Search This Blog

19.4.08

கடவுள்களால் என்ன பயன்?

விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுளைப் பற்றியும், பேசிக் கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டித்தனமேயாகும். என்றாலும், நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்விதக் குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால், நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரச்சாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது.

கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழைய கால அதாவது காட்டுமனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும், முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள், ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும், மனதுக்கும் எட்டாதது என்றும், அது, பெயரும் குணமும், உருவமும் இணையும் இல்லாதது என்றும், மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக் கூடியது என்றும், சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேச வேண்டிய அவசியம் இல்லை.

இக்கருத்துடன் உணர்ந்திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும், நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும், பல அறிஞர்களும் அதை ஒப்புக் கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால், இன்றைய தினம் இந்துக்கள் என்பவர்களுடைய, சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன. பாருங்கள், மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலியவையும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன.

காசியில் ஒரு கோயிலில் இரண்டு உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவற்றுக்கும் பூஜை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்ளவோடு இல்லாமல், இக்கடவுள்களுக்கு பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, தாசி விபசாரித்தனம், ஆகாரம், உறக்கம், புணர்ச்சி முதலியவையும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும், இக்கடவுளுக்கு கல்யாணம், சாவு முதலியனவும்கூட கற்பிக்கப்படுகின்றன. கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை; செய்கையில் செய்து காட்டி, அதாவது கடவுள் விபசாரித்தனம் செய்வதாகவும், தாசி வீட்டுக்குப் போவதாகவும், மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவதாகவும் உற்சவங்கள் செய்து காட்டி, அவற்றுக்காக பல கோடிக் கணக்கான ரூபாய்களும், மனிதனின் விலை உயர்ந்த நேரமும், ஊக்கமும் உணர்ச்சியும் பாழக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20ஆம் நூற்றாண்டில் செய்யக் கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக் கொண்டு அவை மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்தாக புராணங்களையும், இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு, அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன்.

கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக் கடவுளாவது ஏற்றுக் கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும், சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் மூன்று தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே, அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண் ஜாதி வேண்டியிருந்தால், போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா, அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா, அல்லது ஓடிப்போய் விட்டதா, அல்லது முடிவெய்தி விட்டதா என்று நாமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக்கல்யாணத்துக்கு கொட்டு முழக்கு ஆடம்பரம், பணச் செலவு ஏன்? சாமி கல்யாண சமாராத சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப் படி வருஷம் எத்தனை உற்சவம்? எங்கெங்கு உற்சவம்? இவற்றால் இதுவரை அடைந்த பலன் என்ன?

நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100-க்கு 95 பேர்கள் தற்குறி; நமது நாடும் உலகத்திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒரு மனிதனுக்கு தினம் சராசரி இரண்டு அணா வரும்படி கூட இல்லை என்று சொல்லுகிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா? ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள்? இவை எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப்படுவதென்றால், யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள்.

வைகுண்ட ஏகாதசிக்கும், ஆருத்திரா தரிசனத்துக்கும், தைப் பூசத்துக்கும், கார்த்திகை தீபத்துக்கும், திருப்பதிக் குடைக்கும், திருச்செந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷா வருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்துச் செலவு, மெனக்கேடு செலவு, உடல் கேடு, ஒழுக்கக் கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால், இக்கடவுள்களால் மக்களுக்கு நன்மையா, தீமையா என்று கேட்கிறேன்.

இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்குப் பயன்படுத்த முயற்சி செய்தால், வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களைக் கைப்பற்றி தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தினால், வேலையில்லாத் திண்டாட்டமும், தற்குறித் தன்மையும், அன்னிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா என்று கேட்கிறேன். ஏதோ ஒரு கூட்டங்கள் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டுத் தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள்தனமாய் நடந்து கொள்வதா என்று கேட்கிறேன். மற்றும், கடவுள் பேரைச் சொல்லிக் கொண்டு, பக்தியை காரணம் காட்டிக் கொண்டு எவ்வளவு முட்டாள்தனமாய் நடந்துகொள்ளுகிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மக்கள் துணி கட்டிக் கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும், மொட்டை அடித்துக் கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும், சாம்பலையும் அடித்துக் கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக் கொள்ளுவதும், அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆன காரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா? மற்றும் மக்கள் சாப்பிடக் கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவற்றை கல்லின் தலையில் குடம் குடமாய்க் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம், பத்து லட்சம், கோடி பெறும்படியான ஆறு மதில், ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள், கட்டடங்கள், கோபுரங்கள் எதற்கு? தங்கம், வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவை எல்லாம் நாட்டு பொதுச் செல்வங்கள் அல்லவா? இவற்றை கல்லுகளுக்கு அழுதுவிட்டு, சோம்பேறி சூழ்ச்சிக்காரன் பார்ப்பான் வயிற்றை நிரப்பி, அவன் மக்களை அய்.சி.அய்., அய்கோர்ட் ஜட்ஜ், திவான்களாக ஆக்கிவிட்டு, இதுதான் கடவுள் தொண்டு என்றால், இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டுகளையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக்கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன். இனி எப்பொழுதுதான் நமக்குப் புத்தி வருவது? இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும், அவனது எரிச்சலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக் கொண்டு முட்டாள் ஜனங்கள், மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடுகிறார்கள். அப்படியானால், இந்தக் கடவுள்களை ஒப்புக்கொண்டு இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமாய்க் கூத்தாடுவதுதானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகமா? அப்படியானால், அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப்பற்றி எங்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. இந்த பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ஏதோ எங்களுக்குத் தோன்றியதை - நாங்கள் சரி என்று நம்புவதை, அதாவது, நம் நாட்டுக்கு மேற்கூறிய மதமும், கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றன என்றும், இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும், ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.

பொறுமையாய்க் கேட்டு, பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்றுதான் சொல்லுகிறோமே ஒழிய, பார்ப்பனர்கள்போல, நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ, நம்பினால் தான் மோட்சம், நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை.


------------------தந்தைபெரியார் - "குடிஅரசு"- 19-12-1937

0 comments: