Search This Blog

31.5.14

சுட்டிக்காட்டினால்சூடாகலாமா?கொள்கைகளைக்குழிதோண்டிப்புதைப்பதில்தயங்காதவர் வைகோ!

சுட்டிக்காட்டினால் சூடாகலாமா?
ரவிசங்கருடன் வைகோ பேச்சு வார்த்தை  பா.ஜ.க. கூட்டணி குறித்து. (தி இந்து 15.12.2013)

மதிமுகவின் கொள்கைபற்றி உண்மை இதழ் கேள்விப் பதில் பகுதியில் திராவிடர் கழகத் தலைவர் அளித்த பதில் மதிமுக வுக்கு கோபத்தைக் கிளப்பியிருக்கிறது போலும்!

எல்லோரும் தான் தன்னை திராவிட இயக்கம் என்கிறார்கள். பா.ஜ.க.வுடன் சேரும் வைகோகூட திராவிட இயக்கம் என்றுதான் சொல்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்ன பதில்தான் அது.

அதற்கு  பதில் சொல்ல முயற்சித் துள்ளது ம.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ இதழான சங்கொலி (30.5.2014 பக்கம் 7)

இந்திய அரசியலில் தேர்தலில் கூட்டணி என்பது கொள்கை அடிப் படையில் ஏற்படுவதல்ல. எந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வரக் கூடாது என்று நினைக்கிறார்களோ, அந்தக் கட்சியினர் ஒன்று சேர்கிறார்கள். இப்படி இணைகின்ற கட்சிகளுக்கு வெவ்வேறு கொள்கைக் கோட்பாடுகள் உள்ளன. கூட்டணி சேர்ந்த தற்காக எந்தக் கட்சியும் தங்கள் கொள்கை களைக் கை விட்டு விடுவதில்லை. இதுதான் இந்திய அரசியலில் உள்ள நடைமுறை யாகும். என்று சங்கொலியில் எழுதப் பட்டுள்ளது.

இந்தப் பொது நியாயம் பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துள்ள மதிமுகவுக்குப் பொருந்தி வருகிறதா என்ற கேள்வி முக்கியம்.

பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கென்று பொதுத் தேர்தல் அறிக்கை கிடையாது. வாஜ்பேயி தலைமையில் தேர்தலில் போட்டியிட்டபோது அப்படி ஒரு பொதுத் தேர்தல் அறிக்கை வைக்கப்பட்டதுண்டு. (குறைந்தபட்ச திட்டம் எல்லாம்கூட வகுக்கப்பட்டதுண்டு)

இந்த முறை அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. பிஜேபி தெளிவாக திட்ட வட்டமாக தனது தேர்தல் அறிக்கையில் தனது இந்துத்துவா அஜண்டாவை  முன் வைத்துள்ளது. இன்னும் புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் ஆர்.எஸ். எஸின் ஆலோசனைகளைக் கேட் டுத் தான் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டதாக தேர்தல் அறிக் கையைத் தயாரித்த முரளி மனோகர் ஜோஷி டில்லியில் செய்தியாளர்களி டம் அப் பட்டமாகக் கூறி விட்டாரே! (12.4.2014).

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் படிப்பவர்களுக்கு அது நூற்றுக்கு நூறு உண்மையே என்பது விளங்காமற்போகாது.

1) அயோத்தியில் ராமன் கோயில்.
2) அரசியல் நிர்ணய சட்டத்தில் 370ஆவது பிரிவு நீக்கம்.
3) யுனிஃபார்ம் சிவில் கோடு சட்டம் இயற்றப்படும்.
4) பசு பாதுகாப்புப் பேணப்படும்.

ஆர்.எஸ்.எஸ். கூறி வரும் இந்தத் திட்டங்கள், அட்சரம் பிறழாமல் பிஜேபி யின் தேர்தல் அறிக்கையிலே இடம் பெற் றுள்ளன.

பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இவை நிறைவேற்றப்படும் என்பதில் அய்ய மில்லை. யாரும் எதிர்பாரா வெற்றியை பிஜேபி கூட்டணி வெற்றிபெறும் என்று இதே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  பேசவில்லையா?  (விருதுநகர் பேச்சு மாலை முரசு 20.3.2014 பக்கம்).

பிஜேபி ஆட்சிக்கு வரும்  நிலையில் தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள மேற் கண்ட ஆர்.எஸ்.எஸின் கொள் கைகள் திட்டங்கள் செயல் படுத்தப்படும் என்று தெளிவாகத் தெரிந்து விட்ட நிலையில், மதிமுகவின் நிலைப் பாடு என்ன என்ற கேள்வி எழுமா எழாதா?

 

பிஜேபி தேர்தல் அறிக்கை கூறும் இந்தத் திட்டம் திராவிட இயக்கத்திற்கு உடன்பாடாக இருக்க முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி. திராவிட இயக்கத்தின் அஸ்திவாரமான கொள்கையின்மீதே அடிப் படைக்கே வேட்டு   வைக்கும் வகையில் கோடாரி விழும் போது கூட்டணி தர்மம் பேசு வதைவிட கொடுமையானது வேறு எதுவாக இருக்க முடியும்?

அடிப்படைக் கொள்கைக்கே வேட்டு என்ற நிலையிலும் பிஜேபியோடு மதிமுக கூட்டுச் சேர்கிறது என்றால் அதன் பொருள் என்ன? கேள்வி எழாதா? தாய்க் கழகம் இடித்துக் காட்டக் கூடாதா?

இந்த முறையில்தான் திராவிடர் கழகத் தலைவர் உண்மை  இதழில் கேட்டு இருக்கிறார்.

இதற்காகக் கோபப்பட்டால் நாம் என்ன செய்வது? நேர்மையான பதில் கைவசம் இல்லை என்ற நிலையில் ஆத்திரப் படுகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும். நமக்குக் கோபம் வரவில்லை - அனுதாபம்தான் பிறக்கிறது.

அந்த விருதுநகர் உரையில் வைகோ அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ள கருத்து வயிறு வெடிக்கச் சிரிப்பை மூட்டக் கூடியது என்று சொல்லலாம்; ஆனால் நாம் அப்படிக் கருதவில்லை. மறுமலர்ச்சியின் சிந்தனை யில் எப்படி இப்படியொரு சீர்கேடு கூடு கட்டியது என்றுதான் வேதனைப்பட வேண்டியுள்ளது.

மதச் சார்பற்ற ஆட்சியை நரேந்திர மோடி தருவார்! என்று குறிப்பிட்டு இருப்பதுதான் அந்தப்  பகுதி.

ராமன் கோயில் கட்டுவோம் என்று சொல்லக் கூடிய ஒருவர் மதச் சார்பற்ற ஆட்சியைத் தருவார் என்று உத்தரவாதம் சொல்லுவது  மோசடி தாயத்து வியாபாரம் அல்லவா! உ.பி. பைசராபாத்தில் பேசும்போது அடுத்த கட்டத்திற்குச் சென்று ராமராஜ்ஜியம் உண்டாக்குவேன் என்று மோடி பேசவில்லையா? அந்தக் கூட்ட மேடையின் பின் திரையில் ராமர் படமும், ராமன் கோயிலும் தீட்டப்பட்டதில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 5.5.2014).

அண்ணாவின் தீ பரவட்டும்! நூலுக்குத் தீ மூட்டப் போகிறார்களா?

மதச் சார்பற்ற கட்சிகள் தங்களோடு கூட்டணி வைத்துள்ளனர் என்ற எண்ணம் பிஜேபிக்கு இருந்தால் இது போன்ற கொள்கைகளையும், திட்டங்களையும் தமது தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்யும் முரட்டுத்தனம் வருமா? இடம் பெறச் செய்திருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன? பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துள்ள அரசியல் கட்சிகளை ஒரு பொருட்டாக மதிக்க பிஜேபி தயாராக இல்லை என்று தானே பொருள்!

தொடக்கத்திலேயே தலையைக் கவிழ்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டதே!

இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்க வேண்டாம் என்று கும்பிட்டுக் குழைந்து அல்லவா பிரதமர் மோடிக்குக் கண்ணீரும் கம்பலையுமாக மனு போடுகிறார் நமது வைகோ.

இருந்தும் என்ன பலன்? விளக் கெண்ணெய்க்குக் கேடாக முடிந்ததே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லையே!

வெளி நாட்டுக் கொள்கையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் என்ன வேறுபாடு என்று நாம் கேட்டால் ராஜாவை விஞ்சிய விசுவாசிகளுக்குக் கோபம்  குபீர் என்று பாய்கிறது. இப்பொழுது யதார்த் தத்தைப் புரிந்து கொண்ட பிறகாவது மறு சிந்தனை வந்தால் பாராட்டக் கூடச் செய்யலாம்.

தேர்தல் கூட்டணி என்று வந்ததும் சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையில் சகோதரர் வைகோ எந்த அளவு திரிபுக்கு ஆளாகி விட்டார்! எதையும் மிச்சம் வைத்துக் கொள்ளாமல் கொள்கையினைத் தியாகம் செய்யத் துணிந்து விட்டாரே!

தேர்தல் கூட்டணிக்காக எந்த எல்லைக் கும் சென்று கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைப்பதில் கொஞ்சம்கூடத் தயங்காதவர் வைகோ என்பதற்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லலாம்!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியோடு கூட்டணி வைத்தபோது (1996) அவர்களின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு ஈழத் தமிழர் பிரச்சினையைத் தேர்தல் பிரச்சாரத்தில் கைவிட்டதில்லையா?

 

பிஜேபி ஆட்சியில் பொடா சட் டத்தைக் கொண்டு வந்தபோது அதற்கு ஆதரவுக் கரம் உயர்த்தவில்லையா அன்புக்குரிய வைகோ?

இப்பொழுதுகூட பிஜேபி தன் தேர்தல் அறிக்கையில் மீண்டும் அந்தச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளதே - அந்தச் சட்டத்தைப் பயன் படுத்தி தானே அம்மையார்  ஜெயலலிதா மானமிகு வைகோ அவர்களையும் தோழர் களையும் காராக் கிரகத்தில் தள்ளினார்.

பிகாரில் ராப்ரி தேவியின் தலைமை யிலான ஆட்சியைக் கலைக்க அரசமைப் புச் சட்டப் பிரிவு 356அய் வாஜ்பேயி தலைமையிலான அரசு பயன்படுத்திய போது ஆம் என்க என்று ஆதரவுக் குரல் கொடுத்ததையெல்லாம் நினைவூட்ட வேண்டுமா?

ஆக தேர்தல் கூட்டணி என்று வரும் பொழுதெல்லாம் கெள்ளகைகளைச் சர்வப் பரிதியாகம் செய்ய முஷ்டியைத் தூக்கி கூட்டணியின் தர்மத்துக்கு மகா கும்பாபிஷேகம் செய்வதில் வைகோ அவர்களை விஞ்ச யார் இருக்கிறார்கள்?

பிஜேபி கூட்டணியில் திமுக இருந்த போதும்கூட திராவிடர் கழகத் தலைவர் கண்டிக்கத்தான் செய்தார்.

தாய்க் கழகத்தின் கடமையது - மதிமுகவும் நல்லெண்ணத்தோடு அதனை எடுத்துக் கொண்டு திருந்தினால் அதன் எதிர்காலத்துக்கு நல்லது - அதை மறந்து  விட்டு விட்டேனா பார்? என்று எகிறிக் குதித்தால் நட்டம் தாய்க் கழகத்துக்கு அல்ல!

வைகோ அவர்களைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் சகோதரர் என்று  அடைமொழி போட்டு பேசுபவர், எழுதுபவர் திராவிடர் கழகத் தலைவர் என்பதை நினைவூட்டுகிறோம்.

               ------------------------------------மின்சாரம் அவர்கள் ”விடுதலை” ஞாயிறுமலர் 31-5-2014  இல் எழுதிய கட்டுரை

சுயமரியாதை இயக்கத் தத்துவம் கடவுள் மத ஆபாசங்கள்
தோழர்களே!

இந்த நாமக்கல் கொஞ்சகாலமாகவே காங்கரஸ் கோட்டை என்று சொல்லப்படுவதாகும். எனினும் நமது சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலர் இங்கு எப்படியோ ஒரு மகாநாடு கூட்டிவிட்டார்கள். நாங்கள் வரும் போது உண்மையிலேயே சற்று பயத்துடனேயே வந்தோம். சு.ம. மகாநாடு அவ்வளவு திருப்திகரமாய் நடக்காது என்றும், காங்கரசின் காலித்தனத்திற்கு முகம் கொடுக்க வேண்டி வருமென்றும் உள்ளூர் பொது ஜனங்கள் ஆதரவு சரியாய் இருக்காதென்றும் கருதினோம். ஆனால் இங்கு வந்த பிறகு எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும்படியான நிலையில் இம்மகாநாடு நடந்திருக்கிறது. எங்களுக்கு நீங்கள் அளித்த ஆடம்பரமான வரவேற்பும் காட்டிய உற்சாகமும், அன்பும் உண்மையிலேயே எங்களை நாங்களே பாராட்டிக் கொள்ளும் மாதிரியாக ஏற்படுத்தி விட்டது.

கண்டறியா அருங்குணம்

தவிரவும் எனது பொது வாழ்வில் காங்கரசுகாரரிடம் இவ்வளவு நாளும் கண்டறியாத ஒரு அருங்குணத்தைப் பார்த்ததில் நிஜமாகவே நான் மெய்மறக்கும்படி மயக்கம் ஏற்பட்டு விட்டது. என்னவெனில் எங்கள் கூட்டங்களுக்கு காங்கரஸ்காரர்கள் போகக் கூடாது என்றும், போனாலும் எவ்வித கேள்வி கேட்பதோ, கலவரம் ஏற்படும்படி செய்வதோ ஆகிய காரியம் கண்டிப்பாய் நடத்தக் கூடாது என்றும் புத்தி புகட்டப்பட்ட ஒரு துண்டு நோட்டீஸ் காங்கரஸ்காரர்களால் வினியோகிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். இந்தப்புத்தி காங்கரசுக்காரர்களுக்கு எப்படி வந்தது, ஏன் வந்தது என்கின்ற காரியம் எனக்கு ஒரு யுக்திகணக்கு போட்டி பரிசு மாதிரியாகவே இருக்கிறது. சென்ற வருஷம் வந்தபோது கழுதை கழுத்தில் அட்டை கட்டி அதில் எங்களைப் பற்றி கேவலமாய் எழுதி விரட்டி விட்டார்கள். போன மாதத்தில் வந்த போதும் கூட்டத்தில் காலித்தனம் செய்தார்கள். அவற்றையெல்லாம் நாங்கள் ஒரு வழியில் சமாளித்தோம் என்றாலும் இப்போது இந்த புத்தி வந்தது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அரசியலிலோ சமுதாயத்திலோ எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நான் யாருக்கும் விரோதியில்லை, யாரிடமும் துவேஷமில்லை. மனிதர்கள் எல்லோரும் ஒரே அபிப்பிராயம் கொள்ள முடியாது. சரியாகவோ தப்பாகவோ அபிப்பிராய பேதம் ஏற்படுவது மனிதனுக்கு இயற்கையேயாகும். ஒருவருக்கொருவர் அபிப்பிராயத்தை மதிக்காவிட்டாலும் ஏற்காவிட்டாலும் வெளியிலெடுத்துச் சொல்ல இடம் கொடுக்க வேண்டியதானது மானத்திலும் மனிதத் தன்மையிலும் கவலையுடையவனின் கடமையாகும்.

உதாரணமாக ஈரோட்டில் எங்கள் எதிரிகள் யாராவது எப்படிக் கத்தினாலும் நாங்கள் கீச்சு மூச்சு சத்தம் ஏற்படக்கூட இடம் கொடுப்பதில்லை.

எனினும் ஒரு விஷமம்

ஆனால் காங்கரஸ்காரர்களுக்கு அந்தப் புத்தி இருந்ததை நான் இதுவரை ஒரு ஊரில் கூடப் பார்த்ததில்லை. இன்று இந்த ஊரில் பார்க்கிறேன் என்றாலும் இதிலும் ஒரு விஷமத்தை காண்கின்றேன். என்னவெனில் இன்று இங்கு சு.ம. மகாநாடு நடப்பதும் இந்த பொதுக்கூட்டம் இன்று ஏற்பாடு செய்திருப்பதும் 15 நாட்களுக்கு முன்பிருந்தே தெரிந்திருந்தும் இந்த ஊர் காங்கரஸ்காரர்கள் இன்றைய தினத்திலேயே வேறு ஒரு மீட்டிங்கு ஏற்பாடு செய்து அதில் "அநேக காங்கரஸ் தலைவர்கள் வருகிறார்கள்" என்று நோட்டீசு ஏராளமாய் வினியோகிக்கப் பட்டிருக்கிறது. நாளைக்கு அந்த கூட்டம் போட்டால் என்ன முழுகிப் போகும். உண்மையிலேயே நோட்டீசில் வெளியிட்ட அத்தனை "தலைவர்களும்" வரப்போகிறார்களா? வேண்டுமென்றே விஷமத்துக்கு அதாவது இந்த கூட்டத்துக்கு ஆட்கள் வராமல் இருக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணம் தவிர இதுவேறு எதுவாய் இருக்க முடியும்? அப்படி இருந்தும் நீங்கள் இவ்வளவு பேர் - 3000 பேர் இங்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மேலும் காங்கரஸ்காரர்கள் இங்கு வினியோகித்த துண்டு நோட்டீசில் "காங்கரசு ஒன்றுதான் மக்களுக்கு சுதந்தரமும் விடுதலையும் அளிக்கும்" என்று பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை இவர்கள் நாங்கள் சொல்வதையும் கேட்டு விட்டு நாளைக்கு சொன்னால் என்ன? இன்றைக்கே சொல்லுவானேன்? இருந்த போதிலும் நாளைக்கும் அவர்கள் கூட்டம் ஒன்று உண்டு என்றும் தெரிகிறது. சுவர் விளம்பரமும் ஒட்டப்பட்டிருக்கிறது. ஆதலால் இன்று நீங்கள் நான் சொல்வதையும் கேட்டு விட்டு நாளைக்கு அவர்கள் சொல்லுவதையும் கவலையுடனும் பொறுமையுடனும் கேளுங்கள். பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.

பொதுக்கூட்டம் ஒரு சர்வகலாசாலை

அதிலும் எவ்வித குழப்பமும் மீட்டிங்கு ஒழுக்கத்துக்கு விரோதமான காரியமும் செய்யாதீர்கள். இன்று உலகம் உள்ள நிலைமையில் நாட்டுக்கு இப்படிப்பட்ட கூட்டங்கள் மாறி மாறி நடக்க வேண்டியதும் நீங்கள் கேட்க வேண்டியதும் மிக்க அவசியமாகும். உங்களுக்கு இக்கூட்டங்கள் ஒரு சர்வகலாசாலை போன்றதாகும். உலக நடப்பையும் மக்கள் யோக்கியதையையும் கண்டறிய ஒரு பரீஒை கருவியாகும். பள்ளிக் கூடத்தில் இவைகளைப் படித்து விட முடியாது. பெரிய கலாசாலை பட்டம் பெற்று விடுவதினாலும் இந்தப் படிப்பு வந்து விடாது. உலக கல்வி வேறு, பகுத்தறிவு வேறு, பட்டம் வேறு. பெரிய டாக்டராய் இருப்பான், ஆனால் அவனும் மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான். பெரிய வானசாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் பார்ப்பான் மூலம் தன் மாஜி தந்தைக்கு அரிசி பருப்பு காய்கறி செருப்பு அனுப்புவான். ஒருவன் பெரிய உடற்கூறு சாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் தன் மனைவியையும் மகளையும் வீட்டுக்கு தூரமென்று வீதி திண்ணை அறையில் தள்ளி மூடிவைத்து விட்டு உள்ளே தாழ் போட்டுத் தூங்குவான். ஆகையால் மனிதனுக்கு பகுத்தறிவும் உலக கல்வியும் அறிய பள்ளிக்கூடமும் பட்டமுமே போதுமானதாகிவிடாது.

நீங்கள் நான் சொல்லுவதைக் கேளுங்கள். ஆனால் உடனே நம்பி விடாதீர்கள். நாளை நமது எதிர் அபிப்பிராயக்காரர்கள் வருவார்கள். அவர்கள் சொல்வதையும் கேளுங்கள். பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். இதுதான் எங்கள் ஆரம்பப் பிரார்த்தனை - எங்கள் முதல் வேண்டுகோள்.

சுயமரியாதை இயக்கம்

இன்று சுயமரியாதை இயக்கம் பற்றியும் காங்கரஸ் பற்றியும் பேசுகிறேன். முதலில் நாங்கள் யார்? வயிற்றுப் பிழைப்பு பிரசாரகரல்ல. சுய நலத்துக்கு பதவி மோகத்தால் பிரசாரம் பண்ணுகிறவர்கள் அல்ல. என்னைப் பொறுத்தவரை எனக்கு பிரசாரத்தில் வயிறுவளர்க்க வேண்டிய அவசியமில்லை. பட்டம் பதவி எனக்கு மிகவும் தூரமானதல்ல. நான் ஒரு வியாபாரியாய் இருந்தவன். கெளரவ பதவிகளில் முனிசிபல் சேர்மெனாய் ஜி.போ., தா.போ. மெம்பராய் மற்றும் பல பதவியிலிருந்து ஒரே கடுதாசியில் 5, 6 பதவிகளை ராஜிநாமாச் செய்துவிட்டு காங்கரசில் சேர்ந்தவன். நானும் கனம் ராஜகோபாலாச்சாரியாரும் 18 வருஷங்களுக்கு முன் ஒருவருக்கொருவர் பேசியே இருவரும் சேர்மென் பதவிகளை ஏக காலத்தில் ராஜிநாமாச் செய்தோம். அப்பொழுது எனக்கு 27 கெளரவ பதவிகள் இருந்தன. அந்தக்காலத்தில் சேர்மென் வேலைக்கு இருந்த மதிப்பும் கெளரவமும் இந்தக் காலத்தில் மந்திரி வேலைக்குக் கூட இல்லை. இப்போது எவ்வளவு சாதாரண மனிதனும் மந்திரியாகலாம். மந்திரிவேலைக்கு நாணயமோ, செல்வாக்கோ எதுவும் வேண்டியதில்லை என்பதை நீங்கள் பிரத்தியட்சத்திலேயே பார்க்கிறீர்கள். ஆதலால் நான் பதவி வேண்டுமானால் அதற்காக இவ்வளவு பாடுபட வேண்டியதில்லை. நிற்க, நானும் காங்கரசில் கொஞ்ச காலம் இருந்து தேச பக்த - தேசீயவீர பரீஒையில் முதல் வகுப்பில் தேறியவன்தான். நான் காங்கரசை விட்டு வரும்போது காங்கரசில் மாகாண காரியதரிசி, தலைவர் ஆகிய பெருமையுள்ள பதவியில் இருந்து வந்தவன். பலபேர் என்னை வருந்தி வருந்தி கூப்பிடக் கூப்பிட திமிறிக்கொண்டு காங்கரசை விட்டு வெளி வந்தவன். இன்றைய தோழர் கனம் ராமநாதனும் மற்றும் பலரும் என் பின் என்னைத் தொடர்ந்து வெளியில் வந்து கொண்டிருக்கிற நிலையில் வெளியானவர்.

திருப்பூர் காதிவஸ்திராலயத்தையும், புதுப்பாளையம் காந்தி ஆஸ்ரமத்தையும், இதே நாமக்கல் கதர்க்கடையையும் இந்தக் கையாலேயே திறந்து வைத்தவன் நான் தான். நான் காங்கரசை விட்டு வெளிவரும்போது "உங்கள் காங்கரஸ் புரட்டுகளை உணர்ந்தே நான் வெளியில் போகிறேன். வெளியில் போய் உங்கள் வண்டவாளங்களை வெளியாக்குகிறேன்" என்று சொல்லிவிட்டே வெளியில் வந்தவன். நான் இந்தப்படி சொல்லி வெளியில் வந்து விட்டபிறகும் என்னை மாகாணக் காங்கரஸ் கமிட்டி நிர்வாக சபையில் தெரிந்தெடுத்தார்கள். கதர் சங்கங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள். சட்ட சபைக்கு காங்கரஸ் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் நிற்கும்படி கனம் ஆச்சாரியாரே வந்து பலதடவை கூப்பிட்டு இருக்கிறார். கனம் ராமநாதன் அவர்கள்தான் என்னை தடுத்து மறுபடியும் காங்கரசுக்கு போகக்கூடாது என்று சொன்னவர். இவை எல்லாம் மாஜி பதிவிரதை கதையல்ல அல்லது மாஜி விவசாரிகளாய் குச்சுக்காரிகளாய் இருந்து கிழடு பாய்ந்து இப்போது கிராக்கி வராது என்று கருதி பதிவிரதை ஆன கதையும் அல்ல. நான் யாரை பதிவிரதைகள் என்று நம்பினேனோ அவர்கள் தாம்பிர நாணய குச்சுக்காரிகள் என்று கண்டு விலகி வந்து பிறகு இங்கு வந்து நின்று பேசும் கதையாகும். இவற்றை தோழர்கள் ராஜ கோபாலாச்சாரியார், கல்யாணசுந்தர முதலியார், எஸ். சீநிவாசய்யங்கார் ஆகியவர்களைக் கேட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவற்றை ஏன் சொல்லுகிறேன் என்றால் காங்கரஸ் எச்சிலைகளுக்கு நியாயமாகப் பேசி நான் சொல்லும் விஷயங்களை மறுக்க யோக்கியதை இல்லாமல் அயோக்கியதனமாய் தன்னைப் பெற்ற தாயாருக்கு பண வரும் படிக்கு மாப்பிள்ளை தேட முச்சந்தியில் நிற்கும் மாஜி குச்சிக்காரிகள் பிள்ளைகள் போல் கன்னா பின்னா என்று நம்மை வசைபாடுவதன் மூலம் உங்களை ஏய்க்கப் பார்ப்பார்கள். நான் காங்கரசால் தள்ளப்பட்டேன் என்றும் பணம் எடுத்துக் கொண்டேன் என்றும் அதனால் காங்கரசை குறை கூறுகிறேன் என்றும் மாஜி பதிவிரதை என்றும் இப்படி பேசுவார்கள். அந்தப் படியே இதே மேடையில் சிலர் பேசினார்களாம். அதற்கு ஆகவே இதை சொல்லுகிறேன். இவையெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.

இனி சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? காங்கரசு என்றால் என்ன? என்பதை பற்றி தலைவர் கட்டளைப்படி சிறிது பேசுகிறேன்.

சுயமரியாதை இயக்கம்

நான் ஆரம்பத்தில் கூறியபடி முதலில் சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? அது ஏன்? என்பதைப்பற்றி பேசிவிட்டு பிறகு காங்கரஸ் என்பதைப் பற்றிப் பேசுகிறேன்.

சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஏற்படவும் எல்லா மக்களையும் சமூகம் பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி ஒன்று சேர்க்கவும் ஏற்பட்டதாகும். மற்றும் பல கொள்கைகளை அது கொண்டிருந்தாலும் மற்றபடி அது நம் எதிரிகள் சொல்லுவது போல் மதங்களையும் கடவுள்களையும் எதிர்ப்பதற்கு என்றே ஏற்பட்டதல்ல.

நமது நாட்டு மக்களுக்கு மான உணர்ச்சி இல்லாமல் போனதற்கும் ஒற்றுமையும் சமத்துவமும் இல்லாமல் போனதற்கும் ஏற்பட்டுள்ள தடைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொல்லுவதிலும் அவைகளை ஒழிக்க முயற்சிப்பதிலும் உண்மையிலேயே சு.ம. இயக்கம் சிறிதும் ஒளிமறைவில்லாமல் பாடுபடுகிறது.

இந்தக் காரியங்கள் செய்வதில் கடவுள்களோ, மதங்களோ வேறு எவைகளானாலும் சரி, அத்தொண்டிற்குத் தடையாயிருந்தால் அவற்றையும் ஒழிப்பதில் சு.ம. இயக்கம் சிறிதும் பின் வாங்காது. இதைப்பற்றிப் பேசும்போது முதலில் மதம் என்று சொல்லப்படுவது எது? கடவுள்கள் என்று சொல்லப்படுபவை எவை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

மதம் என்பது என்ன?

"மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற ஒழுக்கத்துக்கும் ஏற்றவிதிகளைக் கொண்டதேயாகும்" என்று சொல்லப் படுமானால் அம்மாதிரி மதங்களைப் பற்றி சு.ம. இயக்கம் அதிக கவலைப்படுவது கிடையாது. அதற்கு சுயமரியாதை இயக்கம் அவசியமானால் உதவியும் செய்யும். மற்றும் "மனிதனின் ஆத்மா என்பது கடவுள் என்பதை அடைவதற்கு ஆக மதம் ஏற்பட்டது" என்றால் அதைப் பற்றியும் சு.ம. இயக்கம் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட அபிப்பிராயக்காரனும் அவனுடைய மதமும் இப்போது எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடும். ஏனெனில் அது தனிப்பட்ட மனிதனைப் பொறுத்த காரியம். அதைப்பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் மனித சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும் தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும் மக்களைப் பிரித்து வைத்து உயர்வு தாழ்வு கற்பித்து மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்து பொது முன்னேற்றத்தையும் சுதந்தரத்தையும் தடுக்கும்படியான மதம் எதுவானாலும் அதை ஒழிக்க சுயமரியாதை இயக்கம் பாடுபட்டுத்தான் வந்திருக்கிறது. இன்று அனுபவத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான பல மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுள் அந்நிய மதம் அந்நியர்கள் மதம் என்பதைப்பற்றி நாம் இப்பொழுது பேச வேண்டாம். "நம்முடைய மதம்" என்று இந்துக்கள் என்பவர்களால் சொல்லப்படுகிற இந்து மதம் என்பதையே எடுத்துக் கொள்வோம்.

இந்து மதம்

இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பிரிவினர்களாக இருப்பதற்கு இந்த இந்து மதமல்லாமல் வேறு எது காரணம்? பொதுவாக இந்துக்கள் இத்தனை ஜாதியாக அவற்றிலும் உயர்வு தாழ்வாக பார்ப்பான் பறையன் என்பதாக பிரிவுபடுத்தப்பட்டிருப்பதற்கும் இந்து மதமல்லாமல் வேறு என்ன காரணம்? இந்த 20-வது நூற்றாண்டில் - நேற்று சென்னையில் மகா மேதாவிகளான பி.ஏ.பி.எல் . சாஸ்திரிகள், மகா பண்டித சாஸ்திரிகள் ஒன்று கூடிக்கொண்டு "கீழ் ஜாதியானை மேல் ஜாதியான் தொடுவது என்பது அதாவது தீண்டாமை ஒழிவது என்பது செத்தால் தான் போகுமே ஒழிய இந்த ஜன்மத்தில் ஜாதி பேதம் போக்கடிக்கப்பட முடியாது" என்று பேசியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் இந்து மத சாஸ்திரமும், வேதமும் தான் என்று பேசி இருக்கிறார்கள். ஆகவே இந்த நிலையில் இம்மாதிரி மதம், சாஸ்திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப்படாமல் தீண்டாமையும் ஜாதி பேதமும் போக்கடிக்கப்பட முடியுமா? இதுவரையும் இந்து மதம் விட்டு வேறு மதம் முக்கியமாக முஸ்லீம் ஆகாத எந்த பார்ப்பனரல்லாதாருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை போயிருக்கிறதா என்று யோசித்து பாருங்கள். மற்றும் பார்ப்பனருக்குள்ள சவுகரியமும் சுதந்தரமும் சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மற்ற வகுப்பாருக்கு இருந்து வருகிறதா என்றும் யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட மதம் ஒழிக்கப்பட வேண்டியது தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? மதம் என்ற உடன் ஒருவித வெறி ஏற்பட்டு விடுகிறதாய் இருக்கிறதே ஒழிய மதம் மக்களுக்கு செய்துவரும் நன்மை என்ன? அதனால் மக்கள் அடையும் பயன் என்ன? என்பதை மதவெறியர்கள் சிந்திப்பதேயில்லை. கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள்ளு குடித்தவனை கெடுக்கிறது, மதம் மனதில் நினைத்தவனையே கெடுக்கிறது.

சோம்பேறி வாழ்வுக்கு மதந்தானே காரணம்?

சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது மாத்திரமல்லாமல் மதம் பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மூலகாரணமாய் இருக்கிறது. உண்மையில் நீங்கள் யோசித்துப்பாருங்கள். உடல் வலிக்கப் பாடுபட ஒரு ஜாதியும் நோகாமல் உட்கார்ந்துகொண்டு சாப்பிட ஒரு ஜாதியும் மதம் சிருஷ்டிக்க வில்லையா? உலக செல்வமும் போக போக்கியமும் சரீரப் பாடுபடும் மக்களுக்கு இல்லாமல் போகவும் சோம்பேறி வாழ்க்கை யாருக்கும் சரீரப்பாடுபடாதவர்களுக்கும் போய்ச் சேரவும் காரணம் மதக் கொள்கை அல்லாமல் வேறு என்ன? பாட்டாளிகள் தரித்திரர்களாகவும் வயிற்றுச் சோற்று அடிமையாகவும் கீழ் ஜாதியாராகவும் கீழ் மக்களாகவும் இருக்கவும் பாடுபடுவதும் சரீர உழைப்பு உழைப்பதும் தோஷம் என்று ஏற்படுத்திக் கொண்டவர்கள் கவலையற்ற வாழ்வு வாழவும் செல்வம் பெருக்கிக்கொள்ளவும் மற்றவர்களை அடக்கி ஆளவும் மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?

பகுத்தறிவற்ற பச மிருகம் பூச்சி புழுக்கள் தங்களுக்குள் ஜாதி பேதம், மேல் கீழ் நிலை, அடிமைப்படுத்தும் உணர்ச்சி ஆகியவை இல்லாமல் இருக்கும்போது பகுத்தறிவுள்ள மனிதனுக்குள் ஜாதி பேதம், உயர்வு தாழ்வு எஜமான் அடிமை உணர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?

மிருகங்களுக்கு ஜாதி வித்தியாச முண்டா?

கழுதையில், நாயில், குரங்கில், எருமையில் பறக் கழுதை, பற நாய், பறக் குரங்கு, பற எருமை என்றும் பார்ப்பாரக் கழுதை, பார்ப்பார நாய், பார்ப்பாரக் குரங்கு, பார்ப்பார எருமை என்றும் இருக்கிறதா? மனிதனில் மாத்திரம் இப்படி இருப்பதற்குக் காரணம் மதம் அல்லாமல் வேறு என்ன? இந்த மதம் ஏற்பட்டு எத்தனை காலம் ஆயிற்று? இதுவரை மனித சமூகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? கடவுள் அவதாரமான ராமனது ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்த கீழ் ஜாதியும் சத்தியகீர்த்தி அரிச்சந்திரன் ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்து வந்த சுடுகாட்டுப் பறையனும் பெண்ஜாதி விற்பனையும் பதினாயிரக் கணக்கான வருஷங்கள் ஆகியும் இன்னமும் ஒழியவில்லை என்றால் மதத்தினால் மக்கள் முன்னேறுகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

மதம் கற்பிக்கும் முட்டாள் தனம்

மதம் மனிதனுக்கு எவ்வளவு முட்டாள் தனத்தைக் கற்பிக்கிறது பாருங்கள். செத்துப் பொசுக்கப்பட்டு அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து விடப்பட்ட மனிதனுக்கு பசி தீரவும் சுகமடையவும் அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு பார்ப்பான் மூலம் மேல் லோகத்துக்கு அனுப்பிக் கொடுப்பதென்றால் மனிதனுக்கு சிறிதாவது பகுத்தறிவு இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா? பெற்றோர்களை - இறந்து போனவர்களை மதிக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அதற்காக பார்ப்பானுக்கு ஏன் அழுக வேண்டும்? அவன் காலில் ஏன் விழவேண்டும்? அவன் கால் கழுவின தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்? மாட்டுச் சாணியும் மூத்திரமும் கலக்கி ஏன் குடிக்கவேண்டும்? இது மதக்கட்டளை, மத தத்துவம் என்றால் இப்படிப்பட்ட மதம் ஒழிய வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

கல்யாணம் கருமாதி கல்லெடுப்பு முதலிய சடங்குகள் பார்ப்பானுக்கு அழுகவே கற்பிக்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய அவற்றினால் வேறு பலன் என்ன இருக்கிறது?

வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

மற்ற மதக்காரரும் உலகில் உள்ள மற்ற நாட்டு மக்களும் இப்படியா நடந்து கொள்ளுகிறார்கள்? நமக்குப் புத்தியும் இல்லை வெட்கமும் இல்லை என்றால் கண்ணும் இல்லை காதும் இல்லை என்று தானே அர்த்தம்? இதற்குப் பேர் மாம்சபிண்டம் என்று தானே சொல்ல வேண்டும்? எங்கள் மீது கோபித்து என்ன பிரயோஜனம்? எங்களை மதவிரோதிகள் என்று வைவதில் என்ன பிரயோஜனம்? மனிதனுக்கு இன்று இருக்கும் கேவல நிலைக்கு காரணம் மதமா? அரசாங்கமா? என்று சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே இதை சொல்லுகிறேன்.

மதத்தால் மக்களைச் சுரண்டிக்கொள்ளை அடித்து நோகாமல் வயிறு வளர்த்து போக போக்கிய மனுபவிக்கும் சோம்பேறி அயோக்கியக் கூட்டம் நம்மை மதத்தை பற்றி சிந்தித்து திருத்துப்பாடு செய்து கொள்ளுவதற்குக் கூட இடம் கொடாமல் நம் ஈன நிலைமைக்கு அரசாங்கத்தை - வெள்ளையரைக் கைகாட்டி விட்டு தப்பித்துக்கொள்ளுகிறது. இது சாமர்த்தியமுள்ள திருடன் திருடிவிட்டு அதோ திருடன் ஓடுகிறான் என்று வேறு ஒருவனைக் கைகாட்டி தப்பித்துக்கொள்ளுவது போலவே இருக்கிறது. நான் சொல்லுவது உங்களில் சிலருக்கு புதிதாய் இருக்கலாம். நீங்கள் இதற்குமுன் இவ்விஷயங்களைப் பற்றி சரியாய் சிந்தித்து இருக்கமாட்டீர்கள் என்றே இவ்வளவு பேசினேன். ஆகவே நாங்கள் ஏன் மதத்தைப் பற்றி பேசுகிறோம்? எந்த மதத்தைப்பற்றி பேசுகிறோம் என்பதை சிந்தித்துப் பார்த்து உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.

இனி நமது கடவுள்கள் என்பதைப்பற்றியும் சிறிது பேசிவிட்டு அரசியலைப்பற்றிப் பேசுகிறேன்.

நமது கடவுள்கள்

இந்த விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுள்களைப் பற்றியும் அவைகளின் திருவிளையாடல்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டு மிராண்டித்தனமேயாகும் என்றாலும் நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்வித குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால் நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரசாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது.

கடவுள் தன்மை

கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழையகால அதாவது காட்டு மனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும் முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதது என்றும் அது பெயரும் குணமும் உருவமும் இணையும் இல்லாதது என்றும் மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக்கூடியது என்றும் சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேசவேண்டிய அவசியம் இல்லை. இக்கருத்துடன் உணர்ந்திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும் நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும் அது சமுதாய வாழ்விற்கு மிக்க பயனளிக்கும் என்றும் பல அறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால் இன்றைய தினம் இந்துக்கள் என்பார்களுடைய சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன பாருங்கள். மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலியவைகளும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன. காசியில் ஒரு கோவிலில் 2 உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவைகளுக்கும் பூசை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்வளவோடு இல்லாமல் இக்கடவுள்களுக்கு பெண்டு பிள்ளைகள் வைப்பாட்டி தாசி விபசாரித்தனம் ஆகாரம் உறக்கம் புணர்ச்சி முதலியவைகளும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும் இக்கடவுள்களுக்கு கல்யாணம், சாவு முதலியனவும் கூட கற்பிக்கப்படுகின்றன.

திருவிழா ஆபாசம்

கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை. செய்கையில் செய்து காட்டி அதாவது கடவுள் விபசாரிதனம் செய்வதாகவும், தாசிவீட்டுக்குப் போவதாகவும் மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவதாகவும் உற்சவங்கள் செய்துகாட்டி அவைகளுக்காக பல கோடிக்கணக்கான ரூபாய்களும் மனிதனின் விலை உயர்ந்த நேரமும் ஊக்கமும் உணர்ச்சியும் பாழாக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20-வது நூற்றாண்டில் செய்யக்கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக்கொண்டு அவைகள் மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்ததாக புராணங்களையும் இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன். கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக்கடவுளாவது ஏற்றுக்கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும் சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் 3 தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண்ஜாதி வேண்டியிருந்தால் போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று? என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா? அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா? அல்லது ஓடிப்போய்விட்டதா? அல்லது முடிவெய்தி விட்டதா? என்று கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக் கல்யாணத்துக்கு கொட்டு மொழக்கு ஆடம்பரம் பணச்செலவு ஏன்? சாமி கல்யாண சமாராதனை சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப்படி வருஷம் எத்தனை உற்சவம்? எங்கெங்கு உற்சவம்? இவைகளால் இதுவரை அடைந்த பலன் என்ன? நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100க்கு 95 பேர்கள் தற்குறி, நமது உலகத்திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒருமனிதனுக்கு தினம் சராசரி 2 அணா படி கூட இல்லை என்று சொல்லுகிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா?

படையல் யார் வயிற்றில் போகிறது

ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள்? இவைகள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று புறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப்படுவதென்றால் யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும் ஆருத்திரா தரிசனத்துக்கும் தை பூசத்துக்கும் கார்த்திகை தீபத்துக்கும் திருப்பதிக் குடைக்கும் திருச்சந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷாவருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்து செலவு, மெனக்கேடு செலவு உடல் கேடு ஒழுக்கக்கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இக்கடவுள்களால் மக்களுக்கு நன்மையா தீமையா என்று கேட்கின்றேன். இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்கு பயன்படுத்த முயற்சி செய்தால் வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களை கைப்பற்றி தொழில் சாலைகள் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினால் வேலை இல்லாத் திண்டாட்டமும் தற்குறித்தன்மையும் அந்நிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன். ஏதோ ஒரு கூட்டங்கள் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டு தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுவதா? என்று கேட்கின்றேன்.

மற்றும் கடவுள் பேரைச் சொல்லிக்கொண்டு பக்தியின் காரணம் காட்டிக்கொண்டு எவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுகிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மஞ்சள் துணி கட்டிக்கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும் மொட்டை அடித்துக்கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும் சாம்பலையும் அடித்துக்கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக்கொள்ளுவதும் அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆனகாரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா?

கோவில்கள் எதற்கு?

மற்றும் மக்கள் சாப்பிடக்கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவைகளை கல்லின் தலையில் குடம் குடமாய் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பர துணிகள் எதற்கு? லக்ஷம் 10 லக்ஷம் கோடி பெறும்படியான ஆறு மதில் ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள் கட்டிடங்கள் கோபுரங்கள் எதற்கு? தங்கம் வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவைகள் எல்லாம் நாட்டு பொது செல்வங்கள் அல்லவா? இவைகளை கல்லுகளுக்கு அழுது விட்டு சோம்பேறி சூழ்ச்சிக்கான பார்ப்பன வயிற்றை நிரப்பி அவன் மக்களை ஐ.சி.எஸ்., ஹைகோர்ட் ஜட்ஜி திவான்களாக ஆக்கி விட்டு இதுதான் கடவுள் தொண்டு என்றால் இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டு களையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன்.

உண்மை பேசுகிறவன் நாஸ்திகனா?

இனி எப்பொழுது தான் நமக்கு புத்தி வருவது. இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும் அவனது எச்சிலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக்கொண்டு முட்டாள் ஜனங்கள் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடு கிறார்கள். அப்படியானால் இந்த கடவுள்களை ஒப்புக்கொண்டு இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமாய் கூத்தாடுவது தானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகரா? அப்படியானால் அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப்பற்றி எங்களுக்கு சிறிதும் கவலையில்லை. அந்தப் பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்படமாட்டோம். ஏதோ எங்களுக்கு தோன்றியதை - நாங்கள் சரி என்று நம்புவதை அதாவது நம்நாட்டுக்கு மேற்கூறிய மதமும் கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றனவென்றும் இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும் ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப்பித்துக்கொள்ளுகிறோம். பொறுமையாய் கேட்டு பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்று தான் சொல்லுகிறோமே ஒழிய பார்ப்பனர்கள் போல் நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ நம்பினால்தான் மோக்ஷம். நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை.

(தொடர்ச்சி 26.12.1937 குடி அரசு "காங்கரசும் அரசியலும்")

-------------------------------------குறிப்பு: 12.12.1937 ஆம் நாள் நாமக்கல் திரையரங்கில் நடைபெற்ற நாமக்கல் வட்ட சுயமரியாதை மாநாட்டிலும் அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஆற்றிய உரை."குடி அரசு" - சொற்பொழிவு - 19.12.1937
 ************************************************************************************
காங்கரசும் - அரசியலும்

தோழர்களே! நான் இது வரை சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? அது ஏன் ஆரம்பிக்கப்பட்டது? மதம் கடவுள் சமூகம் சம்பந்தமாக அதன் கருத்து என்ன? என்பது பற்றியும் அதைப்பற்றி எதிரிகள் செய்யும் விஷமப்பிரசாரத்துக்கு சமாதானமும் சொன்னேன். இனி காங்கரசின் அரசியல் தன்மையைப்பற்றி சிறிது பேசுகிறேன்.

காங்கரசின் அரசியல் கொள்கைப்படி சுயமரியாதைக்காரர்கள் தேசத் துரோகிகள் என்றும் தேசத்தை அந்நியருக்குக் காட்டிக் கொடுக்கும் நபர்கள் என்றும் மற்றும் பலவாறாக காங்கரஸ் கூலிகளும், காலிகளும் கூப்பாடு போடுகிறார்கள். ஆதலால் அவர்கள் வண்டவாளம் வெளிப்படுத்த வேண்டியதாகிறது.

காங்கரஸ் வண்டவாளம்

ஆனால் சில காங்கரஸ்காரர்கள் என்பவர்கள் சுயமரியாதைக்காரர்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால் சுயராஜ்யம் பெற்ற பிறகே சுயமரியாதை அடைய முடியும் என்கிறார்கள். சுயமரியாதைக்காரர்கள் காங்கரசைப்பற்றி சொல்லுவது என்னவென்றால் அது ஒரு பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனம் என்றும் சமுதாயத்துறையில் மதிப்பும் செல்வாக்கும் இழந்த பார்ப்பனர்கள் அரசியல் வேஷம் போட்டு பாமர மக்களை ஏய்க்க ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும், அதனால் மக்களுக்கு பல கெடுதிகள் ஏற்பட்டதல்லாமல் யாதொரு நன்மையும் ஏற்பட்டதில்லை என்றும், நாட்டுக்கோ மனித சமூகத்துக்கோ ஏதாவது நன்மை ஏற்பட வேண்டுமானால் இந்த பார்ப்பன ஆதிக்க சபை ஒழிய வேண்டும் என்றும் சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறது. காங்கரஸ்காரருக்குத் தேசம் என்பது பார்ப்பன சமூகமேயாகும். சுயராஜ்யம் என்பது பார்ப்பன ஆதிக்கம் ஏற்படுத்துவதேயாகும். இதைத் தவிர காங்கரசுக்கும் சுயராஜ்யத்துக்கும் வேறு கருத்து கிடையாது. இதை நான் அனுபவத்தின் மீதே கூறுகிறேன்.

பார்ப்பனரல்லாதாருக்கு காங்கரசில் மதிப்புண்டா?

உதாரணமாக இன்று காங்கரசில் பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு யாராவது உண்மையான தலைவர்களாகவும், அதிகாரக்காரர்களாகவும் இருக்கிறார்களா என்பதைப்பற்றி சற்று நடுநிலையில் இருந்து சிந்தித்துப்பாருங்கள். தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி ஆகியவர்களே இந்த பத்து வருஷகாலமாக காங்கரஸ் ஸ்தாபனத் தலைவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் இப்பார்ப்பனர்களது தலைமை பதவிக்கு ஆசி கூறிக்கொண்டும் அடிமைத்துவ பாட்டு பாடிக்கொண்டும் இருந்து சிலர் வயிறு வளர்க்கிறார்கள். சிலர் அவர்கள் கொடுக்கும் ஏதாவது பதவி எலும்பைக் கவ்விக்கடித்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதல்லாமல் சுதந்தரத்தோடு சொந்த புத்தியோடு தன் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்லி வலியுறுத்தத் தக்க மனிதத்தன்மையுடன் பார்ப்பனரல்லாதார்களில் யாராவது காங்கரசில் இருக்கிறார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

முத்துரங்கம் நிலைமை

தோழர் முத்துரங்க முதலியார் காங்கரஸ்கமிட்டி தலைவரல்லவா என்று கேட்கலாம். ஆம், அவர் காங்கரஸ் கமிட்டித் தலைவர்தான். ஆனால் அவருக்கு உள்ள அதிகாரமும் அந்தஸ்தும் என்ன என்று பாருங்கள். மந்திரிகளில், கனம் தோழர் ராமநாதனுக்கு எப்படி விளம்பர மந்திரி பதவியோ அப்படி காங்கரஸ் தலைவர்களில் தோழர் முத்துரங்க முதலியார் விளம்பர தலைவர் பதவி தான் வகிக்கிறார். அதாவது பார்ப்பனத் தலைவர்கள் செய்யும் காரியத்தை - போடும் உத்திரவை விளம்பரம் செய்பவர். காங்கரஸ் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமமான காரியங்களுக்கும் சூழ்ச்சியான காரியங்களுக்கும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு அவர்கள் மீது "கல்"விழாமல் தடுக்கும் கவசங்களாக இருப்பவர். இவையல்லாமல் மற்றபடி தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் இந்த 10 15 வருஷ காலமாக தன் சுதாவாக எடுத்துச் சொன்ன காரியமோ செய்த காரியமோ கொண்டு வந்த தீர்மானமோ அல்லது பார்ப்பனத் தலைவர்கள் அபிப்பிராயங்களை தட்டிச்சொன்ன காரியமோ ஏதாவது ஒன்றை எடுத்துக்காட்டுங்கள். தோழர் எஸ். ÿ நிவாசய்யங்கார் காங்கரஸ் தலைவராயிருக்கும்வரை அவருக்கு பிரதம சிஷ்யராய் இருந்தார். அவர் மாறி கனம் ராஜகோபாலாச்சாரியார் தலைவராக வந்தது முதல் அவருக்கு ஆஞ்சநேயராக இருந்து வருகிறார். இனி யாரைப்பற்றி சொல்லப் போகிறீர்கள்? தோழர்கள் உபயதுல்லா, குப்புசாமி, அண்ணாமலை, சுப்பையா கம்பெனியைப் பற்றி சொல்லுகிறீர்களா? அல்லது வேறு தோழர்கள் தேவர், ராமலிங்கஞ் செட்டியார், நாடிமுத்துப் பிள்ளை, டாக்டர் சுப்பராயன், வெள்ளியங்கிரி கவுண்டர் போன்றவர்களைப் பற்றி சொல்லுகிறீர்களா? இவர்களின் சொந்த யோக்கியதை எவ்வளவு பெரிதாயிருந்தாலும் காங்கரசில் இவர்களுக்கு உள்ள மதிப்பும், செல்வாக்கும் யாருக்குத் தெரியாது? அரசியல் உலகில் இவர்களை யார் சட்டை செய்கிறார்கள்.

என் அநுபவம்

இவர்கள் சொந்தப் புத்தியை நம்மை வைவதற்கும் ஜஸ்டிஸ் கட்சியை வைவதற்கும் உபயோகப்படுத்துவதல்லாமல் பார்ப்பனரிடமோ காங்கரசினிடமோ உள்ள அபிப்பிராய பேதத்தை தெரிவிப்பதற்கு உபயோகப்படுத்தா விட்டாலும் அது விஷயத்தில் சொந்தப்புத்தி இருப்பதாகவாவது எப்போதாவது காட்டிக் கொண்டிருக்கிறார்களா? இதை நான் இன்று நேற்று சொல்லவில்லை. இந்த 10, 15 வருஷ காலமாகவே சொல்லி வருகிறேன். நான் காங்கரசில் இருந்து பலதடவை ஜெயிலுக்குப் போய் பல தலைமைப்பதவி வகித்து "சர்வாதிகாரி" பதவியில் இருந்து வந்த அனுபவத்தையே எடுத்துச் சொல்லிவருகிறேன். இது ஒரு புறமிருக்கட்டும்.

வரிகள் பெருகியதற்கு காங்கரசே காரணம்

காங்கரசுக்கு இன்று வயது 50 வருஷத்துக்கு மேலாகிறது. இந்த ஐம்பது வருஷ வாழ்வில் காங்கரஸ் 2-வித பருவத்தன்மை அடைந்திருக்கிறது. அதாவது முதல் முப்பது வருஷகாலம் சர்க்காருக்கு ராஜபக்தி, ராஜவிசுவாசம் காட்டி அதற்கு கூலியாக தங்களது தேவைகளுக்கு விண்ணப்பம் போடுவது ஒன்று. இந்த பருவத்தில் தான் உத்தியோகங்கள் பெருகினதும், சம்பளங்கள் பெருகினதுமாகும். வெள்ளையாய்ச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனர்கள் அரசியலில் உத்தியோகங்களில் பெரும் பெரும் பகற்கொள்ளை போன்ற பதவிகளில் 100க்கு 100 பேராய் கைப்பற்றி பூரண ஆதிக்கத்திற்கு வந்த காலமாகும். அதனால்தான் நமது வரிகளும் அதாவது காங்கரஸ் ஆரம்பிப்பதற்கு முன் இருந்ததை விட இரட்டிப்பு மூன்று பங்கு ஆக பெருக வேண்டியதாயிற்று. சம்பளமும் உத்தியோகமும் எவ்வளவுக்கெவ்வளவு காங்கரசினால் பெருக்கமடைந்ததோ அதுபோலவே வரியும் பெருகிற்று.

சட்டமறுப்புச் சூழ்ச்சி

இந்த உத்தியோகங்களிலும் சம்பளக் கொள்ளையிலும் தங்களுக்கும் ஒருபங்கு வேண்டுமென்று கேட்பதற்கு ஆகத்தான் முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் சங்கமும் ஏற்பட்டதாகும். இதைக் கொடுக்காமல் ஏமாற்றவே காங்கரஸ் ஒரு பல்டி அடித்தது. அந்தப் பல்டிதான் இந்த 20 வருஷகாலமாக நடந்து வரும் இரண்டாவது பருவத்தன்மை. அதாவது சர்க்காரோடு போராடுவதாகவும் அதற்காக சர்க்காரோடு ஒத்துழைக்கக் கூடாதென்றும் உத்தியோகம், பதவி, சம்பளம் ஆகியவை அற்பமென்றும் அது தேசத்துரோகமென்றும் அந்நிய ஆட்சியே கூடாதென்றும் பேசி சட்டம் மீறி ஜெயிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வெளிவந்து சரணாகதி அடைந்து பதவி பெற்ற தன்மை. இதில் சிறிதும் நாணயமில்லை என்பதே எனது அபிப்பிராயம். இது பார்ப்பனர்களுடைய வஞ்சகப் புத்தியே ஒழிய இப்பேச்சுகளில் செய்கையில் கொஞ்சமும் உண்மை கிடையாது. மற்றென்ன இருக்கிறது என்றால் தங்கள் கைக்கு பதவிகள் வரக்கூடிய சமயம் ஏற்படும்வரை இப்படியே சொல்லிக்கொண்டு இருந்து சந்தர்ப்பம் கிடைத்த உடன் திடீரென்று நுழைந்து கொள்ளலாம் என்கின்ற தந்திர புத்தியேயாகும். அதற்கு இணங்கவே தான் பொதுமக்கள் ஏமாறுந்தன்மை அடையும் வரை ஒத்துழையாமை - பஹிஷ்காரம் - சட்ட மறுப்பு முதலியவை பேசிக்கொண்டு இருந்து பதவி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்ட உடன் சட்டப்படி நடப்பதாக வாக்குறுதி கொடுத்து ராஜவிசுவாசப் பிரமாணமும் ராஜபக்தி பிரமாணமும் சட்டத்தை ஒழுங்காய் கட்டுப்பட்டு நடத்திக் கொடுக்கும் பிரமாணமும் ஒரே மூச்சில் செய்து இன்று பதவிக்கு வந்து இருக்கிறார்கள்.

பதவி அடைந்த 6, 7 மாகாணங்களிலும் பார்ப்பனர்களே அதாவது சென்னையில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் போலவே 6, 7 மாகாணங்களிலும் பார்ப்பனர்களே தலைவர்களாய் இருந்து மந்திரி சபை நடத்துகிறார்கள். பம்பாயில் ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு உரிமை இருந்ததையும் அதாவது நரிமனை திடீரென்று கவிழ்த்து விட்டு அங்கும் ஒரு பார்ப்பனரையே தலைவராக ஏற்படுத்திக்கொண்டார்கள். அதாவது எவ்வளவு மானம் கெட்ட பார்ப்பனரல்லாதாராய் இருந்தாலும் ஏதாவது ஒரு சமயத்தில் மோசம் செய்து விடுவான் என்று பார்ப்பனர்கள் சந்தேகப்பட்டும் ஒரு மாகாணத்தில் ஒருவன் ஏதாவது சொந்த புத்தியோடு காரியம் செய்தால் அது மற்ற மந்திரிகளையும் கவிழ்த்துவிட நேருமோ என்று பயந்தும் ஒருவன் சொல்லுகிறபடியே எல்லா மாகாண மந்திரிகளும் ஆடத்தகுந்த மாதிரி எல்லா மாகாணத் தலைவர்களையும் முதல் மந்திரிகளையும் பார்ப்பனர்களாகவே வைத்துக் கொண்டார்கள். உதாரணமாக தீண்டாமை விலக்க வேண்டும் என்று ஒரு மந்திரி ஒரு மாகாணத்தில் சட்டம் செய்து விட்டால் மற்ற மந்திரிகளும் செய்ய வேண்டி வந்துவிடும். பிறகு அது பார்ப்பன சமூகத்தின் ஆதிக்கத்தையும் உயர்வையும் அடியோடு ஒழித்து விடும். ஆதலால் தீண்டாமை ஒழிக்கிறோம், ஒழிக்கிறோம் என்று தீண்டாமை ஒழிக்கப்படாத முறையிலேயே பேசி ஒழியாத மாதிரியிலேயே காரியம் செய்யவேண்டும். இதற்கு பார்ப்பனரல்லாதார் ஒருவராவது கடைசிவரை உள் ஆளாய் இருப்பாரா என்பது பார்ப்பனர்களுக்கு சந்தேகம். ஆதலால்தான் எந்த மாகாணத்திலும் பார்ப்பனரல்லாதார்களை அவர்கள் நம்புவதில்லை.

ஆகவே காங்கரஸ் பார்ப்பன ஆதிக்கமுள்ளது என்பதற்கும் பார்ப்பன ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொள்ளவே ஏற்பட்டதென்பதற்கும் அதற்கு அனுகூலமாக காரியங்கள் பிரத்தியக்ஷத்தில் இருந்து வருவதையும் எடுத்துச் சொன்னேன். இனி காங்கரஸ் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்து பதவிக்கு வந்து சர்வாதிகாரம் செய்யக்கூடிய பலத்துடன் பதவி ஏற்று இன்று கணக்குக்கு கிட்டத்தட்ட 6 மாதம் ஆகப்போகிறது. இந்த 6 மாத கணக்கை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

காங்கரசுக்காரர் பதவி ஏற்று இன்றைக்கு கிட்டத்தட்ட 6 மாத காலமாகப் போகின்றது. இந்த ஆறு மாதத்திய வரவு செலவு கணக்கு என்ன என்று பார்ப்போம். காங்கரசின் வேலைத்திட்டம் என்னவென்றால் அவர்கள் தேர்தல் காலங்களில் ஓட்டர்களுக்குச் சொன்னவைகளும் கராச்சித் திட்டமுமேயாகும். இந்தக் காரியங்களில் அவர்கள் எதை செய்திருக்கிறார்கள்? எதைச் செய்ய முயற்சிக்கிறார்கள்? என்பதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

மொத்தத்தில் சொல்ல வேண்டுமானால் காங்கரசுக்காரர்கள் காங்கரசால் மக்களை ஏமாற்றி எலக்ஷன்களில் வெற்றி பெறுவது என்பதல்லாமல் அவர்கள் இந்த 15, 20 வருஷகாலமாகவே அவர்களது சகல திட்டங்களிலும் சகல வாக்குத்தத்தங்களிலும் தோல்வியே அடைந்து வந்திருக்கிறார்கள். அதாவது காங்கரஸ்காரர்கள் பதவி ஏற்காமல் வெளியில் இருந்துகொண்டு ஒத்துழையாமை, சட்டமறுப்பு, நிர்மாணத்திட்டம் ஆகிய காரியங்களிலும் தோல்வியே அடைந்து வந்திருக்கிறார்கள்.

எல்லாம் தோல்வி

அவர்களது பஹிஷ்காரத் திட்டங்கள் எல்லாவற்றிலுமே தோல்வி அடைந்தார்கள். தோல்வி அடைந்தது மாத்திரமல்லாமல் பஹிஷ்காரத் திட்டத்தை மீறி காங்கரஸ் கட்டளைக்கு விரோதமாய் தேர்தல் முதலியவை களில் மாறு வேஷத்துடன் பிரவேசித்து அதிலும் ஒன்றும் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தார்கள்.

சட்ட சபைகளில் இருந்து வெளியேறும் நாடகம் நடத்தி அவற்றிலும் படுதோல்வி அடைந்து மறுபடியும் உள்ளே போனார்கள்.

சட்டசபைகளை ஸ்தம்பிக்கச் செய்ய, முட்டுக்கட்டை போட சட்டசபைக்குப் போனார்கள். அங்கு போய் பதவி ஏற்றார்கள், சம்பளம் பெற்றார்கள்.

சைமன் கமிஷன் பஹிஷ்காரம் செய்தவர்கள் சைமன் கமிட்டிக்கு நேரு திட்டம் சமர்ப்பித்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்தார்கள்.

உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்தார்கள்.

வட்டமேஜை மகாநாடு பஹிஷ்காரம் செய்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்து வட்ட மேஜைக்கு வாரண்டு வந்து பிடித்துக் கொண்டு போனது போல் போய்ச் சேர்ந்தார்கள்.

வட்ட மேஜைக்குப் போயும் அங்கும் தோல்வி அடைந்து திரும்பி வந்தார்கள்.

திரும்பி வந்ததும் சட்ட மறுப்பு, மறியல் முதலியவைகள் செய்தார்கள். அவற்றில் அடியோடு மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று.

இவ்வளவு தோல்விகள் அடைந்த பின் ஒத்துழையாமை, சட்ட மறுப்பு, பகிஷ்காரம் ஆகியவைகள் கைவிடப்பட்டன என்று காங்கரசிலேயே தீர்மானம் போட்டதுடன் இனி சட்டங்களை மீறுவதில்லை, மறியல்கள் செய்வதில்லை என்று சர்க்காருக்கு காந்தியார் எழுதிக்கொடுத்து ஜெயிலில் இருந்து வெளிவந்து தேர்தல் பிரசாரம் நடத்தினார்கள்.

இந்திய சட்டசபை

இந்திய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அங்கு போய் காங்கரசுக்கு மெஜாரிட்டி இருந்தும் காங்கரசுக்காரர்கள் போக்குவரத்துப் பிரயாணப்படி வாங்கியதைத் தவிர சர்க்கார் தீர்மானங்கள் சிலவற்றை தோற்கடிக்கும் நாடகம் நடத்தியதைத்தவிர இவர்களால் சர்க்காரின் ஒரு சிறு திட்டத்தையோ தீர்மானத்தையோ நடைபெறாமல் நிறுத்திவிடவில்லை.

மற்றும் தற்கால சாந்தியாய் ஏற்பட்ட அடக்கு முறை சட்டங்கள் முதலியவற்றிற்கு பூரண ஆயுள் கொடுத்தார்கள்.

வரிகள் உயர்த்தப்பட்டனவே ஒழிய ஸ்டாம்பு முதலிய எந்த விஷயத்திலும் ஒரு சின்ன காசு அளவு குறைக்கப்படவில்லை.

சட்டசபை ஓட்டு கேட்கும் போது தங்கள் காரியங்கள் நடைபெற வில்லையானால் ராஜிநாமா செய்து விட்டு வெளியில் வந்துவிடுவோம் என்று சொன்னவர்கள் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை என்று தெரிந்தும் இன்னமும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அங்கு தொழிலாளிகள் சம்மந்தமாக வந்த சட்டங்களில் தொழிலாளர் களுக்கு துரோகம் செய்தார்கள். மற்றும் வேறு பல கம்பனிச்சட்டங்கள், இன்ஷுரன்ஸ் சட்டங்கள், ரயில்வே சம்மந்தமான விஷயங்கள் முதலியவைகள் வந்த காலத்தில் முதலாளிகளுக்கு அனுகூலமாகவே இருந்தார்கள். இவற்றில் பலவற்றில் பெருந்தொகையாக பிரதிப்பிரயோஜனம் கூட உண்டு என்கின்ற பழிப்புக்கு இடம் செய்து கொண்டார்கள்.

சென்னை சட்டசபை

சில தனிப்பட்டவர்களின் இன்றைய நிலைமையைப் பார்த்தால் இந்த மாதிரி காரியத்தால் அல்லாமல் வேறு வகையில் இவர்களுக்கு இவ்வளவு பணம் ஏது? என்று சந்தேகப்படும்படியாகவே இருக்கிறது.

இது நிற்க, சென்னை சட்டசபை நிலைமை என்ன என்று பார்ப்போம். இன்று சென்னை சட்டசபையில் காங்கரசுக்கு பெருமித மெஜாரிட்டி இருந்து வருகிறது. எதிர்க்கட்சிக்காரர்கள் எல்லாம் பலவித சூழ்ச்சியால் விலைக்கு வாங்கப்பட்டு எதிர்ப்பே இல்லாமல் செய்து கொள்ளப்பட்டாய் விட்டது.

மேல் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சர். உஸ்மான் அவர்கள் ஆச்சாரியாரைப் பற்றி புகழ்மாலை சாற்றிய வண்ணமாய் இருக்கிறார்.

கீழ்ச் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் குமாரராஜா அவர்கள் ஆச்சாரியாருக்கு பூமாலை சூட்டிய வண்ணமாய் இருக்கிறார். இனி காங்கரஸ்காரர் இஷ்டத்திற்கு மாறு பேசுகிறவர்கள் யாருமே இல்லை. இருந்தாலும் அவை காரியத்துக்கு உதவாதவைகள் தான். ஆகவே காங்கரஸ்காரர்கள் இந்த தனி அரசு காலத்தில் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். காங்கரஸ் திட்டத்தில் எதை நடத்தி வைத்தார்கள் என்று பாருங்கள்.

காங்கரஸ் திட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் தீண்டாமை விலக்கும் முக்கியமானவை. இவைகளில் என்ன செய்திருக்கிறார்கள்? காங்கரஸ் தனி அரசு ஆட்சியில் இந்து முஸ்லீம் வேற்றுமை அதிகப்பட்டுவிட்டது. தீண்டாமைவிலக்குக்கு சட்டம் செய்வது கூடாது என்று தீர்மானிக்கப்பட்டு தீண்டாமையை சட்ட மூலம் ஒழித்த வேறு அரசாங்கங்களை பாராட்டுவதுடன் நின்றுவிட்டது. தேசீயக் கல்வித்திட்டம் ஹிந்தி கட்டாயப்பாடமாகவும் பழங்கால கைத்தொழில் பயில்வதே கல்வித் திட்டமாகவும் ஆகிவிட்டது.

காங்கரசில் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளதான பாஷாவாரியாக மாகாணங்களை அரசியலிலும் பிரிப்பது என்பதைச் செய்ய இஷ்டமில்லாமல் சூழ்ச்சிகள் செய்து அம்முயற்சி அடக்கப் பட்டு வருகிறது.

மதுவிலக்குப் புரளி

மதுவிலக்கு சட்ட ரீதியாகவோ திட்ட ரீதியாகவோ இல்லாமல் விளையாட்டுப் பிள்ளை மண் கொழிக்கும் மாதிரி விளம்பரத்தில் செய்து கொண்டு அக்கம் பக்கத்தில் போய் குடிப்பதற்கு செளகரியமும் வைத்துக்கொண்டு தினமும் சில்லறை சிப்பந்திகள் மடி நிறையும்படி கேசு செய்து எண்ணிக்கை காட்டுவதே மது விலக்கு முயற்சியாய் இருக்கிறது. மதுவிலக்கு பண நஷ்டத்திற்கு யாதொரு பரிகாரமும் தேடாமல் கல்வி, சுகாதாரம், வைத்தியம் ஆகியவைகள் தலையில் தைரியமாய் கை வைக்கப்பட்டு வருகிறது.

கதர் விஷயம் பயன்படாது என்று தெரிந்தும் கதரை ஆதரிக்க "கதர் காட்டுமிராண்டித் திட்டம்" என்ற தோழர் ராமநாதனை விலைக்கு வாங்கி அவரைக் கொண்டு கதரின் பேரால் சில ஆட்களை கட்சிப் பிரசாரத்துக்கு வைத்திருப்பதற்கு ஆக பொது மக்கள் வரிப்பணத்தில் 2 லக்ஷ ரூபாய் கிராண்டு கொடுத்து விட்டு அதைச் சரிக்கட்ட ஜவுளி வியாபாரிகளுக்குப் புது வரி போடப்பட்டாய் விட்டது.

தேசீயக் கடனை ஏன் ஒழிக்கவில்லை

தேசியக் கடன்களை கேன்சில் செய்வதாக காங்கரசில் செய்த தீர்மானங்கள் வண்டி வண்டியாய் இருக்க அவைகளை காற்றில் பறக்கவிட்டு, பழைய கடனை ஒப்புக்கொண்டு - ஆதரிக்கச் செய்தும் பயன்படாமல், புதுக்கடனும் வாங்கியாய் விட்டது.

மாகாண சட்டசபைகளில் செய்யக்கூடிய அதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறைச் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டியதற்கு பதிலாக அடக்குமுறைச் சட்டப்படி காங்கரஸ்காரர்கள் மீதே நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட்டு வருகிறது. முன்பு இல்லாத மாதிரியில் பத்திரிகைகளுக்கு ஜாமீன் கேட்கப்படுகிறது. நீதி நிர்வாக இலாகாக்களை பிரிவினை செய்யவேண்டும் என்னும் கோரிக்கையானது காங்கரசின் 30, 40 வருஷ திட்டமாயும் கோரிக்கையாயும் இருந்துகூட இப்போது காங்கரஸ் பதவிக்கு வந்தவுடன் கவர்னருக்கு சரணாகதி அடைந்து நீதி நிர்வாக இலாகா பிரிக்க முடியாதது என்று தீர்மானிக்கப்படக்கூடியதாக ஆகிவிட்டது.

வரிகுறைப்பு எங்கே?

பொதுவாக வரி குறைப்பது என்பது புதுவரி போடும் வேலையில் கவலை செலுத்தப்படுகிறது. சம்பளங்கள் குறைப்பு என்பதும் சம்பளம் தவிர வீட்டு வாடகை, சர்க்கார் செலவில் மோட்டார் கார் வாங்கிக் கொடுத்தல், மோட்டார் கார் அலவன்சு கொடுத்தல் ஆகியவைகளில் புதுப்புது செலவினங்கள் ஏற்படுத்தப்படுகிறது. அரசியல் உத்தியோகத்தில் வெள்ளையர்- இந்தியர் வித்தியாசங்களை ஒழிப்பது என்பதும் இப்போது வெளிப்படையாய் வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களுக்கு தனி மரியாதை இருக்க வேண்டியது தான் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. காங்கரஸ்காரர்களிடம் உள்ள ஜனநாயகம் என்பது பொது ஜனங்களைப் பார்த்து "நான் அப்படித்தான் செய்வேன், வேண்டுமானால் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்" என்கின்ற எதேச்சாதிகாரமாக மாறி விட்டது.

ஸ்தல ஸ்தாபன வெற்றியானது சூழ்ச்சியால் வெற்றி அடையப்பார்க்க வேண்டியதாய் விட்டதே ஒழிய நேர் வழியில் முயற்சித்த இடங்களில் எல்லாம் தோல்வியே கிடைத்திருக்கிறது.

பிரித்த ஜில்லா போர்டுகளை ஒன்று சேர்த்தல் என்பது கட்சி நலனுக்கு கவனிக்கப்பட்டு நபருக்கு தகுந்தாற்போல் தனித்தனி முறை கையாளப்பட்டு வருகிறது.

ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சமும் கண்டிறாக்ட்டு ராஜ்யமும் ஒழிக்கப் போவதாக கூறி ஓட்டுப் பெற்றவர்கள் காங்கரஸ் மெம்பர்களே லஞ்சம் வாங்கி வருவதையும் கண்டிறாக்ட்டு பெற்று வருவதையும் பெயர் விபரம் புள்ளிவிபரம் ஆகியவையுடன் காங்கரஸ் பத்திரிகைகளே எடுத்துக்காட்டி வருகின்றன.

ஜில்லா போர்டுகளை இணைக்காததேன்?

ஜில்லா போர்டுகளை எடுத்து விடுவதாய்ச் சொன்னதையும் ஜில்லா போர்டுகளுக்கு ஸ்பெஷல் ஆபீஸர்கள் அல்லது நிர்வாக ஆபீஸர்கள் போடுவதாய்ச் சொன்னதையும் இப்போது காற்றில் பறக்கவிட்டு அவை செய்யாமல் இருப்பதற்கு மெம்பர்களிடம் தலைவர்களிடம் வியாபாரம் பேசப்படுகிறது. சில பேர்களில் காங்கரசுக்கும் காங்கரசில் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் பணம் கொடுத்து பிரிவினையை ஒன்று சேர்க்காமல் தப்பித்துக் கொள்ளவும், நிர்வாக அதிகாரி போடாமல் பார்த்துக்கொள்ளவும் முயற்சி நடந்து வருகிறது.

கடன் வாய்தா மசோதா ஒழிந்ததேன்?

காங்கரஸ் கொண்டு வருவதாய் சொன்ன சட்டங்கள் கொண்டு வரப்படாமல் நிறுத்திக் கொள்ள வேண்டியதாய் விட்டன. கொண்டு வந்த சட்டங்களும் தலைமேலடிக்கப்படுகின்றன. சட்டங்கள் செய்யும் விஷயத்தில் காங்கரசுக்கு புத்தியும் இல்லை; அனுபவமும் இல்லை; நாணையமும் இல்லை; உறுதியும் இல்லை; வெட்கமும் இல்லை என்று மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.

அவசரப்பட்டு இன்ன சட்டம் செய்வதாகச் சொல்லுவதும் முதலாளிமார்களோ பார்ப்பனர்களோ தங்கள் சுயநலத்துக்கு விரோதமாய் இருக்கிறது என்று கூப்பாடு போட்டால் அல்லது காங்கரஸ் தலைவர்களை சரிப்படுத்திக் கொண்டால் அதைத் தந்திரமாக கைநழுவ விட்டுவிட்டு உப்பு சப்பற்ற - வெறும் வேஷத்துக்கும் ஏய்ப்பதற்கும் மாத்திரம் பயன்பட்ட போலிச் சட்டங்களை விளம்பரப்படுத்திக்கொண்டு தங்களுக்குள்ளாகவே நாலுபேர்களை வெளிவேஷத்துக்கு எதிர்க்கும்படி செய்து ஏதோ வெகு பிரயாசையின் மீது மகா பிரமாதமான சட்டத்தை செய்து விட்டதாக கூலிப் பத்திரிகைகளை விட்டு விளம்பரம் செய்யச் செய்வதுமான தந்திரத்தில் முடிவடைந்து விடுகிறது.

சமதர்ம விஷயமும் சமதர்மக்காரர்களால் ஓட்டுப் பிரசாரம் செய்து கொண்டதல்லாமல் இன்று காங்கரசுக்கு ஓட்டுப்பிச்சை வாங்கிக் கொடுத்த சமதர்மக்காரர்கள் முக்காடு போட்டுக் கொண்டு திரியும்படியான வெட்கங்கெட்ட நிலையில் வைக்கப்பட்டு விட்டார்கள்.

மந்திரிகளுக்குள் ஒற்றுமையுண்டா?

மந்திரிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் ஆளுக்கு ஒருவிதம் பேசுவதும் காங்கரஸ்காரர்களே மந்திரிகளை குறை கூறுவதும் தோழர் சத்தியமூர்த்தி அவர்களே காங்கரஸ் மந்திரிகள் செய்வது ஒழுங்கில்லை என்று சொல்லுவதுமான நிலையில் இருப்பதோடு உள்ளுக்குள் கட்சிப்பிளவுகளும் மனஸ்தாபங்களும் வலுத்து வருகின்றன.

காங்கரஸ் கட்டுப்பாடும் ஒழுங்கு நடவடிக்கையும் பத்திரிகையில் எழுதுவதுடன் சரியே ஒழிய காரியத்தில் யாரும் கட்டுப்படுவதில்லை.

ஒழுங்கு நடவடிக்கைப் பலன்

ஒழுங்கு நடவடிக்கையின் பேரால் தண்டிக்கப்பட்ட ஆட்கள் 100க்கு 90 பேர்கள் விஷயத்தில் எவரும் கீழ்ப்படியவே இல்லை. தண்டனை நிறைவேற்றப் படவேயில்லை. ஆகவே வெறும் வேஷத்தில் பலமற்ற அப்பாவிகளை மிரட்டி பணம் வாங்கவே ஒழுங்கும் கட்டுப் பாடும் நடவடிக்கையும் இருந்து வருகின்றன.

காங்கரசில் சேர்ந்த முஸ்லீம்களுக்கு முஸ்லீம்களிடமும் நாட்டுப் பொது மக்களிடமும் செல்வாக்கோ நம்பிக்கையோ கிடையாது என்பதோடு முஸ்லீம்கள் மந்திரி, காரியதரிசி தவிர மற்ற யாவரும் காங்கரசுக்கு விரோதமாகவே இருந்து வருகிறார்கள்.

ஆதிதிராவிடர்களும் காங்கரசை எதிர்க்கிறார்கள். ஆதிதிராவிட மந்திரிக்கு ஆதிதிராவிட சமூகத்திலேயே செல்வாக்கும் நம்பிக்கையும் இல்லை.

ஆகவே இன்று காங்கரஸ் வெறும் பத்திரிகை பிரசாரத்திலும் பொதுஜனங்கள் வரிப்பணத்தில் மந்திரி கோஷ்டியும் காரியதரிசி கோஷ்டியும் ஊர் ஊராய் சென்று ஏமாற்றுப் பிரசாரம் செய்து ஏய்ப்பதிலும் உயிர் வைத்திருக்கிறதே ஒழிய உண்மையில் காங்கரஸ் தனது கொள்கையில் வெற்றியோ அல்லது மக்களுக்கு அதனால் பலனோ ஏற்பட்டதென்று எவரும் சொல்ல முடியாது.

வேலையற்ற - வயிறு வளர்ப்புக்கு வேறு வகையற்ற - பதவிக்கு வீங்கிய கூட்டம் காங்கரசை நடத்திக்கொண்டிருப்பதாலேயே அது பொதுஜனங்களுக்கு பயனளிக்கத்தக்கதாயிருக்கிறது என்று யாரும் எண்ணிவிட முடியாது.

காங்கரஸ்காரர் யோக்கியதை

உண்மையில் காங்கரசுத் தலைவர்கள் என்பவர்கள் வெளியில் இருந்து பொறுப்பில்லாமல் அனுபவ ஞானமில்லாமல் பாமர மக்கள் மகிழும்படி ஏமாறும்படி பேசிப் பழக்கமும் ஞானமும் உள்ளவர்களே ஒழிய அவர்களுக்கு நிர்வாக அனுபவமும் அரசியல் ஞானமும் இல்லை என்கிற யோக்கிதையும், பார்ப்பன சமூக நன்மையே அரசியல் திட்டம் என்கின்ற கொள்கையும் உடையவர்களாயிருப்பதால் அவர்களிடம் இதற்கு மேல் வேறு எதுவும் எதிர்பார்க்கவும் முடியாது. இதிலிருந்தாவது மக்கள் அறிவு பெற்று இனி புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ளுவார்கள் என்று கருதுகிறேன்.

தோழர்களே! காங்கரஸ் என்பது பற்றியும் அவர்களது கொள்கை திட்டம், இந்த ஆறுமாத காலவேலை, அதனால் ஏற்பட்ட பலன் என்பதைப் பற்றி எனது அபிப்பிராயத்தைத் தெரிவித்து விட்டேன். இதை நீங்கள் தயவு செய்து நிதானமாய் யோசித்து பார்த்தும் நாளைக்கு இங்கு வரும் காங்கரஸ் தலைவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுமையோடு கேட்டும் பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.

------------------------------------------------------(19.12.1937 குடி அரசு - நாமக்கல் சுயமரியாதை மாநாட்டு சொற்பொழிவு "சுயமரியாதை இயக்கத் தத்துவம்" தொடர்ச்சி)"குடி அரசு" - சொற்பொழிவு - 26.12.1937

30.5.14

புரட்சிக்கவிஞரின் வாடாத பூங்கொத்துகள்புரட்சிக் கவிஞரின் ஆத்திச்சூடி என்பது மிக அருமையான கருத்துக் கருவூலம், காலத்தால் போற் றப்படும் காலப்பெட்டகம்; ஞாலமுழு வதற்கும் ஆன ஞானச்சுடரொளி!

இதைக்  குழந்தைகள் மட்டும் தான் படிக்கவேண்டும் என்று நினைத்து ஒதுக்கி விடாதீர்கள் இளைஞர்களே!

வயதானவர்களும் கூட இதைக் கற்றறிந்து கடைப்பிடித்து ஒழுகினால் நிச்சயம் கடைத்தேறுவர். தாமும் மகிழ்ந்து, தன்னைச் சார்ந்தோரையும் மகிழ்விக்கும் வாய்ப்பை வையகத் திற்கு வழங்கிடக்கூடும்.

புரட்சிக் கவிஞரை பாவேந்தராக் கிட்ட (அது அவரின் தனித்தன்மைக் குச் சரியான எடுத்துக்காட்டு ஆகாது) பல புலவர்கள் அவரது பிற நூல்கள் பற்றிய ஆய்வினை விளக்கி விரிவுரை களைக் கூறுவோர் இனி மேலாவது பாரதிதாசன் ஆத்திச்சூடி என்ற இந்த இளையர் வழிகாட்டும் நூலைப்பற்றி எளிமையான விளக்க நூல்களை எழுதட்டும்!

பள்ளிச் சுவர்கள், வீடுகளில் கூட நல்ல இடத்தில் நாளும் குழந்தைகள் உட்பட அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இதனை எழுதிடுங்கள்.

84 வரிகளில் - குறளுக்குகூட இரு வரி. இதோ ஒரே வரி எவ்வளவுச் சுருக்கமாத்திரைகளை  (CAPSULES)  எடுத்துக்காட்டாக இதோ

 எண் 1 அனைவரும் உறவினர்

1) உலகில் உள்ள மக்கள் அனை வரும் நமது உறவினர்

2) யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது புறநானூறு, யாரையும் உறவின ராகக் கருதுவதற்கு அன்பு வேண்டும் என்பது குறிப்பு

எண் 44 தொன்மை மாற்று

1) நடப்பு நிலைக்கு ஒத்துவராத பழைய கொள்கைகளை காலத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்

2) மூடப்பழக்க வழக்கங்களையும், பொருந்ததாத சடங்குகளையும் பழைமை என்ற பெயரால் ஒத்துக் கொள்ளவேண்டாம்.

எண் 48 நினைவினில் தெளிவு கொள்

1) ஆழ்ந்த சிந்தனையும் தெளிந்த அறிவும் பெற்றிடுக
2) இதுவோ, அதுவோ என்ற அய்யம் அகற்றுக

எண் 50 நுண்ணிதின் நுண்மை தேர்

1) மிகச்சிறிய பொருளிலும் உள்ள நுட்பத்தை ஆராய்ந்து அறிந்து கொள்.

2) அணுவையும் பிளந்த அறிவியல் அணு சக்தியினைக் கொடுத்துள்ளது, அதன் தீயவிளைவுகளைத் தள்ளி நன்மையினை ஆய்ந்து பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பு

எண் 54 நைந்தார்க்கு உதவி செய்

1) வாழ்வில் இன்னல் அடைந்து தொல்லைப்படுவோரின் துயரினைத் துடைத்திடுக

2) தனி ஒருமனிதனுக்கு மட்டுமல்ல, போராலும் வறுமையாலும், இயற்கை யின் சீற்றத்தாலும் தொல்லைப்படும் நாடுகளுக்கும் உதவி செய்க என்பதே இப்பாடலின் தத்துவம்

எண் 39 துன்பம் இன்பத்தின் வேர்

1) துன்பம் தொடர்ந்து வருவது அன்று; எனவே அதனை இன்பத்தின் தொடக்கம் எனலாம்.

2) உலக வாழ்வில் இன்ப, துன்பங் கள் மாறிவரும் தன்மையன; எனவே அவற்றைக் கண்டு மருளவோ, மயங்கவோவேண்டாம்!

எண் 41 தெருவெலாம் மரம் வளர்

1) தெருக்கள் தோறும் வரிசையாக நன் மரங்களை வளர்க்கவும்
2) பழமும், விறகும், நிழலும் தருவ தோடு மரங்கள் சுற்றுப்புறத் தூய்மை யினையும், குளிர்ச்சியையும், மழை யினையும் உண்டுபண்ணுகின்றன. எனவே மரங்களை நட்டு வளர்த்துப் பேணவும் வேண்டும்.

- பார்த்தீர்களா? படித்தீர்களா? என்னே அற்புதமான அறிவுரைக் கொத்து! புரட்சிக்கவிஞரின் வாடாத பூங்கொத்துகள்!!

----------------- கி.வீரமணி  அவர்கள் எழுதி வரும் வாழ்வியல்சிந்தனைகள் பகுதியிலிருந்து.... “விடுதலை” 29-05-2014

29.5.14

மூளைக்குள்ளே ஞானக் கண் உண்டா?-மடமைக் கருத்துக்கு மறுப்பு  அபத்தமா? அறிவியலா?
  அண்மையில் வெளிவந்த ஒரு நூலினைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நூலின் பெயர் அறிவூட்டும் அறிவியல். அதன் ஆசிரியர் ஆர்.சண்முகம் அவர்கள், அந்நூலின்கண் உள்ள ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, மூன்றாவது கண். அக்கட்டுரை, அறிவியல் ஆய்வு அல்ல; அபத்தக் களஞ்சியம்! அந்தக் களஞ்சியத்துக்குள் நுழைந்து ஒரு கண்ணோட்டம் விடுவோமா?
  நாசமாய்ப் போன நம்பிக்கை

  நூலாசிரியர் பின்வருமாறு தொடங்குகிறார். மனிதனுக்கு ஞானக் கண் என்று ஒரு மூன்றாவது கண் இருப்பதாகக் கீழைநாட்டு மக்கள் நெடுநாட்களாகவே நம்பி வருகிறார்கள். (இவர்கள் எதைத்தான் நம்பவில்லை?) திபெத்திய லாமாக்கள் மெல்லிய மூங்கில் ஊசியால் நெற்றியில் குத்தி, மூன்றாவது கண்ணைத் திறந்து கொள்வது வழக்கம் என்று தெரிகிறது. எப்படி இவருக்குத் தெரிகிறது?
  சொல்லாமலே யார் பார்த்தது?

  இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாகப் பின்வருமாறு எழுதுகிறார். கி.பி.1526-இல், வடமொழி நூல் ஒன்றில் ஞானக்கண், பலகோடிச் சூரியர்களுக்குச் சமமான தேஜஸைத் தருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த நூலுக்குப் பெயரே இல்லையா? நூலாசிரியர் அவர்களே! கி.பி.1526இல் வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருந்தால் அதனைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிட வேண்டுமா? நூலின் பெயர் சொன்னால் என்ன? சொல்லக் கூடாதா? ஏன்? ஏன்? ஏன்?
  எதற்காக இந்தக் கண்?

  அது என்ன மூன்றாவது கண்? அது என்ன ஞானக்கண்? முகத்தில் உள்ள இரு கண்கள் மட்டும் ஊனக்கண்களா? இது மட்டும் ஞானக்கண்ணா? எதற்காக அந்த மூன்றாவது கண் இருக்க வேண்டும்? அதனால் என்ன பயன்?

  தப்பித்து வந்தாரம்மா!

  முன்பெல் லாம், இந்த நாட்டு மதவாதிகள் _ குறிப்பாக இந்துமதப் பற்றாளர்கள், தமது வேத, ஆகம, இதிகாச, புராணங்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகளை விளக்குவதற்கு வக்கில்லாமல் அவற்றிற்குத் தத்துவார்த்தம் (உட்பொருள்) என்பதாகத் தத்துப்பித்து என்று கூறித் தப்பித்து வந்தனர்.

  மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம்

  இப்பொழுது, அறிவியல் விரைவாக வளர்ந்து மலர்ந்துவரும் நிலையில் தத்துவார்த்தம் எடுபடாது என எண்ணி மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அறிவியல் விளக்கம் தர அரும்பாடு பெரும்பாடு படுகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இந்த மூன்றாவது கண்.

  அது எது?

  மூன்றாவது கண் என்பது எது? என்பதற்கு நூலாசிரியர் எழுதுகிறார். நம் மூளையின் பின்புறம் உள்ள பைனியல் சுரப்பி (Pineal Gland) தான் அது. நெற்றியின் புருவமத்திக்கு நேர் பின்னால் அது அமைந்திருக்கிறது. அதுதான் கீழ்நாட்டறிஞர்(?) கூறும் ஞானக்கண். அதாவது மூன்றாவது கண்!

  இப்படிப் பாடுவரோ?

  பைனியல் சுரப்பி ஒரு கண் என்று மெய்ப்பிக்கப்பட்டிருந்தால், தெரிந்திருந்தால்
  பைனிய லே! இளமானே!
  பச்சைமயில் எனப்
  பார்த்தேன் உனை நானே! என்றும்,
  ஆயிரம் பைனியல் போதாது வண்ணக்கிளியே! என்றும்,
  பைனியல் படப் போகுதய்யா சின்னக்கவுண்டரே! என்றும்,
  இன்றைய திரைப்பாடலாசிரியர்கள் எழுதியிருப்பார்களோ? நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,
  பைனிய லின்பார்வை பாவையர்கள் காட்டிவிட்டால்
  வையகத்தில் காளையர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்! என்று, பாடியிருப்பாரோ, என்னவோ? பாவம்! அவர்களுக்கு, சண்முகனார் சொல்லாமல் விட்டுவிட்டாரே! பைனியல் சுரப்பிதான் மூன்றாவது கண் என நம்புவது வடிகட்டிய மடத்தனம் அல்லவா? பத்தாம்பசலிப் பைத்தியக்காரத்தனம் அல்லவா?

  இருக்கிறதா? இல்லையா?

  சரி, பைனியல் சுரப்பி என்பதாக ஒரு சுரப்பி (Gland) மெய்யாகவே இருக்கிறதா? இருக்கிறது! அய்யமில்லை. மூளையின் பின்னால் ஒரு பட்டாணி அளவில் வெண்சாம்பல் நிறத்தில் உள்ளது. ஆனால் அது கண் அன்று; சுரப்பி! நாளமில் சுரப்பி - (Harmone). இதனை, குளிர் குருதியோட்ட விலங்குகள் (Cold blooded animals)ஒரு வெப்பமானியாகப் பயன்படுத்துகின்றன.
  தட்ப வெப்பத்தைக் கட்டுப்படுத்த, பகலில் வெயிலிலிருந்து ஒளியவும், இரவில் பனிக் குளிரிலிருந்து ஒளிந்து கொள்ளவும் அல்லாமல் இது வேறு ஒன்று செய்வது இல்லை. இது, நீர், உப்புச் சமனிலை, குருதி அமைப்பு செரிமானம், பாலியல் முதிர்ச்சி, பாலியல் நடவடிக்கை ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறது. குருதியின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இவைதாம் பைனியல் சுரப்பியின் சில பணிகள்! இது பார்க்கப் பயன்படாது!
  எது கண் என்பது

  ஒன்றைக் கண் என்று சொல்ல, அதற்கு இமை அமைப்பு, தோற்றம், செயல்பாடு (பார்வை) இருத்தல் வேண்டுமே? அப்படி இருந்தால்தானே அது கண்? பைனியல் சுரப்பி அவ்வாறு அமைந்துள்ளதா? பார்வைக்குப் பயன்படுகிறதா? விழிவெண்படலம், கருவிழி, கண்மணி உள்ளனவா? ஒளியின் உதவியால் பார்க்கிறதா? அவ்வாறிருக்க, பைனியல் சுரப்பி எப்படி, கண் ஆகும்? அதனைக் கண் எனக் கதைக்கலாமா?

  சண்முகனார் சாற்றுவது

  இந்தப் பைனியல் ஓணான், தவளை முதலான விலங்கினங்கள் சிலவற்றிற்கும் உள்ளது. சில குறிப்பிட்ட நிறங்களை உட்கவர்ந்து அந்த உறுப்பாற்றலை நிறமாற்றங்களுக்குப் பயன்படுத்துகிறது என்று, நூலாசிரியரே நுவல்கிறாரே? இதிலிருந்து, கண் வேறு; அதன் செயல் வேறு; பைனியல் வேறு; அதன் செயல் வேறு என்பது தெரிகிறது அல்லவா? பின் எப்படி, பைனியல் கண் ஆகும்? அறிவுக் (ஞான) கண் ஆகும்? இதை அறிய எவருக்கும் சராசரி அறிவே போதுமே?

  யார் யார் யார் அவர் யாரோ?

  கீழ்நாட்டவர் கூறும், இந்தப் பைனியலைத்தான் ஞானக்கண் என்று இன்றைய விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் இப்படிக் கருதும் இன்றைய விஞ்ஞானிகள் யார்? அவர்கள் பேர் என்ன? ஊர் என்ன? இவரால் கூறமுடியுமா? அநாமதேயக் கடிதம் எழுதுவதுபோல் அல்லவா எழுதுகிறார்? சரியான அறிவியல் ஆதாரங்கள், அறிவியலாளர்கள் ஆய்வு முடிபுகள் முதலியவற்றை முன்வைக்க வேண்டாமா?

  பார்வைக்குப் பயன்படவில்லையே?

  1958இல் ஆரன் லெர்னர் என்பவர், இந்தச் சுரப்பியிலிருந்து மெலடானின் என்ற நாளமில் சுரப்பித் திரவம், தோலுக்கும் நிறத்திற்கும் மெலானின் (Melanin) என்ற பொருள் பரவுவதை இந்த ஹார்மோன் ஒழுங்குபடுத்துகிறது என்கிறார் நூலாசிரியர். சரி, ஒத்துக்கொள்வோம். கண்ணாக அமைந்து பயன்படுகிறது என்று சொல்லப்படவில்லையே? எப்படி இது இவருக்குச் சான்றாக அமையும்?

  மூளைக்குள் மூங்கில் ஊசியா?

  திபெத்திய லாமாக்கள் மூங்கில் ஊசியால் நெற்றியில் குத்தி பின்புற மூளைக்குக் கீழ் இருக்கும் கண்ணைத் திறப்பார்களாம்! என்ன கற்பனை? மூங்கில் ஊசியால் குத்தினால் முன் தலையின் மண்டை ஓட்டுக்குள் ஊடுருவி பின்புறம் போய்விடுமாமே? தலை என்ன ஆப்பிள் பழமா? ஒரு பக்கம் ஊசியால் குத்தினால் மறுபக்கம் எளிதாக உள்ளே ஊடுருவ? கெட்டியான மண்டை ஓட்டுக்குள் குத்தும்போது உடைந்து போக வாய்ப்புண்டே?
  உள்ளே இருக்கும் மூன்றாவது கண்ணை மூங்கில் ஊசியால் நெம்பித் திறப்பார்களாமே? அந்தக் கண்ணில் ஊசி குத்திவிடாதா? மூன்றாவது கண்ணில் பழுது ஏற்பட்டு விடாதா? திபெத்திய லாமா இப்படிச் செய்யலாமா?

  சூரியனின் சுடர் ஒளி

  மூன்றாவது (ஞான) கண் பல கோடி சூரியர்களுக்குச் சமமான தேஜஸைத் (வெப்பச்சுடரை) தருகிறதாம். அதாவது பைனியல் பல கோடி சூரிய வெப்பச் சுடரைத் தருமாம்! பேர், ஊர் தெரியாத பேர்வழியால் 1526இல் வடமொழியில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாகத் தம்பட்டம் அடிக்கிறார் நூலாசிரியர் சண்முகம்.
  வானில் கோடானு கோடிக்கணக்கில் விண்மீன்கள் உள்ளன. அவற்றுள் நமது பால்வெளிப் (Milky Way) பகுதியில் உள்ள நமக்கு மிகமிக அண்மையில் உள்ள விண்மீன் நமது சூரியன் (Sun). இந்தச் சூரியன் வெப்பமும் ஒளியும் நிறைந்த ஓர் அணு உலை (ஸிமீணீநீஷீக்ஷீ). இந்த ஒரு சூரியனின் விட்டம் 13,84,000 கி.மீ. இதன் வெளிப்புற வெப்பம் 6000 டிகிரி செல்சியஸ். மய்ய வெப்பம் 1 கோடியே 50 லட்சம் டிகிரி செல்சியஸ்.

  2 லட்சத்து 44 ஆயிரத்து 800 கி.மீ. தொலைவு வெளியில் வீசி எறியப்படும் சூரியனின் சுடர்க் கொழுந்து (Prominenees)களின் வெப்பம் எத்துணை மிகுதியாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

  பலகோடி சூரியர்கள் பரப்பும் வெப்பம்

  ஒரு சூரியனின் வெப்பநிலை வீச்சு இப்படி என்றால் வடநூல் கூறுவதுபோல பலகோடி சூரியர்கள் வசதிக்காக 10 கோடி சூரியர் என்று வைத்துக்கொண்டால் அவற்றின் வெப்பச்சுடரொளி (தேஜஸ்) எந்த அளவு இருக்க வேண்டும்? என்ன கேலிக்கூத்து இது?

  உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வைச்சேன் மத்தியிலே!

  பலகோடி சூரியச் சுடரொளியைத் தரும் மூன்றாவது கண் வெளியிலுள்ள சூரிய _ சந்திரரின் ஒளிச்சுடரால் தாக்குண்டு சிதைந்து போகாமலிருக்கத்தான் நெற்றியிலே பொட்டு வைக்கிறார்களாம்!
  அந்தப் பொட்டு, கிட்டத்தட்ட ஒன்றரை கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தடுத்து விடுகிறதாம்! என்னமாய் நம் காதில் பூச்சுற்றுகிறார் சண்முகனார்!

  என்ன பொட்டு இது?

  ஆமாம், அது என்ன பொட்டு? தளதளக்கும் சாந்துப் பொட்டா? கமகமக்கும் சந்தனப் பொட்டா? பளபளக்கும் குங்குமப் பொட்டா? பலவண்ண ஒட்டு (Sticker) ப் பொட்டா? என்னவகைப் பொட்டு? இதற்கு இத்துணை ஆற்றல் உள்ளது என்று எந்த அறிவியலார் சொன்னார்கள்? நன்றாயிருக்கிறது கற்பனையின் விற்பனை?

  என்ன செய்கிறது இந்தப் பொட்டு?

  எந்த வகைப் பொட்டாக இருக்கட்டும்! அதிலுள்ள கூட்டுப் பொருள் எப்படி புருவ நடுப் பொட்டின் (Frontal Lobe)வழி உள்ளே புகுந்து, மண்டை ஓட்டினை ஊடுருவி நுழைந்து, மூளையின் வன்மையான நிலைச் சவ்வுப் பொருளைத் (Durametor) துளைத்து, மூளையின் பின்புறம் போய், சண்முகம் கூறும் பலகோடி சூரியர் தேஜஸைத் தடுத்து நிறுத்தும்? பாவம் பைனியல் சுரப்பி! அது படும்பாடுதான் என்னே! என்னே!

  மனதிலே மயக்கமா?

  இப்படி எல்லாம் பினாத்துவது, மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? அல்லது, மனநோயின் மறுபெயரா? மூடத்தனத்தின், மூடநம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த மூன்றாவது கண் நம்பிக்கை.
  தீயினில் தூசாகும்!
  நூலாசிரியர் சண்முகம் உள்ளிட்ட இத்தகைய மூடநம்பிக்கையாளர்களுக்கு, திபெத்திய லாமாக்கள் உதவிக்கு வரமாட்டார்கள்! அநாமதேய வடநூலும் காப்பாற்றாது!!
  அறிவியல் இதனை அப்படியே ஊதித் தள்ளிவிடும். இது தீயினில் தூசாகும்!
  வேண்டாம் வீண்முயற்சி!
  ஆர்வமூட்டும் அறிவியல் _ என்று பெயர் வைத்துவிட்டு, அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான மூடநம்பிக்கை, மதக்கருத்து, கற்பனைக் கட்டுக்கதைகளுக்கு அறிவியல் முலாம் பூசும் வீண்முயற்சி வேண்டாம்! வேண்டாம், இந்த வெட்டி வேலை!
  விட்டுவிடுங்கள்! நாமும் இத்தோடு விட்டு விடுகிறோம்!

  ------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன்  மே 16-31 - 2014 "உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

  28.5.14

  விவசாயமும் பார்ப்பனர்களும்


  தந்தை பெரியார் 1944 களில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில்
  திருவாரூர், நாகை மாவட்டங்களில் 10 கிராமங்களில் நகரம், கிராமம் பேதங்களை அகற்றும் வகையில்
  பெரியார் புரா திட்டத்தை செயல்படுத்துவோம்!

  திருவாரூர் திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!

  திருவாரூர், மே 27- தஞ்சை பெரியார் மணியம் மையார் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெரியார் புரா திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

  திருவாரூரில் நேற்று (26.5.2014) நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டில் உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
  தேர்தல்கள் வரும், போகும். சில நேரங்களில் பம்பர் லாட்டரி சீட்டுப் போல ஆவதும்  உண்டு.

  நாட்டுக்கு - மக்களுக்கு நல்லது செய்வதாலேயே மக்கள் வாக்களித்து விடுவதில்லை என்பதும் நமது கடந்த கால அனுபவம்தான்; மற்ற எல்லாவற்றையும்விட ரூபாய் இரு நூறோ, முந்நூறோ தான் முக்கியம் என்ற முடிவுக்கு வந்து விட்டால் நாம் என்ன செய்ய முடியும்? மக்கள் மத்தியில் இன்னும் விழிப்புணர்ச்சி தேவை என்றே நாம் எடுத்துக் கொள்வோம்.
  திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை எல்லா வகை யிலும் மக்களிடத்தில் விழிப்புணர்வுத் தேவை என்பதை உணர்ந்தே அந்தப் பணிகளைச் செய்து வருகிறது.

  எனது  மகிழ்ச்சி

  இங்கே சில மாவட்டங்களின் சார்பில் விடுதலை சந்தாக்கள் அளிக்கப்பட்டன. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கின்றது. சால்வைகள் அளிப்பதைக் கைவிட்டு அவற்றிற்குப் பதிலாக விடுதலை சந்தாக்களை அளியுங்கள் என்பதுதான் எங்களின் அன்பான வேண்டுகோள்.
  தமிழர்கள் எல்லா வகைகளிலும் விடுதலை பெறுவதற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் விடுதலை சென்றடைய வேண் டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

  இந்த மாநாட்டில் 12 முக்கியமான தீர்மானங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் இந்தக் காலக் கட்டத்தில் அவசியமானவை. விவசாயப் பெருங்குடி மக்களின் இந்தக் குரலை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும்  செயல்படுத்தவும் வேண்டும்.

  விவசாயமும் பார்ப்பனர்களும்

  விவசாயம் என்பது வருணாசிரம முறையில் பாவப்பட்ட தொழிலாக அரசுகளால் எண்ணப்படுகின்றது. விவ சாயத்தைப் பாவ தொழிலாகக் கூறும் மனுதர்மம் - பார்ப்பனர்கள் தான் - தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மிராசுதாரர்களாக உள்ளனர்.  அந்த பாவப்பட்ட தொழிலின் இலாபத்தை அனுபவிப்பவர்களாக பார்ப் பனர்கள் இருக்கிறார்கள்.
  இந்த நாட்டில் நமது மன்னர்கள் எல்லாம் பார்ப்பனர் களுக்குத்தான் நிலங்களைத் தானமாக வழங்கி வந்தனர். அந்த வகையில் ராஜராஜசோழனைப் போன்ற ஒரு பார்ப்பன அடிமையைக் காண்பது அரிது.
  நான்கு வேதங்களைப் படித்திருந்தால் அவர்களுக்கு சதுர்வேதி மங்கலங்கள் தானமாக அளிக்கப்பட்டன. மூன்று வேதங்கள் படித்திருந்தால் பார்ப்பனர் திரிவேதிகள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுக்கும் நமது அரசர்கள் நிலங்களை வாரி வழங்கி வந்தனர்.

  உழவன் கணக்கு  பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது!  உழைக்கும் விவசாயிகளின் நிலையோ அன்று தொட்டு இன்று வரை பரிதாப நிலைதான்; உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது என்பது நமது நாட்டுப் பழ மொழியாகவே ஆகி விட்டதே!

  பல ஆண்டுகளாக குறுவை பொய்த்து விட்டது. இந்த ஆண்டும் கேள்விக்குறியாகி விட்டது. காவிரித் தண்ணீர் தான் கிடைக்கவில்லையென்றால் நிலத்தடி நீரையாவது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் மின்சாரம் கிடையாது.
  விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் நிலை என்ன? வாழ்வா, சாவா? என்ற கேள்விதான் எழுந்து நிற்கிறது. விவசாய குடும்பத்து வீட்டுப் பிள்ளைகள் படித்திருந்தாலும் வேலை வாய்ப்பு இல்லை.

  இவற்றிற்கெல்லாம் பாடுபடும் இயக்கம்தான் திராவிடர் கழகம். மக்களிடத்தில் விழிப்புணர்வு, பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தட்டி எழுப்பும் பணியில் ஈடுபடும் ஒரே சமுதாய இயக்கம் திராவிடர் கழகம் மட்டும்தான்.

  மூன்று நாள்கள் எனது பயணம்

  திராவிடர் கழகத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளர் தோழர்கள் மாநாடு என்றாலும் சரி, போராட்டம் என்றாலும் சரி, ஆண்களும், பெண்களுமாக முன் வரிசையில் வந்து நிற்கக் கூடியவர்கள் ஆவார்கள்.

  விரைவில் குடவாசல் தொடங்கி திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக வருவேன். இந்தப் பகுதிக்கு வரும் பொழுதுதான் என்னை பொறுத்தவரையில் உற்சாகம்! அவர்களின் பாச உணர்வு எங்களை நெகிழ வைக்கக் கூடியது!!

  நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 10 கிராமங்களைத் தேர்வு செய்து புரா திட்டத்தை பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் செயல்படுத்த இருக்கிறோம். தஞ்சை வல்லத்தைச் சுற்றியுள்ள  67 கிராமங் களைத் தத்தெடுத்து நமது பல்கலைக் கழகம் இந்தப் பணியைச் செய்து வரு கிறது.  நமது முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்கள் புரா என்ற திட்டத்தை அறிவித்தார்.

  1944ஆம் ஆண்டிலேயே பெரியார் சொன்ன கருத்து

  நகர்ப்புறங்களில் மக்கள் அனுபவிக் கும் எல்லா வசதிகளும் கிராமப் பகுதி யில் உள்ளவர்களுக்கும் கிடைக்க வேண் டும். இன்றைக்கு நமது அப்துல்கலாம் அவர்கள் சொல்லியிருந்தாலும் 1944ஆம் ஆண்டிலேயே இதுபற்றிச் சிந்தித்து தம் கருத்தினை தந்தை பெரியார் வெளி யிட்டுள்ளார்கள். நான் கூறுகிற முன்னேற்றம் செய்ய முடியவில்லையானால், அதற்கு அதாவது அப்படி இழிவான, கீழான பிரயாசையான வேலை செய்பவர்களுக்கு அதிக லாபமும், சலுகையும், மேன்மையும், இருக்கும்படியான பிரதிபலன் அடையச் செய்ய வேண்டும்.  இரசாயன முறை விஞ்ஞான முறை, இயந்திர முறை முதலியவைகளைக் கையாண்டு அவை கிராமங்களில் இருந்து தொடங்குவோமே யானால் இந்தப் பிரச்சினைகள் சுலபத்தில் தீர்ந்து விடும். கிராமம் என்கின்ற பெயரும், நிலையும் தானாக மாறி விடும் என்று 1944 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கருத்துகள் கூறியுள்ளார்.

  அப்துல்கலாம் அடைந்த ஆச்சரியம்!

  தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்தினை   குடியரசு தலைவராகவிருந்த அப்துல்கலாம் அவர்களிடம் எடுத்துச் சொன்னபொழுது கலாம் அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

  தந்தை பெரியார் அவர் கூறிய அந்தக் கருத்தின் அடிப்படையில் தான் புரா திட்டத்தை பெரியார் மணியம்மை பல் கலைக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

  திருவாரூர் நாகை மாவட்டங்களில் புரா திட்டம்

  திருவாரூர், நாகை மாவட்டங்களில் கீழ்வேளூர் வட்டாரப் பகுதிகளில் கோகூர், ஒக்கூர், வடகரை பகுதிகளையும் திருமருகல் வட்டாரத்தில் புத்தகரம், மருங்கூர், சோழங்கநல்லூர் முதலிய கிராமங்களையும் கொரடாச்சேரி வட் டாரத்தில் திருமதிக்குன்னம், பருத்தியூர்  இல வங்கார்குடி, காவாலக்குடி பகுதி களையும்  ஆய்வு செய்து புரா திட் டத்தை செயல்படுத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்  (பலத்த கரஒலி) என்று குறிப்பிட்டார்.

                            -------------------------”விடுதலை” 27-04-2014

  27.5.14

  விவசாயத்தைத் தொழிலாக அங்கீகரிக்கவேண்டும்!

  திருவாரூர்: திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் - 26.5.2014
  தீர்மானம் 1:
  நாகை மாவட்டச் செயலாளர் கு.சிவானந்தம் 

  விவசாயத்தைத் தொழிலாக அங்கீகரிக்கவேண்டும்

  விவசாயம் என்பது ஒரு தொழிலாக வரன்முறை செய்யப்படவேண்டும் என்று நீண்ட காலமாக திராவிடர் கழகம் வலியுறுத்தி வந்தும், இதுவரை எந்த அரசுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. விவசாயம் என்பது வருணாசிரமப்படி பஞ்சமர்கள், சூத்திரர்கள் செய்யும் பாவத் தொழில் என்கிற ஆதிக்க மனப்பான்மை தகர்த்தெறியப்பட்டு, விவசாயத்தைத் தொழிலாக அங்கீகரித்து அத்தொழி லுக்குரிய அனைத்து மட்டத்திலான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு அங்கீகாரம் வழங்கிடவேண்டும் என்று இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

  தீர்மானம் 2:

  மண்டலச் செயலாளர் ஆசிரியர் முனியாண்டி
  காவிரி நீர் பங்கீடு தொடர்பாக....

  காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பரிந்துரை செய்யப் பட்ட நடுவர் குழு மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டும் நெறிமுறைகளின் படியும் இந்திய அரசிதழில் வெளி வந்தும், கருநாடக அரசு பிடிவாதம் செய்வதற்கு இம் மாநாடு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
  மேலும், பரிந்துரை செய்யப்பட்ட நீர் வெளியேற்ற அளவுகளைக் கண்காணிக்கவும், நடைமுறைப்படுத்த வும் இரு மாநில விவசாயிகள் மற்றும் இரு மாநில அரசு அலுவலர்கள் குழு ஏற்படுத்தியும், அந்தக் குழு நேர்மையாக செயல்பட தேவைப்பட்டால், கிருஷ்ண ராஜசாகர் அணையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, மத்திய காவல்துறையைப் பயன்படுத்தி நீர்ப் பங்கீட்டை ஒழுங்குபடுத்திட, மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  தீர்மானம் 3:

  மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ்

  நீர் சேமிப்பு

  நீர் சேமிப்பு ஆதாரங்களான குளம், குட்டை, ஏரி ஆகியவைகளில் ஏற்பட்டிருக்கும் நீர் தடுப்பு ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றியும், அவைகளைத் தூர்வாரி பராமரிக்கும் பொறுப்பினை அந்தந்த ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள பயன்படுவோர் அனைவரையும் ஒருங்கிணைத்து, குழு அமைத்து, அந்தக் குழுவிடமே பொறுப்புகளை எவ்விதத் தலையீடும் இன்றி ஒப்படைத்து உரிய துறை அலுவலர்கள் மேற்பார்வையில் பணிகள் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசினை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  தீர்மானம் 4:

  திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன்
  விவசாயிகளுக்கான இழப்பீடு!

  அரசால் அறிவிக்கப்படும் பயிர் பாதுகாப்பீட்டுத் தொகை மற்றும் பயிர் இழப்பீட்டிற்கான தொகை நிவாரணம் தொடர்புடைய விவசாயிகளுக்கு உரிய காலத்தில் சென்றடையும் காலதாமதத்தைத் தவிர்த்திட, கிராம விவசாயிகள் குழு அமைத்து, மகளிர் குழுக்களைப் போல், அவர்கள்மூலமே வேளாண் துறை அதிகாரிகளின் தணிக்கை மற்றும் மேற்பார்வையில் உரிய காலத்தில் பாரபட்சமின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

  தீர்மானம் 5(அ):

  தஞ்சை மண்டலச் செயலாளர் மு.அய்யனார்
  மானியங்கள் ஒதுக்கீடு விவசாயிகளுக்கு முறையாக சென்றடையவேண்டும்

  வேளாண் துறை மூலம் விவசாயக் கருவிகள், விவசாய இடுபொருள்கள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நோய்த் தடுப்பான்கள், விதைகள் இவைகளை விவசாயிகளுக்கு மானியங் களாக எந்தெந்த வகையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை முறையாக விளம்பரப்படுத்தப்படாமல், அந்த மானியங்கள் அனைத்தும் கள்ளச் சந்தையில் விலை போகும் அவலத்தைத் தடுத்திட ஒவ்வொரு ஊராட் சியிலும் என்னவிதமான மானியங்கள் வழங்கப்படு கிறது என்பதை விவசாயிகள் தகவல் பலகை அமைத்து அந்தந்த வேளாண்மைத் துறை விரிவாக்கப் பணியா ளர்கள் தெரிவிப்பதுடன், முன்னணி விவசாயிகள் மற்றும் சாதாரண விவசாயிகளுக்கு மேற்காணும் அறிவிப்பு சென்றடைந்துவிட்டது என்பதற்கு, அவர் களின் ஒப்புதலைப் பெற்று அறிக்கை அளித்திடவும், மானியங்கள் குறித்து அனைத்து விவரங்களும் எல்லா விவசாயிகளும் அறியும் வண்ணம் நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  தீர்மானம் 5(ஆ):

  பட்டுக்கோட்ட மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்

  அரசியல் கட்சிக் கண்ணோட்டமின்றி உதவித் தொகைகள் - நிவாரணங்கள் வழங்கப்படுதல் அவசியம்

  விவசாயிகளுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகள், நிவாரணங்கள், வீட்டு மனைகள் வழங்குதல் உள்ளிட்ட அரசின் உதவிகள் கட்சிப் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேருவதை உறுதி செய்யவேண்டும்; இப்பிரச்சி னயில் ஆளும் கட்சிக் கண்ணோட்டத்துடன் செயல் கள் மேற்கொள்ளப்படுவதைக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

  வெளிப்படையான செயல்பாடுகளாக (டிரான்ஸ் பரன்சி) அமையும் வகையில் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  தீர்மானம் 6:

  மண்டல மகளிரணிச் செயலாளர் தோ.செந்தமிழ்ச்செல்வி

  பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைக் களைந்திடவேண்டும்

  பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளைக் களைந்திட அவர்களே கூச்சமின்றி தங்கள் குறைகளை வெளிப்படுத்திட பெண்களையே அதிகாரிகளாக அமைந்த ஒரு புகார் ஏற்பு மய்யத்தை, ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நிறுவி, அவர்களின் குறைகளைக் களைய காவல்துறை உதவியோடு நடவடிக்கை எடுக்க ஒரு தனி அமைப்பை உருவாக்கிட தமிழக அரசினைக் கேட்டுக்கொள்கிறது.

  தீர்மானம் 7:

  குடந்தை மாவட்டச் செயலாளர் க.குருசாமி

  விவசாயம் சார்ந்த ஆடு, மாடுகள் பராமரிப்பு
  விவசாயம் சார்ந்த ஆடு, மாடுகள் வளர்ப்புக்காக அரசு இலவசமாக வழங்கியது என்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஊராட்சி அளவிலும் ஆடு, மாடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்தந்த ஊராட்சி அளவில் ஒரு பதிவேடு பராமரிப்பதுடன், கால்நடை களுக்கு ஏற்படும் நோய்கள்பற்றி உடனடியாக புகார் செய்திட, ஒரு புகார் பதிவேட்டை ஊராட்சி அளவில் பராமரித்திடவும், அந்தப் பதிவேட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட உரிய கால்நடை மருத்துவர் களுக்கு ஆணை வழங்கிடவேண்டும், கோமாரி நோய் போன்ற கொடுமையான தாக்குதல்கள் நேரும்போது, நோய்கள் ஏற்படாத பிற பகுதிகளில் பணிபுரியும் மருத்து வர்களை வரவழைத்து, போர்க்கால அடிப்படையில் சிகிச்சை மேற்கொண்டு, விவசாயிகளின் துணைத் தொழிலான கால்நடை பராமரிப்பை பால்வளம் பெருக செம்மைப்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத் துகிறது.

  தீர்மானம் 8:

  மாவட்ட இளைஞரணித் தலைவர் இராச.முருகையன்

  முல்லைப் பெரியாறு - தாமதமின்றி நடவடிக்கை
  முல்லைப் பெரியாறு நீர்மட்டம் தொடர்பான தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தமிழக அரசு, அதைக் காலந்தாழ்த்தாமல் அமல்படுத் திடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், காலந்தாழ்த்தினால், காவிரி பிரச்சினைபோல் ஆகும் என்ற அச்சத்தை இம்மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், உடனடியாக நீர் மட்டத்தை உயர்த்தவும், கேரள எல்லையில் வாழும் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  தீர்மானம் 9:

  நாகை மாவட்ட அமைப்பாளர் ந.செந்தில்குமார்

  முதியோர் காப்பகங்கள் தேவை
  விவசாயத் தொழிலில் ஈடுபடுகின்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கையில் உத்தரவாதமோ, பாதுகாப்போ இல்லாத பரிதாப நிலை; வேலை  செய்ய முடியாத முதுமைக் காலத்தில், பிறருடைய தயவில் வாழ்வைக் கழிக்கும் அவல நிலை; முதுமைக் காலத்தில் அவர்களைப் பாதுகாக்க காப்பகங்களை அரசே ஏற்பாடு செய்யவேண்டும் அல்லது உரிய வகையில் ஓய்வூதியம் அளிக்கவேண்டும் என்று இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.
  விவசாய வேலையில்லாத காலங்களில், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

  தீர்மானம் 10:

  தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங்

  ஆண் - பெண் ஊதிய வேறுபாட்டை நீக்கிடவேண்டும்

  படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போய் பெண்கள் சம்பாதிக்கும் நிலையிலும், ஆண் ளைவிட அதிக ஊதியம் பெறும் இந்த நாளிலும், விவசாயத் தொழில் பார்க்கும் பெண்கள் - ஆண் தொழிலாளர்களைவிட குறைவான ஊதியம் பெறுவது நியாயமல்ல. இதைக் கருத்தில் கொண்டு, ஆண்களுக்கு நிகரான உடல் உழைப்புப் பெண்களுக்கு சரிசமமான ஊதியம் வழங்கிட அரசின் தொழிலாளர் துறைமூலம் நடவடிக்கை எடுத்திட தமிழக அரசினை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  தீர்மானம் 11:

  மண்டல மாணவரணிச் செயலாளர் சுரேஷ்

  தென்னக நதிகளை இணைத்திடுக!

  நதிநீர் இணைப்பு குறித்து தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. உடனடியாக தென்னக நதிகளை இணைத்து, நீர்ப் பற்றாக்குறை நிலையைப் போக்கும் பணியைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  தீர்மானம் 12:

  திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.வி.சுரேஷ்

  விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்க!

  தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் விவசாயம் சீர்குலைந்த நிலையில், அதை நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்துவிட்டு வேலை யில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு (இருபால்) நம் நாட்டில் உற்பத்தியாகும் விவசாயப் பொருள்களை (கச்சா) பயன்படுத்தி, சிறு தொழில் ஆலைகளை ஏற்படுத்தி, வேலை வாய்ப்பை உருவாக்கிட தமிழக அரசினை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  விவசாயத்தை வாழ வைக்கவேண்டும் அல்லது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மாற்று வாழ்வுக்கு வருகை செய்து தீரவேண்டும். காவிரி டெல்டா பகுதி களில் வேலை வாய்ப்புக்கு வழி செய்யும் தொழிற் சாலைகளைத் தொடங்கி, அங்கு டெல்டா பகுதி மக் களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும் என்று இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்து கிறது.

  பெருத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
                      ------------------------------”விடுதலை” 27-5-2014