Search This Blog

16.4.08

இராமர், இராமாயணம் - வரலாற்று அறிஞர்கள் கூறுவது என்ன? (1)

(இராமர், இராமாயணம் பற்றித் திராவிட இயக்கத்தவர் பன்னெடுங்காலமாகக் கூறிவரும் கருத்துகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. இராமாயணம் கற்பனையும் கட்டுக் கதையும் கலந்த ஒரு காப்பியம் என்றும், அதில் வரலாற்று உண்மை சிறிதளவும் இல்லை என்றும் மிகச் சிறந்த நடுநிலையான வரலாற்று ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர்.
சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் சிறந்த வரலாற்றறிஞரும், வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஆவார். அது மட்டுமல்லாது இந்திய வரலாற்று மாநாட்டின் செயற்குழு உறுப்பினராக மூன்று ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் பணி புரிந்தவர். கண்ணன் திருக்கோவில்கள், திருவரங்கம், வைணவத் திருத்தலங்களின் வரலாற்றுக் கதைகள், விநாயகர் முதலிய ஆன்மிக ஆய்வு நூல்களையும் படைத்தவர்.
டிசம்பரில் டில்லியில் நடைபெற்ற வரலாற்று மாநாட்டில் தமிழகத்திலிருந்து சென்று பங்கேற்று வந்தவர் சிறப்பான பணி ஒன்றைச் செய்து வந்துள்ளார்.
இந்திய வரலாற்று அறிஞர்களில் தலை சிறந்தவர்கள் நான்கு பேரிடம் இராமாயணம், இராமர் என்பது கட்டுக் கதை, புனைந்து உரைக்கப்பெற்ற கதை என்பதற்கான கருத்துக்களைப் பெற்று வந்துள்ளார். அவர்களின் கருத்துக்களை வாய்மொழி யாகப் பெற்று வராமல் எழுத்து மூலமாக எழுதிக் கையெழுத்துடன் பெற்று திரும்பியிருக்கிறார்.
இன்றைய வாழும் வரலாற்றாசிரியர்கள் அவர்கள். அவர்களின் கருத்துக்களைக் காணும் முன், வாழ்ந்து மறைந்த வரலாற்றில் பெரும் பேராசிரியர்கள் வழங்கிய கருத்துக்களை முன்னர்த் தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது).

மிகச் சிறந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இன்று மட்டுமல்ல; பன்னெடுங்காலத்திற்கு முன்னரே இராமாயணம் கற்பனையும், கட்டுக்கதையும் கலந்த ஒரு காப்பியம் எனவும், வரலாற்று உண்மை அதில் சிறிதளவும் இல்லை என்றும் ஆய்ந்து அறிந்து தெளிந்து எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்திய வரலாறு குறித்து ஆங்கிலத்தில் வெளி வந்துள்ள நூல்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால்,
1) The Oxford History of India
2) The Cambridge History of India
3) An advanced History of India
4) A Political and Cultural History of India
5) An advanced History of India
6) The History and Culture of the Indian People
ஆகிய நூல்களைத் தான் இன்று வரை இந்திய வரலாற்று அறிஞர்கள் மட்டுமல்லாமல், மேலை நாட்டு வரலாற்று அறிஞர்களும் மேற்கோளாகக் காட்டுவார்கள். மற்ற வரலாற்று நூல்கள் எதுவாக இருந்தாலும் இந்நூல்களின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும்.
இந்த நூல்களின் கருத்துகள் இராமாயணம் பற்றி என்னவாக இருக்கிறது என்று படித்தாலே போதும், இராமர், இராமாயணம் பற்றிய கருத்துகளை வெளியிடுபவர்களின் வாதங்கள் எல்லாம் சொத்தையானவை என்று புலப்படும்.

ஆக்சுபோர்டின் இந்திய வரலாறு எனும் நூலின் முதல் தொகுதியை எழுதியவர் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரான வின்சென்ட் சுமித் தம் நூலின் 57-58 ஆம் பக்கங்களில் தாம் கூறப்போகும் கருத்துக்கு ஆதரவாகத் தமக்கு முன் இருந்த வரலாற்றாசிரியர்கள் ஜாகோபி, மக்டொனால் இராமாயணம் கட்டுக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு காப்பியமே, அது வரலாறு அன்று. கதை வடிவில் உண்மையை எடுத்துக் கூறும் உருவகமுமல்ல என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிவிட்டுத் தம் கருத்தை இவ்வாறு கூறுகிறார்.
அயோத்தியில் அல்லது தீபகற்பத்தில் நேர்மையான வரலாற்று மரபிலான உண்மையான நிகழ்ச்சிகளை இராமாயணம் அளிக்கவில்லை என நான் நடு நிலையோடும், உறுதியாகவும் நம்புகிறேன். கோசல அரசு அதன் தலைநகர் ஆகியவை குறித்துத் தெளிவற்ற மரபுச் செய்திகளின் அடிப்படையில் எழுதப் பெற்ற முழுமையான கற்பனைக் காப்பியமாகவே எனக்குத் தோன்றுகிறது. புராணங்கள் வழங்கிய நீண்ட சூரிய மரபின் அடிப்படையில் தரசதன், இராமன், பிறர் கோசலத்தில் உண்மையான மன்னர்களாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் ஏற்கெனவே மேற்கொண்ட கடும் முயற்சிகளுக்குப் பின்னும் இந்த மரபு பற்றிய ஆய்வு முடிவற்றதாகவே உள்ளது. உண்மையான வரலாறு யாது எனக் கண்டறிய இயலாத அளவிற்குக் காப்பியக் கதை கட்டுக் கதையுடன் ஒன்றிக் கலந்து இருக்கிறது. இராமனின் வீரச் செயல்களுக்கான காலத்தை முடிவு கட்டச் செய்யப்படும் முயற்சிகள் ஊகத்தை அடிப் படையாகக் கொண்டுள்ளன. (அதாவது உண்மையன்று). எனவே என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது என்கிறார்.
ஆக்சுபோர்டு வரலாற்று நூல்தான் இவ்வாறு கூறுகிறது. கேம்பிரிட்ஜ் வரலாற்று நூல் என்ன சொல்கிறது. கேம்பிரிட்ஜ் வரலாற்று நூலின் ஆசிரியர் இ.வாஷ்பர்ன் ஹாப்கின்சு என்பவர் இராமாயணக் கதை நம்ப இயலாத அளவிற்குக் கற்பனையாக இருக்கிறது என்கிறார். (பக். 236)

தி ஒண்டர் தேட் வாஸ் இண்டியா எனும் நூலாசிரியர் ஏ.எல். பாஷாம் நாடு விட்டுக் காடு ஏகிய பின்னர் கூறப்படும் இராமனுடைய வீரதீரக் கதைகளுக்கு வரலாற்று அடிப்படை எதுவும் கிடையாது என்று கூறுகிறார்.

சரி, இவர்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள், இந்தியப் பண்பாட்டின் பழம்பெருமையைச் சுட்டிக் காட்டுவதை, இந்தியப் பண்பாடு மிகப் பழமையானது என்ற கூற்றை மறைத்துத் திரித்து வெளியிட்டிருப்பார் கள் என யாரேனும் வாதிடக்கூடும். எனவே, அத்தகைய எண்ணங் கொண்டவர்களுக்கு நாம் ஆங்கிலேயர் அயல்நிலத்தவர் மட்டுமல்லாது நம்மவர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர் என்று எடுத்துக் காட்டுவதும் நம் கடமையாகிறது.

ஆர்.சி. மஜூம்தார், எச்.சி. ராய், தத்தா ஆகிய மூவரின் ‘An advanced History of India’ வேர் நூல் என்று புகழப் பெறுவது. இந்நூலைத் தமிழக அரசின் நூல் வெளியீட்டு நிறுவனம் தமிழில் மொழி பெயர்ப்புச் செய்து வெளியிட்டும் உள்ளது.

இந்நூலில் மனிதனை மனிதனே தின்னும் காட்டுமிராண்டிகளும், குரங்குகளும் நிறைந்த நிலப் பகுதியில் ராமன் செய்ததாகக் கூறப் பெறும் வீரதீரச் செயல்களில் ஒரு சிறிதும் வரலாற்று உண்மை இருக்கிறது என்று கூறுவது கடினம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆக, நம்மவர்களில் நேர்மை மிக்க வரலாற்றாய்வாளரின் கருத்தும் இதுவே.
தென்இந்தியாவின் இரண்டு புகழ்மிக்க வரலாற்று ஆசிரியர்கள் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும், ஆர். சத்திய நாதய்யரும் ஆவர்.

நீலகண்ட சாஸ்திரிதான் சோழர் பாண்டியர் வரலாற்றை முதன் முதலில் கோவையாகத் தொகுத்து வழங்கியவர். அது போலவே அண்ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் ஆர். சத்திய நாதய்யர், இராமாயணம் மிகவும் ஒன்றியதாகவும், கச்சிதமானதாக இருந்தாலும் கூட, வரலாற்றுத் தன்மை இல்லாமல் மிகவும் கற்பனையானதாக இருக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறத் தயங்கினார்கள் இல்லை.

இவர்கள் இருவரும் இறை நம்பிக்கை உடையவர்கள். இருப்பினும் ராமனின் கதை கற்பனையானது என்று உறுதியாக நம்புபவர்கள். என் கையில் அவர்களே இராமன் கதை கதையேயன்றி வரலாறு அன்று என்று கூறும் கருத்தே முன் நிற்கக் காணலாம்.
அலகாபாத் பல்கலைக் கழகப் பேராசிரியர் "இந்தியாவின் தொடக்க வரலாறு" ‘Early History of India’என்னும் நூலை 1939 இல் எழுதினார். அந்நூல் 1981 வரையிலும் எட்டுப் பதிப்புகள் வெளிவந்த சிறப்புடைய நூல்.

அவர் தம் நூலில் (பக் 68-69) இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு நூல்களையும் ஆய்ந்து
“The form in which we find these two epics now is the result of additions from time to time in their several recensions. The latest recension of the Rmayana in the form in which we find it today was about 200 A.D. and that of Mahabharata about the same time or later,”
என்று கூறுகிறார்.

இப்போது நாம் காணும் இரண்டு காப்பியங்களும் காலம் காலமாகப் பல்வேறு இடைச் செருகல்கள் கொண்டவை. இன்று நாம் காணும் இராமாயணத்தின் இப்போதைய வடிவ இடைச் செருகல் கி.பி. 200 என்று கூறுகிறார். ஆயினும் அவைகள் உருவாக்கப்பட்ட காலத்திற்கு முந்திய காலத்தையே இக் காப்பியங்கள் பேசுகின்றன.

டாக்டர் வின்டர்னிட்சு எனும் வரலாற்றாசிரியர் வால்மீகியால் ஆதிராமாயணம் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இயற்றப் பெற்றது என்று கூறுவதுடன் இவ்விரண்டு காப்பியங்களும் பண்டைய நாடோடிக் கதைகளின் அடிப்படையில் இயற்றப் பெற்றவை என்று கூறுகிறார். (Both the epics were composed on the basis of ancient ballads Winternitz, Vol I pp 500-517)
தம் நூலில் நாகேந்திரநாத் கோஷ் ‘ The Ramayana - Origin and Growth of its Literary Form’ என்று கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது.

----------- முனைவர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்கள் "விடுதலை" 4-2-2008 இதழில் எழுதியது.

0 comments: