Search This Blog

31.8.22

கணபதி உருவ பொம்மை உடைப்பு! ஏன்? எதற்கு? - பெரியார்

 

திராவிடத் தோழர்களே! இந்தியாவில் “வெள்ளைக்கார சக்கரவர்த்தி’’ ஆட்சி ஒழிந்து பார்ப்பன ஆதிக்க “ஜனநாயக ஆட்சி’’ ஏற்பட்டதிலிருந்து, இன்று, இந்த நேரம் வரை ஒவ்வொரு மாத்திரை நேரமும் வருணாச்சிரம தரும ஆட்சி வளர்ந்து வளம் பெற்று வருகிறது.

வருணாச்சிரம தருமத்தைப் புகுத்தப் பார்ப்பன ஆதிக்க ஏகபோக ‘ஜனநாயக’ ஆட்சியானது ஆட்சி முறை  பல துறைகளில் பல கொடுமையான முறைகளைக் கையாண்டு வந்தாலும்  திராவிட நாட்டில் _ தமிழ் நாட்டில் _ தென் இந்தியாவில் _ சென்னை ராஜ்ஜியத்தில் “வெள்ளைச் சக்கரவர்த்தி’’ காலத்தில் ஒரு அளவுக்கு  முன்னேற்ற மடைந்திருக்கிற திராவிடர்களை மனுகால சூத்திரர் ஆக்கத்திட்டம் கொண்டு உத்யோகத் துறையிலும், கல்வித் துறையிலும் திட்டம் வகுத்து செயலில் இறங்கிவிட்டது.

1.    சூத்திரர்களுக்கு அரசாங்க உத்யோகத்தில் இருந்த “சூத்திர’’ வகுப்பு உரிமை, அரசமைப்புச் சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டு, அய்கோர்ட் (உயர்நீதமன்ற) தீர்ப்பு மூலம் அந்த நீக்கம் உறுதியாகி அமலுக்கு வந்துவிட்டது. இதிலிருந்து “சூத்திரன்’’ (தமிழர்கள்) உத்தியோக உரிமை அற்றவர்களாக  ஆக்கப்பட்டு விட்டார்கள்.

2.    சூத்திரர்களுக்குக் கல்வித் துறையில் ஒரு அளவுக்குப் பெரிய கிளர்ச்சி மீது சிறிது உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டுவிட்டது.

3.    கல்வித் துறையில் மேல்வகுப்பு அதாவது உத்தியோகத்திற்குத் தகுதியாகும் படிப்புதான் “சூத்திரன்’’களுக்கு உரிமை இல்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டுவிட்டது என்றாலும், பொதுக் கல்வி என்பதுகூட சரிவரப் பெறுவதற்கு இல்லாமல் அடிப்படைக் கல்வி என்னும் பேரால் தகப்பன் தொழிலை _ பரம்பரைத் தொழிலை, படிக்கவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் எந்த நாட்டிலும் இல்லாத இந்த அதிசயமான முறையானது, நாட்டுநலனுக்கு  ஆகவோ, கல்வி நலனுக்கு ஆகவோ, ஆட்சி நலனுக்கு ஆகவோ, அல்லது மக்கள் ஒழுக்க நலனுக்கு ஆகவோ அல்லாமல் பார்ப்பான் நலனுக்கும், சர்வ ஆதிக்க நலனுக்கும் ஆதரவு ஏற்படுத்தப்பட்டு இருந்து வருகிற வர்ணாசிரம தரும புதுப்பிப்புக்கு ஆகவே  இந்த “ஜனநாயக ஆட்சி’’ என்பதில் செய்யப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுவதற்கு ஆகவேயாகும்.

இன்று இந்தத் திராவிட (தமிழ்) நாட்டு திராவிட மக்கள் தங்கள் நாட்டிலேயே, தங்கள் “100க்கு 90க்கு மேற்பட்டு ஓட்டுரிமை’’ பெற்றிருந்தும், “ஜனநாயக’’ ஆட்சியிலேயே இந்த இழிநிலை; அதாவது சூத்திர, பஞ்சமநிலை அடைந்திருப்பதை ஒழித்துக் கொள்ள வேண்டுமானால்-_ இந்து வர்ணாச்சிரம தருமமுறையை அழித்து  ஒழித்தாலொழிய வேறு எந்தக் காரணத்தாலும் யாராலும் முடியாது என்று நான் மனப்பூர்வமாகச் சித்த சுத்தியாக நம்புவதால்,  வருணாசிரம முறையைஅழிக்கமுற்படும் முறையில் முன்னுரையாக இதைக் கூறுகிறேன்.

