Search This Blog

15.9.08

அண்ணாவின் பொன்மொழிகள்



இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறோம். அண்ணா வாழ்க!அவரின் கொள்கையை பின்பற்றுக!

அண்ணாவின் சிந்தனைகள் உங்கள் பார்வைக்கு ...........

--------------------------------------------------------------------------------

"அண்ணா அவர்கள் நமது நாட்டுக்கு ஒரு நிதி என்று தான் சொல்ல வேண்டும். பகுத்தறிவாளர், மூடநம்பிக்கையற்றவர், மூடநம்பிக்கையை ஒழிக்க என்னோடு இருந்து தொண்டாற்றியவர் ஆவார். இவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுத்தறிவுக் கொள்கைப்படி துணிந்து ஆட்சி செய்கிறார். இமயமலை அளவு எதிர்ப்பு இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாது, துணிந்து செயலாற்றி வருகிறார்.
வாழ்க அண்ணா!

- தந்தை பெரியார்
-------------------------------------------------------------------------------------

1.ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

2.என்ன இருந்தாலும் சார், கலையைக் கெடுக்கக்கூடாது பாருங்கோ என்று குழைவுடன் கூறும் குணாளர்களைக் கேட்கிறேன். கலை, மக்கள் நிலையை மாசுபடுத்தும்போது அந்தக் கலையைத் தொலைக்காமல் வேறென்ன செய்வது?

3.முருகன் என்றால் அழகுதான்; வேறல்ல என்கிறார்கள் சில முருகதாசர்கள். அப்படியானால் அன்றலர்ந்த ரோஜா, அடவி, ஆறு, மலை, மேகம், வெண்ணிலா, வானவில் ஆகிய அழகுப் பொருள்கள் இருக்க முருகன் என்றோர் தனிக் கற்பனை எதற்கு?

4.மின்சார விளக்குகள் தேவையில்லை - பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும். விமானம் பறக்கக்கூடாது - கருடன்தான் பறக்கவேண்டும். ரயில் வண்டி கூடாது - கட்டை வண்டிதான் சிறந்தது. தீப்பெட்டி தேவையில்லை - சிக்கி முக்கிக் கல்தான் தேவை. துப்பாக்கியா வேண்டாம் - வேலும் வில்லும் போதும். மாளிகைகள் தேவையில்லை - பர்ணகசாலைதான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை. ஆனால், இந்தக் காலம் கெட்டுவிட்டது. பழைய காலம்தான் நல்ல காலம் என்று பேசவோ தயங்குவதில்லை. இப்படிப் பேசலாமா? பேசுவது நாணயமா?

5.பொதுவுடைமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ணிய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்லநிலை.

6.அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

7.குழந்தைப் பருவத்தில் மனித சமுதாயம் இருந்தபோதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் என்று கடவுட் கதைகள் தேவைப்பட்டன. அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றுள்ள இந்தக் காலத்தில் இவை எதற்கு?

8.உயர்வகுப்பென்று உறுமிக்கொண்டு பிறரை அடக்கியாள்வதும் ஆண் என்று ஆர்ப்பரித்துப் பெண்களை இழிவு செய்வதும்தான் புனித இந்து மார்க்கத்தின் பெரிய பெரிய நீதிகள். நாடு வாழவேண்டுமானால் இத்தகு நீதிகளைத் தரும் மார்க்கம் மறைய வேண்டும்.

9.புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.

10.சர்வேஸ்வரனின் பொருள் களவு போனால் கூட சாதாரண போலீஸ்தான் கண்டுபிடிக்கிறதேயொழிய கடவுள் சக்தி அதற்கும் பயன்படுவதில்லையே - ஏன்? இந்தச் சில்லறைச் சேட்டைகளைக் கூடத் தடுக்க முடியாத தெய்வங்கள் இருப்பதால் நாட்டுக்கு என்ன பயன்?

11.காதல் உற்றவனின் உறுப்புக்களைச் சிதைப்பது, தவமியற்றிய தமிழன் தலையை வெட்டுவது, தம்பியின் துரோகத்தைத் துணைகொண்டு அண்ணன் தலையைக் கீழே உருட்டுவது - இதன் பெயர்தான் இராமாயணம். இந்த இராமாயணம் நமக்குத் தேவையா?

12.நாலுவேதம், ஆறுசாஸ்திரம், அறுபத்து நான்கு கலைஞானம் இருக்க, பராசர் யாக்ஞவல்கியர் உபதேசங்கள் இருக்க, உன்னதமான உபநிஷத்தும் உத்தமமான கீதையுமிருக்க, ஒரு வாசகத்துக்கும் உருகாதாரையும் உருகவைக்கும் திருவாசகம் இருக்க, முருகன் அருளைத் தரும் திருப்புகழ் இருக்க, எல்லாம் இருந்தும் இந்த நாட்டிலே இல்லாமையும் போதாமையும் கூடவே இருக்கின்றனவே - அது ஏன்? இல்லாமையைப் போக்க இந்த ஏடுகளால் முடியவில்லை என்றால் ஏன் இருக்க வேண்டும் இவை இன்னமும் இந்த நாட்டிலே?

13.இங்குள்ள ஜாதித் திமிரைக் கண்டிக்க முன் வராத வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறத் திமிரைக் கண்டிப்பது மகத்தான குடியன் மதுவிலக்கு பிரசாரம் புரிவது போன்ற செயல் தவிர வேறென்ன?

14.ஜாதி - இது ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி. பாழாய்ப்போன ஜாதிப்பேச்சு ஆரம்பமாகிவிட்டதா? எந்த ஜாதியாக இருந்தால் உனக்கென்னய்யா? இது அந்தக் கேள்விக்குரிய பதில் அல்ல. ஜாதியை நிலை நாட்டுவதற்குரிய தந்திரம்.

15.பூமியிலே புரண்டு கோவிந்தா போடுவதும், வேல் குத்திக் கொண்டு வேலாயுதா என்று சொல்வதும் பக்தி என்று சொல்லப்படுமானால், பக்தி என்ற சொல்லுக்குப் பொருள் பைத்தியம் என்பதாக இருக்கவேண்டும் அல்லவா?

16.நடுப்பகல் - சுடுமணல் - பெருநடை - சுகமான பயணம் - இந்நான்கு தலைப்புகளையும் ஒரே செய்திக்குப் பயன்படுத்தும் தோழரை நீங்கள் என்னவென்று கூறுவீர்கள்? அண்டப் புளுகர் என்பீர்கள்! அத்தகைய புளுகர்களால் எழுதப்பட்ட அர்த்தமற்ற ஏடுகள்தான் புராணங்கள்.

17.விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த மோட்டாரில் ஏறிக்கொண்டு அஞ்ஞானத்தை வளர்க்கும் பஜனை மடத்திற்குச் செல்லும் நம் போக்கைக் கண்டு, உலகக் கொட்டகையில் எவ்வளவு பேர் கேலி செய்கிறார்களோ? யார் கண்டார்கள்? செய்யாமலா இருப்பார்கள்!

18.ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

19.சித்திரை, வைகாசியில் கருடசேவை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூரம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசிக்குத் திருப்பதி என்று ஒவ்வொரு மாதத்தையும் நாம் புண்ணிய காரியத்துக்கே செலவிட்டால் வேறு உருப்படியான காரியத்தை எப்போது தான் புரிவது?

20.ஆயிரம் கண்ணுடையாள் என்று அர்ச்சிக்கிறார்களே காளியை, அதில் ஒருகண்ணால் பார்க்கக்கூடாதா ஏழைகளை! ஏழைகள் படும் அவதியை! அவளை பக்தியோடு பூஜித்தால் பலன் உண்டு என்று சொல்கிறார்களே பூஜித்துப் பூஜித்து ஏழைகள் கண்ட பலனென்ன?

21.சினிமாப் படத்தில் யாரோ ஒரு மாது ஆபாசமாகக் காட்சியளித்தால் ஆக்ரோஷத்துடன் அதைக் கண்டிக்கிறோம். ஆனால் கம்பன் கலையிலே நெளிந்து கிடக்கும் காமரசத்தைக் கண்டிக்கமட்டும் தயங்குகிறோம். ஏன்?

22.முதலாளி - நிலப்பிரபு - புரோகிதன் இந்த மூவகைச் சுரண்டல் சக்திகளிலே ஒன்றைவிட்டு மற்றதை மட்டும் முறிப்போம் என்றால் முடியாது. ஏனெனில் சுயநலம், சுயசுகம் என்ற பசைபோட்டு இந்த மூன்று வளைவுகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.

23.ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?

24.எங்கோ ஒரு குக்கிராமத்தில் குறி கூறுவான் ஒரு தந்திரக்காரன். அங்கே கும்பல் கூடும். அதற்கு அருகே அரியதோர் இயற்கை காட்சி இருக்கும். ஆனால் அதைக் காணவோ யாரும் வரார். இப்படிப்பட்ட நாட்டிலே இலக்கியம் வளரவில்லை என்றால் எப்படி வளரும்?

25.பாசியை நீக்கிவிட்டுக் குளத்தின் படிக்கட்டுகளை இடித்த கதைபோல, கனியைக் கொடுத்துவிட்டு, கடுவனையும் நிறுத்தியதுபோல. காலிலே தண்டையைப் பூட்டிவிட்டுக் கழுத்துப் புண்ணுக்கு மருந்திட மறுப்பது போல, பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தது. ஆனால் தீண்டாமையைத் தடுக்கவில்லை. துடுக்கர் கூட்டத்தை ஒடுக்கிற்று. ஆனால் மதத்தரசர் கூட்டத்தைக் கொழுக்கவைத்தது. நகர், ஊர் பலவற்றை எழுப்பிற்று. ஆனால் சேரிகளைத் தகர்க்காது விட்டது. ஆம் ஏகாதிபத்தியத்தின் போக்கு மிகவும் விசித்திரமானது.

26.ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.

27.விஞ்ஞானக் கண்டுபிடிப்பான மோட்டாரில் ஏறிக்கொண்டு வைதிகத் திருப்பதி மலைக்கு மொட்டையடிக்கச் செல்வது, முதல்தரமான முட்டாள்தனமல்ல. விஞ்ஞான அறிவுக்கு நாம் செய்யும் மகத்தான துரோகமும் ஆகும்.

28.அவதார புருஷனாகிய இராமனால் கண்டுபிடிக்கமுடியாத ரயிலை ஒரு சாதாரண மனிதனாகிய ஜேம்ஸ்வாட் தான் கண்டு பிடிக்க முடிகிறது. என்ன பொருள் இதற்கு? அவதார புருஷனாக இருப்பதைவிட சாதாரண மனிதனாக இருப்பது மேல் என்பது தானே?

29.அவர் சங்கரர்; இவர் ஜீயர்; இது தம்பிரான்; அது சாமியார் என்று யார் யாரையோ பூஜித்து அலுத்தீர்- பழைய வழியிலே நடந்ததால். இனி உழைப்பாளி விஞ்ஞானி. பொதுநல ஊழியன் என்பவரை ஆதரிக்கும் புதிய வழியில் நடவுங்கள்; உலகு சீர்திருந்தும்.

30.இந்தியாவில் அறிவு சூன்யமே. ஞானம் இருப்பதை இல்லை என்று கூறுவதே வேதாந்தம். இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கம். பொய்யும் புரட்டுமே சாஸ்திரம்.

31.தீண்டாமையைக் கையாள்வது நியாயமல்ல என்றுதான் தெரிகிறது. ஆனால் ..... என்று பலர் இழுத்தாற்போல் பேசுகின்றனர்.ஆனால் என்று அநேக காலமாகக் கூறியாகிவிட்டது. இனி நாம் ஆனால் என்பதை மறந்து ஆகையால் தீண்டாமை கூடாது என்று கூறியாக வேண்டும்.

32.அபின் விற்று வாழ்பவன். போதை கூடாது என்று சொற்பொழிவு ஆற்றுவானா? புராணப் பொய்யையே நம்பி வாழும் ஆரியர். மூடநம்பிக்கைக் கூடாது என்று போர்ப்பரணி பாடுவாரா? பாடத்தான் மாட்டார்கள்! எப்படிப் பாடுவார்கள்?

33.காரைக்காலம்மையை, கண்ணப்பரை, குகனை அவனுடைய ஓடத்தில் ஏறிச் சென்ற இராமனை, அனுமனை-அவன் வாலின் பெருமையை ஆகிய இவைகளையே நாம் இன்னமும் பேசிக் கொண்டிருந்தால், எப்படித் தோன்றுவார் ஒரு கலிலியோ இங்கு?

34.புஞ்சையிலே நஞ்சைப் பயிர் பலிக்காது. குளிர்ப்பிரதேச விளைவு, கொதிப்புள்ள இடத்திலே பயிராகாது. அவை போலத்தான் புராண ஏடுகளை மட்டும் படித்துப் பயிலுவோரிடம் அறிவுத் தெளிவு ஏற்படமுடியாது.

35.குடி கெடுப்பவன் - கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபமடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். விபசாரி அபிஷேகம் நடத்துவிக்கிறாள். இவ்வளவையும் தடையின்றி ஏற்றுக் கொள்கிறார் ஆண்டவன். ஏற்றுக் கொள்ளலாமா?

36.வியாசர் கூப்பிட்டபோது உலகம் வரவில்லை. நாம் கூப்பிட்டால் ரேடியோ மூலம் உலகமே நம் முன் வந்து நிற்கிறது. எதனால் ஏற்பட்டது இந்தத் திறமை நமக்கு? பக்தியாலா? இல்லை! பகுத்தறிவால்.

37.வாழ்வாவது மாயமாம்! இது மண்ணாவது திண்ணமாம்! இப்படியானால் மண்ணாகக்கூடிய இந்த வாழ்விலே வெள்ளி வாகனங்களேன்! வைரக் கிரீடங்களேன்! மாணிக்க மூக்குத்திகளேன்? பரமன் ஆலயங்களிலே இவையெல்லாம் அமைக்கப்பட்டிருப்பதேன்? திராவிடர் என்ற சொல் கற்பனையுமல்ல. கனவுலகக் கண்டுபிடிப்புமல்ல. காவியத்தில் உள்ள சொல். வரலாற்றில் வருகிற பெயர். ஒரு சிறந்த இனத்தவரின் அரிய திருநாமம். அந்தப் பெயரைத்தான் கூறுகிறோம் நாம். இந்தியன் என்பது போன்ற அரசியல் சூதாட்டப் பெயரையல்ல.

38.சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.

39.மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.

40.ஆழ்வாராதிகள், நாயன்மார்கள் கதைகளைப் புராணிகர்கள் படிக்கட்டும். வீர வாலிபர்களே! நீங்கள் உலக அறிவாளிகள், உத்தம விஞ்ஞானிகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள்.

41.ஆத்ம சக்தியிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட காந்தியாருக்குக்கூட நோய் கண்டபோது, ஆத்மசக்தி அல்ல; ஆறு டாக்டர்கள்தான் அவசியமாகத் தேவைப்பட்டனர் ஏன்? அதைத்தான் கொஞ்சம் உங்களைச் சிந்திக்கச் சொல்லுகிறேன்.

42.ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

43.ரேடியோவும் டெலிபோனும் ஒலிபெருக்கியும் மின்சாரமும் ஞானப்பால் உண்டதால் வந்த வல்லமைகள் அல்ல. அசரீரி அடி எடுத்துக்கொடுத்ததால் உண்டான அற்புதங்களுமல்ல. தன்னலமற்ற அறிவாளிகளின் உழைப்பால் விளைந்த உன்னதப் பொருள்கள் அவை.


---------நன்றி: "உண்மை" 1-15-செப்டம்பர் 2008

0 comments: