Search This Blog

2.4.08

இராமாயணம் நடந்த கதையல்ல!

இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை. அது அறிவுக்குப் பொருத்த மானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேல் லோகம் என்றும் குறிப்பிட்டிருப்பதற்குப் பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேல் லோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரவுக்கு வழியும் இல்லை!

இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?

தேவலோகத்தில் என்றால், அங்கிருந்த பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்?

எனவே, இப்போது பூதேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே இராமாயணம்!

1. இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தமானதோ நடந்த நடப்புகளைக் கொண்டதோ ஆன கதையல்ல என்பதோடு, பெரும் கற்பனைச் சித்திரமும் ஆகும்.

2. அதுவும் காட்டுமிராண்டிக் காலத்திய உணர்ச்சியையும் அக்கால ஆரியப் பண்பாடு - பழக்க வழக்கம் முதலிய அவர்களது அன்றைய கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனை இலக்கியமாகும்.

3. அது ஒன்றல்ல; பல இராமாயணங்கள் என்னும பெயரால் நாட்டில் வழங்கிவருகின்றன.

4. அவை ஒருவரால் ஏற்பட்டவை அல்ல.

5. ஒரே காலத்தில் உண்டாக்கப்பட்டனவும் அல்ல

6. கோர்வை அற்றது.

7. முன்னுக்குப் பின் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.

8. முன்னுக்குப்பின் பொருத்தமற்ற கற்பனைகள் பல

9. மனிதப் பண்பிற்கு ஏற்றதல்ல

10. தெய்வீகம் என்பதற்கு ஏற்றதல்ல

11. மனித தர்ம ஒழுக்கம் காணவும் முடிவதில்லை.

12. உண்மையான வீரம் காண முடிவதில்லை

13. யுத்த முறையிலும் யுத்த தர்மமோ உண்மையான மனித பலமோ தெய்வீக பலமோ அறிவுக்கேற்ற வில்வித்தை முதலிய ஆயுதப் பயிற்சி பலமோ ஆயுதமோ இருந்ததாகத் தெரிய முடியவில்லை. எல்லாம் பொருத்தமற்ற கற்பனைகளே.

14. அதில் காணப்படும் ஆள்கள் உண்மையாய் இருந்தவர்களாக இருக்க முடியாது.

15. ரிஷிகள் முதலியவர்களும், இருந்த மக்கள் என்று சொல்ல முடியாததாகும்.

16. இராமாயணம் சரித்திரத்திற்குச் சம்பந்தப்பட்ட தல்லாதது என்பது மாத்திரமல்லாமல், அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் சம்பந்தப்படாததே ஆகும்.

17. தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை

18. அதில் கடவுளாகக் காணப்படுபவர்கள் ஒருவரிடத்திலும் (நடத்தையிலும், பேச்சில், எண்ணத்தில்) கடவுள் தத்துவம் என்பதைச் சிறிதும் காணமுடிவதில்லை).

19. மாமிசம் சாப்பிடுவது, மது அருந்துவது இராமாயணத்தில் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது.

20. தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்பன இராமாயணத்தில் வரையறுக்கப்படவில்லை.

21. இவர்களது வயதுகளும் வரையறுக்கப்படவில்லை; வயதுக்கு ஆதாரம் இல்லை என்பதோடு முரண்பாடு கொண்டதுமாகும்.

22. இராமாயணத்தில் வரும் பாத்திரங்களுக்கு ஒரு சமயத்தில் இருக்கும் சக்தி, தன்மை மற்றொரு சமயத்தில் காணப்படுவதில்லை.

23. இராமாயணக் காலம் என்பதில் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமலும், கண்டுபிடிக்க முடியாமலும் இருக்கிறது.

24. வேதங்களுக்குப் பிறகுதான் புராணங்கள் உண்டாகி இருக்க வேண்டும். புராணங்களில் தான் இராமாயணம், பாரதம், கடவுள்கள், அவதாரங்கள் காணப்படுகின்றனவே ஒழிய, வேதத்தில் இல்லை.

25. வேதத்தில் விஷ்ணு ஒரு சாதாரண, மூன்றாந்தர, நாலாந்தர தேவன்

26. சிவனும், பிர்மாவும் வேதத்தில் இல்லை. ருத்திரன் தான் காணப்படுகிறான்

---------தந்தை பெரியார் அவர்களால்(எல்லா ஆதாரங்களைப் பொறுத்தே)
தொகுக்கப்பட்டவை நூல்: "இராமாயணக் குறிப்புகள்" பக்கம் 3-6

0 comments: