Search This Blog

18.4.15

பெண்ணுரிமைக்குப் பேரிகை கொட்டுவது யார்? பெரியார் இயக்கமா? காவிக் கூட்டமா?

பெண்ணுரிமைக்குப் பேரிகை கொட்டுவது யார்?


பெரியார் இயக்கமா? காவிக் கூட்டமா?


தாலி பெண்களுக்கு வேலியா என்று கேட்டோம். ஆண்கள் ஒழுக்கம் இல்லாத நாட்டில் பெண்களின் பாதுகாப்பை எந்தப் பெட்டியில் பூட்டி வைப்பது?

வேடிக்கை என்னவென்றால் இந்த வக்கிரப் புத்தி ஆண்கள்தான் பெண் களைப் பற்றிக் கவலைப்படுவதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

தாலி பெண்ணுக்கு வேலி என்று சொல் வதும் இந்த வெட்கங் கெட்டதுகள்தான்.


இந்துத்துவாவைத் தூக்கிச் சுமப்பதாகக் காட்டிக் கொள்ளும் இந்துத்துவா சக்திகள் தாலிபற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துக்கு எதிரானவர்களாக இருந்து தொலையட்டும்.

அதே நேரத்தில் பெண்களை இழிவுப் படுத்துவதிலும், மானிடத்தில் ஒரு கூறு  பெண் என்பதை ஒப்புக் கொள்ளாததிலும் இந்து மதத்தை அடித்துக் கொள்வதில் வேறு எந்த சக்தி - அமைப்பு இருக்கிறது - இந்த உலகில்? சொல்லட்டுமே பார்க்கலாம் என்று சவால் விட்டுக் கூடக் கேட்க முடியும்.

இந்து மதத்தின் பொக்கிஷம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலைகிறார்களே - பிரதமர் மோடி வெளி நாட்டுக்குச் செல்லும் போதெல்லாம் தவறாமல் எடுத்துச் சென்று அந்நாட்டு ஆட்சித் தலைவர்களுக்கெல்லாம் மறக்காத முத்திரைப் பரிசாகக் கொடுத்து மகிழ்கிறாரே - அந்தக் கீதை என்ற நூல் பெண்களைப் பற்றி என்ன கூறுகிறது?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்த வர்கள் (Born out of Womb of Sin) (அத்தியாயம் 9 சுலோகம் 32)

பெண்களை இவ்வளவு கேவலமாகக் கொச்சைப்படுத்தும் கீதையை ஏற்றிப் போற்றுபவர்தாம் - பெண்களுக்கு வக் காலத்து வாங்கிப் பேசுவதாக நடிக்கிறார்கள்; பெண்களுக்கு புனிதம் தாலி என்று போலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

மனுவின் வாக்கு வேதவாக்கு என்கி றார்களே - மனு ஸ்மிருதிக்கு முரண்பட்ட ஸ்மிருதிகள் ஏதேனு முளதேல் அவை பிரமாணமாகா.


மனுர்வையத் கிஞ்சி தவத் பேஷஜம்


மனுவின் வாக்கு நோயாளிக்கு மருந்து போல மனிதனுக்கு இதத்தைக் கொடுக்கும். அதனால் சிரேஷ்டமான பிரமாணமாம்!
அப்படிப்பட்ட மனுதர்ம சாஸ்திரம் பெண்களைப்பற்றி என்ன கூறுகிறது?


படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 17).

கணவன் துராசாரம் உள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீ லோலனா யிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும், பதிவிரதையான ஸ்திரி யானவள், அவனைத் தெய்வத்தைப் போல் பூஜிக்க வேண்டியது. (மனுதர்மம் அத்தியாயம் 5 - சுலோகம் 154).

பால்யத்தில் தகப்பன்யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல் லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது (மனு அத்தியாயம் - 5 சுலோகம் - 148) பெண்களையும், பிரா மணர் அல்லாதாரையும் கொல்லுதல் பாதக மாகாது. (மனுஅத்தியாயம் 11 சுலோகம் 65).

ஸ்திரி விபசாரஞ் செய்கிறதினால் உலகத்தில் நிந்திக்கப்படுகிறதுமல்லாமல், இறந்தபின் குள்ள நரியாகவும், பிறந்து வெண்குட்டம் முதலிய கர்ம வியாதி யையும் அனுபவிக்கிறாள் (மனு 5 - சுலோகம் 164).

மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும், விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமானதாக எண்ணி அவர்களைப் புணருகிறார்கள். (மனு அத்தியாயம் - 5 சுலோகம் - 14)


இது போன்று அலை அலையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த மனுதர்ம சாஸ்திரத்தைப்பற்றிதான் திருவாளர் சோ ராமசாமி விழுந்து விழுந்து எழுதிப் பாராட்டுகிறார்.


பெண்களைப் பிறப்பிலேயே கேவலப் படுத்தும் இந்த மனுதர்ம சாஸ்திர நூலைத் தான் 1981 டிசம்பரில் பூனாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அலங்கரித்து எடுத்துச் சென்றனர். (Economical And Political Weekly Dated 6.3.1982)

அன்றைக்கு ஏதோ எழுதி விட்டார்கள் என்று அலட்சியமாகவும் தள்ளிவிட முடியாது. ஆர்.எஸ்.எஸின் இன்றைய தலைவர் திருவாளர் மோகன் பகவத் என்ன சொல்லுகிறார்?


2014 நவம்பர் 14இல்  இந்தூரில் என்ன பேசினார்?


இன்று பெண்கள் அதிகம் கல்வி கற்க ஆரம்பித்து விட்டனர். திருமணத்தின்போது கணவன் மனைவி இருவரின் கல்வியும் சரி சமமாக இருந்து விடுகிறது. சில வேளைகளில் கணவனைவிட மனைவி அதிகம் படித்தவளாக இருக்கிறாள் அல்லது திருமணத்திற்குப் பிறகு படித்துப் பட்டம் பெற்று விடுகிறார்கள்.

சிலர் கணவனைவிட உயர் பதவிக்குச் சென்று விடுகிறார்கள். வருமானமும் கணவனைவிட அதிகம் வரத் துவங்கி விட்டது. இந்த இடத்தில் கணவனின் மன நிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனை விக்கு ஏற்பட்டு விடும். இங்கே ஈகோ தோன்றி விடுகிறது. இந்த ஈகோதான் இந்தியாவில் தற்போது நடக்கும் அதிக மான விவாகரத்திற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.


மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கணவனுக்கு இன்பம் தர வேண்டும். இது பெண்ணின் கடமை. இந்தக் கடமையிலிருந்து பெண் விலகி விட்டால், அவள் தேவையில்லை அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்து விட்டது.

விலக்கிவிட வேண்டும். கணவனின் தேவையை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பலன்? ஆகையால் திருமண காண்டி ராக்டை முடித்து விட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசினாரே! -
இந்த இந்துத்துவக் கூட்டம் தான் பெண்களின் தாலியைப் பற்றிக் கவலைப்படுகிறது.


ஆணும், பெண்ணும் சமம் என்கிறோம்; பெண் திருமணம் ஆனதற்கு அடையாளம் தாலி என்றால், ஆணுக்கும் அந்த அடையாளம் வேண்டும் என்கிறோம். ஆணுக்கு இன்பம் கொடுப்பது மட்டுமே தான் பெண்ணின் வேலை என்று கருதுகிற கூட்டம் இந்த ஆண் - பெண் சமத்துவக் கோட் பாட்டை எப்படித்தான் ஏற்றுக் கொள்ளும்?

அதனால்தான் ஆணுக்கு அடிமை பெண் என்பதற்கான லைசென்சாகக் கட்டப்படுகிற தாலியை அகற்றுகிறோம் என்கிற போது வெடிகுண்டுகளைத் தூக்கிக் கொண்டு வந்து தாக்க முன் வருகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்த ஆர்.எஸ்.எஸின் சிந்தனையே - கோட்பாடே!

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா என்ற பார்ப்பனர் என்ன சொன்னார் தெரியுமா?

Women should go back to their homes and not think of competing with men on everything. since the lady is more capable of building the home, what is necessary that there must be a switch over from office to home.

பெண்கள் வீட்டு வேலைகளை நிருவாகம் செய்வதில் திறமை உள்ளவர்கள். ஆதலால் அவர்கள் அரசு அலுவல்கள் பணிகளிலிருந்து விடுபட்டு அவரவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் பணிகளில் ஈடுபட வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களோடு போட்டிப் போடும் மனோபாவத்தைக் கைவிட வேண்டும்.

(8.11.1996 அன்று பிரம்மகுமாரிகள் மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா உரையிலிருந்து)

இந்த நீதிபதி காஞ்சி சங்கர மடத்திற்கு வருகிறார் என்றவுடன் திராவிடர் கழகம் கறுப்புக் கொடி காட்ட திரண்ட போது, காஞ்சி மடம் வருகையைத் தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் என்றால் ஆண்கள் கிள்ளும் சிறுகீரை என்ற மனப்பான்மைதான் இந்துத் துவா கூட்டத்திற்கு.

பார்ப்பன திருமண முறையை மாற்றி அமைக்க சட்டம் கொண்டு வந்த போதெல்லாம் பாலகங்காதர திலகர் எம்.கே. ஆச்சாரியா, சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பார்ப்பனர்கள் பூமிக்கும் ஆகாயத்துக்கும் தாவிக் குதித்தார்களே.
வெள்ளையர் ஆட்சியில் அதற்கான சட்டமுன் வரைவு 1891 சனவரியில் கொண்டு வரப்பட்டது.


சுயராஜ்யம் எமது பிறப்புரிமை என்ற சுத்த சுயம் பிரகாச கோஷத்தைக் கொடுத்தவர் என்று கொக்கரிக்கிறார்களே அந்தப் பால கங்காதர திலகர் தான் மீசையை முறுக்கி விட்டு முழக்கம் போட் டவர்.

இந்து மதத்தின் கோட்பாடுகளில் கை வைக்க வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறவில் லையா?

திருமண வயது 12 அன்று அந்த சட்டமுன் வடிவு கூறியது. பருவம் அடையுமுன் பெண்ணிடம் உடலுறவு கொள்ளக் கூடாது என்றும் கூறியது அந்தச் சட்டம். அதனை எதிர்த்துதான் அந்த முண்டாசு மீசைக்காரர் முண்டாதட்டி எகிறினார். ஆர்.எஸ்.எஸின் முன்னோர் இவர் என்பதைத் தெரிந்து கொண்டால், பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கும் கழகத்தின்மீது மோதிப் பார்க்கும் இந்துத்துவா கூட்டத்தின் தாத்பரியம் என்னவென்பது புரியும்.

பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று பராசர் கூறுகிறார். பூப்படைவதற்குப் பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்று  உங்கள் சட்டம் சொல்லுகிறது. சட்டத்தை எதிர்த்து சிறைக்குச் சென்றாலும் செல்லுவோமே தவிர - சாஸ்திரத்தை எதிர்த்து ரௌரவாதி நரகத்திற்குச் செல்ல மாட்டோம் என்று சொன்னவர் எம்.கே. ஆச்சாரியா என்ற பார்ப்பனர்.

இந்த எதிர்ப்புச் சாக்கடைகளையெல் லாம் புறங் கண்டு ஹரிபிலாஸ் சாரதா என்ற ஆங்கிலேய அம்மையார் பெண்களுக்குத் திருமணம் வயதை உயர்த்தும் சட்டத்தை நிறைவேற்றக் காரணமாக இருந்தார் (1929 செப்டம்பர் 28).

கணவன் மரணம் அடைந்தால் அவனோடு அவன் மனைவியையும் கட்டி வைத்து எரித்த சதி என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்ததும்கூட கிறிஸ்தவனான வெள்ளைக்காரன் ஆட்சியில்தான்.

அன்றைக்குப் பார்ப்பனர்கள் சல்லடம் கட்டி எதிர்த்ததோடு நிற்கவில்லை;   லோகக் குருக்கள் (?) கூட கோவணத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு கூச்சல் போடுபவர் தானே.

மகா பெரியவர் என்று மண்டைக் காயக் கூச்சல் போடுவார்களோ அந்த காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந் திர சரஸ்வதி என்ன எழுதி இருக்கிறார்?

ஆஞ்சநேயரின் வாலில் நெருப்பு ஸீதையின் பதி வர்த்யத்தால் (சக்தியால்) அவரைப் பாதிக்காமலேயே இருந்தது. குமாரில பட்டர் உமிக்காந்தல் அக்னியில் கருகினபோது, எதிரே நின்று (சங்கர) ஆச் சாரியாளின் ஸாந்நித்யத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது. அநேக பதி விரதைகளுக்கு அவர்களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது! அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்குமாம். அதை எடுத்துப் பூஜை பண்ணுவதுண்டு.

(தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி, பக்கம் 967, 968).

இவ்வாறு கணவன் இறந்தால் மனைவியை உடன் வைத்துக் கொளுத்தும் கொடுமைக்கு வக்காலத்து வாங்கியுள்ளார் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி.

தர்ம சாஸ்திரங்களில் சதியைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், நமது சமூகங்கள் சிலவற்றில் இப்படிப் பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறா யினும் இந்தப் பழக்கத்திற்குக் கண்டனம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அது குறித்து மக்களும் கவனித்துக் கொள் வார்கள்.

கூறுபவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (தி வீக் 1987, அக்டோபர் 17).

இந்தக் கூட்டம்தான் இந்துத்துவாவின் முகத்திரையைக் கிழித்து பெண்கள் போர்க் கொடி தூக்கும் கழகத்தைப் பார்த்து அரசு அதிகாரத்தை நீட்டிக் கனைத்துப் பார்க்கிறது.

வெகு தூரத்திற்குக்கூடப் போக வேண் டாம். இன்றைக்கு 28 ஆண்டுகளுக்குமுன் பிஜேபி ஆண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் என்ன நடந்தது? ரூப்கன்வர் என்ற பெண்மணி உடன்கட்டை என்ற பெயரில் கணவனோடு எரித்துச் சாம்பல் ஆக்கப் படவில்லையா? (1987 செப்டம்பர் 4).

நெருப்பின் கோர நாக்குகளால் அந்தப் பெண் துடிதுடித்துக் கதறியபோது போலீஸ்காரர்கள் அந்தக் கொடிய காட்சியைக் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டார்களே! இதுதான் இந்த அர்த்த முள்ள இந்து மதத்தின் மனிதாபிமானம்!

பாழும் சங்கராச்சாரியார் பார்ப்பனர் கூறு கிறார். உடன்கட்டை ஏறும் பெண்மணி களுக்கு அந்த நெருப்புச் சுடாதாம்? சந்தன மாக மணக்குமாம்? இந்தக் கல்நெஞ்ச காவி வேடதாரிகளை என்னவென்று நினைப்பது!

பெண்களை இப்படியெல்லாம் இழிவு படுத்தும் இந்த இந்துத்துவவாதிகள் பெண் களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் இந்தக் கா(லி)விகள் பெண்களைப் போகப் பொருளாக மாத்திரம் பார்க்கும் மன்மதக்காரர்கள்.

பிறப்பின் அடிப்படையிலேயே பெண் களைச் சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று உறுமும் ஓநாய் மனிதர்கள் தாம் ஆணுக்கு நிகர் சமம்

பெண்கள்; ஆணுக்குரிய உரிமைகள் அத்தனையும் பெண்ணுக்கும் வேண்டும் என்று குரல் கொடுக்கிற அதற்காகவே களத்தில் நிற்கிற, போராடுகிற கழகத்தைப் பார்த்துச்  சேற்றைவாரி இறைக் கிறார்கள்.

பெண்ணுரிமைத் தளையை நீக்கினால் பெண்ணின் பெருமை போய்விடும் என்று தலைகீழாக மாற்றிப் பிரச்சாரம் செய் கிறார்கள்.


காலத்தால் கிழடு தட்டிப் போன இந்தக் குப்பைகளைச் சீண்ட எந்தப் பெண்ணும் தயாராக இல்லை.


கல்வி, கற்று சொந்தக் காலில் நிற்கும் துணிவு பெற்ற எம் பெண்கள் பெரியார் என்னும் பெருந் துணை கொண்டு உரிமைப் பேரிகை கொட்டத் தயாராகி விட்டார்கள்.

நாட்டுக் குண்டுகளைத் தூக்கிக் கொண்டு அலையும் காவிகளை நாட்டு மக்கள் அறிவார்கள் அல்லது அறியச் செய்யும் கருஞ்சட்டைப் பட்டாளம்.

காலம் மாறி விட்டது அதன் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத கிழட்டுச் சிந்தனைகள் கதறட்டும்! கதறட்டும்!!
புரட்சிப் பெரியார் தோள்பற்றிப் புறப்படுவர் புதுப் புறநானூற்றுப் பெண்கள்.

வெற்றி நமதே -

வாழ்க பெரியார்!-----------------------------------------மின்சாரம் அவர்கள் 18-04-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை19 comments:

தமிழ் ஓவியா said...

ஆடுகளுக்கு நேர்த்தி உண்டா?சிவகங்கையையடுத்த திருமலையில் உள்ள ஒரு கோயிலுக்கு 338 ஆடு களைப் பலியிட்டுள்ளனர். (சட்டப்படி சரிதானா?) எதற்காகவாம்?

ஊரில் உள்ள கண்மாய் நிரம்பி வழியவும், விவ சாயம் சிறக்கவும், குழந்தை வரம் வேண்டியும் இந்த நேர்த்திக் கடனாம். ஆமாம், 338 ஆடுகள் பலியிடப்பட்டனவே அதைக் காப்பாற்ற எந்த நேர்த்திக் கடனை செய்வதோ!

தமிழ் ஓவியா said...

அய்தராபாத், ஏப். 26_ ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தில் பல அய்யங்கள் இருப்ப தாகவும் இதுபற்றி சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும் என் றும் அவரது உறவினர் கணபதி ராஜு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகி யோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதனை அய் தராபாத்தில் செய்தி யாளர்களிடம் தெரிவித்த கணபதிராஜு மேலும் கூறியதாவது: சத்ய சாய் பாபா மரணத்தில் பல அய்யங்கள் உள்ளன. அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆதா ரங்களுடன் கடந்த ஆட் சியின் போது அப் போதைய முதல் அமைச் சரிடம் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாபா மரணத்தில் பல சதித் திட்டங்கள் நடந்து உள்ளன. பாபா இறந்து 25 நாட்கள் கழித்துதான் அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டது.

இடைப்பட்ட காலத் தில் அவரது ரூ.ஆயிரம் கோடி சொத்துக்கள் கடத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சத்ய சாய்பாபா மரணம் குறித்து சி.பி.அய். விசா ரணை நடத்தினால் உண் மைகள் வெளிவரும். எனவே இதுகுறித்து பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் எனது ஆதாரங்களையும் இணைத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.Read more: http://www.viduthalai.in/e-paper/100397.html#ixzz3YPrhadZH

தமிழ் ஓவியா said...

தேவன் சக்தி இவ்வளவுதான்!

இடி தாக்கி ஏசு சிலை உடைந்தது

திருப்போரூர், ஏப். 26 திருப்போரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு 7 மணி முதல் இடிமின்ன லுடன் பலத்த மழை பெய் தது. மேலும் சூறாவளிக் காற்றும் வீசியது.

இரவு 9 மணி வரை கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரி தும் அவதிப்பட்டனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அரு கில் உள்ள கிறிஸ்து மீட்பர் ஆலயத்தில் இடி தாக்கியது. இதில் ஆல யத்தில் உள்ள சுமார் 40 அடி உயர பீடத்தின் மீது இருந்த பைபரால் ஆன ஏசு சிலை உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது.

ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏசு சிலை உடைந்தது கிறிஸ் தவர்கள் மத்தியில் கவ லையை ஏற்படுத்தியது என்றாலும் கோடையில் தவித்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்தது.

தமிழ் ஓவியா said...

இந்தியாவுக்குப் பரதன் பெயரைச் சூட்ட வேண்டுமாம்

உச்சநீதிமன்றத்தில் மனு
புதுடில்லி ஏப்ரல் 25 இந்தியா என்பது ஆங்கி லேயன் வைத்த பெயர்; எனவே, இந்திய இதிகாச மான ராமாயணத்தில் உள்ள பரதன் பெயரை நாட்டிற்கு சூட்ட வேண் டும் என்று மகராஷ் டிராவைச் சேர்ந்த நிரஞ் சன் பட்வால் உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:

இந்த நாடு நீண்ட பாரம்பரியத்தைக் கொண் டது, இந்த நாட்டிற்கு என்று சொந்தக்கலாச் சாரம் உள்ளது, இந்துமத நூல்கள் இந்த நாட்டின் புனித நூல்களாக பெரும் பான்மையான மக்கள் ஏற்றுள்ளனர். முக்கிய மான இந்த நாடு ராம, லட்சுமண, பரதன் போன்ற புனிதர்களில் பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. அரியனை தியாகம் செய்து உலகிற்கே எடுத்துகாட்டாக திகழ்ந்த பரதன் பெயரால் நீண்ட கால மாக அறியப்பட்டது. ஆங்கிலேயர்கள் வருவ தற்கு முன்பு இந்த நாடு பாரத நாடு என்றே அறி யப்பட்டது.

ஆங்கிலேயர் கள் அவர்களின் நிர்வாக வசதிக்காக இண்டியா என்று அழைக்கத் துவங் கினர். பின்னாளில் அதுவே அவர்களின் ஆவணங் களில் எழுதப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு அதே பெயரைத் தொடர்ந்து நேரு தலைமையில் ஆன அரசு பயன்படுத்தி வரு கிறது. இந்து பெரும் பான்மை பாரதவாசி களுக்கு பிடிக்கவில்லை.

ஆகவே நீதிமன்றம் இந் தப்பிரச்சனையில் தலை யிடவேண்டும். அரசியல் சாசனத்தில் பாரத், ஹிந் துஸ்தான், ஹிந்துதேஷ், பாரத்பூமி அல்லது பாரத் வர்ஷ் என்ற பெயரில் ஏதாவது வைக்கவேண்டும்; பாரத் என்பது அனைவரால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் பெயர் ஆகையால் உடன டியாக அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த மாற் றத்தைக் கொண்டு வர முன் வர வேண்டும். உச்சநீதிமன்றம் உடனடி யாக மத்திய அரசுக்கு இந்த ஆணையை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி எச்.எச்.தத்து மத்திய அரசுக்கு, அரசியலமைப்பு ஆலோசனைக்குழுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
25-04-2015


Read more: http://www.viduthalai.in/page1/%20100343.html#ixzz3YPwJXImN

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

முரண்பாடு
கண் பார்வைக் குறை நீங்கிட எண் கண் முருகன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமாம்.
கடவுள் என்றால் சர்வ சக்தி என்று சொல்லி விட்டு, குழந்தைப் பாக்கி யத்துக்கு இந்தக் கோயில், பைத்தியம் தெளிய அந்தக் கோயில் என்கிறார்களே இது முரண்பாடு இல்லையா? கடவுள்களுக்குக் கூட பிராஞ்சு ஆபீசா? பக் தியை மலிவாகப் பரப்பும் வணிக நோக்கம் அல்லவா!Read more: http://www.viduthalai.in/page1/100344.html#ixzz3YPwWBQbr

தமிழ் ஓவியா said...

விகடனே தோல் உரிக்கிறது

பல் இளிக்கும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கும் திட்டம்!
'உலகளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை விட அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி பாஜக' என்று சமீபத்தில் அறிவித்துக்கொண் டது பா.ஜ.க. காரணம், மிஸ்டுகால் திட்டம் மூலம் உறுப்பினர் களைச் சேர்த்ததுதான் என்று, தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டார்கள்.

அதேசமயம் இந்த மிஸ்டுகால் திட் டத்தில் நிறைய தில்லுமுல்லுகள் நடை பெறுவதாக புகார்கள் கிளம்பி வரு கின்றன.
உறுப்பினராக சேர்க்கிறோம் என்பதை நேரிடையாக சொல்லாமல், பொய்யான வாக்குறுதிகளை கூறி அப்பாவி மக்களை மிஸ்டு கால் மூலம் தங்கள் கட்சி உறுப் பினர்களாக பா.ஜ.க வினர் மாற்றுவதாக புகார்கள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் மதுரையில் நடந்த சம்பவம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்று சொல்லலாம்.

மதுரை மாநகராட்சியில் 93ஆவது வார்டில் அமைந்திருப்பது முத்து பட்டி. நடுத்தர மக்கள், உடல் உழைப்பு தொழி லாளர்கள் அதிகம் வசிக்கும் இங்கு சில நாட்களுக்கு முன் நடந்ததை, அப் பகுதியை சேர்ந்த ஆமினா, மாரியம்மாள், லதா, தனலட்சுமி ஆகியோர் நம்மிடம் விவரித்தார்கள்.

ஒருநாள் சாயங்காலம் சில ஆண் களும் பெண்களும் கார்ல வந்து இறங்குனாங்க.
ரெண்டு பொம்பளைங்க வீடு வீடா வந்து, 'எல்லோரும் ஊர்மந்தைக்கு வாங்க, மத்திய அரசு உங்க ஊருக்கு நிறைய திட் டங்களை அறிவிச்சிருக்காங்க, அதை யெல்லாம் எப்படி வாங்கனும்னு விளக்கிச் சொல்லப் போறோம்னு சொன்னாங்க. வரும்போது, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, செல்போன் எல்லாத்தையும் கொண்டு வாங்க' என்று கூறிச் சென்றனர்.

கவர்மெண்டு திட்டம் எல்லாமும் நமக்கு கிடைக்கப் போகுதுன்னு ஆசை ஆசையா எல்லா வேலைகளை யும் விட்டுப்புட்டு ஓடினோம். 'வீட்டுக்கு ஒரு லட்சம் லோன், அதுல பாதி மானியம், செல்வமகள் திட்டத்துல மத்த ஊர்ல யெல்லாம் புள்ளைய பெத்தவங்கதான் பணம் கட்டணும்.

ஆனால், உங்களுக்கு மட்டும் மோடியே பணம் கட்டிடுவாரு(???). அடுத்து, கல்யாணம் காதுகுத்து எல்லாத் துக்கும் நீங்க பேங்குல போய் பணம் வாங்கிக்கலாம். இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கணும்னா, உங்க செல்போன் லருந்து நாங்க சொல்ற நம்பருக்கு கால் பண்ணுங்க, அது பேங்குகாரங்களுக்கு போயிடும். அப்பத்தான் உங்க நம்பரை பார்த்து லோனை வீடு தேடி வந்து கொடுப்பாங்க' னு சொன்னாங்க.

இதை நம்பி நாங்களும் மை வச்ச ஆளுங்க மாதிரி செல்போனை அவங்க கையில கொடுத்து பார்த்தா, கொஞ்ச நேரத்துல எங்களுக்கு அதுல எஸ்.எம்.எஸ். வந்தது. இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்ததால எங்களுக்கு அதுல என்ன போட்டுருக்குன்னு புரியலை. செல்போன் இல்லாத பொம்பளைங்க வெளியில போயிருந்த அவங்க புருஷன்மாரு, புள்ளைகளோட செல்போனை வாங்கிட்டு வந்து கொடுத்துச்சுங்க, ஆம்பளை யாளுங்க திரண்டு வந்தபிறகுதான் இது லோன் தரதுக்கு இல்லை. அவங்க கட் சிக்கு ஆளு சேர்க்கிறதுன்னு தெரிஞ்சது.

கட்சிக்கு ஆள் சேர்க்கிறோம்னு முன் னாடியே சொல்லியிருந்தா விரும்புறவங்க மட்டும் வந்திருப்பாங்க. மத்தவங்க அவங்க சோலியை பார்க்க போயிருப் பாங்க. அதை விட்டு இப்படி ஆசை வார்த்தை சொல்லி எங்களை ஏமாத்த லாமா? ஏன்னா, எங்கள்ல எல்லா கட்சி ஆதரவாளர்களும் இருக்காங்க. அப்படி யிருக்கும் போது ஒரு நொடியில கட்சி மாத்தலாமா? என்று புலம்பினார்கள்.

மணி என்பவர், நான் தேமுதிக கட்சிக்காரங்க. இப்ப நான் பாஜகவில் சேர்ந்துட்டதா மெசேஜ் வந்திருக்கு. என் வீட்டு பெண்களிடம் செல்லை கொண்டு வரச்சொல்லி இப்படி பண்ணிட்டாங்க. இது மோசடி இல்லையா? இவங்க கட்சியில பேர் வாங்க, விவரம் தெரியாத ஜனங்களை இப்படியா ஏமாத்துறது? கொஞ்சம் விட்டிருந்தா ஊர்ல எல்லோரையும் பிஜேபியில மாத்திட்டு போயிருப்பாங்க.

நல்ல வேளை அன்னைக்கு போலீஸ் வந்து எச்சரிச்ச தால இடத்தை காலி பண்ணிட்டாங்க. விவரமான மக்கள் வாழுற தமிழ் நாட்டுலேயே இப்படீன்னா, விவரமில்லாத வட நாட்டு பக்கம் என்ன வெல்லாம் சொல்லி கட்சிக்கு மெம்பர் சேர்த்தாங்களோ?
நன்றி : விகடன்.காம் (25.4.2015)Read more: http://www.viduthalai.in/page1/100345.html#ixzz3YPwfobIm

தமிழ் ஓவியா said...

எல்லை மீறுகிறது இந்து மகாசபை! துறவி அக்னிவேஷ் தலையை வெட்டி கொண்டு வந்தால் 5 லட்சம் - பரிசாம்


சேவை செய்வது என்பது சாத்திரத்துக்கு விரோதமானதாம்!

ஜிந்த் (அரியானா) ஏப். 25 சமூக சேவகரும் தகவல் உரிமைச் சட்டத்திறகாக போரட்டம் நடத்தியவர் களில் ஒருவருமான துறவி அக்னிவேஷ் தலையை வெட்டிக் கொண்டு வரு பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசாக தருகிறோம் என்று இந்து மகாசபைத்தலைவர் தர்மபால் சிவாஜ் பத்தி ரிகையாளர்களிடம் கூறினார்.

அரியானா மாநில ஜிந்த் என்ற இடத்தில் இந்துமகாசபை தனது நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடியது, நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படும் இந்த விழாவின் போது இந்து மகாசபையின் தலைவர் தர்மபால் சிவாஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் பலர் துறவிகள் வேட மிட்டு வருகின்றனர். சமூக சேவை என்ற பெய ரில் துறவிகள் வேட மணியத் தேவையில்லை, இந்துமத்ததில் சேவை என்பது என்ன என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.

கர்மபலனை அனுப விப்பவர்களுக்கு சேவை என்ற பெயரில் எது செய்தாலும் அவர்களின் கர்மபலனால் அந்த சேவை யின் பலன் அவர்களை முழுமையாகச்சென்றடையாது, இது இந்துமத சாஸ் திரங்களில் உள்ளது. ஆனால் சிலர் இந்து மதத் துறவி வேடமிட்டு சாஸ் திரங்களுக்கு எதிராக செயல்பட்டுவருகின்றனர்.

எல்லாம் கர்ம பயன்தானாம்
அவர் செல்லும் இடங் களில் எல்லாம் சாஸ்தி ரங்களுக்கு எதிரான செயல்களையே செய் கிறார். தரித்திரன் ஒருவன் இருக்கிறான் என்றால் அது அவன் சென்ற பிற வியில் செய்தபாவத்தின் பலன். இப்பிறவியில் அவனுக்கு உதவச்சென்றால் அந்த தரித்திரம் பிறருக் கும் வந்து சேரும், ஆனால் அக்னிவேஷ் துறவி வேடத்தில் இருந்துகொண்டு தர்மத்திற்குக் களங்கம் விளைவிக்கிறார். ஆர்ய சமாஜம் இவரை இந்துமதத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளதாக அறிவிக்க வேண்டும், சாஸ்திர விதிகளைப் பின்பற்றாத எவரும் இந்து அல்ல, இந்த நாடு இந்து நாடு ஆகையால் இந்துமதத் திற்கு எதிராக செயல் படுபவர்கள் தேசத் துரோ கிகள் ஆவர்.

நாங்கள் ஆர்யசாமாஜ்மீது வேண்டு கோள் விடுக்கிறோம். இவரை உடனடியாக இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் இல்லை என்றால் ஆர்ய சமாஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். இவர் முஸ்லீம் தலைவர் களைச் சந்தித்து வரு கிறார். ஒரு துறவியாய் இருந்து முஸ்லீம் மதத் தலைவர்களை எப்படி சந்திக்கலாம்? இப்படிப் பட்ட துரோகி நாட்டிற்கு தேவையில்லை, இவரது தலையை வெட்டி யார் கொண்டுவந்தாலும் அவருக்கு ரூ.5 லட்சம் இனாமாக இந்து மகா சபை தரும். இது குறித்து நாங்கள் யாருக்கும் அச்சப் படத் தேவையில்லை. ஒரு தேசத் துரோகியை தேச பக்தியுடைய யாரும் தட்டிக் கேட்கலாம் என்று கூறினார்.

கொண்டு வா தலையை வெட்டி!

ஸ்வாமி அக்னிவேஷ், மேதாபட்கர் இவர்கள் இணைந்து வட இந்தி யாவில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அன்னா ஹசாரேவின் போராட் டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தகவல் உரிமை சட்டம் கொண்டுவருவதற்கு முக்கியகாரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

வனப்பாதுகாப்பு, நதிநீர் இணைப்பு, பெண் கல்வி போன்ற பிரச் சினைகளை மய்யமாக வைத்து தொடர்ந்து போராடிவருகிறார். அன்னா ஹசாரே மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுவது தெரிந்து அந்தக்குழுவில் இருந்து விலகி தனித்து போராடி வருகிறார். சமீபத்தில் காஷ்மீரில் உள்ள ஹூரி யத் தலைவர்களை ஸ்வாமி அக்னிவேஷ் சந்தித்தார். இந்த சந்திப்பை ஆர். எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப் புகள் கடுமையாக கருத வேண்டும்.

இந்த நிலை யில் இந்துமகாசபா ஒரு படி மேலே போய் அவ ரது தலையை வெட்டிக் கொண்டுவர பரிசுத் தொகையை அறிவித்துள் ளது. இந்துமத சாஸ்திரங் களின் படி ஏழைப் பார்ப் பானுக்கு மாத்திரம் உதவி செய்யவேண்டும், சூத்திரர் களாக பிறப்பது அவர் களின் சென்ற பிறவியில் செய்த பாவத்தின் பலன், சூத்திரர்களுக்கு உதவி செய்தால் அவர்களின் கர்மபலன் தனக்கும் பிடித்து தானும் அடுத்த பிறவியில் சூத்திரனாய் பிறப்பான் என்று எழுதி யுள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.Read more: http://www.viduthalai.in/page1/100337.html#ixzz3YPwqcIrI

தமிழ் ஓவியா said...

முட்டாள்தனம்

மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத் திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள் தனம்.
(விடுதலை, 28.4.1943)

தமிழ் ஓவியா said...

கருப்பு என்றால் வெறுப்பா?

சமீபத்தில் வெளியான ஒரு நகைக்கடை விளம்பரம், அதில் பிரபல நடிகையும் விளம்பர மாடலுமான அய்ஸ்வர்யா ராய் மாடலாக நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது கருப்பு நிறமுள்ள ஒரு சிறுமி அய்ஸ்வர்யாவிற்கு ஒரு கையில் குடைபிடித்தும் மறுகையில் சாமரம் வீசுவதும் போன்ற அந்த காட்சி கூறுவது என்ன? கருப்பு நிறம் என்றாலே அடிமை நிறம், கருப்பு நிறமுடையவர்கள் அனைவருமே அடிமைகள் என்ற ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள் என்பது பொருள். கருப்புச் சட்டையைக் கொளுத்துவோம் என்றும் கருப்புச் சட்டையை கழற்றுவோம் என்றும் சிலர் கூச்சலிடுகிறார்கள்.

இப்படி பல தளங்களிலும் கருப்பு நிறத்தை ஏளனம் செய்து வருகிறார்கள். 1700-களில் உலகெங்கும் கருப்பின மக்களும் இந்தியர்களும் அடிமைகளாக வேலைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ஜெண்ட் வென்ஸர் என்ற டச்சு மாலுமி தனது அனுபவத்தை எழுதும் போது ஆப் பிரிக்கக் கரும்புத் தோட்டங்களில் வேலை பார்க்க இந்தி யாவில் இருந்து நான்கு பேர் மட்டும் அடைத்து வைக்கும் கூண்டுகளில் 10 நபர்களைத் திணித்து மாதக் கணக்கில் கப்பல் பயணம் செய்தோம்; அப்போது போர்ச்சுகீஸிய எஜமானிகளுக்காக கப்பலின் மேல் தளம் முழுவதுமே அலங்காரம் செய்து வைத்திருப் போம். கூண்டில் உள்ள பெற்றோர்களின் குழந்தை களை அந்த எஜமானிகளுக்கு பணிவிடை செய்ய அனுப்பி வைப்போம் என்று எழுதியுள்ளார்.

1800-களில் இந்த கருப்பினச்சிறுவர் சிறுமிகளை வெள்ளைக்கார எஜமானிகள் தங்களின் அடிமைகளாக வைத்திருப்பது மிகவும் அதிகரித்தது. சில வக்கிரக் குணம் கொண்ட வெள்ளைக்கார எஜமானிகள் குழந் தைகளை சித்திரவதை செய்து அவர்கள் வேதனையில் கதறுவதைக் கண்டு ரசித்த சம்பவங்கள் எல்லாம் வெளி உலகத்திற்குத் தெரிந்த பிறகு, அடிமைத்தனத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இங்கிருந்து தான் அடிமைத்தனத்திற்கு எதிரான சுதந்திரம் என்ற ஒரு மய்யக் கருத்து உருவானது. கடந்த ஆண்டு மரணமடைந்த நெல்சன் மண்டேலா; இந்தக் கருப்பு நிறவெறிப் போராட்டத்தின் காரணமாக தனது இளமைக்காலம் அனைத்தையும் இருண்ட சிறைக்குள் கழித்தார். வேதங்களில் ஆரியர்கள், திராவிடர்களைக் கறுப்பர்கள் என்றும், அவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் இந்திரனை வேண்டிக் கொள்ளும் சுலோ கங்கள் இருக்கின்றன.

ஒ இந்திரனே! பிப்ரு மிருகாய அசுர அரசர்களை ஆரிய மன்னரான விதாதின் புத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப்படுத்தினாய்! அய்ம்பதாயிரம் கறுப்புப் படைகளை அழித்தாய்; முதுமை உயிரை மாய்ப்பது போல அனேகக் கோட்டைகளையும் பாழாக்கினாய்
(ரிக் வேதம் - மண்டலம் 17, ஸ்லோகம் 12)
இதுபோல திராவிடர்களைக் கறுப்பர்கள் என்று கூறும் சுலோகங்கள் ஏராளம், ஏராளம்!
உலகமெங்கும் இப்போது நிறவெறி மறைந்து வருகிறது, அமெரிக்க அதிபராக கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா இருந்து வருகிறார். இந்த நிலையில், இந்தியாவில் புதிதாக பதவியில் அமர்ந்த பாஜக அரசு மதரீதியாக மக்களைப் பிரிக்கும் செயலில் இறங்கிவருகிறது. சமீபகாலமாக நிறவெறித் தனமாக மத்திய அமைச்சர்களே பேசிவந்தனர். கிரிராஜ் என்ற மத்திய அமைச்சர் கருப்பு நிறப்பெண்கள் பற்றி மட்டமான பேச்சு ஒன்றை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அதே போல் கோவா முதலமைச்சர் கருப்பு நிறப்பெண்களை யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தவறான வழியில் செல்பவர்கள் என்று கூறியிருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நிறம் பற்றியும் மத்திய அமைச்சர் கிரிராஜ் பேசினார் - வேறு வழியின்றி மன்னிப்பும் கோரினார். இந்த விவகாரம் அடங்கும் முன்பே நகைக்கடை விளம்பரம் ஒன்று மீண்டும் கருப்பு நிறத்தை வைத்து தனது வியாபார விளம்பரத்தைத் தொடங்கி யுள்ளது. தமிழகத்தில் புதிதாக நகைக்கடை திறக்கும் இதே நிறுவனம் வேலைக்குஆள் தேவை என்று விளம்பரம் செய்யும் போது சிவப்பு நிறமுள்ள அழகான ஆண்கள் விற்பனைப் பகுதி வேலைக்குத் தேவை என்று கொடுத்திருந்தனர். அதாவது கருப்பு நிற விற்பனைப் பிரதிநிதி இருந்தால் விற்பனை சரியாக நடக்காதாம்; இது எங்கே என்றால் தமிழகத்தின் தலைநகர் சென்னையில்! இப்படி ஒரு நிறபேதம் உள்ளூர நச்சுமரமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. நகைக்கடை விளம்பரம் பிரச்சினையாக வெடித்த தால், அந்த விளம்பரத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். விழிப்பாக இல்லாவிட்டால் குதிரை ஏறி விடுவார்கள் எச்சரிக்கை!

25-04-2015

Read more: http://www.viduthalai.in/page1/100351.html#ixzz3YPxTwrc1

தமிழ் ஓவியா said...

ஆதிதிராவிடர் இல்லையா?

அடுத்த மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் நிர்வாக சபையில் ஓர் இடம் காலியாகும் என்று ஏஷ்யம் கூறப்படுகிறது. இக்காலியாகும் இடத்தில் யார்? உட்காருவது என்பதுபற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஏஷ்யம் கூறி, சிலர் பெயரை சிபார்சும் செய்கிறது.

வகுப்புத் துவேஷத்தை வெறுக்கும் சகவர்த்தமானியான சுதேசமித்திரன் ஒரு அய்யங்கார், அல்லது அய்யர் கனவான் பெயரைச் சிபார்சு செய்வதுடன், முன்பு பனகால் காலத்தில் காபினெட்டில் ஒரு பிராமணர் இருக்கவேண்டு மென்பதற்காகவே மந்திரியாக ஒரு பிராமணரை நியமித்ததாகவும் அந்நியாயப்படி இன்று ஒரு பிராமணர் அவசியம் என்று கூறுகிறது.

இதுவரை பெரிய உத்தியோகங்களில் அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார் எல்லாம் நீண்ட நாள் இருந்து பார்த்துவிட்டார்கள். அதைப்போன்றே முஸ்லிம், கிருஸ்துவர், முதலியார், நாயுடு, தமிழர், தெலுங்கர், கேரளர் முதலிய யாவரும் இருந்து பார்த்து விட்டார்கள் என்று நமது சகவர்த்தமானிக்கு இவைகளைக் கூறுகிறோம்.

ஆனால், இதுவரை இந்நாட்டில் ஜனசங்கையில் நாலில் ஒரு பாகத்தி னரான ஆதிதிராவிடர் என்பவர்களில் ஒருவர்கூட இது வரையில் அங்கு இருந்து பார்த்ததில்லை. இன்று ஆதி திராவிட முற்போக்கைக் குறித்து எங்கும் பலத்த கிளர்ச்சி இருக்கிறது. ஆதலால் சகலரும் ஒன்றுசேர்ந்து ஆதிதிராவிட கனவான் ஒருவர் அங்கு வர முயற்சிக்கக் கூடாதா? என்பதே!

நமது மாகாண ஆதிதிராவிட சமுகத் தலைவர்கள் தங்களுக்குள்ள அற்ப அபிப்பிராய பேதங்களை விட்டொழித்து ஒரு ஆதிதிராவிட கனவான் அங்குவர முயற்சிப்பார்களா? அல்லது இன்றுள்ளதுபோன்ற உயர்தர ராஜதந்திரிகளின் முன்னோடும் பிள்ளையாக மட்டும் இருந்தும் தங்கள் காலத்தைக் கடத்த ஆசைப்படுகிறார்களா? ஆதிதிராவிடர்கள் ஒன்றுபட்டால் இது கிட்டாது போகுமென்று நாம் நினைக்கவில்லை.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934Read more: http://www.viduthalai.in/page1/100365.html#ixzz3YPzwbvEB

தமிழ் ஓவியா said...

பொக்கிஷ மெம்பர் பொய்யரா?
நாட்டில் மிராசுதாரர்கள் துயரச் சத்தம் மிகவும் பலமாகப் போய்விட்டது. நிலவரி மட்டுமல்ல, தண்ணீர் வரியையும் சேர்த்து நூற்றுக்கு 25 விகிதம் குறைக்கவேண்டுமென்று நேற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்வாதத்தில் மிராசுதார்களோ வரிகொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

கவர்ன்மெண்டு பொக்கிஷ மெம்பர் அவர்களோ மிராசுதார் கூச்சல் வெறுங்கூச்சல் என்கிறார். இருக்கும் ரிசர்வு பண்டைக்காலி செய்வதற்காகவே நிலவரி குறைக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

இவ்விரண்டில் எது உண்மை என்பதும், உண்மையாகவே கஷ்ட நிலையிலுள்ள விவசாயிகளைச் சர்க்கார் கவனிக் கிறார்களா? இல்லையா? என்பதும் நம்முடைய விவாதமல்ல. பொக்கிஷ மெம்பர் சொல்வதில் சிறிது உண்மையுண்டு.

அத்துடன் மிராசுதார்களுக்கே இவ்வளவு கஷ்டமானால், மிராசுதார்களிடம் வேலை செய்யும் சோகமுடைய விவசாயக் கூலிகளின் நிலைமை என்ன? என்பதைச் சிந்திக்க மிராசுதார்கள் தவறமாட்டார்கள் அல்லவா? அவர்கள் குறைகளைச் சொல்ல எந்த சட்டசபை இருக்கிறது!

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934Read more: http://www.viduthalai.in/page1/100365.html#ixzz3YQ05MrHR

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இந்துக் கடவுள்

கைகளில் கொலைக் கருவிகளை, ஆயுதங் களை வைத்திருக்கும் இந்துக் கடவுளிடமிருந்து எப்படி அன்பையும் அரு ளையும் எதிர்பார்க்க முடியும்?Read more: http://www.viduthalai.in/page1/100280.html#ixzz3YQ1Wh2aD

தமிழ் ஓவியா said...

முக நூலில் இருந்து....

கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரை எப்படி ஆதரிக்கிறீங்க?

- பொறியாளர் ஆன்டனி வளன்

கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரை எப்படி ஆதரிக்கிறீங்க?

பெரியார் எல்லா மதத்தையும் திட்டினார்.ஏன் உங்க கிறிஸ்தவ மதத்தையும் சேர்த்து தானே திட்டினார்.கடவுளே இல்லை என்று தான் சொன்னார்.

அப்புறம் நீங்க எப்படி பெரியார் பெரியார் என்று கொடி பிடிக் கிறீங்க?

ஹ..ஹா...நல்ல அருமையான கேள்வி.

ஆனால் பெரியாரை மிகச் சரியாக புரிந்து கொண்டால், பெரியார் இந்த சமூகத்துக்கும், எனக்கும் என்னவெல்லாம் செய் திருக்கிறார் என்பதை முழுமையாக அறிந்திருந்தால்,இந்த கேள்வியே எழுந்திருக்காது.

பெரியார் ஒரு வந்தேறி போன்ற அரை வேக்காடுகளின் கூச்சல்களும் எழாது.

பெரியாரை நேசிக்க என்ன காரணம்?

இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமால் இருந்திருந்தால்,நான் கல்வி கற்று இருப்பேனா,கணினி முன் அமர்ந்து இருப்பேனா அல்லது என் குலத் தொழிலையே செய்திருப்பேனா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!

அப்படியானால் உன் குலத் தொழில் இழிவானதா? ஹ..ஹா.. அப்படி அல்லவே அல்ல.எந்த தொழிலும் இழிவானது அல்ல. ஆனால் கல்வியா,என் குலத் தொழிலா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.இரண்டில் எதை ஏற்க வேண்டும்,மறுக்க வேண்டும் என்பது எனது விருப் பமாக இருக்க வேண்டுமே ஒழிய எனக்கான வாய்ப்பே மறுக்கப் படக்கூடாது.

எவர் ஏற்றாலும்,ஏற்கா விட் டாலும், பெரியாரும் திராவிட இயக்கங்களும் இல்லாமல் இருந் திருந்தால், நான் விரும்பிய கல்வியை தாராளமாக கற்பதற்கான வாய்ப்பும், சூழலும் எனக்கு கிடைக்காமல் போய் இருக்கும் என்பது தான் நிதர்சனம்.

கல்வியின் சுவடே அறியாத பாரம்பரியத்தில் பிறந்த, முதல் தலை முறை பட்டதாரி பிள்ளைகளுக்கு தெரியும் பெரியார் எவ்வளவு முக்கியம் என்று.

பெரியாரை ஆதரிக்க வேண்டிய அனைத்து காரணங்களையும், அவர் இந்த சமூகத்துக்கு செய்த தொண்டு களையும் குறித்து புதிதாய் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் நான் பெரியாரை ஆதரிக்க என் கல்வி மற்றும் சுய மரியாதை என்ற ஒற்றை காரணம் போதுமானது. கூடவே அவரது பல்வேறு சமூகத் தொண்டுகள் அவரைத் தீவிரமாக ஆதரிக்க எனக்கு காரணங்களாய் இருக்கிறது.

மற்றபடி கடவுள் குறித்த பெரியாரின் பார்வைகளையும்,அவர் அபப்டி சொல்லிய கால கட்டங்களில்,மதத்தின் பெயரால் இங்கே நடந்த,ஏன் இப்போதும் நடக்கிற கொடுமைகளையும் வைத்து, அவரது கடவுள் மறுப்பிற்கான காரணத்தையும்,அவரையும் என்னால் புரிந்து கொள்ள முடியும்.

அவர் கிறிஸ்தவத்தை திட்டட்டும், கடவுளே இல்லை என்று சொல்லட்டும். ஆனால் அவர் சொல்வதையே, ஏற்பதும் ஏற்கா ததும் என் விருப்பம் என்பதை அவரே தெளிவாய் சொல்லி விட்டார். அப்புறம் என்ன?

பெரியாரைப் போற்ற ஆயிரம் காரணங்கள் எனக்கு இருக்கும் போது, கடவுள் மறுப்பு குறித்த அவரது பார்வையை முன் வைத்து அவரை வெறுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

குணம் நாடி குற்றமும் நாடி தான்....

குறள்: எந்நன்றி கொன்றார்க்கும் உய் வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

***சாதிகளையும், மதங்களையும், மார்க்கங்களையும் கடந்து நேசிக் கப்படத் தக்கவன் அந்த ஈரோட்டுக் கிழவன்**Read more: http://www.viduthalai.in/page1/100277.html#ixzz3YQ2VaPgy

தமிழ் ஓவியா said...

மனிதன்

பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)Read more: http://www.viduthalai.in/page1/100265.html#ixzz3YQ2t85vP

தமிழ் ஓவியா said...

தாலி புனிதமா?
இதற்குப் பதில் என்ன?

கழுதைக்குத் தாலி கட்டிக் கல்யாணம்!
மணப்பாறை அருகே எம்.சீத்தப்பட்டி கிராமத்தில் மழை வேண்டி பஞ்ச கல்யாணி கழுதைக்குத் தாலி கட்டி கல்யாணம் நடந்துள்ளது.

கல்யாணப் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு தாலி, பட்டு வேட்டி, மாலை ஆகியவற்றைப் பொதுமக்கள் வாங்கி வந்தார்களாம்!

முதலிரவு நடத்தியதாகத் தகவல் இல்லை.Read more: http://www.viduthalai.in/page1/100287.html#ixzz3YQ47HSUk

தமிழ் ஓவியா said...

மழை பொழியவில்லை என்றால்...


மழை பொழியவில்லை என்றால், கொடும்பாவி கட்டி இழுப்போமா, கோபால பஜனை செய்வோமா, என்று தான் புத்தி போகிறது. இது வெறும் ஏமாளிப் புத்தி. இதிலேயே, எத்தரின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்தால் மழை பெய்வதற்கு வருண ஜெபம் செய்வது என்று ஆரம்பிக் கிறார்கள். இப்படிப்பட்ட விதமாகத்தான் நம்மவர்களின் சிந்தனை சென்று கொண்டிருக்கிறதேயொழிய, மேனாட்டு விஞ்ஞானிகள் போலவா, மழை இயற்கை நிகழ்ச்சிதான் என்றாலும், அதையே ஏதேனும் செயற்கை முறையால் நாம் உண்டாக்க முடியாதா, என்று செல்கிறது. அவர்களின் சிந்தனை அந்தத் துறையிலேயும் சென்று, இப்போது மழையை உண்டாக்கும் முறையையும் விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் - இனி இத்துறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்திய வண்ணம் இருக்கின்றனர்.

இங்கு வான மழை போலே, மேனி வண்ணம் கொண்டான் என்று பாடிக்கொண்டே காலந்தள்ளுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஒரு ஊரில், மழை இல்லாமல் போகவே, அவ்வூர் புத்திசாலிகள், சூரியன் மீது கல்லை விட்டெறிந்தார்கள். மழை வேண்டும் என்று, பயிர் வளரவில்லை எதிர்பார்த்தப்படி என்றால், விதையால் வந்த தவறா, உழவுமுறையால் வந்த தவறா, ஏதேனும் பூச்சி புழு அரிக்கிறதா, அல்லது மண்ணின் சத்தே கெட்டுவிட்டதா என்பன போன்றவைகளிலே நம்மவர்களின் எண்ணம் போவதில்லை - பச்சையம்மனுக்கு பொங்கலிடுவது, அரசமரத்துக்கு மஞ்சள் பூசுவது என்று இப்படி ஏதாவதொரு அர்த்தமற்ற விஷயத்தின் மீது தான் எண்ணம் போகிறது.

தமிழ்நாட்டுப் பிற்கால மன்னர்கள் பலர், மழை காலா காலத்திலே பொழியாமற் போனால் என்ன செய்வதென்று, பயந்து மழையைச் பொழியச் செய்ய, வருண ஜெபம் செய்வதற்காகவே, அவர்களுக்கு மானியங்கள் - இனாம்கள் தரப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலே, இப்படி வருண ஜெபம் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாம்கள், இன்றும் அந்தப் பரம்பரையினரிடம் உள்ளன
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)

எந்த அரசர்கள் பிற்போக்காளராயிருந்து வருண ஜெபம் செய்தனர் என்று அண்ணா அவர்கள் குற்றசாட்டுகிறார் களோ, அதே அண்ணா பெயரைக் கட்சியில் தாங்கிய கட்சி - ஆட்சி அதே வருண ஜெபத்தைச் செய்கிறது என்றால் அண்ணாவைப் புரிந்த அழகும் அவரை மதிக்கும் அழகும் மிகப் பரிதாபமாகும்.

இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் இந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்கள் இயற்கையை நோக்கி வழிபாடு செய்வோரை படு கிண்டல் செய்து எழுதி இருக்கிறார். இயற்கையையோ அல்லது இயற்கைப் பொருட்களின் பண்புகளையோ வழிபாட்டுரையால் நாம் மாற்றிவிட முடியுமா? வழிபடுவதன் மூலம் கலைகளை விரிவு படுத்துவதோ அல்லது அடக்கி வைக்கவோ நம்மால் ஆகுமா? பலியிடுவதன் மூலம் காற்றுகளின் திசையை மாற்றிட நம்மால் இயலுமா? மண்டியிடுதல் நமக்குச் சொத்துகளைச் சேர்த்து தருமா? வேண்டுதலைச் செய்வதன் மூலம் நாம் நோயைப் போக்கி கொள்ள முடியுமா? சடங்கு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்ள இயலுமா? படையல் போடுவதன் மூலம் நன்மையையோ அல்லது மதிப்பையோ நாம் பெற்றுவிடக் கூடுமா? (மதமும் மூட நம்பிக்கையும் பக்கம் 23)

இவ்வளவையும் எழுதிய நாவலர் இரா.நெடுஞ்செழியன் தான் மாண்புமிகு நிதி அமைச்சராக இருக்கிறார். இந்த ஆட்சியில்தான் மழை பொழிவதற்காக வழிபாடு நடத்தப்படுகிறது. அறிவிலும் இல்லை
அய்யா வழியுமில்லை
அண்ணா வழியுமில்லை
என்றாலும் இந்த ஆட்சியில் வருண ஜெபம் நடக்கிறது!
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)Read more: http://www.viduthalai.in/page1/100266.html#ixzz3YQ4EhJsw

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு வினாக்கள்


உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

தந்தை பெரியார்
சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான் அரசன் கொல்ல வேண்டும். இது இராமயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமு மாகும். எனவே இராமாயணம் இருக்க வேண்டுமா?
**************
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?
**************
சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்ம மாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.

ஆன்மா அடங்காத ஒன்றா?
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந் திரியங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற் கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?
ஆன்மா ரூபமுடையது என்பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!
ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.
- (நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)Read more: http://www.viduthalai.in/page1/100268.html#ixzz3YQ4bPODR

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு மனிதனும் செத்துப் போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சியும் அவன் துவக்கிய காரியமும் செத்துப் போய் விடுவதில்லை; அதுவும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பி விட்டால் அந்த எண்ணம் ஒரு போதும் அழியாது


Read more: http://www.viduthalai.in/page1/100268.html#ixzz3YQ4mBaGs