Search This Blog

30.4.15

அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகே குழந்தை பெற வேண்டும்!-பெரியார்

அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகே குழந்தை பெற வேண்டும்!
பெரியார்


தமிழ் இலக்கியங்கள் யாவும் நம் பெண்கள் அடிமைப்படுத்துவதாகவே இருக்கின்றன. எந்த இலக்கியமானாலும் சரி அது பெண்களுக்கு இலக்கணம் சொன்னதெல்லாம் அச்சம், நாணம், மடம், பயிர்ப்புள்ளவர்களாக, அதாவது ஆண்களைக் கண்டு பயப்படக் கூடியவர்களாக, வெட்கத்தோடுள்ளவர்களாக, அறிவற்ற மடையர்களாக, மற்றவர்கள் பார்வைக்கு அசிங்கமாகத் தோற்றமளிக்கும் வகையில் பெண்கள் இருக்க வேண்டும். இதுதான் பெண்களுக்குச் சிறப்பு என்று எழுதி வைத்திருக்கின்றான். நம் பெண்களுக்கு அறிவுரை கூறிய - கூறுகிற யாவரும் பெண் கற்புடையவளாக இருக்க வேண்டும், கணவனுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று, அவர்களை அடிமைப்படுத்தும் வகையில் அறிவுரை சொன்னார்களே தவிர, அவர்களைச் சம உரிமையுடைய ஜீவனாக எவருமே கருதவில்லை. 


இதுவரை நம்மிலே நடைபெற்று வந்த திருமண முறைகள் யாவும் பெண்ணடிமையையும், ஜாதி இழிவினையும், மூடநம்பிக்கையையும் நிலை நிறுத்துவதே யாகும். நாம் முட்டாள்தனத்தையும் ஜாதி இழிவினையும் மூடநம்பிக்கை - முட்டாள்தனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று தொண்டாற்றுபவர்களானதால் இம்முறையினை மாற்றியமைக்க வேண்டியதாயிற்று. 


இம்முறையினை ஆரம்பத்தில் சிலர் எதிர்த்தனர். பல இன்னல்கள், இடையூறுகள் செய்தனர். பார்ப்பனர்கள் பலமாகத் தங்கள் எதிர்ப்பினைக் காட்டினர். எல்லா எதிர்ப்புகளையும் கடந்து மக்களிடையே இத்திருமண முறையானது செல்வாக்குப் பெற்று, பல்லாயிரக்கணக்கில் நடைபெற்று வந்துங்கூட, நீதிமன்றங்கள் இத்திருமணம் சட்டப்படிச் செல்லுபடியற்றதாகும் என்று தீர்ப்புச் செய்திருக்கின்றன. 


நம் அரசாங்கமும் இம்முறையையும் பல நாட்கள் சட்டப்படிச் செல்லுபடியற்றதாகவே வைத்திருந்தது. அதற்குக் காரணம் நம் மக்கள் அறிவு பெறக் கூடாது என்பதற்காகவேயாகும். இப்போது வந்திருக்கும் ஆட்சியானது பகுத்தறிவாளர்கள் ஆட்சியானதால் இம்முறையினைச் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று என்று சட்டமியற்றி இருக்கிறது. என்றாலும் இன்னமும் பலர் பழைய முறையினைப் பழைமையானது, நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வருவது, நம் முன்னோர்கள் கடைபிடித்தது, ஜாதி வழக்கம் என்கின்ற காரணத்தைக் கொண்டு தங்கள் அறிவிற்கு இடம் கொடுக்காமல் பின்பற்றி வாழ்கின்றனர்.  


பழங் காலம் என்பது காட்டுமிராண்டி காலமே யாகும். நம் முன்னோர்கள் தீயினை உண்டாக்க, சக்கிமுக்கிக் கல்லினை உபயோகித்து வந்தனர். இப்போது தீ உண்டாக்க நாம் சக்கிமுக்கிக் கல்லினை உபயோகிக்கிறோமோ என்றால், இல்லை; அதுபோன்று நம் முன்னோர்கள் எவரும் மார்பை மறைத்துத் துணி போடுவது கிடையாது. அதனை மறைப்பதே குற்றமென்றும், இழுக்கென்றும் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால், இன்று பழைமை என்று அதனைக் கடைப்பிடிக்கிறார்களா என்றால், இல்லை. இரண்டு ரவிக்கைகள் போடுகின்றனர். இன்னும் கொஞ்ச நாள் போனால் மூன்று கூடப் போடுவார்கள்! 100-ஆண்டுகளுக்கு முன் நாம் எந்த வாகனத்தைப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தினோம். கட்டை வண்டி, வில் வண்டி, குதிரை வண்டி இவற்றைத் தான் பன்படுத்தினோம். இன்றைக்கு அதனைப் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. இப்படி நம் வாழ்க்கையில் எத்தனையோ காரியங்களையெல்லாம் நம்முடைய வசதிக்கும், வாய்ப்பிற்கும் ஏற்ப மாற்றிக் கொண்ட நாம், அதற்கெல்லாம் பழைமையைப் பின்பற்றாத நாம் இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே பழைமை - முன்னோர்கள் செய்தது என்று கூறிப் பின்பற்றுவது எப்படி அறிவுடைமையாகும் என்பதைச் சிந்திக்க வேண்டுகிறேன். இன்று நாம் எந்தக் காரியத்தைப் பழைமை என்பதால் கைவிடாமல் இருக்கிறோம் என்பதையும் அருமைத் தோழர்கள் சிந்திக்க வேண்டும். 


சில நாட்களுக்கு முன் அமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். முதலமைச்சர் அண்ணா அவர்கள் திருமணத்திற்குத் தலைமை வகித்தார்கள். நான் அதிக நேரம் பேசுவேன் எனக் கருதி மற்ற எல்லோரையும் முதலில் பேச அழைத்தார். என்னைக் கடைசியாகப் பேசும்படிப் பணிந்தார். நான் சில வாக்கியங்களிலேயே என் உரையினை முடித்துக் கொண்டேன்.


அங்கு நான் என்ன சொன்னேனென்றால் மணமக்கள் முன்னோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட புராண, இதிகாச இலக்கியங்களில் கண்டுள்ளபடியும், தமிழ் நீதி நூல்களில் கண்டுள்ளபடியும், பழக்க வழக்கங்களில் கண்டுள்ளது போலவும் நடந்து கொள்ளாமல் உங்கள் அறிவைக் கொண்டு, அறிவின்படி நடந்து கொள்வதோடு உங்கள் பெற்றோர்களைச் சீக்கிரம் தாத்தா ஆக்காமல் வாழுங்கள் என்று சொன்னேன். நான் நிறையப் பேசுவேன் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கெல்லாம் இது பொசுக்கென்று போய்விட்டது. பொதுவாகப் பார்த்தால் எந்தக் காரியமும் மனிதன் அறிவு வளர்ந்து தன் மானத்தைத் தொடும்படியாக இருந்தால் தானே மாறி விடும். அல்லது அவர்களே மாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்நிகழ்ச்சி ஜாதியோடு பிணைக்கப்பட்டதால் மாற்றிக் கொள்ள அஞ்சுகிறார்கள். 


பார்ப்பனர் அல்லாத நம் மக்களுக்குத் துணிச்சல் வேண்டும். மனித சமுதாயம் முன்னேற வேண்டுமானால் பழைமை என்பவற்றைக் கைவிட்டுப் புதுமையைக் கைக்கொள்ள வேண்டும். புதுமையைப் பார்த்து நடக்க வேண்டும். என்ன நிலைமை இருந்தாலும் வரவிற்குள் செலவிட வேண்டுமே ஒழிய, வரவிற்கு மேல் செலவிடக் கூடாது. கியாதியாக - ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று கருதக் கூடாது. சாதாரண எளிய வாழ்வு வாழ வேண்டும். 


அய்ந்து வருடங்களுக்குக் குழந்தை பெறாமல் இருக்க வேண்டும். அதற்குள் பிறந்தால் அதனைத் திருட்டப் பிள்ளையாகக் கருத வேண்டும். அய்ந்து வருடம் கழித்து ஒன்று; அதன்பின் அய்ந்து வருடம் கழித்து ஒன்று, என்று ஒன்றிரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிகப்படியான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவஸ்தைப் படக் கூடாது. மற்றவன் குழந்தை சிறப்பாக வளர்வதைப் பார்த்து அதிகக் குழந்தைகளைப் பெற்றவன் கவலைப்படுகின்றான். தன் பிள்ளையையும் அதுபோல் வளர்க்கப் பிறரிடம் போய்ப் பல்லைக் காட்டிக் கெஞ்சுகிறான். ஒழுக்கக் கேடான காரியங்களில் ஈடுபடுகின்றான். அவர்களைக் காப்பாற்றத் தன் மானத்தைக் கூட விட்டுத் திரியும்படியான நிலைமை ஏற்படுகின்றது. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் மனிதனின் ஒழுக்கக் கேடுகளுக்கு அதிகக் குழந்தைகளைப் பெறுவது பெரும் காரணமாகும். 


வாழ்வு தங்களுக்கு மட்டும் என்று கருதாமல், தங்கள் இனத்தை, சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தங்களால் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும். இவ்வளவு அறிவுள்ள விஞ்ஞானக் காலத்தில் பார்ப்பான் இன்னமும் உயர்ஜாதிக்காரனாக இருப்பதற்கும், "நாம் சூத்திரர்களாக" இருப்பதற்கும் காரணம் பார்ப்பானுக்கிருக்கிற இன உணர்வால் தான் ஆகும். அவனுக்கிருக்கிற இன உணர்வு நமக்கு இல்லாத காரணத்தால் நாம் தான் இன்றைக்குச் சூத்திரர்களாக இருக்கின்றோம். இராமாயணத்தில் இராமன் தன் மனைவியை விட்டுக் கொடுத்து, தன் இனத்தைப் பாதுகாத்திருக்கின்றான் என்று எழுதி வைத்திருப்பது, பார்ப்பான் அதைப் பார்த்து அதன்படி தன் மனைவியை விட்டுக் கொடுத்தாவது தன் இனத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காகவேயாகும். 

நம் மக்களுக்கு இன உணர்ச்சி இல்லாத காரணத்தால் மனித சமுதாயத்தில் நாம் மிக அடிமையில் கிடக்கின்றோம். தலையில் பெரும் பாரங்களிருக்கின்றன. அவற்றிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பழைய புராண - இதிகாச இலக்கியக் குப்பைகளை யெல்லாம் தூக்கி வீசி எறிந்துவிட்டு புதுமையை நோக்கிச் செல்ல வேண்டும். கோயில், குளம், தேர்த் திருவிழா, பண்டிகை என்றெல்லாம் போகாமல் தொழில் நகரங்களுக்குச் சென்று தொழிற்சாலைகளைப் பார்க்க வேண்டும். அங்குள்ள இயந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைக் காணவேண்டும். பொருட்காட்சிகள் கண்காட்சிகள் இவற்றைச் சென்று காண வேண்டும். இவை நம் அறிவை வளர்ப்பதோடு, நன்மையான உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் சாதனங்களாகும். நம் சமுதாயம் மிகக் கெட்டுப் போன சமுதாயம். நாம் ரொம்பவும் முன்னேற்ற மடைய வேண்டியவர்களாக  இருக்கின்றோம். 


இந்தக் காலத்திலும் மக்கள் நெற்றியிலே சாம்பலையும், எண்ணெய்யையும் காணும்போது எனக்குப் பரிதாபம் ஏற்படுவதில்லை. கோபம் தான் வருகின்றது. எத்தனையோ ஆண்டுகளாக இவற்றை நாம் பின்பற்றி வந்து சூத்திரர்களாகத் தான் இருக்கின்றோமே ஒழிய, சூத்திரத் தன்மையிலிருந்து விடுபடுவதில்லை. சாம்பலும், மண்ணும் சூத்திரத் தன்மையை நிலைநிறுத்தும் குறிகள். நம் கடவுள், மதம், கோயில், குளம் நாம் கொண்டாடும் பண்டிகை விழா யாவும் நம் சூத்திரத் தன்மையை நிலை நிறுத்துவதேயாகும். 

அவற்றிலிருந்து நாம் விடுபட்டு, மானமுள்ள, சூத்திரத் தன்மையற்ற மக்களாக வாழ வேண்டும். 


-------------------------------- 03.11.1968 அன்று நடைபெற்ற இராசகோபால் - நீலமணி திருமணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 06.11.1968

29.4.15

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி என்று பெரியார் சொன்னார் என்று கூறுவது அறியாமை! தவறான செய்தி!

மனித நேய இயக்கம் திராவிடர் கழகம்: மதவெறி கும்பல் அறியுமா?

-

திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும்! சொல்வது யார்? காந்தியையே சுட்டுக்கொன்ற, பாபர் மசூதியை இடித்த, தேவாலயங் களைத் தகர்த்த, இஸ்லாமியர்களை, கிறித்தவர்களைக் கொளுத்திக் கொன்ற மதவெறி அமைப்புகளைச் சேர்ந்த மதவெறியர்கள்.

பலமுறை தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட வர்கள்.

திராவிடர் கழகத்தை உருவாக்கிய தந்தை பெரியார் என்றால் என்ன பொருள் தெரியுமா?

பெரியார் = மனிதநேயம்

மனிதத்தின் மறுபெயர் பெரியார்!

மனிதனை மானமும் அறிவும் உள்ளவனாக மாற்றுவதே தன் வேலை யென்று பொதுவாழ்விற்கு வந்தவர்.

எனக்கு நாட்டுப்பற்றோ, மொழிப் பற்றோ, மதப்பற்றோ, சாதிப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது. மனிதப் பற்றே என் இலக்கு என்றவர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த மண்ணின் உரிமையாளர்க ளான திராவிடர்கள் ஆரிய பார்ப் பனர்களால் அடக்கி ஆதிக்கம் செலுத்தப்படுவதை எதிர்த்தும் திரா விட மக்கள் இழிமக்களாக நடப் பிலும், சாஸ்திரங்களிலும் நடத்தப் படுபடுவதைக் கண்டித்தும் திராவிடர் கழகத்தைத் தொடங்கினாரே ஒழிய. திராவிட மக்கள் மட்டும் வாழ்ந்து மற்றவர்கள் விரட்டப்படவேண்டும் என்பதற்காக அல்ல.

இதை பெரியாரே சொல்கிறார் பாருங்கள்

பார்ப்பனர்கள்இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் செயல்திட்டமும் அது வல்ல. திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும் என்பது தான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

தவிரவும் பார்ப்பனர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை. அவர்கள் அனுசரிக் கிற சில பழக்க வழக்கங்களையும், முறைகளையும் நாங்கள் எதிர்க்கி றோம். இது அவர்கள் மனம் வைத் தால் மாற்றிக்கொள்வது பெரிய காரியம் அல்ல.

விஞ்ஞானம் பெருக்கம் அடைந்து விட்டது. இந்நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பா னேன்? ஆகவே உள்ள பேதம் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் பாடுபடுகின்றேன். நம்மிடையே பேதவுணர்ச்சி வரக்கூடாது என்பதில் எனக்குக் கவலையுண்டு.

எனவே முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக் கவலையுண்டு.

காலம் எப்போதும் ஒன்றுபோல இருக்க முடியாது. நம்மில் இரு தரப் பிலும் பல அறிஞர்களும் பொறுமை சாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்பிற்கிடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர்கழக பின் சந்ததிகளும், பார்ப்பனர்களின் பின் சந்ததிகளும் இப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆகவே, அதிருப்திகளுக்குக் கடின மானவற்றை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம். எனவே கால வளர்ச்சிக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று சென்னை இராயப்பேட்டை, இலட்சுமிபுரத்தில் பார்ப்பனர் சங்கக் கூட்டத்திலே (5.1.1953) பேசியவர் பெரியார் அவர்கள்.

                                                               -----------------------------------------------(விடுதலை: 8.1.1953)
அது மட்டுமா?

16.1.1946 மாலை 4.30 மணிக்கு சின் னாளப்பட்டியில் பொதுக்கூட்டம். பெரியார் பேசிக்கொண்டிருக்கிறார். பெரியாரை எதிர்க்கும் காலிகள் கூச்சலிடுகிறார்கள். என்றாலும் ஒலி பெருக்கி உதவியால் கூச்சலைப் பொருட்படுத்தாது பெரியார் தொடர்ந்து பேசுகிறார். காலிகள் ஆத்திரம் மேலிடகற்களை வீசு கிறார்கள். உடனே பெரியார் சால் வையை தலையில் பாதுகாப்பிற்காகக் கட்டிக் கொண்டு பேசினார். ஆனால் காவல்துறையினர் கேட்டுக்கொண் டதை மதித்து கூட்டத்தை முடித்தார்.

இது எதைக்காட்டுகிறது? பெரியார் எதற்கும் அஞ்சாத வீரர் என்பது மட்டுமல்ல; காவல் துறையை மதித்து நடக்கும் கட்டுப்பாடு உடையவர்; சட்டத்தை மதிக்கும் கண்ணியமான வர் என்பதல்லவா?

12.5.1946 இல் முதலாவது மாகாண கறுப்புச் சட்டைப்படை மாநாட்டுப் பந்தலை, வைத்தியநாத அய்யர் தூண்டுதலில் காலிகள் கொளுத்திய போதும், கருஞ்சட்டைத் தொண்டர் களை (பெண்கள் உள்பட) காலிகள் அடித்து நொறுக்கிய போதும், நிதா னம் இழக்காமல் பொறுமையைக் கடைப்பிடித்தார் பெரியார்.

அன்றைக்கு கருஞ்சட்டைத் தோழர் 20 ஆயிரம்பேர் கூடியிருந் தனர். பெரியார் கண்ணை அசைத் திருந்தால் எதிரிகள் முற்றிலும் அழிக் கப்பட்டிருப்பர்.

வலிமையிருந்தும் வீரம் இருந்தும் மனிதம் காத்தவர் பெரியார். அதனால் தான் திரு.வி.க. அவர் கள், ஈரோட்டில் திராவிட நாடு படத்தை திறந்து வைத்து திராவிட மக்களுக்கு நல்வழிகாட்ட பெரியார் அவர்கள் நம் அடிமை வாழ்வை மாற்றி இன்ப வாழ்வை அமைத்துக் கொடுக்க இயற்கை தோற்றுவித்த பெரியார்தான் நமது ஈரோட்டுப் பெரியார்.

காந்தியாரையும் மிஞ்சிய அஹிம் சர்வாதியாகவும் சாக்ரட்டீசை மிஞ்சிய அளவுக்கு சமுதாய சீர் திருத்தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார். என்று புகழ்ந்தார்.

                                                             ----------------------------(30.10.1948 விடுதலை) 

கடலூர் மஞ்சக்குப்பத்தில் முட்டை ஓட்டில் மலத்தை நிரப்பி பெரியார் மீது வீசினர். அதன் பின்னர் செருப்பையும் பாம்பையும், பாலம் அருகில் வீசினர். அப்போது தொண்டர்களைக் கட்டுப்படுத்தி அமைதி காத்தவர் பெரியார். இதுவரை பெரியாரோ திராவிடர் கழகமோ எந்த வன்முறையிலாவது ஈடுபட்டார்கள் என்று யாராவது ஆதாரத்துடன் கூறமுடியுமா?

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிட்டு பார்ப்பானை அடி என்று பெரியார் சொன்னார் என்று கூறுவது அறியாமை! தவறான செய்தி!

அதுவொரு வடநாட்டுப் பழ மொழி என்பதும் பலமுறை விளக்கப் பட்டுள்ளது.

பெரியார், ஆதிக்கம் எங்கிருந் தாலும் அதை எதிர்த்தார். மனித நேயத்திற்கு எதிரானது ஆதிக்கம் என்பதால் அதைச் செய்தார்.

பார்ப்பனர்கள் சாதியாலும், சாஸ்திரத்தாலும், கல்வியாலும், பழகும் முறையாலும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதோடு, இழிவு படுத்தியதாலும் அவர்களை எதிர்த்தார்.

பெண்களை அடிமைப்படுத்து வதை, பெண்ணுரிமையைப் பறிப் பதை, பெண்களை போகப்பொரு ளாக, பிள்ளை வெறும் கருவியாகக் கருதுவதை எதிர்த்தார்.

சாதியை எதிர்த்தார், மூடநம் பிக்கையை எதிர்த்தார். பதவியை வெறுத்தார், ஏற்றத்தாழ்வை மறுத்தார். சமதர்மத்தை வளர்த்தார்.
பெரியார் இயக்
கமும் தொண்டர்களும் அதையே செய்கின்றனர். தன் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு தன்காசைச் செலவிட்டு இழிவையும், ஏச்சையும் பரிசாகப் பெற்று மனிதங்காக்கும் திராவிடர் கழகம் ஒரு மனிதநேய இயக்கம் மறவாதீர். அப்படிப்பட்ட இயக்கத் தைத் தடைசெய்யச் சொல்பவர் களைத் தடைசெய்ய வேண்டும்!

  ----------------------------மஞ்சை வசந்தன் ------------”விடுதலை” 29-04-2015

Read more: http://www.viduthalai.in/page-2/100558.html#ixzz3YhEsOer8

28.4.15

திராவிடர் கழகத்தை எதிர்ப்போரே - இவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இந்து மதத்தில் பெண்கள் நிலைபெண்களின் அந்தஸ்து பற்றி

1.    நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக்காரனாகவாவது ஒரு ஸ்திரியாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்.

2.    மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன்முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.

3.    போதாயனர் கூறுவது _: எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமைகட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக்கூடாது.

4.    மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்.  _ (சுந்தர காண்டம் 5)
5.    மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும்படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன்மாரும், வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் _ ஒரு பெண் ஆனவள் ஒருபோதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடையவளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ, அலட்சியக் காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ்வளவு அற்ப ஜீவர்களாகவே இருக்கிறார்கள்.

6.    உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம்சமென்னவெனில், அவளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவனையே அவள் மரியாதை செய்யட்டும்... ஒரு புருஷன் துர்நடத்தையுடையவனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம்போலவே கருதுகிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள். (அத். 5, 154)

7.    மனு, ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளா கத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது: ஒரு மங்கையானவள் தான் மணம் செய்துகொண்ட ஒரு புருஷன் என்ன குணங்களையுடை யவனாயிருக்கின்றானோ அதே குணங்களையே அவளும் அடை வாள் _ எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப்போல்.
(அத்தியாயம் 9, 22)


8. போதாயனர் உரைப்பது: மாதர்கள் அறிவே இல்லாதவர்கள்: அவர்கள் சொத்துரிமை கொள்ளும் யோக்கியதையற்றவர்கள்.

திராவிடர் கழகத்தை எதிர்ப்போரே - இவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?
                      ----------------------------------”உண்மை” ஏப்ரல் 16 30 _2015

27.4.15

பகவான் சோதிக்கிறார்!-பெரியார்

பகவான் சோதிக்கிறார்!

(சுயமரியாதை தொண்டனுக்கும் - பிள்ளைவரத்துக்கு இராமேஸ்வரம் செல்லும் மிராஸ்தாரனுக்கும் சொல்லாடல்)


 சுயமரியாதைக்காரன்:-   

மிராசுதார்வாள்! உங்கள் வீட்டில் இன்று தடபுடல் சமாராதனை பலமாக இருக்கிறதே! என்ன விசேஷம்? எதற்காக உங்கள் வீட்டில் இத்தனைப் பார்ப்பனர் கூட்டம்?

 மிராசுதார்:-   

வாங்க தம்பி, உங்களுக்கும் சொல்லி அனுப்பினேனே, யாரும் சொல்லவில்லையா? உங்கள் வீடு நம்ம ஆளுக்குத் தெரியவில்லைபோல் இருக்கிறது.

 சுயமரியாதைக்காரன்:-  
 
 இல்லை, பரவாயில்லை! நான் இந்த ஊருக்குப் புதியவன் தானே! என்ன விசேஷம்?

 மிராசுதார்:-   

நான் இராமேஸ்வர யாத்திரை போகிறேன். அதற்காக பிராமண சமாராதனை செய்கிறேன்.

 சுயமரியாதைக்காரன்:-   

நீங்கள் இராமேஸ்வரத்திற்கு உங்கள் பணச் செலவில் போகிறீர்களா? பிராமணர்கள் செலவில் போகிறீர்களா?

 மிராசுதார்:-   

நல்லா சொன்னிங்கோ தம்பி! எங்காவது பிராமணாள் நமக்குக் கொடுப்பாங்களா? என் செலவில் தான் போகிறேன்.

 சுயமரியாதைக்காரன்:-  
 
உங்கள் செலவில் நீங்கள் ஊர்ப்பயணம் போவதானால் இந்தப் பார்ப்பான்களுக்கு எதற்காகச் சோறு போடுவது?

 மிராசுதார்:-   

இப்பேர்ப்பட்ட இடங்களுக்குப் போவதனால் பிராமணாள் ஆசீர்வாதம் பெற்றுப் போவது நல்லது. ஆதலால் பெரியோர்கள் அப்படி நியமனம் செய்திருக்கிறார்கள்.

 சுயமரியாதைக்காரன்:-   

நல்ல பெரியோர்கள்; அடிமுட்டாள் பெரியோர்கள், சோம்பேறிகளுக்குச் சோறு போடச் சொன்ன பெரியோர்கள்!

 மிராசுதார்:-   

சேச்சே, அப்படியெல்லாம் சொல்லாதிங்கோ தம்பி! அவர்கள் காதிலே கேட்டால் நாம் சமாராதனை செய்த பலன் வீணாகிவிடும். தவிரவும் எந்தப் பிராமணர் பல்லிலாவது விஷம் இருக்கும். அவர்கள் ஏதாவது சொன்னால் பலித்துவிடும்.

 சுயமரியாதைக்காரன்:-   

 எந்தப் பார்ப்பனர் வாயிலாவது என்ன, எல்லாப் பார்ப்பனர் வாயிலும் தான் விஷம் இருக்கும். ஆனால் அது நம்மிடம் பலிக்காது. அந்த விஷம் நம்மை ஒன்றும் செய்யாது. நாம் ஒருநாளும் அவர்கள் எச்சில் சாப்பிடப் போவதில்லை. அதுக்கிடக்கட்டும்; இராமேஸ்வரத்துக்கு எதற்காகப் போகிறீர்கள்?

 மிராசுதார்:-   

நாம் செத்தால் நாளைக்கு நமக்கு எள்ளும், தண்ணீரும் இறைக்கிறதற்கு ஒரு பிள்ளை வேண்டாமா? நான் 3-சம்சாரம் கட்டியாய்விட்டது, நாகப் பிரதிஷ்டை என்ன, அரசமரம், வேப்பமரம், கல்யாணமென்ன, பல ஸ்தல யாத்திரை என்ன, சாந்தி என்ன, வரடி கல் சுற்றுவது என்ன, என்னமோ சாஸ்திரங்கள் சொன்னதையும், பிராமணாள் சொன்னதையும், பெரியவாள் சொன்னதையும் எல்லாம் செய்து பார்த்து ஆய்விட்டது. பகவான் சோதிக்கிறார். ஆதலால் கடைசி முயற்சியாக இராமேஸ்வரம் போய் அங்கு நாகபிரதிஷ்டை செய்து கோதானம் முதலிய எல்லா காரியங்களையும் செய்து பார்ப்பது என்பதாகச் செல்லுகிறேன்.

 சுயமரியாதைக்காரன்:-  
 
மூன்று சம்சாரம் (பொண்டாட்டி) கட்டியும் பிள்ளை இல்லை என்றால் இனி இந்தக் காரியங்களால் குழந்தை எப்படி வரும்?

 மிராசுதார்:-   

நீங்கள் குழந்தை இல்லாமல் போவதைப் பற்றிய சாஸ்திரம் பாருங்கள். ஏதோ தோஷம் காரணமாக இருக்கும்; அது நிர்வத்தியானால் பாக்கியமுண்டாகும். ஆதலால் தோஷ நிவர்த்திக்காக இதெல்லாம் செய்ய வேண்டும்.

 சுயமரியாதைக்காரன்:- 
  
என்ன தோஷமிருக்கப் போகிறது? உங்கள் முதல் தாரம் மனைவி எங்கே?

 மிராசுதார்:-  
 
அவளை வெகுநாள்களுக்கு முன்பாகவே உதைத்து அவள் தாயார் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்.

 சுயமரியாதைக்காரன்:-   

அய்யய்யோ! ஏன் அப்படிச் செய்தீர்கள்?

 மிராசுதார்:-   

கல்யாணமாகி 12-வருஷமாக நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். அவள் ஒரு குழந்தைகூட பெறவில்லை. அதனால் எனக்கென்னமோ அந்த மூதேவியைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. ஒரு நாள் என்னமோ நான் கவலையாக இருக்கும் போது அவள் "நான் தூரமாய் விட்டேன்" (வீட்டுக்கு விலக்கு) என்று சொல்லிக் கொண்டு அதோ அந்த தாழ்வாரத் திண்ணையில் போய் உட்கார்ந்தாள். என்னமோ எனக்கு அவளைப் பார்த்ததும் என்னை அறியாமல் கோபம் வந்தது. "இன்னுமாடீ நீ தூரமாகிறாய்" என்று விறகு கட்டையை எடுத்து மண்டையில் அடித்து, இனிமேல் இந்த வீட்டுப்பக்கம் வர வேண்டாம் என்று விரட்டி விட்டேன். அன்று போனவள் தான் தகப்பன் வீட்டுக்கு; பிறகு அவள் முகத்திலேயே விழிக்கவில்லை.

 சுயமரியாதைக்காரன்:-   

அட பாவமே! அப்புறம்...?

 மிராசுதார்:-   

அப்புறம் என்ன? அப்புறம் உடனே போய் வேறு ஒரு கழுதையைக் கட்டிக் கொண்டு வந்தேன்.

 சுயமரியாதைக்காரன்:-  
 
அதென்ன, கழுதையைக் கட்டிக் கொண்டு வந்தேன் என்கிறீர்களே?

 மிராசுதார்:-   
ஆமாம்! அது கழுதைதான். ஒரு சின்னச்சாதி பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தேன்.

 சுயமரியாதைக்காரன்:-   

சின்னச்சாதி பெண்ணா, அவுங்க எங்கே?

 மிராசுதார்:-   

அவுங்க ஒரு பட்டமாக்கும்? அந்த தொண்டுக்கு அந்தக் கழுதை 5000-ரூபா நகையோடு நம்ம வண்டிக்காரப் பையன் ஒருத்தன் "கள்ள"ப் பையன் அவனை இழுத்துக்கிட்டு ஒடி பினாங்கெல்லாம் கெட்டலைஞ்சு 4, 5- பிள்ளைகளை பன்னிக்குட்டிகளாட்டமா பெத்துக்கிட்டு வந்து, இப்போது ஆலங்குடியிலே கூலிவேலை செய்துகிட்டுத் திரிகிறாள்.

 சுயமரியாதைக்காரன்:-   

அந்த அம்மாவுக்கு 4, 5-பிள்ளைகளா?

 மிராசுதார்:-   

ஆமா! கழுதைக்கு; இப்பகூட செனையாய் இருக்கிறாள் என்று சொன்னாள் நம்ம வீட்டு வேலைக்காரி.

 சுயமரியாதைக்காரன்:- 
  
அப்படிப் "பன்னிக்குட்டி போடுவது போல" பிள்ளைபெறுகிற அம்மாளுக்கு உங்களிடம் இருக்கும் போது ஏன் பிள்ளை உண்டாகவில்லை?

 மிராசுதார்:- 
  
 அதுதான் தம்பி நான் முன்னையே சொன்னேனே, பகவான் நம்மை சோதிக்கிறார் என்று.

 சுயமரியாதைக்காரன்:-   
"பகவான் சோதிக்கிறார்." அப்புறம் என்ன செய்தீர்கள்.

 மிராசுதார்:-   

கொஞ்சம் நாள் பொறுத்து ஜோசியம் பார்த்து இப்போது 2, 3- வருஷத்துக்கு முன் வேறு ஒரு பெண்ணை கலியாணம் செய்து கொண்டேன். அது நல்ல பொண்ணு; மூடின கதவு மூடினாப்பிலே, போட்டதாள் போட்டாபிலே வீட்டுக்குள்ளாக வைத்திருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த 2, 3-வருஷமாக பகவான் கண் விழிக்கவில்லை.

 சுயமரியாதைக்காரன்:-   

உங்கள் கதை நன்றாக இருக்கிறதே. முதல் பெண்டாட்டியை அவர்கள் தூரமாகிறார்கள் என்று (பிள்ளை பெறவில்லை என்று) அடித்து விரட்டி விட்டீர்கள்.

"2-வது பெண்டாட்டி "வண்டிக்காரப் பையனுடன் உங்களை விட்டு ஓடிப் போய்விட்டார்கள்."

மூன்றாவது பெண்டாட்டியை ஜெயில் கைதி மாதிரி காவலில் வைத்திருப்பது போல் சிறை வைத்திருக்கிறீர்கள்.

இந்த நிலைமையில் "பகவான் சோதிக்கிறார்" என்று இராமேஸ்வரம் போகிறேன் - பிள்ளை வரத்துக்கு என்கிறீர்களே! உங்களுக்கு சொத்து இருக்கிறதே ஒழிய, யோசனை இல்லை.

 மிராசுதார்:-   

ஏந்தம்பி இப்படி சொல்றீங்களே!

 சுயமரியாதைக்காரன்:-  
 
பிள்ளை இல்லை என்றால், ஏன் பிள்ளை இல்லை என்று டாக்டரை கேட்க வேண்டாமா?

 மிராசுதார்:-   

அவன் கெட்டான் மடப்பயல்கள்! நானும் அதையும் பார்க்கலாம் என்று இரண்டு டாக்டரைக் கேட்டேன். அவன் உங்களுக்குப் "பிள்ளை பிறக்காது" என்று சொன்னான்கள். காரணம் என்னான்னா வாத சரீரமாம்;

254-பவுண்டு எடையாம். நாடியிலே கோளாறு இருக்குதாம். அந்த எண்ணத்தை அதாவது பிள்ளை எண்ணத்தை விட்டு விட வேண்டுமாம். இது சொல்றதுக்குத்தானே இந்தப் பசங்களுக்கு காலேஜ் வெச்சிப் படிப்பு சொல்லிக் கொடுக்கிறது? பார்த்து சொல்றதுக்கு 20, 30-கொடுக்கிறது?

 சுயமரியாதைக்காரன்:- 
  
 அய்யா கோபித்துக் கொள்ளாதீர்கள்; டாக்டர்கள் சொன்னது சரியாகத்தானே இருக்கிறது!

 மிராசுதார்:-  
 
என்ன தம்பி நீங்களும் அவன்களாட்டமா பேசிறிங்ககோ?

 சுயமரியாதைக்காரன்:- 
  
அவங்க சொன்னதிலே தப்பு என்னாங்கோ, நீங்கள்
254-பவுண்டு எடை இல்லையா?

அன்றியும் முதல் மனைவிக்கும் உங்களால் குழந்தை கொடுக்க முடியவில்லை. அதனால் தானே அவுங்க தூரமானாங்க.

இரண்டாவது மனைவி உங்கள் நிலையை அறிந்து நீங்கள் பிடிக்காததால் ஓடிவிட்டார்கள். ஓடின பிறகு வேறு ஒருவருடன் கூடி வாழ்ந்து 4, 5- பிள்ளைகள் பெற்று இருக்கிறார்கள்.

மூன்றாவது மனைவி விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொண்டு சிறை வைத்து இருக்கிறீர்கள். அவர்களுக்கும் பிள்ளை கொடுக்க உங்களால் ஆகவில்லை. பெண்களுக்குப் பிள்ளை புருஷன்தான் கொடுக்க வேண்டுமா அல்லது அவர்கள் தானே பெற்றுக் கொள்வதா?

அப்படியானால் இன்றைய பெண்கள் சமுதாயத்தில் 100–க்கு 20–வீதம் உள்ள (கணவனை இழந்த) விதவைகள் எல்லாம் ஏராளமாகப் பிள்ளைப் பெற்றுக் கொள்வார்களே. புருஷன் இல்லாதததால்தானே அவர்கள் பாவம் பிள்ளைபெற முடியாமல் இருக்கிறார்கள். இதுகூடவா உங்களுக்குத் தெரியாது! டாக்டர்கள் உங்களுக்கு மருந்து ஒன்றும் சொல்லவில்லையா?


 மிராசுதார்:-   

 அப்படி ஏதாவது மருந்து சொன்னாலும் பரவாயில்லையே. "உங்களுக்கு அதுவே இல்லை, அந்த எண்ணத்தையே விட்டு விடுங்கள்" என்கிறான்களே அயோக்கியப் பயல்கள்.

 சுயமரியாதைக்காரன்:-   

நாட்டு வைத்தியர்கள் இடம் கேட்டுப் பார்க்கிறதுதானே!

 மிராசுதார்:-   

அவன்களும் தங்கபஸ்பம், தாம்பர பஸ்பம், தாது விருத்தி லேகியம், கண்டது கழுதைகள் என்ன என்னமோ செய்து கொடுத்தான்கள். கொடுத்துவிட்டு, "எங்களால் இவ்வளவு தான் முடியும். இனி பகவான் பார்த்து ஏதாவது செய்தால் தான் உண்டு" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்கள்?

 சுயமரியாதைக்காரன்:-   

கோவிச்சிக் கொள்ளாதீர்கள். நான் ஒன்று கேட்கிறேன். உங்கள் மனைவிகளில் ஒரு அம்மா ஏன் ஓடிப்போய்விட்டார்கள்?

 மிராசுதார்:-   

அந்தக் கொழுத்த சிறுக்கி பையனைத் தேடிகிட்டு ஓடிப்போயிட்டா!

 சுயமரியாதைக்காரன்:-   
அதுதான் போகட்டும். இந்த அம்மாளை ஏன் பூட்டி வைத்திருக்கிறீர்கள்?

 மிராசுதார்:-   

இவளும் அப்படி ஓடிவிட்டா என்ன பண்றது என்று நகை, நல்ல துணி ஒன்னும் கொடுக்காமே வைத்திருக்கிறேன்.

 சுயமரியாதைக்காரன்:-   

சோறு போட்றீங்களா? நகை, துணி கொடுக்கிறீங்களா?

 மிராசுதார்:-   

அதுக்கென்ன கேடு. நல்லா திண்ணு ஓவ்வொருத்தியும் குதிருபோல ஆனாளுங்கோ. நகை துணிக்கும் குறைச்சலில்லேங்கோ. ஆனால் ஓடீட்டா என்ன பண்ணறது என்று கழட்டி வைத்திருக்கிறேன்!

 சுயமரியாதைக்காரன்:-   

சோறு போட்டு, நகையும் போட்டு, நல்ல துணியும் கொடுத்து இருந்தும், ஏன் உங்கள் மனைவிகள் ஓடுகிறார்கள். இதைப் பார்த்தால் டாக்டர் உங்களுக்கு "அது இல்லை" என்பது வாஸ்தவம்தானே. நீங்கள் மிகவும் பெருத்துவிட்டீர்கள். 254-பவுண்டு; எடை. உங்கள் வயிறு மேடு போல் ஒரு முழம் முன்னுக்கு வந்துவிட்டது. உங்களால் நடக்கவே முடிவதில்லை. உட்கார்ந்தால் எழுந்திருக்க ஆள் தூக்கிவிட வேண்டும். எழுந்தால் உட்கார ஆள் பிடித்து உட்கார வைக்க வேண்டும். வயது கிட்டத்தட்ட அறுபது ஆகிறது? இந்த நிலையில் சிறைச்சாலைக் கைதிகள் போல் மனைவியை அடைத்து வைக்கிறீர்கள்!

ஆகவே உங்களுக்கே தெரிகிறதே, உங்களுக்கு அந்தச்சக்தி இல்லை என்பது. வீணா ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏன் கண்ட பக்கம் செல்லுகிறீர்கள்? வீணாக ஏன் உங்கள் பணத்தை பதினாயிரக்கணக்கில் செலவு செய்கிறீர்கள்? எந்தக் கடவுளாலும் நேரிடையாய் வந்து பிள்ளை கொடுக்க முடியாது. உங்கள் மூலம் தான் கொடுக்க வேண்டும். உங்களுக்கோ அதே இல்லை என்பது டாக்டர்களாலும், உங்கள் மனைவிமார்களாலும் ருஜூவாகிவிட்டது.

உங்களுக்கும் அது தெரிந்திருக்கலாம். அப்படி இருக்க இந்தக் காலத்தில் - அதாவது பரிசுத்த ஆவியினால் பிள்ளை உண்டாகிற காலமல்ல இது. அல்லது விரத மகிமையினால் கர்ப்பம் உண்டாகிற காலமல்ல இது. இப்படிப்பட்ட காலத்தில் பகவான் பிள்ளை கொடுப்பார் என்றால் என்ன அருத்தம்? உடல் கூறுகளில் ஆண் மலடு, பெண் மலடு என்று இரண்டு உண்டு. ஓடிவிட்ட உங்கள் மனைவி கதையைப் பார்த்தால் அந்த அம்மாள் மலடு அல்ல, நீங்கள் தான் மலடு என்பதை அந்தம்மாள் ருஜூ செய்துவிட்டார்கள் என்று தான் கொள்ள வேண்டும். ஏனெனில் உங்களை விட்டுப் போனபிறகு 4, 5- குழந்தைகளைப் பெற்று இருக்கிறார்கள்.

ஆரிய சாஸ்திரங்களில் "பெண் மலடானால் வேறு மனைவியைக் கட்டிக் கொள்ளலாம்" என்றும், "ஆண் மலடானால் அந்த மலடன் - புருஷன் தன் மனைவியைப் பங்காளி உறவு உள்ளவர்களிடம் ஒப்புவித்துக் கர்ப்பம் உண்டாக்கிக் கொள்ளலாம்" என்றும் இருக்கிறது. இப்படி நடந்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. பல மிராசு, ஜமீன், பிரபு குடும்பங்களில் இப்படி நடந்தும் இருக்கின்றன. உங்கள் மனைவியை அடித்துக் கொண்டு ஓடிவிட்ட அந்தப் பையனுக்கு நீங்கள் சற்று ஜாடை மாடையாய் இடம் கொடுத்து உங்கள் வீட்டிலேயே பிள்ளையை உண்டாக்கிக் கொண்டிருக்கலாம்; தவறி விட்டீர்கள். போனது போகட்டும். அந்த முறை உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் பிள்ளை ஆசையை விட்டுவிடுங்கள்.
இந்த மனைவியாவது ஓடிவிடாதபடி அன்பாய் அவர்கள் இஷ்டப்படி இருக்க விடுங்கள். அதனால் ஒரு சமயம் உங்களுக்குக் குழந்தை உண்டாகலாம். வீணாக ராமேஸ்வரம் யாத்திரைக்கு 5,000, 10,000- பார்ப்பனர்களுக்கு அழுகாதீர்கள். நீங்கள் தினம் ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டு 6-மாதத்தில் உங்கள் எடையில் 100- பவுண்டை குறையுங்கள்.

இல்லாவிட்டால் ஒரு நல்ல குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள். பகவான் உங்களை சோதிக்கிறார் என்று கருதி நீங்கள் பகவானை சோதித்து முட்டாளாகாதீர்கள். இந்தப் பார்ப்பனர்கள் உங்களை மொட்டை அடித்து விடுவார்கள்!

 மிராசுதார்:-
   
தம்பி உங்களுக்கு அனுபவம் போதாது. என்னைவிட வயதானவர்கள் எல்லாம் பிள்ளை பெற்று இருக்கிறார்கள். பகவான் மனது வைத்தால் பிள்ளை உண்டாவது அதிசயமல்ல. ஏன் வாய்ப்பட்டி மிராசுதார் பெரிய பண்ணை அவருக்கு வயது 65, அவருடைய 4–வது மனைவிக்கு வயது 20. மாணிக்கம் போல் குழந்தை பெற்று இருக்கிறார்கள். இத்தனைக்கும் அவரும் கறுப்பு, குழந்தை பிராமண குழந்தை போல் செக்கச்செவேர் என்று மூக்கும், மூளியும்; யார் பார்த்தாலும் அவர்கள் குழந்தை என்றே சொல்லமாட்டார்கள். அப்படி அழகு! கோயில் குளங்கள் 2-வருஷம் சுத்தாச்சுற்றி அந்தம்மாளே தனியாக அவர்கள் வீட்டு புரோகிதர் சொன்ன இடங்களுக்கெல்லாம் அவருடனேயே சுற்றிச்சுற்றி அவர் சொன்னபடியெல்லாம் பக்தியோடு கேட்டு கடைசியாக பகவானால் அப்படிப்பட்ட மாணிக்கம் போன்ற குழந்தையை அடைந்து விட்டார்கள். பகவான் பார்த்து மனது வைத்தால் ஆகாத காரியம் உண்டா? நாம் செய்வதைச் செய்வோம். நம்ம புரோகிதர் அய்யர் சொன்னார். ராமேஸ்வரத்தில் ஒரு சாஸ்திரியார் இருக்கிறாராம். அவர் எல்லா தர்மங்களையும் சரியாக செய்வாராம். இதுவரை அவரிடம் தானாதி கர்மம் செய்து சாந்தி செய்து கொண்டவர்களுக்கு ஒருவர் தவறாமல் புத்திர சந்தானம் கிடைத்திருக்கிறதாம். நம்ம புரோகிதர், அவருக்கு வயது 70-ஆகப் போகிறது. அவர் என் மாதிரி பெருத்த உடல்தான்! என்ன என்னமோ செய்து நல்ல புத்திர பாக்கியம் பெற்று இருக்கிறார். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 5. அவர் என்னைவிட ஆள் ஆஜானுபாவாக இருப்பார்! (என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே புரோகிதர் வந்துவிட்டார்)

 மிராசுதார்:-   

வரணும், வரணும், சுவாமி வரணும். நல்ல சமயத்துக்கு பகவான் கொண்டு வந்து விட்டார் உங்களை.


 புரோகிதர்:-   

 (இடது கையை முகர்ந்து பார்ப்பது போல் இடது கையை முக்களவு வளைத்துத் தூக்கி) "ஆசிர்வாதம், ஆசிர்வாதம்! நல்ல புத்திர பாக்கிய சம்பத்து உண்டாக வேண்டும்."

 மிராசுதார்:- 
  
 அப்படி சொல்லுங்கள் ஸ்வாமி!

 புரோகிதர்:-   

 மிராசுதார்வாள். பயணம் எல்லாம் தயாராகி விட்டதோ? நாளை காலை வண்டிக்கே புறப்பட வேண்டியது தானே?

 மிராசுதார்:-   

அதிலென்ன ஆட்சேபம்! எல்லாம் தயாராகி விட்டது. நம்ம சமாராதனை நன்றாக நடந்ததல்லவா? தாங்கள் சொன்னால் சரி.

 புரோகிதர்:-  
 
 ஆஹா தாங்கள் செய்வதில் என்ன குறை இருக்க முடியும்? சில பிராமணாள் தட்சனை சராசரி 2-ரூபாய் வீதம் கொடுத்தது பற்றி திருப்திப்படாமல் முகம் கோணினார்கள்.

மிராசுதார்:-   

அப்படியா? ஆனால் யாத்திரை போய் வந்த பிறகு தாராளமாகச் செய்துவிடலாம்.

 புரோகிதர்:-   

 அந்தக் கஷ்டம் கூட தங்களுக்கு வேண்டாம். இப்போதே பெரியவாளுக்கு மாத்திரம் ஏதாவது சேர்த்துக் கொடுத்து விட்டால் போகிறது. ஏனெனில் நம்ம யாத்திரைக்கு அவர்கள் மனம் குளிர்ந்து ஆசிர்வாதம் செய்வார்கள்.

 மிராசுதார்:-   

 சரி! ஓய் ராமனாதம் பிள்ளை, நம்ம சாமி சொன்னபடி பெரியவர்களுக்கு ஆள் 1–க்கு இன்னம் 2-ரூபாய் வீதம் சேர்த்துக் கொடுத்து விட்டு வாரும்.

 புரோகிதர்:-   

 அப்படிச் சொல்லுங்கள் மகாராஜா! தாங்களா சொல்லுகிறீர்கள்? தங்கள் நாக்கிலே தர்ம தேவதை இருந்தல்லவா சொல்லச் செய்கிறது என்ன பாக்கியம்! என்ன பாக்கியம் தங்களுக்கு!

 சுயமரியாதைக்காரன்:-   

 அய்யா புரோகித அய்யரே! மிராசுதார் பணம் கொடுக்கிறார். பிராமணர்கள் வாங்கிக் கொள்ளுகிறார்கள்! அப்படி இருக்க நீங்கள் மிராசுதாருக்கு "என்ன பாக்கியம் என்ன பாக்கியம்" என்கிறீர்களே! இதன் அர்த்தம் என்ன?

 புரோகிதர்:-   

 தம்பி நீங்கள் சிறுபிள்ளை, உங்களுக்கு அது புரியாது. இந்த பிராமணர்களுக்குக் கொடுத்து அவர்களுடைய ஆசீர்வாதமும், கிரேயசும் பெரும்படியான பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா? கொடுப்பதற்கு
1000–ம் பேருண்டு. வாங்குவதற்கு இப்படிப்பட்ட ஆத்மாக்கள் கிடைக்க வேண்டுமே! எங்கு கிடைக்கும்?

 மிராசுதார்:-   

சாமி! அந்தத் தம்பிக்கு அனுபவம் போதாது. சாமி வாரத்துக்கு செத்தே முந்தி என்னக்கூட இப்படித்தான் கேட்டார், அந்தத் தம்பி. சாமியே வந்துடுத்து.

 புரோகிதர்:-   

என்ன கேட்டார்?

 மிராசுதார்:-     

எனக்கு வயதாகி விட்டதாம். உடல் பெருத்து விட்டதாம். எனக்கு அதில்லையாம், குழந்தை பிறக்காதாம், ஏன் இராமேஸ்வரம் போகிறாய் என்று கேட்டார்.

 புரோக்கர்:-   
  
அடடா அப்படியா கேட்டார்? அப்படி கேட்பது பெரிய தோஷமாச்சுதே! அவருக்கு என்ன தெரியும் - சிறுபிள்ளை! என்னை விடவா உங்களுக்கு வயசு ஆயிடுத்து? என்னை விடவா நீங்கள் பெருத்து இருக்கிறீர்கள்? என்னைவிடவா உங்களுக்கு அதில்லை என்று சொல்ல முடியும்? என் மூத்த மனைவி எனக்கு அதில்லை என்று நோட்டீஸ் கொடுத்து விட்டு ஓடிப்போய் வேறு ஒருவனுடன் கூடி ஓட்டல் காப்பிக்கடை வைத்துக் கொண்டு இருக்காள் ஸ்ரீரங்கத்தில்! அப்படி இருந்தும் இப்போது நான் 60–க்கு மேல் கல்யாணம் பண்ணிக் கொண்டு என் பரியாள் இரண்டு குழந்தை பெற்றிருக்கிறாளே! பகவான் பெருமையை இதுகள் எப்படி அறிய முடியும்? நீங்கள் புறப்படுங்கள் இராமேஸ்வரம். அங்கு சரியானபடி தானம், பிரதிஷ்டை, ஓம யாகம், சமாராதனை செய்துவிட்டு இராமநாதஸ்வாமிக்கு ஒரு மண்டல் அர்ச்சனை செய்து 48-நாள் அங்கிருந்து மண்டலாபிஷேகம் செய்து பாருங்கள். அதற்கு தாங்கள் கூட அங்கு இருக்க வேண்டியதில்லை. அம்மாள் மாத்திரம் இருந்தால் போதும். பிள்ளை பிறக்காவிட்டால் என்னைக் கேளுங்கள்.

 சுயமரியாதைக்காரன்:-  
 
ஓய் புரோகிதரே! நீர் சும்மா அளக்காதேயும்! இங்கே உம்ம சம்சாரம் 2, 3-தடவை உம்ம வீட்டை விட்டு ஓடி ஓடி, நீர் போய் இழுத்துக் கொண்டு வந்து வைத்து வாழுகிறீரா இல்லையா? அந்த ராமேஸ்வர சுவாமி சாட்சியாய் சொல்லும், அந்தப் பிள்ளைகள் இரண்டும் உமக்குப் பிறந்ததா?

உம்ம மூத்த சம்சாரம் உங்க வீட்டுக்கு நகை செய்து கொடுத்த ஒரு ஆசாரி மகனுடன் கூட ஓடப் போய், நீர் அவன் மீது பிராது போட்டு அந்தம்மாள் உமக்கு அதில்லை என்று டாக்டரை விட்டுப் பரிட்சை செய்யச் சொல்ல நீர் கேசை வாபஸ் வாங்கிக் கொண்டு இருப்பதும், இதெல்லாம் எனக்குத் தெரியாதா? பகவான் பிள்ளை கொடுத்தாரா? வேறே மனுஷ ரூபத்தில் வந்து உம்ம மனைவியை அடித்துக் கொண்டு போய் கொடுத்தாராக்கும்!

 புரோகிதர்:-   

 தம்பி இதெல்லாம் உலக சகஜம்தான்! அதிலும் எங்களுக்கு இது எல்லாம் குற்றமாகாது, குறையுமாகாது. ஏன் என்றால் நாங்கள் எல்லாவற்றையும் பகவான் செயல் என்று எண்ணுகிற ஆஸ்திக சிரேஷ்டர்கள். அவனன்றி ஓரணுவும் அசையாது, ஆகையால் பகவான் செய்கையை பரிகாசம் செய்யாதேயும்! அவர் நம்மை பலவிதமாய் சோதிப்பார். அப்படியெல்லாம் பார்த்தால் உலகம் ஒரு நொடி நடக்காது. வேண்டுமானால் பாரும் மிராசுதார் நான் சொன்னபடி நடக்கட்டும், புத்திரபாக்கியம் கிடைக்கிறதா இல்லையா பாரும்!

 சுயமரியாதைக்காரன்:-   

நீர் சொன்னபடி மிராசுதார் நடப்பதானால் அதற்கு ராமேஸ்வரம் போவானேன்? அந்த சாஸ்திரி இடம் கர்மம் செய்து கொண்டு அவர் வீட்டில் 48-நாள் அந்தம்மாள் தனியாய் இருப்பானேன்? அதற்கு 4,000, 5,000- செலவு ஏன்? இங்கேயே நல்ல பிள்ளைகுட்டி இருக்கிறவன் வீடு பார்த்து மிராசுதார் மனைவியை ஒரு இரண்டு மாதத்திற்கு விட்டு வைத்தால் போகிறது. போமய்யா போம். இப்படி எதற்கு ஆக அய்யா பிள்ளை? இதில் உங்களுக்கு எதற்கு சமாராதனை தட்சனை? ராமேஸ்வரம் புரோகிதருக்கு 1000, 2000-எதற்காக அய்யா அழுவது? அதில் உங்களுக்கு தரகு!

 மிராசுதார்:-   

 தம்பி ஜாஸ்தி பேசாதிங்கோ! நான் இப்போது ராமேஸ்வரம் போகவில்லை. மற்றொரு சமயம் பார்க்கிறேன். இப்போது நேரமும், நாளும் நன்றாக இல்லை போல் இருக்கிறது. இந்தப் பேச்சு ஒன்றும் வெளியில் தெரியக் கூடாது.

சாமி, நீங்களும் போய்விட்டுப் பின்னால் சாவகாசமாய் வாருங்கள்; தம்பி சொன்னதைப் பற்றி கோபம் வேண்டாம். பிறகு பேசிக் கொள்ளலாம். எல்லாம் பகவான் சோதனைதான்.

புரோகிதர்:-   

எனக்கு ஒன்றும் கோபம் இல்லை! தம்பி சொல்லுவதெல்லாம் உண்மைதான். இது உலக சுபாவம்தான். உலக நடப்புதான்! பகவான் சாதாரணப்பட்டவர் அல்ல. அவர் திருவிளையாடல்கள் இவர்களுக்குப் புரியாது. ஆதலால் நீங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள். கண்டிப்பாய் பகவான் கிருபை செய்வார். நான் போய் வருகிறேன்.

 மிராசுதார்:-  
 
சரி போய் வாருங்கள்! இராமநாதம் பிள்ளை, சாமிக்கு 5-ரூபாய் கொடுத்தனுப்பும்.

 புரோகிதர்:-   

 (ரூபா வாங்கிக் கொண்டு) இராமநாதா! எல்லாம் உம்ம கிருபை! (என்று சொல்லிக் கொண்டு போய் விட்டார்)


- ---------------------12.03.1950- 'விடுதலை' இதழில் "சித்திரபுத்திரன்" என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

26.4.15

இந்து என்றால் என்ன? - பெரியார்

இந்து என்றால் என்ன? - தந்தை பெரியார்


பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர் களுக்கு முதலில் பிறந்த நாள் கொண் டாடினார்கள் - அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!

கடவுளுக்கு இலக்கணம் கூறியவர் கள் கடவுள் இறக்காதவன், பிறக்காத வன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் - சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன் அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமி யில் பிறந்தான்; கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன் சஷ்டியில் பிறந்தான் என்று கூறி விழாக்கள் - உற்சவங்கள் கொண்டாடினார்கள்.

பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக் கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளையும், செய்யாத சங்கதி களையும் புகுத்தி விழாக் கொண்டாடி னார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.

இவை எல்லாம் மக்களை முட்டாளாக் குவதற்கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச் செய்கின்றார்கள்.

பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும், செய்கின்றவர்க ளுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள். அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.

இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம் செய்யவும் - பரப்பவுமே செய்யப்படுகின்றன.

அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். இப்படி எனது பிறந்த நாள் கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனு மதிக்கிறேன். மக்களும் எனது தொண் டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகை யில் பணம் பல பொருள்கள் முதலியன வும் அளிக்கின்றீர்கள்.


நாங்கள் யார் என்பதை நீங்கள் நன்றாக உணரவேண்டும். நாங்கள் சமுதாயத் தொண்டுக்காரர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் தேர்தலுக்கு நிற்பதோ, ஓட்டுக்காகப் பொதுமக்களிடம் வருவதோ எங்கள் வேலை அல்ல. நாங்கள் பதவிக்குப் போகக்கூடாது என்பதைக் கொள்கை யாகத் திட்டமாகக் கொண்டவர்கள்.

நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள்கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப் பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.

எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப் பாடுபடுவது தான் ஆகும்.

இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன்னுக்கு வரவே இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும், அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டுகளைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத் தோன்றி இருக்கின்றார்கள்.

இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும் நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத் துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத் திரன் என்று எண்ணிக் கொண்டு இருந் தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.

முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது. ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம் என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரி களிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து விட்டது.

அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர், போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு அத் துணையும் தலை கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை - எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும் நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.

இன்றைக்கு அரசியல் துறையிலாகட் டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப் பனர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த்தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.

இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன், சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம் நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.

இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல் லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப் பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம், மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.


இந்து என்றால் என்ன பொருள்? இந்து என்றால் பார்ப்பானைப் பொறுத்தவரையில் உயர்வு பொருள் உண்டு. பார்ப்பனர் அல்லா தாருக்கு இந்து என்றால் என்ன பொருள்? சூத்திரர், தாசிபுத்திரர்கள் என்பதுதானே.

இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும் பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன். மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள் தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.

அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின் றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல `டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது. போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான் யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப் பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக் கொள்கின்றாய்.

அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே - எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின் றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!

உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக - சூத்திரர்களாக ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும் விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.
இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.

அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும் செய்ய முடியாதே!

தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே கெட்டு விடும்?

இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள் ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கட வுளும், மதமும், கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.

அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத் தினால் பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.

மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.

தோழர்களே! இன்று மானமுள்ள - யோக்கியமுடைய மக்களுக்கு நடக்கக் கூடாத எல்லாம் இன்றைக்கு அரசி யல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர் தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப் பதவிக்கு வந்தவர்களே - பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.


தோழர்களே! நான் இப்போது சொல்ல வில்லை. இந்த நாட்டிற்கு என்றைக்கு ஜனநாயகம் என்று கூறப்பட்டதோ அன் றைக்கே காலிகள் நாயகம் தான் ஏற்படப் போகின்றது. காலித்தனம் தான் தலை விரித்து ஆடப் போகின்றது என்று சொன் னேன். இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் இந்த ஆட்சி இன் னது செய்ய வில்லை. இன்ன கோளாறு செய்தது. ஆகவே, ஒழியவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறவில்லையே.

காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள், பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன - நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.

நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாசவேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன.

தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன் றைக்கு நாம் நல்ல வாய்ப்பு உள்ள மக் களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.

இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் - பார்ப்பனர் அல்லாதவர் களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல் தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.

இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட் ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களாக உள்ளார் களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.

பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல துறைகளிலும் வேலைகளி லும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினான்.

இன்றைக்கு அந்த நிலை இருக்கின் றதா? அடியோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.

இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?

இன்றைக்கு எம்.ஜி.ஆர். பெயரில் கலவரம் நடைபெற்றது. இது யோக்கிய மில்லாத, தேவை இல்லாத கலவரம் ஆகும். ஓர் ஆட்சியை ஒழித்து ஒரு கட்சி பதவிக்கு வரவேண்டும் என்றால், காலித்தனம் தான் பரிகாரமா? எனவே, நாட்டின் பொது ஒழுக் கம் அரசியல் பேரால் மிக மிகக் கெட்டுப் போய்விட்டது என்று எடுத்துரைத்தார்கள்.

மேலும், பேசுகையில், எம்.ஜி.ஆர். சுயநலம் காரணமாக தி.மு. கழகத்தில் இருந்துப் பிரிந்து அதனை எதிரிக்குக் காட்டிக் கொடுக்க முன்வந்தமை பற்றியும் திண்டுக்கல் தேர்தலில் பெண்கள் சினிமா மோகம் காரணமாக எம்.ஜி.ஆர். கட்சிக்கு ஓட்டுப் போட்ட கேவல நிலைபற்றியும் விளக்கினார்கள்
.

-------------------------------------------29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973 அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு-"விடுதலை", 12.6.1973.


Read more: http://www.viduthalai.in/page-2/100392.html#ixzz3YPdMa26L