்பினை நல்கி வரும் பெரியவர் மு.நீ.சிவராசன் முதலாக, அவர் தலைமையிலே தேனீயை விடவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இளைஞர்கள், இளம் பெண்கள், கணினி வடிவமைத்தவர்கள், வடிவமைப்புச் செய்தவர்கள் மா.விஜயன், தஞ்சை ம.லெனின், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அச்சிட்டவர்கள் அதை வெளிக்கொணரப் பாடுபட்ட சைதை மதியழகன் விடுதலை நிருவாகிகள் - ப.சீதாராமன், க.சரவணன் என்று முகம் தெரிந்த - முகம் தெரியாத - பெயர் தெரிந்த, பெயர் தெரியாத அந்தப் பல உழைப்பாளிகளை, இந்த வேளையில் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களின் உழைப்பைக் கைதட்டிப் பாராட்ட வேண்டும். வாய் திறந்து பாராட்ட வேண்டும். அவர்கள் இயக்கத்தினுள் இயக்கமாகப் பணியாற்றி வருகிறார்கள்.

ஆசிரியரின் அயராத உழைப்பு

மெய்ப்புப் படிகளைக் கட்டி மூட்டை, மூட்டையாக ஆசிரியர் சிங்கப்பூர் சென்றாலும், திருச்சி சென்றாலும், அல்லது வேறு சுற்றுப்பயணம் சென்றாலும் உடன் தவறாது எடுத்துச் சென்று இந்த வயதிலும் சுறுசுறுப்பாகப் படித்துத் திருத்தங்கள், கருத்துகளை எடுத்துக்கூறி உரிய நேரத்தில் வெளியிட்டு வரும் பாங்கு அவ்வப்போது உடனிருந்து பார்த்தவர்களே என்னைவிட நன்கு அறிவர்.

ஆராய்ச்சியாளர் என்ற வகையில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை முதன் முதலில் ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றவன் என்ற முறையில் குடிஅரசுக் கட்டுரைகளை 1970-களில் அன்றைய சின்னஞ்சிறு நூலகமாக இருந்து இன்று பெரிய சிறந்த ஆராய்ச்சி நூலகமாக வளர்ந்துள்ள பெரியார் மணியம்மை நூலகத்திலும், லிங்கிச் செட்டி தெருவில் இருந்த மறைமலை அடிகள் நூலகத்திலும் சுவைத்தவன் என்ற முறையில் இத்தொகுப்பு கள் கரும்பாகவும், வெல்லக் கட்டியாகவும் இனிக்கின்றன.

கரும்பென்றால் கூட அடிக்கரும்பு, நடுக்கரும்பு வரைதான் தித்திக்கும். ஆனால், இக்குடிஅரசு தொகுப்புகளோ முழுவதும் தித்திக்கும் ஒட்டுக் கரும்பு என்பேன்.

1938இன் முதன்மை நிலை

குடிஅரசு வெளிவந்த ஒவ்வொரு காலகட்டமும் தந்தை பெரியாரின் வாழ்வில் முதன்மையான கட்டம்தான். அது முதலில் வெளிவந்த ஆண்டான 1925 ஆக இருந்தாலும் சரி, சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 1926ஆம் ஆண்டாயினும் சரி - இப்போது தொகுதிகள் 24, 25 வெளிவந்த 1938 ஆண்டா யினும் சரி முதன்மையான கட்டங்கள்தாம். எனினும் சுய மரியாதை இயக்க வரலாற்றில் மிக முக்கியமான கட்டம் இது.

இதுவரை சுயமரியாதை இயக்கத்தவராக விளங்கிய கல்லடியும், சொல்லடியும் ஏச்சுகளும், இழிப்பும், பழிப்பும் பெற்ற தலைவர் பெரியார் இந்தி எதிர்ப்புத் தலைமைப் பொறுப்பு ஏற்றுத் தமிழன் தொடுத்த முதல் போரினைத் தலைமையேற்று - அதன்பின் சிறை புகுந்து, திராவிடர் இயக்கமாம் நீதிக்கட்சிக்குத் தலைமைப் பொறுப்பு சுமத்தப்பட்டு ஏற்றுக்கொண்ட காலம் இது.

புல் முளைத்துப் போய்விட்டது தேர்தல் தோல்வியால் என்று சொல்லப்பட்ட நீதிக்கட்சி, அய்யாவின் தலைமையில் புதுவாழ்வு பெற்ற காலம். குடிஅரசு ஒவ்வொரு தொகுப்பையும் அதில் காணப்படும் கல்லூரி காணாக் காளையான - அந்த முதுபெரும் கிழவரின் சொற்பெருக்கு - எழுத்துப் பெட்டகம் ஒவ்வொன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது - அவரை விண்ணுயர மட்டுமல்ல அதற்கப்பாலும் கொண்டு செல்ல வைக்கிறது. இத்தொகுப்புகளில் உள்ள விஷயங்களை, செய்திகளைத் திறனாய்வு செய்வது என்று ஒருவர் இறங்கினால் அது இத்தொகுப்புகள் போல் இன்னும் இரண்டு தொகுப்புகளாக முடியும். எனவே குறிப்பிடத்தக்க, மிக, மிக முதன்மையான இரண்டொரு நிகழ்ச்சிகளை மட்டும் தொட்டுக் காட்டி, நூலைப் படிப்பவர்களை உட்புகச் சொல்கிறேன்.

காங்கிரசின் இன்னொரு முகம்

காங்கிரஸ் என்றால் ஏதோ விடுதலைக்குப் பாடுபட்ட இயக்கம் என்று மட்டும்தான் எண்ணிக் கொண்டிருப்பவர் களுக்கு அக்காலக் காங்கிரஸ் பேரியக்கத்தின் இன்னொரு முகம் இத்தொகுப்பைப் படித்தால் தெரியும் என்று கூறுவதால் காங்கிரசு அன்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் கடைசி வரை கதர் உடுத்திய என் தந்தை, காங்கிரசில் பல்லாண்டுகளாகத் தலைமைப் பொறுப்பை ஏற்ற குடும்பத்தைச் சேர்ந்த சுயமரியாதைக்காரன் - தந்தை பெரியார் என்ன நோக்கத்திற்காகக் காங்கிரசிலிருந்து கொண்டிருந்தாரோ, என்ன நோக்கத்திற்காகக் காங்கிரசைவிட்டு விலகி னாரோ, என்ன நோக்கத்திற்காகச் சுயமரியாதை இயக்கம் தொடங்கினாரோ அந்தக் கோட்பாடுகளை உறுதியாகப் பின்பற்றி இருப்பவன்.

காலித்தனம்

தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறித் தன்மதிப்பு இயக்கம் கண்ட பிறகு காங்கிரசு இயக்கத்தவர் மட்டுமல்ல, காங்கிரசுப் பத்திரிகைகளும் காலித்தனத்திற்கு ஆதரவாக இருந்திருப்பதைக் காண்கிறோம்.

காங்கிரஸ் ராஜ்ஜியமும் கவர்னர் கடமையும் எனும் முதல் கட்டுரையில் தொடக்கமே இப்படித்தான் - எச்சரிக்கை என்பதோடு தொடங்குகிறது.

காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய முட்டாள்தனமானதும் சூழ்ச்சிகரமானதுமான காரியங்களைப் பற்றி யார் சமாதானம் கேட்டாலும் காலித்தனத்தையும் பலாத்காரத்தையுமே சமாதானமாக உபயோகிக்கத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

காங்கிரஸ்காரர்கள் தவிர வேறு யாருக்கும் பொதுக்கூட்டம் கூட்டும் உரிமையே இருக்கக் கூடாது என்பதுதான் காங்கிரஸ்காரர்களின் சுயராஜ்ஜியமாகவும் பேச்சுச் சுதந்திரமாகவும் இருந்து வருவதாகவும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. சற்றேறக் குறைய இந்த இரண்டு மூன்று வருஷ காலமாய்க் காங்கிரஸ்காரர்களின் காலித் தனத்தை அவ்வப்போது நாம் வெளியிட்டு வந்திருப்பதுடன் அப்படி வெளியிடும் ஒவ்வொரு, சந்தர்ப்பத்திலும் பொது ஜன சமாதானத்துக்கும் அமைதிக்கும் காப்பளிக்கும்படி, பொறுப்பான அதிகாரிகளுக்கும் கவர்னர் பிரபுக்கும் வேண்டுகோள் செய்துகொண்டே வந்திருக்கிறோம்.

தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கூட்டங்களில் 100-க்கு 99 கூட்டங்களில் காங்கிரஸ் காலிகள் கலகம் செய்தே வந்திருக்கிறார்கள். இவற்றைக் காங்கிரஸ் பத்திரிகைகள் விளம்பரப்படுத்திக் காலிகளுக்கு உற்சாகமூட்டி மறுபடியும் மேற்கொண்டும் மற்ற இடங்களி லும் காலித்தனம் செய்ய தூண்டியே வந்திருக்கின்றன.

காங்கிரஸ் காலிகளால் கூட்டங்களில் மிக்க இழிவானதும், கோபமூட்டத்தக்கதுமான வார்த்தைகளையும் வேண்டுமென்றே தூஷணையான விஷயங்களையும் கொண்ட துண்டுப் பிரசுரங்களை அள்ளி இறைப்பதும், கையில் கொடுப்பதும், தபாலில் அனுப்புவதுமான அயோக்கியத் தனங்கள் ஏற்பட்டு வேண்டுமென்றே மக்களை வம்புக்கு இழுப்பது போன்ற காரியங்கள் நடந்த வண்ண மாகவே இருந்திருக்கின்றன.

கூட்டங்களை எப்படியாவது கலைத்து விடுவதிலேயே காலிகள் கவலை வைத்து எவ்வளவு பொறுப்புடனும் பயத்துடனும் நடந்து கொள்ளும் கூட்டங்களிலும் காங்கிரஸ் காலிகள் சிலர் கூடிக் கொண்டு ஜே போட்டு கலகம் செய்வதும் சிறு பிள்ளை களைத் தூண்டிவிட்டுத் தொல்லை விளைவிப்பதுமான காரியம் செய்தே வந்திருக்கிறார்கள். இவ்வளவையும் பொறுமை யுடன் சமாளித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

அன்றைய காங்கிரஸ்காரர்கள் ஏதோ காந்திய நெறி - வன்முறையற்ற அகிம்சா நெறி வழி நடந்து, வந்தே மாதரம் கூறிக் கைராட்டையில் நூற்று, ஈசுவர அல்லா தேரேநாம் வைஷ்ணவ ஜன்தோ என்று பாடிக் கொண்டிருந்தவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. பெரியார் கூட்டங்களில் மட்டுமல்ல - மதுரையில் பேசிய சர்.குமாரசாமி ரெட்டியார் கூட்டத்தில் சர்.பி.டி. ராஜர் அமைச்சராய் இருக்கும் போதே சேலம், கோயம்புத்தூர் கூட்டங்களில், திருச்சி, சேலத்தில் தோழர்கள் சித்தையன், நடேசன் முதலியவர்களை மேடைக்கு அழைத்து நையப்புடைத்த சம்பவங்கள், திருச்சி தமிழர் மாநாட்டில் நடந்த காலித்தன நிகழ்ச்சிகள் என்று பெரியார் பட்டியல் போடுகிறார்.

காந்தியவாதிகள் கல்லெறிந்த போது சுயமரியாதைக் காரர்களை எதிர்த்துத் தாக்க, வன்முறையில் இறங்கப் பெரியார் ஒருபோதும் அனுமதிக்காத உண்மையான அகிம்சாவாதியாக இருந்திருக்கிறார். அப்படிப் பட்ட உணர்வு கொண்டவர்களை அழைத்துக் கண்டித்து முன்னே நிற்காதே என்று விரட்டிய உத்தமத் தலைவராக விளங்கியிருக்கிறார் என்பதற்கு இத்தொகுப்புகள் சான்று மட்டுமல்லாது - எவ்வளவு உயர்ந்த பண்பாளர் பெரியார் என்று காட்டுவதைப் பெரியாரின் இந்த நினைவு நாளில் இந்தத் திறனாய்வு வழி பதிவு செய்தல் வேண்டும்.

-------------முனைவர் பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் --(24.12.2010 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் - எழுத்துரை) 2-1-2011

*****************************************************************

பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள்


24, 25-1938 திறனாய்வு - 2

இன்றைக்கு இருக்கிற இளைய தலைமுறை பெற்றிருக்கிற கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, கல்வி உயர்நிலை, சமுதாய அந்தஸ்து எல்லாம் பெரியார் - பெரியாரின் இயக்கம் போட்ட பிச்சை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

பெரியார் பெற்றுத்தந்த சுகவாழ்வு- அவர் அதற்காக பட்ட கஷ்டங்கள் என்ன என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழனின் இல்லத்திலும் அவர் எந்த இயக்கத்தில் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் - ஆனால் பெரியார் படம் - பெரியார் நினைவு இருக்க வேண்டும்.

குடிஅரசு 13.3.1938இல் வந்த தலையங்கத்தின் ஒரு பகுதியான இதை ஊன்றிப் படித்து எவ்வளவு துயரம், துன்பம், சிரமம் தாங்கிப் பெரியார் என்னும் மாமனிதர் தன் சுகதுக்கங்களைத் துறந்து இதனைச் செய்திருக்கிறார் என்பதற்கான ஆதாரமான இதனை மனதில் ஒவ்வொருவரும் நிலைநிறுத்த வேண்டும்.
காங்கிரசின் பொறுமையும், அகிம்சா தர்மமும் யாரையும் விட நமக்கு நன்றாய்த் தெரியும். காங்கிரஸ் சரித்திரத்தில் அகிம்சை என்ற பேச்சு வந்து புகுந்தது முதல் நாளது வரை எந்தச் சந்தர்ப்பத்தில் தங்களுக்குத் திருப்பி அடிக்கச் சக்தியிருந்த காலத்தில் அகிம்சை தர்மத்தைக் காட்டி வந்தது என்று ஏதாவது ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக் காட்டுமா என்று கேட்டுகின்றோம்.

காங்கிரஸ் காலித்தனம் செய்யாத கூட்டமுண்டா?

இதுவரை சுயமரியாதைக்காரர்கள் சுமார் 3000, 4000 பொதுக் கூட்டங்கள் கூடி 500 முதல் 20,000 ஜனங்கள் கொண்ட கூட்டம் வரையில் பேசியிருக்கலாம். இவற்றுள் காங்கிரஸ்காரர்கள் வந்து காலித்தனம் செய்யாத செய்ய முயற்சித்துப் பார்க்காத, செய்து பார்க்கலாமா என்று எண்ணாத கூட்டங்கள் ஒரு 10 அல்லது 20 கூட இருக்காது என்று சொல்லலாம். மற்றபடி காலித்தனங்கள் செய்ய நேர்ந்த ஒவ்வொரு கூட்டத்திலும் கல்லு, மண்ணு, கோழிமுட்டை, சாணி எறியப்பட்டதும், குடிகாரர்களுக்குக் கள்ளு வாங்கிக் கொடுத்துக் கூப்பாடு போடச் செய்ததும், சிறுபிள்ளைகளை விட்டு ஜே போடச் செய்து கலவரம் செய்வதும், அனாவ சியமான கேள்விகள் கேட்டு காலித்தனம் செய்வதும், சுயமரியாதைக் கூட்டம் நடக்கு மிடத்தில் பக்கத்தில் வேறு கூட்டம் போட்டுக் கூப்பாடு போடுவதும், பக்கத்தில் தப்பட்டை மேளம் அடித்து தொல்லை விளைவிப்பது சமீபத்தில் நின்றுகொண்டு ஜனங்களைக் கூட்டத்துக்கு வரவொட்டாமல் தடுத்து திருப்பி அனுப்புவதும், துண்டு நோட்டீசு களை கொண்டு வந்து கூட்டங்களில் விநியோகித்து கலாட்டா செய்வதுமான பல அற்பத்தனமான காரியங்களாகும்.

எப்படிப்பட்ட இழிமகனும் செய்யத் துணியாத கேவல செய்கைகளும் செய்து தான் வந்திருக்கிறார்கள் என்றாலும் இந்த 3000, 4000 கூட்டங்களில் ஒரு கூட்டமாவது கலவரத்தினால் கலைக் கப்பட்டு விட்டதென்றோ பேச்சுக்கள் முடிந்து தலைவர் முடிவுரை நடந்து தலை வருக்கும் கூட்டத்துக்கும் வந்தனோப சாரம் சொல்லி முடிக்கப்படாத கூட்டம் ஏதாவது ஒன்றை ருஜு செய்தால் ரூ.1000 சன்மானம் கொடுக்கிறோம் என்று விளம்பரம் செய்கிறோம்.

முன்சொன்னபடி சுயமரியாதைக் கூட்டங்களில் எவ்வளவு காலித்தனமும் கலாட் டாவும் நடந்திருந்தாலும் சுயமரியாதைக்காரர் கள் ஒரு ஆளையாவது ஒரு சிறு பையனையாவது அடித்தார்கள். கையால் தொட்டுத் தள்ளினார்கள் என்றாவது நிரூ பித்து விட முடியாது. ஏனெனில், தோழர் ஈ.வெ.ரா. இருக்கும் கூட்டங்களில் எல்லாம் தோழர் ஈ.வெ.ரா. எவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டாலும் சமாளித்து சுயமரியாதைக் காரர்களையே கண்டிப்பதின் மூலம் எதிரிகள் வெட்கப்படும்படிச் செய்து அடக்கி காரியம் முடித்து வரப்பட்டிருக்கிறது.

உதாரணமாக ஒரு மாத காலத்தில் 34 இடங்களில் காங்கிரஸ் காலிகள் கலகம் நடத்தி இருக்கிறார்கள். அவைகள் காங்கிரஸ் பத்திரிகைகளிலேயே வந்திருக்கின்றது. காஞ் சிபுரத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அண்ணாத் துரை ஆகியவர்கள் பேசும்போது காங்கிரஸ் காரர்கள் காலித்தனம் செய்தார்கள்.

தஞ்சாவூர் மாநாட்டின்போதும் போடப் பட்ட பொதுக் கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேசும் போது காங்கிரஸ்காரர்கள் பலருக்குக் கள்ளை வாங்கி ஊற்றிக் கலவரம் செய்தார்கள். கைகலக்கும்படியான நிலைமை ஏற்பட்டது. உடனே தோழர் ஈ.வெ.ரா. சுயமரியாதைக் காரர்களைக் கோபித்துக் கொண்டதால் காங்கிரஸ் காலிகள் தங்கள் இஷ்டம் போல் கூப்பாடு போட்டு அவர்கள் வாய் வலித்ததால் தானாக அடங்கினார்கள் - அன்று அது கார ணமாய் இரவு 10 மணி வரை கூட்டம் நடந்தது.

நீடாமங்கலம் நிகழ்ச்சி

தமிழகத்தில் சிலர் திராவிட இயக்கம் குறிப்பாகத் திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது? தந்தை பெரியார் பெரிதாக என்ன செய்து விட்டார் சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு என்று அறியாமை யாலோ அல்லது தெரிந்தோ கேட்பது வழக்கம். அவர்களுக்கு விடையளிக்கும் நிகழ்ச்சியாக அமைவது நீடாமங்கலம் நிகழ்ச்சியாகும்.

நீடாமங்கலம் காங்கிரஸ் அரசியல் மாநாட்டில் ஆதி திராவிடத் தோழர்களுக்கு நேரிட்ட கொடுமையை ஆதாரபூர்வமாக ருஜுக்களுடன் கொடுமைக்கு ஆளானவர்களின் அறிக் கைகளோடு குடிஅரசு எடுத்துக்காட்டியது உண்மையிலேயே ஒரு பெருங்கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அத்தோடு அய்யாவின் மொழியில் கூறுவதானால் காங்கிரசின் உடுக்கைகளுக்குக் கிலி பிடித்து விட்டது. காங்கிரஸ் சிகாமணிகளின் யோக்கியதையும் இவர்களுக்குத் தாளம் போடும் தன்னலக்காரரின் வண்டவாளமும் வெளிப்பட்டுச் சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டது.

நீடாமங்கலம் கொடுமைக்கு ஆளான வரின் குரலில் சொன்னால் உண்மையில் இன்றும் கேட்பவர்களின் நெஞ்சம் பதை பதைக்கும். நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை மாவட்ட அரசியல் மாநாட்டில் ஆதி திராவிடத் தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர் களைத் துன்புறுத்தி மொட்டையடித்துச் சாணி ஊற்றிக் கொடுமை செய்துள்ளனர்.

அதில் பாதிக்கப்பட்ட தோழர் தேவ சகாயம் 26.1.1938 அன்று ஈரோட்டில் ஆற்றிய உரை 30.1.1938இல் வெளியானது.

ஆண்டமாரே! நாங்கள் நீடாமங்கலம் காங்கிரஸ் கூட்டத்திற்கு வேடிக்கை பார்க்கப் போனோம். அங்கு எல்லோரும் சாப்பாட் டிற்குப் போகும்போது எங்களையும் கூப்பிட் டார்கள். நாங்களும் சாப்பாட்டிற்குப் போனோம். பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எங்களை ஒரு சபாபதி உடையார் என்பவர் வந்து தலைமயிரைப் பிடித்து இழுத்து ஏண்டா பள்ளப் பயல்களா? உங்களுக்கு இவ்வளவு ஆணவமா, இந்தக் கூட்டத்தில் வந்து உட்கார்ந்து சாப்பிடலாமா? என விறகுக் கட்டையால் அடித்தார்கள். அடி பொறுக்க மாட்டாமல் சிலர் ஓடி ஆற்றில் விழுந்து அக்கரைக்குப் போய்விட்டார்கள். நாங்கள் சிலர் அடிபட்டு வீட்டிற்குப் போய் விட்டோம். மறுநாள் நாங்கள் வயலில் அறுவடை அறுத்துக் கொண்டிருக்கும்போது கூட்டத் தில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டது யார்? அவர்களைக் கொண்டு வா என்று கிருஷ்ணமூர்த்தி அய்யர் வந்து சொன் னார். நான் போனேன். அப்போது அய்யர் அவனைச் சும்மா கொண்டு வருகிறாயா? அடிபடவாவை என்று சொன்னார். தலை யாரி மாணிக்கம் தடிக்கம்பால் அடித்துக் கொண்டு வந்தார். அடி பொறுக்க மாட்டாமல் ஓட ஆரம்பித்தேன். என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விளா மரத்தில் கட்டி வைத்து மறுபடி 10 அடி தடிக்கம்பால் அடித்தார். நாட்டாமைக்காரர் அடைக்கலம், நாட்டாமை ராமன் ஆகியவர்களை அய்யர் கூப்பிட்டு இவனை அவிழ்த்துக் கொண்டு போய் மொட்டை அடித்துச் சாணியை ஊத்தி விடு என்று சொன்னார். அந்தப் பிரகாரம் பாரியாரிமகன் ஆறுமுகம் மொட்டை அடித் தார். தலையாரி மாணிக்கம் சாணி ஊத்தி னார். பிறகு நாங்கள் தலையை முழுகிவிட்டு வீட்டிற்குப் போய்விட்டோம்.

குடிஅரசு ஏட்டில் மட்டுமல்லாது, விடுதலை ஏட்டிலும் இச்செய்தி வெளியாயிற்று. ஆனால் அதைக் காங்கிரஸ் தோழர்கள் அடியோடு மறுத்துக் கூறியதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்டத் தப்பான வழிகளில் முயற்சித்தனர். இச்செய்தி வெளியான 15 நாள் கழித்து, அடிபட்டு- உதைபட்டு மொட்டை அடித்துச் சாணி அபிடேகம் செய்யப்பட்ட ஆதிதிராவிடர் பலரைப் பிடித்துக் கொண்டு வந்தும் மிரட்டி, அம்மாதிரியான செயல் ஒன்றுமே நடக்கவில்லையென்று எழுதிக்கொண்டு, அதில் அவர்களது கையெழுத்து வாங்கி அதில் சேராதவர்கள் புகைப் படத்தையும், வாக்குமூலத்தையும் பத்திரிகைகளில் போட்டு மக்களை ஏமாற்றப் பார்த்ததுடன் விடுதலை பத்திரிகை பொய்யான சேதியை வெளிப்படுத்திற்று என்று தலைப்புக் கொடுத்து தினமணி முதலிய பத்திரிகைகள் பிரச்சாரம் செய்தன.

எனவே உள்ளத்தை உருக்கும் வகையில் குடிஅரசு இதைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியது. அதில் உள்ள இக்குறிப்பிடத்தக்க வரிகள் அன்றைய நாளில் தாழ்த்தப்பட்டவர் இருந்த நிலையைத் தெற்றென விளக்கும்.

ஆதிதிராவிடர்கள் நிலைமை பழைய கால அடிமைத் தன்மையே ஆகும். அங்குள்ள நிலங்களில் உள்ள மரங்கள் எப்படி அந்த நிலக்காரனுக்குச் சொந்தமோ, அதுபோலவே அந்த நிலம் விற்கப்பட்டால் எப்படி மரமும் வாங்கினவனுக்குச் சேருமோ அது போலவும் ஒவ்வொரு நிலத்துக்கும் சில ஆதி திராவிட மக்கள் அடிமைகளாக இருந்து பூமி கைமாறியவுடன் அவர்களும் கூடவே பூமியை விலைக்கு வாங்கினவனுக்கு அடிமையாவது இன்றும் வழக்கம்.

--------------------(தொடரும்) 3-1-2011



பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள்


24, 25-1938 திறனாய்வு 3




அந்த ஆதிதிராவிடன் அந்த வயல் நிலத்தில் வயல்காரனுடைய கருணையால் குடியிருக்க வேண்டியவனாவான். நந்தன் கதையில் உள்ளது போல் அந்தந்த வயலுக்கு அங்கிருக்கும் ஆதிதிராவிடனே பரம்பரைப் பண்ணை ஆளாக இருக்க வேண்டிய வனாவான். அவனுடைய சகல சுதந்திரமும், வாழ்வும் மிராசுதார் என்று அழைக்கப்படுகிற பூமிக்குடையவனைச் சேர்ந்ததாகும்.


பூமிக்குடையவன் அவனை அடித் தாலும், உதைத்தாலும் வேறு என்ன கொடுமை செய்தாலும் கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அந்த மிராசுதாரன் மீது பிராது செய்யவும் எவனும் துணியமாட்டான். அப்படி ஏதாவது பிராது செய்து விட்டால் அவனுக்கு வேறு போக்கிடம் கிடையாது. அப்படிப்பட்டவன் குடியிருக்க இடமில்லாமலும், சாப்பாட்டுக்கு வகை இல்லாமலும் பட்டினி கிடந்து தெருவில் செத்துக் கிடக்க வேண்டியதுதான். வேறு மிராசுதாரன் இதற்குச் சிபார்சுக்கு வரவோ ஆதரிக்கவோ ஆரம்பித்தால் பிறகு அவனது அடிமையை அவன்மீது ஏவி விட்டு விடு வார்கள். ஆதலால் மிராசுதார் கொடுமைக்கு ஆளாக இஷ்டப்படவில்லையானால் ஒரு ஆதி திராவிடன் மலாய் நாட்டுக்கோ மோரீ ஷுக்கோ ஓடவேண்டியதுதானே தவிர, அவனுக்கு அந்நாட்டில் போக்கிடம் கிடை யாது. ஆதலால் அங்கு ஆதி திராவிடர்கள் மிருகங்களிலும் கேவலமாகக் கருதப் படுகிறார்கள்.


இந்த லட்சணத்தில் நீடாமங்கலம் சேதியை விடுதலை பிரசுரித்திருப்பதற்காக அதன் பிரசுரகர்த்தா தோழர் ஈ.வி.கிருஷ்ண சாமி மீது, ஆசிரியர் தோழர் எஸ். முத்துசாமிப் பிள்ளை மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப் போவதாகத் தஞ்சை வழக்கறிஞர் கே.த.பாலசுப்பிரமணிய அய்யர் பி.ஏ., பி.எல்., அவர்கள் ஓர் உடை யாருக்காக நோட்டீசு கொடுத்திருக்கிறார்கள்.


இதில் ஒரு வேடிக்கை - நீடாமங்கலத்தில் மொட்டையடித்த தோழர் கே.ஆறுமுகம் எழுதிய கடிதம் 16.2.1938 குடிஅரசு ஏட்டில் வெளிவந்தது. அவர் எழுதியிருப்பதைப் படித்தால் உண்மை மேலும் தெளிவாகும்.


அய்யா, நீடாமங்கலம் அரசியல் மாநாட்டில் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டதற்காக என்னையும் என்னுடன் சேர்ந்த சுமார் 10, 20 பேர்களையும் தலை மயிரை மொட்டையடிக்கும்படி அநுமந்தாபுரம் பண்ணை எஜமான் கிருஷ்ணமூர்த்தி அய்யர் சொல்லியபடி நான்தான் எல்லோருக்கும் தலைமயிரை மொட்டையடித்தேன். எனக்கும் மொட்டையடிக்க வேண்டுமென்று சொன்ன பொழுது என் தகப்பனார் அய்யர் முன் விழுந்து என் மகனுக்குக் கல்யாணம் பேசி யிருக்குது. அவன் மயிரை மட்டும் மொட் டையடிக்க வேண்டாம் என்று கெஞ்சினார்.


என் தலைமயிரைக் கொஞ்சமாவது முன்னும் பின்னும் எடுக்கும்படி என் தகப்பனாரிடம் சொன்னார். என் தகப்பன் எனக்கு முன்னும் பின்னும் தலை மயிரைச் சிரைத்தார். நான் மொட்டையடித்த சுமார் 20 பேர்களில் எனக்கு ஞாபகமுள்ளவர்கள் பெயர்கள் வருமாறு:


முழு மொட்டையடிக்கப்பட்டவர்கள்:

1. தேவசகாயம், 2. செல்வம், 3. துளசி, 4. ராமையன், 5. கூத்தன், 6. செங்கோல், 7. சின்னப்பன், 8. எஸ்.ஆரோக்கியம், 9. செல்வ ஆரோக்கியம், 10. சூசை மாணிக்கம், 11. கோபாலன், 12. வீரைய்யன், 13. சாமியப்பன், 14. பொ.ரெத்தினம், 15.கா.ரெத்தினம், 16. தங்கமுத்து, 17. ஆறுமுகம்.


எனக்கு மட்டும் கொஞ்சம் முன்னும் பின்னும் என் தகப்பன் மயிரைச் சிரைத்தார். மற்றும் இருவருக்கு அதாவது சின்னப்பன், தங்கமுத்து ஆகியவருக்குக் கல்யாணமாக வேண்டி இருந்ததால் அவர்கள் கேட்டுக் கொண்டதால் முன்னும் பின்னும் கொஞ்சம் சிரைத்தேன். இவைகள் முற்றும் உண்மை யாகும்.
பார்த்தீர்களா, ஜாதித் திமிரின் வெறி யாட்டத்தை? இந்தக் கொடுமையை அக்கிர காரம் நம்மவர்களைக் கொண்டே நிறை வேற்றியிருக்கிறது. அடிபட்டவன், அடித் தவன், மொட்டையடித்தவன், மொட்டை யடிக்கச் செய்பவன் அத்தனை பேரும் நம்மவர்கள். ஆனால் மொட்டையடித்துச் சாணி ஊற்றச் சொன்னவன் அனுமந்தபுரம் பண்ணை ஏஜண்டு கிருஷ்ணமூர்த்தி அய்யர். பண்ணை உரிமையாளர் கூட அல்ல; பண்ணை ஏஜண்டு. தில்லானா மோகனாம் பாளில் வரும் சவுடால் வைத்தி போன்ற பார்ப்பான்.

அடிபட்ட தோழர்கள் மகஜர் அனுப்பியது, அவர்கள் ஜாதிக்காரப் பிரமுகர்களான கனம் முனுசாமி பிள்ளைக்கும் மேயருக்கும். அதற்குப் பதிலில்லை. பதில் கூற வக்கில்லை. ஆனால் விளம்பர மந்திரியிடம் விஷயத்தில் சம்பந்தப்படாத தோழர் சூசை உண்மையை விளக்குகிறார் என தினமணியில் பிப்ரவரி 2, 1938இல் வெளியாயிற்று. அதுதான் அபத்தத்தின் சிகரம்! அநாகரிகத்தின் உச்சி! போக்கிரித்தனமும் பேடித்தனமும் கலந்து விஷமம் என்று குடிஅரசு 6.2.1938இல் கட்டுரை ஒன்று தீட்டித் தினமணியின் ஊளை என்று வெளியிட்டது.


பனகால் அரசர் வாசக சாலை ஆண்டு விழா

1.3.1938இல் காஞ்சிபுரம் பனகால் அரசர் வாசக சாலை ஆண்டு விழாவில் புத்தகச் சாலை இயக்கம் குறித்துப் பெரியார் பேசிய பேச்சு குறிப்பிடத்தக்க ஒன்று. இன்றும் பொருத்தமானது.


தமிழ் பாஷை நமக்கு நன்மை அளிக்க வில்லை. நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும் தன்மான உணர்ச்சிக்கும் தமிழ் எவ்வளவோ புரிந்திருக்கிறது. அது இல்லாத வரை இவ்வளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்குகளாகவே (அனுமார்களாகவே) இருந்திருப்போம். ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டுமானால் பரப்ப வேண்டுமானால் மதத்திலிருந்து பிரிக்க வேண்டும். விஞ் ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண் டும். பத்திரிகைகளும், வெறும் அரசியலும் மதமுகமாகத்தான் இருக்கிறதே தவிர பொது அறிவுக்குப் பத்திரிகை இல்லை. பொது அறிவு பரப்பக்கூடிய பத்திரிகைகள் மலிந்திருக்கு மானால் மதத்தினால் அரசி யலில் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழிவுகளும், கேடுகளும் ஏற்பட்டிருக்கவே மாட்டா.


---------------------------முனைவர் பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் --(24.12.2010 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் - எழுத்துரை) --"விடுதலை” ----தொடரும்5-12011






0 comments: