Search This Blog

1.1.11

நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தால் என்ன ஆகும்?


வழிகாட்டும் தலைமைச் செயற்குழு (3)
நுழைவுத் தேர்வு எதிர்ப்பு - நடந்துவந்த பாதை!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த எச்.வி. ஹண்டே சட்ட மேலவையில் கோடிட்டுக் காட்டினார்.


மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வு (Entrance Exam) நடத்தும் யோசனைபற்றி தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றார்.


ஹண்டே அறிவித்ததுதான் தாமதம். நச்சு விதையை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், அது ஆலகாலமரமாகி மக்களைக் கொன்று தீர்த்துவிடுமே.
செய்தி வந்த அன்றே கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நுழைவுத் தேர்வு: ஆபத்தான யோசனை என்று கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். (விடுதலை, 23.3.1982).


காமராசர் அவர்கள் முதல்வராக இருந்தபோதும், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதும், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும் - ஏற்கப்படவில்லை இந்த யோசனை. செயல்படுத்த முனைய வில்லை அன்றைய அரசுகள் என்றால், அதற்குத் தெளிவான, திட்டவட்டமான காரணங்கள் இருந்தே தீரவேண்டும் என்பதை இன்றைய முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் உணர்வார் என்று நம்புகிறோம்.


அ.தி.மு.க. ஆட்சி வகுப்புரிமையை அடிக்கடி புதைகுழிக்கு அனுப்ப முயற்சிக்கும் ஓர் ஆட்சி என்ற கெட்ட பெயர் தமிழர்கள் மத்தியில் - கட்சி வேறு பாடின்றி பெற்ற ஒரு கட்சியாக ஏற் கெனவே 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணை, பொருளாதார அடிப்படையில் சலுகை தேவை என்ற பேச்சு; என் ஜினீயரிங், மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களைத் தேர்ந் தெடுக்க இன்டர்வியூ மார்க்குகள் 75 ஆக இருந்ததை 30 ஆகக் குறைத்த நடவடிக்கை போன்ற பலவகை முறை களால் இந்த அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.


இப்போது புதிய கேடு ஒன்றினைத் தொடங்கி வைக்கும் திருப்பணியையும் வரும் கல்வி ஆண்டிலிருந்து செய்ய முனைகிறார்கள் என்றால், தமிழர்களுக் குப் பேரபாயமான ஒரு புதிய ஏற்பாடும் தயாராகி வருகிறது என்றே அதற்குப் பொருள். (விடுதலை, 23.3.1982) என்று அறிவித்த கழகப் பொதுச்செய லாளர் அந்த அறிக்கையின் இறுதியில் கிளர்ச்சிகள் வெடிக்க வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நுழைவுத் தேர்வு ஆணை கொளுத்தவும் பட்டது (17.6.1984).


நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தால் என்ன ஆகும்? அந்த அறிக்கையிலேயே அதற்கும் விடையளித்திருந்தார்.


நுழைவுத் தேர்வு என்று வைத்தால், பார்ப்பனர்களும், பணக்காரர்களும்தான் அதனால் பலன் பெறுவார்கள் டம்மி நெம்பர் வைத்தால்கூட அதற்கும் லஞ்சம் கொடுத்து தெரிந்துகொண்டு, மார்க் வேட்டை ஆடிவிடுவார்கள். பதவியில் உள்ளவர்கள் வீட்டுப் பிள்ளைகளும், பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளும், பணக்கார சீமான் வீட்டுப் பிள்ளைகளும், பட் டணத்துப் பிள்ளைகளும்தான் இதன் மூலம் பயன் அடைவார்களே தவிர, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களும், பட்டிக்காட்டுப் பிள்ளை களும், ஏழைகளும் இதனால் பாதிக்கப் படவே செய்வார்கள்.


மேற்காட்டிய முதல் ரக பிரிவினர்க்கு மார்க் வாங்கும் ரகசியம் தெரியும். ஆனால், அடுத்த பிரிவில் உள்ளவர் களுக்குத் தெரியாது என்று நடைமுறை உண்மையை - தோலை உரித்து சுளையை முழுமையாகக் காட்டினார் கழகப் பொதுச்செயலாளர்.
மாண்புமிகு நாவலர் இரா. நெடுஞ் செழியன் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தநேரத்தில் (1972 இல்) நுழைவுத் தேர்வு என்று தன்னிச்சையாக ஒரு பேச்சை ஆரம்பித்தார். அவ்வளவுதான்! தந்தை பெரியார் அவர்களிடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார் (17.7.1972).


அதற்குப் பின் அதுபற்றிய பேச்சே இல்லை. கப்-சிப் என்று பிறந்த தரு ணத்திலேயே மரணக் குழிக்குப் போய் விட்டது. முதலமைச்சர் மானமிகு கலை ஞர் ஆயிற்றே - அதற்குமேல் அனுமதிப்பாரா? நுழைவுத் தேர்வைத்தான் ஏற்றுக் கொள்வாரா?


இதில் இன்னொன்றையும் இந்த நேரத்தில் நினைவூட்டுவது மிகமிக முக்கியமாகும். நுழைவுத் தேர்வு விடயத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க் சிஸ்ட்) கட்சி எப்படி பார்ப்பனத்தனமாக நடந்துகொண்டது என்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி அது.


இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. நல்லசிவன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் நுழைவுத் தேர்வை ஆதரித்துப் பேசினார். இதகுறித்து அவர் கட்சியின் நிலைப்பாடாக அறிக்கை கொடுத்ததும் உண்டு.

வானொலிப் பெட்டிகளும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் கிராமப்புற மக்களிடையும் பரவலாகிவரும் இன்றைய சூழ்நிலையில், நுழைவுத் தேர்வில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பயம் தேவையற்றது. மேலும் நுழைவுத் தேர்வில் கேட்கப்படும் மாதிரிக் கேள்விகள் - அவற்றிற்கான மாதிரிப் பதில்கள் அவற்றை உடனுக்குடன் அச்சிட்டு விநியோகிக்க ஏராளமான நூல் நிறுவனங்கள் முன்வரும்போது கிராமப்புற மாணவர்களும் அந்த அறிவைப் பெறுவதில் பின் தங்கிவிட மாட்டார்கள்.

நவீன போக்குவரத்துச் சாதனங்களும், தகவல் தொடர்பு அமைப்புகளும் வளர்ச்சி அடைந்துவரும் இந்தக் காலத்தில் கிராமப்புற மாணவர்கள், பின் தங்கி விடுவார்கள் என்று பயப்படத் தேவையில்லை என்றும் சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிக்கையையே வெளியிட்டார். இதனை மறுத்தும், கண்டித்தும் அப்பொழுதே திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.

இந்து ஏட்டின் கருத்துதான், பா.ஜ.க.வின் கருத்துதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தா என்ற வினாவையும் அந்த அறிக்கையில் எழுப்பியிருந்தார். (விடுதலை, 23.3.1982). கண்ணீர் மல்கும் கிராமப்புறங்களும், களைகட்டி நிற்கும் நகரப்புறங்களும் ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் சம நிலையில் இருப்பதாகச் சொன்ன சொல் - என்றும் நின்று அவர்களை வினாக் கணைகளால் துளைத்துக் கொண்டே இருக்கும். பொருளாதாரப் பார்வையில் பார்த்தாலும், கிராமப் பொருளாதாரமும், நகரப் பொருளாதாரமும் சம தட்டில் நிற்கின்றனவா என்று சாதாரண மனிதன்கூட போகிற போக்கில் கேட்டுவிட்டுப் போவானே!

கல்விக் கூடங்கள் அதன் கட்டமைப்புகள், உபகரண வசதி வாய்ப்புகள், சோதனைக் கூடங்கள் (லேபரட்டரீஸ்), நூலகம் என்று வரிசைப்படுத்திப் பார்த்தாலும் - ஏணி வைத்தாலும் எட்டாத வறிய கோலத்தில்தான் கிராமப் பள்ளிகள் இருக்கின்றன என்பதை மார்க்சிஸ்ட்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் கடமையையும் பெரியாரியல், அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான் செய்தது.

காலந்தாழ்ந்தாலும் சி.பி.எம். இப்பொழுது அந்த முடிவை மாற்றிக் கொண்டு நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். 20.12.2010 அன்று சென்னையில் கூடிய சி.பி.எம். மாநிலக் குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொது மருத்துவ நுழைவுத் தேர்வை அகில இந்திய அளவில் மருத்துவக் கவுன்சிலே நடத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் இட ஒதுக்கீடு, மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவிகிதம் என்பது இல்லாமல் போய், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனி ஆகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு பொது மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல் முறையீடு செய்யவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இந்தத் தீர்மானத்தை கை ஒலி எழுப்பி வரவேற்கிறோம். கிராமப்புற மாணவர்களின் நிலையை 28 ஆண்டுகளுக்குப் பிறகாவது சரியாகப் புரிந்துகொண்டிருப்பது நல்ல வகையான மாற்றம்தானே!

--------------- " விடுதலை” 29-12-2010

*************************************************************************************


வழிகாட்டும் தலைமைச் செயற்குழு (4)


நுழைவுத் தேர்வு - அடுத்த கட்டம்!

1984 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்த நுழைவுத் தேர்வு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது (9.6.2005). அந்த ஆணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது (27.6.2005).

18.2.2006 அன்று நுழைவுத் தேர்வை ரத்து செய்து அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் ஆணை பிறப்பித்தது. அந்த ஆணையையும் நிராகரித்து விட்டது உயர்நீதிமன்றம் (27.2.2006). (தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஏ.பி. ஷா மற்றும் பிரபா சிறீதேவன்).

இதற்கிடையில் மிக முக்கியமான தகவல் ஒன்று இருக்கிறது.

நீதிமன்றத்தில் நுழைவுத் தேர்வுப் பிரச்சினையில் வெற்றி பெற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை ஆக்கப்பூர்வமாகத் தெரிவித்தார்.

ஒரு வல்லுநர்கள் (கல்வித் துறை) குழுவை அமைத்து ஒரு மாதம், இரு மாதத்திற்குள் பல்வேறு பாடப் படிப்பு முறை உள்ளதால் அவைகளிலிருந்து தேர்வு பெற்றுவருவோரிடம் உள்ள மதிப்பெண்கள் சம அளவில் இருக்க வாய்ப்பில்லாததால், அவற்றைச் சமப்படுத்தும் வகைக்கான பரிந்துரைகளைப் பெற்று, அதனை உடனடியாக தமிழ்நாடு அரசு செயல்படுத்திடும் வகையில் (அவசரச் சட்டம் மூலமாகக்கூட) செய்தால் மீண்டும் நீதிமன்றத் தீர்ப்புகள் இதனைத் தடுக்க இயலாது.

ஆனால், ஒரு (பெரும்பகுதி) மாணவர்கள் ளுவயவந க்ஷடியசன என்ற மாநில செகண்டரி பாடத் திட்டத்தின்கீழ்தான் தேர்வு எழுதி வெற்றி பெறுவதால், இதனை இரண்டாகப் பிரித்து, பெரும்பாலான பகுதியான இதற்கு நுழைவுத் தேர்வு இல்லை; சிறுபகுதியான சி.பி.எஸ்.சி., கல்வித் திட்டத்தின்கீழ் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் காட்டி சிலர் நீதிமன்றம் செல்லக்கூடும். அதனைத் தவிர்க்க, ஒரு கல்விக் குழுவினை அந்த மாணவர்களும் பயன்பெற அமைக்கப்பட்டுவிட்டால், அதற்கு இதனையே காரணம் காட்டி அரசு வாதாடி வெற்றி பெறலாம். 80 விழுக்காடு மாணவர்கள் இந்த அறிவிப்பினால் பயன் அடைவது உறுதி. கைக்கெட்டியது வாய்க்கும் எட்டுமே என்று எடுத்துக் கூறினார் (விடுதலை, 16.1.2006).

கழகத் தலைவரின் இந்த அரிய யோசனையை அ.தி.மு.க. அரசு எடுத்துக்கொண்டிருந்தால், இரண்டாவது முறையும் நீதிமன்றம் நுழைவுத் தேர்வு ரத்து ஆணையை ரத்து செய்திருக்க வாய்ப்பில்லை.

(தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்ததால், அது செல்லுபடியாயிற்று என்பது அடிகோடிட்டுக் குறிப்பிடத்தக்கதாகும்).

2006 இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 5 ஆவது முறையாக முதலமைச்சர் ஆன மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் ஆளுநர் உரையில் நுழைவுத் தேர்வு ரத்து என்பதை அறிவிக்கச் செய்தார் (24.5.2006).

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கடந்த ஆட்சியின்போது தெரிவித்த யோசனை - நீதிமன்றத்தின் கசப்பான தீர்ப்பின் அனுபவம் - இவற்றின் அடிப்படையில் தி.மு.க. அரசால் கல்வியாளர் டாக்டர் எம். அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது (7.7.2006).

அந்த நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வை நீக்குவதற்கான சட்டத் திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது - குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டு 7.3.2007 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தையும் எதிர்த்து வழக்கம்போல சென்னை உயர்நீதிமன்றம் சென்றனர். அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, தி.மு.க. அரசின் சட்டத்தைச் செல்லும் என்று உறுதி செய்தது (27.4.2007) நீதிமன்றம்.

2007-2008 ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் மாணவர்கள் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் 69 விழுக்காடு முறையைப் பின்பற்றி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தவழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் குறிப்பிடத்தக்க பகுதி உண்டு.

தொழிற் கல்வியின் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு நேர இருந்த இடையூறை தடுக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டம், அரசியல் சட்டத்தை மீறுவதாகக் கூற முடியாது என்று கூறிய நீதிபதிகள் நுழைவுத் தேர்வைப்பற்றி தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சம நிலை என்பதும் கட்டுக்கதைதான்.

ஏனென்றால், சரியான விடையைத் தேர்நதெடுப்பதைவிட கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சிபோல், அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று மிக நேர்த்தியாக, கற்பனைக் குதிரை சவாரி செய்யாமல் நடைமுறை கண்ணோட்டத்தோடு கூறியுள்ளனர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

2007 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த நுழைவுத் தேர்வு ஒத்தையா, இரட்டையா டிக் முறையை - இன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே (1984 இல்) திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் எடுத்துச் சொன்னவையே என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டியதாகும்.

இந்த நுழைவுத் தேர்வில் (Yes or NO) உண்டு - இல்லை என்ற விடைதான் அளிக்கவேண்டும். டிக் மார்க் செய்யவேண்டும். தாளும், பென்சிலும்தான். மாணவர்களுக்குத் தேர்வை எழுதவேண்டிய வேலையே கிடையாது. பரீட்சை எண் தான் குறிப்பார்கள். பென்சில்கூட அவர்களே வழங்கும் குறிப்பிட்ட பென்சில்தான்.

தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உதவிட, விடைத் தாள்களை அப்படியே மாற்றி, சரியான விடைகளை டிக் மார்க் செய்து, தேர்வு எழுதிய தாளினை எடுத்து, இதனை வைத்துவிட்டால், தேர்வு அதிகாரி ஒருவர் மேல் மட்டத்தில் சைகை காட்டப்பட்டு, தேர்வு அதிகாரி அமைதியாக இதனை நடத்த வாய்ப்புண்டு; பற்பல இடங்களில் நடந்தும் வருகிறது (விடுதலை, 8.6.1984) என்று விடுதலை ஆசிரியர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அப்பட்டமான உண்மைகளை அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டார்.

அதையேதான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேறு சொற்களால் 23 ஆண்டுகளுக்குப்பின் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் தொழிற்கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இப்பொழுது திடீர் பூகம்பம் ஒன்று புறப்பட்டு அலைக்கழிக்கிறது.

இந்தப் பூகம்பம் மத்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பிலிருந்து கிளம்பியுள்ளது.

எம்.பி.பி.எஸ். தேர்வு என்பதில் இந்திய அளவில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என்பதுதான் அந்தப் பூகம்பம்.

இதுபற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் தன்னையும் இணைத்துக்கொண்டு தம் கருத்தைப் பதிவு செய்துள்ளது. இறுதித் தீர்ப்பு வரவில்லை என்றாலும், 2011-2012 ஆம் கல்வியாண்டிலும் நுழைவுத் தேர்வு இல்லாமலேயே சேர்க்கை நடைபெறும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்களே அறிவித்துள்ளார் (முரசொலி, 18.12.2010).

இதற்கிடையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நுழைவுத் தேர்வை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டங்களை நேற்று (29.12.2010) எழுச்சியுடன் நடத்தியுள்ளது. சமூகநீதியில் திராவிடர் இயக்கம் தொடர்ச்சியாக தன் முத்திரைகளைப் பதித்து வருகிறது. இதிலும் நீதிமன்றத்திலும், வீதிமன்றத்திலும் போராடி சமூகநீதிக் கொடியை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் வெற்றிகரமாகப் பறக்கச் செய்வோம். திராவிடர் கழகம் இதில் முன்னணிப் படையாகச் செயல்படும். இது உறுதி!

வாழ்க பெரியார்!

வாழ்க சமூகநீதி!!

(நிறைவு)

-------------தி.க. பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை ”விடுதலை”30-12-2010

1 comments:

தமிழ் ஓவியா said...

அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வா?

ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி பெற்ற சமூக நீதிக்கான உரிமைகளை பார்ப்பன அதிகாரவர்க்கம் கொல்லைப்புறம் வழியாகத் தட்டிப் பறிக்கும் சதியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இதனைப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தி, அதன் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய மருத்துவக் குழு ஒரு முடிவை எடுத்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவக் கல்வி உட்பட எந்தக் கல்வியிலும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் வகையில் தனி சட்டமே இயற்றப்பட்டு விட்டது.

அகில இந்திய மருத்துவக் குழுவின் நுழைவுத் தேர்வினை ஏற்கும் வகையில் இருந்த மத்திய அரசும்கூட, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்குப் பிறகும், முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் குறுக்கீட்டுக்குப் பிறகும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக நடக்கும் வழக்கில் திமுக அரசு தம்மையும் இணைத்துக் கொண்ட நிலையில் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டது.

இத்தகு நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று முன்னாள் (13.12.2010) வழங்கிய தீர்ப்பில் அகில இந்திய மருத்துவக் குழுவின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறியிருப்பது - ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

அரசின் எத்தனை எத்தனையோ கொள்கை முடிவுகளில் தலையிட்டுள்ள நீதிமன்றங்கள், சமூக நீதிப் பிரச்சினை என்று வருகிறபோது மட்டும் இப்படியெல்லாம் வழுக்கிக் கொண்டு போவதைக் கவனிக்க வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வழி வகுத்தால் - பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் தான்.

இந்தப் பகுதிகளிலிருந்து பெரும்பாலும் மாணவர் கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், அகில இந்திய மருத்துவக் குழு, உச்சநீதிமன்றம் போன்றவை - அதன் உயிர் நாடியின் கழுத்தில் சுருக்குப் போடும் வகையில் நடத்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது.

இந்த நுழைவுத் தேர்வினை ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதலாம் என்கிற வாய்ப்பு - ஏற்பாடு வட இந்திய மாணவர்களுக்குக் கூடுதல் சலுகைகளை அளிக்கக் கூடியதாகி இந்தி பேசாத மக்களை வஞ்சிக்கும் இன்னொரு வகையான சதியாகும்.

நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களைச் சேர்க்கும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட கேடுகள் என்னவென்று மருத்துவக் குழுவோ, உச்சநீதிமன்றமோ விளக்குமா?

நெருக்கடி நிலை காலத்தில் (1976) கல்வியை மாநில அரசின் பட்டியலிலிருந்து பொதுப் பட்டிய லுக்குக் அபகரித்துக் கொண்டு செல்லப்பட்டதால் ஏற்பட்டுள்ள பல கேடுகளில் இதுவும் ஒன்றாகும்.

இன்னொரு கொடுமை ஏற்கெனவே நிகழ்த்தப் பட்டுக் கொண்டும் இருக்கிறது. மாநிலங்களிலிருந்து மருத்துவக் கல்விக்கான இடங்களில் (எம்.பி.பி.எஸ்.) 15 விழுக்காடு இடங்களை மத்திய தொகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. அது 25 விழுக் காடாக உயர்த்தப்பட வேண்டும் என்ற அழுத்தமும் கொடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவக் கல்விக்கான மேற்பட்டப் படிப்பில் (Post Graduate) 50 விழுக்காடு இடங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.

ஒரு மாநில அரசின் பொருளாதாரத்தில் நடக்கும் கல்லூரிகளிலிருந்து இடங்களை இப்படிக் குண்டுக் கட்டாகத் தூக்கிச் செல்லும் அதிகாரத்தைத் தனக்குத் தானே நடுவண் அரசு எடுத்துச் சென்றிருப்பது கண்டிப்பாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையே கடிக்கும் கதைபோல மாநிலங்களி லிருந்த இடங்களைக் கவர்ந்து சென்றதோடு அல்லாமல், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்களைச் சேர்க்கவேண்டும் என்று உத்தரவிடும் ஆணவத்தை என்னவென்று சொல்லுவது?

தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்பதில் அய்யமில்லை. இந்தப் பிரச்சினையை வெறும் பார்வையாளராக இருந்து தமிழ்மண் கவனிக்காது களத்தில் இறக்கிப் போராடும் ஒரு நிலையை திராவிடர் கழகம் உருவாக்கும் என்று எச்சரிக்கிறோம். 15-12-2010