Search This Blog

17.4.08

வகுப்பு வாதம் ஒழிந்ததா? அல்லது முன்னிலும் அதிக பலம் பெற்றதா?அது பார்ப்பனரிடம் இருக்கிறதா?அல்லது பார்ப்பனரல்லாதாரிடம் இருக்கிறதா?

இவ்வாண்டு நடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே கண்ணை மூடிக் கொள்ளும் என்று நினைத்துப் பேசுவது போல் நமது பார்ப்பனர் வகுப்பு வாதம் ஒழிந்தது என்று கத்திக் கொண்டு வேஷப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் தேர்தல் வகுப்பு வாதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டே நேரிடையாகவும் மறைமுகமாகவும், சூழ்ச்சியாகவும் நடைபெற்று வந்திருக்கிறது என்பதை பொது ஜனங்கள் அறியமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .

அதாவது, இந்தியா சட்டசபைக்கு சென்னை நகரத் தொகுதிக்கு ஒரு ஸ்தானம் உண்டு. அந்த ஒரு ஸ்தானத்திற்கு மூன்று தடவையும் பார்ப்பனர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள். மற்ற 23 ஜில்லாக்களுக்கு 9 ஸ்தானங்கள் உண்டு. இந்த 10 ஸ்தானங்களுக்கு 8 பார்ப்பனர்; அதில் 6 அய்யங்கார். அதாவது சிறீமான்கள் 1 . சீனிவாசய்யங்கார், 2. எம்.கே. ஆச்சாரியார், 3. துரைசாமி அய்யங்கார், 4. எ.ரெங்கசாமி அய்யங்கார், 5. சேஷய்யங்கார், 6. கே.வி. ரங்கசாமி அய்யங்கார், 7. ஜே.கையபந்தலு, 8. டி. பிரகாசம் பந்தலு ஆகிய 8 பார்ப்பனர்களும் 2 பார்ப்பனரல்லாதார் அதாவது சிறீமான் ஆர்.கே. ஷண்முகஞ் செட்டியாரும் மற்றொரு ஆந்திர தேசத்தார் அவர் பார்ப்பனரா அல்லவா என்பது கூட தெரியவில்லை.

சிறீமான் ஷண்முகஞ் செட்டியார் அவர்களும்கூட பார்ப்பனர்களுக்கு அடிமையாயில்லாதிருந்தால் அந்த ஸ்தானமும் மற்றொரு அய்யங்காருக்குப் போயிருக்கும் என்பதே உறுதி. இது வகுப்பு வாதமும், வகுப்புச் சலுகையும், வகுப்புப் பிரசாரமும் இல்லாமல் பொது நோக்கில் நடந்ததா? அப்படியானால் சென்னை மாகாணமாகிய இந்த 24 ஜில்லாக்களிலும் இந்தியா சட்டசபைக்கு யோக்கியதையுள்ள பார்ப்பனரல்லாதார் சிறீமான் சீனிவாசய்யங்காரைத் தலைவர் என்று பிரசாரம் செய்த சிறீமான் ஆர்.கே ஷண்முகஞ் செட்டியாரைத் தவிர வேறு ஆள் கிடையாதா? இந்த 8 பார்ப்பன அய்யங்கார்களைத் தவிர தேசாபிமானமும் தேசபக்தியும் உள்ளவர்கள் இல்லையா? இந்த 8 பார்ப்பன அய்யங்கார்களைப் போல் அதாவது, ஒரு பார்ப்பன குழந்தை ஒரு வேளை சாப்பிடுவதை ஒரு பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் என்று சொன்ன பார்ப்பனர்களைப்போல் வகுப்பு வித்தியாசமில்லாதவர்கள் இல்லையா? என்றுதான் கேட்கிறோம்.

ஏறக்குறைய இத்தேர்தல்களில் பார்ப்பனரல்லாதார்கள் வேண்டுமானால் வகுப்பு நலத்தையும் வகுப்பு வாதத்தையும் மறந்திருக்கிறார்களே ஒழிய எந்தப் பார்ப்பனராவது வகுப்பு வாதத்தை விட்டுக் கொடுத்தாரா? ஒவ்வொரு ஊர் தேர்தலிலும் உதாரணமாக திருநெல்வேலி ஜில்லாவில் நாடார் சகோதரர் ஒருவரை சுயராஜ்யக் கட்சியில் சேர்த்துக் கொண்டு ஒரு பார்ப்பனர் வேலை செய்தாரே, நாடார் கனவானுக்கு பார்ப்பனர்கள் தீங்கு செய்தார்களே? ஓட்டுப் பிரசாரம் செய்யும் போதே கூட ஜாயிண்டாக நின்ற பார்ப்பனர் நாடார் அபேட்சகரை, பிராமணாள் வீட்டுக்குள் நீங்கள் வரக்கூடாது என்று வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே போய் தனக்கு மாத்திரம் தனி வோட்டு கேட்டுவிட்டு வெளியில் வந்து உங்களுக்கும் போடுவதாய் ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்லி ஏமாற்றினார்கள். கடைசியாக முடிவு பார்க்கும் போது பார்ப்பனர் ஓட்டுக்கள் மாத்திரம் பார்ப்பனருக்கும், நாடார் ஓட்டுக்கள் மாத்திரம் நாடாருக்கும் கிடைத்தது. அய்யருக்கு 6000 ஓட்டு, நாடாருக்கு 5000 ஓட்டு. இதுதான் வகுப்பு வாதம் புதைக்கப்பட்ட தேர்தல்களாம்! மற்ற இடங்களிலும் பார்ப்பனர்கள் பார்ப்பனருக்கும் பார்ப்பன ரல்லாதார் 2 பேருக்குமாக அதாவது, "சொம்மு மா சொம்மு மா சொம்மு மா சொம்மு" உங்கள் சொத்து எங்களுடையது எங்கள் சொத்து எங்களுடையது என்கிற மாதிரியாக நடந்திருக்கிறது. இதிலிருந்து வகுப்பு உணர்ச்சி யாரிடம் இருக்கிறது? இனி யாருக்கு ஏற்பட வேண்டும் என்பதையும் அது ஒழிய வேண்டுமானால் முதலில் யாரிடம் ஒழிய வேண்டும் என்பதையும் யோசித்தால் விளங்காமல் போகாது. அதோடு வகுப்பு வாதம் கூடாது என்று பேசும் சில நாடார் வாலிபர்களையும், ஜஸ்டிஸ் கட்சியார் என்று சொல்லும் பார்ப்பன ரல்லாதாரிடம் வகுப்பு வாதம் காரியத்திலிருக்கிறதா? சுயராஜ்யக் கட்சியார் என்று சொல்லும் பார்ப்பனர்களிடம் வகுப்பு வாதம் காரியத்திலிருக்கிறதா? என்பதையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தால் தேசத்தின் பேரால் ஸ்தானம் பெறாமல் சர்க்கார் தயவில் ஸ்தானம் பெற நேரிடுமா? என்பதையும் யோசித்துப் பார்த்து நடு நிலைமையில் இருந்து உண்மை அறிய வேண்டுகிறோம்.

---தந்தைபெரியார்-- "குடிஅரசு" 12.12.26

0 comments: