Search This Blog

13.4.08

'கிரீமிலேயர்' அளவுகோலுக்கு உச்சநீதிமன்றம் வைத்திருக்கும் ஆதாரம் என்ன?

உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு வரவேற்கத் தக்கதே! இடஒதுக்கீடு என்பதே அரசியலமைப்புக் சட்டத்துக்கு விரோதம் என்பதுபோல உருவாக்கப்பட்ட கருத்து இந்தத் தீர்ப்பு மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இது வரவேற்கத்தக்க தீர்ப்பேதான்.

கிரீமிலேயர் என்ற ஒன்றைப் புதிதாகக் கொண்டு வந்து திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கமே தகர்க்கப்பட்டுள்ளது. மண்டல் குழு பற்றி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட தீர்ப்பில் திணிக்கப் பட்ட ஒன்றாகும் இந்தக் கிரீமிலேயர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படாதது இது. பொருளாதார அளவுகோல் என்பது 1951-இல் நடைபெற்ற விவாதத்திலேயே நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதார அளவுகோல் பற்றி விவாதிக்கப் பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு, ஏற்காமல் தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்றைக் கொண்டு வந்து உச்சநீதிமன்றம் திணிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகும்.

பொருளாதார அளவுகோல் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறக் கூடியது. இந்த ஆண்டு வருமானம் அடுத்த ஆண்டு இருக்கும் என்று சொல்ல முடியாது.


கிரீமிலேயரைக் காரணம் காட்டி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு செய்வதைத் தள்ளிப் போகச் செய்யக் கூடாது. இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்பது எங்களின் அழுத்தமான கருத்தாகும். மத்திய அரசுக்கு தமிழக முதல் அமைச்சர் அவர்களும் இதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்? `கிரீமிலேயர் என்ற அளவு கோலை இடஒதுக்கீட்டிலிருந்து நீக்க மத்திய அரசு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.


ஒரு குடும்பத்துக்குள்ளேயே ஒரு வீட்டுக்குள்ளேயேகூட ஒருவர் பிற்படுத்தப்பட்டவராகவும் இன்னொருவர் அது அல்லாதவராகவும் ஆக்கப்படக் கூடிய ஒரு நிலைமையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் என்பதில் நிரந்தர வருமானக்காரர்கள் உண்டு - அவர்கள் அலுவலர்கள்; விவசாயத் தொழிலில் ஈடுபடக் கூடியவர்களை நிரந்தர வருமானக்காரர்களின் பட்டியலில் சேர்க்க முடியாது. இயற்கைத் தொல்லைகளால் பாதிக்கப்படக் கூடியது விவசாயத் தொழில்; இன்னும் சொல்லப் போனால் இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமும் அல்ல. இந்தக் கருத்து மண்டல் குழுவின் அறிக்கையிலே தெளிவுபடுத் தபட்டுள்ளது.
ஏழையாக இருப்பவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்யலாமே தவிர கல்வியில் கொண்டு வந்து அதனைத் திணிக்கக் கூடாது.


பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் வசதி வாய்ப்புள்ளவர்கள் எல்லாம் கல்வியில் முன்னேறியுள்ளனர் என்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் ஆதாரமோ புள்ளி விவரமோ இருக்கிறதா? எந்த அடிப்படையில் கிரிமீலேயரை வெளியேற்ற வேணடும் என்று கூறுகிறார்கள்?

முதன் முதலாக மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இப்பொழுதுதான் பிற்படுத்தப்பட்டோர் நுழைகிறார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் கல்வியில் வளர்ந்து விட்டார்கள் என்று அவர்களில் ஒரு பிரிவினரை வெளியேற்றுவது நியாயமாக இருக்க முடியுமா?
வாய்ப்பைக் கொடுத்து விட்டு அதற்குப் பிறகு 5 ஆண்டு கழித்தோ, பத்தாண்டு கழித்தோ ஆய்வு செய்யலாமே - 20 ஆண்டுகள் கழித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றுதான் மண்டல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பந்தியிலேயே உட்காரவில்லை; அதற்குள்ளாகவே அவர்கள் தின்று தீர்த்து விட்டனர் என்று நீதிமன்றம் கூறுலாமா? இதில் இன்னொரு கருத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது - என்று புகார் செய்ய வேண்டியவர்கள் யார்? பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகளாக இருக்கக் கூடியவர்கள்தானே! அவ்வாறு யாரும் வழக்குத் தொடுக்கவில்லையே! உயர்ஜாதிகாரர்கள்தானே வழக்குத் தொடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் இன்னொரு ஆபத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர தகுதியானவர்கள் பிற்படுத்தப்பட்டோரிலிருந்து கிடைக்கவில்லையானால் அந்த இடங்களை திறந்த போட்டிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுவது - யாருக்கு லாபம்? உயர் ஜாதிக்காரர்களுக்குத் தானே இப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குகிறது?

பிற்படுத்தப்பட்டோர் பட்ட மேற்படிப்புக்குச் செல்லக் கூடாதா
பட்ட மேல் படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என்று ஒரு சில நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது தீர்ப்பா? கருத்தா? கட்டாயமா? என்பவை தெளிவாக் கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் பட்ட மேற் படிப்புக்கு செல்லக் கூடாதா? இது சமூகநீதியின் அடிப் படையைத் தகர்க்கக் கூடியதாகும்.


- செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி (சென்னை 12.4.2008)

0 comments: