Search This Blog

6.4.08

பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன?

இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இன்று காலை இருமலுக்காக டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர் மருந்து கொடுத்தார். அதை சாப்பிட்டேன் சாயந்திரம் திடீரென்று கைகால் எல்லாம் நடுக்கமேற்பட்டது. மார்பு துடிப்பு 150 க்கு வந்துவிட்டது. சாதாரணமாக 72 - 75 தான் இருக்க வேண்டும். கைகால் விரல்கள் மடக்கினால் வலிக்க ஆரம்பித்தது. உடனே டாக்டரிடம் சென்று காண்பித்தேன். அவர் காலையில் கொடுத்த மருந்தின் ரீ- ஆக்ஷன் தான் அது வேறொன்னுமில்லை. உங்களுக்கு வயது அதிகமானதால் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும் வேறொன்றுமில்லை என்று சொல்லி ஒரு ஊசியைப்போட்டு என்னை இரண்டு நாள்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். சாயந்திரம் பேச வேண்டுமே என்று சொன்னேன். நல்லா பேசுங்க என்று சொன்னார். அதன் பின் தான் கூட்டத்திற்கு வரமுடிந்தது.

நான் கூட்டத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது எனக்கு போன் வந்தது. போனில் பேசியவர்கள் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அம்மையாரவர்களை மேயரவர்கள் சாதியைக் குறித்து கேவலமாகப் பேசியதாக குறிப்பிட்டார்கள். அதற்கு நான் அவர் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன். அவர் படித்தவர் பெரிய பதவி வகிப்பவர் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் அப்படிப்பட்ட வார்த்தையை உபயோகித்திருக்க மாட்டார். அப்படி அவர் சொல்லி இருந்தால் நானே கண்டிக்கின்றேன். மன்னிப்பு கேட்கச் செய்கின்றேன் என்று சொன்னேன். மேயரவர்களைக் கேட்டதற்கு நான் சொல்லவில்லை என்று சொன்னார்.

சாதி சம்பந்தமான காரியங்களில் நான் ரொம்ப முயற்சி எடுப்பவன். அதற்காகவே வாழ்வதாகக் கருதுபவன். பறையன் - சக்கிலி - வண்ணான் - பரியாரி என்பது அவமானமல்ல. தொழிலின் காரணமாக வந்தது. பார்ப்பான் தன்னை மேன்மைப்படுத்தி கொள்ளவும் நம்மை இழிசொல்லாக்கி விட்டான். ஆனால் நம் எல்லோரையும் சேர்த்து பார்ப்பான் தேவடியாள் மகன் என்று சொல்கின்றான். சொல்வது மட்டுமல்ல சாஸ்திரத்திலும் அப்படியே எழுதி இருக்கின்றான். சட்டத்திலே (இந்தியாவிலே) தாசிபுத்திரன் என்றே இருக்கிறது. அனுபவத்திலுமிருக்கிறது என்று சொன்னால் கோயிலுக்குப் போகிறவன் அத்தனை பேரும் தேவடியாள் மகன் தானே! இது அண்ணாதுரைக்கும் தான் ராஜா சர்ருக்கும் தான். வேறு பார்ப்பானல்லாத எல்லோருக்கும்தான்.

பறையன் என்று சொல்லக்கூடாது என்று தான் சொன்னார்களே தவிர தண்ணீருக்கு எப்படி ஜலம் என்று சொல்கின்றானோ அதுபோல பார்ப்பான் காந்தியாரைப் பிடித்து பறையன் என்கிறதை நிலை நிறுத்துவதற்காக அரிஜன் என்று சொல்லி இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

பறையன் என்று சொல்லக்கூடாது என்று ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டாதவர்களுக்குத் கிணறு வெட்டுவதற்காகக் காந்தி திலக் நிதியிலிருந்து ரு. 55.000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவன். நான் அதை இதற்காக செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக்காரர்கள் எல்லாhம் செலவழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக கேணி கோயில் பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன் நாம் அவர்களுக்கு இவை எல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதால் ஒருக்காலும் தீண்டாமை ஒழியாது. அதற்குப் பதில் பறையன் கோயில் பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்க வேண்டும். நம் மக்கள் படிக்கிற பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்க வேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.

நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.

இன்று காலை ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அய்க்கோர்ட் ஜட்ஜ் கைலாசக் கவுண்டரின் மகளுக்கும் ராஜா சர்முத்தய்யா செட்டியாரின் தங்கை மகனுக்கும் (ப.சிதம்பரம்) நடைப்பெற்ற திருமணம் இதைக் கலப்புத் திருமணம் என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை எது கலப்புத் திருமணம் என்றால் மனித ஜாதிக்கும் மிருகத்திற்கும் நடப்பதே கலப்புத் திருமணமாகும்.

ஓரே ஜாதி மனித ஜாதி என்பது மாத்திரமல்லாமல் மணமக்கள் இருவருமே சூத்திர ஜாதி நாலாஞ்சாதியைச் சார்ந்தவர்கள் என்பதோடு நாலாம் சாதி நடுத்தர சாதியாக இருப்பதைப் பற்றிச் சிறிதும் வெட்கப்படாத சாதியைச் சார்ந்தவர்களாவார்கள். நான் தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கும் பார்ப்பானுக்கும் பார்ப்பனத்திற்கும் தாழ்த்தப்பட்ட ஆணுக்கும் இன்னும் இது போன்று பல சாதி கலப்புள்ள நூற்றுக்கணக்கான திருமணங்களைச் செய்து வைத்திருக்கின்றேன்.

ஜாதி என்பது ஒன்றுதான். இரண்டு பேர்களும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி பிள்ளைகள் தான். ஜாதியைக் காப்பாற்றத்தான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் இராஜாஜி கூட தன் மகளைச் சூத்திரரான காந்தியின் மகனுக்குத் தான் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றார். காங்கிரசினல் காமராஜரும் அவருடைய கம்பெனியும் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் இராஜாஜியின் சீடர்கள்தான். இராஜாஜி அவர்கள் நம்மோடு தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடுவார் தன்னுடைய மகளைச் சூத்திரனான காந்தியின் மகனுக்குக் கொடுத்திருக்கிறார் என்றாலும் பிள்ளைகளை (பேரன்களை) யெல்லாம் பூணூல் மாட்டிப் பார்ப்பானாக்கி விட்டார்.

தேவதாசி வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ்.சுப்புலஷ்மியை ஜாதியைக் காப்பதற்கென்றே பத்திரிக்கை நடத்துகின்ற கல்கி பத்திரிகையின் அதிபர் சதாசிவம் என்ற பார்ப்பனர் திருமணம் செய்து கொண்டார். அவருக்குத்தான் இராஜாஜி முன்னோடும் பிள்ளையாக இருக்கிறார்.
இப்படி ஏராளமன பெரிய இடம் என்று சொல்லும்படியான இடங்களிலெல்லாம் நடைபெற்று இருக்கிறது. நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பிலேயே மாறுபட்ட ஜாதியைச் சார்ந்த பலரைத் திருமணம் செய்து வைத்திருக்கின்றேன். அதற்கெல்லாம் இராஜா சர் வந்து பாராட்டி இருக்கின்றார். இராஜா சர் எனக்கு ரொம்பவும் வேண்டியவர். நான் செய்கின்ற காரியங்களை எல்லாம் பாராட்டுபவர். எனது மதிப்பிற்குரியவர். பணத்தில் மட்டுமல்ல உண்மையிலேயே பெரும்தன்மை வாய்ந்த பெரியவர். அவர் அந்த சமுதாயத்தையே திருத்த வேண்டியவராவார். அவர் இத்திருமணத்திற்கு வராததன் மூலம் தனக்கக் கிடைத்தத் நல்ல வாய்ப்பையே இழந்து விட்டார் என்று தான் சொல்லுவேன்.

பார்ப்பானைத் தவிர ஜாதியைப்பற்றி பேசுகின்றவன் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனேயாவான். என்னைப் பொறுதத்வரை நான் பறையனாக இருப்பதை கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைவிட பறையனாக இருப்பதை பெருமையாகக் கருதுகின்றேன். எனக்கு பிள்ளை இல்லை - என்பது பற்றி ரொம்ப சந்தோசப்படுகின்றேன். ஒரு சமயம் பிள்ளையிருந்தால் அதுவும் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு சத்தியவாணிமுத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்பாடு முன்பே சொல்லிவிடுவேன். இதுபோல தாழ்ந்த சாதி பையன்களைப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அய்யா அவர்கள் அப்படி கருதி இருப்பாரானால் அவர் முன்னேற்றக் கழகத்திலிருப்பதற்கே லாயக்கற்றவர்தான். அவர்களை பார்த்து பறையர் என்று சொல்லிவிட்டோம். அவர்களிலே வைப்பாட்டி மகன் இல்லை. நம்மில் தான் வைப்பாட்டி மகன் என்பது. தாழ்த்தப்பட்ட பெண் தானாகப் போனால் கூட பார்ப்பான் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

நாம் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் நாட்டில் இரண்டே ஜாதி தான் இருக்கிறது. ஒன்று பார்ப்பான் மற்றொன்று சூத்திரன் இதைத் தான் ஒழிக்க வேண்டும். ஒழியாமல் பாதுகாப்பதற்காகத் தான் பார்ப்பான் செட்டி முதலி நாயக்கர் கவுண்டன் படையாச்சி என்று நமக்குள் பல சாதிகளைப் பிரித்து அதில் ஒன்றுக்கொன்று நம்மை ஒன்று சேரவிடாமல் பிரித்து வைத்திருக்கின்றான்.

நாங்கள் தமிழர்கள். சூத்திரர்கள் அல்லர். இந்துக்கள் அல்ல என்கிற உணர்ச்சி நம் மக்களுக்கு வர வேண்டும். இன்றையதினம் இந்த பேச்சு பேசியதற்கு அம்மையாரிடம் அய்யா மேயர் அவர்களிடமிருக்கிற அன்பைவிட அதிகமான அன்பு கொண்டிருக்கின்றேன். . அம்மையாரும் பெருமைமிகு மேயரும் ஓரே கட்சியைச் சேர்ந்தவர்கள். நமக்குள் இதெல்லாம் இருக்கக்கூடாது.

இந்த தி.மு.க ஆட்சியே உலகமுள்ள வரைக்கும் இருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். இதைவிட உயர்ந்த எதுவுமே கிடையாது. இந்தியாவில் உள்ள
கம்யூனிஸ்ட் முதல் வேறு எந்த வெங்காயக் கட்சியும் ஜாதி ஒழிய வேண்டுமென்று வாயால் கூட சொல்வது கிடையாடு. தி.மு.க. ஒன்று தான் ஜாதி ஒழிய வேண்டுமென்று சொல்வதோடு ஒழிய பாடுபடுகிறது.

காங்கிரஸ் கட்சியில் காமராசர் ஒருவர் தான் ஜாதி ஒழிய வேண்டுமென்று சொல்பவர். அவர் தாழ்ந்த சாதியைச் சார்ந்தவர் தீண்டப்படாதவராக இருந்த வகுப்பைச் சார்ந்தவர். அதனால் தான் அவர் ஜாதி ஒழிய வேண்டும்மென்கின்றார். மற்ற காங்கிரஸ்காரர்கள் அத்தனை பேரும் ஜாதியைக் காப்பாற்ற வேண்மென்று கருதுபவர்களேயாவார்கள்.

தி.மு.க.ழகத்தினர் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்றால் வகுப்புவாரியாக அப்படி நடந்து கொள்ளவில்லை என்றாலும் 100 - க்கு 97 - தமிழர்களுக்குத்தான் கொடுக்கிறன்றார்கள்.100 -க்கு மூன்று தானே பார்ப்பானுக்குக் கொடுக்கிறார்கள். தமிழனாகப் பிறந்தவன் தமிழன் இரத்தம் ஒடுபவனாகப் பிறந்தவன் இரத்தம் இருந்தால் அண்ணாவைத்தான் ஆதரிக்க வேண்டும். அப்படி ஆதரிக்கவில்லை என்றால் அவன் இரத்தத்தில் கோளாறு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

இன்றைய தினம் இருக்கிற முன்னேற்றக்கழகம் தமிழர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு ஆகும்.
இவர்கள் தி.மு.க ஜெயிக்கிறவரை இவர்கள் ஒழிய வேண்டுமென்றுதான் பாடுபட்டு வந்தேன். ஏனென்றால் அவர்கள் வெற்றி பெறுகிறவரை இராஜாஜி தான் எங்கள் தலைவர் அவர் சொல்கிறபடிதான் நடப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் இவர்கள் வந்தால் பார்ப்பான் சொல்படி தான் ஆட்சி செய்வார்கள். அதைவிட காங்கிரஸ்காரனனே மேல் என்று கருதினேன். ஆனால் இவர்கள வெற்றி பெற்றதும் தாங்கள் பார்ப்பானின் ஆள் அல்ல தமிழர்கள் என்பதைக் காட்டிக் கொண்டார்கள். அதனால் ஆதரிக்க ஆரம்பித்தேன். அதனால் ஒன்றும் நமக்கக் கேடுவரவில்லை நன்மைதான் கிடைக்கின்றது
.

இந்த முன்னேற்றக்கழக ஆட்சி இருந்தால் தான் தமிழர் சமுதாயம் முன்னேறமுடியும். காங்கிரஸ் வந்தால் பார்ப்பான் ஆட்சிதான் நடைபெறும். இங்கு ஆட்சிக்கு தமிழன் வந்தாலும் அவன் டில்லியிலிருக்கிற - பார்ப்பான் பார்ப்பனத்தி சொல்கின்றபடிதான் நடக்க வேண்டும். சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அதிலுள்ளபடி மனுதரும ஆட்சிதான் சொல்வார்கள். இதை நம் மக்கள் உணர்ந்து தி.மு.க. விற்கு ஆதரவு தர வேண்டும்.

மேயருடைய பாராட்டுக் கூட்டத்தில் உண்மையாக நான் மேயரைப் பாராட்ட வரவில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்காதிருந்தால் அவர் எப்படி கவுன்சிலராக முடியும்? வெறும் ஆளாகத்தானே இருப்பார். உங்களுக்குத் தொண்டாற்றக்கூடிய உண்மையாக உழைக்கக்கூடிய சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றீர்கள். அதற்காக ஓட்டளித்த உங்களைப் பாராட்டுகின்றேன். அதோடு அவரை மேயராகத் தேர்ந்தெடுத்த கவுன்சிலர்களைப் பாராட்டுகின்றேன். பாராட்டுக் கூட்டம் என்பது அவரது கொள்கைகள் பணிகளைப் பாராட்டுவதற்காகத் தான். மற்றும் அவர் பணிகள் இதுவரை தமிழகத்திலோ சென்னையிலோ சேர்மேன்கள் - மேயர்கள் செய்யாத பணியாகும். அப்பணிக்கு நாம் ஆதரவு தர வேண்டும். அவருக்கு உற்சாகமளிக்க வேண்டும்.

இதனால் அவர் கொல்லப்ட்டாலும் அவர் வேலையைவிட்டுப் போனாலும் வெறும் நாராயணனாலும் மக்கள் உள்ளவரை அவர்கள் மனத்திலிருந்ருக்கும்படியான காரியத்தினைச் செய்ய ஆரம்பித்து விட்டார். நடைப்பாதைளில் இருக்கிற கோயில்கள் குடிசைகள் கடைகளை எல்லாம் அகற்ற வேண்டுமென்று உத்தரவுப் போட்டு காரியம் செய்கின்றார். இதனால் சென்னை நகரின் அழகு அதிகமாகும்.

இந்தப் பார்ப்பனர் மட்டுமல்ல.30 வருடங்களுக்கு முன் சத்தியமூர்த்தி என்ற கொலைகார பார்ப்பான் இருந்தார். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் அப்போது ஜஸ்டிஸ் கட்சி அதாவது இன்றைய தி.மு.கழகம் போல் ஆட்சியிலிருந்தது. அப்போது தேவதாசித் தொழிலை நிறுத்த வேண்டுமென்று பொட்டுக் கட்டுவதைத் தடுக்க வேண்டுமென்று சட்டசபையில் சட்டம் கொண்டுவந்த போது சத்தியமூர்த்தி அய்யர் தேவதாசி என்பது கடவுளுக்குத் தொண்டு செய்யும் புனிதமான பணி அதை நிறுத்தக் கூடாது என்றார். அப்போது முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் எழுந்து இதுவரை
எங்கள் சகோதரிகள் கடவுளுக்குப் புனிதமான பணியினைச் செய்து வந்தது போதம். இனி உங்கள் சகோதரிகளை வேண்டுமானால் அப்பணிக்கு அனுப்புங்கள் என்று சொன்னார்
. அதன் பின் சட்டமாக்க்பட்டது.

அவ்வளவோடு மட்டுமல்ல. அப்போது பெண்களுக்கு 14 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சாரதா சட்டம் என்கின்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதுவரை சின்னப் பிள்ளைகளுக்கு 7 8 10 வயது பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமாக இருந்தது. சிறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் திருமணம் செய்து கொண்ட அன்றே அப்பெண்ணின் பெண்குறியை பேனாக் கத்தியால் அறுத்துவிட்டு புணர்வார்கள்.

சில குழந்தைகள் செத்துப் போயிருக்கின்றன. சில பெண்கள் அந்த புண்ணோடேயே புணர்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டு வந்திருக்கின்றனர். இதைக்கண்டு வடநாட்ட்டிலிருந்து சாரதா என்பவர் இந்த (சாரதா) சட்டத்தைக் கொண்டு வந்தார். இது மத்திய சட்டசபைக்கு வந்தபோது இதை சட்டம் செய்வதை நான் அனுமதிக்கமாட்டேன். சட்டத்தை எதிர்த்து ஜெயிலுக்குப் போனாலும போவேனே ஒழிய இச் சட்டத்திற்கு நான் கட்டுப்படமாட்டேன் என்று சொன்னவர். வெகு நாள் வரை தன் மகளுக்கு கல்யாணமே செய்யவில்லை.
பார்ப்பான் வெள்ளைக்காரனை வேண்டாமென்று சொன்னது அவனோடு ரகளை செய்தது அவன் செய்த சீர்திருத்தத்தால் தான். பார்ப்பான் சிப்பாய்களைத் தூண்டி 1857 இல் நடைப்பெற்ற சிப்பாய்க் கலகத்திற்குக் காரணமும் இதுதான் இப்படி எந்தச் சீர்திருத்தம் ஆரம்பித்தாலும் பார்ப்பான் குறுக்கே படுத்துக் கொள்வான்.

இப்போது ஒரு சட்டம் பெண்களுக்கு 21 வயதுக்கு மேல் திருமணம் செய்ய வேண்டும் அதற்குள் செய்யக்கூடாது என்று வருகிறது. சுதேசமித்ததிரன் பார்ப்பான் இப்போது என்ன இதற்கு அவசரம் என்று எழுதுகின்றான்.

எந்தக் காரியம் செய்தாலம் தமிழர்களின் வளர்ச்சிக்கு நலனுக்கு முன்னேற்றத்திற்கானது என்றால் அதனைப் பார்ப்பான் எதிர்த்தே தீருவான். மேயர் அவர்கள் நடைபாதையிலிருக்கிற கோயில் குடிசைகளை அகற்றுவதற்கு எல்லோரும் உதவி செய்து ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டுமா? அதைவிட்டு அகற்றாதே என்று சிபார்சுக்கு வர வேண்டுமா? இப்படிக் குறுக்கிட்டால் காரியம் எப்படி நட்கும்? ஜனங்களுக்கு நல்ல காரியங்கள் நன்மைகள் செய்ய வேண்டுமானால் நல்ல பெயர் எடுக்க முடியாது துணிந்து செய்ய வேண்டியது தான்.

--------11-12-1968 அன்று சென்னை - அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 15-12-1968 -"பெரியார் களஞ்சியம்" தொகுதி 18- "ஜாதி-தீண்டாமை" பாகம்- 12 பக்கம் 73-81

2 comments:

veera balu said...

காவிகள் பெரியாரை திரித்து அவதூறு பரப்பும் நேரத்தில் இது அவசியமான பதிவு தோழர் நன்றி

விஸ்வேஸ்வரன் said...

பெரியார் "தமிழ் காட்டுமிராண்டி மொழி " என்று சென்னதன் பிண்ணனி என்ன? இந்தக் குற்றச்சாட்டு உண்மையா பொய்யா? மளகநூலில் விளக்கம் அளியுங்கள்