Search This Blog

17.1.11

பெரியாரால் வந்த பொங்கலோ பொங்கல்
நம் நாட்டில், மக்கள் மிகப் பெரும் துன்பத் திற்கும் துயரத்திற்கும் ஆளாகி யிருப்பதற்கு அடிப்படைக் காரணம் ஜாதி _ வர்ணாஸ்ரம தத் துவமும் அதனால் விளைந் துள்ள பயன்களுமே ஆகும்!

பலருக்கு இன்னமும் இது விளங்கவே இல்லை. தந்தை பெரியார் அவர்கள் நோய் நாடி, நோய் முதல் நாடும் சரியான மருத்துவராவார்.

அவரது சுயமரியதைச் சூரணம்தான் அதற்கு சரியான மாமருந்தாகும் மனித குலம் முழுவதுமே பரந்துபட்ட எல்லை தான்!

சாதி என்பது இங்கே எதனால் நிலைத்து நின்றது _ நிற்கிறது என்று அதன் ஆணிவேர் உள்ள இடம்பற்றி அறிவு ஆசான் அய்யா பெரிதும் ஆய்வு செய்தார்! கடவுள் என்ற எண்ணம் மிகப் பெரிய கற்பனையான மூட நம்பிக்கை மோசடித் தத்துவத்தின் மீதே என்பதை அறிந்தார்.

கடவுளைப் பரப்புவது ஏன்?


கடவுளைப் பரப்புவது மதங்களே என்பதாலும், மதங்களைக் காப்பது வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்ப தாலும் அவைகளை எதிர்த்து போர்ப் பறை கொட்டினார்! இவைகளால் முழுப் பயன் அடைந்து வந்த _ அடைந்து வரும் சுரண்டல்வாதிகளான மேல் ஜாதி புரோகித வர்க்க பார்ப்பனர்கள் இவைகளைப் பரப்புவதில் மிகவும் குறியாய் இருந்து வருகின்றனர்! ஏனெனில் இவை பரவினால் ஒழிய இந்த உயர் ஜாதியினர், தாங்கள் ஆதிக்கவாதிகளாக கடந்த 5000 ஆண்டுகளாக இருந்தது போல எதிர்காலத்திலும் இருக்க முடியாது என்பதால் அதனைப் பரப்பிட சங்கராச்சாரி முதல் சாதாரண சவுண்டி பார்ப்பனர் வரை ஆத்திகம், சமஸ்கிருதம், வேதத்தின் சிறப்பு, தீபாவளியின் மகிமை, யாகங்கள் நடத்துவதை ஊக்குவித்தல், திருவிழாத் தேர் இழுத்தல், தெருவோர பஜனைகள் திருப்பாவை திருவெம்பாவை பாடுவது வரை ஓயாது ஈடுபடுகிறார்கள்.

மாதந்தோறும் சாமிக்குப் பண்டி கைகள் என்ற பெயரால் பக்தி வியாபாரம். ஆறுகால பூஜை. வீட் டில் பூஜை, வெளியில் பூஜை, இத்தியாதி ஓய்வுக்கும், இளைப்பாறலுக்கும் திறக்கப்படும் வானொலி, (ரேடியோ), வானொளி (தொலைக் காட்சி) எல்லாவற்றிலும் அதே பிரச்சாரம்!

மூளைச்சாயம்


எனவே மூளைச்சாயம் என்பதை நம்மவர் இடையறாமல் ஏற்றுக் கொண்டே இருப்பதனால் பக்திப் போதை உச்சக் கட்டத்தை நோக்கி மேலே செல்லுமாறு செய்யப்படுகிறதே தவிர, கீழ் நோக்கிப் பாயும் தண்ணீர் போல் அது இறங்கிட வாய்ப்பே இல்லை! ஆண்டுதோறும் பண்டிகைகள், விழாக்கள் எல்லாம் அப்படி மூளைக்கு ஆரியச் சாயம் ஏற்றி பழுதடையச் செய்து பலவீனமாக்கிடச் செய்யும் முயற்சியேயாகும்!

மக்களுக்கு மதம், கடவுள், பக்தி என்ற போதையை ஏராளம் ஊட்டி அந்த மயக்கத்திலிருந்து அவர்களை மீள விடாமல் வைத்திருப்பதால் என்ன லாபம் என்றால் _ எதுவரை அந்த மயக்கம் தெளியாமல் இருக்கிறதோ அது வரை தான் அவர்களின் ஆதிக்கப் பிடிப்பின்கீழ் அடிமைகளாக, _ கொத்தடிமைகளாக அவர்கள் இருப்பார்கள் _ இருக்கவைக்க முடியும் என்ற லாபம் தான்!

ஒரு சமுதாயப் புரட்சியை உருவாக்க வேண்டுமென்பதற்காக நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கி, எங்கெங்கெல்லாம் ஜாதியால், மதத்தால், கடவுளால், சம்பிரதாயங்களால், பண்டி கைகளால், மூளைச் சாயம் முதலில் தமிழனுக்கு -_ ஏன் எங்கு வாழ்பவனாக இருந்தாலும் மனிதனுக்கு பூசப்பட்டதை ஒழித்தார்! விழித்தனர் மக்கள்!

அன்றே சொன்னார் அய்யா!


24.4.1948 குடி அரசு வார ஏட்டில் _ ஜாதி, மதமற்ற சமுதாயம் நிறுவ பெரியார் ஆலோசனை என்ற தலைப்பில் வெளியான ஒரு அறிக்கை:_ இந்திய யூனியனில் ஜாதி மதச் சார்பு அற்ற ஆட்சியை நிறுவுவதற்குப் பெரியாரவர்கள் கீழ்க்கண்ட ஆலோசனையை அரசியல் நிர்ணய சபைக்கும் காங்கி ரசுக்கும் வெளியிட்டுள்ளார்.

இந்திய தேசியக் காங்கிரசின் கொள்கைகளை விளக்குவதில் கீழ்கண்ட விஷயங்களைக் கவனிக்க வேண்டுகி றோம். இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்பவர்களில் பிராமணன், சூத்திரன், ஹரிஜனன் என்பதாக மூன்று பிரிவுகள் சட்டத்திலும், அநுஷ்டானத்திலும், பல ஆதாரங்களிலும் இருந்து வருகிறது. இந்தப் பிரிவின்படி பண்டித நேரு பிராமணராகவும், காந்திஜி சூத்திர ராகவும், டாக்டர் அம்பேத்கர் ஹரிஜன் ஆகவும், கருதப்படுகிறார்கள்.

இந்திய அரசாங்கம் ஜாதிப் பிரிவு, ஜாதிச் சலுகை, ஜாதித் தொகுதி, ஜாதிப் பிரதிநிதித்துவம் இவை இல்லாத அரசாங்கமாக இருக்கும் என்று அடிக்கடி பிராமண வகுப்பில் வருகிற தலைவர்களாலும், காங்கிரஸ் பிரமுகர் - _ பிரசாரகர்களாலும் சொல்லப்பட்டு வருகிறது.

இப்போதுள்ள பிரிட்டிஷ் ஆதிக்கம் நீங்கின இந்திய யூனியன் அமைப்பு முறையிலும் ஜாதி வகுப்பு விஷயமாய் செய்யப்படப்போகும் விதிகளில் பிராமணன், சூத்திரன், ஹரிஜனன் என்கின்ற வார்த்தைகளுக்கு இடம் அளிக்கப்படுமா? சட்டங்கள், இந்துமத சமுதாய ஆதாரங்கள், இடங்கள் முதலியவைகளில் பிராமணன், சூத்திரன், ஹரிஜனன் என்கின்ற வார்த்தைகளுக்கு இடம் அளிக்கப்படுமா? அந்தப்படி இருப்பவைகளை சர்க்கார் அங்கீகரிக் குமா? என்கின்ற விஷயம் இதுவரையில் தெளிவாக்கப்படவில்லை.

இந்த விஷயங்கள். தெளிவாக்கப் படாமல் ஜாதிகளின் பேரால் தொகுதி யில்லை, பிரதிநிதித்துவமில்லை, சலுகையில்லை என்று சொல்லப்படுவது பிரிவினையின் காரணமாகக் கீழ் நிலையில் இருக்கும் மக்களுக்குப் பெருத்த அநீதியாகவும் குறைபாடாகவும் அசவு கரியமாகவும் முன்னேற்றத்தடையாகவும் இனியும் இருக்க இடமாகிறது.

ஆகவே, இந்திய யூனியன் கான்ஸ் டிடியூஷனிலும் இந்திய தேசியக் காங்கிரஸ் கான்ஸ்டிடியூஷனிலும் இந்திய யூனியனில் உள்ள மக்களில் அல்லது இந்துக்கள் என்கின்ற சமுதாயத்தில் அரசியலின் பேராலும் மத இயலின் பேராலும், சமுதாய இயலின் பேராலும், பிராமணர், சூத்திரர், ஹரி ஜனர் என்கின்ற பிரிவு எந்த முறையிலும் அனுஷ்டிக்கப்பட மாட்டாது.

இந்த வார்த்தைகள் அரசியல், மத இயல், சமுதாய இயல் கொண்ட எந்த ஆதாரங்களிலும் உபயோகிக்கப்பட மாட்டாது என்பதோடு இவைகள் இருக்கவும் இடம் கொடுக்கப்பட மாட்டாது. அப்படிப்பட்ட வார்த் தைகள் இருக்கும்படியான ஆதா ரங்களை சர்க்கார், காங்கிரஸ் மரியாதை செய்யாது _ ஆதரிக்காது. கல்வி, கலைத்துறையிலும் இவ் வார்த்தைகளுக்கும், பிரிவுகளுக்கும் இடம் இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது _ என்பவை தெளிவாக விளங்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டு விட்டால் இந்த யூனியனில் வகுப்பு வாதங்களோ, வகுப்பு ஸ்தாபனங் களோ, வகுப்பு கலவரங்களோ என்பவை இருக்க இடமில்லாமல் போய்விடும் வகுப்புக் குறைகளைச் சொல்லி சலுகைகளோ, பிரதி நிதித்துவங்களோ, உரிமைகளோ கொண்டாடவும் கேட்கவும் இட மில்லாமல் போய் விடும். இந்திய யூனியனும் பிறவியின் பேரால் பிரிவு, ஜாதிப் பிரிவு, வகுப்பு அற்ற ஒரே சமுதாயமாக விளங்க முடியும்.

அந்தப்படிக்கில்லாமல் பிரா மணன், சூத்திரன், ஹரிஜனன் என்கின்ற பிரிவுகளை, ஜாதிகளை வைத்துக் கொண்டு இதன் கார ணத்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, மக்களுக்கு அவர்கள் குறை நீங்கத் தக்கதாக சலுகைகள் பிரதி நிதித்துவங்கள் இல்லையென்று தடுப்பது கொடுமையான அநீதி யாகும். ஆகவே, இதை அரசியல் நிர்ணய சபையும், காங்கிரஸ் விதி முறை அமைப்பு சபையும் கவனிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம் என்று ஆலோசனை கூறியுள்ளார் தந்தை பெரியார் _ இதற்கு விளக்கம் வேண்டுமா? வகுப்புவாரி உரிமை பற்றி, இட ஒதுக்கீடுபற்றியெல்லாம் பேசும் போது ஜாதி அடிப்படையிலா என்று குழம்பும் பலருக்கும் தந்தை பெரியாரின் இந்த அறிக்கை தெளி வான விளக்கமாகும்.

சமநிலைப்படுத்தவே!


இப்படி ஜாதியை ஒழிக்கும் இலக்கு அடைவதற்கு முன் அதனால் ஏற்பட்டுள்ள கேடுகளிலிருந்து மக்களை சமனிலைப்படுத்துவது, விடுதலை அடையச் செய்வ தற்கே அய்யா அவர்கள் கடவுள் மறுப்பு, சுயமரியாதைத் திருமணம், மதச் சடங்குகள் அற்ற நிலையில் இறப்பு அடக்க நிகழ்ச்சிகள் _ நீத்தார் நினைவு _ பொங்கல் போன்ற விழாக்களைக் கொண்டாடுதல், புராணக் கருத்துகளை மறுத்து புதுமை படைக்கும் எழுத்தாளர்கள் _ கருத்தாளர்கள் உருவாக்கம் என்று ஆக்கினார்கள்!

ஆரியம் பண்பாட்டுத் துறையில் மூளைச் சாயம் ஏற்றியதை அய்யா ஓர் அறுவை சிகிச்சை மருத்துவராக நின்று மாற்றினார்; சமுதாயத் தினைத் தேற்றினார்!

தமிழ் அரசர்களில் பலர் ஆரியத்திற்கு மண்டியிட்டு, ஆரியப் பண்பாட்டினை, நெறியினை மக்களிடையே பரப்பிய முகவர் களானபடியால்தான் சேர, சோழ, பாண்டியர் என்ற அவர்களையும் கூட தந்தை பெரியார் விட்டு விடாமல் கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கினார்.

பெரியார் செய்த அறிவுப் புரட்சி


தமிழ் இலக்கியம் என்றாலும்கூட அவர் தயாங்காமல் ஆரியக் கருத்துகள் நுழைந்த சிலப்பதிகாரம் போன்றவற்றை விட்டு வைத்ததில்லை. அதுதான் சரியான சமுதாய விஞ்ஞானப் பார்வை.

தமிழருக்குப் புத்தாண்டு தை முதல் நாள் அத்துடன் தமிழர்கள் பெருமையுடன் கொண்டாடும் உழவர் திருநாள் _ உவகைத் திரு விழா பொங்கல் பெருவிழா!

நமது பண்பாட்டை, மானத்தை, அறிவை மீட்ட மகத்தானதோர் பெருவிழா!

அதை நமக்கு அடையாளம் காட்டி, பொங்கல் வாழ்த்துக்கூறிடச் செய்த நம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள் செய்த அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சியின் பொங்கலே பொங்கல்! பொங்கல் புத்தாண்டு வருக, வாழ்க!
அனைவருக்கும் அன்பான புத்தாண்டு _ பொங்கல் வாழ்த்துகள்!

-------- கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை” 13-1-2011

0 comments: