மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
தங்கள் இதழின் ஏப்ரல் பதிப்பில் ``எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோசா ரோசாதான்” கட்டுரையை காண நேர்ந்தது. அது குறித்த எங்களின் கீழ்க்கண்ட வினாக்களுக்குரிய விளக்கங்களை அடுத்து வரும் இதழில் வெளியிடச் செய்யுங்கள். ஏற்கனவே விளக்கங்கள் எழுதியிருந்தாலும் அந்தத் தகவலைத் தாருங்கள்.
1. நாம் இனத்தால் ``திராவிடர்” என்ற வாதம் மானிட இயல் - சமூக இயல் - ஆகிய அறிவியல் அடிப்படையில் சரியானதா?
2. இந்த வகையான வாதத்தினைக் கட்டுரையாளர் புறந்தள்ளி, எதிர் கொள்ள மறுப்பதேன்?
3. தமிழ்ச் சமூகத்தின் திராவிட இயக்கத்தின் தாக்கம், குறிப்பாக பெரியாரின் பங்கு பணிகளை மதிப்பிடுவதற்கும் ``திராவிடர்’’ குறித்த அறிவியல் விளக்கத்திற்கும் வேறுபாடு வேண்டாமா?
4. நமது அரசியல் சமூக பொருளாதார விடுதலைக்கு இன்றியமையாத் தேவையான தமிழ்த் தேசியம் குறித்த தெளிவு, இந்த இயக்கம் வலுவடைய தேவைப்பட்ட ஒன்றல்லவா?
பின் குறிப்பு:
மேற்குறிப்பிட்ட கட்டுரையில் உள்ள எள்ளல், எகத்தாளம், இழிமொழி, ஆபாச உவமைகள், வக்கனை வசனங்கள், அத்துணையும் கட்டுரையாளரின் அறிவு நாணயத்தின் அடையாளத்தினைக் காட்டியிருக்கிறதே தவிர அவர் வாதத்திற்கு வலுவூட்டவில்லை.
மார்க்சிய படிப்பு வட்டம், - மா. ராமதாஸ்
ராமாரெடிமேட் மாடி, 11-05-2006
திருத்துறைப்பூண்டி.
ஒரு விளக்கம்
இனம் என்கிற கருது கோளில் மதிப்பீட்டில் இரு விதத் தன்மைகள் உண்டு.
ஒன்று-நிற இனம்
மற்றொன்று - தேசிய இனம்
தேசிய இனம் என்கிற கொள்கை புதிதாய் அரும்பும் முதலாளித்துவ எழுச்சியுடன் தொடர்புடையது.
தேசிய இனக் கொள்கைக்கு முன்பும், இப்போதும் கூட ஆதிக்க சக்திகளின் வலிமை வாய்ந்த கொள்கையாய் விளங்குவது நிற இனக் கொள்கையே!
காலனி ஆதிக்கத்திலிருந்தும், முடியரசின் பிடியிலிருந்தும் விடுதலை பெற விரும்பும் தேசிய இனங்களின் போராட்டங்களைக் கூட நிறவெறிக் கொள்கை நசுக்கிவிடத் துடிக்கிறது.
வெள்ளை நிறத்தவர் உயர்ந்த இனத்தவர்.
மஞ்சள் நிறத்தவரும் கறுப்பு நிறத்தவரும் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து இன்று வரையிலும் முன்னிறுத்தப்படுகிறது.
மேற்குலகில் ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுக்கு உதவும் இந்த நிற இனக் கொள்கை இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு உதவுகிறது.
`வர்ணாஸ்ரம தர்மம்’ என்று இன்றும் இங்கே அது போற்றப்படுகிறது.
`நீ என்ன சாதி?’ - என்று கேட்பதற்குப் பதிலாக, `என்ன வர்ணம்!’ என்று பல கிராமங்களில் இப்போதும் கேட்கப்படுவதுண்டு.
பார்ப்பனர் அல்லாதார் யாவரும் தாழ்ந்தவர்களே என்பதுதான், வேதங்களும் கீதோபதேசங்களும், மனு தர்மங்களும் வலியுறுத்தும் கோட்பாடாகும்.
உயர் வர்ணத்தவரான பார்ப்பனர்களே சாத்திரப் படியும், சமூக ஏற்பாட்டின் படியும், வணக்கத்துக்குரியவர்கள்; தெய்வீக உரிமை பெற்றவர்கள் என்கிற சனாதனக் கருத்தை அரசியல் சாசனத்தால்கூட மீற முடிவதில்லை.
ஏடறிந்த வரலாறனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகும் என்றால் இந்தியாவில் அது பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டங்களாகவும் அமைந்திருக்கின்றன.
பார்ப்பனியம், அல்லது மனுதர்மம், அல்லது நிற இனக்கொள்கை எனும் வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எதிராக, பார்ப்பனர்களால் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்ட மக்களின் போராட்ட வடிவமாக எழுந்ததுதான்
பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் -அல்லது - திராவிட இயக்கம்.
நிறவெறிக்கொள்கை பார்ப்பனியம் என்றால், நிறவெறிக் கொள்கைக்கு எதிரானதே திராவிடவியம்.
தேசிய இனங்களின் எழுச்சியை ஒடுக்க நினைப் போர் அனைவரும் நிறஇனக் கொள்கையின் ஆதரவாளர்களாகவே நிற்கிறார்கள்.
இதனால், தேசிய இன எழுச்சி என்பது பார்ப்பனியத்தை - நிற இனக் கொள்கையை - எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாகிறது.
பார்ப்பனியத்தை ஆதரிக்கும் எவரும் தேசிய எழுச்சி, விடுதலை என்று விளக்கவும் முழங்கவும் முடியாது.
வெள்ளை நிறத்தவர் - பார்ப்பனர் உயர்ந்தோர், `ஆரியர்’ என்கிற கருது கோள் இருக்கும்வரை, அதை எதிர்க்கும் `திராவிடர்’ என்கிற வாதமும் அறிவியல் அடிப்படையில் சரியானதே!
இனத்தால் நான் திராவிடன் என்று சொல்வது தேசிய இனத்தைக் குறிப்பதல்ல. வர்ண இனத்தைக் குறிப்பதாகும். `நான் திராவிடன்’ என்பது, `இன வெறிக் கொள்கைக்கு எதிரானவன்’ மனுநீதியை எதிர்க்கும் மனித நீதியாளன் - என்பதே அறிவியலும் அரசியலும் சார்ந்த பொருளதிகாரமாகும்.
பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்ளும் இயக்கமே அறிவியல் அடிப்படையில் தவறானதாகும்.
பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கு, வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தையும் ஒதுக்கித் தள்ளிவிடும்.
`மக்கள்’ என்கிற உற்சாகத்துடன் வர்க்கப் போராட்டத்தையே நிராகரிக்கும். கடைசியில் `தேசிய உணர்ச்சி’ என்பது சலிப்பைப் போக்கிக் கொள்ளும் கவிதைப் பரவசமாக, முற்போக்கு இயக்கங்களுக்கும் பொதுவுடைமைக்கும் எதிர் நிலையில், ஆதிக்க சக்திகளின் கூலிப்படையாக மாற்றிவிடும்.
அப்போது, ஒரு காலத்திலே இலட்சியக் கனவுகளை மலர்வித்த சிவப்பு நிறம், நேரவிருக்கும் பேரழிவுக்கான அபாய அறிவிப்பாகத் தோன்றும். அரிவாள் சுத்தியல் தாங்க முடியாத சுமையாகவும், தவிர்க்கப்பட வேண்டிய பயங்கரவாதச் சின்னங்களாகவும் தோன்றுமளவுக்கு நைந்துபோகும் கொடி. அதைத் தூக்கி எறிந்துவிட்டு, ‘மூலதனத்துக்கும் தனியுடைமைக்கும் சாமரம் வீசும் புதிய கொடி மீது ஆசை வரும். விவாதங்களையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ள முடியாத நடுக்கும் குளிரில் பொருள் விளங்காச் சொற்களின் அரற்றலும் முனகலுமே எஞ்சி நிற்கும். `கதவை’ச் சாத்திக் கொள்வது சுகமாக இருக்கும்.
சான்றாக - தமிழ்த் தேசியம் - பொதுவுடைமை என்கிற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு கட்சி, மெல்லமெல்ல பொதுவுடைமையைக் கைகழுவத் தொடங்குவதாகவும், பார்ப்பனிய மயக்கத்தில் ஆழ்ந்துவருவதாகவும் அக்கட்சியின் நிலைப்பாட்டின் மீது விமர்சனம் வைக்கிறார் கவிஞர் தணிகைச் செல்வன். (கட்சியின் தொடக்ககால நிறுவனர்களில் அவரும் ஒருவர்) கவிஞரின் விமர்சனம் மௌனத்தில் மூழ்கடிக்கப்படுகிறது.
கவிஞர் தணிகைச் செல்வன் எழுப்பும் பிரச்னை மற்றவர்களிடமும் பற்றிக் கொண்டால் என்ன செய்வது? கட்சி ஒரு புரட்சிகரமான பாத்திரம் வகிப்பதாகச் சிலரையாவது நம்ப வைக்க வேண்டுமே! பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் கொச்சைப் படுத்திக் குழப்பியடிப்பதில் இம்மாதிரியான இயக்கங்களுக்குச் சுயதிருப்தி.
1. மறுபடியும் சொல்கிறோம் `திராவிடர்’ என்கிற நிலைப்பாடு ஒரு தேசிய இனத்தைக் குறிப்பதாக பெரியாரோ திராவிட இயக்கமோ சொன்னதில்லை. நிற பேதக் கொள்கையின் எதிர்ப்பு நிலையில் `பார்ப்பன ஆதிக்க சக்திகளையும், பார்ப்பனியச் சிந்தனைகளையும் மறுக்கும் எதிரணி - எதிர் இனம் என்கிற பொருளிலேயே திராவிட இனம் என்கிற கருதுகோள் முன் வைக்கப்படுகிறது.
பார்ப்பனிய நிறவெறிக் கொள்கையின் அவலங்களையும், அபாயங்களையும் மூடி மறைக்க விரும்பு வோர்க்குத் `திராவிட இனம்’ என்பது அறிவியல் அடிப்படை அற்றதாகவே தோன்றும்.
2. இம்மாதிரியான வாதங்களைப் புறந்தள்ளுவதற்குக் காரணம் இயலாமை அல்ல. அறிவுடைமை! வீழ்ச்சியுறும் தோழர்களின் அற்ப சுகத்தைக் கெடுக்கவேண்டாம் என்கிற பரிவுணர்ச்சி’
3. `திராவிடர்’ குறித்த அரசியல் - அறிவியல் விளக்கத்தின் அடிப்படையிலேயே தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் - குறிப்பாகப் பெரியாரின் பங்கு பணிகளை மதிப்பிட வேண்டும். `திராவிடர்’ என்பதிலுள்ள அரசியலைப் பிரித்துவிட்டு, வெறும் சொல் ஆராய்ச்சியில் இறங்குவதையே மயிர் பிளக்கும் வாதம் என்கிறோம்.
`அங்கே’ உள்ளடக்கத்தை விட சொற்கள் முக்கியமானவை. `இங்கே’ சொற்களைக் காட்டிலும் உள்ளடக்கம் முக்கியமானது.
4. நமது அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கு இன்றியமையாத தேவையான தமிழ்த் தேசியம் குறித்தத் தெளிவு இந்த இயக்கம் வலுவடையத் தேவைப்பட்ட ஒன்றல்லவா என்கிறார் தோழர்.
பாட்டாளி வர்க்கத்தின் - அல்லது சூத்திர இனத்தின் - தலைமையும் தத்துவமும் இல்லாத தேசிய விடுதலை என்பது பிற்போக்குத் தனத்துக்கு மகுடம் சூட்டவே பயன்படும். இதுதான் பெரியாரியத்தின், திராவிட இயக்கத்தின் தெளிவான நிலைப்பாடாகும்.
இதையே - பாட்டாளி வர்க்கத் தலைமையும் தத்துவமுமே புரட்சிக்கும், மானுட விடுதலைக்கும் முன் நிபந்தனையாகும் என்பதையே - மார்க்சியமும் வலியுறுத்துகிறது.
பார்ப்பனியத்தை அரவணைக்கவும் மார்க்சியத்தை ஒதுக்கவும் விரும்புவோர்க்கு திராவிட இயக்கம் பற்றிக் கவலை ஏன்?
பின்குறிப்பு:
`எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதான்’ என்கிற (ஏப்ரல் இதழ்) கட்டுரையில் உள்ள எள்ளல், எகத்தாளம், இழிமொழி, ஆபாச உவமைகள் அத்துணையும் கட்டுரையாளரின் அறிவு நாணயத்தின் அடையாளத்தைக் காட்டுகிறதே தவிர அவருடைய வாதத்திற்கு வலுவூட்டவில்லை - என்று பின்குறிப்பாய்ச் சொல்கிறார் தோழர் மா.ராமதாஸ்.
குறிப்பிட்ட கட்டுரை தொடர்பாக வந்துள்ள பல கடிதங்களும் கட்டுரையின் சிறப்பைப் பாராட்டியே இருக்கின்றன. இழி மொழியோ, ஆபாச உவமைகளோ இருந்ததாக எவரும் குறிப்பிடவில்லை. எதிர் முகாமுக்குப் பதில் என்கிற முறையில் எழுதப்படும் எந்தக் கட்டுரையிலும் எள்ளல், எகத்தாளம் இருக்கத்தான் செய்யும். உணர்ச்சிகளற்ற பாவத்தில் பிரச்னையைப் பிரதிபலிக்கும் கலை அந்தக் கட்டுரையாளருக்குத் தெரியாதுதான்.
நீரை H2O என்று குறிப்பிடுவது அறிவியல் மதிப்பீட்டுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் உணர்ச்சி மீதுற `வானமுதே’ என்று நீரைப் புகழ்வதுதான் மனித இயல்பு. மூன்று சென்டிமீட்டர் கண் என்பது பிரேத பரிசோதனைக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் `காதள வோடிய கண்ணாள்’ என்றே உணர்ச்சியுள்ள மனிதன் வெளிப்படுத்துகிறான். சொற்களின் அழகும் ஆளுமையும் புரியாதபோது எல்லாம் `அறிவுநாணயக் கேடாகவே’தெரியும்.
`அறிவு நாணயம்’ என்பது என்ன? தனது கருத்துக்களையும் இலட்சியங்களையும் ஒளித்து வைப்பதை இழிவாகக் கருதுவது அறிவு நாணயம்.
`எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜா’ தான் கட்டுரையாளர் அறிவு நாணயக் கேடாக எதையும் எழுதவில்லை என்பதே பலரின் கருத்து.
----- "தமிழ்ச்சான்றோர் பேரவைச் செய்திமடல்" - ஜூன் 2006
Search This Blog
24.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment