Search This Blog

31.7.22

காதலோ காதல்! உண்மைக் காதல்!!

 

காதலோ காதல்! உண்மைக் காதல்!!


 

காதலில் "இரண்டு வித"மாம். ஒன்று உண்மைக் காதலாம்; மற்றொன்று வெறும் காதலாம். அல்லாத வஸ்துவுக்கு இரண்டு பெயர்கள் இருந்தாலென்ன? இந்தப் பெயரைக் கொண்டு ஆவதொன்றுமில்லை? வஸ்து உண்டா? இல்லையா? என்பது தான் கேள்வி.

 

கடவுளுக்குக் கூட ஆயிரம் பெயர்கள் உண்டு. கண்டவன் என்ன? காணவாவது முடிந்ததா? இப்படிப்பட்டவர் என்று கருதுவதாவது முடிந்ததா?அதனால் தான் "கடவுளுக்கும், அல்லாததற்கும் வித்தியாசமில்லை" என்று கூத்தாடிகள் சொல்லுகிறார்கள் போலும்.

 

காதல் என்றால் சாதாரணத் தமிழ் மொழியில் அவா அல்லது ஆசை என்று பொருள் கொள்ளுவது நியாயமாகும். அன்பு என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். "அதனிடம் எனக்கு அன்பு", "அவளிடம் எனக்கு அன்பு," இது ஒருவரை ஒருவர் விரும்பாமல் (பற்றை) காட்டும் குணம். அவா அல்லது ஆசை என்பது விரும்பத்தக்கக் கொண்டதற்குச் சொல்லும் மொழி. இவற்றை வட மொழியில் கூறுவது தான் காதலாகி விடுகிறது.

 

இந்தக் காலப் பண்டிதர்கள் பெரிய தொல்லையாக ஆக்கிவிட்டார்கள். கூத்தாடிகள் இன்னும் கெடுத்து விட்டார்கள். அதுவும் ஆண் - பெண் பிணையலுக்கே சம்பந்தப்படுத்தி விட்டார்கள். காதல் சம்பந்தமாகப் பல கதைகளைக் கட்டி வைத்து ஆண் - பெண் வாழ்க்கையையும் கெடுத்து விட்டார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒருவித பலவீனத்தைத் (Weakness) தவிர காதலுக்கு வேறு குணமோ, சக்தியோ இருப்பதாகத் தெரியவில்லை.

 

காதல் மணம் என்பதற்குப் பலவீனத்தில், அவசரத்தில் மாட்டிக் கொண்டு பின்னால் தொல்லை அல்லது அதிருப்தி அல்லது சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆகியவற்றை அடைவதைத் தான் பொருளாகச் சொல்லலாம்.

 

உதாரணம், "சகுந்தலை துஷ்யந்தன் திருமணத்தையே" எடுத்துக் கொள்ளலாம்.

 

ஏனெனில், காதல் மணத்துக்கு அதையே பெரிதும் எடுத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கதையை எடுத்துக் கொண்டால், இதில் இழிவு நன்றாய் விளங்கும். சகுந்தலையின் தகப்பன் விஸ்வாமித்திரன். அவன் மேனகை மீது காதல் கொண்டான். இந்தக் காதல் சாதாரணமான காதல் அல்ல. விஸ்வாமித்திரன் ஒரு ரிஷி அல்லது முனிவன். அப்படியென்றால், சிரேஷ்டமான மனிதர் என்பது பொருள். அவர் காதல் கொண்ட பெண் மேனகை. இவளோ தெய்வக் கன்னிகை; தேவர்களின் விலை மாது; ரிஷியை ஏமாற்ற வந்தவள். ஆகவே, கெட்ட எண்ணமுடைய விலை மாதுப் பெண்களிடத்தில் சிரேஷ்டமான மனிதத் தன்மைக்கும் மீறிய மனிதருக்குக் காதல் ஏற்பட்டது என்றால், அந்தக் காதலின் இழித்தன்மைக்கு - பலமற்ற தன்மைக்கு - போலித்தன்மைக்கு வேறு என்ன உதாரணம் சொல்ல வேண்டும்?

 

அதுதான் போகட்டும், அந்தக் காதலினால் பெறப்படும் சகுந்தலை சங்கதியைப் பார்ப்போம். அவள் ஒரு ரிஷியால் வளர்க்கப்பட்டவள். அவள் மீது இராஜ குமாரனாகிய துஷ்யந்தன் என்பவன் காதல் கொண்டான். உடனே காதல் (கந்தர்வ) மணம் என்ன ஆயிற்று? துஷ்யந்தனுடைய பலவீனமான புணர்ச்சி (தற்கால காதல்) இச்சை தீர்த்த உடன் அவனுக்கு அவளே மறந்து போய் விட்டான். பிள்ளையைத் தூக்கிக் கொண்டு துஷ்யந்தனைத் தேடிப் போய் அங்குப் பிள்ளையையும், தன்னையும் அவனுக்குக் காட்டியும் அவனுக்கு ஞாபகம் வரவில்லை.

 

கடைசியாக ஒரு மோதிரத்தால் (அதாவது சட்ட நிபந்தனையால்) ஞாபகம் வருகிறது

 

இந்தக் காதல் மணத்தில் என்ன சக்தி இருக்கிறது? என்ன நீண்ட சுகம் இருக்கிறது? காட்டில் திரியும் மிருகங்கள் அல்லது வீட்டில் திரியும் சுணங்கங்(நாய்)களின் காதலுக்கும் இதற்கும் அதாவது இந்தத் "தெய்வீக"க் காதலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று நமக்கு விளங்கவில்லை; தெய்வீகக் காதல், தெய்வீகத் தன்மை படைத்தவர்களின் காதல் என்று சொல்லும்படியான இந்தக் காதலே இந்தக் கதியானால்  மனுஷீகக் காதல் சந்திலும், பொந்திலும், தேரிலும், திருவிழாவிலும் காணுவதாலும், தெருவில் போகிறவர் வருகிறவர் பேச்சைக் கேட்டு நாக்கில் தண்ணீர் சொட்ட விடுவதாலும், கூட்டி வைப்போரின் அளப்பினாலும் ஏற்படும் காதல் என்ன தன்மையுடையதாய் இருக்கும் என்பதை அறிஞர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக!

 

பத்திராதிபர் குறிப்பு: காஞ்சீபுரம் ஏகாம்பரம், மனோன்மணி திருமணத்தில் காதலை அதாவது காந்தர்வமணத்தைக் காட்டுமிராண்டித்தனம் என்றும் அவசரப் புத்தி என்றும் பெரியார் அவர்கள் சொன்னதை மறுத்துச் சில தோழர்கள் எழுதியதால் அவற்றிறிகுப் பதிலாகச் சித்திரப் புத்திரனால் எழுதப்பட்டதாகும். பெரியார் சொன்னதை ஆதரித்து எழுதியவர்களும் உண்டு.

 

                          --------------- 11.05.1943- "விடுதலை" இதழில் 'சித்திர புத்திரன்' என்ற புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

30.7.22

பார்ப்பான் கை ஆயுதங்கள், கடவுளும்! - மதமும்-சாஸ்திரமும்!

 

பார்ப்பான் கை ஆயுதங்கள், கடவுளும்! - மதமும்!


 

திராவிடர் கழகத்தின் இலட்சியம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடையே இருந்து வரும் இழிவு, காட்டுமிராண்டித்தனம், தற்குறித்தன்மை இவற்றை நீக்கி மக்கள் மனிதத்தன்மை பெற்று வாழ வேண்டும் என்பது ஆகும். அதற்காகவே (திராவிடர் கழகம்) பாடுபடுகின்றது. இந்தத் தொண்டு செய்ய 2000- ஆண்டுகளுக்கு மேலாக மட்டும் அன்று, இன்றும் கூட செய்ய வேறு ஆளோ, வேறு ஸ்தாபனங்களோ இல்லை. திராவிடர் கழகம் ஒன்றுதான் இந்தத் துறையில் இறங்கிப் பாடுபடுகின்றது.

 

நம் தமிழ் மக்கள் எல்லாரும் இந்த நாட்டில் பரம்பரையாக வசித்து வருபவர்கள். இந்த நாட்டுக்குச் சொந்தமானவர்கள். உழைத்து மக்களுக்கு உதவுபவர்கள். இப்படிப்பட்ட நாம் 100- க்கு 97- பேராக உள்ள நாம் (தமிழர்கள்) இந்த நாட்டில் கீழ்ச் சாதி, பார்ப்பான் மேல் சாதி என்று ஆக்கி வைத்துள்ளார்கள். பாடுபடுகின்ற மக்கள் கீழ்சாதி என்பது உலகில் வேறு எங்குமே காண முடியாதது. இங்குதான் உள்ளது அதேபோலவே 100-க்கு 3- பேராக உள்ள பார்ப்பான் உடல் உழைக்காமல் ஊரார் உழைப்பிலேயே நோகாமல் உண்ணுபவன் மேல்சாதி என்று ஆக்கி வைத்து இருக்கின்றார்கள். இப்படியே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகின்றது. இதனை மாற்ற எவனும் முன்வரவே இல்லை!

 

இதுபற்றி இந்த நாட்டில் தோன்றிய பெரியோர்களோ, அவதாரப் பருஷர்களோ, ஆழ்வார்களோ, நாயன்மார்களோ கவலைப்பட்டு எடுத்துச் சொன்னார்கள் - இவற்றை நீக்கப் பாடுபட்டார்கள் என்று சொல்லும்படியான ஆளைக் காட்டவே முடியாதே! தோன்றியவன் எல்லாரும் நமது இழிவை மாறிவிடாமல் ஆணி அடித்து நிலைக்கச் செய்தவர்களாகவே தானே இருந்தார்கள்?

 

100- க்கு 97- பேராக உள்ள தமிழ்மக்களை இழிமக்கள் - தாழ்ந்த சாதி மக்கள் என்று கூறிக் கொண்டு 100- க்கு 3- பேராக உள்ள பார்ப்பனர்கள் 1961- லும் உயர்வாக வாழ்கின்றான் - மேல் நிலையில் இருக்கின்றான் என்றால் இது எதனைக் காட்டுகின்றது? நமது மான - ஈன நிலையைத்தானே காட்டுகின்றது? நமக்கு மானம் இருக்குமானால் நம்மை இழிமக்கள் என்று கூறுவதைப் பொறுத்துக் கொண்டு (நம் தமிழ் மக்கள்) இருப்பார்களா?

 

100- க்கு 97- பேராக உள்ள (தமிழர்களாகிய) நமக்குப் படிப்பு இல்லை காமராசர் பதவிக்கு வருவதற்கு முன் வரையில் 100- க்கு 15- பேர்களே படித்து இருந்தோம். இதில் பார்ப்பான் 3- பேர் போனால் 12- பேர்களே படித்து இருந்தோம். ஆனால் பார்ப்பானர் மட்டும் 100- க்கு 100- படித்து இருக்கின்றார்களே! இன்று ஏதோ காமராசர் ஆட்சியின் காரணமாக 100- க்கு 32- பேர்களாக உயர்ந்து உள்ளோம்.

 

இப்படி 100- க்கு 97- பேராக உள்ள தமிழ் மக்கள் மீது 3- பேராக உள்ளவன் (பார்ப்பான்) ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, நம்மைத் தாழ்ந்த நிலையிலேயே வைத்து இருக்கின்றான் என்றால், நமக்குப் புத்தியும் இல்லை, மானமும் இல்லை. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட நிலையில் உள்ளோம்.

 

நம்மை (தமிழர்களை) அடிமைப்படுத்தும் பார்ப்பான் 100- க்கு 3- பேராக இருந்தாலும் 100- க்கு 97- பேராக உள்ள நாம் அடங்கிக் கிடக்கின்றோம் என்றால் காரணம், அவன் கையில் ஆயுதங்கள் உள்ளன. நாமோ நிராயுதபாணிகள் ஆவோம்.

 

எப்படி போலீஸ்காரர் நான்கு பேராக இருந்தாலும் அவர்கள் கையில் உள்ள துப்பாக்கி கண்டு பெரிய கூட்டமானாலும் பயந்து அவன் சொன்னவுடன் கலைந்து ஒடுகிறதோ, அதுபோல பார்ப்பான் கையில் உள்ள ஆயுதங்களான கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு முதலிய ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த ஆயுதங்களின் காரணமாக நாம் (தமிழர்கள்) அடங்கிக் கிடக்கிறோம். நாம் இவற்றில் இருந்து விலகி மனிதத் தன்மை அடைய வேண்டுமானால் பார்ப்பான் கையில் உள்ள இந்த ஆயுதங்களைப் பிடுங்கி எறிய வேண்டியவற்றை எறிந்தும் பிடுங்க முடியாதவற்றை முனை மழுங்கச் செய்தும் ஆக வேண்டும்.

 

கடவுள் என்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டு தமிழ் மக்களையே ஆட்டுகின்றான்.

 

தமிழர்களாகிய நாம் கோயில், குளம் கட்டியவர்களாக இருந்தாலும் நாம் உள்ளே புக யோக்கியதை அற்றவர்கள் என்று கூறி வெளியே நிறுத்தி வைத்து இருக்கின்றான். எல்லோருக்கும் கடவுள் பக்தி இருக்கிறதே ஒழிய, ஒருவனுக்காவது கடவுள் என்றால் என்ன? என்று தெரியாது. கடவுளையும், கோயில், குளத்தையும் வளர்த்துக் கொண்டானே ஒழிய அறிவில் வளர்ச்சி அடையவேயில்லை. அதுபோலவே மதம் என்றால் என்ன? சாத்திரம் என்றால் என்ன? என்று எவனுக்காவது தெரியுமா? ஒருவனுக்காவது தெரியாது. ஆனால் அவ்வளவு பேரும் அவற்றைக் கட்டிக் கொண்டு அழுகின்றான்.

 

நம் ஆயுள் காலத்திலாவது இவற்றை ஒழித்துத் தீர வேண்டும். அப்போது தான் நாம் (தமிழர்) இழி மக்களாக இருந்தாலும் நாம் பிள்ளைக் குட்டிகளுக்காவது இழிபட்டம் இல்லாமல் முடியும்.

 

அரசாங்கம் என்றால் என்ன? என்று எவனக்காவது தெரியுமா? பார்ப்பான் தங்கள் வாழ்க்கை வசதிக்காகத் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டது தான் இந்த அரசாங்கம் என்று நான் 30- ஆண்டுகளுக்கு மேலாகவே கூறி வந்திருக்கின்றேன். என்னை எல்லோரும் எதிர்த்தார்கள். நான் கவலைப்படாமல் என்றைக்குக் காங்கிரஸ் பார்ப்பானுடைய நலனுக்கும், வாழ்வுக்கும் தான் உள்ளது என்பதைக் கண்டு வெளியேறினேனோ, அன்று முதல் காங்கிரஸ் ஒழிக! பார்ப்பான் ஒழிக! என்று கூப்பாடு போட்டு வந்து இருக்கின்றேன்.

 

இப்படி நான் போட்ட கூப்பாடானது வீண் போகவில்லை. இன்று நிலை எப்படியாகிவிட்டது தெரியுமா? பார்ப்பனர்கள் எல்லாரும் காங்கிரசை விட்டு ஒடும்படியாகிவிட்டது. "காங்கிரசே" இன்று தமிழர்கள் கைக்க வரும்படியான நிலைமையை இன்றுதான் காண்கிறோம்.

 

தோழர்களே! காங்கிரசின் காரணமாக வாழ்வு பெற்றவர்கள் இந்த இராஜாஜியும், மற்ற மற்றப் பார்ப்பனர்களும் தான். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குக் காங்கிரசில் இடம் இல்லை, தமிழர்களுக்குப் பயன்படும்படியாக இருக்கின்றதே என்ற ஆத்திரத்தின் காரணமாகவே இன்று பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்கின்றார்கள்.

 

தோழர்களே! என்றைக்குமே இல்லாத மாதிரி காங்கிரஸ் இன்றுதான் தமிழர்கள் கையில் வந்துள்ளது. தமிழர்களுக்குப் பயன்படும்படியான நிலையிலும் உள்ளது. இதை ஒழிக்கப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் முயற்சிக்கின்றார்கள்.

 

நம் மக்களின் கல்வி, உத்தியோகம், பதவி முதலியவைகளிலும், மற்றும் விவசாயம், மின்சாரம், தொழில்துறை, மற்ற மற்ற பல துறைகளிலும் காமராசர் ஆட்சி செய்துள்ள நன்மைகள் நிலைக்கவும், மேலும் வளரவும் வருகின்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே ஓட்டு அளிக்க வேண்டும்.

 

                                     ------------------------ 03.11.1961- அன்று ஜெயங்கொண்டத்தில் தந்தை பெரியார் .வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.’'விடுதலை'’, 23.11.1961