சென்னை அய்.அய்.டி.யில் மத்திய அமைச்சர்கள் இருவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் (26.2.2018) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அய்.அய்.டி. இயக்குநரான பாஸ்கர் ராமமூர்த்தி என்ற பார்ப்பனர் தெரிவித்துள்ள கருத்து ஆணவத்தின் உச்சியில் நின்று கொக்கரிப்பதாகும்.
‘‘நாங்கள் எந்தப் பாடலைப் பாடவேண்டும் என நிர்ப்பந் திப்பதில்லை. மாணவர்களின் விருப்பப்படி பாடுகிறார்கள். சில நேரங்களில் இந்தியில் பாடுவர்; மராட்டியில் பாடுவர். இதை சர்ச்சையாக்க விரும்பினால், உங்கள் விருப்பம்; எதிர்காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வைப்போம்'' என்று கூறியுள்ளார்.
இது சரியான, நியாயமான விளக்கமா? அரசு நிர்வாகம் என்றால், அதற்கென்று விதிமுறைகள் கிடையாதா? மாணவர்கள் விருப்பத்துக்குப் பாடலாமா? மாணவர்கள் விருப்பம் இந்தப் பாடல் என்று முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதா? திடீரென்று அனைத்து மாணவர்களும் சமஸ்கிருதப் பாடலை ஒரே மாதிரியாகப் பாடியது எப்படி?
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பாடுகின்றனர் என்கிறாரே இயக்குநர், அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவர்களில் எத்தனைப் பேர்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் - கணக்கெடுத்துக் கூறு வார்களா?
தெரிந்த மொழிகளில் பாடுவோர் என்றால், ஒரே நேரத்தில் அவரவர்களுக்குத் தெரிந்த மொழியில் கடவுள் வாழ்த்துப் பாடலாமா?
பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள் என்று பல நிலைகளில் மாணவர்கள் படிக்கும் நிலையில், குறிப்பிட்ட இந்து மதத்தின் பாடலை மட்டும் பாடுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு விரோதம் இல்லையா?
இதை சர்ச்சையாக்கினால் உங்கள் விருப்பம் என்று இயக் குநர் கூறும் கருத்தின் தொனி எந்த வகையைச் சார்ந்தது? நாங்கள் அப்படித்தான் செய்வோம் - உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சவால் விடுகிறாரா? முண்டா தட்டுகிறாரா?
அரசு விழா என்றால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப் படவேண்டும் என்பது தமிழ்நாட்டில் சட்ட விதிமுறைகள் இருக்கின்றன.
அதற்குக் கட்டுப்படவேண்டியது ஓர் அரசு நிறுவனத்தின் தவிர்க்க முடியாத அடிப்படைக் கடமையாகும். அதனை மீறுவது கண்டிப்பாக சட்ட மீறலாகும்.
இதற்காகவே சென்னை அய்.அய்.டி. இயக்குநர்மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள இடம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால், அய்.அய்.டி. என்பது மத்திய அரசு நிறுவனம் - சம்பந்தப்பட்டவரோ அசல் பார்ப்பனர்.
மொத்தம் 536 பேராசிரியர்களுள், 86.57 விழுக்காடு பார்ப்பனர்கள் (454 பேர்). தாழ்த்தப்பட்டோர் 2.05 விழுக்காடு (சட்டப்படி அவர்களுக்குரிய இடம் 15 விழுக்காடு). பிற்படுத் தப்பட்டோர் 11.01 விழுக்காடு (27 விழுக்காடு சட்டப்படி அவர்களுக்கு உண்டு).
பழங்குடியினர் 0.31 விழுக்காடு (சட்டப்படி இவர்களுக் குரிய இடம் 7.5 விழுக்காடு).
இது தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட புள்ளி விவரமாகும்.
நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ள பார்ப்பனர்கள் அய்.அய்.டி.யில் 86.57 விழுக்காடு இடங்களை விழுங்கி, ஏப்பம் விடுகிறார்கள் என்றால், இந்தக் கொடுமைக்கு என்னதான் முடிவு - இதற்குப் பரிகாரம்தான் என்ன? என்பது கூர்மையான செங்குத்தான இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சட்டப்படியான வினாவாகும்.
பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்பதற்கு மத்திய அரசு நிறுவனமான இந்த அய்.அய்.டி.களே கண் கண்ட சாட்சிகளாகும்.
சட்ட விரோதமாக சமஸ்கிருதத்தில் கடவுள் வாழ்த்துப் பாடும் தைரியத்தைக் கொடுத்தது - இந்த அடங்காத்தனமான ஆரிய ஆதிக்கம்தானே!
தப்பித்தவறி இந்த நிறுவனத்தில் இடம் கிடைத்துப் படிக்கவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களும் முழுவதுமாகப் படித்து வெளியேறுவது என்பது முயற்கொம்பே! பல மாணவர்கள் தற்கொலை கூட செய்துகொண்டதுண்டு.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக சமஸ்கிரு தத்தில் பாடியது என்பது - இந்தப் பின்னணியின் திமிர் கொண்ட தாக்கமே!
பார்ப்பனர்கள் முன்புத்தி இல்லாதவர்கள் என்பார் தந்தை பெரியார். தமிழ்நாட்டில் எதில் கை வைக்கக்கூடாதோ, மூக்கை நுழைக்கக் கூடாதோ அந்த மின் கம்பியில் சிக்கிக் கொண்டு விட்டனர் பார்ப்பனர்கள்.
அதுதான் தந்தை பெரியாரால் கிளர்ந்து எழுப்பப்பட்டு இருக்கும் மொழிப் பிரச்சினையில் கை வைத்துவிட்டனர். கட்சிகளுக்குஅப்பாற்பட்டு,ஒருமுகமாகதமிழகத்தலை வர்கள் கண்டனக் கணைகளைக் கூர் மழுங்காது ஏவி விட்டுள்ளனர். இந்த உணர்வு ஒருமுகப்படுத்தப்பட்டு, கண் டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் ஒழுங்கு செய்யும்.
ஆப்பதனை அசைத்துவிட்டனர். பார்ப்பனர்களைப் பொறுத்தவரை கொட்டினால்தான் தேள்!
--------------------"விடுதலை’’ தலையங்கம் 27-02-2018
0 comments:
Post a Comment