Search This Blog

1.7.22

தேவதாசிகள் எல்லாம் கூட்டம் போட்டு என்னைக் கண்டித்தார்கள் - பெரியார்

 

தேவதாசி ஒழிப்பு முறை!

 


தோழர்களே! மனிதன் மற்றைய விலங்குகளுக்கும் மற்றைய உயிர்களுக்கும் இல்லாத சிந்திக்கும் அறிவைப் பெற்றிருப்பதால் தான் உயர்வாக மதிக்கப்படுகிறான். அவன் அறிவு, செயல், சிந்தனை, நடை, உடை, உணவு முதலிய எல்லாமும் காலத்துக்குக் காலம் மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றது. அப்படி மாறுதல் அடையவில்லையானால், அவனுக்கும் மிருகத்திற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 500-ஆண்டுகளுக்கு முன் புலியானது ஆடு, மாடு இவைகளைத் தின்று வாழ்ந்தது என்றால், இந்த 20-ஆம் நூற்றாண்டிலும் புலியானது ஆடு, மாடு, மனிதன் ஆகியவற்றைத்தான் தின்கின்றது.

 

அந்தக் காலத்தில் மலம் தின்ற நாய் இன்றும் மலம் தின்று கொண்டுதான் இருக்கின்றது.

 

அன்றைக்குப் புல்லைத் தின்ற ஆடுமாடு இன்றைக்கும் புல்லைத்தான் தின்கின்றது. மற்ற வாழ்க்கையிலும் மாற்றம் காண முடியவில்லை.

 

ஆனால், மனிதன் அப்படி அல்லவே! மனிதன் காலத்துக்குக் காலம் நடை, உடை, உணவு, சிந்தனைச் சக்திகளில் மாறுபடுகின்றான். மனிதன் வாய்ப்பு சுற்றுச் சூழ்நிலை, பெருமை, சிறுமை முதலியவைகளைப் பார்த்து மாற்றம் அடைகின்றான். அப்படி மாறாமல் ஒரே மாதிரியே இருந்தால், நான் முன்பு சொன்னது போல் மனிதனே அல்ல.

 

நமது பெண்கள் சினிமாவைப் பார்த்து வேண்டுமானால் மாறுதல்கள் அடைகின்றார்கள். சினிமாவைப் பார்த்து புடவை, நகை, இரவிக்கை முதலியவைகளை விதம் விதமாக அணிந்து கொள்ள நம் பெண்கள் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். சார்ந்ததன் வண்ணம் என்பார்களே அதுபோல, வளர்ச்சிக்கு ஏற்றாற்போல மாறுதல்கள் அடைந்தவண்ணமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட மாறுதல்களில் ஒரு சில மாறுதல்தான் இம்மாதிரியான திருமணங்களும்.

 

மாறுதல் என்றால், நாங்கள் ஒன்றும் ஆணுக்கும், ஆணுக்கும் திருமணமோ, பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணமோ, நடத்தி வைக்கவில்லை.

 

நாங்களும் ஓர் ஆணக்கும், பெண்ணுக்கும் தான் வைத்துத் திருமணம் நடத்துகின்றோம். இம்மாதிரி திருமணத்தினால் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வரும் அனாவசியமான வீண் சடங்குகளையும், காட்டுமிராண்டிச் சடங்குகளையும், நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள முட்டுக்கட்டையினை நீக்குவது, நம் மக்களை மானமுடையவர்களாக, அறிவு உடையவர்களாகச் செய்வது இவ்வளவுதான்.

 

எங்களுடைய மாறுதல் எல்லாம் முதல் முதலில் பெண்கள் நிலை மாறவேண்டும் என்பதாகும். நம்நாட்டுப் பெண்களின் நிலை மிக மிக வெட்கப்படக்கூடிய இழிநிலையில்தான் உள்ளது.

 

பெண்களுக்குக் கடவுள் பேரில் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுவது என்று நேற்றுவரையில் இருந்து வந்ததே! கடவுள் காரியம் என்றும், சாஸ்திர முறைகள் என்றும் கூறிப் பொட்டுக்கட்டி விடப்பட்டவர்கள் எல்லாம் நம் அக்காள் தங்கைகள்தானே? நம் சூத்திரச்சாதித் தாய்மார்கள்தானே?

 

முதலாவது நான்தான் இந்த முறையை வெறுத்தேன். நான் 8 ஆண்டு தேவஸ்தான கமிட்டி செகரெட்டரியாகவும், 10 ஆண்டு தேவஸ்தான கமிட்டித் தலைவனாகவும் இருந்தேன்.

 

அப்போதுதான் இந்தக் கொடுமைகளை எல்லாம் படித்தேன். நான் எந்த ஊர்க் கோயிலுக்குப் போனாலும் 10, 20 தேவடிகள் கோயில் மரியாதை மேளதாளத்துடன் வரவேற்கக் காத்துக்கிடப்பார்கள்!

 

இவர்கள் எல்லாம் யார்? தேவடியாள் என்ற தனி ஒரு சாதியாக வந்தவர்களா? கொடுமுடியில் தேவடியாளுக்குக் கவுண்டர் என்ற பட்டம்! திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களில் பிள்ளை என்ற பட்டம்! சென்னையிலே முதலியார்! இப்படி நம்மவர்கள் தானே!

 

அந்தக் காலத்தில் தேவடியாள்கள் தங்களது கோயில் உரிமையை ரூ15 முதல் ரூ90 வரை வாங்கிக்கொண்டு விலைக்கு விற்றுவிடுவார்கள். அப்படி வாங்குகிறவளும் தேவடியாள் வாங்கமாட்டாள். மற்ற சாதிப் பெண்களும் அந்த உரிமையினை வாங்கிக் கொண்டு, அவர்களும் தேவடியாள் போல் காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆட ஆரம்பித்தார்கள்.

 

நான்தான் முதல் முதல் இப்படி உரிமைகளை விற்றால் செல்லாது என்று உத்தரவு போட்டேன். அந்தக் காலத்தில் அப்பீல் எல்லாம் கலெக்டர் அளவோடு நின்றுவிடும். இப்போது போல அய்க்கோர்ட்டுக்கு எல்லாம் வராது. பிறகு தேவதாசிகளை நியமிக்கக்கூடாது என்றும், வாரிசு இல்லாவிட்டால், அந்தப்பதவி அத்தோடு முடிந்து விடும் என்றும் உத்தரவு போட்டேன்.

 

பிறகு சட்டசபையில் இதுபற்றிய தீர்மானங்கள் எல்லாம் வந்தது. பார்ப்பனர்களும், வைதிகர்களும் எதிர்த்ததோடு அல்லாமல் தேவடியாள்கள் என்பவர்கள் எல்லாம் கூட்டம் போட்டு என்னைக் கண்டித்தார்கள். எங்கள் பிழைப்புப் போய்விட்டால், நாங்கள் என்ன செய்வது என்றார்கள். எப்படியோ நம்ம உணர்ச்சி உடையவர்கள் ஏராளமாக இருந்ததால், இது சட்டமாகி விட்டது.

 

இன்னும் பெண்கள் எங்களால் எவ்வளவோ நன்மைகளை எல்லாம் பெற்று இருக்கிறார்கள். முன்பு புருஷன் எத்தனை வைப்பாட்டி வைத்திருந்தாலும், மனைவி ஏன் என்று கேட்க முடியாது. அவன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம்.

 

ஆனால் இன்று அப்படி முடியாதே! புருஷன் வைப்பாட்டி வைத்துக் கொள்ள முடியாது. அப்படி வைத்துக் கொண்டால், சொத்தில் கணக்குப் பார்த்துப் பிரித்துக்கொடு; உன்னோடு எனக்கு வாழ இஷ்டம் இல்லை என்று மனைவி கேட்கலாம். மனைவி இருக்கும்போதே இன்று ஒருவன் மறுமணம் செய்து கொண்டால், அந்தத் திருமணம் செல்லுபடியாகாததோடு, திருமணம் செய்து கொண்டவனுக்குச் சிறைத்தண்டனையும், அபராதமும் உண்டு என்று இன்று சட்டமாகி இருக்கின்றது.

 

மனைவியைக் கணவன் அடி என்று கூப்பிடுவதோ, அடிப்பதோ இன்று நடக்காதே! அவள் கோர்ட்டில் என்னை அடீ என்று அழைத்து என்னை அடித்தான், அது எனக்கு அவமானமாக இருக்கிறது என்று சொன்னால் நீபதி கூப்பிட்டு என்ன ஒழுங்காக இருக்கின்றாயா? அல்லது அபராதம் கட்டுகிறாயா என்று கேட்பாரே? இனிமேல் - அப்படி எல்லாம் செய்யமாட்டேன் என்று சொல்லித்தானே அவன் ஆகவேண்டி இருக்கின்றது.

 

இன்னுங்கூட "அவன் பீடிகுடிக்கின்றான், அவன் வாய் நாறுகின்றது; அவனோடு வாழ எனக்கு இஷ்டமில்லை" என்று மனைவி ஆட்சேபிக்கலாம். இன்று பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் சரிபங்கு பெற உரிமை ஏற்பட்டு உள்ளது. ஒரு தகப்பனுக்கு ரூ.1-லட்சம் இருந்து பிள்ளைகள் ஒரு பெண், ஓர் ஆண் இருந்தால் ஆணுக்கு 50000, பெண்ணுக்கு 50000-என்று சரிபாதிப் பங்கு உண்டு. கொஞ்சம் கெட்டிகாரப் பெண்ணாக இருந்தால் தகப்பன் செத்துக்கிடக்கும் போதே தன்பங்கைப் பிரித்து வைத்துவிட்டுப் பிணத்தைத் தூக்கு என்று கேட்கின்றார்.

 

இன்று பெண்கள் ஆண்களைப் போலவே எல்லாவிதமான உத்தியோகங்கள், கல்விகள் முதலியவைகள் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம்.

 

இன்று திருமதி லூர்து அம்மாள் என்கிற ஒரு பெண் மந்திரியாக இருக்கின்றார். மற்றும் பெண்கள் கலெக்டராகவும், வக்கீலாகவும் மற்றும் பெரிய பெரிய உத்தியோகங்களில் எல்லாம் இருப்பதைப் பார்க்கின்றோம். இவ்வளவும் பெண்கள் அடைய நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்? எவ்வளவு ஏசல்கள் வாங்கி இருப்போம்? நாங்கள் என்ன என்ன மாறுதல்கள் அடைய வேண்டும் என்று கூறிப் பாடுபட்டு வந்தோமோ, அவைகள் எல்லாம் இன்று அமலிலும் இருப்பதைக் காணும்போது, இதைவிட எங்களுக்கு வேறு மகிழ்ச்சி தரக்கூடிய சேதி என்ன இருக்க முடியுமா?

 

எங்களது துணிவு எவ்வளவு தூரம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டால், செல்லாது என்று கோர்ட்டுகளில் தீர்ப்பாகியுங்கூட எவரும் இத்தீர்ப்புபற்றி சட்டை பண்ணவில்லையே! சுயமரியாதைத் திருமணம் செல்லாவிட்டால் என்ன? சட்டத்தில் இருக்கும் திமிர் எல்லாம், செல்லுகிற கலியாணத்தில் பிறக்கிற குழந்தைக்குத்தான் சொத்து; செல்லாத கலியாணத்துக் குழந்தைக்குச் சொத்தில் உரிமையில்லை என்று இருப்பதால்தானே?

 

கலியாணம் செல்லவில்லை; குழந்தைக்குச் சொத்து கிடைக்காதே என்ற கவலை வேண்டியதில்லை. உயிருடன் இருக்கும்போதே தன் சொத்துகளைத் தன்னுடைய மனைவி மக்கள் இந்திந்த விகிதத்தில் அடையவேண்டியது என்ற உயில் எழுதி வைத்துவிட்டால் போகின்றது. அரைக்கடுதாசியில் எழுதி சப்ரிஜஸ்தர் ஆபிசீல் கொடுத்துவிட்டால் போதும். அதற்கு வேறு ஸ்டாம்பு பீசு ஓன்றும் செலவுமில்லை. எவனும் அசைக்க முடியாது. வெள்ளைக்காரன் எல்லாம் தன் கால திசை உள்ளபோதே தன் மனைவி மக்களுக்கு உயில் எழுதி விடுகின்றான். பின்னாடி தகராறுக்கு என்று அவன் விட்டுச் செல்வது கிடையாது. இரண்டு ஓட்டை சேர், டேபிள் விரிப்பாக இருந்தாலும் இன்னாருக்கு என்று எழுதி வைத்துவிட்டுத்தான் சாவான். பெண்கள் முன்னேறவே இத்திருமண முறை மாற்றம்.

 

          ------------------------------- 26.08.1959- அன்று வாலி கண்டபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 31.08.1959- ’’விடுதலை”இதழில் வெளியானது

0 comments: