வெள்ளையன் ஆட்சியால் பார்ப்பனியந்தான் வளர்ந்தது!
தோழர்களே, இன்று தலைமை வகித்த நண்பர் சோமசுந்தரம் இவ்வூர் விவசாயிகளுக்கு எரு, பிண்ணாக்கு முதலியன கிடைக்கவில்லையென்று எடுத்துக்காட்டினார். நான் இதைக் கண்டு ஓரளவு வருந்தினாலும், இன்னும் இதைவிட கொடுமைகள் நம் நாட்டில் உண்டாக வேண்டும், ஏன்? இன்றைய பார்ப்பனிய ஆட்சியின் அமைப்புக்கும் பெரிதும் ஆக்கந் தேடியவர்கள் இந்நாட்டு விவசாயிகளும், தொழிலாளருமேயாகும். இன்னும் கூறுகிறேன், இவ்வளவு தொல்லைகள் ஏற்பட்ட பின்னராவது இவர்களுக்கு உணர்ச்சி வந்துள்ளதா, வந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டால் போதுமா? இவ்வட்டத்தில் யார் எங்கள் பிரதிநிதியாய் சட்டசபைக்கு ஓட்டு கொடுத்து அனுப்பினீர்ளோ அவரைக் கண்டு ஏன் இதைப்பற்றிக் கேட்கவில்லை. அல்லது அதற்கான மந்திரியையாவது கேட்டீர்களா? நாம் உணர்ச்சியற்று இருக்கும் வரை நம் பேரால் ஓட்டுக் கேட்டுச் சென்றவர்களும் மந்திரிகளும் அவரவர் சுயநலத்தையே கருத்தாகக் கொண்டுதானே நடந்து வருவார்கள்? 'தட்டிக் கேட்காவிடில் தம்பி சண்டைப் பிரசண்டன் தானே?' எத்தனை நாளைக்குத்தான் திராவிடர்களாகிய நாம் வாயில்லாப் பூச்சிகளாக அதுவும் பார்ப்பனனும் வடநாட்டானும் செய்யும் கொடுமைகளை பொறுத்திருப்பது.
எனக்குப் பெரிய மன வேதனையாயிருந்து வருகிறது. நான் செல்லுமிடங்களிலெல்லாம், தொழிலாளர் கூப்பாடு, விவசாயிகள் பரிதாபம், மற்றும் ஆசிரியர்களின் தவிப்பு, பொது மக்களுக்கு அரிசி முதல் துணி வரை பஞ்சம், அதே நேரத்தில் மந்திரி வரை தொட்டதற்கெல்லாம் லஞ்சம் பகிரங்கமாகக் கொள்ளையடிப்பது கேட்டால், காலிகளை ஏவிவிட்டுக் கலகம் விளைவிப்பது.
தொழிலாளி கூலி உயர்வு கேட்டால் 144- உத்தரவிலிருந்து அடக்குமுறை சட்டம் வரை அமல் ஆக இவ்வித கொடுமைகள் இன்னும் வளர்ந்து கொண்டே போனால் ஆட்சியிலிருந்து அட்டூழியம் புரியும் மந்திரிமார்களை ஏன் கொடும்பாவி கட்டி இழுக்கக் கூடாது? மனம் பதறவில்லையா? இன்றைய ஆட்சி காலிகளின் உதவியைக் கொண்டு நடத்தப்படுகிறதேயன்றி நேர்மையான முறையில் நடைபெறுகிறதென்று எந்த காங்கிரஸ்காரராவது கூறமுடியுமா? எனவே தோழர்களே இனி நாம் வெறும் பேச்சளவில் கண்டிப்பதோடல்லாமல் நமக்குள்ள முறைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியதற்கு கட்டுப்பாடாக ஆவன செய்ய வேண்டும். ஆனால், நாம் அவ்விஷயத்தில் ஆத்திரப்படுதல் கூடாது.
வெள்ளையன் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் மற்ற யாருக்கும் திராவிடர் இயக்கம் குறைந்ததல்ல. உள்ளபடியே வெள்ளையர் ஆட்சியால் திராவிட இனத்துக்குப் பெரிதும் கேடுதான் விளைந்துள்ளன. இரண்டொரு விசயங்களில் வெள்ளையர் ஆட்சியில் நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை மறுக்கவில்லை. ஆனால், பொதுவாக இந்நாட்டை ஆண்டிருந்த உரிமையாளரான சமுதாயத்தினராகிய நம்மை பார்ப்பனியத்திற்கு அடிமைப்படச் செய்ததற்கு வெள்ளையன் ஆட்சியே காரணம். பார்ப்பனியத்தை வளர்த்தது வெள்ளையன் ஆட்சியே. மதத்திற்குப் பாதுகாப்பு, ஜாதி ஆவணத்திற்குப் பாதுகாப்பு, மனுதர்ம சாஸ்திரம் என்ற "இந்து லா"வுக்கு பக்க பலம்; சங்கராச்சாரி போன்றவர்களுக்குப் பாதுகாப்பு; இவ்வளவும் வெள்ளையனால் அளிக்கப்பட்டு வந்தன. ஏன் அவ்வாறு அளிக்கப்பட்டு வந்ததென்றால், வெள்ளையரைப் போல ஆரியர்களும் மேல் நாட்டிலிருந்து இங்கே பிழைக்க வழி தேடிவந்த வர்க்கத்தினராகும். இன்னும் கூறவேண்டுமானால் ரத்தக்கலப்புடைய ஜாதி, இதை நான் கூறவில்லை. பார்ப்பன மேதாவிகளே எழுதி வைத்துள்ளனர். ஆக இவ்வளவு அடிமை நிலையில் வாழும் நாமா வெள்ளையனுக்கு குலாம்களாயிருக்க முடியும். வெளிப்படையாகக் கூறவேண்டுமானால் வெள்ளையனை இந்நாட்டுக்கு கூட்டிக் கொண்டுவர சூழ்ச்சி செய்தான் ஒரு பார்ப்பனன் என்பதை யார் மறுத்தாலும் சரித்திரம் கூறுவதை மறுக்க முடியாது. வெள்ளையன் ஆட்சியில்தான் பார்ப்பனருக்கும் பெரிய பெரிய உத்யோகம், பார்ப்பன ஜாதியில் 100- க்கு 100- பேர் கல்வியறிவு முதலியன. நாட்டுக் குரிமையாளரான நாமோ 100- க்கு 10- பேர்கூட கல்வியறிவுயில்லாதவர்களாயிருக்கிறோம். உத்தியோகத்திலும் அவ்விதமே.
அதுமட்டுமல்ல; பார்ப்பனன் வெள்ளையனிடம் சுயராஜ்யம் கேட்க என்ன உரிமையிருக்கிறது? அவன் எந்த நாட்டை ஆண்டான்? எந்த நாட்டுக்குச் சொந்தக்காரனாயிருந்தான்? நம் நாட்டில் வந்து புகுந்து கொண்டு நமக்குள் பிளவுகளை உண்டு பண்ணிய தோடல்லாமல் நம்மை வெள்ளைக்காரனின் கையாட்கள் என்று கூறுகின்றனரே, காங்கிரஸ் திராவிடர்களே, நடு நிலையிலிருந்து சிந்தித்துப் பாருங்கள். சமீபகால நிகழ்ச்சிகளை டெல்லி நாடகத்தை, வைசிராயிடமும், பிரிட்டிஷ் மந்திரி சபையிடமும் இந்த சுயராஜ்ய வீரர்கள் நடந்து கொள்ளும் விதத்தை, வெள்ளையனை இந்நாட்டிலேயே இரு என்று இப்போதே ஜாடையாகக் கூறப்பட்டு வருகிறது. "சுயராஜ்யத் தலைவர்களால்" விரைவில் காணப் போகின்றீர்கள். உண்மையிலேயே வெள்ளையனை இந்நாட்டைவிட்டுத் துரத்தப்போகும் போராட்டத்தை அது யாரால் செய்யப்படப் போவதென்பதை நான் கூறத்தேவையில்லை. ஆனால், அதே சமயத்தில் இந்த வெள்ளையனுக்கு ஆதரவு தேடப்போவது இதே காங்கிரஸ் - சுயராஜ்ய - வடநாட்டுத் தலைவர்களும் - நம் நாட்டுப் பார்ப்பனர்களுமே தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். யான் கூறுவது சிலருக்கு வியப்பாகத் தோன்றலாம். இன்று நாளடைவில் அது நடைமுறையில் வரும்போது நம்புவீர்கள். யான் இதுவரை கூறி வந்த ஒவ்வொன்றும் அவ்விதந்தான் நடைபெற்று வந்திருக்கிறது.
தோழர்களே, கடைசியாக ஒன்று கூற ஆசைப்படுகிறேன், இந்நாட்டு மக்களின் மனக் கொதிப்பை மதியாத எந்த மந்திரி சபையும் விரைவில் ஒழிந்தே தீரும் என்பதை இக்கூட்ட வாயிலாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன். நானும் திராவிடர் இயக்கமும் ஓரளவு மக்களை ஆத்திரத்தில், அல்லது மனவேகத்தில் காரியங்கள் நடத்த வேண்டாமென்று அடக்கி வருவதனாலேயே இம்மாகாணத்தில் அமைதி நிலவி வருகிறது. ஆனால் இன்று நாட்டில் பார்ப்பனிய ஆட்சியினரால் மேலும் தொடர்ந்து ஆணவத்தால் நடைபெற்று வரும் கொடுமைகளைப் பார்க்கும்போது இம்மாதிரி சபையை ஒழித்தே தீருவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். எனவே, இன்னும் சிறிது பொறுத்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். அதற்குள்ளாக இன்றைய அரசியலாருக்கு நல்ல புத்தி வந்து ஆணவம் அடங்கி தொழிலாளர் முதல் எல்லா மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் நடந்தால் நல்லது; இல்லாவிடில் அமைதியை எதிர்பார்ப்பது வீணேயாகும்.
-------------------------- 18.05.1947- இல் நாமகிரிப் பேட்டையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. ’’குடிஅரசு’’, 22.05.1947
0 comments:
Post a Comment