கேள்வி: நாம் வணங்கும் சாமிகளில்கூட தமிழ்ச் சாமிகள் வடநாட்டுச் சாமிகள் என்று இருப்பதுபோல் நடிகர் சத்யராஜ் பேசியிருப்பதுபற்றி?
பதில்: வடநாட்டுப் பதவியை நாடாமல், இங்குள்ள மாநிலப் பதவிகளையே நாடுங்கள் என்றா அவரால் பேச முடியும்? கலைஞர் வருத்தப்படமாட்டாரா?
- ("துக்ளக்", 23.4.2008)
திருவாளர் சோ எப்படி விவாதம் செய்யக்கூடியவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
கேட்ட கேள்வி என்ன? அதற்குப் பதில் என்ன?
கடவுள் என்று சொல்லிக்கொண்டு அதில் இந்தக் கடவுளுக்குத்தான் பவர் - அந்தக் கடவுளுக்குப் பவர்கட் என்று சொல்லுவது கடவுளையே கேலி செய்வதாக ஆகாதா? திருப்பதி ஏழுமலையான் சக்தி வாய்ந்தவரா? சபரிமலை அய்யப்பன் சக்தி வாய்ந்தவரா? காசி விசுவநாதன் சக்தி வாய்ந்தவரா? என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு பக்தியின் கவுரவம், கடவுள் சக்தியின் வண்டவாளம் சந்தி சிரிக்கிறதே!
ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணம் எழுதி, தங்கள் கடவுள்தான் உசத்தி என்று பிரச்சாரம் செய்வது - ஒரு வகையான வருவாய்க்கான பிசினஸ் முறைதானே! (பக்தி என்பது பிஸினசாகிவிட்டது என்ற ஜெயேந்திர சரஸ்வதிவாள் கூற்றுக்கு உபயம்!)
கடவுள் அரூபி - உருவமற்றவர் - எங்கும் நிறைந்தவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, கடவுளுக்கு உருவம் செய்து வைப்பதும், பெண்டாட்டி, வைப்பாட்டிகளைக் கூட்டி வைப்பதும் கோயில் கட்டுவதும் பக்கா முரண்பாடுதானே?
சத்யராஜ் எழுப்பிய கேள்விக்குள் அடங்கியிருக்கும் இவ்வளவு சங்கதிக்குள்ளும் நுழைந்தால் சிக்கி மூச்சுத் திணறிவிடும் என்ற உதறலில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கலைஞரை இழுத்துக் குளிர் காய்வானேன்? எதற்கு எடுத்தாலும் கலைஞர் வெறுப்பு - எதிர்ப்புச் (ஃபோபியா) சிந்தனைதானா?
சரி, அவர் சொல்லும் விவாதத்துக்கே வருவோம். பதவியும் - கடவுளும் ஒன்றா? பதவி இன்றுவரும் நாளை போகும். கடவுள் சங்கதியும் அப்படித்தானா? பதவிக்காக கட்சித் தாவல்கள் எல்லாம் இருக்கின்றனவே - இதில் கடவுள் சங்கதி எப்படி?
இப்படி சொன்னாலும் அவர் சொல்லக்கூடும். அதிக பணம் கொடுத்தால் கடவுள் தரிசனம் சீக்கிரம் கிடைக்கும். மிக அதிக பணம் கொடுத்தால் உங்கள் வீட்டுக்கேகூட கடவுள் வந்தாலும் வருவார் என்று அவர் பதில் சொல்லக்கூடும்.
சொல்வது என்ன?
இந்த வார துக்ளக் கேள்வி - பதிலும் அதையும் ஒப்புக்கொண்டு சரணாகதி அடைந்துள்ளார். அது இதோ:
கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றதுபற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?
பதில்: இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேஸ்வரப் பெருமாள் உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து, ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை.
("துக்ளக்", 23.4.2008, பக்கம் 17)
பரிதாபம், திருவாளர் சோவால் சத்யராஜிக்கும் பதில் சொல்ல முடியவில்லை - அவர் வக்காலத்து வாங்கும் கடவுளையும் காப்பாற்ற முடியவில்லையே!
கலைஞர் வெறுப்பு என்கிற ஒன்றை மட்டும்தான் அவரால் காட்டிக்கொள்ள முடிந்தது! பேஷ்! பேஷ்!! நன்னா சமத்தா பதில் சொல்லியிருக்கா!
------------- மயிலாடன் அவர்கள் "விடுதலை" 17-4-2008 இதழில் எழுதிய கட்டுரை
Search This Blog
18.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment