Search This Blog

24.7.08

எது பொதுத் தொண்டு?



பொதுத் தொண்டு

ஏதோ மனிதனாகப் பிறந்தோம்; சுயநலத்திற்கு ஏற்ப வாழாமலிருக்க வேண்டுமென்று கருதுகிறோம். நம் வாழ்வின் பயனாகத் தொண்டு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் தொண்டாற்றி வருகிறேன். பலர் கருதுகிறார்கள் -நான் பொது மக்களுக்காகத் தொண்டாற்று-கிறேன் என்று; ஒரு மாதிரியில் அந்தக் கருத்து சரி. இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும், பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள்-தாம்.

சாதாரணமாக அருவருப்பாகத் தோன்றும் கக்கூஸ் சுத்தம் செய்யும் (மலம் எடுப்பது) வேலை முதல், அரசனாக இருந்து ஆட்சிபுரிகிற வரையில் எல்லோருடைய வேலையும் பொதுத் தொண்டுதான். கக்கூஸ் எடுக்கிறான் என்றால் தனக்கு மட்டுமா எடுக்கிறான்? வேலைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். உத்தியோகம் செய்பவன், விறகு வியாபாரம் செய்பவன், மற்றும் பல வியாபாரிகள், தொழில் செய்வோர்கள் இவர்களை எடுத்துக் கொண்டால் அவனவன் செய்கிறதெல்லாம் - அது அவனுக்கு மட்டுமல்ல. உயர்வு - தாழ்வு என்னவென்றால், அதன் மூலம்தான் தன் வாழ்வை வளப்படுத்திக் கொள்கிறான் என்கிறோமே தவிர வேறு வகையில் அது தொண்டுதான். மற்றவனுக்குள்ள வசதி வாய்ப்பு, அமைப்பு இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இலாபம் பார்த்துக் கூலி பார்த்துச் செய்கிறார்கள் என்று சிலரைக் கூறலாமே தவிர, அவர்கள் இறக்கும்போது எடுத்துக்கொண்டா போகிறார்கள்? அவைகளை விட்டுவிட்டுத்தான் போகிறார்கள்; மற்றவர்-கட்குத்தான்; அது நம் மகனுக்கு, அல்லது நம் மனைவிக்கு என்று நினைப்பார்கள். கணக்குப் பார்த்தால் அவர்களும் (மனைவி, மக்களும்) மற்றவர்கள்தாம். தனக்கு என்று ஒன்றும் இல்லை. பொதுத் தொண்டில், தனக்கு என்று ஒன்றைச் செய்கிறவர்கள் சிலர்தான்.

தேடி வைத்தவர்கள் யாரென்றால், மற்றவர்களைத் தேடாமல் - எதிர்பாராமல் தொண்டாற்றிப் போகும் அத்தனைபேரும்; அவர்கள்-தாம் தமக்கென்று புகழைத் தேடிக்கொண்டு போகிறார்கள்; பிரதியுபகாரம் இல்லாமல் தொண்டு செய்பவர்கள் என்ற பெயரைத் தம்மோடு எடுத்துப் போகிறார்கள். உலகத்தில் அது இருக்கிற வரையில் தம் பெயர் நிலைக்கும்படி செய்துவிடுகிறார்கள். நிலம், காணி இவையெல்லாம் எவ்வளவுதான் சேர்த்து வைத்திருந்தாலும் அவன் செத்துப் போனதும் அவனது என்று சொல்லமாட்டார்கள். இவனுடைய மகனது என்றுதான் கூறுவார்கள்; இது இயல்பு. தனது என்று கூறும்படியான தொண்டு ஒன்றுதான். மற்றவர்களுக்காகப் பலனை எதிர்பாராமல் தொண்டு செய்வதுதான்.

--------------------- தேரெழுந்தூரில், 31.3.1959-இல் தந்தை பெரியார் சொற்பொழிவு, விடுதலை, 11.4.1959

0 comments: