Search This Blog

19.4.08

சீதை - இராமணுக்கு தங்கை --ராமாயணம்-எத்தனைஎத்தனை ராமாயணம்!

ராமாயணம் நடந்ததுதான்; கற்பனை அல்ல. ராமர் வாழ்ந்தார்; பாலம் கட்டினார் என்பவர்கள், எந்த ராமாயணத்தில் உள்ளபடி ராமர் வாழ்ந்தார் என்று எதிர்கேள்வி எழுப்பினால் முறையாக பதிலளிக்க முன்வருவதில்லை.

இன்றைக்கு நேற்றல்ல; 1920-களிலேயே தந்தை பெரியார் அவர்கள் ராமாயணம்பற்றி ஆய்வு நடத்தி பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்!

வால்மீகி ராமாயணம் - கம்ப ராமாயணம், துளசி தாசர் ராமாயணம் மட்டுமே ராமாயணங்களல்ல. இவை தவிர அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு முரண்பட்ட தகவல்கள் கொண்ட ராமாயணங்களும், மூட நம்பிக்கைகளும் இருக்கின்றன. சீதை ராமனின் தங்கை என்று சொல்கிற ராமாயணமும் இருக்கிறது என்றெல்லாம் பல்வேறு ராமாயணங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு - அவற்றில் காணப்படும் முரண்பாடு களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

பெரியார் மட்டுமல்ல; பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, சந்திரசேகரப் பாவலர், பண்டிதர் சவரிராயப் பிள்ளை, ஆர்.சி. தத்தா போன்ற ஆராய்ச்சியாளர்கள் பலரும் பல்வேறு ராமாய ணக் கதைகளை ஒப்பிட்டுக் காட்டி - ராமாயணம் நடந்த கதை யல்ல; கற்பனைதான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

ந.சி. கந்தையாப்பிள்ளை அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த அரும்பெரும் ஆராய்ச்சியாளர். அவர் எழுதிய நூல்களையெல்லாம் திரட்டி - தொகுப்பாக 20-க்கும் மேற்பட்ட தொகுப்பாக - வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலே பத்தாவது தொகுப்பு ஆரியர் - தமிழர் கலப்பு என்ற தலைப்பில் வெளி வந்திருக்கிற நூலாகும். அமிழ்தம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலில்,

தசரத சாதகம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இராம காதையை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
ராமாயணத்தில் தென்னாடு சம்பந்தமாகக் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்குச் சமாதானம் காண மாட்டாத வடநாட்டு வரலாற்றாசிரியர்கள் இலங்கை என்பது இலங்கைத் தீவு அன்று; அது தண்ட காருண்யத்தை அடுத்திருந்த ஓர் இடம் எனக் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
கவுதம புத்தர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் விளங்கினார். அவர் காலத்தோ, அதற்குச் சிறிது பின்போ, புத்தரின் பழம் பிறப்புகளைக் கூறும் சாதகக் கதைகள் எழுந்தன. அக்கதைகளுள் ஒன்றாகிய தசரத சாதகத்தில் இராம கதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

"முன்னொரு காலத்திலே வாரணவாசியில் தசரதன் என்னும் அரசன் வாழ்ந்தான். அவனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்களுள் பட்டத்துத்தேவி இரு குமாரரையும், ஒரு குமாரத்தியையும் பெற்றாள். மூத்த குமாரன் இராமன், இரண்டாம் குமாரன் இலக்குமணன்; புதல்வி சீதை.

பின்பு அரசி இறந்து போனாள். அவள் இறந்து போதலும் அரசன் இன்னொருத்தியை மணந்தான். அவன் அவளிடத்தில் மிக மயங்கியிருந்தான். அவள் வயிற்றில் ஒரு மகன் பிறந்தான். அவனுக்குப் பரதன் என்ற பெயர். மகன்மீது கொண்ட பற்றினால் அரசன் பட்டத்துத் தேவியை ஒரு வரம் கேட்கும்படி சொன்னான். அவள், தான் வேண்டும்போது வரத்தைக் கேட்டுக் கொள்வதாகச் சொன்னாள். பரதனுக்கு எட்டு வயதாயிற்று. அப்பொழுது அவள் அரசனிடம் சென்றாள். முன் கொடுப்பதாகச் சொன்ன வரத்தின்படி இராச்சியத்தை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டாள். அரசன் கையை உதறி, ``நாயே, எனது அழகிய இரண்டு மக்களையும் கொன்றுவிட்டு இராச்சியத்தை உன் மகனுக்குக் கொடுக்கும்படி கேட்கிறாயா? என்றான். அவள் அரசனின் கோபமான சொற்களைக் கேட்டுப் பேசாது அறையினுள் சென்றாள். அவள் தினமும் அரசனை அடைந்து நாட்டை மகனுக்குக் கொடுக்கும்படி கேட்டு வந்தாள். அவன், ``பெண்கள் தீயவர்கள்; இவள் பொய்யான கடிதம் எழுதி அல்லது எவருக்காவது கைக்கூலி கொடுத்து என் புதல்வரைக் கொன்று விடுவாள் என்று தனக்குள்ளே நினைத்தான். அவன் தனது இரு புதல்வரையும் அழைத்து, ``நீங்கள் இங்கிருந்தால் உங்களுக்குப் பல துன்பங்கள் நேரும்; நீங்கள் அடுத்த இராச்சியத்துக்கு அல்லது காட்டுக்குச் செல்லுங்கள்; எனது மரணக்கிரியை நடக்கும்போது வந்து எனது இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னான்.

அவன் சோதிடரை அழைத்தான். தனக்கு இன்னும் எவ்வளவு கால வாழ்நாள் இருக்கின்றதென்று பார்க்கும்படி சொன்னான். அவர்கள் இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வரும்படி அரசன் தனது இரு புதல்வர்களுக்கும் சொன்னான். ``நானும் எனது சகோதரர்களுடன் செல்லப் போகின்றேன் என்று சீதை சொன்னாள். பலர் பின் தொடர மூவரும் நாட்டுக்கு வெளியே சென்றார்கள். அவர்கள் உடன் வந்தவர்களைப் போகும்படிச் சொல்லிவிட்டு ஹமவந்தா என்னும் காட்டை அடைந்தார்கள். அங்கே இலைகளால் வேய்ந்த குடிசை ஒன்றை அமைத்தார்கள். இராமனைக் குடிசையில் இருக்கும்படி சொல்லிவிட்டு இலக்குமணனும், சீதையும் பழங்கள் கொண்டுவர வெளியே சென்றார்கள். அன்றுமுதல் இராமன் குடிசையில் இருந்தான்; மற்ற இருவர் பழங்களைக் கொண்டு வந்தார்கள்.

இவர்கள் இவ்வாறு இருக்கும்போது தசரதன் மக்களைப் பிரிந்த கவலையினால் ஒன்பதாவது ஆண்டே மரணமானான். ஈமக்கிரியை முடிந்தது. ``எனது குமாரனுக்கு முடிசூட்டுங்கள் என்று அரசி, மந்திரிமாரிடம் சொன்னாள். அவர்கள் அதற்கு இணங்கவில்லை. பரதன் இராமனைக் காட்டினின்றும் அழைத்து வருவதாகச் சொல்லி நால்வகைச் சேனைகளோடும் புறப்பட்டான். அவன் சேனையைத் தூரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றான். அப்பொழுது இலக்குமணனும், சீதையும் பழம் பறிக்க வெளியே சென்றிருந்தார்கள். பரதன் இராமனைக் கண்டான்; அவன் பாதங்களில் விழுந்து வணங்கித் தந்தையின் மரணத்தைக் கூறினான். இராமன் கவலை கொள்ளவும் இல்லை, அழவும் இல்லை; பரதன் அழுதுகொண்டிருந்தான். அப்பொழுது மற்ற இருவரும் பழங்கள் கொண்டு வந்தனர். தந்தையின் மரணத்தைக் கேட்டதும் அவர்கள் மயக்கமடைந்தார்கள். அறிவு தெளிந்த பின் அவர்கள் எல்லாரும் அழுது கொண்டிருந்தார்கள்; இராமன் அழவில்லை. பரதன் இராமனை நோக்கி ``நீர் அழாமல் உறுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்டான். ``மனிதனால் ஆகாத ஒன்றிற்காகப் புலம்புவதால் பயனில்லை. பழுத்த பழம் எப்பொழுதாவது நிலத்தில் விழுந்துவிடும். பிறந்தவர் எல்லாரும் ஒரு நாளைக்கு இறந்துவிடுவர் என்று இராமன் சொன்னான். இதைக் கேட்டு மற்றவர்கள் ஆறுதலடைந்தார்கள்.

பரதன் வணங்கி வாரணவாசியை ஆளும்படி இராமனைக் கேட்டான். ``இலக்குமணனையும், சீதையையும் அழைத்துச் சென்று நீயே ஆட்சி செய். எனது தந்தை பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வரும்படிக் கட்டளையிட்டார். இப்பொழுது வந்தால் நான் தந்தையின் கட்டளையைக் கடந்தவனாவேன். நான் இன்னும் மூன்று ஆண்டுகளின் பின் வருவேன் என்றான். அவ்வ ளவு காலமும் யார் ஆட்சி புரிவார் என்று பரதன் கேட்டான்.

இராமன் ``எனது மிதியடிகள் ஆட்சி புரியும் என்று சொல்லித் தனது, புல்லால் முடைந்த மிதியடிகளை அவனிடம் கொடுத்தான். மூவரும் மிதியடிகளை எடுத்துக்கொண்டு வாரணவாசி சென்றார்கள். மந்திரிமார், சிங்காசனத்தின்மீது மிதியடிகளை வைத்து ஆட்சி புரிந்தார்கள். ஆகாத யோசனைகளை அவர்கள் செய்ய நேர்ந்ததால், மிதியடிகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. மூன்று ஆண்டுகள் கழிந்தன. இராமன் காட்டினின்றும் வந்தான். அவன் பதினாறாயிரம் ஆண்டுகள் நீதி ஆட்சி புரிந்து வானுல கடைந்தான்.

இவ்வரலாற்றில் இராவணன் சீதையைக் கவர்ந்ததைப் பற்றியோ, இராம இராவணப் போர்களைப் பற்றியோ யாதும் கூறப்படவில்லை. தசரத சாதகக் கதை எழுதப்படுகின்ற காலத்தில் இராம. இராவணப் போர்களைப்பற்றிய வரலாறு வழங்கவில்லை என நன்கு புலப்படுகின்றது. தொடக்கத்தில் தசரத சாதகத்தில் சொல்லப்பட்டதுபோல வழங்கிய கதையே பிற்காலத்தில் இன்றைய இராமாயணமாக வளர்ச்சியடைந்தது. இவ்வாறு இராமாயணம் மேலும் மேலும் வளர்வதற்குள்ள காரணம் இராமர் விட்டுணுவின் அவதாரமெனப் பிற்காலத்திலெழுந்த தவறான கருத்தேயாகும்."

- என்று குறிப்பிட்டிருக்கிறார் ந. சி. கந்தையாப் பிள்ளை.

பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்ற கவியரசு கண்ணதாசனின் பாடலைப்போல இராமாயணங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதாகப் பல்வேறு இராமாயணங் களும் பல்வேறு முரண்பாடுகளுடன் எழுதி வைக்கப்பட்டி ருக்கின்றன.
தசரத சாதகம் - சீதைக்கு இராமன் அண்ணன் என்கிறது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகத்தில் சீதை ராமனின் சகோதரியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாள். பிற்காலத்தில் ராமாயணம் எழுதியவர்கள் - அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு புதுப்புது இராமாயணங்களைப் படைத்து விட்டார்கள்.

தமிழ்நாட்டிலேகூட ``சீதைக்கு ராமன் சித்தப்பா என்று கேலி பொங்கிடும் ஒரு பழமொழி இருக்கிறதே.

நன்றி: `"முரசொலி" 21.9.2007

0 comments: