பெரியோர் என்று பல மாமனிதர்களைச் சொல்வதுண்டு. ஆனால் பெரியார் என்றால், மூடப் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமுதாய சமத்துவம் காணப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களை மட்டுமே அடையாளம் காட்டி நிற்கும் சொல்லாகத் திகழ்கிறது.. அத்தகு பெருமைபெற்ற நம் அய்யா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளுள் சில:
@@@@@
அய்யாவின் அறிவாற்றல்
கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அய்யா சொற்பொழிவாற்றினார். மொழிபெயர்ப்புப் பணிக்காக நமது உண்மை ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் உடன் சென்றிருந்தார். இயல்பிலேயே தன்னம்பிக்கையினை அதிகமாகப் பெற்ற அய்யா அவர்கள் எதையும் தாமே செய்து பார்ப்போம் என்ற ஆர்வம் கொண்டவர்.
கான்பூர் மாநாட்டினை முடித்துவிட்டு லக்னோ சென்று பேசச் சென்றார். ஆங்கிலத்தில் பேச முயன்றார். ஆசிரிருக்கோ வியப்பு. பேசும் இடமோ பல்கலைக்கழகம், அய்யா படித்ததோ மூன்றாம் வகுப்புவரை மட்டுமே. எனினும், அறிவு ஆசான் துணிச்சலுடன் பேச நினைத்தார்.
ஒரு சிறிய முன்னேற்பாட்டின்படி பேசத் தொடங்கினார். அதாவது, அய்யா ஆங்கிலத்தில் பேசுவார். அய்யாவுக்குப் பேசும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர் அந்த வார்த்தையினை எடுத்துக்கொடுத்து சரிசெய்ய வேண்டும். அய்யாவின் விருப்பப்படி ஆசிரியர் தயார்நிலையில் இருந்தார்.
அய்யா பேசத் தொடங்கினார். பேசிக்கொண்டிருந்தபோது அடுப்பு எனும் பொருளை உணர்த்தும் ஆங்கிலச் சொல்லினைச் சொல்ல வேண்டும். அது அவரது நினைவுக்கு உடனே வரவில்லை. பேச்சு தடைப்பட்டது. ஆசிரியரைப் பார்த்தார். அவசரத்தில் ஆசிரியருக்கும் அந்த வார்த்தை நினைவில் வராததால் ஆசிரியர் சிறிதுநேரம் யோசித்தபோது, அய்யா ஓவன் (Owen) என்னும் ஆங்கிலச் சொல்லினைக் கூறி பேச்சைத் தொடர்ந்து ஆசிரியரை மட்டுமின்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் (Appropriate Word) சரியான சொல்லையே தேர்வு செய்து பேசினார். லக்னோ பல்கலைக்கழகத்தில் அய்யா பேசிய பேச்சுத் திறமையும் நுண்ணறிவும் பாராட்டுக்குரியதே. அய்யா அவர்கள் கருத்தைத்தான் பார்த்தார். அதற்குத்தான் முன்னுரிமை கொடுத்தார்.
@@@@@
அய்யாவின் பொறுமை
அய்யாவும் கண்ணப்பரும் ஒரு முறை ரயிலில் பயணம் செய்தபோது கண்ணப்பர் பார்ப்பனர் ஒருவரோடு வாக்குவாதம் செய்துகொண்டே வந்துள்ளார். அப்போது கடுமையான பல சொற்களைப் பேசும்படியான சூழ்நிலை உருவானது.
இதனை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டே வந்த அய்யா, இப்படியா பேசுவது? பொறுமையாக அவருக்குப் புரியும்படி பதில் கூறினால்தானே அவரது தவறான எண்ணத்தை மாற்றி நம் பக்கம் திருப்ப முடியும் என்றார்.
உடனே அந்தப் பார்ப்பனர், பெரியவரே நீங்கள் சொல்வதை அவர் கேட்க மாட்டார். இவர்கள் இராமசாமி நாயக்கர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான் பேசுவர் என்றார். அய்யாவும் கண்ணப்பரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
கண்ணப்பர் அடுத்த வண்டிக்குச் செல்வதற்காக
இறங்கிவிட்டார். அய்யா கழிப்பறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த நபர்
ஒருவர் அந்தப் பார்ப்பனரைப் பார்த்து, அவர்தானய்யா ராமசாமி நாயக்கர்.
இப்படிப் பேசிவிட்டீரே என்றார். கழிப்பறையிலிருந்து அய்யா வந்தவுடன்
பார்ப்பனர் எழுந்து நின்று இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு, என்னை
மன்னித்துவிடுங்கள் அய்யா. தங்களை யார் என்று தெரியாமல் பேசிவிட்டேன்.
உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களே பொய்யர்கள். தங்களது நற்குணமும்
பொறுமையும் யாருக்கும் வராது. எங்கள் வீட்டிற்குத் தாங்கள் கட்டாயம்
வரவேண்டும் என்று உபசரித்துச் சென்றார்.
@@@@@
அய்யாவின் சமாளிப்புத் திறமை
ஒருமுறை அய்யாவும் அண்ணாவும் மும்பை சென்றிருந்தனர். அங்கு எம்.என்.ராய் அவர்களைச் சந்தித்தனர். அய்யாவிடம் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தவர் ராய். தமது அன்பினை வெளிப்படுத்த அய்யாவுக்கு விருந்து கொடுக்க நினைத்து அழைத்தார். அய்யாவும் அண்ணாவும் விருந்திற்குச் சென்றனர். ராய்க்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். தமிழ் தெரியாது. அய்யாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் மட்டுமே தெரியும்.
பிரமாதமாக நடைபெற்ற விருந்தில் இருவருக்கும் ராய்தான் பரிமாறினார். அய்யாவுக்கு, குறிப்பிட்ட ஒரு பதார்த்தத்தின் மீது ஆசை ஏற்பட்டது. மனதிற்குப் பிடித்ததைக் கேட்டு விடுவது அய்யாவின் குணங்களுள் ஒன்று. எப்படிக் கேட்பது? ராய்க்குத் தமிழ் தெரியாதே, ஊறுகாய் என்றால் ராய்க்குப் புரியாதே, என நினைத்தார். இதன் ஆங்கிலப் பெயரும் அப்போது மறந்துவிட்டது அய்யாவுக்கு.
அய்யாவின் தேவையை அண்ணா புரிந்துகொண்டார். எனினும் அய்யாவின் சமாளிப்புத் திறமையைக் கண்டு ரசிக்க விரும்பினார். ராய் அருகில் வந்தபோது, நாக்கில் கையை வைத்து நாக்கால் ஒரு சொடக் கொடுத்து ஓசை எழுப்பிக் காட்டினார் அய்யா.
உணவு பறிமாறிக்கொண்டிருந்த ராய் புரிந்துகொண்டு, ஓ பிக்கிள் என்றார். உடனே, எஸ் எஸ் பிக்கிள் என்றார் மலர்ச்சியுடன் அய்யா.
நாவினால் ஓசை எழுப்பியே தமது கருத்தைத் தெரிவித்துச் சமாளித்த அய்யாவின் திறமையை எண்ணி வியந்தார் அண்ணா.
@@@@@
நாகப்பட்டினம் விஜயராகலு வீட்டிற்கு அய்யா உணவு சாப்பிடச் சென்றார். 15 பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. அய்யா 25 பேருடன் சென்றார். சென்றவர்களுள் பட்டுக்கோட்டை அழகிரி மெதுவாகச் சாப்பிடும் இயல்புடையவர். பச்சரிசிச் சோறு காலியாகிவிட்டது. எனவே, அழகிரிக்கு மோர் சாப்பாடு சாப்பிட்டபோது குறுவை அரிசிச் சோறு பரிமாறினர். சிவந்த நிறத்தில் பெரிது பெரிதாக இருந்த சோற்றினைப் பார்த்த அழகிரி கோபமுற்றார். சாப்பிட்ட கையை உதறிவிட்டு வேகமாக எழுந்தார். இதனைப் பார்த்த அய்யா, அப்பா அழகிரி இதுவரை மல்லிகைப்பூ, இப்போது ரோசாப்பூ என்றதும் அனைவரும் சிரித்தனர். மேலும் அய்யா, அழகிரிக்கு இரண்டு சாத்துக்குடிப் பழம் கொடுங்கள். பசியும் தணியும் சினமும் போய்விடும் என்றாராம்.
@@@@@
தண்ணீரும் மோரும்!
ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஒருவர் அய்யாவிடம் பேட்டி காண வந்தார். வந்தவருக்குக் காப்பி கொடுக்கச் சொன்னார் அய்யா. நான் இப்ப இங்க காப்பி சாப்பிடுகிறேன். போன தலைமுறையில் இது நடந்திருக்குமா? நான் ஆச்சாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன் என்றார் வந்தவர். புன்முறுவல் பூத்த அய்யா, இப்போது காபி சாப்பிடுகிறீர் என்றால் என் பிரச்சார மாற்றம்தானே! என்றார்.
மேலும் அய்யா, பல வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ப்பன நண்பர் – குடும்ப நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஏதாவது சாப்பிடுங்கள் தாகமாக வந்திருப்பீர்களே என்றேன். ஒன்றும் வேண்டாம் என்றார் நண்பர். கொஞ்சம் வற்புறுத்தவே, சரி மோரும் தண்ணீரும் கொடுங்கள் என்றார். கொடுத்தோம்.
மோரில் சிறிது நீரைச் சேர்த்துச் சாப்பிட்டார். எதற்காக மோரில் நீரைக் கலந்து சாப்பிட்டீர்கள் என்றேன். மோரில் நீர் கலந்தால் மோர் சுத்தமாகிவிடும் அதனால்தான் என்றார். நீரும் மோரும் எங்கள் வீட்டிலே இருந்தது. எங்க வீட்டு மோரை எங்க வீட்டுத் தண்ணீரே சுத்தப்படுத்துமா என்று கேட்டேன் என்றார். பேட்டி காண வந்தவர் தனது மடைமைத்தனத்தை நினைத்து தலைகுனிந்து சிரித்தாராம்.
நாகம்மையார் மரணமடைந்தபோது உள்ளே சென்று பார்க்கச் சென்றவர்களைப் பார்த்து, யாரும் அழக்கூடாது. அழுவதால் இறந்தவர் மீண்டு வரப் போவதில்லை. அமைதியாகச் சென்று பார்த்து வாருங்கள் என்றார் அய்யா. மேலும், அவரது உடல் அடக்கத்தினைப் புதுமையான முறையில் செய்தார். நாகம்மையாரின் உடலினை ஒரு பெட்டியில் வைத்து (முஸ்லிம் முறை) மாடு பூட்டிய வண்டியில் எடுத்துச் சென்று (கிறித்துவ முறை) எரியூட்டி (இந்துமுறை) ஒற்றுமையினைப் புகுத்தி சமத்துவம் கண்டார் அய்யா.
@@@@@
அய்யாவின் தாடி ரகசியம்
ஒரு நாள் இரவு அய்யாவின் வீட்டு மாடியில் அவரது நண்பர்கள் அய்யா தாடி வளர்ப்பது ஏன் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முக அழகுக்காக தாடி வளர்ப்பதாக என்னிடம் அய்யா சொன்னார் என்றார் மாயவரம் நடராசன். எஸ்.வி.லிங்கமோ, இல்லையில்லை ரஷ்ய அறிஞர்கள் எல்லோரும் தாடி வைத்துள்ளனர். அவர்களைப் பார்த்தபின் வைத்தேன் என்று என்னிடம் கூறினார் என்றார். உடனே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், சவரச் செலவு தினமும் நாலணா மிச்சமாகிறது என்றாரே என்னிடம் என்றதும், பட்டுக்கோட்டை அழகிரி, கொஞ்ச நேரம் என்றாலும் இன்னொரு வரிடம் தலைகுனிந்து உட்காருவது தன்மானக் கேடாக உள்ளது என்றாரே என்னிடம் என்றார்.
மேடைஏறி பலரைத் தாக்கித் திட்டும்போது, போனால் போகிறான் கிழவன், வயதானவன் என்று விட்டுவிடுவார்கள் என்று என்னிடம் கூறினாரே என்றார் பூவாளூர் பொன் னம்பலனார். அப்போது கி.ஆ.பெ.விசுவநாதம், தூங்குங்கள் நாளை உங்களுக்கு உண்மையான காரணத்தை அய்யாவிடமே கேட்டுச் சொல்கிறேன் என்றார்.
மறுநாள் அய்யாவிடம் தாடியின் ரகசியம் கேட்டுவிட்டு, தினமும் பத்து நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டேன். தானாக வளர்ந்துவிட்டது. வேறெதுவும் காரணம் இல்லை என்று அய்யா கூறியதாக அனைவரிடமும் கூறினார். அப்போது கருகுடி சின்னையா பிள்ளை, இன்னும் யார் யாரிடம் என்னென்ன காரணங்கள் சொல்லியுள்ளாரோ அதையும் கேட்டு அனைவரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஒருமுறை ரயில் நிலையத்திலிருந்து வந்தபோது எதிரில் வந்த ஒருவர் அய்யாவைப் பார்த்து, நீங்கள் ஏன் தாடி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, எனக்கு பிளேடு செலவு மிச்சம், உனக்கு என்ன நஷ்டம் என்று கூறியுள்ளார்.
@@@@@
தமிழிசை ராஜா அண்ணாமலை (செட்டியாரும்), ஆர்.கே. சண்முகம் (செட்டியாரும்) தமிழிசை இயக்கம் தொடங்கி அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். பல லட்சம் செலவு செய்தனர். வீண் விரயம் செய்வதைக் கண்டித்து அய்யா கூட்டத்தில் பேசினார்.
மருமகனுக்குப் பல் தேய்க்க சோம்பேறித்தனம். பல் தேய்க்கும்படி மருமகனிடம் சொல்ல வெட்கப்பட்டார் மாமியார். ஒரு யுக்தி தோன்றியது மாமியாருக்கு. கரும்பு மென்று தின்றால் பல் சுத்தமாகுமே என்று நினைத்து, மாப்பிள்ள இந்த ஊர்க் கரும்பு ரொம்ப ருசியாக இருக்கும். ஒரு பணத்துக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள் என்று கூறி பணமும் கொடுத்து அனுப்பினார். மாப்பிள்ளையோ பணத்தை வாங்கி எள்ளுப் புண்ணாக்கு வாங்கித் தின்றுவிட்டு பல்லை மேலும் கேவலமாக்கி வந்து நின்றார். மாமியாருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதுபோலல்லவா இந்தத் தமிழிசைக் கிளர்ச்சியும் ஆகியுள்ளது. தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவு உணர்வு தோன்றிவிடுமானால் தமிழிசை தானாக வளர்ந்துவிடும் என்றார்.
----------------தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து 2011 செப்டம்பர் 16-30
0 comments:
Post a Comment