Search This Blog

28.4.08

ஜாதி ஆபத்து - எம்டன் கப்பல் வரவு

மகாயுத்த ஆரம்ப காலத்தில் புதுவைத் துறைமுகத்தில் எம்டன் என்னும் செர்மனிக் கப்பல் வந்ததற்காகப் புதுவை வாசிகளில் ஏழைகளும் பணக்காரருமாகப் பலபேர்கள் குடும்ப சகிதம் மேற்கில் பத்துப் பதினைந்து மைல் தூரமுள்ள கிராமங்களுக்குப் போய்விட்டார்கள். அதிலொரு கிராமம் கூனிச்சம்பட்டு. கூனிச்சம்பட்டுக் கிராமத்தார் தங்களூரை நோக்கி அஞ்சி ஓடிவரும் புதுவை வாசிகளை வரவேற்று, அவர்கள் தங்கிச் சமையல் செய்து கொள்ளத் தாங்கள் வசிக்கும் வீடுகளிலேயே இடம் கொடுத்தனர். கூனிச்சம்பட்டுக் கிராமத்தார் தம்மை நாடி வந்தவர்கள் அனைவரும் மொத்தத்தில் பட்டினவாசிகள் என்று கருதினார்களேயன்றி அவர்களால் இவர் இன்ன ஜாதி என்பதை நினைக்க வில்லை. பட்டினவாசிகளும் தங்களுக்குத் தங்க; இடம் கொடுத்தவர்களும் இன்னவர் இன்ன ஜாதி என்பதை அலசிப் பார்த்துத் தத்தமக்கு ஏற்ற ஜாதிக்காரர் வீட்டில் தங்கினதாகவும் சொல்லமுடியாது. எனவே கூனிச்சம்பட்டில் புதுவை வாசிகள் தங்கியிருந்த வரைக்கும் தமது ஜாதிப் பைத்தியத்தினின்று நீங்கிச் சமத்துவ வாழ்வு வாழ்ந்தனர். வாசகர்கட்கு நன்றாய் ஞாபகம் இருக்கட்டும்; புதுவை வாசிகள் இரண்டொரு நாள் கூனிச்சம்பட்டியில் சமத்துவமாயிருக்க ஜெர்மனிக் கப்பல் புதுவைத் துறை முகத்துக்கு வரவேண்டியிருந்தது!


அக்கப்பல் மறுநாள் போய்விட்டது! போய்விட்ட செய்தி கூனிச்சம்பட்டியிலிருந்த புதுவை வாசிகளுக்கு நிச்சயப்பட்டது. கூனிச்சம் பட்டிலும், அதன் அண்டைக் கிராமங்களிலும் சத்த வண்டிகள் தயாராயின. ஒரு ரெட்டியார் வீதி. அவ்வீதியில் புதுவைக் குடும்பம் பத்துக்கு மேல் தங்கியிருந்தன. அக்குடும்பங்களில் ஒரு குடும்பம் மிக்க தாழ்ந்த சாதி. பக்கத்து வீட்டில் இறங்கியிருந்த குடும்பம் உயர்ந்த ஜாதி. அதன் பக்கத்தில் நடுத்தரம். எதிர்த்த வீட்டில் தங்கியிருந்ததோ கொஞ்சம் சுமார். புதுச்சேரி வேளாளக் கிழவி ஒருத்தி - ஜெர்மனியான் கப்பல் வந்தாலும் வந்தது! இந்த இடத்தில் கீழ்ச்சாதி - மேல்ஜாதி என்று இல்லாமல் எல்லாரோடும் சரிசமானமாய் இருக்க நேரிட்டது என்று சொன்னாள்.

பக்கத்து வீட்டில் நின்றிருந்த கீழ்ச்சாதி புதுவைப் பெண்ணின் காதில் இது விழுந்தது; அப்பெண், ஏன் முதலியார் வீட்டம்மா! அந்தக் கீழ்ச்சாதி நேற்று நினைப்பில்லாமல் போனதென்ன? இன்றைக்குத்தான் நினைப்பு வந்தது என்றால் உங்கள் மேல்ஜாதிப் பெருமையைச் சொல்லிக் கொள்ளாதிருந்தால் முழுகிப் போவது ஒன்றுமில்லையே என்றாள். இதுதான் சொன்னாள். கிழவிக்கு வந்தது கோபம்.

தாழ்ந்த ஜாதியின் வர்ணனை ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஜாதிக்கே உரிமையென்று பல செயல்கள் வெளிவந்தன. தாழ்ந்த ஜாதிப் பெண் திகைத்தாள். அவளுக்குத் திட்டத் தெரியாது. நாணமும் பொறுக்க முடியவில்லை. கண்ணீர் விட்டாள். ஆனால் அவள் புருஷன் புதுவைக்கு போகச் சத்த வண்டியோடு வந்துவிட்டான். இதைக் கேள்விப்பட்டான். நன்றாகக் கிழவியைத் திட்டினான். கிழவியின் மருமகனான முதலியார் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் காதில் கேட்டது. அவரும் வந்து தாழ்ந்த ஜாதி ஆண் பிள்ளையை எதிர்த்தார். அச்சண்டையில் அவரின் காரியக்காரனும் முதலியாருக்கு உதவி செய்தான். மேலும் தாழ்ந்த ஜாதிப்பாடல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. தடிகள் உபயோகிக்கப்பட்டன. விஷயம் பரவிற்று. உள்ளூர்த் தாழ்ந்த ஜாதிக்காரர்களும் அங்கு நெருங்கினார்கள். மேல் ஜாதியாரும் நெருங்கினார்கள். இரண்டு நிமிஷத்தில் இரு பக்கத்திலும் பத்துப் பேர்கள் வீதம் நின்று, ஆயுதங்களைச் சுழற்றினார்கள். அடுத்த இரண்டாவது நிமிஷம் நூறுபேர் வீதம் இரு தரப்பிலும் சேர்ந்தார்கள். அதற்குமேல் உயர் ஜாதிக்காரருக்குக் கூட்டம் சேரவில்லை. எதிரிகளின் தொகை அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. முடிவு: 20 பேருக்கு ஆபத்தான காயம், ஒருவன் இறந்தான்; 15 பேருக்கு கைமுறிவு, கால்முறிவு! கூனிச்சம்பட்டில் ஆஸ்பத்திரி ஏது? புதுவை ஆஸ்பத்திரியை நோக்கி வண்டிகள் வரிசையாக நோயாளிகளையும் சொந்தக்காரர்களையும் ஏற்றிப் போய்க் கொண்டிருந்தன. வழியில் என்ன விஷயமென்று கேட்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வெட்கமாயிருந்தது.

வெட்கக்கேடு. ஜெர்மனியின் அக்ரமமான சண்டைக் கப்பலுக்குத் தப்பித்துக் கொள்ளுவது சாத்தியம். ஆனால், மனு வகுத்த ஜாதி என்னும் அக்ரமத்திற்குத் தப்பி உயிர் பிழைப்பது முடியவில்லை.

---------- - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - "புதுவைமுரசு" 12.1.1931

0 comments: