Search This Blog

Showing posts with label அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை. Show all posts

27.2.18

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை கொட்டினால்தான் தேள்!-ஆப்பதனை அசைத்துவிட்ட அய்.அய்.டி.


சென்னை அய்.அய்.டி.யில் மத்திய அமைச்சர்கள் இருவர் பங்கேற்ற  நிகழ்ச்சியில் (26.2.2018) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அய்.அய்.டி. இயக்குநரான பாஸ்கர் ராமமூர்த்தி என்ற பார்ப்பனர் தெரிவித்துள்ள கருத்து ஆணவத்தின் உச்சியில் நின்று கொக்கரிப்பதாகும்.
‘‘நாங்கள் எந்தப் பாடலைப் பாடவேண்டும் என நிர்ப்பந் திப்பதில்லை. மாணவர்களின் விருப்பப்படி பாடுகிறார்கள். சில நேரங்களில் இந்தியில் பாடுவர்; மராட்டியில் பாடுவர். இதை சர்ச்சையாக்க விரும்பினால், உங்கள் விருப்பம்; எதிர்காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வைப்போம்'' என்று கூறியுள்ளார்.
இது சரியான, நியாயமான விளக்கமா? அரசு நிர்வாகம் என்றால், அதற்கென்று விதிமுறைகள் கிடையாதா? மாணவர்கள் விருப்பத்துக்குப் பாடலாமா? மாணவர்கள் விருப்பம் இந்தப் பாடல் என்று  முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதா? திடீரென்று அனைத்து மாணவர்களும் சமஸ்கிருதப் பாடலை ஒரே மாதிரியாகப் பாடியது எப்படி?
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பாடுகின்றனர் என்கிறாரே இயக்குநர்,  அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவர்களில் எத்தனைப் பேர்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் - கணக்கெடுத்துக் கூறு வார்களா?
தெரிந்த மொழிகளில் பாடுவோர் என்றால், ஒரே நேரத்தில் அவரவர்களுக்குத் தெரிந்த மொழியில் கடவுள் வாழ்த்துப் பாடலாமா?
பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள் என்று பல நிலைகளில் மாணவர்கள் படிக்கும் நிலையில், குறிப்பிட்ட இந்து மதத்தின் பாடலை மட்டும் பாடுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு விரோதம் இல்லையா?
இதை சர்ச்சையாக்கினால் உங்கள் விருப்பம் என்று இயக் குநர் கூறும் கருத்தின் தொனி எந்த வகையைச் சார்ந்தது? நாங்கள் அப்படித்தான் செய்வோம் - உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சவால் விடுகிறாரா? முண்டா தட்டுகிறாரா?
அரசு விழா என்றால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப் படவேண்டும் என்பது தமிழ்நாட்டில் சட்ட விதிமுறைகள் இருக்கின்றன.
அதற்குக் கட்டுப்படவேண்டியது ஓர் அரசு நிறுவனத்தின் தவிர்க்க முடியாத அடிப்படைக் கடமையாகும். அதனை மீறுவது கண்டிப்பாக சட்ட மீறலாகும்.
இதற்காகவே சென்னை அய்.அய்.டி. இயக்குநர்மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள இடம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால், அய்.அய்.டி. என்பது மத்திய அரசு நிறுவனம் - சம்பந்தப்பட்டவரோ அசல் பார்ப்பனர்.
மொத்தம் 536 பேராசிரியர்களுள், 86.57 விழுக்காடு பார்ப்பனர்கள் (454 பேர்). தாழ்த்தப்பட்டோர் 2.05 விழுக்காடு (சட்டப்படி அவர்களுக்குரிய இடம் 15 விழுக்காடு). பிற்படுத் தப்பட்டோர் 11.01 விழுக்காடு (27 விழுக்காடு சட்டப்படி அவர்களுக்கு உண்டு).
பழங்குடியினர் 0.31 விழுக்காடு (சட்டப்படி இவர்களுக் குரிய இடம் 7.5 விழுக்காடு).
இது தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட புள்ளி விவரமாகும்.
நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ள பார்ப்பனர்கள் அய்.அய்.டி.யில் 86.57 விழுக்காடு இடங்களை விழுங்கி, ஏப்பம் விடுகிறார்கள் என்றால், இந்தக் கொடுமைக்கு என்னதான் முடிவு - இதற்குப் பரிகாரம்தான் என்ன? என்பது கூர்மையான செங்குத்தான இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சட்டப்படியான வினாவாகும்.
பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்பதற்கு மத்திய அரசு நிறுவனமான இந்த அய்.அய்.டி.களே கண் கண்ட சாட்சிகளாகும்.
சட்ட விரோதமாக சமஸ்கிருதத்தில் கடவுள் வாழ்த்துப் பாடும் தைரியத்தைக் கொடுத்தது - இந்த அடங்காத்தனமான ஆரிய ஆதிக்கம்தானே!
தப்பித்தவறி இந்த நிறுவனத்தில் இடம் கிடைத்துப் படிக்கவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களும் முழுவதுமாகப் படித்து வெளியேறுவது என்பது  முயற்கொம்பே! பல மாணவர்கள் தற்கொலை கூட செய்துகொண்டதுண்டு.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக சமஸ்கிரு தத்தில் பாடியது என்பது - இந்தப் பின்னணியின் திமிர் கொண்ட தாக்கமே!
பார்ப்பனர்கள் முன்புத்தி இல்லாதவர்கள் என்பார் தந்தை பெரியார். தமிழ்நாட்டில் எதில் கை வைக்கக்கூடாதோ, மூக்கை நுழைக்கக் கூடாதோ அந்த மின் கம்பியில் சிக்கிக் கொண்டு விட்டனர் பார்ப்பனர்கள்.
அதுதான் தந்தை பெரியாரால் கிளர்ந்து எழுப்பப்பட்டு இருக்கும் மொழிப் பிரச்சினையில் கை வைத்துவிட்டனர். கட்சிகளுக்குஅப்பாற்பட்டு,ஒருமுகமாகதமிழகத்தலை வர்கள் கண்டனக் கணைகளைக் கூர் மழுங்காது ஏவி விட்டுள்ளனர். இந்த உணர்வு ஒருமுகப்படுத்தப்பட்டு, கண் டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் ஒழுங்கு செய்யும்.
ஆப்பதனை அசைத்துவிட்டனர். பார்ப்பனர்களைப் பொறுத்தவரை கொட்டினால்தான் தேள்!
                  --------------------"விடுதலை’’ தலையங்கம் 27-02-2018

14.1.18

ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு ஏற்பட்டது எப்படி?


- அக்னிஹோத்ரம்
ராமானுஜ தாத்தாச்சாரியார்

ஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்த நான் ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் எதையும் நழுவவில்லை. அதனால்தான் ஆச்சார்ய புருஷராகிய நான் மாற்று தத்துவக்காரராகிய மகா பெரியவரை சந்தித்தது பற்றி சிலர் கும்பகோணத்தில் கேள்வி எழுப்பினார்கள்.
அழைத்தவரை சென்று சந்திக்காமல் இருப்பதைவிட பெரிய கௌரவக் குறைச்சல் இருக்க முடியுமா?... அதனால் அக்குரல்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.
அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு மகா பெரியவர் அவ்வப்போது என்னை சந்திப்பார்.
அப்படி ஒரு தடவை சந்தித்தபோது.... 'முதலில் நாம் நம்மை சுத்தப்படுத்திக்கணும் இல்லியா?.... இப்போது பல பிராமணர்கள் வேதத்தை மறந்து பாவம் சுமக்க தொடங்கிவிட்டார்கள். வேதத்தை எப்படியாவது காப்பாற்றணும். அதற்கு நாம் ஏதாவது ஸ்தாபனரீதியாக செய்ய வேண்டும்.... ஏதாவது சொல்லுங்களேன்....' என்றார் மகா பெரியவர்.
நான் சொன்னேன்.
'நாங்கள் சபை மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் கூடிய அளவுக்கு பிரச்சாரங்கள் செய்தபடி தான் இருக்கிறோம். 
டி.கே.ஜெகந்நாதாச்சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட பிராமணன், தார்மீக ஹிந்துனு பத்திரிகைகள் நடத்தறார். நாங்களும் பேசி எழுதிதான் வருகிறோம்' என நான் சொன்னேன்.
பதிலுக்கு மகா பெரியவர்....
'அதெல்லாம் நடக்கட்டும் தாத்தாச்சாரி.... ஆனாலும் பிராமணர்கள் தங்கள் கடமைய மறந்துட்டா இல்லையா?.... அதனால அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு.... ஒரு சபை ஆரம்பிக்கலாம். அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம். இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும்.  மொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யணும். இந்த சபை நடத்தறதுக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பதான்.... நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும்?' என்றார்.
இஃது உடனே செயல் வடிவமாக்கப்பட்டது. குளித்தலை அண்ணா அய்யங்காரும், ஜெயராமய்யரும் இந்த சபைக்கு செகரட்டரியானார்கள். அன்றைய தஞ்சாவூர் ஜில்லா முழுதும் இவர்கள் பிராமணர்களை சென்று சந்தித்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை வசூல் செய்ய அவர்களோடு நானும் புறப்பட்டேன்.
"பிராமணர்களை திருத்தினால், நல்வழிப்படுத்தினால் அவர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவார்கள்...." என நம்பிய மகா பெரியவர், இதற்காகத்தான் வேத சாஸ்திர பரிபாலன சபையை ஆரம்பிக்க வைத்தார்.
அது என்ன பலனை கொடுத்தது?.
***
மகாபெரியவரின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்கப் பட்ட வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, அன்று எங்களைப் போலவே இளமையோடு வீரியமாக விஸ்தாரமாக செயல்பட ஆரம்பித்தது.
"வேதங்களை சிரத்தையாக வாசித்து அது சொல் லியபடி அனுஷ்டிக்கும் பிராமணாள் குறைஞ்சிட்டா.... அவாளுக்கு வேதிக் ஸ்பிரிட் (ஸ்மீபீவீநீ ஷிஜீவீக்ஷீவீt) உண்டாக்கணும். நாம் நம்ம தரப்பிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்தால்தான்.... பகவான் அவர் தரப்பிலிருந்து செய்ய வேண்டியதை செய்வார். இல்லையா?...." என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்.  எத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க.... எதற்கு ஆவஹந்தி ஹோமம்?..... அப்படியென்றால் என்ன?...
ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு நோக்கத்துக் காகத்தான் அதாவது கோரிக்கைகளை (பீமீனீணீஸீபீs) முன்னிறுத்திதான் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் ஆவஹந்தி ஹோமம்.... ப்ரம்ம தேஜஸ்-க்காக நடத்தப்படுகிறது.  புனித கலசத்தை நிறுவி.... அதன்மேல் வேதங்களை தொகுத்த வ்யாஸரை போற்றி துதி செய்து..... அக்னி வளர்த்து மந்த்ரங்களை முழங்குவதுதான் ஆவஹந்தி ஹோமம். இந்த ஹோமத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெறுஞ்சாதம்.
அஃதாவது... அன்னத்தை கொடுத்து. வ்யாஸரின் வேத அறிவையும் கொடுத்து 'ப்ரம்ம தேஜஸ்'ஸை, கடவுளின் பலத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். இந்த ஹோமத்தில் பிராமணியத்தின் பலத்தை என குறிப்பிடப்படும். ஆவஹந்தி ஹோமத்தின் முக்கிய பலன் பிராமணீயத்தை பலப்படுத்துதல்.
இப்போது புரிகிறதா இந்த ஹோமத்தை ஏன் பண்ணச் சொன்னார் என்று. இந்த ஹோமம் செய்து முடித்ததும்..... வேதத்தைபற்றி விளக்கமாக உபன்யாசிக்க வேண்டும். வேதங்களை பிராமணர்கள் கைக்கொண்டு செய்ய வேண்டியவற்றையெல்லாம் அந்த உபன்யாஸங்கள் விளக்கும்.  அப்போது.... கும்பகோண மடத்துக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியான செல்வம் இல்லை. நாங்கள் இந்த சபைக்கென எந்த மூலதனத்தையும் முன்கூட்டியே வைத்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் எந்த வங்கிக் கணக்கும் இல்லை. சபைக்கென டிரஸ்டியும் இல்லை.
இந்த 'வசதி'கள், ஒன்றுகூட இல்லாவிட்டாலும் அப்போது... மகாபெரியவரின் ஆசீர்வாதம்.... எங்களது உழைப்பு ஆகியவற்றால் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை கனஜோராக செயல்பட்டது. இதன் முக்கியமான விளைவாக.... தஞ்சாவூர் ஜில்லாவில் நாங்க போன ஒவ்வொரு கிராமத்திலும். ....  ஒவ்வொரு பேரூர்களிலும் வேதப் பிரச்சாரம் முழுமையாக நடந்தது. பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலை பக்கம் திருப்பி விட்டனர். ஒரு ஆன்மீக வேத புத்துணர்ச்சி எழும்பியது. இதற்கு சீதாராமைய்யர் பெரும் பொறுப்பு வகித்தார்.
இப்படியாக.... இந்த வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்ததில் மகா பெரியவருக்கு மெத்த மகிழ்ச்சி.
தஞ்சாவூரின் கிராமங்களில் வேத உபன்யாஸமும், ஆவஹந்தி ஹோமமும் பண்ணிக்கொண்டிருந்த எங்களுக்கு பம்பாயிலி ருந்து அழைப்பு வந்தது. யார் அழைத்தது?
இங்கேயிருந்து போன பிராமணர்கள்தான். செல்வச் செழிப்பில் மிதந்த அவர்கள் வேதத்தை விட்டு ஒதுங்கியிருந்தாலும் வேத ஈடுபாட்டிலிருந்து விலகவில்லை.
அதனால் எங்களை அழைத்தார்கள். பம்பாய் தொடங்கி.... அகமதாபாத், டெல்லி , கல்கத்தா, நாக்பூர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வடஇந்திய பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். ஹோமம் வளர்த்தோம். உபன்யாசம் செய்தோம். அதன்மூலம் வேதம் வளர்த்தோம்.  அதற்கு கிடைத்த சம்பாவணை அதாவது சன்மானத்தை மறுபடியும் தஞ்சாவூர் ஜில்லாவில் வேதம் வளர்க்க பயன்படுத்தினோம்.
இப்படி நாங்கள் பரபரப்பான பகவத் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.... நாத்திக நாயகரான ராமசாமி நாயக்கரும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கி சுற்றிக் கொண்டிருந்தார். அவருக்கும் தெரிந்த எனக்கும் தெரிந்த ஒருத்தர் கே.கே.நீலமேகம்.
கும்பகோணம் கடைத்தெருவில் அவரை நான் பார்க்கும் போது.
"ஸ்வாமி.... பார்த்தீரா..... எங்கள் ராமசாமி நாயக்கர் உங்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்" என்பார்.
கடைத்தெருவில் நாயக்கர் சொன்ன வாதங்களுக்கு எதிர்வாதங்களை நீலமேகத்திடம் எடுத்துச் சொல்லி விட்டுத்தான் நான் நகர்வேன். இந்நிலையில் பிராமணர் களை மட்டுமன்றி.... தெய்வங்களின் சொரூபங்களை கிண்டலடிக்கும் அபச்சாரத்தை அப்போது நாத்திகக்காரர்கள் கூடுதல் உத்தியாக கையிலெடுத்தனர்.
இது மகாபெரியவரையும் உறுத்தியது. வழக்கம்போல என்னிடம் ஆலோசித்தார். "தாத்தாச்சாரீ..... நாம மொதல்ல நடத்தின வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ரொம்ப நன்னா போறது.
அதுக்கு அடுத்ததா.... அவாள்லாம் சொரூபங்களை கிண்டலடிக்கிறதால.... நாம் பூஜா தத்வத்தையும்.... சிற்ப சாஸ்திரத்தையும் பத்தி எல்லாருக்கும் புரிய வச்சாகணும்.... என்ன சொல்றீர்?....." என்றார்.
"வாஸ்தவம்தான் ஸ்வாமீ.... இந்த அவேர்னஸ்' (ணீஷ்ணீக்ஷீமீஸீமீss) பிராமணாளுக்கும் வரணும்.... மத்தவாளுக்கும் வரணும்...." என்றேன்.
எங்களின் சிலநாள் ஆலோசனைகளுக்குப் பிறகு.... உதித்தது ஆகம சிற்ப சதஸ்.
***
அதென்ன ஆஹம சிற்ப சதஸ்?
'ஆஹமம் என்றால் என்ன என்பது பற்றி முந்தைய அத்யாயங்களிலேயே உங்களுக்கு நான் விளக்கியிருக்கிறேன்.
விக்ரகங்களை.... தெய்வ சிற்பங்களை எப்படி யெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்ரங்களை சொல்லிக்கொடுப்பதுதான் ஆஹமம் என்றும், இதனை ஆதிசங்கரர் எதிர்த்ததையும்கூட பார்த்தோம். ஆஹமத்தின் அர்த்தம் விளங்கிவிட்டது.
சிற்பம்?.... இன்றும் நாம் கோயில்களுக்கு செல் கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச்சிறப்பு. நீங்கள் வடஇந்திய கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப் போல நுட்பமும், அழகும் ஒருசேர வாய்த் திருத்தல் கடினம். பழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டிவைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறுசிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக் காட்டும்.
இப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்டதுதான் ஆஹம சிற்ப சதஸ்.  இந்த அமைப்பை நடத்த வேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா. கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.
ஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது?
கோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம், பூஜாதத்துவ பிரச்சாரம் இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிராகாரத்தில்தான் கூட்டம் நடக்கும்.  கோபுரத்தின் அழகு, பிராகாரங்களின் அழகு, மதில் சுவர்களின் அழகு, கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்ப க்ரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.
"இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னதுபோல.... நான் உங்களிடமும் சொல்கிறேன்.  ஆதி காலத்தில்.... அதா வது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது. அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும் வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை 'விஸ்வகர்மா'வாக வந்து வடிவ மைத்தது போல..... அவருக்கு நாம் சிற்பங்களை சமைத்து வைத்தோம். அதனால் சிற்பங்கள் எல்லாம் 'விஸ்வவகர்மா'வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்க வேண்டும்." என ஆஹம சிற்ப சதஸ்-ஸின் கூட்டங்களில் பேசினோம். நாங்கள் மட்டுமல்லாது ஆஹமங்கள் அறிந்த பட்டாச்சார்யார்களையும் அழைத்து வந்து அக்கூட்டங்களில் பேச வைத்தோம்.
இந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது.  சனாதன தர்மசபையில் ஆரம்பித்து.... வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆஹம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.
திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒருநாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்துவைத்தார். "ஏன் தாத்தாச்சாரியாரே.... நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்றோம். ஆனா.... பிராமணா ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகி யிருக்கோ? இல்லியே.... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவா ரெண்டு பேரையும் சேர்த்து! வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே...." என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனை களைத் தந்தேன்.  நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?.... ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே! ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?."
திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.
(தொடரும்)
- இந்துமதம் எங்கே போகிறது?
குறிப்பு: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி  அவர்களின் முக்கிய ஆலோசகர் ஆவார்.
               ----------------------- ’விடுதலை’ 12-01-2018


ஆண்டாள் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு ஏற்பட்டது எப்படி? (2)

- அக்னிஹோத்ரம்
ராமானுஜ தாத்தாச்சாரியார்

நேற்றையத் தொடர்ச்சி...
"இதப்பாரும்.... எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை - திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா..... நாம எடுத்துண்டதும் தமிழ், சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?"  என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்கு புலப்பட்டது.
நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தபோதும்.... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.  அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.
"ஏன் ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?" -என்று மகாபெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என் னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.
"உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்." என்றேன்.  அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு.....?
***
"நீங்களும் மகாபெரியவரும் ஏன் சமஸ்கிருதத் திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்... ஸ்நானத்தை முடிச்சு போடுகிறீர்கள். பேசிக் கொண்டிருப்பதற்கும்  குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்...?"
- மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள் சத்திரத்தில் இருந்த சிலர். அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன். அந்த பதிலை உங்களுக்கு சொல்வதற்கு முன்... மகாபெரியவர் 'திருப்பாவை-திரு வெம்பாவை' என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்டவழியில் சொல்கிறேன்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்கு பொருள் (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்).
தை முதல் ஆனி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.  தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாக வும், ராப்பொழுது அதிகமாகவும் இருக்கும். உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல்பொழுது விஸ்தாரமாகும்.
இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தின் விடி காலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிறுசிறு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு கடவுள் பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள்.
இப்பண்பாடு நீட்சியாகி... தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள்.
இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து... 'நமது கோரிக் கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம். நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ. அவரை முதலில் எழுப்ப வேண்டுமே....' என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.
'கடவுளை மனிதவழியில் அணுகுவது' என்ற கலாச்சாரம் இது. பிற்பாடு கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற 'நாயக - நாயகி பாவம்' வரை வளர்ந்தது இந்த பண்பாடு.
தொடர்ந்து அதிகாலைகளில் நீராடி... கடவுளை எழுப்புவதற்காக, கட்டுப்பாட்டோடு இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு ஆதலால் 'பாவை நோன்பு' ஆயிற்று.
தன்னிகரில்லாத தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக பெண்களாலேயே உருவாக்கப்பட்ட விரதவிழாதான் பாவை நோன்பு,
இத்தகைய தூயதமிழ் கலாச்சாரத்தைத்தான் சைவத் தின் மாணிக்க வாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும், பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள்.
திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள்.  இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத் துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.
தமிழை, தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக் கியத்தை 'பாவைமாநாடு' என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகாபெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்தியிருக்கும்.
இதே சந்தேகத்தைத்தான் அன்று திருவிடைமருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன 'ஸ்நான' பதில் அவர்களுக்கு புரியவில்லை.
அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக... மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையே அவர்களிடம் அறிவித்தேன். அது...
கும்பகோண மடம்.... சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிற கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.
அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால்கூட 'மடி' அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும்.  அந்த வகையில்.... குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்.... நாட்டுக் கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.
அந்தநேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணா சலத்திடம் சொன்னேன்... 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்.' என்றேன்.  'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்' - என்றார் பக்தர்.
எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்.  போனேன். கேட்டார். சொன்னேன். இதோ பாரும் தாத்தாச்சாரி.... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை.... பாத்தால் ஏதாவது கேப்பார், பதிலுக்கு நான் தமிழ் பேச   வே ண் டி  வ ரு ம் , நோக்குதான் தெரியுமே.... தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும், பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ.... அதனால நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்சிடுங்கோ." என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.
நானும் வெளியே வந்தேன். 'நான் சொன்னது தானப்பா.... சுவாமிகள் மௌனத்தில இருக்கார், நாளைக்கு வாயேன்....' என்றேன்.
'அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி... நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்' - என தாய்மொழியாம் 'தமிழில்' மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.
***
செட்டி நாட்டு அருணாசலம் போன்ற பல பக்தர்கள் மகா பெரியவரை பார்க்க வேண்டுமென்று கெட்டியான பிடிவாதத்தோடு வந்திருக்கிறார்கள். போயிருக்கிறார்கள்...
இது ஒருபக்கம் இருக்க, பாவை மாநாடு சீரும்   சிறப்புமாக நடந்து கொண்டிருந்தது.
"சைவத்துக்கும் வைணவத்துக்கும் சண்டை வராம இருக்க ஒரு காமன் கடவுளை (சிஷீனீனீஷீஸீ நிஷீபீ) கண்டு பிடிக்கணும் தாத்தாச்சாரீ... - என என்னிடம் விருப்பத்தை சொன்ன மகா பெரியவர் பிராமண-பிராமணர் அல்லா தவர், சைவ-வைணவ துவேஷங்களை தீர்த்து வைக்க பாவை மாநாடு பெரிதும் உதவும் என நம்பினார். அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அரசியல் கட்சி மாநாடு  அளவுக்கு பாவை மாநாடு பெரும் கூட்டத்தை கூட்டியது.
மார்கழி மாதம் முழுதும்... தமிழ்நாடு பூராவும் இந்த பக்தி மாநாட்டை கூட்டி திருப்பாவை- திருவெம்பாவை உபன் யாஸங்களை நிகழ்த்தினோம். ஒவ்வொரு ஊரிலும் பொது இடங்களை தேர்ந்தெடுத்து பந்தல் போடுவோம்.
பின்.... விசேஷ மேடை தயார் செய்து அதில் ஆண் டாள் விக்ரகத்தையும், மாணிக்கவாசகர் விக்ரகத்தையும் நிறுவி வைப்போம். இதன் பக்கத்தில் நின்றுகொண்டு திருப்பாவை  - திருவெம்பாவை ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பகவத் விஷயங்களை பேசுவோம்.
எந்தெந்த ஊரில் மாநாடு போடுகிறோமோ அந்தந்த ஊரில் உள்ள கோயில்களில் இருந்து விக்ரகங்களை எடுத்துக் கொள்வோம். கிடைக்காத படங்களை பயன் படுத்துவோம்.
கோவில்கள் அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்டவையாக இருக்கும்போது.... நீங்கள் எப்படி சிலைகளை எடுத்துக் கொண்டு வரமுடியும்?.... ஆண்டாளையும், மாணிக்க வாசகரையும் கையைப் பிடித்து கூட்டி வருகிற காரியமா இது?.... - என நீங்கள் சந்தேகக் கேள்விகளை பிரசவிக்கலாம்.
பாவை மாநாடு - வெற்றிகரமாக.... விரும்பும் விதமாக அமைவதை உணர்ந்த அன்றைய அறநிலையத்துறை கமிஷனர் சாரங்கபாணி முதலியார்.... இம்மாநாட்டை அரசே நடத்தும் என்று சொல்லி விட்டார். மகா பெரியவரின் ஆசிர்வாதத்துடன் தொடங்கப்பட்ட இம்மாநாடு.... அரசாங்கமே எடுத்து நடத்துகிற அளவுக்கு பிரம்மாண்டம் பெற்றது. இதனால் மகா பெரியவருக்கு அரசியல் முக்யத்துவமும் ஏற்பட்டு விட்டது.
பாவை மாநாடா?.... நல்ல விஷயங்கள் நிறைய சொல்லுவார்களே... - என பிராமணர்கள், பிராமணர் அல்லாத மற்ற சாதியினர் என அனைவரும் கூடினார்கள்.
நல்ல விஷயங்கள் நடக்கும்போது தடங்கல்கள் வராமல் இருக்குமோ?.... தமிழ்நாடு முழுதும் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் என எல்லா ஜில்லாக் களிலும் மார்கழி மாதம் முழுதும் நாங்கள் நடத்திய இம்மாநாட்டுக்காக....
மன்னார்குடி வந்தோம். பொது வீதியில் மேடை போட்டோம். இந்தப்பக்கம் ஆண்டாள்.... பக்கத்தில் மாணிக்கவாசகர் வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதை பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் என்னிடம் ஓடோடி வந்தார் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர். 'ஸ்வாமி.... என்ன இப்படி பண்ணிட்டேள்?'.... என மொட்டையாக ஆரம்பித்தார்.
'எதை எப்படி பண்ணிட்டேன். விவரமா சொல் லுங்கோ...'. -என நான் பதில் உரைத்தேன். 'தெரிஞ்சுண்டே கேக்கறிளே?...' மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர்.
"தீட்சிதரே. என்ன சொல்றீர்?.... நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?....."
- மறுபடியும் உரைத்தேன். தீட்சிதர் அப்போதுதான் தன் உள்ளக்கிடக்கையை உடைத்தார்.
"பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே.... ஆண்டாள் யாரு?. மாணிக்கவாசகர் யாரு?.... ஆண்டாள் பிராட்டி பக்கத்துல ஆதி சைவர் மாணிக்க வாசகர் இருக்கலாமா?.... இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா?.... அந்த சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா?....."
- மன்னார்குடி வாழ் சில கண்களின் கனலை தான் தீட்சிதர் தன் வாயால் ஊதி எரிய வைக்கிறார் என்று எனக்குப் புரிந்தது.
"இதுக்குதான் இவ்ளோ நேரம் இழுத்தேளா?.... இந்த பாவை மாநாடு நான் நடத்தறதோ.... சங்கராச்சாரியார் நடத்தறதோ இல்ல.... இப்ப இது அரசாங்கம் நடத்துறா..... அவாள்ட்ட போய் கேளும்....." என எதார்த்த பதிலை எடுத்து வைத்தேன். தீட்டு பார்த்த தீட்சிதர் அதற்குமேல் என்னிடம் எதுவும் பேசாமல் கிளம்பினார்.
மன்னார்குடியில் இந்த தீட்சிதர் என்றால். இதுபோல் பல ஊர்களிலும் பலர் பாவை மாநாட்டை தடுத்துப் பார்த்தனர். முடியவில்லை. பல வருஷங்கள் நடந்தது மாநாடு....
சைவ- வைணவ, பிராமணர்- பிராமணரல்லாதவர் ஒற்றுமையை வலியுறுத்தி இப்படி மாநாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும்... சூத்திரர்கள் பஞ்சமர்கள் ஆகியோர் கோயில் இருக்கும் திசையை கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு ஜாதி துவேஷம் ஜ்வாலை விட்டு எரிந்த காலம் அது.
ஆகமம் போட்ட ஆணைக்கு இணங்கதான் இந்த அனுமதி மறுப்பு என்னும் ஆச்சாரத்தை பிராமணர்கள் பின்பற்றி வந்தனர்.  ஆகமம் அப்படி என்னதான் ஆணையிட்டது என்று கேட்கிறீர்களா?....
"த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே..."என்று போகிற பாஞ்சாராத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறது என்றால். பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப் படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத் திருக் கிறோம். இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால்கூட.... அனுஷ் டானங்கள் கறைபட்டு விடும். அதனால்..... அந்த விக்ர கங்களில் இருந்து பகவான் 'பட்'டென ஓடிப் போய் விடுவார்.
அதனால்.... சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்.... விக்ரகம் வெறுங் கல்லாகி விடும். பகவான் அதில் க்ஷணம் கூட தங்கமாட்டார். எனவே அவர்களை கோயி லுக்குள் விடாதே..... என்கிறது ஆஹமம்.
ஒருவேளை அப்படி நுழைந்து விட்டால்?.
அதற்கு பரிகாரம்தான் சம்ப்ரோக்க்ஷணம் அதாவது கும்பாபிஷேகம் அதாவது குடமுழுக்கு.... என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம். ஆகம உத்தரவு இருந்தாலும் ஆலய நுழைவு போராட்டங்கள் சூடு பிடித்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் ஒருதடவை மகாபெரியவர் என்னை அழைத்தார். சில நிமிடங்களில் அழுதே விட்டார்..... துறவி அழலாமா?.....
துறவி அழலாமா?...  அனைத்தையும் துறந்த சங்கராச்சாரி யாரின் கண்களில் வழிந்த கண்ணீர் என் கண்களையும் உறுத்தியது. என்ன செய்வதென்று தெரி யாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆறுதலும், ஆசியும் சொல்லவேண்டியவரின் கண்களே கலங்கி நிற்கும்போது நாம் என்ன செய்ய முடியும்.....? சில நிமிடங்கள் அந்த ஞானக்கண்கள் உப்பு நீரை உற்பத்தி செய்தபடியே இருந்தன.
பின்.... அவரது காவி வஸ்திரத்தை எடுத்து துடைத்துக் கொண்டார். 'கஷ்டமாயிருக்கு'... என்றபடியே மௌனமானார். அவர் அழுவதற்கு காரணமான அந்த சம்பவத்தை அவரிடம் சொன்னதை நினைத்து எனக்கும் கஷ்டமாக இருந்தது.
அது.... ஸ்ரீரங்கத்து சம்பவம்.
ஆலய நுழைவுப் போராட்டங்கள் ஆங்காங்கே அதிர்வேட்டுகள் போல நடந்து கொண்டிருந்தன. கூட்டம் கூட்டமாய் ஆலயவாசல் முன் நின்று... தெய்வத்தை தரிசிக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என போராடிக் கொண்டிருந்தனர் அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.
அப்படித்தான், ஸ்ரீரங்கத்திலும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சஞ்சரிக்க அனுமதி வேண்டும் என்றும்.... ரங்கநாதரை தரிசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் கோஷங்கள் காற்றை பயமுறுத்திக் கொண்டிருந்தன.
காந்திஜியால் ஹரிஜன்கள் என அன்போடு அழைக் கப்பட்ட ஜனங்கள் தங்கள் குடும்பங்களோடு அங்கே குழுமியிருந்தனர்.
அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் அருகே கூடிக் கொண் டிருக்கும்போதே... இந்த ஆலய நுழைவு போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமே எப்படி என அக்ரஹாரத்தில் கூடி ஆலோசித்தனர் பிராமணர்கள். ஆளாளுக்கு ஒரு யோசனையை அள்ளித் தெளித்தனர்.
நாமெல்லாம் போகலாம். கோவில் வாசல்ல நின்னுப்போம். அவா வந்தா அடிச்சு வெரட்டிடலாம் - என இளம் பிராயத்து பிராமணர்கள் குதித்தனர்.
ஓர் நடுத்தர வயதுக்காரர் எழுந்து... 'அபிஷ்டூ.... அவாமேல நம் கைபடாம  வெரட்டணும்டா....' என ஆச்சாரமான யோசனையை ஆவேசமாக எடுத் துரைத்தார். கடைசியில் அக்கூட்டத்தில் வித்தியாசமான ஓர் முடிவெடுக்கப்பட்டது.
(நிறைவு)

- இந்துமதம் எங்கே போகிறது?
குறிப்பு: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி  அவர்களின் முக்கிய ஆலோசகர் ஆவார்.

                    ----------------------- ’விடுதலை’ 13-01-2018

29.12.17

சொர்க்க வாசல் திறப்பு ஏமாற்றவா? ஏமாறவா?




சிவனை வழிபடுபவர்கள் வைகுந்த பதவியை விரும்ப மாட்டார்கள். சிவலோக பதவியையே நாடு வார்கள். அதற்காக சிவராத்திரி விரதம் இருப்பார்களாம். அதேபோல், விஷ்ணுவை வழிபடுபவர்கள் சிவலோக பதவியை விரும்பாமல், வைகுந்த பதவிக்காக வைகுந்த ஏகாதசி விரதம் இருப்பார்களாம்.
பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையாக இருப் பது மதம், கோயில்கள், அதன்பெயரால் நடத்தப் பட்டுவருகின்ற விழாக்கள், சடங்குகள் இத்தியாதி இத்தியாதிகள்.
அந்த ஆதிக்கக் கோட்டை சரியாமல் பாதுகாப் பதற்காகவே, பாழாய்ப்போன பக்தியை பாமர மக்க ளிடம் (படித்தவர்களிலும் பக்தியால் பாமரர்கள் உள்ள னர்) பரப்புவதற்காகவே விழாக்கள், பண்டிகைகள்.
சைவம், வைணவம் என்று இரு பிரிவுகள். சிவனை ஆராதிப்பவர்கள் சைவர்கள். விஷ்ணுவை ஆராதிப்பவர்கள் வைணவர்கள். சிவனுக்கு சிவராத் திரி என்றால், விஷ்ணுவுக்கு வைகுந்த ஏகாதசி விழாவாம்.
தமிழில் பாடினால் பெருமாளுக்கு மகிழ்ச்சியாம்
திருமங்கைமன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய் மொழிப் பாடல்களை கார்த்திகை தினத்தன்று கடவுள் பெருமாளின் முன்பாக பாடினானாம். அதனால் பெரிதாக மகிழ்ச்சியடைந்த கடவுள் பெருமாள், திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் என்று கேட்டானாம். அதற்கு அவன் வேதங்களை கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப்பாடல்களை வைகுண்ட ஏகாதசி விழாவில் கேட்டருள வேண்டும் என்று கேட்க, அதற்கு கடவுள் பெருமாளும் சம்மதித்தானாம். வைகுண்ட ஏகாதசியையட்டி, அனைத்து பெருமாள் ஆலயங் களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறதாம்.
எல்லா நாள்களிலும் தமிழில் பாடினால் கடவுளுக்கு மகிழ்ச்சி இருக்காதா?
வைகுண்ட ஏகாதசி விழாவின் பெயரால் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாள்களை வீணாகக் கழிக்கின்றனர். பகல் பத்து விழா எனப்படும் 10 நாள்களில் அரையர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந் தத்தில் உள்ள திரு மொழி பாசுரங்களையும், ராப்பத்து விழா எனப்படும் 10 நாள்களில் திருவாய் மொழி பாசு ரங்களையும் பாடுவதன்மூலமாக கடவுள் பெருமாள் பரவசப்படுகிறாராம்.
திருச்சி சிறீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் 108 திவ்யதேசங்களில் முதன்மையானது என்றும், Ôபூலோக வைகுண்டம்Õ என்றும் கூறப்படுகிறது.
சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியில் முக்கிய நிகழ்வான Ôசொர்க்கவாசல் திறப்புÕ எனப்படும் Ôபரமபதவாசல் திறப்புÕ நடைபெறுகிறதாம்.
சொர்க்க வாசலுக்காக ஏங்கித்தவிக்கும் பக்தர் களுக்கு நல்ல வாய்ப்புதான். சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், முண்டியடித்துக்கொண்டு சென்று விடவேண்டியதுதானே? எந்த பக்தரும் அப்படி சென்றதாக தகவல் இல்லையே? 

பக்தர்கள் ஏமாறுகிறார்களா? அல்லது மோட்சம் வேண்டி காலத்தைப் பொழுதைக் கழிப்பவர்கள் ஏமாற்றுகிறார்களா?
விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கின்றன புராணங்கள். ‘காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ என்று இந்த விரதத்தின் மகிமைப் பற்றி அக்னி புராணத்தில் கூறப்பட்டுள்ளதாம்.
மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசி யான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதற்கு காரணம் இந்த வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பதுதானாம்.
முரன் எனும் அசுரன்
முரன்என்றஅசுரன்இருந்தானாம்.அவன் தேவர்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்தி னானாம். 

சிவன் நிராகரிப்பு
அவன் செய்த கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவனிடம் முறை யிட்டார்களாம்.

சிவனோ, அவர்களை திருமாலிடம் சென்று முறையிடும்படி கூறிவிட்டதால், தேவர்களும், முனிவர்களும், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் (எப்போதும் தூங்கு மூஞ்சி கடவுள்போலும்) திரு மாலை சந்தித்தனராம்.

தூங்குமூஞ்சி கடவுளை ஏகாதசி எனும் பெண்தான் காப்பாற்றினாளாம்
கருணையே வடிவமான கடவுளானவன் தேவர் களோடு சேர்ந்து முரனை எதிர்த்து போரிட்டானாம். களைப்பும் அடைந்தானாம். போரால் களைப்படைந்த திருமால், பத்ரிகாசிரமம் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் பள்ளிகொண்டானாம் (சரியான தூங்கு மூஞ்சிதான்). அந்த இடத்திற்கு, திருமாலைத் தேடிவந்த முரன், தூங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்ல நினைத்து உடைவாளை உருவினான். அப்போது திருமாலின் உடலில் இருந்து ஒரு பெண் தோன்றி, முரனை அழித்தாளாம்.
இதன்பின்னர், கண் விழித்த திருமால், அந்தப் பெண்ணைப் பாராட்டி, அவளுக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டானாம்.

ஏகாதசி என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண், திருமாலிடம் வரம் ஒன்றைக் கேட்டாளாம்.
‘ஏகாதசி அன்று தங்களை (திருமால்) நினைத்து நல்ல மனதுடன் யார் விரதம் இருக்கிறார்களோ, அவர்களைக் காத்தருள வேண்டும்’ என்று வேண்டி னாள். அன்று முதல் இந்த விரதம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாம்.
சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 18.12.2017 அன்று தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி  அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. அதனை முன்னிட்டு அதிகாலை 3.45 மணிக்கு கடவுள் பெருமாளுக்கு (சிலைக்கு நகைகள் எதற்கு?) ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு ஆபரணங்களை அணிவித்துப் புறப்பட்டு,  தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரம பதவாசலுக்கு கொண்டு சென்றனராம்.
பலத்த பாதுகாப்பாம்!
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி சிறீரங்கம் கோவிலிலுக்கு மூன்றடுக்கு பாது காப்பு போடப்பட்டது. 42 இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் சுமார் 4000 பேர் ஈடுபட்டனர்.
இதேபோன்று வைணவக் கோயில்கள் அனைத் திலும் அதிகாலை நேரத்தில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறதாம்.
வைகுந்த பதவிக்கு விண்ணப்பம் போட்டு காத்தி ருப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. பரமபதம் (சொர்க்க வாசல்) திறக்கப்படும்போது, வைகுந்தத்துக்கு நேரடியாகச் சென்று வைகுந்த பதவியைப் பெறலா மாம்.
வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறக் கப்படும்பொழுது செல்லும் பக்தர்கள் அனைவரும் சொர்க்க வாசலை எட்டிப்பார்த்துவிட்டு, திரும்பி வந்து விடுகிறார்கள்.
ஆக, சொர்க்க வாசல்வரை சென்று பார்ப்பவர்கள் யாரும் சொர்க்கத்துக்குச் செல்ல  தயாராக இல்லை என்றே கூறலாம்.
பக்தியின் பெயரால் 

ஏமாறுகிறார்களா? ஏமாற்றுகிறார்களா? 

சிந்திப்பவர்களுக்கே வெளிச்சம்!

   ------------------------“விடுதலை” 29-12-2017                             -------- http://viduthalai.in/page-2/155057.html

13.8.17

யோக்கியமாக சிந்திப்பீர்! கிருஷ்ண அவதாரத்தின் யோக்கியதை என்ன?

ஆயர்குல மாதர்கள் வழக்கம் போல் யமுனா நதிக்குக் குளிக்கப் போனால் நீரும் அவர்கள் அறியாதபடி பின் தொடர்ந்து, அவர்கள் தங்கள் உடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு ஆற்றிலிறங்கிக் குளித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, அவர்களின் ஆடைகளை எடுத்து மரத்தின் மீது ஏறி வைத்துக் கொண்டு, அவர்களை எல்லாம் ஆடையின்றி நிர்வாணமாகப் பரிதவிக்கவிட்டு, நீர் மரத்திலிருந்து கொண்டே, அவர்களை இரு கையையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டால் தான் தருவேனென்று சொல்லுவதும், அவர்களும் வேறு வழியில்லாமல், உம்மிஷ்டப்படிச் செய்யவும், நீரும் அவர்களின் மர்மஸ்தானத்தைத் தரிசித்துப் பரவசமடைந்தவுடன் அவர்களின் புடைவைகளைத் திருப்பிக் கொடுத்ததுமான செயலிலிருந்தும் உமது வெட்கங்கெட்ட காமாந்தகாரமான செய்கையும், திருட்டுத்தனமும் விளங்கவில்லையா?
கிருஷ்ணன்:- நான் கிருஷ்ண அவதாரம் எடுக்க வேண்டியதற்கு முக்கியக் காரணம், மதுரை மாநகரில் கம்சன் என்னும் அரசன் செய்துவந்த கொடுமைகளையும், அஸ்தினாபுரியை அரசாண்டு வந்த துரியோதனாதிகள் செய்துவந்த கொடுமைகளையும் பொறுக்க முடியாமல், பூதேவி என்னிடத்தில் வந்து முறையிட்டுக் கொண்டதால், அவள் கஷ்டத்தைத் தீர்க்க வேண்டி, நான் வசுதேவருக்கும், அவர் பத்தினி ரோகிணிக்கும் புத்திரனாய்ப் பிறந்து எம் தாய் மாமனாகிய கம்சனையும் கொன்று பாண் டவர்களையும், கவுரவர்களையும், சூதினாலும், தந்திரத் தினாலும் அவர்களுக்குள்ளேயே சண்டையிடுமாறு செய்து, டில்லி மாநகரம் என்னும் குருக்ஷேத்திரப் பூமி யில் அவ்விருவருக்குமுள்ள பதினெட்டு அக்ரோணி சேனைகளையும், பதினெட்டு நாளில் மடியவைத்து, என் மனைவியின் பூமிப் பாரத்தையும் தீர்த்து வைத்தேன். இதுதான் நான் கிருஷ்ணாவதாரம் எடுத்ததற்கு முக்கியக் காரணம்.
வினா- நீர் அடிக்கடி பூமிப்பாரம் தீர்க்க வேண்டியதற் காகப் பூலோகத்தில் வந்து பிறப்பதைப் பார்க்கப் போனால், ஒரு வியாபாரி தன் கையில் பிடித்த துலாக்கோல் எந்தப் பக்கத்தில் கூடுதல் குறைச்சலாகின்றதோ அந்தப் பக்கத்தைச் சமப்படுத்தி வைத்துக் கொள்வதுபோல், பூவுலகத்தின் பாரங்களைச் சமப்படுத்த அடிக்கடி நீர் வந்து பிறப்பதாகத் தெரிகிறது. அப்படியிருந்தாலுங்கூட, நீர் பூமிப்பாரம் தீர்க்க எடுத்த அவதாரமெல்லாம் பூலோகத்தின் கண்ணுள்ள ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா முதலிய பல கண்டங்களில் ஒன்றாகிய, ஆசியாக் கண்டத்தின் ஒரு பாகமாகிய பாரத பூமியில்தானே உம் மனைவிக்குப் பூபாரம் தீர்க்க முடியாமல் போவதும், அதைத் தீர்த்து வைக்க நீர் அவதாரபுருடனாய் பூமியில் பிறந்து பல கஷ்ட நஷ்டங்களை அடைவதுமான காரியம் நிகழ்கிறது! இது உம்மோடு மட்டும் நின்றபாடில்லாமல் உம் மைத்துனராகிய சிவபெருமான் கூட இந்திய நாட்டில் அதிலும் தென் கோடியிலுள்ள தமிழ்நாட்டில் 64 அவதாரம் எடுத்திருக்கின்றார்? அதன்றி உம் மகன் பிரமனும் மன்மதனும் கூடத் தென் நாட்டில்தானே அவர்களின் திரு விளையாடல்களைப் புரிந்திருக்கின்றார்கள்? ஏன் உங்களில் யாராவது ஒருவர் மேல்நாட்டுக்குப் போய் உங்களின் திருவிளையாட்டைக் காட்டியிருக்கக் கூடாது? அங்கே போய் உங்கள் நாடகத்தை நடித்தால், செருசலத்திலுள்ள யூதர்கள், கிறிஸ்து பெருமானைச் சிலுவையில் வைத்து, தலையில் முள் முடிதரித்துக் கால், கைகளில் ஆணியடித்து வைத்தது மாதிரி அடித்து விடுவார்கள் என்ற பயமா என்ன?
விடை:- அதற்கெல்லாம் பயந்து கொண்டு நாங்கள் இந்திய மண்ணில் பிறக்கவில்லை. பின் எதனால் மற்ற நாடுகளுக்குப் போகாமல் இந்தியாவில் பிறந்தோம் என்றால், உலகத்திலேயே இந்திய நாடுதான் மற்ற தேசங்களைவிடப் புண்ணிய பூமியென்று அழைக்கப்படுவதனாலும், ஒவ்வொரு தெருக்களிலும் கோவில் குளங்கள் நிறைந்ததும், அக்கோவில்களில் குடி, கூத்தி, கொலை, சூதுவாது முதலிய அதரும கைங்கரியத்தை நடத்தி வரும் நன்நாடு ஆனதனாலும், கல்விக்கரசியாகிய சரஸ்வதி பிறந்து உலகத்திலேயே அதிகப்படியாக நூற்றுக்கு மூன்று வீதம் படித்த பண்டிதமணிகளால் நிறைந்த நாடானதனாலும், செல்வத்திற்கரசியாகிய சீதேவி பிறந்து அரைவயிற்றுக் கஞ்சிக்கு அன்னக்காவடியெடுக்கும் புண்ணிய நாடானதினாலும், வீரம் செறிந்த சத்திதேவி பிறந்து பக்தியிற் சிறந்து முக்தியை நோக்கும் மக்களைப் போல் எலும்புக் கூடும், நரம்பும், தோலுமாய் நடைப்பிணங்களாய்த் திரியும் பாரத புத்திரர்கள் பிறந்த நாடானதனாலும், ஆண், பெண் என்ற இரண்டு சாதியை இரண்டாயிரத்திற்கு அதிகமாக உற்பத்தி பண்ணும் இயந்திர நாடு ஆனதனாலும், உலக மக்களிடத்திலே காணப்படாத, தீண்டாமை, பாராமை, நெருங்காமை, தெருவில் நடக்காமை முதலிய புனித கைங்கரியத்தை உருவகப்படுத்தித் திருத்தொண்டு புரிந்த நாடானதனாலும், ஒருவருக்கொருவர் மொழியொற்றுமை இன்றிப் பன்னூற்றுக்கணக்கான படைகளையுடைய பாரத நாடானதனாலும், மண்ணில் மடிந்து போன மக்கள் பார்ப்பனர் மூலமாகத் தலைமுறை தலைமுறையாக இவ்விடமிருந்து, சாப்பாடு சம்ரட்சணையைப் பெற்றுவரும் செல்வம்பொருந்திய நாடானதனாலும், நாற்பது கோடி மக்களும் சுயமரியாதையற்று அடிமைத்தளையின் ஆபரணத்தைப் பூண்ட நாடானதனாலும், மூடநம்பிக்கைக்கும், முட்டாள் தனத்திற்கும் முதல் பரிசு பெற்ற புகழ் வாய்ந்த நாடானதனாலும், தெய்விகம் மறைந்து வைதிகம் ஓங்கி மக்களை மாக்களாக்கும் திருவருள் சுரந்த நாடானதனாலும், பார்ப்பானுக்குப் பாக்கியத்தையும், பாட்டாளி மக்களுக்குக் கஷ்டத்தையும் கொடுத்து வரும் கடவுளர் பிறந்த நாடானதனாலும், இன்னும் இதுபோன்ற புனிதகைங்கரியத்தைக் கைக் கொண்ட நன்னாடானதனாலும் நாங்கள் இதில் வந்து பிறந்தோமே அன்றி வேறு காரணத்திற்காகவல்ல!
வினா- ஆகையினால் நீர் அவதரிக்கும் போதே கடவுள் பிரிவினை, சமூகப் பிரிவினை, ஜாதிப்பிரிவினை, பாஷைப் பிரிவினை, கோத்திரப் பிரிவினை, உடற்பிரிவினை, உடைப் பிரிவினை, உணவுப் பிரிவினை, தலைப் பிரிவினை, கல்விப் பிரிவினை, ஒழுக்கப் பிரிவினை, உயர்வு - தாழ்வுப் பிரிவினை, முதலிய பல்வேறு பிரிவினைகளை உள்ளடக்கியதனால், நீர் உம் தாயார் வயிற்றிலிருந்து பிறக்கும் போதே கொலை, களவுகள், காமம், சூது, வாது முதலிய கொடிய பாதகங்களைச் செய்து தண்டனை அடைபவர்கள் வசிக்கும் காராக்கிரமாகிய ஜெயிலில் பிறந்தீர் போலும். அல்லாமலும் உம்முடைய தந்தையாகிய வாசுதேவர் உம்மைத் திருட்டுத் தனமாகக் கொண்டு போய் இடையச் சேரியாகிய ஆயற்பாடியில் போட்டு விட்டு வரவும், கோகுல வாசிகளின் தலைவனாகிய நந்தகோபாலன் கண்டெடுத்துத் தன் மனைவி யசோதையிடத்தில் கொடுத்து வளர்த்து வந்ததனால் தான், தாயில்லாப் பிள்ளையாயிற்றே என்ற அனுதாபத்தினால் ஆயர்பாடியிலுள்ள சில பெண்கள் உமக்குத் தங்கள் முலைப்பாலைக் கொடுத்துப் பிரியமாய் வளர்த்து வரும் போது, அதிலொருத்தியாகிய பூதனி (பூதகி) என்ற பெண்ணின் ஸ்தன்னியத்தைக் கூடக் கடுமையாகக் கடித்து அவளுக்கு மரண வேதனையை உண்டாக்கி விட்டீர் அல்லவா?
விடை:- ஆம் வாஸ்தவந்தான். மார்பில் பால் சுரக்காவிட்டால் சிறுவர்கள் என்ன செய்வார்களோ அதைத்தான் நானும் செய்திருக்கின்றேனே அன்றி வேறொன்று மில்லையே!
வினா- அதனால் தான் பெண்கள் உமக்குப் பால் கொடுக்காதபடி மாட்டுப்பாலைக் கொடுத்து வளர்த்து வந்திருக்கின்றார்கள். அப்படி வளர்த்துத் தான் உம்மையும் மாடு மேய்க்கும் சிறுவர்களுடன் மாடு மேய்க்கப் புலன்களுக்கு அனுப்பியதால், தங்க நிறம் போன்ற திருமேனியுடைய இராஜகுமாரனாக இருந்தும், அந்த வெயிலிலும் கானலிலும் அலைந்து திரிந்ததனால் இயல்பான பொன்னிறம்மாறி, சரீரம் கருத்துக் கரிக்கட்டை மாதிரி ஆனதனால்தானே உம்மைக் கோபாலகிருஷ்ணன் என்று பெயரிட்டு அழைத்து வந்தார்கள். (அதன் பொருளாவது: கோபசு, பாலன் சிறுவன், கிருஷ்ணன் கருப்பன் என்றபடி, மாடு மேய்க்கும் கருத்தப் பையன் என்பதுதான் அதன் அருத்தமாகும்). அப்படி இருந்தும் உமது பிறவிக் குணமாகிய திருட்டுப் புத்தி மட்டும் உம்மை விட்டபாடில்லை. சேரியிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும், யாருங்காணாதபடி உட்புகுந்து, அவர்கள் வைத்திருக்கும் பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றைத் திருடித் தின்றுவிட்டு ஒடுவதைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்து, உரலில் கட்டிவைத்துத் தயிர் கடையும் மத்தால் உம்மை அடித்திருக் கின்றார்கள். அப்படியெல்லாம் பட்டும் புத்தி வராமல், ஒவ்வோர் இடையர் வீட்டிலும் புகுந்து புருடனில்லாத சமயம் பார்த்து அப்பெண்களை யெல்லாம் கற்பழித்திருக்கிறீர் அல்லவா? இதுதானா நீர் பூவுலகில் பிறந்து பூமிபாரம் தீர்க்க வந்த நேர்த்தி?
விடை:- அவர்கள் என் மீது மட்டற்ற காதல் கொண்டு என்னை விரும்பி வந்தபடியால் தான் நான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்களின் காம இச்சையை நிறைவேற்றி வைத்தே னேயல்லாது, நான் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்கவில்லை. இதனை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
வினா:- ஒகோ! அப்படியா சங்கதி! ஆனால் நீர் அவர்களை "பூனை மாமிசத்தைத் தள்ளினதுபோல்" தள்ளிவிட்டீராக்கும் என்றல்லவோ எண்ணினேன். அப்படியே நீர் சொல்லியது உண்மையாக இருக்குமானால், ஆயர்குல மாதர்கள் வழக்கம் போல் யமுனா நதிக்குக் குளிக்கப் போனால் நீரும் அவர்கள் அறியாதபடி பின் தொடர்ந்து, அவர்கள் தங்கள் உடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு ஆற்றிலிறங்கிக் குளித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, அவர்களின் ஆடைகளை எடுத்து மரத்தின் மீது ஏறி வைத்துக் கொண்டு, அவர்களை எல்லாம் ஆடையின்றி நிர்வாணமாகப் பரிதவிக்கவிட்டு, நீர் மரத்திலிருந்து கொண்டே, அவர்களை இரு கையையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டால் தான் தருவேனென்று சொல்லுவதும், அவர்களும் வேறு வழியில்லாமல், உம்மிஷ்டப்படிச் செய்யவும், நீரும் அவர்களின் மர்மஸ்தானத்தைத் தரிசித்துப் பரவசமடைந்தவுடன் அவர்களின் புடைவைகளைத் திருப்பிக் கொடுத்ததுமான செயலிருந்தும் உமது வெட்கங்கெட்ட காமாந்தகார மான செய்கையும், திருட்டுத்தனமும் விளங்கவில்லையா?
விடை:- ஆம், அந்த வாலிப காலத்தில் எப்படிப்பட்டவர்களும் தவறி நடப்பது இயற்கைதானே! அதையெல்லாம் குற்றமாகப் பாவிக்கலாமா? உலகத்தில் யார் தான் நெறியுடன் பிறந்தது முதல் இறக்கிறபரியந்தம் நேர்மையுடன் நடந்திருக்கின்றார்கள்?
விடை:- நீர் சொல்வது வியப்பாக இருக்கின்றதே! சாதாரண மக்கள் தான் தவறிழைத்தாலும் உம்மைப் போன்ற பரத்துவம் வாய்ந்த கடவுள் கூட அப்படிச் செய்வது முறையாகுமா? என்றுதான் கேட்கின்றேன். சரி, இது போகட்டும். பிறந்தது முதல் உமக்குப் பாலூட்டிச் சீராட்டிப் பாதுகாத்து வந்த நந்தகோபன் மகன், பலராமனுடன் எப்பொழுதும் பொறாமையால், நீர் செய்யும் ஒவ்வொரு குற்றத்தையும் அவன் தலையில் சுமத்திவிடுவதும், பலராமனுடைய தங்கையாகிய சுபத்திரையைத் துரியோதனனுக்குக் கொடுக்க வேண்டுமெனச் சொன்னதற்காக நீர் அதை மறுத்து, அர்ச்சுனனுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று சொல்லி ஒருவருக்கொருவர் சண்டை யிட்டு மண்டையுடைத்துக் கொண்டிருக் கின்றீர்களே. இதானது உங்களுடைய சகோதரத் தன்மைக்கு ஏற்புடைத் தாகுமா என்றுதான் கேட்கின்றேன்.
விடை:- ஆம், வாஸ்தவந்தான். சுபத்திரை பலராமனுக்கு மட்டும் தங்கையல்ல. எனக்கும் அவள் தங்கைதான் என்னை நந்தகோபன் பெறாவிட்டாலும், பெற்றவன் ஒரு பிதா, வளர்த்தவன் ஒரு பிதாவென்ற நீதி வாக்கியத்தின்படி, நான் பிறந்தது முதல் என் தாய் தந்தையரைப் பார்க்காமல் நந்தகோபனையும், அசோதையரையுமே என் சொந்தத் தாய் தந்தையாக நினைத்துக் கொண்டிருந்தபடியால், அவர்கள் பெண்ணும் எனக்குச் சகோதரிதான் ஆகவேண்டும். ஆதலால், திரியோதரனுடைய சுபாவ குணங்களும், செய்கையும் எனக்குப் பிடிக்காதபடியால் தான் அவனுக்குக் கொடுக்கும்படி வாதாடினேன். இதில் என்ன குற்றம்?
கிருஷ்ணாவதாரம்-சந்தேகமானது
வினா:- இதில் குற்றமொன்றுமில்லை. நீர் நல்லெண்ணத்துடன் தான் அர்ச்சுனனுக்குக் கொடுக்கும்படி சொன்னீர்.  ஆனால், எனக்கு ஒரு பெருத்த சந்தேகம் வந்து குறுக்கிடுகிறது. அதாவது, முதலில் நீரே பலராமனாகப் பிறந்திருப்பதாக உமது சாட்சியத்தில் சொல்லி இருக்கின்றீர். இப்போது கிருஷ்ணனாகப் பிறந்ததாகவும் சொல்லுகின்றீர். இதில் நீர் கிருஷ்ணனாகப் பிறந்த வரலாறுக்கும், பலராமனாகப் பிறந்த வரலாறுக்கும், மலைக்கும் மடுவுக்குமுள்ள எவ்வளவோ வித்தியாசங்கள் காணப்படுவதும் அன்றி, நீங்களிரு வரும் உருவத்தாலும், குணத்தாலும், செய்கையாலும் மாறுபட்டவர் களாகவே காணப்படுகின்றீர்கள். அப்படி இருப்பதால், பரத்துவம் வாய்ந்த அவதாரம் பலராமானா? அல்லது கிருஷ்ணனா? என்ற சந்தேகத்திற்கு இடந்தருகிறதல்லவா? ஆகையால் இச்சந்தேகத்தைப் பற்றி என்ன சமாதானம் சொல்லப் போகின்றீர்?
விடை:- மவுனம் (பதில் சொல்லவில்லை)
வினா:- இதற்குத் தகுந்த காரணம் சொல்ல முடியாமல் மவுனம் சாதிப்புதனால் என்ன விளங்குகிறது என்றால், உமது சாட்சியமே நம்பிக்கையற்றதும், பொருத்தமற்றதுமாகவே இருக்கின்றது. உமது இராமாவதாரத்தில், பரசுராமனும், ராமனும் சண்டையிட்டதாகச் சொல்லியிருக்கின்றீர். இதில் நீங்களிருவரும் போர் தொடுத் திருக்கின்றீர்கள். நீர் எடுத்திருக்கும் பதினொரு பிறப்பில் ஒன்றை ஒளித்து விட்டு, பத்து அவதாரம்தான் என்று சொன்னீர். அல்லாமலும், இதில் நாலாவது அவதாரத்தைக் கொண்டு வந்து புகுத்திவிட்டீர். இதனால் உமது அவதார மகிமையில் கொஞ்சங்கூட நம்பிக்கை வைக்க இடமில்லாமலும் போய்விட்டது. அல்லாமலும், உம் தாய் மாமனாகிய கஞ்சனையும் நயவஞ்சகமாய்க் கொலை செய்திருக்கின்றீர். குருகுலத்து மன்னர்களையும் உம்முடைய கபடநாடகச் சூழ்ச்சியால், ஒருவருக்கொருவர் பிரிவினையை உண்டாக்கிப் பாண்டவர் பக்கம் நீர் சேர்ந்துகொண்டு, தருமமே உருவாக அவதரித்திருந்த தரும புத்திரன் மனத்தைக் கலைத்துத் தன் மாமன் சகுனியுடன் பஞ்சமா பாதகத்தில் ஒன்றாகிய சூதாட்டத்தை ஆடச் செய்தும், அதன் நிமித்தமாகத் தனது தர்மபத்தினியாகிய திரவுபதியை இராஜ சபையில் கொண்டு வந்து நிறுத்தி அவள் துகிலை உரிந்து நிர்வாணமாக விட்டு மானபங்கப்படுத்தியும், பாண்டவர் களைப் பதினான்கு வருடம் காட்டில் விரட்டிவிட்டு அவர்கள் பதினான்கு வருடம் கழித்துத் திரும்பி நாட்டுக்கு வந்தும், அவர்களுக்கு உரிய இராச்சியத்தைத் திருப்பிக் கொடுக்காமல், தூது செல்வதாகச் சென்று அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டிவிட்டு, குருக்ஷேத்திரத்திரம் என்று சொல்லக்கூடிய டில்லியில் பதினெட்டு நாள் வரையில் கடும்போரிட்டுப் பதினெட்டு அக்ரோணி சேனைகளையும் மடியவைத்து வேடிக்கைப் பார்த்துத்தானா நீர் இந்தப் பூமிப்பாரந் தீர்க்கவேண்டும்? "அரிதரிது மானிடராதலரிது" என்ற முதியோர் மொழிப்படி, மானிட ஜென்மமாகப் பிறக்கவேண்டியதற்குப் "புல்லாய்ப் பூடாகிப் புழுவாகி, கல்லாய், மரமாய், மிருகமாய், பறவை" முதலிய எத்தனையோ பிறவிகள் எடுத்துக் கடைசியில் மனிதப் பிறவி பிறக்கவேண்டி இருக்கின்றது. அப்படியிருக்க, இந்தப் பூமியிலுள்ள பாரத்தைக் குறைக்க, இந்தப் புனிதமான மானிடப் பிறவி தானே உமக்குக் கிடைத்தது. என் உலகத்தில் எண்ண முடியாத கல்மலை, கரிமலை, பனிமலை, மண்மலை, பொன்மலை, கருங்கல்மலை, செம்புராகல்மலை, சிலேட்டுமலை, சலவைக் கல்மலை, சுண்ணக் கல்மலை முதலிய எத்தனையோ வகை மலைகள் இருக்கின்றனவே! அவற்றில் சிலவற்றை எடுத்தெறிந்துவிட்டால் பூமிப்பாரம் தன்னால் குறைந்து போய்விடாதா? இதற்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்? அல்லது இதனால் உமக்காவது போற கதிக்கு நல்ல கதி கிடைத்ததா? ஒன்றுமில்லையே! கடைசியில் "தன்னப்பம் தன்னைச் சுடும்; ஒட்டப்பம் வீட்டைச் சுடும்" என்பது போலத் தானே நீர் செய்த கபட நாடகத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல், காட்டில் வேடன் கை வில்லாலடிபட்டு நடு ஆற்றில் எறியப்பட்டு, சாளக்கிராமம் என்னும் கல்லாய்க் கிடந்து நாளது வரையில் உருண்டு கிடப்பது தானே மிச்சம். சரி, அது எப்படியாவது போகட்டும். இந்த வியாச்சியத்தைப் பற்றி உமக்கு ஏதாவது தெரியுமா?
விடை:- என் மைத்துனர் சிவபெருமான் சொன்னது தான் எனக்கும் தெரியுமேயல்லாது வேறொன்றும் தெரியாது.
வினா:- சரியிருக்கட்டும், உம் கிருஷ்ணாவதாரம் இத்துடன் முடியட்டும். அடுத்த அவதாரத்தையும் சொல்லி வாரும். அதையும் கேட்டுவிடுவோம்.
--------------------- "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்" நூலிலிருந்து

29.11.15

காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். - இல்லையா?



காந்தியாரைக் கொன்றவன் அசல் ஆர்.எஸ்.எஸ்.காரனே என்பது உலகத்திற்கே தெரியும். ஆனால், பி.ஜே.பி.க்காரர்கள் ஒன்றைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நீதிமன்றமே சொல்லி விட்டது. நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரரல்ல என்று; அதற்குப் பிறகும் கோட்சேவை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லுவது நியாயம் தானா? என்று பெரிய புத்திசாலிகள் போலவும், கேள்வி கேட்ட வர்களை மடக்கி விட்டது போலவும் சட்டையின் கழுத்துப் பட்டையைச் சற்றுத் தூக்கி விட்டு நடை போடுகிறார்கள்.
காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். என்று காங்கிரஸ் துணைத் தலைவர் கூறிவிட்டாராம். அதனால் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மானம் கப்பலேறி விட்டதாம்.
பிஜேபி என்ன செய்தது? ஆர்.எஸ்.எஸ்.மீது  காந்தி கொலைக் குற்றத்தை சுமத்தி, அதன்மூலம் ராகுல் காந்தி அரசியல் செய்ய இருக்கிறார் என்று புகார் செய்தது.
நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் அவன் எந்த அமைப்பைத்தான் சேர்ந்தவன் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பில் என்ன பதில் கூறப்பட்டது? கோட்சே இந்து மகாசபை என்கிற அமைப்பைச் சேர்ந்தவன் என்று பதில் வந்தது.
ஆர்.எஸ்.எசுக்கும் - இந்து மகாசபைக்கும் அப்படி என்ன சித்தாந்த வேறுபாடு - கருத்து மாறுபாடு? இன்னொரு கட்டத்தில் இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்தும் விட்டன என்கிறபோது காந்தியைச் சுட்டுக் கொன்றதற்கான பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? அதில் ஏன் நழுவல்? அறிவு நாணயமற்ற தன்மையே தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.
நீதிமன்றம் சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்; நாதுராம் கோட்சேயின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதுதானே முக்கியம்? காந்தியார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே நாதுராம் கோட்சேயின் சாட்சாத் தம்பிதான்; அந்தத் தம்பி என்ன சொல்லுகிறான்?
இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட்லைன் இதழ் கோபால் கோட்சேயைப் பேட்டி கண்டு பகிரங்கமாக உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டதே. சங்பரிவார்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளவில்லையே ஏன்?
கேள்வி: நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸில்தான் இருந்தாரா? அதைவிட்டு வெளியேறிடவில்லையா?
பதில்: ஆர்.எஸ்.எஸில் நாதுராம் கோட்சே ஒரு பவிதி காரியலா (அறிவுப் பூர்வப் பணியாளர்) ஆக இருந்தார். நாதுராம் ஆர்.எஸ்.எசை விட்டு விலகியதாக (காந்தியார் கொலை வழக்கின்போது நாதுராம் கோட்சே அளித்த அறிக்கையில்) குறிப்பிட்டு இருந்தார். காந்தியார் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எசுக்கும், கோல்வாக்கருக்கும், நெருக்கடிகள், பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக அவர் அப்படிக் குறிப்பிட நேர்ந்தது. ஆனால், உண்மையில் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எசை விட்டு விலகவேயில்லை (ஃப்ரண்ட்லைன் 28.1.1944)
இதே இதழில் இன்னொன்று ஆர்.எஸ்.எசுக்கும் நாதுராம் கோட்சேவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அத்வானி கூறி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு கோபால் கோட்சே பதில் என்ன தெரியுமா?
இது கோழைத்தனமானது -அவரது கூற்றை நான் மறுக்கிறேன் போ, காந்தியைக் கொல்லு! என்று ஆர்.எஸ்.எஸ். தீர்மானம் போடவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எசுக்கும் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் கூற முடியாது என்று அதே பேட்டியில் காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் தம்பியும், காந்தியார் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்று இடையில் விடுதலை பெற்றவருமான கோபால் கோட்சே வெட்டொன்று துண்டு இரண்டாக அப்பட்டமாகச் சொன்ன பிறகும், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று கூறுவது அப்பட்டமாகப் பொய்ச் சொல்லுவதில் ஆர்.எஸ்.எசை வென்றிட உலக அரங்கில் யாருமே கிடையாது என்பதைத்தான் காட்டுகிறது.
இதில் இன்னொரு சூழ்ச்சியும், ஏமாற்றுத்தனமும் உண்டு - அதனைக் கவனிக்கத் தவறக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் சேர்க்கை கிடையாது. அதனால் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்.காரராக இருக்கும் எவரையும் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லுவதற்கான ஆதாரம் கிடையாது. குற்றம் செய்து விட்டு, அதிலிருந்து ஆர்.எஸ்.எசைத் தப்பிக்கச் செய்ய ஆர்.எஸ்.எஸ்.செய்து வைத்திருக்கும் தந்திரமும், சூழ்ச்சியும் இதுவாகும்.
நீதிமன்றம் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லி விட்டது. எனவே அவனை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லாதீர்கள் என்கிறார்களே - அவர்களின் கனிவான பார்வைக்கு இதோ ஒரு நீதிமன்ற தீர்ப்பு. பஞ்சாப்  அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் குரோவர் வழங்கிய தீர்ப்புதான் (மே 2015).
இந்தியா டுடே ஏட்டின் முதன்மை ஆசிரியர்,  வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்றினை முகேஷ் கார்க் என்பவர் 2004 இல் தொடர்ந் திருந்தார். இதனை ஏற்று, மேற்கண்ட மூன்றுபேர்களுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பத்திரிகையாளர் மூவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பத்திரிகையாளர்களுக்காக மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ்.சீமா வாதாடினார். செய்திக்கட்டுரை அவமதிப்பானது எனக் கருத முடியாது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை குறைகூறி எதுவும் எழுதப்பட வில்லை என வழக்குரைஞர் கூறியதை நீதிபதி மகேஷ் குரோவர் ஏற்று கொண்டார்.
கட்டுரையைப் படித்துப் பார்த்தால் நாதுராம் கோட்சேயை ஆர்.எஸ். எஸ்.காரர் என எழுதியிருக்கிறார்கள்; ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்து தேசிய இயக்கம் எனவும் எழுதியிருக்கிறார்கள். வரலாறும் வரலாற்றில் இடம் பெற்றவர்களும் உயர்ந்து நின்றாலும் பிற்காலத்தவர்களால் புரிந்து கொள்ள முடியாத வர்களாக இருப்பர். அந்த வகையில் கோட்சேயைப் பற்றிய பின்புல ஆய்வு செய்து எதனால் நாட்டின் தந்தையான காந்தியாரைக் கொலை செய்தார் என்பதையும் ஆய்வது வழக்கமானதே. அப்படி ஆராயும்போது, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கத்தினைப் பற்றியும் குறிப்புரைகள் எழுதப் பட்டுள்ளன என நீதிபதி குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸின் உறுப்பினர் என்னும் முறையில் கோட்சே பற்றி எழுதப்பட் டதை அவமரியாதையானது என்றோ, அவமதிப்பானது என்றோ கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி வழக்கையும் பத்திரிக் கையாளர்களுக்கு வழங்கப்படட அழைப்பாணையையும் ரத்து செய்து ஆணையிட்டார்.
ஒரு கட்டுரையை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை சாதாரண வாசகரின் மனதில் எம்மாதிரி எண்ணங்களைத் தோற்று விக்கும் என்பதை ஆயும் கடமை நீதிமன்றத்துக்கு உண்டு. போலித்தனமான ஆள்கள் தம் குருட்டுக் கண்களால் பார்த்தால் மட்டுமே இக்கட்டுரை அவ தூறானது எனக் கூறுவார்கள் என்று மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவும் நீதிமன்ற தீர்ப்புதான். ஆர்.எஸ்.எஸ். என்று நாதுராம் கோட்சேயைக் கூறாதீர்கள் என்பவர்களின் வாய்கள் இதற்குப் பிறகாவது அடைபடட்டும்!
                              --------------------------"விடுதலை’ தலையங்கம் 28-11-2015