Search This Blog
31.7.08
சோறுபோட்ட மண்ணுக்கு துரோகம் செய்த ரஜினி - தமிழ்மக்களே பாடம் கற்றுக் கொடுப்பது எப்போது?
ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நாளை ரஜினியின் குசேலன் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று பேசிய ரஜினி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால்தான் குசேலன் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று கன்னட ரக்ஷ்ன வேதிகே மற்றும் கன்னட சளுவளி வாட்டாள் பக்ஷா ஆகிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந் நிலையில் ஹைதராபாத்தில் இன்று கன்னட தொலைக்காட்சிக்கு கன்னடத்தில் பேட்டியளித்த ரஜினி,
ஒகேனக்கல் விவகாரத்துக்காக சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், பொது மக்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்களைத் தான் உதைக்க வேண்டும் என்று சொன்னேன். வேறு யாரையும் அப்படிச் சொல்லவில்லை.
குசேலன் படத்தை தயவுசெய்து வெளியிட அனுமதியுங்கள்.
நான் கர்நாடகத்தில் ஒரு கண்டக்டராக இருந்தேன் என்பதை இன்றும் மறக்கவில்லை.
இந்த விவகாரத்தில் நான் பாடம் கற்றுக் கொண்டுவிட்டேன். கன்னட மக்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்துவிட்டனர். இனி அதே தவறை திரும்பச் செய்ய மாட்டேன்.
இனி எதி்ர்காலத்தில் யார் மனதும் புண்படாமல் பேசுவேன் என்றார்.
சிக்கல் தீருமா?:
இருப்பினும் ரஜினியின் மன்னிப்பை ஏற்க கன்னட அமைப்புகள் மறுத்துள்ளன. இதுகுறித்து கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா கூறுகையில், ரஜினிகாந்த் கர்நாடகத்திற்கு வர வேண்டும். 5 கோடி கன்னட மக்களிடமும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவரது படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறியுள்ளார்.
எனவே திட்டமிட்டபடி குசேலன் நாளை கர்நாடகத்தில் திரைக்கு வருமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
பெங்களூரில் 14 தியேட்டர்களில் குசேலன் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கர்நாடக வர்த்தக சபையின் தலைவர் நடிகை ஜெயமாலாவுக்கும் ரஜினி கடிதம் எழுதினார். அதில், கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் எதையும் கூறவில்லை. குசேலன் படம் ரிலீஸ் தடையால் ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்று ரஜினி கூறியிருந்தார்.
அந்தக் கடிதத்தை ஜெயமாலா இன்று வெளியிட்டார். ரஜின புண்படுத்தும் நோக்கத்தில் எதுவும் பேசவில்லை. அவருக்கு கர்நாடகாவும், தமிழகமும் ஒன்றுதான் என்று ஜெயமாலா கன்னட அமைப்புகளிடம் சமரசம் பேசினார்.
--------------நன்றி:தட்ஸ்தமிழ்
கர்நாடகத்தில் பொதுமக்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்கள் யார்? அவர்களை ரஜினி உதைப்பது எப்போது?. தமிழா உனக்கு புத்தி வருவது எப்போது? எத்தனைகாலம்தான் ஏமாந்து கொண்டிருப்பாய்? வேதனையாக இருக்கிறது.
Posted by
தமிழ் ஓவியா
2
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பொதுவானவை
வசியம் செய்ய முடியுமா?
இந்து மதஸ்தர்களின் நாட்டில் வழங்கும் மூட நம்பிக்கைகளுக்கு இந்து மதமே காரணம். கிறிஸ்து நாட்டிலும், மகமதிய நாட்டிலும் வழங்கும் மூட நம்பிக்கைகளுக்கு அந்தந்த மதங்களே காரணம், அது போலவே புத்த நாட்டில் வழங்கும் மூடநம்பிக்கைகளுக்குப் புத்த மதமே காரணமென அறிக. புத்தர் இதைச் சொல்ல வில்லை; அதைச் சொல்ல வில்லை என்று சொல்லும் மதப் பாசாங்குகளை ஒழித்து, எல்லாவித மதங்களும் மூட நம்பிக்கைகளெனத் தெளிதலே உத்தம புருஷருக்கு அடையாளமென அறிக. எந்த விவேகசாலி 1,000, 2,000 வருஷங்களுக்கு முந்திச் சொல்லிய போலிச் சித்தாந்தங்களையும், கோட் பாடுகளையும் பண்டை நீதி யையும், நெறியையும் கொண்டு இந்த நாளில்தனது மானிட வாழ்க்கையை நடத்த முயலுவான்?
Hypnotism - அதாவது மயக்க வித்தை என்று கூறும் ஓர்விதத் தூக்கம், பண்டைக் காலம் முதல் மெஸ்மரிசமென்று வழங்கி வந்தது. ஜெர்மன் டாக்டர் மெஸ்மர் என்றவர் இந்த வித்தையை மிக்க சாமர்த்தியமாகக் கற்றுத் தெரி வித்தார். இந்த வித்தையின் விஷயமென்னவெனில் மனித னுக்குள் ஒருவித நுட்பச் சக்தி யுண்டு. அந்தச் சக்தியைக் கொண்டு மற்றொருவனை விழிப்பில் தூங்க வைக்கக் கூடும். அந்த ஓர்விதத் தூக்கத்தில் கண்களுக்குத் தெரியாத வஸ்துக்கள் தெரியும், மறந்து போன விஷயங்களும் ஞாபகத் துக்கு வரும், எதைச் செய்யச் சொன்னாலும் அந்தத் தூக்கத் திலிருப்பவன், செய்வான். சர்க் கரையை அந்தத் தூக்கத்திலுள்ளவனை பார்த்து கசக் கின்றதென்று சொன்னால், கசப்புக்கு வேண்டிய செய்கை களையும் சைகைகளையும் செய்வான்.
அந்த நிலைமையிலுள்ள வனுக்குச் சில நோய்களும் தீரும் என்று இந்த மெஸ்மர், விஞ்ஞான முறைப்படி விளக்கி வைத்ததாக ஒரு காலத்தில் எண்ணி வந்தபடியால் அது மெஸ்மரிசமென்று வழங்கப் பட்டது. மெஸ்மர் இந்த நடவடிக்கைகளுக்கு ஒரு சக்தி காரணமென்று கூறிவந்தார். இது அவருடைய யோச னையே ஒழிய விஞ்ஞானமல்ல. இந்தச் சக்தியைப் பார்த்து வருமில்லை; பரீட்சித்தவரு மில்லை. இந்தப் புதிய மனுஷ சக்தி மனித காந்த சக்தி என்று அழைக்கப்பட்டது. இது வெறும் உத்தேசமாக முடிந்தது மனிதனுக்குள் காந்த சக்தி யொன்று இருப்பதாகத் தெரியவில்லை. இந்த இப்நா டிச மயக்கத்தில் செய்யும் நடவடிக்கைகளுக்கு உசாவுதலே அல்லது தூண்டுதலே போதுமான காரணமெனத் தற்போது விஞ்ஞானிகளால் எண்ணப்படுகிறது. இதனைச் சற்று விளக்குவோம்.
விழிப்பில் நாயை வுஸ் வுஸ் என்று உசாவினால் ஓடு கிறது. மனிதனை அடியென்றா லும், சுடு என்றாலும் இந்த உசுப்பினாலேயே அடிக்கின் றான்; சுடுகின்றான். இந்த நடத்தைகள் விழிப்பில் உசாவு தலால் காட்டும் நடத்தை யாகும். அதுபோலவே ஓர்விதத் தூக்கத்தில் - அதாவது இப் நாடிச தூக்கத்தில், அதாவது, மயக்கத் தூக்கத்தில் உசா வினால் அந்தத் தூக்கத் திலுள்ளவன் செய்யச் சொன் னதையும், சொல்லச் சொன் னதையும் ருசிக்கச் சொன்ன தையும் செய்கின்றான், சொல் லுகின்றான்; ருசிக்கின்றான். இந்த மயக்கத்தில் விழிப்புக் குரிய நடத்தைகள் இல்லாத படியால் உசாவிய சொல்லுக் குரிய நடத்தைகளைக் காட்டு கின்றான். சாதாரண விழிப்பில் சர்க்கரை என்றால், அதற்குரிய ருசியின் ஞாபகம் உண்டா கின்றது. அதுபோலவே இப் நாடிச மயக்கத்தில் மண்ணை வாயில் போட்டுச் சர்க்கரை என்றாலும் சர்க்கரைக்குரிய ஞாபகம் உண்டாகின்றது. விழிப்பில் ஞாபகத்துக்கு வராத விஷயங்களும், இந்த மயக் கத்திலே ஞாபகத்துக்கு வருகிறது; மறந்துபோன விஷயங் களும் இந்தப் இப்நாடிச தூக்கத்தில் தோன்றுகின்றது.
விழிப்பில் தோன்றி மறைந்த விஷயங்களும் இந்தத் தூக்கத்தில் தோன்றி மறைவதுண்டு. ஒரு சிறு பெண் குழந்தையாய் இருக்கும்போது, யாரோ ஒரு வர் சமஸ்கிருத பாஷையோ, அராபிக் பாஷையோ, லத் தீனோ, கிரீக்கோ, ஈபுருவோ, அவள் அருகாமையில் படித்து வந்தார். அவள் காது மூலமாகக் கேட்டிருந்த சொற்கள் அவள் மனத்தில் அவளுக்குத் தெரி யாமலே படிந்திருந்தது. அவள் அநேக வருஷத்திற்கு பிறகு இந்த மயக்கத்தில் அல்லது வலியில் (Histeria) தான் இளமையில் கேட்ட பாஷையை உச்சரிக்க ஆரம்பித்தாள். இவள் ஆதி வாழ்வை அறி யாதார், இது என்ன விந்தை என்று அதற்குத் தகுந்த கதை களைக் கட்டுகின்றார்கள். அவள் முன் ஜன்மத்தில் படித்த பாஷையை உளறுகிறாள் என்ற கதைகளைக் கட்டுகின்றார்கள். விஷயங்களை உள்ளதை உள்ள படி விசாரித்துணராமல், பேய்க் கதையும் அவை களுக்குப் பரிகாரமாக மந்திர தந்திரங்களும் எழுகின்றன.
காணாத பொருளைக் கண்டுபிடிக்கும் கதையிலும், விழிப்பில் ஞாபகத்திற்கு வராத விஷயம் இப்நாடிசத்தில், அதாவது மயக்கத்தில் ஞாபகத்திற்கு வரும் விஷயமே காரணம்.
------------------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
மூடநம்பிக்கை
அறிவு கொண்டு பாருங்கள்
"நமது முன்னோர் என்ன சொன்னார் என்பதையெல்லாம் விட்டுவிட்டு இன்றைய அறிவாளி என்ன சொல்கிறான் என்பதைப் பார்த்து அதன்படி நடந்துகொள்ளவேண்டும். உங்கள் முதுகைப் பார்க்காமல், முன்னால் நடப்பதைப் பார்த்து அதன்படி நடந்துகொள்ளுங்கள். எதையும் உங்கள் அறிவைக் கொண்டு பாருங்கள்."
----------------------- தந்தைபெரியார் - "விடுதலை", 31.10.1969
Posted by
தமிழ் ஓவியா
1 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
இவர்தாம் பெரியார்
சிவந்தமேனி, தடித்த உடல், பெருத்த தொந்திம் நல்ல உயரம், வெளுத்த தலை மயிர், நரைத்த மீசை, நடுத்தரமான தாடி, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்து மயிரடர்ந்த புருவங்கள், ஆழமான கண்கள், மெதுவான உதடுகள், செயற்கைப் பற்கள், ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி.
பெசண்ட் அம்மையாரின் தலைமயிர், பர்னாட்ஷாவின் தாடி, தாகூரை விட அழகான மூக்கும், இவர்கள் இருவரையும் விட அழகான உருண்டை முகம், ஒரு தனியான முக வெட்டு, என்னமோ ஒரு விதமான கவர்ச்சி.
இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத் துணி, காலில் செருப்பு. முக்கால் கையுடன் ஒரு மாதிரியான வெள்ளைச் சட்டை. அதில் வரிசையான நூல் பொத்தான்கள். பழங்காலத்து முழுக் "கோட்டு"க்கும் இக்காலத்து சட்டைக்கும் நடுவில் ஒரு நூதனமான உடுப்பு, வெளிப் புறத்தில் மூன்று பாக்கட்டுகள். உட்புறத்தில் (பணப்பை வைத்துக் கொள்வதற்காக) கட்டாயம் ஒரு பாக்கட். வெளிப்பைகளில் செய்தித்தாள்கள், சில கடிதங்கள், பொதுக்கூட்டங்களில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள், இரண்டொரு சிறு புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், நாட்குறிப்பு, ஒரு சிறு கத்தி-ஆகிய சகல சாமான்களும் நிறைந்து எப்போதும் உப்பிக்கொண்டே இருக்கும். வெளிப்புறத்துக்கு மேல் ஒரு பவுண்டன் பேனா சொருகப்பட்டிருக்கும். உட்புறப் பையில் ஒரு மணிப்பர்ஸ். அதன் அறையொன்றில் ஒரு கடிகாரம்.
இவ்விதமான சட்டைக்கு மேல் போர்த்தியிருப்பது ஒரு ஐந்து முழப் போர்வை. அநேகமாக ஆரஞ்சு அல்லது காப்பி நிறத்தில். இந்த உடைகள் பெரும்பாலும் அழுக்காகவே இருக்கும். சட்டைப்பைகளின் ஓரங்கள் அடிக்கடி கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும். கையில் எப்போதும் ஒரு மொத்தமான தடி. பிடிக்கும் பக்கம் வளைந்திருக்கும்.
கையில் ஒரு தோற்பெட்டி. அதற்கு பூட்டுமில்லை; சாவியுமில்லை. மிக அந்தரங்கமான சொந்த கடிதங்கள் முதல், பழைய செய்தித்தாள்கள், பட்டையாக நசுக்கப்பட்ட பற்பசை, மிக பழைய பல் ப்ரஷ், மைப்பெட்டி, சோப், கடிதத்தாள், உறைகள் வரையில் எல்லாம் இப்பெட்டிக்குள் தான். சட்டைப் பைகளில் உள்ள குப்பைகள், ஏதாவது ரிக்கார்டுகள் மிகுந்துவிட்டால், அவைகளில் சில இப்பெட்டிக்குள் வந்துவிடும். இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஒரு முறை பெட்டி மூட முடியாமலே மாட்டிக் கொண்டால், இப்பெட்டி காலி செய்யப்படுவதுண்டு.
இம்மாதிரி உருவத்தோடும், உடையோடும், வாலிப நடையோடும் கையிற் பிடித்த தடியுடன் இதோ தெரிகிறாரே, இவர் தான் பெரியார். தமிழரின் தலைவர். ஈரோட்டு இராமசாமியார்.
------------------- சாமி சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் என்ற நூலிலிருந்து.
Posted by
தமிழ் ஓவியா
2
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
30.7.08
கலைஞர் எழுதிய - சாராய சகாப்த மென்று ஓர் கவிதை
நமது முதலமைச்சர் கலைஞர் ஆட்சியை
கண் இமை காப்பதைப்போலக் காக்கவேண்டும்
தமிழக முதலமைச்சர் கலைஞர்அவர்களது ஆட்சியை கண் இமை காப்பது போல காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். `கலைஞர் படைப்புலகம் நூல் வெளியீட்டு விழாவில் (26-7-2008 சென்னை - கலைவாணர் அரங்கம்) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து
``கொழுந்து விட்டு எரியும் தீப்பந்தத்திற்குள்ளே கொளுத்தப் படாத கற்பூரமாகத் தமிழகம் இருக்கிறது என்று அன்றைக்கு பட்ஜெட்டிலே கலைஞர் அவர்கள் அற்புதமாக வாசித்த வரிகள் இவைகள்.
ஏற்கெனவே ஆச்சாரியார் அரசியலிலே அதிர்ச்சியுறக் கூடிய தோல்வியை காமராஜர் அவர்களுடன் சேர்ந்த பிற்பாடுகூட கண்ட காலம். எனவே அவர் அந்தக் கோபத்தை வேறு வகையிலே காட்டினார்.
இன்றைக்கு வேறு சிலர் கோபத்தை வெளிப்படுத்துகின்றார்கள்
இன்றைக்கு வேறு சிலர் அரசியல் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் அல்லவா? அதுபோல அன்றைக்கு வெடித்த நேரத்திலே ``கல்கி பத்திரிகையிலே ஆச்சாரியார் ஒரு கவிதை எழுதினார். கலைஞர் அவர்களுடைய படைப்புலகத் திற்கு இன்னொரு அங்கீகாரம். `கல்கி பத்திரிகையிலே ஆச்சாரியார் ஒரு கவிதை எழுதினார். யாரைப் பார்த்து? கலைஞரைப் பார்த்து. கலைஞர் அவர்களுடைய படைப்புலகத்திற்கு இது ஒரு தனிப்பட்ட அங்கீகாரம். வேண்டுமென்றே ஆச்சாரியார் எழுதினார்.
``சாராய சகாப்தம் என்று கல்கி பத்திரிகையிலே எழுதினார். இதில் முதலில் ஆச்சாரியார் கவிதையைப் படிக்கின்றேன். அதற்குக் கவிதை வரியிலேயே முதல்வர் கலைஞர் அவர்கள் கவிதை எழுதினார்.
இந்தக் கவிதையை ஈரோட்டிலே பெரியார் முன்னி லையிலேயே மேடையிலேயே வாசித்தார். அந்த வாரம் ஆச்சாரியார் எழுதிய கவிதையையும், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதற்குப் பதில் சொல்லுகின்ற அளவிலே அய்யா அவர்கள் முன்னிலையிலேயே ஈரோடு பெரியார் சிலை திறப்பு விழாவில் கவிதை பாடினார்.
அரசியலில் ஆச்சாரியாருக்கு ஏற்பட்ட தோல்வியை மறைக்க
இந்த இரு கவிதைகளும் 18.9.1971 அன்றைய விடுதலையில் வந்திருக்கிறது. வேண்டுமென்றே அரசியலில் ஏற்பட்டத் தோல்வியை மறைக்க ஆச்சாரியார் கோபத்தோடு, ஏதோ ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக அவருடைய எரிச்சலைப் பயன்படுத்தி எழுதுகின்றார்.
`சாராய சகாப்தம் ஆச்சாரியார் கவிதை
ஆச்சாரியார் அவர்களுடைய கவிதையைப் படிக்கின்றேன். ``சாராய சகாப்தம் இது தலைப்பு.
ஆகஸ்ட் பதினைந்தொரு விழாவல்ல
ஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா
தாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்;
வீழ்ந்தவர்கள் முன்போல் வாட
ஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு
வள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு
வரம் பெற்றுப் பதவி யடைந்த கருணையார்
கள்ளும் சாரயமும் தந்தார்
அரங்கேற்றினார் கடைகளை ஆயிரக் கணக்கில்
போற்றுக முதல்வர் பணியை!
சோற்றுத் திண்டாட்டம் - ஏழை மனைகளில்
சாராயக் கடைகளில் பெரும் கொண்டாட்டம்!
போற்றுக தமிழ் நாட்டு முதல்வரை!
சாராயக் கடைகளை அரங்கேற்றினார்
வரம்பெற்ற கருணைச் செல்வர்!
---------------ஆச்சாரியார்
நம்முடைய கலைஞரைச் சொல்லுகிறார் ஆச்சாரியார், `வரம் பெற்ற கருணைச் செல்வர்! என்று.
கலைஞரைக் கேலி செய்யும் நோக்கத்தோடு
`கிழ பிராமணா உன் வாக்குப் பலித்தது
என்ற தலைப்பில் கலைஞர் அவர்கள் குடிஅரசிலே ஒன்றை எழுதினார். அது தனி ஒரு செய்தி.
இப்பொழுது நான் உபகதைகளுக்குள்ளே நுழைந்து நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. கலைஞரைக் கேலியாக எழுதுவதைப் போலவும், அதே நேரத்திலே சொல்கிறார்.
`வரம் பெற்று பதவியடைந்த: ஏனென்றால் ஆச்சாரியாருக்கு ஏமாற்றம். மக்கள் - கலைஞர் அவர்களுக்கு `வரம் தந்தார்கள். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. 1971-லே.
ஆனால் பெரியாரிடத்திலே பயின்று ஈரோட்டுக் குரு குலத்திலே இருந்தவர்கள் எங்கேயிருந்து கேள்விக் கணைகள் வந்தாலும், உடனே பதில் சொல்லாமல் இருப்பார்களா? (பலத்த கைதட்டல்). பதிலடி கொடுக்காமல் இருப்பார்களா?
பல பேராசிரியர்கள் ஆய்வு செய்யாத கவிதை
இந்தக் கவிஞர் அன்றைக்கு மட்டும் கவிஞர் அல்ல. இந்தக் கவிதை பல பேராசிரியர்கள் ஆய்வு செய்யாத கவிதை ஒரு வேளை, அதிலிருந்து தப்பியிருக்கக் கூடும். இதையும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த உரையிலே இதை நான் சொல்லுகின்றேன். ஆச்சாரியார் எழுதிய கவிதைக்குப் பதில் உடனடியாக முரசொலியிலே கலைஞர் அவர்கள் எழுதினார்கள். கலைஞர் எழுதிய கவிதை
கலைஞர் அவர்கள் எழுதிய கவிதையை உங்கள் முன் வைக்கின்றேன்.
`சாராய சகாப்த மென்று ஓர் கவிதை
சக்ரவர்த்தி ராஜாஜி மாமுனிவர்
தாராளமாய்க் `கல்கி ஏட்டில் தீட்டியதால்
யார் யாரோ சுதந்தராக்கள் மகிழ்கின்றார்.
`பார் பாராய்க் குடித்தவர்கள் பர்மிட் வாங்கி
நேர்மாறாய்ப் பேசுகின்றார் புத்தர்போல!
இதயத்தில் நோய் என்றும்
இரு யூனிட் வேண்டுமென்றும்
இதோ `டாக்டர் சர்டிபிகேட் பாருமென்றும்
இங்கிருக்கும் சுதந்தராக்கள் குடித்த கதைஊர் அறியும்
பணக்காரர் பகல் வேடக்காரரெல்லாம்
மணக்கும்மது வாங்குவதற்கு பர்மிட் வேண்டும்
பகட்டுக்கு ஒருநீதி - பாவம் ஏழைக்கு ஒருநீதி
பஞ்சாங்க சாத்திரத்தின் புதுநீதி
வாடுகின்ற ஏழைக்குடிகாரன்
வார்னீஷைக் குடித்து செத்த போதும்தனம்
மேவுகின்ற சீமான்கள் - போதை
மோதுகின்ற `விஸ்கி, ரம் அடித்தபோதும்
நவ்ரோஜி வீதியில்தான்
நாற்றம் துளைக்கலையோ?
நாடுதான் பார்க்கலையோ?
`ஆழ்ந்த அறிஞர் அண்ணா என்று
அன்பர் ராஜாஜி இன்றெழுதப் பார்த்து நான்
அயர்ந்தேதான் போனேன் அய்யா!
இன்னொருநாள்,
அண்ணாபற்றி அரசாங்கப் பாடநூல் வந்தபோது அற்பவயதில் செத்தவரெல்லாம்
அவதாரப் புருடர் தாமோ என எழுதி
அவர் மகிழ்ந்ததெல்லாம் மறந்தாபோகும்?
ஒரிசாவில் இவர்கட்சி ஆட்சியிலே
ஓடிற்றே மதுவின் வெள்ளம்! அப்போது
தரிசாகப் போனவது ஏன் இவரின் உள்ளம்?
வரம் பெற்ற கருணைச்செல்வா என - எனை
வாழ்த்துகின்றார்! வணங்குகின்றேன்
வரம் தந்தார் இவரல்ல; நேசக்
கரம் தந்த நாட்டு மக்கள்!
வரம் பெற்றேன் - பெரியார் அண்ணா தந்த நெஞ்ச
உரம் பெற்றேன்.
இப்போதும் சொல்கின்றேன்,
கேட்டிடுக!
இந்தியா முழுமைக்கும் அறவே
மதுவிலக்கு கொண்டுவர
சட்டம் செய்தால்:
சிரம் தாழ்த்தி கரம் குவித்து
சிறப்பான செயல் என்று போற்றி நின்று
செயலாக்க முந்திடுவேன்
அதன் பிறகும்;
இதய நோய் என்று - சிலர்
இருட்டினிலே குடிப்பதையும்
இனி அனுமதிப்பதில்லை யென்று விதி செய்வேன்
முழுவிவரம் தேவை யெனில்
பட்டியல் பிறகு சொல்வேன்!
--------------17.9.1971 ஈரோடு தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் போது பாடிய கவிதை.
நவ்ரோஜி வீதி கல்கி அலுவலகம் இருந்த இடம்
ஆச்சாரியார் அன்றைக்கே சுதந்தரா கட்சியை நடத்தினார். `இளைய தலைமுறையினர் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கலைஞர் அவர்கள் கவிதையில் எழுதியுள்ள நவ்ரோஜி வீதிதான் கல்கி அலுவலகம் இருந்த இடம் (சிரிப்பு கைதட்டல்) அதைத்தான் கலைஞர். எழுதுகிறார்.
`நவ்ரோஜி வீதியில்தான்
நாற்றம் துளைக்கலையோ?
``ஆழ்ந்த அறிஞர் அண்ணா என்று
அன்பர் ராஜாஜி இன்றெழுதப் பார்த்து நான்
அயர்ந்தே தான் போனேன் அய்யா! இதில்கூட கலைஞர் சொல்லுகிறார். ஆச்சாரியாரே `ஆழ்ந்த அறிஞர் என்று அண்ணாவை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். அதுதான் எனக்குப் பெருமை. என்னைத் தாக்கியது பற்றிக்கூட எனக்குக் கூச்சம் இல்லை. இப்பொழுதாவது அந்த உண்மை வெளிவருகிறதே என்று மகிழ்ச்சி அடைகின்றார்.
ஈரோடு - சிலைத் திறப்பு விழாவில் அய்யா அவர்களின் முன்னிலையில்
ஈரோடு - சிலைத் திறப்பு விழாவில் பக்கத் தில் உட்கார்ந்திருக்கின்ற அய்யா அவர்களைப் பார்த்து சொல்கின்றார். கலைஞர் அவர்களின் இந்தக் கவிதை பதிவாக வேண்டிய செய்தி. ``அண்ணாபற்றி அரசாங்கப் பாட நூல் வந்தபோது அற்பவயதில் செத்தவரெல்லாம் அவதாரப் புருடர் தாமோ என எழுதி அவர் மகிழ்ந்ததெல்லாம் மறந்தாபோகும்? அரசியலில் இலக்கியத்தில் இப்படிப்பட்டவைகள் எல்லாம் கலைஞர் அவர்களுடைய பேனாவைத் தவிர, வேறு எங்கும் இருக்க முடியாது (கைதட்டல்).
``வரம் பெற்றேன் - பெரியார் அண்ணா தந்த நெஞ்ச உரம் பெற்றேன்
``வரம் பெற்ற கருணைச் செல்வா என; எனை வாழ்த்து கின்றார்! வணங்குகின்றேன் ஆச்சாரியார் வாழ்த்துகிறார். கலைஞர் அவர்கள் அதற்கு வணங்குகிறேன் என்று பதில் சொல்கின்றார்.
`வரம் தந்தார் இவரல்ல; நேசக் கரம் தந்த நாட்டு மக்கள்!
(பலத்த கைதட்டல்).
1971 தேர்தலில் மக்கள் - என்னை `வரம் கொடுத்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள் என்று கலைஞர் அவர்கள் சொல்கின்றார். மேலும் கலைஞர் சொல்கிறார்:
`வரம் பெற்றேன் பெரியார் அண்ணா தந்த நெஞ்ச உரம் பெற்றேன் (பலத்த கைதட்டல்).
கலைஞரின் வாதத்திறமையைப் பாருங்கள்
அடுத்து கலைஞர் அவர்களுடைய வாதத் திறமையைப் பாருங்கள்.
``இப்போதும் சொல்கின்றேன், கேட்டிடுக!
இந்தியா முழுமைக்கும் அறவே மது விலக்கு கொண்டு வரச் சட்டம் செய்தால்; சிரம் தாழ்த்தி கரம் குவித்து சிறப்பான செயல் என்று போற்றி நின்று செயலாக்க முந்திடுவேன் என்று சொல்கின்றார் - கலைஞர் (பலத்த கைதட்டல்).
தொடர்ந்து சொல்கிறார்: அதன் பிறகும்; இதய நோய் என்று சிலர் இருட்டினிலே குடிப்பதையும்! இனி அனுமதிப்பதில்லை யென்று விதி செய்வேன்! முழுவிவரம் தேவையெனில் பட்டியல் பிறகு சொல்வேன்! என்று கலைஞர் அவர்கள் 17.9.1971-ல் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் பொழுது முதல்வர் கலைஞர் அவர்கள் பாடிய கவிதை. பெரியார் முன்னிலையில் அரங்கேறிய கவிதை - ஆச்சாரியாருக்குப் பதில் சொன்ன கவிதை.
``கருணைச் செல்வர் என்று ஆச்சாரியாராலே பாராட்டப் பெற்றிருக்கின்றார். இன்றைக்கு அந்த கருணைதான் நாட்டை ஆளுகிறது.
என்றைக்கும் மானமிகு சுயமரியாதைக்காரர்
``அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
தன் நோய் போல் போற்றாக் கடை
என்று வள்ளுவர் சொன்னார்.
அறிஞர்கள் ஆயிரம் பேர் வருவார்கள்.
ஆனால் அந்த அறிவுக்கு என்ன மரியாதை? என்று சொன்னால் - பிறருடைய நோயைப் போக்க வேண்டும். கலைஞர் அவர்கள் - அந்த நோயைப் போக்குகின்ற பணியைச் செய்கின்றார். வறுமை நோயைப் போக்குகின்ற ஆட்சியைத் தந்து கொண்டிருக்கின் றார்கள். அறியாமை நோயைப் போக்கக் கூடிய ஆட்சியைத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்ற ஜாதி ஒழிப்புக்குரிய வாய்ப்பைத் தந்திருக்கின்றார்கள். (பலத்த கைதட்டல்).
எனவேதான் கவிதைகள் பாடினாலும், இலக்கியம் எழுதி னாலும், திரைக்கதை எழுதினாலும் அது பராசக்தியாக இருந் தாலும் - உளியின் ஓசையாக இருந்தாலும் நிச்சயமாக கலைஞர் அவர்கள் மானமிகு சுயமரியாதைக்காரராகத் தான் என்றைக்கும் கலைஞர் அவர்கள் வாழ்த்து கொண்டிருக்கின்றார்கள். (பலத்த கைதட்டல்). எனவே அப்படிப்பட்ட கலைஞருடைய இந்த படைப்பிலக்கிய ஆய்வுக் கோவை - இன்னும் பல்வேறு கோவை களாக ஆக வேண்டும். அதற்கு - அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் தந்தை பெரியாரையும் தாண்டி வாழ்ந்து இந்தச் சமுதாயத்திற்கு நிரந்தரமான வளம் செய்ய வேண்டும்.
கலைஞர் ஆட்சியைக் கண்ணை இமைகாப்பது போலக் காப்பீர்
தமிழர்களே! தமிழர்களே!! நன்றியை மட்டும் மறக்காதீர்கள்; பெற்றுக் கொண்டதை மறக்காதீர்கள். அதை உற்றுப் பார்த்துப் பயனடையுங்கள். இந்த ஆட்சியை கண்ணை இமை காப்பது போலக் காத்து இது அவர்களுக்காக அல்ல நமக்காக - இனிவரும் தலைமுறைக்காக எதிர் காலத்திற் காக என்று கூறி இம்முயற்சி எடுத்தவர்களைப் பாராட்டி அமைகிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
---------------- நன்றி:"விடுதலை" 30-7-2008
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
வீரமணி
"சேது"என்பது இருந்ததே கிடையாத - "டைம்ஸ் ஆப் இந்தியா"வின் படப்பிடிப்பு
"சேது"என்பது இருந்ததே கிடையாது!
தொல்லியல், புவியியல் அறிஞர்களின் தெளிவான கருத்து இது!
அரசு இதன் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் கூறியுள்ளது
"டைம்ஸ் ஆப் இந்தியா"வின் படப்பிடிப்பு
புதுடில்லி, ஜூலை 29- "ராம சேது" என ஒன்று இருந்ததே கிடை யாது என்று அரசு கூறியதற்கு அடிப்படையான ஆதாரமே புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள், பூகோளவியல் அறிஞர்களின் கருத்துக் குறிப் புகள்தான்; இவ்வகை ஆய்வா ளர்களில் ஆர்.எஸ்.எஸ்.கார ரான பி.பி. லால் என்பவரும் அடக்கம். ராமசேனை பாலம் கட்டியது என்பதை மறுத்து இவர் அசைக்க முடியாத ஆதாரங்களைத் தந்துள்ளார்.
(இந்திய அரசின்) பண் பாட்டு அமைச்சகம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கூறி, இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தை (ICHR) அணுகி அதன் கருத்துகளைப் பெறு மாறு கேட்டுக்கொண்டது. இந்திய வரலாற்று ஆய்வு மய்யம் தொல்லியலாளர்களாகிய எச்.டி.சங்காலியா, பி.பி. லால், எச்.பார்க்கர், பூகோளவியலாளர் ஓ.எச்.கே. ஸ்பேட் மற்றும் 1909 ஆம் ஆண்டைய இந்திய அரசு கெஜட்டீர் ஆகியவற்றை மேற்கோள் காண்பித்து பாலம் என்பது கற்பனைப் புனைவு என்றும் அதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடை யாது என்றும் தெரிவித்தது.
சங்காலியாவின் ஆராய்ச்சி நூலான வரலாற்றுப் பார்வை யில் ராமாயணம் எனும் நூல் ராமன் தன் அம்புகளால் கட லைப் பணிய வைக்கத் தன் அக்னி அஸ்திர அம்புகளை விட்டது, மனித உருவில் கடல் ராமன் முன்பு தோன்றியது, பாலம் கட்ட உதவி செய்வேன் என உறுதி கூறியது போன்ற வற்றை விளக்குகிறது. பின்னர், வானரங்கள் எல்லா வகை யான மரங்களைக் கொண்டும் (சால், அசுவாபரணா, குடாஜூ, அர்ஜூனா, தடா, ரிலோகா, திமிடா, வில்வகா, சடாபரணா, கார்னிகாரா, சூடா அசோகா முதலியவை) கடலைத் தூர்த் தன. அதன்பின், பெரிய பாறைக் கற்கள் கடலில் போடப்பட்டன. இப்படியாக பெரிய பாலம் ஒன்று (மகா சேது) பத்து யோஜனை அக லம், நூறு யோஜனை நீளத்தில் நளனால் கட்டப் பட்டது என்றும் அந்நூலில் உள்ளது.
மணல்மேடுதான்
இவற்றை ஆதாரமாகக் கொண்டு - நிலவியல் எப்படி இருக்கிறது என்பதையும் சங் காலியா கூறுகிறார்: ராமேசு வரத்தில் தேரி எனப்படும் மணல்மேடுகளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை; இவையும் மூன்று வகையாக இருக்கின் றன - செம்பு போன்ற சிகப்பு, பழுப்பு மற்றும் வெண்மை அல்லது சாம்பல் நிறம் - முதல் வகை மிகப் பழைமையானது. அந்தப் பகுதி எப்படி அந்தக் காலத்தில் இருந்தது, அதாவது 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இருந்தது என்ப தைக் காண்பிக்கிறது. இன் றைக்கும் கூட, அந்தப் பகுதி யில், சில பனைமரங்களும் ஒன்றிரண்டு வேறு வகை மரங் களும் மட்டுமே இருக்கின்றன, வேறு எதுவுமே அங்கு முளைத்து வளர்வதில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். கல் அந்தப் பகுதியில் காணக் கிடைக்கவில்லை, பல மைல் கள் தூரம் உள்ளே போனால் தான் கல் இருக்கிறது. அங்கே யும்கூட, பாறைக் குன்றுகளை உடைத்துத்தான் கல் பாளங்களைக் கொண்டு வர முடியும் எனவும் எழுதுகிறார்.
பாலத்தின் நீளம் (100 யோஜனா) அகலம் (10 யோஜனா) பற்றி இதிகாசத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும், அந்த இடத்தைப் பார்க்கும் எவரும், அந்த இரண்டு முனை களுக்கிடையே உள்ள தூரத்தை அறிந்த எவரும், உலகில் எந்த இடத்திலும் இல் லாத வகையில் மரத்துண்டு களையும் கல்பாளங்க ளையும் வைத்துக் கட்டப்பட்ட பாலம் இதுவாகத்தான் இருக்க முடி யும் என்று எளிதாகச் சொல்லி விடுவார்கள்(!). உண்மையைச் சொன்னால், இது முழுக்க முழுக்கக் கற்பனையில் புனையப்பட்ட மிகப் பெரிய அற்புதம் என்றும் அது போலவே இலங்கையைப் பற்றியும் கருத வேண்டும்.
லால்கூறும் கருத்து
லால் தெளிவாகத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்: தெற்கு ஆசியாவின் ஆகப் பழைய நாகரிகம் எனும் நூலில் (இலங்கையின்) வட முனையான யாழ்ப்பாணம் (இந்திய) எல்லைப் பகுதியிலி ருந்து 30 கி.மீ. தூரமே உள்ளது. இதனிடையில் உள்ள கடல் பகுதி ஆழம் அற்றது, இமய மலைப் பகுதியில் கடல் நீர் பனிக்கட்டியாக உறைந்து இருந்த காலத்திலும் கூட, நிலப் பகுதியுடன் இலங்கை இணைந்திருக்கும் வகையில் சில நிலப் பகுதிகள் தோன்றியிருக்கலாம் என்று எழுதியுள்ளார்.
கவிஞனின் கற்பனை தான் பாலம் என எழுதிப் பாலம் கட்டிய கதையைப் புறம் தள் ளிய பார்க்கர், மிகச் சிறிய அஸ்திவாரத்தின் மேல் தெற்கத்திய இனத்தாரிடம் இந்து மதம் அல்லது ஆரிய கலாச் சாரத்தைப் பரப்பிவிடுவது இலங்கையைப் பொறுத்த மட்டில் அழிந்துபட்டது; எப்படி என்றால், தீவின் பூர்வக் குடிகளின் வழி வந்தவர்கள் - உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்த வேத்தர்கள் எப்போதுமே இந்துக் கடவுள்களைக் கும்பிட வில்லை. வரலாறு அறிந்தவரை ஆரிய கலாச்சாரத்தைப் பின் பற்றவில்லை என்று எழுதுகிறார்.
"ஆதாம் பாலம் என்பது பவழப் பூச்சித் தொகுப்புகள் கடல் மட்டம் உயர்ந்ததால் கொல்லப்பட்டுப் பவழப் பாறைகளாகிவிட்டவை" என்றுதான் ஸ்பேட் கூறியுள்ளார்.
------------------------- நன்றி: "டைம்ஸ் ஆஃப் இந்தியா", 29.7.2008
தொல்லியல், புவியியல் அறிஞர்களின் தெளிவான கருத்து இது!
அரசு இதன் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் கூறியுள்ளது
"டைம்ஸ் ஆப் இந்தியா"வின் படப்பிடிப்பு
புதுடில்லி, ஜூலை 29- "ராம சேது" என ஒன்று இருந்ததே கிடை யாது என்று அரசு கூறியதற்கு அடிப்படையான ஆதாரமே புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள், பூகோளவியல் அறிஞர்களின் கருத்துக் குறிப் புகள்தான்; இவ்வகை ஆய்வா ளர்களில் ஆர்.எஸ்.எஸ்.கார ரான பி.பி. லால் என்பவரும் அடக்கம். ராமசேனை பாலம் கட்டியது என்பதை மறுத்து இவர் அசைக்க முடியாத ஆதாரங்களைத் தந்துள்ளார்.
(இந்திய அரசின்) பண் பாட்டு அமைச்சகம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கூறி, இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தை (ICHR) அணுகி அதன் கருத்துகளைப் பெறு மாறு கேட்டுக்கொண்டது. இந்திய வரலாற்று ஆய்வு மய்யம் தொல்லியலாளர்களாகிய எச்.டி.சங்காலியா, பி.பி. லால், எச்.பார்க்கர், பூகோளவியலாளர் ஓ.எச்.கே. ஸ்பேட் மற்றும் 1909 ஆம் ஆண்டைய இந்திய அரசு கெஜட்டீர் ஆகியவற்றை மேற்கோள் காண்பித்து பாலம் என்பது கற்பனைப் புனைவு என்றும் அதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடை யாது என்றும் தெரிவித்தது.
சங்காலியாவின் ஆராய்ச்சி நூலான வரலாற்றுப் பார்வை யில் ராமாயணம் எனும் நூல் ராமன் தன் அம்புகளால் கட லைப் பணிய வைக்கத் தன் அக்னி அஸ்திர அம்புகளை விட்டது, மனித உருவில் கடல் ராமன் முன்பு தோன்றியது, பாலம் கட்ட உதவி செய்வேன் என உறுதி கூறியது போன்ற வற்றை விளக்குகிறது. பின்னர், வானரங்கள் எல்லா வகை யான மரங்களைக் கொண்டும் (சால், அசுவாபரணா, குடாஜூ, அர்ஜூனா, தடா, ரிலோகா, திமிடா, வில்வகா, சடாபரணா, கார்னிகாரா, சூடா அசோகா முதலியவை) கடலைத் தூர்த் தன. அதன்பின், பெரிய பாறைக் கற்கள் கடலில் போடப்பட்டன. இப்படியாக பெரிய பாலம் ஒன்று (மகா சேது) பத்து யோஜனை அக லம், நூறு யோஜனை நீளத்தில் நளனால் கட்டப் பட்டது என்றும் அந்நூலில் உள்ளது.
மணல்மேடுதான்
இவற்றை ஆதாரமாகக் கொண்டு - நிலவியல் எப்படி இருக்கிறது என்பதையும் சங் காலியா கூறுகிறார்: ராமேசு வரத்தில் தேரி எனப்படும் மணல்மேடுகளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை; இவையும் மூன்று வகையாக இருக்கின் றன - செம்பு போன்ற சிகப்பு, பழுப்பு மற்றும் வெண்மை அல்லது சாம்பல் நிறம் - முதல் வகை மிகப் பழைமையானது. அந்தப் பகுதி எப்படி அந்தக் காலத்தில் இருந்தது, அதாவது 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இருந்தது என்ப தைக் காண்பிக்கிறது. இன் றைக்கும் கூட, அந்தப் பகுதி யில், சில பனைமரங்களும் ஒன்றிரண்டு வேறு வகை மரங் களும் மட்டுமே இருக்கின்றன, வேறு எதுவுமே அங்கு முளைத்து வளர்வதில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். கல் அந்தப் பகுதியில் காணக் கிடைக்கவில்லை, பல மைல் கள் தூரம் உள்ளே போனால் தான் கல் இருக்கிறது. அங்கே யும்கூட, பாறைக் குன்றுகளை உடைத்துத்தான் கல் பாளங்களைக் கொண்டு வர முடியும் எனவும் எழுதுகிறார்.
பாலத்தின் நீளம் (100 யோஜனா) அகலம் (10 யோஜனா) பற்றி இதிகாசத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும், அந்த இடத்தைப் பார்க்கும் எவரும், அந்த இரண்டு முனை களுக்கிடையே உள்ள தூரத்தை அறிந்த எவரும், உலகில் எந்த இடத்திலும் இல் லாத வகையில் மரத்துண்டு களையும் கல்பாளங்க ளையும் வைத்துக் கட்டப்பட்ட பாலம் இதுவாகத்தான் இருக்க முடி யும் என்று எளிதாகச் சொல்லி விடுவார்கள்(!). உண்மையைச் சொன்னால், இது முழுக்க முழுக்கக் கற்பனையில் புனையப்பட்ட மிகப் பெரிய அற்புதம் என்றும் அது போலவே இலங்கையைப் பற்றியும் கருத வேண்டும்.
லால்கூறும் கருத்து
லால் தெளிவாகத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்: தெற்கு ஆசியாவின் ஆகப் பழைய நாகரிகம் எனும் நூலில் (இலங்கையின்) வட முனையான யாழ்ப்பாணம் (இந்திய) எல்லைப் பகுதியிலி ருந்து 30 கி.மீ. தூரமே உள்ளது. இதனிடையில் உள்ள கடல் பகுதி ஆழம் அற்றது, இமய மலைப் பகுதியில் கடல் நீர் பனிக்கட்டியாக உறைந்து இருந்த காலத்திலும் கூட, நிலப் பகுதியுடன் இலங்கை இணைந்திருக்கும் வகையில் சில நிலப் பகுதிகள் தோன்றியிருக்கலாம் என்று எழுதியுள்ளார்.
கவிஞனின் கற்பனை தான் பாலம் என எழுதிப் பாலம் கட்டிய கதையைப் புறம் தள் ளிய பார்க்கர், மிகச் சிறிய அஸ்திவாரத்தின் மேல் தெற்கத்திய இனத்தாரிடம் இந்து மதம் அல்லது ஆரிய கலாச் சாரத்தைப் பரப்பிவிடுவது இலங்கையைப் பொறுத்த மட்டில் அழிந்துபட்டது; எப்படி என்றால், தீவின் பூர்வக் குடிகளின் வழி வந்தவர்கள் - உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்த வேத்தர்கள் எப்போதுமே இந்துக் கடவுள்களைக் கும்பிட வில்லை. வரலாறு அறிந்தவரை ஆரிய கலாச்சாரத்தைப் பின் பற்றவில்லை என்று எழுதுகிறார்.
"ஆதாம் பாலம் என்பது பவழப் பூச்சித் தொகுப்புகள் கடல் மட்டம் உயர்ந்ததால் கொல்லப்பட்டுப் பவழப் பாறைகளாகிவிட்டவை" என்றுதான் ஸ்பேட் கூறியுள்ளார்.
------------------------- நன்றி: "டைம்ஸ் ஆஃப் இந்தியா", 29.7.2008
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பொதுவானவை
தாங்கள் யார் என்ற உணர்ச்சி ஏற்பட்டாக வேண்டும்!
"ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப்பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும், சமுதாயப் பற்றும் ஏற்பட்டாகவேண்டும்."
-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு", 12.11.1933
Posted by
தமிழ் ஓவியா
1 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
‘பார்ப்பனரல்லாதார்’ என்று நம்மை நாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும்?
திராவிட மக்களாகிய நாம் உழைக்க உழைக்க, அன்னியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாறவேண்டுமானால், நாம் நம்மை, ‘திராவிடர்’ என்றும்; ‘இந்தியா’ ‘இந்தியர்’ ‘இந்து’ ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லர் என்றும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இந்து என்ற வார்த்தை இந்த நாட்டின் எப்பகுதிக்கும் உரியதல்ல என்பது, பார்ப்பனர்களாலேயே உண்டாக்கப்பட்ட புராணங்கள், இதிகாசங்கள், கற்பனைகள் ஆகியவற்றிலும் அவ்வார்த்தை காணப்படாததிலிருந்து அறியலாம். நம் மக்களை நிலைத்த அடிமைகளாக இருக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சியே ‘இந்து’ என்பதாகும்.
இலக்கியம், பஞ்ச காவியங்கள், நீதி நூல்கள் என்பனவெல்லாம் நம்முடையவை என்று நம் பண்டிதர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அவற்றில்கூட ‘இந்தியா’ என்பதோ ‘இந்து’ என்பதோ, ‘இந்தியர்’ என்பதோ காணப்படவில்லை. 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரங்களிலெல்லாம் நம்மைக் குறித்துத் ‘திராவிடர்’ என்றே எழுதப்பட்டிருக்கிறது. திராவிடர், ஆரியர் என்ற இனங்களே ஆதியில் இந்தியாவில் இருந்தன என்பதாகச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன. தென் பாகத்தில் திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வளவு தெளிவாக உள்ள இலட்சியத்தை நாம் மறந்துவிட்டோம்; அதுமட்டுமின்றி, எதிரிகளுடையதை நாம் ஏற்றுக் கொண்டோம். அதிலும், அவர்களுக்கு நாம் அடிமை என்பதை ஒப்புக் கொண்டோம். இக்குறைபாடு நீக்கப்படவே நம் மக்களுக்குள்ளே ‘இந்து’ என்னும் உணர்ச்சி மங்கி, திராவிடம் என்னும் உணர்ச்சி வேரூன்ற வேண்டும். இந்து, இந்தியா, இந்தியர் என்பவற்றை ஆரியம், ஆரிய நாடு, ஆரியர் என்றே நாம் கருதி ஒதுக்கவேண்டும்.
‘பார்ப்பனரல்லாதார்’ என்று நம்மை நாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும்? நாம் திராவிடர்; நம் எதிரிகள் வேண்டுமானால் ‘திராவிடரல்லாதார்’ என்று சொல்லிக் கொள்ளட்டுமே! சென்னை மாகாணத்தை நாம் திராவிட நாடு என்று கூறி வருகிறோம். திராவிட நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்துவரும் பழம் பண்டிதர்கள் இமயம் வரை நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள். இமயம் வரை ஆண்டதாகச் சொல்லப்படுவது ஒரு காலத்தில் இருந்திருந்தால் இருந்து போகட்டும்; அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. இப்போது இருப்பதையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?
தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம். சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்; இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.
-------------------------- தந்தைபெரியார் - லால்குடியில், 23-5-1944-ல் சொற்பொழிவு, ‘குடிஅரசு’ 3-6-1944
Posted by
தமிழ் ஓவியா
5
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
தென் ஆப்பிரிக்கா தினம்!
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தாழ்வாய் நடத்துவதைப் பற்றியும், இந்தியர்களை அந்நாட்டைவிட்டு ஒழிப்பதற்கென ஏற்படுத்திய சட்டத்தைப் பற்றியும் சென்ற 11-ந் தேதி இந்தியாவெங்கும் பொதுத் தினமாகக் கொண்டாடி, தேசமெங்கும் கண்டனத் தீர்மானங்கள் நடைபெற்றன. அக்கண்டன விஷயத்தில் நாமும் கலந்து கொள்ளுகிறோம். ஆனால், நமது நாட்டில் கோடிக்கணக்கான சகோதரர்களைத் தீண்டாதாரென்றும், பார்க்கக் கூடாதாரென்றும், தங்களுடைய வேதங்களையே படிக்கக் கூடாதாரென்றும், தங்களுடைய தெய்வங்களையே கண்டு வணங்கக் கூடாதாரென்றும் கொடுமை செய்திருக்கிற ஒரு நாட்டார், இக்கண்டனத் தீர்மானம் செய்வதில் ஏதாவது பலன் உண்டாகுமா? இதை அறிந்த தென் ஆப்பிரிக்கா வெள்ளையர்கள் இக்கண்டனத் தீர்மானங்களை மதிப்பார்களா? அல்லது குப்பைத் தொட்டியில் போடுவார்களா? என்பதை வாசகர்களே கவனித்துப் பார்த்தால், வீணாக ஒரு நாளை இப்போலிக் கண்டனத் தீர்மானங்களுக்காகப் பாழாக்கினோமே என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.
---------------- தந்தைபெரியார் - ‘குடிஅரசு’, தலையங்கம் - 18-10-1925
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
29.7.08
பகுத்தறிவுக்கும் நம் மனத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்
இப்போது நடைப்பெறும் திருமணத்தில் நாம் ஒன்றும் பெரிய மாறுதலைக் காணவில்லை. தலைக் கீழாக ஒன்றும் நடைப்பெறப் போவதில்லை.
ஒரு சிறிய மாறுதல் மட்டும் உண்டு. மாறுதல்கள் இயற்கையாகவே பல இனங்களாலே பல இடங்களில் இன்று கையாளப்படுத்தான் வருகின்றன. இங்கே நாம் மாறுதலைக் காண்கிறோம். சடங்கில்லை, வேற இனத்தவன் எவனும் மணத்தை நடத்துவதில்லை.
சுயமரியாதைக்கும் பகுத்தறிவுக்கும் இயற்கைக்கும் பொருந்திய மணம் வேண்டுகிறோம். அப்படிப்பட்ட இந்தத் திருமணத்தைத் நாஸ்திகத் திருமணம் என்று பலர் சொல்லக் கூடும். மற்றும் நமது தாய்மார்கள் கலிகாலம்! அய்யர் இல்லை என்றாலும் அம்மியாவது இருக்கக் கூடாதா? நெருப்பாவது (ஓமம்) இருக்கக் கூடாதா? விளக்காவது இருகக் கூடாதா? என்றெல்லாம் சொல்லுவார்கள்.
நமக்குப் பார்ப்பனர் மீதோ, அம்மி மீதோ, நெருப்பின் மீதோ, குத்து விளக்கின் மீதோ தனிப்பட்ட வெறுப்பு ஒன்றுமில்லை. நெருப்பு அடுப்பில் இருக்க வேண்டியது தான். அம்மி அரைக்கப் பயன்பட வேண்டிய இடத்தில் இருக்கட்டும். பகுத்தறிவுக்கும் நம் மனத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும் என்று தான் சொல்லுகின்றோம்.
ஒவ்வொன்றிற்கும் ஏன்? என்ற கேள்வியைப் போட்டு ஆராய்ச்சி நடத்தும் காலம் இது. மனிதருக்கு எவ்வளவு தூரம் பயன்படுகின்றது என்பதைப் பொறுத்து தான் ஒரு பொருளுக்கு மதிப்பு வருகிறது. இதற்காகத் தான்
நாம் உழைக்கின்றோம்.இந்தத் திருமணத்தின் முதல் வெற்றி பார்ப்பான் இல்லாதது. ஆதலால் இதைச் சுயமரியாதைத் திருமணம் என அழைக்கிறோம்.
தான்தான் உயர்ந்த சாதி என்ற ஆணவங் கொண்டு நம்மைத் தொடாதே,
கூட உட்கார்ந்து சாப்பிடாதே என்று சொல்லும் ஒருவனை மணையில் உட்கார வைத்துக் காரியம் நடத்தினால் தமிழனுக்கு மானமுண்டு! என்று சொல்ல முடியுமா?
இரண்டாவது வெற்றி என்னவென்றால் இது பகுத்தறிவுத் திருமணம். பகுத்தறிவு என்று சொல்லுவதும் மாறிமாறி வருவதாகும். இன்று நாம் எவற்றை அறிவுக்குப் பொருத்தமானவை என எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப்பழக்கங்கள் எனத் தள்ளப்படும். நாம் கூட பல பொருள்களை, ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே பழைய கருத்துக்களெனத் தள்ளிவிடவில்லையா?
அதைப் போலத் தான் நமது பின்னோர்கள் என்னைக் குறித்துங்கூட ஒரு காலத்தில் இராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான் என்று சொல்லுவார்கள்.அது இயற்கை. மாற்றத்தின் அறிகுறி காலத்தின் சின்னம். எனவே பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத்துக்கு அவர்கள் செய்தது சரி என்பதனாலும், அப்போது அவ்வளவுதான் முடிந்தது என்பதனாலும், இன்று மாறித்,தான் ஆக வேண்டும்.
சக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அக்காலத்து எடிசன். அப்புறம் பலப்படியாக முன்னேற்றமாகி இப்போது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத்திற்குள்ளாகித் தான்
தீர வேண்டும்.இப்போத நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம்? அய்ம்பது வருடங்களுக்கு முன்பிருந்ததை விட கடவுளைப் பற்றிய எண்ணம் தெய்வீக சக்தி படைத்தவர்கள் பெரிய மனிதர்கள் என்பவர்களைப் பற்றிய எண்ணம் வீடு, வாசல், உடை, உணவு, தெருக்கள் வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எவ்வளவோ எண்ணங்களில் பொருள்களில் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம்.
பெண்களின் புடைவை, இரவிக்கை, நகைகள், புருஷன், பெண் ஜாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள்.அடுத்தப்படியாக இங்குப் பொருள் செலவு அதிகமில்லை. நேரமும் பாழாவதில்லை. முன்பெல்லாம்பல நாள்கள் திருமணம் நடைப்பெற்றது. இப்போது பார்ப்பனர்கள் கூடOne day only - அதாவது ஒரு நாள் திருமணம் என்பதாக அழைப்பிலேயே குறிப்பிடுகிறார்கள். மற்றும் இந்தத் திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை இருக்கின்றது.
ஆரியர்களின் 8- வகைத் திருமண முறைகளில் ஒன்றில் கூட பெண்
ஒர் உயிருள்ள பொருளாக மதிக்கப்படுவதில்லை.ஒத்த அன்பும், காதலும் ஏற்பட வேண்டுமென விரும்பினால் அந்த முறையில் நாம் மக்களை வளர்ப்பதில்லை. பக்குவம் வந்தவுடன் பெண்ணை அடைக்கிறோம். பெண்களுக்குத் தக்க கல்வி அனுபவம் தருவதில்லை. இப்படிப்பட்ட பெண்களைத் தங்களுக்கு வேண்டியவற்றைப் தெரிந்தெடுத்துக் கொள்ளும் படிச் சொன்னால் டிராமா (நாடகம்) காரனாகத் தான் தெரிந்தெடுப்பார்கள். அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக் கொடுப்பதில்லை.
மேல் நாடுகளில் சிறு குழந்தைகளுக்குக் கூட (Freshair ) அதாவது நல்ல காற்று முதலியவற்றின் அருமை தெரிகின்றது. ஆணும் பெண்ணும்
ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்த நாட்டில் அறவே இல்லை. யாரோ தெருவில் போகும் பார்ப்பானைக் கூப்பிட்டுப் பொருத்தம் பார்க்கச் சொன்னால் அவனுக்கு மணமக்களைப் பற்றி என்ன தெரியும்? அண்ணன் தங்கை ஆகிய இருவர் சாதகங்களைக் கொடுத்தால் ஒருவருக்கொருவர் கணவன் மனைவி ஆவதற்குப் பொருத்தம் சொல்லுவான்.
மனிதனுக்கும், நாய்க்கும், குட்டிக்கும் கூட ஜாதகத்தில் பொருத்தம் காணலாம்.ஜாதகம் இல்லையென்றால் பெயரைச் சொல்லிச் பொருத்தம் பார்ப்பான். அதற்கு மேல் பல்லி ஆகியவைகளுடன் ஒப்புதல் வேண்டும். வாழ்க்கையைப் பிணைக்கக் கூடிய திருமணத்தில் இவ்வளவு பேதமை. அநேக நல்ல பொருத்தங்கள் என்பவை பெண்ணின் முதுகுக்கும் கணவனின் கைத்தடிக்கும் ஓயாத பொருத்தமாக முடிகிறது.
வரும் காலத்தில் வாலிபர்களுக்கும், பெண்களுக்கும் உரிமை தரவேண்டும். இல்லையென்றால் உரிமையுடனிருக்கப் போகும் அவர்கள் நம் தடைகளை விலக்கி முன்னேறுவார்கள். எனவே முதலிலேயே உரிமையளித்து விடுவது நல்லது.
---------------12-07-1944- அன்று பேரளத்தில் நடைப்பெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 22-07-1944- குடிஅரசு இதழில் வெளியானது.
ஒரு சிறிய மாறுதல் மட்டும் உண்டு. மாறுதல்கள் இயற்கையாகவே பல இனங்களாலே பல இடங்களில் இன்று கையாளப்படுத்தான் வருகின்றன. இங்கே நாம் மாறுதலைக் காண்கிறோம். சடங்கில்லை, வேற இனத்தவன் எவனும் மணத்தை நடத்துவதில்லை.
சுயமரியாதைக்கும் பகுத்தறிவுக்கும் இயற்கைக்கும் பொருந்திய மணம் வேண்டுகிறோம். அப்படிப்பட்ட இந்தத் திருமணத்தைத் நாஸ்திகத் திருமணம் என்று பலர் சொல்லக் கூடும். மற்றும் நமது தாய்மார்கள் கலிகாலம்! அய்யர் இல்லை என்றாலும் அம்மியாவது இருக்கக் கூடாதா? நெருப்பாவது (ஓமம்) இருக்கக் கூடாதா? விளக்காவது இருகக் கூடாதா? என்றெல்லாம் சொல்லுவார்கள்.
நமக்குப் பார்ப்பனர் மீதோ, அம்மி மீதோ, நெருப்பின் மீதோ, குத்து விளக்கின் மீதோ தனிப்பட்ட வெறுப்பு ஒன்றுமில்லை. நெருப்பு அடுப்பில் இருக்க வேண்டியது தான். அம்மி அரைக்கப் பயன்பட வேண்டிய இடத்தில் இருக்கட்டும். பகுத்தறிவுக்கும் நம் மனத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும் என்று தான் சொல்லுகின்றோம்.
ஒவ்வொன்றிற்கும் ஏன்? என்ற கேள்வியைப் போட்டு ஆராய்ச்சி நடத்தும் காலம் இது. மனிதருக்கு எவ்வளவு தூரம் பயன்படுகின்றது என்பதைப் பொறுத்து தான் ஒரு பொருளுக்கு மதிப்பு வருகிறது. இதற்காகத் தான்
நாம் உழைக்கின்றோம்.இந்தத் திருமணத்தின் முதல் வெற்றி பார்ப்பான் இல்லாதது. ஆதலால் இதைச் சுயமரியாதைத் திருமணம் என அழைக்கிறோம்.
தான்தான் உயர்ந்த சாதி என்ற ஆணவங் கொண்டு நம்மைத் தொடாதே,
கூட உட்கார்ந்து சாப்பிடாதே என்று சொல்லும் ஒருவனை மணையில் உட்கார வைத்துக் காரியம் நடத்தினால் தமிழனுக்கு மானமுண்டு! என்று சொல்ல முடியுமா?
இரண்டாவது வெற்றி என்னவென்றால் இது பகுத்தறிவுத் திருமணம். பகுத்தறிவு என்று சொல்லுவதும் மாறிமாறி வருவதாகும். இன்று நாம் எவற்றை அறிவுக்குப் பொருத்தமானவை என எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப்பழக்கங்கள் எனத் தள்ளப்படும். நாம் கூட பல பொருள்களை, ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே பழைய கருத்துக்களெனத் தள்ளிவிடவில்லையா?
அதைப் போலத் தான் நமது பின்னோர்கள் என்னைக் குறித்துங்கூட ஒரு காலத்தில் இராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான் என்று சொல்லுவார்கள்.அது இயற்கை. மாற்றத்தின் அறிகுறி காலத்தின் சின்னம். எனவே பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத்துக்கு அவர்கள் செய்தது சரி என்பதனாலும், அப்போது அவ்வளவுதான் முடிந்தது என்பதனாலும், இன்று மாறித்,தான் ஆக வேண்டும்.
சக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அக்காலத்து எடிசன். அப்புறம் பலப்படியாக முன்னேற்றமாகி இப்போது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத்திற்குள்ளாகித் தான்
தீர வேண்டும்.இப்போத நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம்? அய்ம்பது வருடங்களுக்கு முன்பிருந்ததை விட கடவுளைப் பற்றிய எண்ணம் தெய்வீக சக்தி படைத்தவர்கள் பெரிய மனிதர்கள் என்பவர்களைப் பற்றிய எண்ணம் வீடு, வாசல், உடை, உணவு, தெருக்கள் வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எவ்வளவோ எண்ணங்களில் பொருள்களில் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம்.
பெண்களின் புடைவை, இரவிக்கை, நகைகள், புருஷன், பெண் ஜாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள்.அடுத்தப்படியாக இங்குப் பொருள் செலவு அதிகமில்லை. நேரமும் பாழாவதில்லை. முன்பெல்லாம்பல நாள்கள் திருமணம் நடைப்பெற்றது. இப்போது பார்ப்பனர்கள் கூடOne day only - அதாவது ஒரு நாள் திருமணம் என்பதாக அழைப்பிலேயே குறிப்பிடுகிறார்கள். மற்றும் இந்தத் திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை இருக்கின்றது.
ஆரியர்களின் 8- வகைத் திருமண முறைகளில் ஒன்றில் கூட பெண்
ஒர் உயிருள்ள பொருளாக மதிக்கப்படுவதில்லை.ஒத்த அன்பும், காதலும் ஏற்பட வேண்டுமென விரும்பினால் அந்த முறையில் நாம் மக்களை வளர்ப்பதில்லை. பக்குவம் வந்தவுடன் பெண்ணை அடைக்கிறோம். பெண்களுக்குத் தக்க கல்வி அனுபவம் தருவதில்லை. இப்படிப்பட்ட பெண்களைத் தங்களுக்கு வேண்டியவற்றைப் தெரிந்தெடுத்துக் கொள்ளும் படிச் சொன்னால் டிராமா (நாடகம்) காரனாகத் தான் தெரிந்தெடுப்பார்கள். அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக் கொடுப்பதில்லை.
மேல் நாடுகளில் சிறு குழந்தைகளுக்குக் கூட (Freshair ) அதாவது நல்ல காற்று முதலியவற்றின் அருமை தெரிகின்றது. ஆணும் பெண்ணும்
ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்த நாட்டில் அறவே இல்லை. யாரோ தெருவில் போகும் பார்ப்பானைக் கூப்பிட்டுப் பொருத்தம் பார்க்கச் சொன்னால் அவனுக்கு மணமக்களைப் பற்றி என்ன தெரியும்? அண்ணன் தங்கை ஆகிய இருவர் சாதகங்களைக் கொடுத்தால் ஒருவருக்கொருவர் கணவன் மனைவி ஆவதற்குப் பொருத்தம் சொல்லுவான்.
மனிதனுக்கும், நாய்க்கும், குட்டிக்கும் கூட ஜாதகத்தில் பொருத்தம் காணலாம்.ஜாதகம் இல்லையென்றால் பெயரைச் சொல்லிச் பொருத்தம் பார்ப்பான். அதற்கு மேல் பல்லி ஆகியவைகளுடன் ஒப்புதல் வேண்டும். வாழ்க்கையைப் பிணைக்கக் கூடிய திருமணத்தில் இவ்வளவு பேதமை. அநேக நல்ல பொருத்தங்கள் என்பவை பெண்ணின் முதுகுக்கும் கணவனின் கைத்தடிக்கும் ஓயாத பொருத்தமாக முடிகிறது.
வரும் காலத்தில் வாலிபர்களுக்கும், பெண்களுக்கும் உரிமை தரவேண்டும். இல்லையென்றால் உரிமையுடனிருக்கப் போகும் அவர்கள் நம் தடைகளை விலக்கி முன்னேறுவார்கள். எனவே முதலிலேயே உரிமையளித்து விடுவது நல்லது.
---------------12-07-1944- அன்று பேரளத்தில் நடைப்பெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 22-07-1944- குடிஅரசு இதழில் வெளியானது.
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
28.7.08
பெரியார் பெரும்படைக்கு சிறையில் இடமில்லை ----- சில நினைவுகள்
50 ஆண்டுகளுக்கு முன், ஜாதியை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை 26.11.1957 அன்று தந்தை பெரியார் நடத்தினார். போராட்டத்தின் தன்மை மற்றும் பெரியார் கட்டளையை நிறைவேற்றிய தொண்டர்களின் இலட்சிய வேட்கை குறித்து இக்காலத் தலைமுறைக்காக 1957 நவம்பர் - டிசம்பர் விடுதலையில் இருந்து சில பகுதிகள் இங்கே...
சட்டத்தை கொளுத்துங்கள்!
சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்!!
"சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம் அரசாங்கத்தினர் சாதியைக் காப்பாற்றித்தான் தீரவேண்டும் என நமக்கு சவால் விட்டு இருக்கின்றனர். இந்த சவாலுக்கு நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?
சட்டம் கொளுத்தின சாம்பலை சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்!
சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்!"
-------------- ஈ.வெ.ரா, விடுதலை
என் மகனுக்கு மாத்திரம் எதற்கு ஜாமீன்?
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் சென்ற மாதம் 26ந் தேதி அரசியல் சட்டத்தாளைக் கொளுத்திய திராவிடர் தோழர்களில் 34 பேர்கள் மீது தொடரப்பட்டிருந்த வழக்குகள் 19.12.57ந் தேதி திருச்சி மாவட்ட மாஜிஸ்திரேட் அவர்களால் விசாரிக்கப்பட்டு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆங்கரை ஆண்டிமகன் தவசு, மைனராய் இருந்ததால் தவசு தகப்பனாரை அழைத்து உங்கள் மகனை ஜாமீனில் அழைத்துப் போகிறீர்களா? என்று கேட்டதற்கு ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையில் இருக்கும்போது என் மகனுக்கு மாத்திரம் எதற்கு ஜாமீன்? என்று மறுத்துவிட்டார். இவரது இந்த பதில் நேகார்ட்டிலிருந்த எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இச்சிறுவனுக்கு 12 வயது இச்சிறுவனையும் சேர்த்து நேற்று தண்டிக்கப்பட்டவர்கள்.
சிறுதையூர் மாரிமுத்து (திராவிட விவசாய சங்கச் செயலாளர்) பூவாளுர் தி.க. செயலாளர் வீராசாமி, வளவனூர் ஆரோக்கியசாமி ஆங்கரை ரத்தினம், அன்பில் கதப்பட நாட்டர் சிறுதையூர் சலாம் (பஞ்சாயத்து போர்டு தலைவர், உட்பட 35 பேர்கள் தோழர்கள் யாவரும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்று சிறையேறினர்.
லால்குடி வாளாடி பெருகமணி ஆகிய ஊர்களில் சட்டத்தாள் கொளுத்திய தோழர்களுக்கு சென்ற 16ந் தேதி ஜில்லா மாஜிஸ்திரேட் தலா 2 ஆண்டு கடுங்காவல் தட்ணனை விதிக்கப்பட்டது. கொளுத்த முயற்சி செய்தவர்களுக்கு தலா 18 மாதம் கடுங்காவல் விதிக்கப்பட்டது. முத்துச் செழியன் குழுவினர் மீதுள்ள வழக்குகள் முறையே 24, 26ந் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
லால்குடி வட்டத்தைச் சேர்ந்த தோழியர்கள் சிறையில் பிரசவமான தோழியர் அஞ்சலை அம்மாள் உட்பட அனைவரும் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டு அவர்கள் மீதுள்ள வழக்குகளும் முறையே 24, 26 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. தாய்மார்கள் திருச்சி துணைச் சிறையில் ரிமாண்டில் இருக்கிறார்கள்.
பெரியார் பெரும்படைக்கு சிறையில் இடமில்லை
லால்குடி வட்டாரத்தில் அரசியல் சட்டம் எரித்து கைது செய்யப்பட்ட தோழர்களை திருச்சிக்கு வானில் கொண்டு வந்து மாஜிஸ்திரேட்டிடம் ரிமாண்ட் வாங்கி திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். சிறையதிகாரிகள் மத்திய சிறையில் இடமில்லையெனச் சொல்லிவிடவே அவர்களை திரும்பவவும் லால்குடி சப்ஜெயிலுக்கு கொண்டு சென்றனர் போகும் போது தொண்டர்கள் பெரியார் பெரும்படைக்கு சிறையில் இடமில்லை என ஒலி முழக்கமிட்டுக் கொண்டே சென்றனர். லால்குடி சப்ஜெயலில் அடைக்கப்பட்ட பின் இரவு 10.30 மணிக்கு கலெக்டர் சென்று மத்திய சிறையில் இடம் ஒழித்து வைத்திருப்பதாகவும் திரும்பவும் கொண்டு வருமாறும் லால்குடிக்கு செய்தி வந்தது. பின்னர் போலீஸ் வேன்கள் போதாமல் வாடகை லாரி பிடித்து இரவு 11 மணிக்கு மேல் மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர்.
சிறை மீளும் வீரர்கள் 30.11.1957 சனி, ஆர்.வி. ரங்கசாமி (ஈரோடு), பி.டி. சுப்பராயலு (கடலூர்)
லட்சுமி - சுப்பராயலு (கடலூர்), கி. நடேசன் (கடலூர்), கல்யாணி - நடேசன் (கடலூர்), மா. பலராமன் (கடலூர்), ஆ. வைத்திலிங்கம் (கடலூர்), வி. புருஷோத்தமன் (கடலூர்), மா. ஜானகி ராமன் (கடலூர்), எஸ்.ராமலிங்கம் (கடலூர்), கே. வேணு (கடலூர்), கோ. வெங்கட்ராமன் (புத்தூர்).
வருத்தத்தோடு...
நன்னிலம் தாலுக்கா தி.க. தி.வி.தொ.ச. உதவி செயலாளர் என்.வி.முருகப்பா 26.11.1957ந் தேதி மாலை 4 மணிக்கு வாழ்குடி சத்தி ரைஸ் மில் பக்கத்தில் இந்திய அரசியல் சட்ட புத்தகத்தைக் கொளுத்தினார். ஏராளமான பொது மக்கள் ஆதரவு தந்தார்கள். இந்த சட்டத்தின் தத்துவத்தை விளக்கி பொது மக்களுக்கு எடுத்து உரைத்துவிட்டுக் கொளுத்தினார். போலீகார் யாரும் வரவில்லை. என்னை இதுவரையிலும் தண்டிக்கவில்லை என்று வருத்தத்தோடு தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று அவர் எழுதியுள்ளார்.
உணவு தராத போலீசார்
கடந்த 26.11.1957இல் இந்திய அரசியல் சட்டத்தை எரித்து கைதான எடமேலையூர் தோழர்களின் வழக்குகள் 3.12.1957இல் பகல் 2 மணிக்கு மன்னார்குடி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தோழர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்புக் கூறி தலா 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்.
தோழர்கள் 35 பேருக்கு காலை உணவுடன் மாலை 6.30 மணி வரை உணவு இன்றி துன்பப்பட்டார்கள். கழகத் தோழர்கள் வாங்கி வருகிறோம் என்றாலும் மறுத்துவிட்டனர் போலீசார். பலர் மயக்கமுற்று மாலை 4.45க்கு வீழ்ந்து விட்டனர். உடனே அவர்களுக்கு தோழர்கள் காப்பி வாங்கிக் கொடுத்து தெளிவு உண்டு பண்ணினர்.
அன்பு பின்பு மாலை 6.35 மணிக்கு போலீசாரால் உணவு அளிக்கப்பட்டது. அதன்பின் இரவு சுமார் 7 மணிக்கு அவர்கள் நீடாமங்கலம் ரயில் மூலம் அனுப்பப்பட்டனர். தேழர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.
சிறை சென்ற சிறுவர் - சிறுமி
நீடாமங்கலத்தில் சென்ற 26ந் தேதி அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி கைது செய்யப்பட்ட தோழர் கே.ஆர்.குமார் அவர்களின் மகள் செல்விக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சென்னையிலுள்ள மைனர் பெண்கள் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள்.
மற்றும் இதுபோலவே, கலியபெருமாள், கோவிநத்ராஜ் ஆகிய இரு சிறுவர்களுக்கும் இரண்டு ஆண்டு தண்டனை அளித்து, ஒருவரை திருநெல்வேலிச் சிறைக்கும், மற்றொருவரை செங்கற்பட்டு சிறுவர் சிறைக்கும் அனுப்பி வைத்தார்கள்.
மன்னார்குடி வட்டத் தோழர்கள் 68 பேருக்கும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதென்று முன்னர் வந்த செய்தியில் 20 பேருக்கு மட்டுந்தான் தண்டனை விதிக்கப்பட்டதென்றும், மீதமுள்ள 48 பேர் மீதுள்ள வழக்கும் 7.12.1957ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
-------------------------- விடுதலை,. 2.12.1957
தங்கை சாகும் நிலையிலும் சிறை புகுந்த கர்மவீரர்
தன் உடன் பிறந்த தங்கை சாகும் தருவாயில் படுத்தபடுக்கையில் கிடக்கிறதே என்று கவலை தோய்ந்து கடமையை நிறைவேற்றத் தவறவில்லை வீரர் நாகை தாலுக்கா கிள்ளுகுடி தோழர் ப.குஞ்சப்பன் பெரியாரின் கட்டளையை நிறைவேற்றி சிறை சென்றார். கடமை வழுவாது சிறையிலிருக்கிறார் 2.12.1957இல் உடன் பிறந்த யசோதை இயற்கை எய்தினார் (இயற்கை எய்தின செய்தி அன்னாருக்குத் தெரியாது) கிள்ளுகுடி திராவிடர் கழகம் அவருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மகிழ்ச்சியுடன் சிறையேகினார்
வடுவூரைச் சார்ந்த காரைக்கோட்டை வாசிகளாகிய 26 நபர்களும் சிறுமங்கலம் தோழர்கள் 5ஆம் 31 நபர்கள் தண்டிக்கப்பட்டனர் காரைக்கோட்டை, பஞ்சாயத்து தலைவர் முருகையன் உள்பட ஏனைய தோழர்களுக்கும் (31 நபர்கள்) 6 மாத கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டு லாரி மூலமாக திருச்சிக்கு அனுப்பப்பட்டனர். காரைக்கோடடைய்ச சார்ந்த 14 வயதுடைய உத்திராபதி என்ற பையனை மைனர் என்ற காரணம் காட்டி விடுதலையளிக்கப்பட்டனர். காரைக்கோட்டையைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் தங்கை 7 வயதுடைய சரோஜா இறந்த செய்தியைக் கேட்டும் சற்றும் மனக் கலக்கமடையாது சிறை தண்டனையளிக்கப் பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் சிறையேகினார்.
1. நேரு எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டவர்களை காட்டுமிராண்டி என்று அர்த்தமின்றி சொல்லி வருகிறார்.
2. இதை யாருக்கும் தைரியமாக எதிர்க்கின்ற துணிவு வருவதில்லை.
3. பெரியார் தான் நேரு அஞ்சி நடுங்கும் வண்ணம் சுடச்சுட பதில் தருகிறார்.
4. மற்றவர்கள் காட்டுமிராண்டி என்று அதிகார ஆணவத்துடன் சொல்லும் நேரு, பெரியாரிடம் சொல்லும் போது நடுங்கிக் கொண்டே தான் சொல்ல முடியும்.
5. பெரியாரிடம் தான் நேரு பயப்படுகிறார். பெரியாருக்குத்தான் வடநாட்டு ஆதிக்கத்தை நடுங்க வைக்கும் ஆற்றல் உண்டு என்பன போன்ற ஆழ்ந்த கருத்துடன் இந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறதைக்காண்க.
பெரியார் கைது
பெரியார் அவர்கள் சீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகப் புறப்பட்டு ஆயத்தப்படுகையில் சூபரிண்டென்ட் திரு.எஸ்.சோலை அவர்கள் பெரியார் மாளிகைக்கு வந்து பெரியார் அவர்களை கிரிமினல் புரொசீஜர் கோடு 151ஆவது பிரிவுப்படி (குற்றங்களைத் தடை செய்வதற்கான சட்டப்பிரிவு) உத்தேசிக்கப்பட்ட நவம்பர் 26ந் தேதி அரசியல் சட்ட புத்தகத்தைக் கொளுத்துவதைத் தடுப்பதற்காகக் கைது செய்வதாகக் கூறி தமது காரில் அழைத்துச் சென்றார்.
பின்னர் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் திரு. இராமச்சந்திரன் அவர்கள் முன்பாக பெரியார் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு 8 நாட்களுக்கு ரிமாண்டில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டார்.
பெரியார் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
பெரியார் அவர்கள் சீரங்கம் கூட்டத்தை முடித்துக் கொண்ட, எக்ஸ்பிரஸ் டிரெயின் மூலம் சென்னைக்கு வந்து நவ. 26ந் தேதி சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம்ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதியில் அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட்டிருந்தார்கள். இதைத் தடுக்கவே முன்னேற்பாடாக போலீசார் கைது செய்தனர் என்று நம்பப்படுகிறது.
நேற்று மாலை பெரியார் அவர்களைக் கைது செய்ய போலீசார் பெரியார் மாளிகைக்கு வரும்போத அங்கு கழகத் தோழர்கள் யாரும் இல்லை. எல்லோரும் சீரங்கம் கூட்டத்திற்குச் சென்று விட்டார்கள். பெரியார் கைது செய்யப்படும்போது, திரு.ஆனைமலை நரசிம்மன் அவர்களும் திருமதி. மணியம்மையார் அவர்களும் மட்டும் உடன் இருந்தார்கள்.
--------------------- விடுதலை, 26.11.1957
ஆம் கொளுத்தினேன்
சென்னை ஜியார்ஜ் டவுன் 4வது மாஜிஸ்திரேட் திரு.எஸ்.வரதராசன் முன்னி லையில் அரசியல் சட்டம் கொளுத்திய வீரர்களின் வழக்கு விசாரணை, இன்று காலை 11.15 மணிக்கு ஆரம்பமாகியது. தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்ட தோழர்கள் தோழியர்கள் அனைவரும் முக மலர்ச்சியுடன் வீற்றிருந்தனர்.
முதலில் தோழர் நடராஜன் அவர்களை கோர்ட்டார் அழைத்தனர்.
நீங்கள் பழைய ஜெயில் சி3 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிராக அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்தியது உண்மைதானா? என்று கேட்டதற்கு ஆம் கொளுத்தினேன் என்றார்.
போலீசார் மாஜிஸ்திரேட்டிடம் அவர் கொளுத்தின அரசியல் சட்ட நூலை காட்டினார்.
அடுத்து தோழர்கள் தாமோதரன் அபிபூடீன் ராமலிங்கம், வைத்தியநாதன், கன்னியப்பன், நெடுஞ்செழியன், கந்தசாமி ஆகியோர் மேலுள்ள வழக்குகள் தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
தனித்தனியாக நீங்கள் அரசியல் சட்ட புத்தகத்தை கொளுத்த முயன்றீர்களா என்று கேட்டதற்கு கொளுத்தினோம் என்றனர்.
கடைசியாக தோழர் எம்.எஸ்.மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள் செண்பக வல்லி அம்மாள் (கையில் சிறு பையனுடன்) புரட்சிமணி ஆகியோர் மீதுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீங்கள் சைனாபஜார் பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கும்பலாக பெரியாரை விடுதலை செய் என முழக்கமிட்டுக் கொண்டும் புத்தகங்கள் ஆகியவைகளை எரிக்க முற்பட்டது உண்மையா? எனக் கேட்டனர் ஆமாம் உண்மை என அவர்கள் பதில் அளித்தனர்.
கடைசியாக போலீசார் மாஜிஸ்திரேட்டை நோக்கி தண்டணையளிப்பதில் சற்று தாராள மனப்பான்மை காட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கு இல்லை இது பெரும் குற்றம் என மாஜிஸ்திரேட் கூறினார்.
கடைசியாக மாஜிஸ்திரேட் கீழ் கண்டவாறு தண்டனை அளித்து தீர்ப்புக் கூறினார்.
தோழர் எம்.எஸ். மணி தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவள்ளி (கையில் சிறுவன்) புரட்சிமணி ஆகியோரைப் பார்த்து அபராதம் விதித்தால் கட்டுவீர்களா எனக் கேட்டதற்கு கட்டமாட்டோம் என அவர்கள் பதில் கூறினார்கள்.
தோழியர்கள் எம்.எஸ்.வள்ளியம்மாள், செண்பகவல்லி, புரட்சிமணி ஆகியோருக்கு 2 மாதம் கடுங்காவல் தண்டனையும் தோழர் நடராசன் அவர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் எம்.எஸ்.மணி, கே. கன்னியப்பன், தாமோதரன், நெடுஞ்செழியன், அபிபுடீன் ராமலிங்கம், கந்தசாமி, வைத்திய நாதன் ஆகியயோருக்கு 9 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தார்.
தோழர்கள் மேற்படி தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்று சிறைவாசம் புகுந்தனர்.
கோர்ட்டில் ஏராளமான கழகத் தோழர்கள் வந்திருந்து வழக்கை கவனித்தனர்.
------------------------------- விடுதலை, 27.11.1957
சிறை செல்லும் முன் பெரியார் வேண்டுகோள்
நவம்பர் 25ந் தேதி நடக்கும் விசாரணையில் எனது முச்சலிக்க பாண்டு கேன்சல் ஆகி என்னைச் சிறைப்படுத்தும் படியான நிலைமை பெரும்பாலும் ஏற்படலாம். இந்தச் சமயத்தில் பொது மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டியது அவசியமாகும். நான் சிறைப்படுத்தப்பட்டு விட்டேன் என்பதாலேயோ அல்லது பொது மக்கள் கொளுத்துவார்கள் என்கிற எண்ணத்தால் அதைத் தடுக்க அரசாங்கத்தார் ஏராளமான மக்களைக் கைது செய்து விட்டார்கள் என்ற எண்ணத்தாலேயோ, புதிய சட்டத்தின்படி நீண்ட நாள் தண்டிக்கப்பட நேரிடும் என்ற அச்சத்தினாலேயோ யாரும் அதாவது கொளுத்த வேண்டியது அவசியந்தான் என்று கருதுகிறவர்கள், எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அரசியல் சட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்துப் போட்டிருக்கிற, நமக்குக் கேடான நாலைந்து பிரிவுகளைக் கொண்டு பிரசுரத் தொகுப்பைக் கொளுத்தியே தீர வேண்டியது முக்கியமான காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைவிட முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதை அவசியம் ஒவ்வொரு வரும் கவனிக்கவேண்டியது. என்னைரிமான்டு செய்வதனாலேயோ மற்றும் இப்பொழுது செஷன்சில் நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்டநாள் அரசாங்கத்தார் தண்டனைக்குள்ளாகி விடுவதாலேயோ பொது மக்கள்யாரும் ஆத்திரப்படுவதற்கோ, நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்சேதியை வரவேற்க வேண்டும். எந்தவிதமான கலவரமோ, பலாத்காரமோ, பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ, துன்பம், வேதனை உண்டாகக் கூடிய எப்படிப்பட்ட பலாத்காரமான செய்கையும், கஷ்டம் உண்டாக்கக்கூடியதான செய்கை யையும் அதாவது ஆயுத பிரயோகமோ, அடிதடியோ, நெருப்புக் கொளுத்துதலோ, முதலிய ஒரு சிறு காரியம் கூட நடத்தாமலும் நடைபெறாமல் இருக்கும்படியும் ஒவ்வொரு வரும் நடந்து கொள்ள வேண்டும். நான் ஆயுதப் பிரயோகம் செய்ய வேண்டும் என்றும், அக்கிரகாரங்களை கொளுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னதும், சொல்லி வருவதும் உண்மை. ஆனால், அவை இப்பொழுது அல்ல. அதற்கான காலம் இன்னும் வரவில்லை. வராதென்றே ஆசைப்படுகி றேன். அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடு வதற்குக் காலம் எப்போதும் வரும் என்றால், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய பயனில்லை. வெற்றிக்கு அவை பயன் படவில்லை என்றது கண்டு, பலாத்காரத்தைத் தவிர வேறு வகையில்லை என்ற முடிவுக்கு வந்தபிறகுதான் நாம் அவற்றில் இரங்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஆதலால் இந்த என்னுடைய தாழ்மையான வேண்டுகோளை ஒவ்வொருவரும் கருத்தில் வைக்கவேண்டும்.
இப்பொழுது எனக்கு ஏற்படக்கூடும் என்று என எதிர்பார்க்கப்படும். தண்டனையானது நம்முடைய அடுத்த திட்டங்களுக்கு வலுவான ஆதரவுகளையும், உணர்ச்சியையும், ஊக்கத் தையும், துணிச்சலோடும் வேகத்தோடும் ஈடுபடுவதற்குத் தூண்டுதலை உண்டாக்கு வதற்கு வலுமையான சாதனமாக அமையும், பொதுமக்கள் மீது எனக்கு பலமான ஆதிக்கம் இருக்கிறது என்று அரசாங்கமும் இந்தியாவி லுள்ள மற்ற மக்களும் எண்ணியிருக்கிற ஒரு எண்ணத்திற்குப்பாதகம் ஏற்படாமல் பொது மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றால், நான் மேலே வேண்டிக் கொள்கிறபடி எந்தவிதமான தண்டனைக்கு (ஏற்பட்டால்) பிறகு பொது மக்களிடையில் மேற்சொன்னபடி எந்தவிதமான கலவரமும் செய்யும் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன். அவர்களிடத்தில், போலீஸ்காரர்களிடத்தில், மரியாதையாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.
--------------------- விடுதலை 28.11.1957
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
வெளிநாட்டுக்காரன் பார்த்தால் காறித் துப்ப மாட்டானா?
நாமம் போட்டவன் இழிவானவன்; பட்டை போட்டவன் அசல் மடையன்
நாங்கள் எதற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம், பிரச்சாரம் செய்து வருகின்றோம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இன்றைக்கு சமுதாயத் துறையில் 100க்கு 97 மக்களாக உள்ள நாம் 100க்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு தாசி மக்களாக, அடிமைகளாக அவமானத்தைச் சுமந்து கொண்டு, சூடு சொரணையற்ற மக்களாக உள்ளோம். இன்றைக்கு நாம் நமக்கு அந்நியமான ஆட்சியில் அடிமையாக இருக்கிறோம். நமக்கு அந்நியமான மொழி, கலாச்சாரம், நாகரிகம், உணவு, உடைப் பழக்கம் முதலியவற்றைக் கொண்டவர்களின் ஆட்சியின் கீழ் இருக்கிறோம். இந்த அவமானமும், கொடுமைகளும் போக்கப்பட வேண்டும் என்று நான் தான் பாடுபட்டுக் கொண்டு வருகிறேன்.
நான் கடுமையாகப் பேசுவதாகக் கூறுகிறார்கள். நான் கடுமையாகப் பேசாமல் வேறு என்ன செய்வது? எப்படியாவது அவனுக்கு ரோஷ உணர்ச்சி, மான உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திருத்த வேண்டும் என்பதுதான் எனது தொண்டுமுறை. பட்டைப் போட்டவனை அசல் மடையன் என்று சொல்கிறேன்; நாமம் போட்டவனைஎல்லாம் பார்ப்பனனின் இழிமக்கள் என்று கூறுகிறேன். ஆதாரம் இல்லாமலா கூறுகிறேன்? இந்த நாட்டு ராஜாக்களின் பெண்டாட்டிகள் எல்லாம் பார்ப்பானிடம் படுத்துப் புரண்டு இருக்கிறார்கள். அப்படிப் போவது புண்ணியமாகக் கருதப்பட்டு இருந்தது.
கேரளத்திலே நம்பூதிரிக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதிலே ஒவ்வொருவரும் பெருமைப்படுகிறானே! நாயருக்குப் பிறந்ததாகக் கூறினால் அவமானம்; நம்பூதிரிக்குப் பிறந்தவர் என்று கூறினால் வெகுமானம். அந்த நிலைமை அங்கு இருக்கிறதே! எப்படி எல்லாம் நம் நிலை இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் கடவுளை கற்பித்தவனை முட்டாள் என்று சொல்லுகிறேன் என்று ஆத்திரப்படுகிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர்களை உங்கள் சாஸ்திரத்தில் எவ்வளவு வசைபாடி இருக்கிறீர்கள். கடவுள் இல்லை என்று சொல்லுகிறவனின் பெண்டாட்டியை கற்பழிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறானே வசைபாடியது மட்டுமல்ல கொலையே செய்து இருக்கிறார்களே!
இன்றைய அரசமைப்புச் சட்டத்திலிருந்து உங்கள் இந்து மத ஆதாரங்கள் அனைத்திலும் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பான், முஸ்லிம், கிறித்துவன் இவர்களைத் தவிர்த்து பாக்கி அத்தனைப் பேரும் சூத்திரர்கள் தானே! வெட்கப்பட வேண்டாமா? பார்ப்பான் ‘சர்மா' என்ற பட்டம் வைத்துக் கொள்ளலாம். சூத்திரன் மட்டும் ‘தாசன்' என்ற பட்டத்திற்கே அருகதை உடையவன், தாசன் என்றால் என்ன அர்த்தம்? ‘தாசிபுத்திரன்' என்றல்லவா அர்த்தம்? யாருக்கு ரோஷம் வருகிறது? யாருக்கு வெட்கம் வருகிறது? சொல்லுகிற எங்கள் மீது முட்டாள்தனமாக உங்களுக்குக் கோபம் வருகிறதே தவிர, உண்மையை உணர்ந்து பார்க்கவில்லையே?
சட்டத்திலேயே கூறி விட்டானய்யா, பார்ப்பானைத் தவிர அத்தனை பேரும் தாசிப்புத்திரன் என்று. சட்டத்திலே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக வரி இருக்கிறது. ஆனால், அதற்கடுத்த வரியிலே என்ன கூறப்பட்டு இருக்கிறது? தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. ஆனால், மத சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டும் தீண்டாமை அனுசரிக்கப்படும் என்றல்லவா எழுதி வைத்து இருக்கிறான். இது எந்த விதத்தில் நியாயம்? வெறுங்கல்லைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஒரு சாதிக்குதான் உரிமை உண்டென்றால், மற்றவன் கதி என்ன?
இதை எண்ணிப் பார்த்து மனம் புழுங்கிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டேன். மன்னார்குடி கோயிலைத் தேர்ந்தெடுத்து கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது என்று ஏற்பாடு செய்தேன். ஏராளமான தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள கையொப்பம் போட்டுக் கொடுத்தார்கள். நம் முதல்வர் கலைஞர் பார்த்தார். அய்யா எதற்காக இந்தப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்? நானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் செய்கிறேன் என்று புது சட்டத்தையே உருவாக்கிவிட்டார்.
பார்த்தான் பார்ப்பான், சுப்ரீம் கோர்ட்டுக்கு படை எடுத்தான். கலைஞர் சட்டத்தைச் செல்லாது என்று தூக்கிப் போட்டுவிட்டான். நம் நிலை என்ன? பழைய கருப்பன் கருப்பனே என்ற தன்மைதான். நம்நிலைமை இப்படித்தான் நீடிக்க வேண்டுமா? நம் பிறவி இழிவுக்குப் பரிகாரமே கிடையாதா? பார்லிமெண்டைப் பொறுத்தவரை, எதிரிகளின் பலம்தான் அதிகம். அதில் பிரவேசித்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, இந்த ஆட்சியில் இருந்து கொண்டு நம் இழிவை ஒழிக்க முடியாது. பிரிந்துதான் ஆகவேண்டும். பிரிவினை என்று கேட்டால் ஏழாண்டு தண்டனையாம், அனுபவிப்போமே!
சட்டத்தைக் கொளுத்திவிட்டு மூன்று ஆண்டு சிறை அனுபவிக்கவில்லையா? வெளிநாட்டுக்காரன் பார்த்தால் காறித் துப்ப மாட்டானா? நூற்றுக்கு மூன்று பேராக உள்ள கூட்டம் 97 பேர்களை ‘தாசிபுத்திரன்' என்று சொல்கிற அரசியல் சட்டம் இந்தியாவில் இன்னும் இருக்கிறதே என்று வெளிநாட்டுக்காரன் சிரிக்க மாட்டானா?
---------------------- திருச்சியில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்புப் போராட்ட விளக்கக் கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை
'விடுதலை' 6.12.1973
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
கடவுள்களின் யோக்கியதை பாரீர்
சிவன், பிரம்மா, விஷ்ணு யோக்கியதை
உழைப்பது நாம்; உழைக்கும் மக்களாகிய நாம் சூத்திரன், பஞ்சமன், வைப்பாட்டி, மக்கள், நம் தாய்மார்கள் பார்ப்பானுடைய வைப்பாட்டிகள் என்று மனுவில் கூறுகிறான். கடவுள் சங்கதியோ கேட்க வேண்டாம்.
ராமன் ஒரு கடவுள். அவன் யோக்கியதை என்ன? இவற்றையெல்லாம் நாம் வைத்திருக்கலாமா? அடுத்தபடியாக இந்த கடவுள், மதம், சாஸ்திரம், புராணங்கள், அரசாங்கம் எல்லாம் புரட்டுப் பித்தலாட்டம், புராணங்கள் இருப்பது மானங்கெட்டதனம்.. இவற்றையெல்லாம் உடைத்து நொறுக்க வேண்டும் தீயிட்டுப் பொசுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மானம் இருக்கிறது என்று அர்த்தம். நம் இழிவு ஒழிய வேண்டுமானால் இவற்றையெல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டும். முதலில் அதற்கு துணிந்து மக்கள் முன்வரவேண்டும்.
மதத்தை ஒப்புக் கொண்டால் அதில் நாம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறாமே. நான் தான் உன்னை கீழ்ஜாதியாகவும், பார்ப்பானை மேல் ஜாதியாகவும், உன்னை உழைப்பவனாகவும், அவனை உழைக்காமல் உண்டுகளிப்பவனாகவும், உன்னை பஞ்சமன், பறையனாக, தீண்டப்படாதவனாக, நான்காம் ஜாதி அய்ந்தாம் ஜாதியாகவும், பார்ப்பானை மேல் குலத்தவனாகவும் படைத்தேன் என்கின்ற கடவுளை நாம் கும்பிடலாமா? மதத்தை ஒப்புக் கொண்டால் நாம் பொறுக்கி என்ற நிலைதான் ஏற்படும். மனுதர்மத்தில் சூத்திரனானால் அவனுக்கு கெட்டுப்போன எச்சில் இலைதான்; உழுத்துப் போனதைத்தான் சாப்பிட வேண்டும்; கிழிந்த வேட்டிதான் கட்ட வேண்டும்; சூத்திரன் பொருளீட்டக் கூடாது; காதில் விழும் போதே அருவருப்பான பெயர்தான் வைக்க வேண்டும்; மந்திரியாக இருக்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். நாங்கள் தோன்றித்தானே இதிலே சிறிது மாற்றம் ஏற்பட்டது. நெற்றியிலே விபூதி பூசுவது, நான் சூத்திரன் என்று ஒத்துக் கொண்டதாகத்தான் அர்த்தம். இப்போது உடனடியாக என்ன செய்யச் சொல்கிறீர்கள், என்று லக்னோ சென்றிருந்தபோது என்னை கூட்டத்தில் கேட்டார்கள். நீங்கள் கோயிலுக்குப் போகக்கூடாது. நெற்றியில் மதச் சின்னங்கள் அணிந்து கொள்ளக் கூடாது. உங்கள் வீட்டுக் காரியங்களுக்கு பார்ப்பனர்களை அழைக்கக் கூடாது, பார்ப்பான் சமைத்த உணவை சாப்பிடக் கூடாது, உச்சிக்குடுமி வைத்துக் கொள்ளக்கூடாது என்பதாகத்தான் கூறினேன். இப்படி நான் பேசிக் கொண்டிருந்தபோதே சிலர் தலையில் தொட்டுப் பார்த்தனர். உச்சிக்குடுமி இருந்தது. உடனே கத்தரிக்கோல் வாங்கி வரச் செய்து முதலில் ஒருவன் வெட்டினான். இப்படி இங்கேயே 10, 15 பேர்கள் வெட்டிக் கொண்டார்கள். மற்றும் இந்த ஜாதி, மதம், சாஸ்திரம், புராணங்கள் இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்றும், நம்மைப் பிடித்துள்ள பேய்கள் ஜாதி, ஜனநாயகம், கடவுள் மத புராணங்கள் என்னும் மூன்று என்றும், நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக உள்ள நோய்கள் அரசியல் கட்சிகள், தேர்தல், பார்ப்பான், பத்திரிகை, சினிமா ஆகிய இந்த அய்ந்தும் என்று கூறினேன்.
உலகோரெல்லாம் நவீன நாகரிகங்களுடன் முன்னேறி வர, நீ மட்டும் இவ்வளவு காட்டுமிராண்டியாக இருக்கிறாயே, நீ எப்போதுதான் திருந்துவது? உன் இழிவு ஒழிய வேண்டாமா? மனித சமுதாயத்தில் நீ மனிதனாக வாழ வேண்டாமா? என்று கேட்டால், எது வேண்டுமானாலும் சொல்லு செய்கிறோம். ஆனால், இது முன்னோர்கள் சொன்னது, அதிலே மட்டும் கை வைக்காதே என்றால் என்ன அர்த்தம்? முன்னோர்கள் என்றால் யார்? ரிஷிகள்தானே உன் முன்னோர்கள்? இந்த ரிஷிகள் எல்லாம் எதற்குப் பிறந்தவர்கள்? இவர்களுடைய யோக்கியதை என்ன? குடத்திற்கு, பன்றிக்கு, கழுதைக்கு, குதிரைக்கு என்றுதானே பிறந்தார்கள்? ஒருவராவது மனிதனுக்குப் பிறந்திருப்பார்களா? ஆபாசம் இருக்கிறது என்று தெரிந்தும் அதைவிட மாட்டேன் என்றால் என்ன பிடிவாதம்? நாரதர் யார்? அவனது வயது என்ன? யாருக்காவது தெரியுமா? எல்லா யுகங்களிலும் இருந்திருக்கின்றான்! கலியுகத்தில் மட்டும் தான் இல்லை. அதுவும் நான் இல்லாதிருந்தால் வந்திருப்பான்.
ஒருவன் 40, 50 லட்சம் வருஷம் என்று இருக்க முடியுமா? ஒன்றரை கோடி வருடம் வாழ முடியுமா? இப்படி ஒரு மனிதன் இதே மாதிரி அயோக்கியத்தனங்களைக் கொண்டிருக்கிறான். மதத்தை எடுத்துக் கொண்டால் சைவ மதத்தினர் உயர்ந்தவர்கள் நாங்கள் என்கிறார்கள். கசாப்புக்கடை மாதிரி வைத்திருக்கிறான் இவன் மதத்தை வைஷ்ணவன் என்று ஒருவன். எல்லாம் அயோக்கியத்தனம் பித்தலாட்டம் பெண்டாட்டியைக் கூட்டிக் கொடுத்தால் மோட்சம் தரும் கடவுள்! நீ அப்படியிருக்க சம்மதிப்பாயா? உன் பெண்டாட்டியை வாடகைக்குக் கேட்டால் நீ என்ன செய்வாய்? சம்மதிப்பாயா? உதைக்க மாட்டாயா? கடவுள் கதை என்ன? பெண்டாட்டியை வாடகைக்கு வாங்கியதும், அடுத்தவன் மனைவிமேல் ஆசைப்பட்டு உதை வாங்கிய கடவுளும்தானே இருக்கிறது?
பிள்ளையார் யோக்கியதை என்ன? சுப்பிரமணியனுடைய யோக்கியதையை பெரிய புராணத்திலே எழுதியிருக்கிறானே - பிள்ளையைக் கொல்லுதல் பக்தியா? சிவன் அவனைக் கொன்றான். இவனை வாயில் விழுங்கினான் என்று இருக்கிறது. ஒழுக்கமானதாக ஏதாவது இருக்கிறதா? அன்பான சிவன் என்கிறாய். எது அன்பானது? கையிலே சூலாயுதம், இடுப்பிலே புலித்தோல், கழுத்தில் பாம்பு, மண்டை ஓடு, பல பேரைக் கொன்றிருக்கிறது; எப்படி அது அன்பான சிவம் ஆக இருக்க முடியும்? கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லீம் மாதிரி கும்பிடு, தொலையட்டும் பரவாயில்லை. இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான கடவுளை வைத்துக் கொண்டு அதற்காகப் பல சடங்குகளை, பூசைகளை இந்த 1959-லேயும் செய்தாயானால் என்ன அர்த்தம்?
நான் சுசீந்திரம் என்ற ஊருக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு பெரிய உற்சவம் நடந்தது. பெரிய கூட்டம், நிறைய போலீஸ், என்னவென்று விசாரித்தேன்.ஒரு நாள் சிவன் பெண்டாட்டியிடம் நாரதர் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இதை கடலையாக வறுத்துக் கொடு என்றானாம். இரும்பை எப்படி கடலையாக வறுக்க முடியும் என்று அவள் கூறிவிட்டாளாம். பிறகு விஷ்ணு பெண்டாட்டியிடமும், பின் பிரம்மாவின் பெண்டாட்டியிடமும் அதுபோலவே அந்த இரும்பைக் கொடுத்து வறுத்துத் தரும்படி கூறினான். இரும்பையாவது வறுப்பதாவது, இது எப்படி முடியும் என்று கூறிவிட்டார்கள். அதற்கு நாரதர், நான் வறுத்து வருகிறேன்; பார் என்று கூறிவிட்டு பூலோகத்திலுள்ள அனுசுயா என்ற பத்தினியிடம் கொடுத்து வறுத்துக் கொடு என்று கூற, அவள் அது என்னவென்று கூடப் பார்க்காமல் சட்டியில் போட்டு வறுத்தாளாம். அது கடலையாகப் பொரிந்து வந்ததாம். அதை நாரதர் சிவன், விஷ்ணு, பிரம்மா முதலியோருடைய பெண்டாட்டிகளிடம் போய், பார் பார் நான் இரும்பை கடலையாக வறுத்து வந்துவிட்டேன் என்றானாம். அதற்கு அவர்கள் ஆச்சரியப்பட்டு அது எப்படி முடிந்தது என்று கேட்க, அதற்கு நாரதர், அந்தம்மாள் பதிவிரதை - அதனால் வறுக்க முடிந்தது என்றானாம். உடனே அவள் பதி விரதையானால் எங்கள் சங்கதி என்ன என்று கோபம் வந்து விட்டதாம் அவர்களுக்கு. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேர்களுடைய பெண்டாட்டிகளும் விசனப்பட்டார்களாம். இதற்குப் பரிகாரம் காண வேண்டுமென்று அவர்கள் புருஷன்கள் வந்ததும், ``நீ கடவுள்! கடவுள் பெண்டாட்டி நாங்கள். எவனோ காட்டி இருக்கிற ஒரு ரிஷியின் மனைவி பெரிய பதிவிரதையாம்; இரும்பை வறுத்து விட்டாள். அவள் பதிவிரதையானால் எங்கள் சங்கதி என்ன?'' என்று கேட்டார்களாம். சரி இப்போ என்ன பண்ணச் சொல்லுகிறீர்கள் என்று கடவுள்கள் கேட்க, ``நீங்கள் போய் அவளையும் அபசாரியாக ஆக்கிவிட்டு வா'' என்றார்களாம். ``பதிவிரதைத் தன்மையை போக்கிவிட்டு வா'' என்றார்களாம். இந்த மூன்று பேரும் (சிவன், விஷ்ணு, பிரம்மா) சாமியார் வேடம் போட்டுக் கொண்டு அந்த ரிஷிபத்தினியிடம் போய், அம்மா பசிக்குது சோறு போடு என்று கேட்டார்கள். அவளும் இவர்களை உட்கார வைத்து இலை போட்டு உணவு பரிமாறினாள். இவர்கள், ``சாப்பிடுகிறோம்; ஆனால், சாப்பிடுவதற்கு முன் ஒரு பூசை செய்வது வழக்கம். அது செய்துவிட்டுத்தான் சாப்பிடுவோம்'' என்று கூறினார்கள். அந்தம்மாள், ``அப்படியா, அதற்கு என்ன வேணும்? தேங்காய், பழம், சூடம் என்ன தேவை கூறுங்கள்'' என்று கேட்டாள். அதற்கு இவர்கள் ``அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; நீ உன் சேலையை அவிழ்த்துவிட்டு நிற்கணும்; நாங்கள் அதைப் பார்த்துவிட்டு சாப்பிடுவோம்'' என்றார்கள்.இவர்கள் சொன்னதுதான் தாமதம், அவள் சிறிதும் தயங்கவில்லையாம். உடனே சேலையை அவிழ்க்க ஆரம்பித்து விட்டாள். அவள் அவிழ்க்க அவிழ்க்க இந்த கடவுள்கள் மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டார்களாம். அவளுடைய பதிவிரதாத்தன்மை அப்படியே அழிவில்லாமல் இருந்துவிட்டதாம். உடனே அந்தக் குழந்தைகளை எடுத்துப் பால் கொடுத்து தொட்டிலில் போட்டு ஆட்டினாள். அவளுடைய புருஷன் வந்தான், பார்த்தான் குழந்தையை. ``நான் போகும்போது சும்மாயிருந்தாய்; வருவதற்குள் ஏது குழந்தை? எப்படி பெற்றெடுத்தாய்?'' என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான். அவள், ``மூன்று பேர் வந்து பிச்சை கேட்டார்கள்; போட்டேன். நான் அம்மணமாக நிற்கணும் என்றார்கள். அப்படியே செய்தேன். அவர்கள் குழந்தைகளாக மாறிவிட்டார்கள்'' என்று நடந்ததைக் கூறினாள். அவன் ரிஷியாயிற்றே. உடனே ஞானக்கண்ணால் பார்த்து விஷயம் தெரிந்து கொண்டானாம். ``நல்ல வேலை செய்தாய். இவர்கள் யார் தெரியுமா? சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகும். உன்னைக் கெடுக்க வேண்டுமென்று வந்திருக்கிறார்கள்! நீ நல்ல வேலைதான் செய்தாய்'' என்று கூறி அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டான். இப்படி உலகத்தில் காத்தல், அழித்தல், பிறத்தல் வேலை பார்க்கிற கடவுள்கள் இவள் வீட்டு தொட்டியில் குவா குவா கொட்டிக் கொண்டிருந்தது. உலகத்தில் வேலைகள் எல்லாம் நின்று போயிற்றாம். மக்கள் தேவர்கள் எல்லாம் திண்டாடுகிறார்கள். ஒன்றும் புரியவில்லை. எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அப்புறம் விஷயம் தெரிந்தது. ரிஷியிடம் ஓடிவந்து ``உலகத்தில் எல்லா வேலையும் நின்று போச்சு, நாங்கள் திண்டாடுகிறோம். மூன்று தேவர்களையும் விட்டு விடுங்கள்'' என்று கேட்டார்கள். ``அதற்கு என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்! அவளைப் போய்க் கேளுங்கள்'' என்று கூறினார். அந்த ரிஷி பத்தினியிடம் போய், ``புத்தி வந்தது, தேவர்களைவிடு'' என்று கெஞ்ச அவளும் சரி என்று தேவர்களாக பழைய உருவாக்கி அனுப்பி விட்டாளாம். இதைத்தான் அன்று அங்கு உற்சவ தினமாகக் கொண்டாடினார்கள். கொஞ்சமாவது அறிவுக்கு இடமிருக்கிறதா இதில்? இந்தக் கதையின் பேரால் ஒரு பண்டிகையா? உற்சவம் கொண்டாடுவதா? வெட்கமாக இல்லை?
கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை. யோக்கியமான ஒரு கடவுளைக் கும்பிடுங்கள்; வேண்டாம் என்று கூறவில்லை. முஸ்லீமும் கிறிஸ்தவனும் சாமி இருக்கு என்கிறான். அவன் எப்படி கூறுகிறான்? ஒரே கடவுள், அவர் அன்பானவர், அருளானவர், யோக்கியமானவர், அவர் ஒன்றும் கேட்க மாட்டார், பிறப்பு இறப்பு இல்லாதவர், உருவமில்லாதவர் என்கிறான்! நீ என்னடா என்றால் பல ஆயிரக்கணக்கான கடவுள்கள் என்கிறாய். எல்லாம் பித்தலாட்டமான கடவுள், அடுத்தவன் பெண்டாட்டிமீது ஆசைப்பட்ட கடவுள், பல பெண்டாட்டிகளையும், சோற்றுப் பூசையும் கேட்கும் கடவுள்! கடவுள் பிறப்பு இறப்பு உடையவர், அவருக்கு பல உருவங்கள் உண்டு என்கிறாய். என்ன அர்த்தம்? நம்மைவிட காட்டுமிராண்டியாக இருந்த முஸ்லீம், கிறிஸ்தவன்கள் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள். வெள்ளைக்காரன் மடையனாக இருந்தான். அக்காள் தங்கையைக் கட்டிக் கொண்டு திரிந்தான். பச்சை மாமிசம் தின்று வந்தான். அவன் இன்று முன்னேற்றமடைந்து கடவுளிடம் போட்டி போடுகிற அளவுக்கு ஆகாய விமானம், கப்பல், எலக்ட்ரிக்லைட், சந்திர மண்டலம் வரை போக ஆரம்பித்து விட்டான். இன்னும் நாம் காட்டுமிராண்டியாக இருந்தால் என்ன அர்த்தம்? இவ்வளவு உற்சவம் பூசை விழா செய்து வந்தால் நாம் சூத்திரன் என்பதை ஒத்துக் கொள்வதாகத்தான் அர்த்தம். இதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். லக்னோவில் நான் இதையெல்லாம் கூறும்போது அங்கு யாரும் இது தப்பு என்ன மறுத்துக் கூறவில்லை. நீங்கள் உங்கள் பகுத்தறிவைச் செலுத்தி அறிவு பெற வேண்டும்.
-------------- தந்தை பெரியார் -"விடுதலை" 04-06-1959
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
27.7.08
இந்துமதம் என்றால் உலகெமெல்லாம் நாறுகின்றதே!
வெளிநாடுகளில் பிரசாரம்
சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டோடு மட்டிலும் நிற்கவில்லை. உள்நாட்டிலும் பல மாகாணங்களிலு; பரவிறறு. தென் ஆப்பிரிக்கா மலேயா இலங்கை பர்மா முதலிய வெளிநாடுகளிலம் பரவிவிட்டது. அங்கெல்லாம் "குடிஅரசும்" "ரிவோல்ட்"டும் ஏராளமாகச் சென்றன. அவ்விடங்களில் சுயமரியாதைச் சங்கங்கள் தோன்றின. வெளிநாடுகளிலிருந்து ஈ.வெ.ராவுக்கும் அவர் தோழர்களுக்கும் அழைப்புகள் வந்தன. நமது நாட்டிலும் மலையாளத்திலும் இவ்வியக்கம் மிகவும் வலுப்பெற்றது. அங்குள்ள ஈழத்தவர்கள் முழுவதும் இதை ஆதரித்து நின்றனர்.
1930 ஜீலை மாதத்தில் திருநெல்வேலியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் ஈ.வெ.ரா. வின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. படத்திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்கியவர் மாஜி உயர்தர நீதிமன்ற நீதிபதியும் S.N.D.P யோகமென்ற ஈழுவர் சங்கத்தின் காரியதரசியுமாகிய திரு.எம். கோவிந்தன் அவர்கள் அச்சமயம் அவர் கூறியதாவது :
"கோட்டயத்தில் நடைபெற்ற S.N.D.P மாநாட்டில் பத்தாயிரத்துக்கு அதிகமான மக்களுக்க இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப்பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு மிக எளியதாகவும் இருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை உணர்வோடு வந்தது. மிக்க கவனத்துடன் மக்கள் கேட்டனர். எனது நாட்டில் (மலையாளம்) சுயமரியாதை விதைகள் முளை கண்டிருந்தவை இவரால் போஸிக்கப்பட்டன.மிகுந்த விளைவு கட்டாயம் ஏற்படும்".
மலையாளத்தில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் எவ்வளவு தூரம் பரவியிருந்தன என்பதை நிருபித்துக்காட்டுவதற்கு இது தக்க சான்றாகும்.இவ்வியக்கத்தின் மூலம் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி பெற்றது கண்டு வைதீகப் பார்ப்பனர்களும் தேசீயப் பார்ப்பனர்களும் திடுக்குற்றனர். எங்களுக்குச் சுயராஜ்யம் வேண்டாம். வெள்ளைக்காரர்களே இருக்க வேண்டும் என்று சொல்லவும் தொடங்கினர். 1929 ஜீலை மாதம் 20 மூம் நாள் திருநெல்வேலி ஜில்லா 2 வது சுயமரியாதை மாநாடு திருநெல்வலியில் நடைப்பெற்றது. அம்மாநாட்டை நடது மாகாண மந்திரியாக இருந்த எஸ். குருசாமி ரெட்டியார் திறந்து வைத்தார். அவர் அச்சமயம் இச்செய்தியைத் தெளிவாக விளக்கியுள்ளார். அது வருமாறு :
"இந்த இயக்கமானது மக்களின் பேதத்தையும் அறியாமையையும் உயர்வு - தாழ்வையும் ஒpப்பதற்கு ஏற்பட்டதாகும். இவைகள் ஒழிந்தால் தானாகவே சுயமரியாதை உதயமாகிவிடும். இவ்வியக்கம் தேசத்தில் எவ்வளவு பரவியிருக்கின்றதென்பதற்குப் பம்பாய் முதலிய வெளி மாகாணங்களில் சுயமரியாதை மாநாடுகள் கூடுவதும் அவற்றில் செய்யப்படும் தீர்மானங்களும் போதிய சான்றாகும்.
நம்மியக்கத்தைக் கண்டு பார்ப்பனர்கள் எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதற்கு சைமன கமிசன் விசாரணையில் பார்ப்பன் கொடுத்த சாட்சியமே போதுமானது. அதாவது தேசீயப் பார்ப்பனரும் வருணாசிரமப் பார்ப்பனருமாகிய ஒரு பிரபல பார்ப்பனர் சைமன கமிசனிடத்தில் சாட்சியம் கொடுக்கும் போது ஸ்தல ஸ்தாபனங்களில் தலைமைப் பதவிகளாகிய ஜில்லா போர்டு தலைவர் முதலிய பதவிகளை வகிக்கத் தகுந்த இந்தியர் நமது நாட்டில் இல்லையென்றும் இந்தியர்கள் சுயராஜ்யத்திற்குத் தகுதியுடையவர்கள அல்லர் என்றும் என் முன்னேயே எடுத்துச் சொன்னார். நான் அவரை இது உம்முடைய அபிப்பிராயமா? என்று கேட்டேன். அவர் சற்றும் வெட்கமின்றி இதுவே தான் இந்நாட்டு எல்லாப் பார்ப்பனர்களுடைய அபிப்பிராயம் என்று சொன்னார். நான் நீங்கள் ஜில்லா போர்டு தலைமைப்பதவி வகித்தீர்களே அப்போது நீங்கள் தகுதியுடையவர்களாக இருந்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அந்த நண்பர் பதில் சொல்ல முடியாமல் விழித்தார். அப்போது திரு. சைமன் அவர்கள் நண்பர் மீது பரிதாபப்பட்டு போதும் விட்டுவிடுங்கள் என்றும் அவரது அபிப்பிராயம் விளங்கிவிட்டது என்றும் சிரித்துக்கொண்டே சொன்னார். சுயராஜ்யமே வேண்டாமென்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு அவர்களைக் கொண்டுவந்து விட்டதற்கக் காரணம் நமது சுயமரியாதை இயக்கமேயாகும்.
1929 இறுதியில் மலேயா நாட்டுத் தமிழர்கள் ஈ.வெ.ரா. வை அந்நாட்டிற்கு அழைத்தனர். இச்சமயம் "குடிஅரசும்" "ரிவோல்ட்"டும் சென்னையில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. மலேயா நாட்டில் ஈப்போ நகரில் தமிழர் சீர்திருத்தச் சங்க மாநாடு உன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநாட்டைத் திறந்து வைப்பதற்காக ஈ.வெ.ரா. அழைக்கப்பட்டார். அந்நாடு முழுவதும் சுற்றுப்பிராயாணம் செய்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.இதன் பொருட்டு அவருடைய தோழர்களும் அழைக்கப்பட்டனர். 1929 டிசம்பர் 15 ஆம் நாள் ஈ.வெ.ரா. வும் நாகம்மையாரும் தோழர்கள் எஸ். ராமநாதன், அ. பொன்னம்மபலனார், சாமி சிதம்பரனார், சி.நடராஜன் முதலியவர்களும் நாகையில் கப்பலேறினர்.
அந்நாட்டிலும் தேசீயத்தின் பெயரால் சிலர் கொள்ளையடித்து வந்தனர். மதத்தின் பெயரால் ஏமாற்றி வந்தனர் இக்குழுவினர் ஈ.வெ.ராவின் வருகை கேட்டுத் திகைத்தனர். தங்கள் பிழைப்பில் மண்விழுந்துவிடும் என்று நடுங்கினர். தங்கள் சூழ்ச்சிகள் வெளிப்பட்டுவிடும் என்று கலங்கினர். தங்கள் சூழ்ச்சிகள் வெளிப்பட்டுவிடும் என்று கலங்கினர். இவர்கள் ஈ.வெ.ரா.வையும் அவர் தோழர்களையும் மலேயாவுக்கு வராமல் தடுக்கவேண்டுமென்று பலமான முயற்சி செய்தனர். மலேயா அரசாங்கத்தாரிடம் இராமசாமியும் அவர்கள் தோழர்களும் பெரிய புரட்சிக்காரர்கள் காங்கிரசுக்காரர்கள் பொதுமக்களைக் கலகம் பண்ணும்படி தூண்டுகிறார்கள். அவர்கள் இங்கு வந்தால் அரசாங்கத்திற்கு ஆபத்து. பொதுமக்களிடையில் குழப்பம் உண்டாகும். ஆதலால் அவர்களை இறங்கவிடாமல் கப்பலிருந்தபடியே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று முறையிட்டனர். இம்முறையீடு பலிக்கவில்லை. ஆயினும் இக்கூட்டத்தார் சும்மா விடவில்லை. தேசத் துரோகிகள் வருகின்றார்கள். நாஸ்திகர்கள் வருகின்றார்கள். மதத்துரோகிகள் வருகின்றார்கள். அவர்களை ஒருவரும் வரவேற்கக் கூடாது. தமிழ்மக்கள் ஒருவரும் அவர்கள் சொற்பொழிவுகளைக் கேட்கக்கூடாது. தமிழ்மக்கள் ஒருவரும் அவர்களுடைய கூட்டங்களுக்கு செல்லக்கூடாது என்று நாடு முழுவதும் விளம்பரம் செய்தார்கள். இக்காரணத்தால் ஈ.வெ.ரா வையும் அவர் தோழர்களையும் வரவேற்க எண்ணற்ற மக்கள் கூடிவிட்டனர். இவர்கள் பினாங்கு துறைமுகத்தில் இறங்கும் போது 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அங்குக் கூடியிருந்தனர்.
இறங்கியதும் இவர்களுக்கு பல சங்கத்தினர் மாலைகள் சூட்டினார்கள். வரவேற்பிதழ்கள் வாசித்தனர். இந்துக்கள் முஸ்லீம்கள் அனைவரும் இவ்வரவேற்பில் கலந்திருந்தனர். பாமர மக்கள் பலர் அறியாமையால் ஈ.வெ.ரா. வின் பாதத்தில் விழுந்து வணங்கினர். அவர் நடந்து சென்ற அடிச்சுவட்டைக் கண்களில் ஓத்திக் கொண்டனர். பினாங்கில் வெளியான பத்திரிகைகள் எல்லாம் இவ்வரவேற்பைப் பாராட்டி எழுதின. இதுவரை எந்த இந்தியத் தலைவர்களுக்கும் இத்தகைய வரவேற்பு நடைபெற்றதில்லை என்று குறித்திருந்தன. இவ்வரவேற்பைக் கண்டவுடன் எதிரிகள் நடுநடுங்கினார்கள். இதில் கலந்து கொள்ளாதிருந்தவர்கள் எல்லோரும் திகைப்புற்றார்கள். விலகியிருந்த ஒருசில இந்து முஸ்லீம் கனவான்களும் பிறகு கலந்து கொண்டனர். 20-10-1929 ல் இவர்கள் பினாங்கில் இறங்கினர். அன்று மாலையே அதைவிட்டுப் புறப்பட்டு கோலப்பிறை கோலாகஞ்சார் முதலிய ஊர்களுக்குச் சென்றுவிட்டு 23-12-1929 ல் ஈப்போவுக்குச் சென்றனர். அங்குத் தமிழர் சீர்திருத்த மாநாடு நடைப்பெற்றது. மாநாட்டை ஈ.வெ.ரா. திறந்து வைத்தார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர். அந்த மாநாட்டில் தமிழர்கள் முஸ்லீம்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் யாழ்பாணிகள் அனைவரும் கலந்திருந்தனர். ஈப்போ மாநாடு முடிந்த பின் நேரே சிங்கப்பூர் சென்றார்கள். சிங்கப்பூரில் ஈ.வெ.ரா. வுக்கு நடந்த வரவேற்பு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அங்குப் பல பொதுக்கூட்டங்கள் நடந்தன. ஈ.வெ.ரா. சிங்கப்பூருக்குச் சென்ற 26-12-1929 ல் மலேயா இந்திய சங்க மாநாடு நடைப்பெற்றது. அதற்கு ஈ.வெ.ரா. அழைக்கப்பட்டிருந்தார். இவரும் அங்கே சென்று அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி ஒரு விரிவுரை செய்தார்.
"இந்த மாநாடு எங்கள் நாட்டுக் காங்கிரசைப் பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தியோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக்கும் பொதுமக்களின் நன்மைக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தும்படியான மாதிரியில் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு மார்க்கம் மக்களை உன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுயமரியாதையையும் உண்டாக்குவதே தவிர உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டும் என்பதல்லவென்பதே எனது அபிப்பிராயம். இந்தியர்கள் என்பவர்களாகிய நாம் ஒரு மதம் ஒரு ஜாதி ஒரு வகுப்பு ஒரு கொள்கை ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்றுபடுத்திக் கொண்டாலொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது".
இவ்வாறு அங்குப் பேசினார். இதைப் பெரும்பாலான மக்கள் வரவேற்றனர். அவ்வூர் நகர மண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதற்கு நகரப் பெரியார்களில் ஒருவரான பார்ஸ்டன் என்னும் ஒரு ஆங்கிலேயர் தலைமை தாங்கினார். அம்மண்டபத்தின் மாடியில் நான்னு புறங்களிலும் மக்கள் நிரம்பியிருந்தனர். ஊசி விழுந்தாலும் கணீர் என்று ஒலி கேட்கும். அவ்வளவு அமைதி குடிகொண்டிருந்தது. அக்கூட்டத்தில் ஈ.வெ.ரா. பெசும் போது அமெரிக்க மாதாகிய மிஸ். மேயோ என்பவர் இந்தியாவைப்பற்றி எழுதியிருக்கம் ஊழல்களைக் குறிப்பிட்டார். அத்தகைய ஊழல்களையெல்லாம் போக்குவது தான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் என்று சொல்லிக் கொண்டு வந்தார். அப்பொழுது ஒருவர் கேள்வி கேட்டார். ஈ.வெ.ரா.வும் தக்க விடை கூறினார்.
கேள்வி : மேயோ எழுதியதன் கருத்து என்ன?
பதில் : கருத்து என்ன என்பதை நாம் பிறகு கவனிப்போம். அந்தம்மாள் எழுதியிருப்பவை உண்மையா? பொய்யா? என்று நாம் முதலில் பார்க்க வேண்டும்.
கேள்வி : காந்தியார் அந்தம்மாளைச் சாக்கடைப் பரிசோதனை என்று சொல்லியிருக்கிறாரே?
பதில் :காந்தியார் சாக்கடைப் பரிசோதனை என்று சொல்லியது உண்மையாயிருந்தாலும் சாக்கடை இல்லாத இடத்தையாவது சிங்காரவனத்தையாவது காட்டி அவற்றைப் பார்க்க அந்தம்மாளைக் கூப்பிட்டிருக்கலாம். அப்படிக் காட்டுவதற்கு ஆதாரமில்லாததால் தான் காந்தியார் இந்தியர்களைப் பார்த்து மேயோ எழுதிய புத்தகத்தை மறந்துவிடாமல் எப்போதும் ஒரு பக்கத்தில் வைத்திருங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதன் கருத்து சாக்கடையைச் சுத்தம் செய்யுங்கள் என்பதேயாகும்.
கேள்வி : வேறு பலர் மறுப்பு எழுதியிருக்கிறார்களே?
பதில் : மேயோ சொன்னவற்றை யாரும் முழுதும் மறுக்கவில்லை. மிஸ். மேயோ நாட்டிலும் இவ்விதம் இல்லையா என்றுதான் எழுதியிருக்கிறார்கள். நீ மாத்திரம் யோக்கியனா என்றால் இதற்குப் பெயர் மறுப்பு ஆகுமா? ஓப்புக் கொள்வதாகும்.
இவ்வாறு அவர் கேள்விகளுக்கு விடை கூறி மேயோ கூற்று ஒவ்வொன்றையும் எடுத்துக் காட்டி பேசினார். கேள்வி கேட்டவர் வெட்கமடைந்தார்.
மலேயா சுற்றுப்பிரயாணம் ஒரு மாதத்திறகு மேல் இல்லை. டிசம்பரில் சென்று ஜனவரியில் திரும்பினார். இக்குறைந்த காலத்தில் அந்நாடெங்கும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர், தைப்பிங், மூவார், ஜோகூர்பார், பத்துபகார், மலாக்கா, தம்பின் கோலப்பிறை, கோலாகுபுதஞ்சமாலிம், சுங்கைகுருட், செலுக்கான்சர். கம்மார் கோலா கஞ்சார், சுங்கபட்டாணி முதலிய ஊர்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. காலைப் பொதுக்கூட்டம் ஒரு ஊரில். மாலைப் பொதுக்கூட்டம் மற்றோர் ஊரில் நடுப்பகலில் ஒரு ஊர் இரவில் வேற்றூர். நள்ளிரவிலும் பொதுக்கூட்டம் பொதுககூட்டங்களுக்கு கணக்கில்லை. ஓரே காலத்தில் இரண்டு பொதுக் கூட்டங்கள் வெவ்வேறு ஊர்களில் நடைப்பெறும். பெரும்பாலும் பொதுக்கூட்டங்களில் தோழர்கள் ஈ.வெ.ரா. எஸ்.ராமநாதன் அ.பொன்னம்பலனார் சாமி சிதம்பரனார் சி.நடராஜன் என்.பி.காளியப்பன் முதலியவர்கள் பேசுவார்கள். பொதுக்கூட்டங்களுக்குச் சீனர்கள் ஜப்பானியர் மலேயர்கள் திரளாக வந்தனர். இந்தியப் பெரியாரைப் பார்க்க வேண்டுமென்பதே இவர்கள் ஆவர். செல்வாக்குள்ள தமிழர்கள் ஈ.வெ.ரா.வைத் தனியாகச் சந்தித்துப் பேசுவார்கள். பத்திரிகைப் பிரதிநிதிகளும் சந்திப்பார்கள். அவர்கள் சுயமரியாதைக் கொள்கைகளைப் பற்றி வாதம் புரிவார்கள். அவர்கள் கேள்விகளுக்கெல்லாம் தக்க விடை கூறுவார். அனைவரும் மகிழ்ச்சியுடன் திரும்புவார்கள்.
மலேயாவில் உள்ள தமிழர்களிடத்தில் நம் நாட்டைப் போல சாதிச் சண்டைகள் இல்லை. மதப்போராட்டங்கள் இல்லை. மூடப் பழக்க வழக்கங்களும் குறைவு. பல தலைமுறைகளுக்கு முன் குடியேறிய அந்நாட்டிலேயே நிலையாக வாழும் தமிழர்களும் இருக்கின்றனர். அங்குள்ள சீனர்கள் ஜப்பானியர்கள் ஆங்கிலேயர்கள் மு);லீம்கள் முதலியவர்களின் பழக்கத்தால் தமிழர்களும் ஓரளவு ஓற்றுமை பெற்றுள்ளனர். ஆதலால் அவர்களுக்குச் சுயமரியாதைக் கொள்கைகள் புதியவையல்ல. சாதிப் போர் சமயவெறுப்பு வீண் சடங்குகள் ஒழிய வேண்டும் என்பது அவர்களுக்கு முற்றிலும் உடன்பாடு. இவை ஓரளவு பழக்கத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பவையே. இந்தியாவில் இக்கொடுமைகள் நிலைத்துள்ளன. இவற்றை ஒழித்துத் தமிழர்களை ஒன்றுபடுத்தவே சுயமரியாதை இயக்கம் பாடுபடுகின்றது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால் அவர்கள் இவ்வியக்கத்துக்குப் பேராதரவு தந்தனர்.
மலேயா நாட்டில் ஈ.வெ.ரா. வின் சொற்பொழிவைக் கேட்பதற்கென ஓவ்வொரிடத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவரைப் பார்ப்பதற்கெனப் பலர் திரண்டனர். இராமசாமியார் என்ற பெரைக் கேட்டவுடன் பாமர மக்கள் பலர் அவரை ஒரு பெரிய சாமியார் என்றே நினைத்துக் கொண்டனர். இந்த இந்தியச் சாமியாரைத் தரிசிக்க வேண்டுமென்று அவாகளில் பலர் வந்தனர். இதற்கு உதாரணமாக அங்கு நடந்த ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியைக் கூறுகிறோம்.
ஒரு சிறு கிராமத்தில் மாலை 6 மணிக்கு ஒரு பொதுக்கூட்டம் போடப்பட்டிருந்தது. சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். பொதுக்கூட்டம் முடிநதுவிட்டது. இரவுச் சாப்பாடும் முடிந்தது. நல்ல நிலவு. தெருவில் நாற்காலிகள் போட்டு ஈ.வெ.ரா. வும் தோழர்களும் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். இச்சமயம் சுமார் 40 வயதுள்ள ஒரு பெண்மணி சுமார் 20 வயதுள்ள தன் பெண்ணுடன் வந்தாள்.
இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சாமியார் எங்கே? என்று தேடினாள். அங்கிருந்தவர்கள் சிரித்துக் கொண்டு இராமசாமியாரைக் காட்டினர். அவள் உடனே தன் பெணணுடன் வந்து அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினாள். எழுந்தாள் சுவாமி நான் பத்துக் கல்லுக்கு அப்பாலிருந்து வருகிறேன். ஆதலால் நேரமாகிவிட்டது. உங்கள் உபதேசத்தைக் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை. இவள் என் பெண். (தன் பெண்ணைக் காட்டி) இவளுக்குக் கல்யாணமாகி நான்கு வருஷங்கள் ஆயின. இன்னும் பிள்ளை பிறக்கவேயில்லை. நீங்கள் ஏதாவது நல்வாக்குக் கொடுக்க வேண்டும். தங்கள் வரத்தால் தான் பிள்ளை பிறக்க வேண்டும் என்று பரிதாக் குரலிற் கூறினாள்.
இதைக் கேட்டதும் பக்கத்திலுள்ளவர்கள் நகைத்தனர். ஈ.வெ.ரா.வும் நகைத்தார். அப்பெண்மணியின் அறியாமைக்க இரங்கினார். அவளை நோக்கி அம்மா நான் சாமியாரல்ல வெறும் ஆசாமிதான். எனக்கே30 வருஷமாகப் பிள்ளையில்லை. நான் சொல்வதை நம்பாவிட்டால் இந்த அம்மாவைக் ( நாகம்மையாரைக் காட்டி) கேட்டுப்பார். தனக்கே பிள்ளையில்லாவிட்டால் என்ன? இங்கிருக்கும் வரையிலும் நன்றாகச் சம்பாதித்துச் சாப்பிடுங்கள். சிக்கனமாகச் செலவு செய்து மீதம் பிடியுங்கள். அப்பொழுதுதான் இந்தியாவுக்குப் போனால் சுகமாயிருக்கலாம் என்றார். அப்பெண்பிள்ளை சாமி நீங்கள் சொல்லுவதை நான் நம்பமாட்டேன். பெரியவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள். ஏழையின் மேல் பெரிய மனது வைத்து ஆசிர்வாதம் பண்ணவேண்டும் என்று பிடிவாதம் பண்ணினாள். இறுதியில் அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி சரி உன் மகளுக்கு இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிள்ளைக் கவலை வேண்டாம். பிறகு நல்ல ஆண் குழந்தை பெற்றுச் சுகமாக வாழ்வாள் என்று சொன்னார். அவளும் சமாதானமடைந்து சென்றாள். நண்பர்கள் யாவரும் வேடிக்கையாகப் பரிகாசஞ் செய்தனர்.
மலேயா நாட்டில் இவர் சொற்பொழிவைக் கேட்ட எதிரிகள் கூட சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டனர். ஓரிடத்திலாவது கூட்டத்தில் குழப்பம் நேரவில்லை. ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெரிய மனிதர்கள் என்பவர்கள் வந்து கூடியிருப்பார்கள். சில சமயங்களில் ஈ.வெ.ரா. விடம் மதங்களைப்பற்றி மிகுதியாகக் கண்டிக்காமலிருந்தால் நலம் என்று யாராவது சொல்லுவார்கள். இவருக்கு எப்பொழுதும் முக தாட்சண்யம் அதிகம். தமது பரம்பரைப் பகைவரானாலும் நேரில் கண்டுவிட்டால் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வார். ஆதலால் அப்படிப்பட்ட சமயங்களில் ஈ.வெ.ரா. வின் சொற்பொழிவு வழவழா கொழகொழா என்றிருக்கும். தமக்கும் தம் தோழர்களுக்கும் அளித்த வரவேற்பைப் புகழ்ந்து கொண்டிருப்பார். விருந்தைப் பாராட்டிக் கொண்டிருப்பார். சமூக விஷயங்களைப் பற்றிச் சொற்களை அடுக்கிக் கொண்டே போவார். அவருடைய உண்மையான கருத்து எளிதில் வெளிப்படாது. சொற்பொழிவில் உயிர் இராது வீரம் இராது. கூட்டத்தில் எதிர்ப்பு இருப்பதாகத் தெரிந்தால் தான் நன்றாகப் பேசுவார். கேள்விகள் கேட்டுவிட்டால் போதும். விரிவுரை வீரவுரையாகிவிடும். எதிரிகள் வெட்கித் தலைகுனிவார்கள். எந்த இடத்திலும் இதுவரையிலும் இவர் தம்மைக் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறாமல் போனதேயில்லை. பதில் ஆணித்தரமாக இருக்கும். இதற்கு ஓர் உதாரணத்தைக் காட்டுகின்றோம்.
1928ம் ஆண்டில் சிதம்பரத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பேசினார். அச்சொற்பொழிவில் மதத்தைப்பற்றியும் அதில் உள்ள ஊழல்களைப் பற்றியும் பேசும்போது ஒரு பார்ப்பனர் வந்து கேள்வி கேட்டார். அக்கேள்விகளும் அவற்றிந்த இவரளித்த விடைகளும் இவை. இந்தக் கேள்வி இவர் மீது பொது ஜனங்களுக்கு வெறுப்பு வரட்டும் என்பதற்கு ஆகவே.
நீங்கள் சாமியைக் கல் என்று சொன்னீர்களே! இது சரியா? என்று கேட்டார்.
அதற்கு ஈ.வெ.ரா. உடனே ஆம் வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள் காட்டுகிறேன் (என்று மேஜை மேலிருந்த கைத்தடியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார் கோவில்பக்கம். எல்லோரும் கைகொட்டி நகைத்தனர்.
மற்றொரு பார்ப்பனர் : ஆனால் அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறது என்றார். ஈ.வெ.ரா. அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த மந்திர உச்சாடனத்துக்கு உண்மையில் சக்தி இருக்குமானால் இதோ எதிரில் இருக்கும் உயிருள்ள மனிதருக்கும் கொஞம் அதே மந்திரத்தை உபதேசம் செய்து அவரை அந்தக் கல்லுச் சாமிக்குப் பக்கத்திலிருந்து பூசனை செய்யும்படியாவகவாவது செய்யக் கூடாதா? என்றார்.
முதலில் கேட்டவர்: இந்துமதம் என் ஒன்று இல்லையென்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். நீங்களாவது ஒரு பது மதம் சொல்லக் கூடாதா? என்றார்.
ஈ.வெ.ரா: நான ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும் உண்மையாகவும் மற்ற மக்களிடத்தில் அன்பாகவும் சம பாவிப்பாகவும் பரோபகார எண்ணத்துடனும் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்று தான் சொல்லுகிறேன் என்றார்.
கேட்டவர்: இருக்கின்றதை ஒழிப்பதானால் மற்றொன்றைக் காட்ட வேண்டாமா? என்றார்.
ஈ.வெ.ரா. வீட்டிற்குள் அசிங்கம் இருக்கின்றது நாற்றம் அடிக்கிறது எடுத்து எறியுங்கள் என்றால் அதற்குப் பதில் அந்த இடத்தில் என்ன வைக்கின்றது என்று கேட்பது சரியாகுமா? இந்துமதம் என்றால் உலகெமெல்லாம் நாறுகின்றதே! அந்தத் துர் நாற்றம் போய்விட்டால் அதுவே போதம் என்றார்.
மேலே கூறியது போல் ஈ.வெ.ரா. பிறர் தாட்சண்யத்திற்குக் கட்டுப்பட்டு அதிக விறுவிறுப்பின்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய தோழர்கள் சும்மா இருப்பதில்லை. அவர்களே சில நல்ல கேள்விகளை எழுதுவார்கள். எதிரிகள் கேட்பது போல் ஈ.வெ.ரா.விடம் அனுப்பிவிடுவர்கள் பிறகு சொல்லவா வேண்டும்! நீர் வீழ்ச்சி தான் ! அறிவு வெள்ளந்தான்! இந்நிகழ்ச்சி மலேயா நாட்டில் பல இடங்களில் நடைப்பெற்றது.
ஈ.வெ.ரா.வின் மலேயா சுற்றுப்பயணத்தால் பெரும் பயன் விளைந்ததது. அந்நாட்டுத் தமிழர்கள் ஒற்றுமையடைந்தனர். சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி முற்றும் நன்றாக உணர்ந்தனர். அவர்களிடம் கிளர்ச்சியும் சமூகச் சீர்திருத்தத்தில் அளவு கடந்த ஆவலும் தோன்றின.
மலேயா நாட்டில் ஈ.வெ.ரா. வின் சுற்றுப்பிராயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் முதன்மையானவர்கள் பலர். சிங்கப்பூரிலும் இப்பொழுது தமிழ்முரசு என்னும் பத்திரிகையை நடத்தி வரும் தோழர் ஜி.சாரங்கபாணி, ஈப்போ ஆர்.ஆர்.அய்யாறு, தாமேதரம் சுப்பையா சுவாமி அற்புதானந்தா முதலியவர்கள் சுற்றுப்பிராயாணம் முடியும் வரையிலும் கூடவே இருந்தனர். ஈ.வெ.ரா. வும் அவரது தோழர்களும் 1930 ஜனவரி 16 ல் இந்தியாவுக்குத் திரும்பினர்.
-------------- சாமி.சிதம்பரனார் எழுதிய "தமிழர் தலைவர்" என்ற நூலில் இருந்து... பக்கம் : 95 -104
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
26.7.08
தாலி அகற்றும் அரிய நிகழ்வு
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
காணொளி
25.7.08
'இந்து இந்தியா' முடியாத காரியம்
லாகூரில் நடைபெற்ற முஸ்லிம்லீக் மாநாட்டில் இந்நாட்டில் உள்ள இந்து - முஸ்லிம் பிரச்சினை உள்ளபடியே தீர்க் கப்பட வேண்டுமானால் இந்தியா முஸ் லிம் இந்தியா என்றும், மற்ற இந்தியா என்றும் பிரிக்கப்பட்டால்தான் முடியும் என முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் ஜின்னா அவர்கள் கூறியதை ஆதரித்து நீதிக்கட்சித் தலைவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
`முஸ்லிம் இந்தியா என்றும், இந்து இந்தியா என்றும் பிரிக்க வேண்டுமென ஜனாப் ஜின்னா கூறியுள்ள திட்டம் எனக்கொரு ஆச்சரியத்தையும் தரவில்லை. ஏனெனில் நான் இந்தியாவி லிருந்து திராவிட நாடு தனியே பிரிக்கப்பட வேண்டுமென்று கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வற்புறுத்தி வருகிறேன். ஆரிய ஆதிக்கமிக்க காங்கிரஸ் ஆட்சியின் இரண்டாண்டு அனுபவம் ஆரியரல்லாதார் உள்ளத்திலே திகைப்பை உண்டாக்காமல் இருந்திருக்க முடியாது.
இதனாலேயே பிரிந்து கொள்ள வேண்டுமென எண்ணம் உண்டாகி விட்டது. முஸ்லிம்கள், தனிநாட்டைப் பிரித்துக் கொண்டு தனி ஆட்சி நடத்த விரும்புவது இயற்கையாக எழும்பும் எண்ணமேயாகும். ஜனாப் ஜின்னா இந்தப் பிரிவினைக்குக் கூறும் காரணங்கள் மறுக்க முடியாதன. அவரது கோரிக்கையும் நியாயமானதே. காந்தியார் சதாகாலமும், பச்சையாகவே தாம் விரும்பும் சுயராஜ்யம், ராமராஜ்யந்தான் என்றும், தமது வாழ்க்கையின் லட்சியமே இந்து மதத்தைப் புனருத்தாரனம் செய்வது தானென்றும் கூறிக் கொண்டிருக்க, தோழர் சவர்க்கார் போன்ற இந்துமகாசபைத்தலைவர்கள் இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று போர் முழக்கம் செய்து கொண்டுமிருக்கக் கண்டபிறகு முஸ்லிம்கள் கைகட்டி, வாய் பொத்தி இருப்பார்கள் என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்?
இந்து - முஸ்லிம் பிரச்சினை தீர்க்கப்பட முடியாததோ என்று திகைக்கும் அளவில் இருக்கிறது. இதனைத் தீர்த்துக் கொள்ள ஜனாப் ஜின்னாவின் திட்டமே அறிவு ததும்புவது, நான் ஜனாப் ஜின்னாவின் கோரிக்கையை ஆதரிப்பதோடு மற்றொரு முக்கியமான அம்சத்தையும் வற்புறுத்த விரும்புகிறேன். முஸ்லிம்கள் முஸ்லிம் நாடு என இந்தியாவில் தனி நாடு பிரித்துக் கொள்ள முடியும். ஆனால், இந்துக்களால் முடியாது. ஏனெனில் இந்துக்கள் என்று கூறப்படும் தொகுப்பில் பலப்பல வர்க்கத்தார் உள்ளனர்.
நாலுகோடிக்கு மேலுள்ள திராவிடர்களுக்கும் இந்துக் கொள்கை கோட்பாடு என்று கூறப்படும் பார்ப்பனியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. மொழி, கலை, சரிதம், மார்க்கம், பழக்க வழக்கம் ஆகியவைகளில் ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் தீர்மானமான மாறுபாடுகள் உள்ளன.
கடவுள்கள்கூட வேறு வேறு! எனவே முஸ்லிம் இந்தியா என ஜனாப் ஜின்னா கேட்பதுபோலவே, தமிழ், ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி வட்டாரங்களைக் கொண்டு திராவிட நாடு பிரிக்கப்பட வேண்டுமென நாம் கேட்க உரிமை இருக்கிறது. இந்து இந்தியா என பொதுவாகக் கூறுவது முடியாத காரியம். அதை ஒட்ட வைத்துக் காட்டினால் அது வெறும் பார்ப்பனிய ஏகாதிபத்தியமாகவே இருக்கும். அதனை திராவிடர் கடுமையாக முடிவு வரை எதிர்ப்பர். எனவே இந்தியாவிலிருந்து திராவிட நாட்டைத் தனியே பிரித்து விடுவது மிக அவசியமாகவும் அவசரமாகவும் செய்ய வேண்டியதாகும். நான் இதனை 1938 டிசம்பர் 28-இல் சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டுத் தலைமையுரையில் கூறியுள்ளேன்.
------------------------- தந்தை பெரியார் - 'விடுதலை' 29.3.1940
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
மத நம்பிக்கை என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்தால்உருப்படியான செயலையும் எவராலுமே செய்ய முடியாது
ராமன் பாலம் சர்ச்சை!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மீண்டும் மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை இப்பொழுதுள்ள 6 ஆம் வழியில் நிறைவேற்றக் கூடாது என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவும், சுப்பிரமணியசாமியும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
வழக்கைத் தொடுத்தவர்கள் எடுத்து வைக்கும் விவாதத்தில் அறிவியலோ - பொருளாதார காரணங்களோ, அறிவார்ந்த சிறப்பான காரணங்கேளா இடம்பெறவில்லை.
இந்துக்களின் மத உணர்வை மய்யப்படுத்தி, அந்த உணர்வுக்கு எதிரானது என்று கூறி வருகின்றனர்.
அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் நாரிமன் - அந்த நம்பிக்கை வழி பார்த்தாலும் - மதம் சார்ந்த கண் ணோட்டத்தில் பார்த்தாலும்கூட, ராமன் கட்டியதாகக் கூறப் படும் பாலத்தை அந்த ராமனே இடித்துவிட்டான் என்று கம்பராமாயணமும், பத்ம புராணமும் கூறியுள்ளதை எடுத்துக்காட்டி, உடைக்கப்பட்ட பாலத்தை யார் வழிபட முடியும்? ராமன் அம்பு எய்தி மூன்றாக உடைத்துவிட்டான் என்று அவர்கள் நம்பும் புராணங்களே கூறியுள்ள நிலையில், நினைவுச் சின்னம் என்ற பேச்சுக்கு இடம் எங்கே என்ற விவாதம் அர்த்தமிக்கது. இதற்கு வழக்குத் தொடுத்த வர்கள் சார்பில் என்ன பதில் கூறக்கூடும்? கம்பராமாயணம் பொய், பத்ம புராணம் உண்மைக்கு மாறானது என்று சொல்லப் போகிறார்களா? அப்படி சொல்லும் பட்சத்தில் புராணம், இதிகாசம் என்பவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிற அரசு தரப்பின் விவாதத்துக்கு வலு சேர்த்ததாக ஆகிவிடாதா?
அறிவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வழி காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன்வழி பார்த்தாலும்கூட, புராண, இதிகாசத் தகவல்களை, ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாதே! அறிவியல் ரீதி என் பதற்கு விளக்கம் - எதையும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்பதுதானே!
ராமன், சீதை போன்ற பாத்திரங்கள் வரலாற்றுப் பாத்திரங்களல்ல - புலவர்களின் கற்பனைப் படைப்புகள் - அதுவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கற்பிக்கப்பட்டவை. இந்தக் கால வளர்ச்சிக்கும், சூழலுக்கும் அவற்றைப் பொருத்திப் பார்க்க முற்படுவது கண்டிப்பாக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை தானே!
அரசியல் ரீதியாக அணுகவேண்டும் என்று நீதிமன்றம் கூறியதற்கு என்ன பொருளோ?
அப்படி அரசியல் ரீதியாக அணுகினாலும்கூட - 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு இப்பொழுது மேற்கொண்டுள்ள இதே ஆறாவது தடத்தில் தான் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று அதிகாரப் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளதை அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளாரே!
ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அது விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் சரியா? பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அதன் பயன் என்ன? என்று பார்க்க வேண்டுமே தவிர, புராணங்களில் என்ன கூறப்பட்டுள்ளது? மக்களின் மத நம்பிக்கை இந்தப் பிரச்சினையில் எத்தகையது? என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்தால், எந்த உருப்படியான செயலையும் எவராலுமே செய்ய முடியாது.
பூமிக்குப் பூமாதேவி - மலைக்குப் பார்வதி என்றும், தண்ணீருக்குக் கங்காதேவி என்றும், காற்றுக்கு வாயு பகவான் என்றும், நெருப்புக்கு அக்னி பகவான் என்றும், பன்றி முதல் ஆமை வரை உள்ள உயிர்கள் கடவுளின் அவதாரங்கள் என்றும், மனிதர்கள் பெரும்பாலும் உண்ணுகின்ற மீன் மச்ச அவ தாரம் என்றும், புராணங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் எந்தத் திட்டத்தையுமே மேற்கொள்ள முடியாதே!
மத உணர்வு அடிப்படையில் புராணங்களை ஆதாரப் படுத்தி வழக்குத் தொடுக்கிறவர்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள் என்பதும், இத்தகைய வழக்குகளைக் கூட - இருப்பதிலேயே அதிக அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம்கூட அனுமதிப்பதும், காலங்கடத்துவதும் பெருமைக்கு உரியதுதானா? என்பது அறிவார்ந்த வினாவாகவே இருக்க முடியும். காலதாமதம் திட்டத்தின் செலவினத்தை மேலும் உயர்த்திக்கொண்டே போகும் என்பதையும் நீதிமன்றங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
------------- 25-7-2008 -"விடுதலை" தலையங்கம்
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மீண்டும் மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை இப்பொழுதுள்ள 6 ஆம் வழியில் நிறைவேற்றக் கூடாது என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவும், சுப்பிரமணியசாமியும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
வழக்கைத் தொடுத்தவர்கள் எடுத்து வைக்கும் விவாதத்தில் அறிவியலோ - பொருளாதார காரணங்களோ, அறிவார்ந்த சிறப்பான காரணங்கேளா இடம்பெறவில்லை.
இந்துக்களின் மத உணர்வை மய்யப்படுத்தி, அந்த உணர்வுக்கு எதிரானது என்று கூறி வருகின்றனர்.
அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் நாரிமன் - அந்த நம்பிக்கை வழி பார்த்தாலும் - மதம் சார்ந்த கண் ணோட்டத்தில் பார்த்தாலும்கூட, ராமன் கட்டியதாகக் கூறப் படும் பாலத்தை அந்த ராமனே இடித்துவிட்டான் என்று கம்பராமாயணமும், பத்ம புராணமும் கூறியுள்ளதை எடுத்துக்காட்டி, உடைக்கப்பட்ட பாலத்தை யார் வழிபட முடியும்? ராமன் அம்பு எய்தி மூன்றாக உடைத்துவிட்டான் என்று அவர்கள் நம்பும் புராணங்களே கூறியுள்ள நிலையில், நினைவுச் சின்னம் என்ற பேச்சுக்கு இடம் எங்கே என்ற விவாதம் அர்த்தமிக்கது. இதற்கு வழக்குத் தொடுத்த வர்கள் சார்பில் என்ன பதில் கூறக்கூடும்? கம்பராமாயணம் பொய், பத்ம புராணம் உண்மைக்கு மாறானது என்று சொல்லப் போகிறார்களா? அப்படி சொல்லும் பட்சத்தில் புராணம், இதிகாசம் என்பவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிற அரசு தரப்பின் விவாதத்துக்கு வலு சேர்த்ததாக ஆகிவிடாதா?
அறிவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வழி காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதன்வழி பார்த்தாலும்கூட, புராண, இதிகாசத் தகவல்களை, ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாதே! அறிவியல் ரீதி என் பதற்கு விளக்கம் - எதையும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்பதுதானே!
ராமன், சீதை போன்ற பாத்திரங்கள் வரலாற்றுப் பாத்திரங்களல்ல - புலவர்களின் கற்பனைப் படைப்புகள் - அதுவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கற்பிக்கப்பட்டவை. இந்தக் கால வளர்ச்சிக்கும், சூழலுக்கும் அவற்றைப் பொருத்திப் பார்க்க முற்படுவது கண்டிப்பாக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை தானே!
அரசியல் ரீதியாக அணுகவேண்டும் என்று நீதிமன்றம் கூறியதற்கு என்ன பொருளோ?
அப்படி அரசியல் ரீதியாக அணுகினாலும்கூட - 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு இப்பொழுது மேற்கொண்டுள்ள இதே ஆறாவது தடத்தில் தான் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று அதிகாரப் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளதை அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளாரே!
ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அது விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் சரியா? பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அதன் பயன் என்ன? என்று பார்க்க வேண்டுமே தவிர, புராணங்களில் என்ன கூறப்பட்டுள்ளது? மக்களின் மத நம்பிக்கை இந்தப் பிரச்சினையில் எத்தகையது? என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்தால், எந்த உருப்படியான செயலையும் எவராலுமே செய்ய முடியாது.
பூமிக்குப் பூமாதேவி - மலைக்குப் பார்வதி என்றும், தண்ணீருக்குக் கங்காதேவி என்றும், காற்றுக்கு வாயு பகவான் என்றும், நெருப்புக்கு அக்னி பகவான் என்றும், பன்றி முதல் ஆமை வரை உள்ள உயிர்கள் கடவுளின் அவதாரங்கள் என்றும், மனிதர்கள் பெரும்பாலும் உண்ணுகின்ற மீன் மச்ச அவ தாரம் என்றும், புராணங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் எந்தத் திட்டத்தையுமே மேற்கொள்ள முடியாதே!
மத உணர்வு அடிப்படையில் புராணங்களை ஆதாரப் படுத்தி வழக்குத் தொடுக்கிறவர்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள் என்பதும், இத்தகைய வழக்குகளைக் கூட - இருப்பதிலேயே அதிக அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம்கூட அனுமதிப்பதும், காலங்கடத்துவதும் பெருமைக்கு உரியதுதானா? என்பது அறிவார்ந்த வினாவாகவே இருக்க முடியும். காலதாமதம் திட்டத்தின் செலவினத்தை மேலும் உயர்த்திக்கொண்டே போகும் என்பதையும் நீதிமன்றங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
------------- 25-7-2008 -"விடுதலை" தலையங்கம்
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பொதுவானவை
மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை
யாரும் இல்லை!
"எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடிகூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகிறான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை."
----------தந்தைபெரியார் - "விடுதலை", 26.4.1972
Posted by
தமிழ் ஓவியா
1 comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
கடவுள் நெறி
கடவுள் பைத்தியம் (கடவுள் உண்டு என்ற அறியாமை) நீங்கினால் ஒழிய மனித சமுதாயம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை அடைய முடியாது.கடவுள் என்பதாக ஒன்று இல்லை. யாவும் மனிதனாலும் இயற்கை நியதியாலும் ஆக்கப்படுவதும், ஆனவையும் தானேயொழிய கடவுளால் ஆவது, ஆனது என்பதாக எதுவுமே இல்லை.
மழை ஏன் வருகிறது? வெள்ளம் ஏன் வருகிறது? இடி ஏன் இடிக்கிறது? காற்று, புயல் ஏன் அடிக்கிறது? பூகம்பம் ஏன் ஏற்படுகிறது? எரிமலை ஏன் எரிந்து நெருப்புக்கூழ் வழிகிறது? திடீரென்று ஏன் மலைகள் தோன்றுகின்றன? திடீரென்று ஏன் தீவுகள் தோன்றுகின்றன? கப்பல் ஏன் கவிழுகிறது? ஆகாயக் கப்பல் ஏன் ஓடாமல் கீழே விழுந்து நாசமாகிறது? இரயில்கள் ஏன் கவிழ்கின்றன? பஸ்கள் ஏன் மோதிக் கொள்கின்றன? பிரயாணம் செய்யும் வாகனங்கள் ஏன் அபாயத்திற்குள்ளாகின்றன? அதனால் ஏன் மக்கள் சாகின்றார்கள்? கொடிய விஷ நோய்கள் ஏன் ஏற்படுகின்றன? மக்கள் ஏன் 100 வயதுக்குமுன் சாகிறார்கள்? மக்கள் ஏன் பிறக்கிறார்கள்? நம் நாட்டில் மக்கள் 60, 70, 75 வயது ஏன் வாழ்கிறார்கள்? ஒரு நாட்டில் மக்கள் 23 ஆண்டு 32 ஆண்டு 47 ஆண்டு ஏன் வாழ்கிறார்கள்? ஒரு காலத்தில் 23 ஆண்டு வாழ்ந்த மக்கள் மற்றொரு காலத்தில் 50 ஆண்டு ஏன் வாழ்கிறார்கள்? நாட்டு வைத்தியம் உள்ள காலத்தில் அதாவது ஆங்கில (இங்கிலீஷ்) வைத்தியம் இல்லாத காலத்தில் சராசரி 15 வயது வீதம் வாழ்ந்த மக்கள் ஆங்கில மேல்நாட்டு வைத்தியம் ஏற்பட்ட பிறகு மனிதர்கள் சராசரி 70 வயது 75 வயது எப்படி வாழ்கிறார்கள்? கடவுள் நம்பிக்கை, பிரார்த்தனை, சாந்தி, மந்திரம், நீர் மந்திரித்தல், விபூதி மந்திரித்தல், அர்ச்சனை முதலியவற்றில் மாத்திரமே நம்பிக்கை இருந்த காலத்தில் - கி.பி. முதல் நூற்றாண்டில் - சராசரி 10 வயதே வாழ்ந்து வந்த மனிதன் இன்று அவற்றையே நம்பாமல் மேல்நாட்டு வைத்தியம் செய்து கொள்ளுபவன் 75 வயது வரை எப்படி வாழ்கிறான்? பிள்ளை பெறும் வாய் சின்னதாக இருப்பதாலும், வயிற்றில் உள்ள குழந்தைகள் குறுக்கே வளர்ந்து விட்டதாலும், பிறப்பு தடைப்பட்டு செத்துப் போன தாயும், பிள்ளையும் அதிகமிருந்தது. ஆனால், தற்போது பிள்ளை பெறும் துவாரத்தைக் கிழித்துப் பெரிதாக்கியும் வயிற்றைக் கிழித்தும் எடுத்த பிள்ளைகள் உயிரோடு பிறந்து நன்றாய் எப்படி வளர்கிறது? இவற்றிற்கெல்லாம் விஞ்ஞான முறையில் (அறிவு சிந்தனை முறையில்) காரணங்கள் இருக்கின்றனவா, இல்லையா?இந்த விவரங்களை சரிவர அறியாத மக்கள்தானே கடவுள் இருக்கிறது என்று கருதுகிறார்கள்! கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளுக்கு என்று என்ன வேலை கொடுக்கிறார்கள்? எல்லா மக்களும் தங்களுக்கு மறைக்கப்பட வேண்டிய அவயம் (உறுப்பு) இருக்கிறது என்று அறிந்தே ஆடை அணிந்து மறைத்துக் கொண்டு நடக்கிறார்களே, அது போலவே கடவுள் இல்லை, கடவுளால் தங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை, எதுவும் இல்லை என்று அறிந்தும்கூட பழக்கம் காரணமாக நம்புவதாகக் காட்டிக் கொண்டு எல்லாக் காரியத்தையும் தானே செய்து கொள்ள வேண்டியது என்று உறுதியாய்க் கருதியே நடந்து கொள்கிறார்கள்.
இதன் பயனாய் வளர்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறான்.கடவுளுக்கு உருவம் கற்பித்தவனும், கடவுளை மனிதன் போலச் சிருஷ்டித்தவனும், கடவுளுக்கு பிறப்பு, இறப்பு, மனிதன் போன்ற குணம், பெண்டு, பிள்ளை, சோறு, துணி, வசிக்க வீடு என்று கற்பித்தவன் எவனும் தன்னைக் கடவுள் நம்பிக்கைகாரன் என்றுதான் நினைத்துக் கொள்கிறானேயொழிய, இவை கடவுள் நம்பிக்கைக்கு மாறான செய்கையென்று அவன் கருதுவதில்லை. தனக்கோ தன் பிள்ளைகுட்டி, தாய் தந்தைக்கோ சிறுநோய் வந்தாலும் உடனே டாக்டரை அணுகுகிறவன் எவனும் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றும் கருதுவதில்லை. ``அது வேறு விஷயம், இது வேறு விஷயம்'' என்றே நினைக்கிறான்; அல்லது டாக்டரையும் நம்புகிறான், மருந்தையும் நம்புகிறான், கடவுளையும் நம்புகிறான், அதுவும் பல கடவுள்களில் தனக்கு வேண்டிய கடவுளையே நம்புகிறான்! மற்றும் கடவுள் நம்பிக்கைக்காரன் கோயில்களை நம்புகிறான். அவற்றிலும் ஒரே கடவுள் உள்ள கோயில்களில் ஒரு ஊர் கோயிலை பெரிதாகவும், மற்ற ஊர் கோயிலை சிறிதாகவும் மதிக்கிறான். அதுபோலவே ஒரு ஊர் குளத்தைப் பெரிதாகவும் ஒரு ஊர் குளத்தை மட்டமாகவும் மதிக்கிறான். இந்த பேதம் சமுத்திரத்தில்கூட காட்டுகிறான். ஒரு ஊர் சமுத்திரம் பெரிதாகவும் (விசேஷமாகவும்) மற்ற ஊர் சமுத்திரம் சாதாரணமானதாகவும் மதிக்கிறான்.150 கோடி மக்களால் மதிக்கப்படும் ஏசுகிறிஸ்து, ``கோயில்கள் எல்லாம் கள்ளர் குகை; திருட்டுப் பசங்கள் வசிக்கும் இடம்'' என்று சொன்னார்! அது மாத்திரமல்ல, சுமார் 40 கோடி மக்களால் ``மகாத்மா என்று கருதப்படும் காந்தி, ``கோயில்கள் விபசாரிகள் விடுதி, குச்சுக்காரிகள் வீடு'' என்று சொன்னார்! கடவுள் நம்பிக்கைக்காரர்களால் யார் இதை நம்புகிறார்கள், அனுசரிக்கிறார்கள்?கக்கூசு எடுப்பவர்களுக்கும் ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ அதுபோல கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.இதனால் 300 கோடி மக்கள் வாழும் உலகம் வளர்ச்சி கெட்டு எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாய் இருக்கிறது? 50 கோடி மக்கள் வாழும் நமது ``இந்தியா''வை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை சாமி, எத்தனை கோயில், எத்தனை தீர்த்தம், எத்தனை சொத்து, எத்தனை சாமியார், எத்தனை எத்தனை பக்தர் முட்டாள்கள்! எவ்வளவு சொத்து பணவிரயம் - நேர விரயம் - முயற்சி விரயம்?
படித்தவர்களில் எத்தனை அறிவிலிகள்! புலவர்களில் எத்தனை முட்டாள்கள்! இலக்கியங்களில் எத்தனை அழுக்கு ஆபாசம் இருந்து வருகின்றன!இதற்கு பரிகாரம் புலவர்கள் எல்லாம் ஒன்றுகூடி ஒரேயடியாக ``கடவுள் இருக்கிறது என்பது முட்டாள்தனம்; இனிமேல் புலவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள் (``நாத்திகர்கள்'') என்று பிள்ளைகளுக்கு பிரச்சாரங்களில், காலட்சேபங்களில் பகுத்தறிவு பற்றியே பேசுவது; பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலக்கியங்களை இகழ்வது'' என்று உறுதி செய்து கொண்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய், நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக்கூடாது, சேர்க்கக் கூடாது. இப்படிச் செய்யாவிட்டால் இனி எந்தப் புலவருக்கும் மதிப்பு இருக்காது! கண்டிப்பாய் மதிப்பு இருக்காது!! இலக்கியங்கள் கொளுத்தப்படும்!!!
--------------- 20.10.1967 ``விடுதலை'' நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.
Posted by
தமிழ் ஓவியா
0
comments
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels:
பெரியார்
Subscribe to:
Posts (Atom)