சமீப காலமாகவே பொதுமக்கள் உணரலாம்; என்னவெனில் ஆட்சியின் வேலையும், அதிகாரிகளின் வேலையும், சவுண்டிப் பார்ப்பனர் முதல் சங்கராச்சாரியார் பார்ப்பனர்வரை சர்வ பார்ப்பனர்களும் வருணாசிரம வேத சாஸ்திர புராண இதிகாசங்களைப் பிரசாரம் செய்வதும், இந்திய பிரசிடென்ட்டு, இந்திய பிரதமர், மற்றும் இராஜ்ய கவர்னர்கள், இராஜ்ய பிரதமர்கள் முதல் யாவரும் பார்ப்பனர்களாகவே ஆகிக்கொண்டு, மேற்கண்ட வேதசாஸ்திர புராண முதலிய பிரச்சாரங்களும் செய்து வருவது என்றால், இதில் ஏதாவது சூழ்ச்சி, உள்கருத்து இல்லாமல் இருக்க முடியுமா?

மற்றும் இவை மாத்திரமல்லாமல் நம் சூத்திர மக்களில் செல்வவான், கல்விமான், அரசியலில் விளம்பரம், பதவிபெற்ற உலக விளம்பர சீமான்கள் முதல் எச்சிலைக் கலைச் செல்வவான்கள் வரையில் 100க்கு ஒருவருக்கு கூட கவலையோ, மான உணர்ச்சியோ இல்லையே என்று நான் காணும்போது, 75 ஆண்டு வாழ்ந்து அண்மையில் சாகப்போகிற நான், 35 ஆண்டுகளாக வீடு, வாசல், செல்வம், தொழில், மனைவி “மக்களை’’ துறந்த சன்னியாசியாக நம் திராவிடமக்களுக்கு இந்தச் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டு மென்றே பாடுபட்டு வந்து, வருகிற நான், ஆண்டு ஒன்றுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் ஏன் 50 ஆயிரம் ரூபாய்கூட வரும்படி உள்ளதான எனது எஸ்டேட்டை பாழடையவிட்டுவிட்டு, பரதேசியாய் பிரயாணங்களுக்கும், பிரச்சாரத்திற்கும் பொதுமக்களிடம் செலவு பெற்று வாழ்ந்துவரும் நான், இதற்கு  இந்த வருணாசிரம தரும முறை ஒழிய ஏதாவதொரு நாள் இதற்குக் காரியம் செய்யாமல் என் உயிர்போக எப்படி என்னை விட்டுக்கொண்டு இருக்க முடியும்?

ஆச்சாரியார் முதல்மந்திரி பதவிக்கு வந்தது குறித்து உண்மையில் மகிழ்ச்சி அடைந்தவன் நான். காரணம் பிரகாசம், கம்யூனிஸ்டு, பொறுப்பற்ற “உதிரிகள்’’ என்பவர்கள் ஆட்சியைவிட நமக்கு நன்றாகக் கண்டித்து, எதிர்த்து, போர் துவக்க  வசதி இருக்கக்கூடிய ஓர் ஆட்சி, அதுவும் சொந்த வாழ்வில் கண்ணியமும், உலக அனுபவ அறிவும் உள்ளவர் ஆட்சிக்கு வருவதுமேல் என்று கருதி ஆதரித்தேன்.

இதற்குக் காரணம் தனிப்பட்டவர்கள் சொந்த முறையில் நடந்துகொண்டிருக்கிற முறைபற்றின அனுபவம் எனச் சிறிது இருந்ததேயாகும். ஆச்சாரியாரும் அதுபோலவே ஆட்சிக்கு கவர்மெண்டுக்கு கவுரவம் இருக்கிற  மாதிரியிலேயே பெரிதும் நடந்துவருகிறார். என்றாலும் -_ தனது (பார்ப்பன) வகுப்புக்கு ஒரு வகுப்பின் உத்தமபுத்திரன் எப்படி நடந்துகொள்ளுவானோ அதுபோல், “தேவர்களுக்கு ராமன் நடந்து கொண்டது’’ போல்தான் நடந்து கொண்டிருக்கிறார்.


 நம்மில் துரோகிகள், அனுமார்கள், விபிஷணர்கள் இருந்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும்?

ஆனதால் நான் என் சொந்தப் பொறுப்பில் முன்பு பல தடவை கூறி இருப்பதுபோல வருணாசிரம வியாதியை ஒழிக்க கடைசி சிகிச்சையாக, நாளது மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை தமிழ் நாடெங்கும் புத்த விழா கொண்டாடி மாலை 6 மணிக்குப் பொதுக்கூட்டத்தில் வருணாசிரம வாதிகள் பெரும்பாலோருக்கும் “முதல் தேவன்-_தெய்வம்’’ என்று உருவாக்கி இருக்கும் செயற்கை உருவ கணபதி அறிகுறியை மக்கள் உள்ளத்தில் அழித்துவிட வேண்டும் என்பதாகப் பொது மக்களை அதாவது மனு வருணாச்சிரம தருமத்தை வெறுக்கிற பொதுமக்களையும் திராவிடர் கழகத் தோழர்களைச் _ சிறப்பாக இளைஞர்களையும் வேண்டிக் கொள்ளுகின்றேன்.
அன்று பிள்ளையார் அல்லது கணபதி உருவம் என்பதை மண்ணால் செய்து பொம்மை உருவத்தையே கொள்ளுங்கள்.  சர்க்கார் 144 (தடை ஆணை) போட்டால் உருவத்தை அழிப்பதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் கழகக் காரியாலயத்தில் அல்லது அவரவர்கள் வீட்டில் உடைத்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்.  நரகாசுரனைக் கொன்றதற்கு ஆக பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அது போல் உருவத்தை உடைத்து கொண்டாடுங்கள்.

புத்த பிரான் வருணாச்சிரம தர்மத்தையோ இந்த வருணாச்சிரம தேவர்களையோ ஏற்றுக்கொண்டவர் அல்ல; அவற்றை ஒழிப்பதே புத்தர் மதத்தின் உட்கருத்து, முதல் கருத்து. இந்தத் தேவர்களைத், தெய்வங்களை நாம் வணங்குவது ஏற்பது மிகுதியும் முட்டாள் தனமும் மானமற்ற தன்மையுமாகும். நமக்குக் கடவுள் என்பதெல்லாம் நம் நடத்தையில் சத்தியம்,  நாணயம், தயவு, உபகாரம் செய்தல், துரோகம் செய்யாமல் இருத்தல் ஆகியவையாகும்.

                   --------------------------பெரியார் ஈ.வெ.ரா அறிக்கை: ‘விடுதலை’, 6-5-1953

29.8.22

கடவுள் - ஜாதி - ஜனநாயகம் என்கிற முப்பேய்கள் - பெரியார்

 கடவுள் - சாதி - ஜனநாயகம் என்கிற முப்பேய்களையும் விரட்டினால் தான்      நல்வாழ்வு!


 

நம்முடைய நாட்டையும் அதில் வாழும் மக்களையும் பிடித்திருப்பவை மூன்றுவிதமான பேய்கள்; முதலாவது பேய் கடவுள்.

 

பேய் என்றால் என்ன? இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதிக் கொண்டு பயப்படுகிறார்களே அதுதான். நம் பெண்களை யார் பிடித்திருக்கிறான் என்று கேட்டால் பேய் ஆடிக்கொண்டு என்னைச் சாயபு பிடித்திருக்கிறான் என்கிறது; சாயபு எப்படி வந்து பிடித்தான் என்றால், எப்பொழுதோ ஒரு காலத்தில் சாயபு ஒருவன் கிணற்றில் விழுந்து செத்துப் போனான். அவனுடைய ஆவி பேயாக அலைகிறது; அதுதான் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது என்பார்கள்!

 

குழந்தைகளைப் பேய் பிடிக்காமல் இருப்பதற்காக இரும்புத் துண்டையும் கல்லையும் பக்கத்தில் போட்டு வைக்கிறார்கள்! படித்த பெண்களே பேய்க்குப் பயப்படுகிறார்கள் என்றால் படிக்காத மற்ற தற்குறிப் பெண்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும். இதுபோல் தான் கடவுள் என்பதும்! இவர்களுடைய அறியாமையை ஒழிப்பது எப்படி? இந்த நோயை வளர விடலாமா? அழித்தால்தானே மக்களுக்குத் துணிவும், அறிவும் பிறக்கும்; இதை ஒழிக்க யார் முன்வருகிறார்கள்?

 

அடுத்தது சாதிப்பேய்! இது யாரிடம் காணமுடிகிறது? பெண்களை ஒரே மாதிரி உடையணிவித்து நிறுத்தி வைத்து ஒருவெளி நாட்டுப் பெண்ணை விட்டுப் பரிசோதிக்கச் சொன்னால் இவள் பார்ப்பனச் சாதிப்பெண்! இவள் பறை சாதிப்பெண்! இவள் சூத்திரசாதிப்பெண்! என்று கண்டு பிடிக்க முடியுமா? மனித இனத்தில் சாதி ஏது?

 

நாயில் சாதி உண்டு; குதிரையில் சாதி உண்டு. மாடு, ஆடு போன்றவற்றில் சாதி உண்டு. மனிதர்களில் வேற்றுமை ஏது? நிறத்தில் மாறுபாடு காணக் கூடும்; வெள்ளைக்காரனுடைய நிறத்திற்கும் நீக்கிரோக்களின் நிறத்திற்கும் வேறுபாடு உண்டு. சைனாக்காரன் இதைப் பார்த்தால் இவன் வேறு சாதி! அவன் வேறு சாதி என்று இடத்தை நிறத்தைப் பார்த்து வேண்டுமானால் சொல்லலாம். இங்கே எப்படிச் சாதியைக் காட்ட முடியும்?

 

இங்கு வாழும் பார்ப்பானும் பாரதமாதாவின் புத்திரன்! பறையனும் பாரதமாதாவின் புத்திரன்! பறையனுக்குப் பார்ப்பான் பெண் கொடுத்திருக்கிறான். அவர்களுக்கும் பிள்ளை குட்டி பிறந்திருக்கிறது. பார்ப்பானும் திருட்டுப் புரட்டு, ஃபோர்ஜரி முதலிய எல்லாக் காரியத்திலும் கைதேர்ந்தவனாக இருக்கிறான்; மற்றவர்களும் இருக்கிறார்கள்; இதில் எப்படித் தனிச்சாதி என்று பிரித்துக்காட்ட முடியும்?

 

மக்களை ஏய்த்துப் பிழைக்க வேண்டும் என்பதற்காகப் பார்ப்பனர்கள் அமைத்துக் கொண்ட ஆணவம் - திமிரைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? மக்களை மானமற்ற முறையில் வைத்துக் கொண்டு அடிமையாகப் பயன்படுத்த சாதி பயன்படும்!

 

மலேயாவில் இருக்கிற பார்ப்பானும் இங்கிலாந்து சீமையில் இருக்கிற பார்ப்பானும் பன்றி மாடு கறி தின்கிறான்; குடிக்கிறான்! எது உயர்ந்த சாதிக்கு ஏற்காதோ அத்தனையும் தின்கிறான்! அங்கே சாதியைப் பேசுவதில்லை! இங்கே வந்தால் தான் அவன் உயர்ந்த சாதி, இவன் தாழ்ந்த சாதி என்கிறான். இது மக்களை ஏய்ப்பதைத் தவிர வேறு என்ன?

 

பேயும் - சாதியும் எப்படி மனிதனைக் கோழைகளாகச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றனவோ அவைபோலவே கடவுள் என்ற பேயும் ஆகும். ஒவ்வொருவர் வீட்டிலும் கடவுள் இருக்கிறது! காலையில் எழுந்து சிவ சிவா என்று கல்லில் முட்டிக் கொண்டால் தான் பக்தி என்கிறார்கள். ஆனால் ஆத்திகன் என்று ஒருவன் இருந்தால் அவனிடம் ஒழுக்கமோ, நாணயமோ, நேர்மையோ அறவே காண முடியவில்லை.

 

கடவுளை நம்பினால் ஒருவன் ஏன் பூணூலை மாட்டிக் கொண்டு பார்ப்பான் என்ற உயர்ந்த ஜாதியாக இருக்க வேண்டும்? ஒருவன் ஏன் கீழ்சாதியாக இருக்க வேண்டும்? கடவுளுக்குப் பயந்து எவன் ஒருவன் ஒழுக்கக்கேடான காரியத்தைச் செய்யாமல் இருக்கிறான்? எவ்வளவு கீழ்த்தரமான எண்ணத்தில் நடக்க வேண்டுமோ அத்தனையும் செய்துவிட்டுச் சண்டப்பிரசண்டம் செய்கிறானே! கடவுளோடு கடவுளாகத் தூக்கி வைக்கப்பட்டு இருக்கும் சங்கராச்சாரியாலேயே ஒழுக்கம் உண்மை சமாளிக்க முடியவில்லை என்றால் மற்றவர்களால் எப்படி முடியும்?

 

கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கக்கூடியவனும், அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்று சதா நம்பி வாழ்பவனும் பணப்பெட்டியைப்  பூட்டிவிட்டுத்தானே வருகிறான்? பக்தியில் மூழ்கிக் கடவுள் நம்பிக்கை கொண்டவன் வீட்டைப் பூட்டாமல் போனதைப் பார்த்திருக்கின்றீர்களா? கடவுள் நம்பிக்கை இருக்கும் போது வீட்டிற்கு ஏன் பூட்டு போட்டுப் பூட்டி இருக்கிறதா இல்லையா என்று இழுத்துப் பார்த்துச் செல்ல வேண்டும்? அவன் (கடவுளாக) தான் இருக்கிறானே! திறந்து போடட்டும்; பார்க்கட்டுமே?

 

அடுத்து பத்திரிகை நோய். தமிழ் நாட்டில் இருக்கிற மக்கள் மடையர்களாக அயோக்கியனாய் வருவதற்குக் காரணம் பார்ப்பன பத்திரிகைகள் தான். நம்முடைய வளர்ச்சியை எல்லாம் தடைப்படுத்தி வருவன பத்திரிகைகளும் அவற்றை நடத்தும் பார்ப்பனர்களுமேயாகும். எவ்வளவோ காரண காரியத்தோடு பேசுகிற இந்தக் கூட்டத்தைப் பற்றி எழுதமாட்டான்! இங்கே வந்திருக்கும் இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பற்றி ஒரு வரி கூடப் போடமாட்டான்! சங்கராச்சாரியாரும் ஒரு சந்தில் நான்கு பேரை அழைத்துப் பேசி; கொண்டிருந்தால் நான்கு கலம் (பத்தி) அய்ந்து கலம் எழுதுவான் அல்லது நம்மைச் சில காலிகள் தாக்கிப்பேசினால் அதை முதலில் பக்கத்தில் போட்டுப் பெருமையடைவான்! நம்மைத் திட்டுகிறவனும் சுகமாக திட்டுகிறான். பார்ப்பானிடம் கூலி வாங்கிக் கொண்டுதானே திட்டுகிறான்? அவன் பேச்சைப் போடும் போது நம் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் என்று எழுதுவான்! உள்ளே படித்துப் பார்த்தால் எங்கே விரலைவிட்டு ஆட்டினான் என்பது இருக்காது!

 

சாதி ஒழிந்தால் பார்ப்பானுக்குப் பிழைப்புப் போச்சு! சாதியும் நம் கடவுள்களும் நம்மை விட்டுப் போனால் பார்ப்பான் செத்தான் என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் ஒழுக்கக்கேடாய், முட்டாள்களாய் இருப்பதெல்லாம் பார்ப்பான் இருக்கும் வரையில்தான். அவன் ஒழிந்தபிறகு இந்த நாட்டு மக்கள் அறிவுத்துறையில் முன்னேறி உலகமக்கள் முன்னணியில் நிற்கமுடியும். இதற்குப் பாடுபடாமல் சட்டசபைக்குப் போய் சம்பாதிக்கிறேன் என்றால் எப்படி முடியும்?

 

வெள்ளைக்காரன் இருந்தபோது சட்டசபை என்றால் அதற்கு ஒரு மரியாதை இருந்தது. அவன் போன பிறகு குச்சக்காரிகளின் வீட்டில் நுழைவது போல நினைத்தவன் எல்லாம் போகும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. முன்பு சில தகுதியுள்ளவர்கள் இருந்து மக்களுக்கு வேண்டியதைச் சாதித்தார்கள். இப்பொழுது இன்னார் இன்ன காரியத்தைச் செய்தார்கள் என்று சொல்ல முடியுமா?

 

காங்கிரஸ் ஒரு கொள்ளைக்காரனுடைய ஸ்தாபனம். அவன் மெஜரிட்டிப் (பெரும் பான்மை) பலத்தோடு இருக்கிறான். அங்குள்ள அரசமைப்புச் சட்டம் மனுதர்ம சாஸ்திரமே என்ற ஆதாரத்தை வண்டி வண்டியாகச் சொல்கிறேன். அந்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டுமென்றும் கூறுகிறேன்.

 

அரசமைப்புச் சட்டத்திற்கும், இந்தச் சட்டசபைக்கும் கட்டுப்பட்டு நடப்பேன் என்று கையெழுத்துப் போட்டுவிட்டுப் போகிறான் என்றால் அவனுக்கு மனம் இருக்கிறதென்றா எண்ணுகின்றீர்கள்? அரசியல் கட்சி நிபுணன் (வல்லுநன்) என்று கூறிக்கொண்ட கம்யூனிஸ்டுகளாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் நீ மட்டும் என்ன சாதிக்கப் போகிறாய்? அய்ந்து கோடி இங்கே பத்து கோடி அங்கே என்றால் போதுமா? நீ போய்ச் சாதிக்க என்ன செய்தாய்? பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகத்தில் இருந்து கொண்டு நம்முடைய இனத்தின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறார்களே! அதற்குப் பரிகாரம் என்ன செய்தாய்?

 

எதிர்க்கட்சி என்று எதற்காக இருக்க வேண்டும்? அதனால் என்ன நன்மை ஏற்படுகிறது? அடிக்கிற கொள்ளையில் பங்கு போட்டுக் கொண்டு தின்பதைத் தவிர வேறு உருப்படியான காரியம் ஒன்றும் தெரியவில்லையே? நீ தின்கிறாய்; அதற்காகவா மக்கள் ஓட்டுப் போட்டார்கள்? அவர்கள் வாழ்வை வளமாக்க வேண்டாமா?

 

உங்கள் நாட்டிலே பார்ப்பனர்கள் செய்கிற அக்கிரமத்தைப் போல் இங்கேயும் செய்கிறார்கள். ஆதலினால் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு தனி மாநாடு கூட்டிப் பார்ப்பனர்களை விரட்டுவோம் என்று என்னை அழைக்கிறார்கள். நம் நிலையே சரிபடுத்த முடியவில்லை. இதைவிட்டு எப்படி நாம் அங்கு போய்ப் பார்ப்பது?

 

ஆகவே தோழர்களே! நம் சமுதாயம் முன்னேற வேண்டுமானால் அதற்கு முதலாவதாக காரியம் பார்ப்பானை நம் வீட்டுக்கு வராமல் விரட்டுவதுதான். நம்முடைய செல்வம் அவனுடைய கையில் சிக்காமல் காப்பாற்றப்படுவதுதான் என்றாலும், நாம் மூடப் பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். அதற்காக நிறைய நம் புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்க வேண்டும்.

 

சென்னையில் இருக்கும் திராவிடர் கழகத்தை எடுத்துக் கொண்டால் சைதைதான் (சைதாப்பேட்டை) எதிலும் முன்னணியில் நிற்கும் கழகக் கொள்கையைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்குப் பாடுபட வேண்டுமென்ற எண்ணமும் இவர்களுக்கு உண்டு. இன்று நடத்தப்பட்ட விழா மிகவும் ஆடம்பரமான முறையில் அதிகப் பொருள் செலவில் செய்திருக்கிறார்கள். இவ்வளவு ஆடம்பரம் தேவையில்லை. இவைகளைக் குறைத்துக் கொண்டு அந்தப் பணத்தை ஏதாவது பயனுள்ள காரியத்திற்குப் பயன்படுத்தினால் நல்லது என்று கூறினேன். இவர்கள் கேட்கவில்லை.

 

                                   ----------------------------------------------- 11.08.1958 சென்னை சைதையில் தந்தை பெரியார் சொற்பொழிவு: ”விடுதலை”, 12.08.1958