Search This Blog

29.9.08

பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன?







பாரதியார் ‘சுதேசமித்திரன்’ இதழில் மொழி பெயர்ப்பாளராகச் சேர்ந்தபின், அவ்விதழின் ஆசிரியர் ஜி.சுப்புரமணிய அய்யரின் தொடர்பால் அவருக்கு விடுதலையுணர்வு ஏற்பட்டது. இதன் பின்னர் 1905 இல் காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு பாரதி சென்று வந்தார். வரும் வழியில் கல்கத்தாவில் விவேகானந்தரின் உதவியாளர் நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரிடம் உபதேசம் பெற்றார்.

நிவேதிதா தேவியின் அருளுரையும், வங்கப்பிரிவினையால் ஏற்பட்ட எழுச்சியும் பாரதியை ஒரு தீவிரமாதியாக மாற்றின. ‘சுதேசமித்திரன்’ மிதவாதப் போக்குடையது. பாரதியோ தீவிரவாதியாக மாறிவிட்டார். பாரதிக்கும், சுதேசமித்திரனுக்கும் கருத்து வேறுபாடு தோன்றவே, பாரதி அதிலிருந்து விலகி மண்டயம் சீனிவாசன் குடும்பத்தார் தொடங்கிய ‘இந்தியா’ வார ஏட்டின் ஆசிரியர் குழுவில் 1906 இல் சேர்ந்தார்.

1906 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் பாரதியார் பால பாரதச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இச்சங்கத்தின் சார்பில் அறைக்கூட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. இச்சங்கத்தின் சார்பில் பாரதி விஜயவாடாவிற்குச் சென்று விபின் சந்திரபாலரைச் சந்தித்தார். அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து 1907 மே மாதத்தில் திருவல்லிக்கேணி கடற்கரையில் பேச வைத்தார். (1)

1907 செப்டம்பரில் விபின் சந்திரபாலா கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து, இச்சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பாரதி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இச்சங்கத்தின் சார்பிலேயே 1907 சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சூரத் மாநாட்டில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் குறைந்தபட்சம் 100 பிரதிநிதிகளையாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று வ.உ.சி.யுடன் கலந்து பேசி முடிவு செய்தார். சூரத் மாநாட்டுப் பிரதிநிதிகளின் பயணச் செலவின் ஒரு பாதியை வ.உ.சி.யும், இன்னொரு பாதியை மண்டயம் சீனுவாசனும் ஏற்கும்படிச் செய்தார் பாரதி. (2)

1907 இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கூட்டத்தில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் கடுமையான மோதல் நடந்தது. மிதவாதிகள் சிலர் நாற்காலிகளைத் தூக்கி மேடையில் நின்ற திலகரை அடித்தனர். அவரைச் சென்னையிலிருந்து சென்ற தொண்டர்கள் கவசம் போல் சுற்றி நின்று தடுத்தனர். மிதவாதிகளால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்த அடியாட்கள் திடீரென்று பெரிய கம்பிகளுடன் மேடைக்கு வந்து சென்னைத் தொண்டர்களை நையப் புடைத்தனர். இதனால் ஆத்திரமுற்ற தீவிரவாதிகள் கால் செருப்பைக் கழற்றி மேடையில் நின்ற மிதவாதத் தலைவர்களை அடித்தனர். இதனால் மிதவாதத் தலைவர்கள் காவல்துறையை வரவழைத்தனர். மாநாட்டைக் கலைத்து விட்டதாகவும் அறிவித்தனர்.(3) காங்கிரசுக் கட்சியில் உட்கட்சிப் பூசல் என்பது இவ்வாறு 1907லேயே ஏற்பட்டது.

1907 சூரத் கூட்டம் காங்கிரஸ் சண்டையில் முடிந்து விடவே, தீவிரவாதிகள் மறுநாள் தனியாகக் கூடி தனிக் கட்சியாகச் செயல்பட முடிவு செய்தனர். சென்னை மாகாண புதிய கட்சியின் செயலராக வ.உ.சி. சூரத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார். வ.உ.சி.யின் முயற்சியால் சென்னை திருவல்லிக்கேணி கங்கை கொண்டான் மண்டபத்தில் ‘சென்னை ஜன சங்கம்’ என்ற அமைப்பு 11.1.1908 இல் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் நோக்கங்களாவன:

சுதேசியம், அன்னியப் பொருள் மறுப்பு குறித்துப் பிரச்சாரம் செய்தல், உடற்பயிற்சிக் கழகங்கள் நடத்துதல், சுதேசியப் பிரச்சாரத்துக்கு இளைஞர்களைத் தயார் செய்தல் முதலியன ஆகும். இச்சங்கம் ஏற்பட்ட பிறகு தான் சென்னை நகரில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் அதிகமாயின. இதனால் அரசின் பார்வை இவர்கள் மேல் விழுந்தது. (4) வ.உ.சி அவர்களின் முயற்சியால் 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட்’ என்னும் பெயரில் புதிய கம்பெனி அமைக்கப்பட்டது. கம்பெனியின் மூலதனம் ரூ.10,00,000. இதில் பங்கு ஒன்றுக்கு ரூ.25 வீதம் 40,000 பங்குகளைச் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. (5)

ஏட்டளவில் அமைந்த இத்திட்டத்தைச் செயலளவில் நிறைவேற்ற வேண்டி மூலதனத்தைத் திரட்ட பெரும்பாடுபட்டவர் வ.உ.சி. அவர்கள். வட இந்தியா நோக்கிச் சென்றபோது “மீண்டும் தமிழகம் திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன். இல்லாவிட்டால் அங்கேயே கடலில் வீழ்ந்து மாய்வேன்” என்று வீரசபதம் செய்து புறப்பட்டார். வ.உ.சி. அவர்கள் பம்பாய் சென்றபோது, அவருடைய மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இருந்தார். மனைவியோ நிறைமாத கர்ப்பவதி. இந்தச் சூழலில் வ.உ.சி. ஊர் திரும்ப வேண்டும் என உறவினர்கள் வேண்டினர். வ.உ.சியோ ‘என் மக்களை இறைவன் பார்த்துக் கொள்வான்’ என்று கூறிவிட்டார். (6)

வ.உ.சி.யின் கடும் முயற்சியின் விளைவாக ‘எஸ்.எஸ்.காலியோ, எஸ்.எஸ்.லாவோ’ என்னும் பெயர்கள் கொண்ட இரு ஸ்டீமர்கள் வெவ்வேறு தேதிகளில் 1907 மே மாதத்தில் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன. வ.உ.சி.க்கு இருந்த தனிப்பெருஞ்செல்வாக்கு காரணமாக தூத்துக்குடி-கொழும்புவிற்கு இடையே சுதேசிக் கப்பல் போக்குவரத்து வெற்றிகரமாக நடந்தது. (7) இதனால் ஆங்கிலேயர்களின் கப்பல் கம்பெனிக்கு இழப்பு ஏற்படவே அவர்களுக்கு வ.உ.சி.யின் மீது ஆத்திரம் அதிகமாயிற்று. வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பாரதி இம்மூவரும் 1906 முதல் தமிழகத்தில் சுதேசி உணர்வை தீவிரமாக வளர்த்தனர். இருந்த போதிலும் வ.உ.சி. மீதுதான் ஆங்கிலேயருக்குக் கோபம் அதிகம்.

1907 செப்டம்பரில் விபின் சந்திரபாலர் கைது செய்யப்பட்டதை முன்னரே குறிப்பிட்டோம். அவருக்கு 6 மாதம் வெறும் காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. விபின் சந்திரபாலரைக் கைது செய்ததைக் கண்டித்து 17.9.1907 இல் ஒரு கண்டனக் கூட்டமும், 28.9.1907 இல் பாரதி தலைமையில் கண்டன ஊர்வலமும் நடைபெற்றன. (8)

விபின் சந்திரபாலர் விடுதலை செய்யப்பட்டபோது, அதைக் கொண்டாட 9.3.1908 இல் காவல்துறையின் இசைவுடன் சென்னையில் ஊர்வலமும் கூட்டமும் நடத்தப்பட்டன. இக்கூட்டத்தில் முடிவில் பாரதி கூறியதாவது: “நம் இயற்கை உரிமையில் குறுக்கிடாத சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுவோம். ஆனால் சட்டங்கள் நம் இயற்கை உரிமையில் குறுக்கிடுமேயானால் சட்டங்களை மீறுவோமாக” (9) என்று முழங்கினார்.

வ.உ.சி.யும் விபின் சந்திரபாலர் விடுதலை நாளைத் தூத்துக்குடியில் கொண்டாட ஏற்பாடு செய்தார். இதைத் தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியன் வின்சிச் 8.3.1908 முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரை 11.3.1908 அன்று கைது செய்தான். அதனால் திருநெல்வேலியில் மக்கள் கொதித்தெழுந்தனர்.

பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனைகள் (40 ஆண்டுகள் ) விதித்தான். சுப்பிரமணிய சிவாவிற்கு 10 ஆண்டுகள் தண்டனை கொடுத்தான். உயர்நீதிமன்றம் வ.உ.சி.யின் தண்டனைக் காலத்தை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. மேல் முறையீட்டின் பேரில் 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அவர் பெற்றது கடுமையான கடுங்காவல் தண்டனை ஆகும். முதலில் சணல் உரிக்கும் எந்திரம் சுற்றும் வேலையில் விடப்பட்டார், வ.உ.சி.யின் கைகளில் தோல் உரிந்து புண்ணாகி விட்டன. பின்பு கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் என் செக்கை இழுக்கச் செய்தனர். சிறிது காலம் கல் உடைக்கச் செய்தனர். வ.உ.சி.யின் சிறைக்கொடுமைகள் சொல்லி மாளாதவை. (10)

‘இந்தியா’ இதழில் 1908 பிப்ரவரி முதற்கொண்டு வெளியிடப்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கருத்துப் படங்கள் ஆகியவை குறித்து தலைமைச் செயலருக்கு சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் ஒரு கடிதம் எழுதினார். ஆளுநர் மன்ற உறுப்பினர்களில் பலர், இந்தியா பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரினர். இதன்படி இந்தியா ஏட்டின் மீது நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. (11)

‘இந்தியா’ இதழின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டுடன் ஒரு போலீஸ்காரன் இந்தியா அலுவலகத்திற்கு வந்து, அப்போதுதான் வெளியேறிக் கொண்டிருந்த பாரதியிடம் வாரண்ட் ஒன்றை நீட்டினான். அதைப் படித்த பாரதி, “இது, ஆசிரியருக்கா? ஆசிரியர் நானல்ல” என்று கூறிவிட்டு வெளியேறினார். (12)

பாரதிக்குச் சிறை செல்ல விருப்பம் இல்லை. எனவே வீட்டுக்குக் கூடச் செல்லாமல், தன் மனைவியிடம் கூடக் கூறாமல், அன்று இரவே இரகசியமாக யாருக்கும் தெரியாமல் தப்பி புதுச்சேரிக்குச் சென்று விட்டார். அவர் சிறைக்குப் பயந்து தான் சென்றார் என்பதை இந்தியா இதழின் உரிமையாளர் மண்டயம் சீனிவாசன் கூறியுள்ளார்.

“சிதம்பரம் பிள்ளையின் சிறைவாசத்தைக் கண்ட பிறகு பாரதியார் தாம் எக்காரணத்தாலும் அப்படிச் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. ‘உருநிலை தவறி வெறிகொண்டு நம்மைத் துன்புறுத்தப் புகும் ஸர்க்கார் கையிலிருந்து நமக்குத் தப்ப வழியிருக்கும் போது நாம் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? துஷ்டனைக் கண்டால் தூர விலக வழியிருக்கும்போது, தூர விலகிப் போவோம்’ என்று சொல்லி அவர் புதுச்சேரி செல்லத் தயாரானார். புதுவையில் என் நண்பரான சிட்டி குப்புசாமி அய்யங்காருக்கு ஒரு கடிதம் எழுதி அவரிடம் கொடுத்து அவரைப் புறப்படச் செய்தேன்.” (13)

பாரதியார் எப்படிப் புதுச்சேரி சென்றார் என்பதைப் பற்றி பாரதியின் நண்பர் நீலகண்ட பிரமச்சாரி கூறியுள்ளதாவது: “வழக்கமான தனது கிராப்புத் தலையை வைதீகக் குடுமித் தலையாக மாற்றிக் கொண்டு, எழும்பூரில் ரயிலேறினால் தெரிந்து விடுமென்று, சைதாப்பேட்டையில் ரயிலேறிப் புதுவை போய்ச் சேர்ந்தார். அவரது குடும்பம் சென்னையிலேயே இருந்தது.” (14)

பாரதியார் புதுவை சென்றபோது இரயிலில் அவர் மனம் என்ன பாடுபட்டது என்பதைப் பாரதியின் மனைவி செல்லம்மாள் கூறுகிறார். “பாரதியாருக்கு மனதில் ஏதேனும் ஒன்று தோன்ற ஆரம்பித்து விட்டால், அது கொஞ்ச நேரத்தில் போகாது. இரயில் ஏறிய பிறகும் போலீசாரிடம் அகப்படாமல் புதுவை போய்ச் சேர வேண்டுமே என்று கவலைப்பட்டாராம். இரயிலில் யார் வந்து ஏறினாலும், டிக்கெட் பரிசோதகர் வந்தாலும், ஸ்டேஷன் மாஸ்டர் வந்தாலும், போலீசாரால் அனுப்பப்பட்டுத் தம்மைக் கவனிக்க வந்த நபர்களாகவே தோன்றுமாம். பின்பு அச்சமுற்றோன் அழிவான் என்ற மொழிகளை ஞாபகப்படுத்தி மனத்தைத் தேற்றிக் கொள்வாராம்.” (15)

மேலும் செல்லம்மா அவர்கள் கூறியதாவது: “பாரதியாருடன் புதுவை சென்ற நண்பர் அவரை புதுவையில் விட்டு விட்டு, கூடலூர் சென்று என் தமையனிடம் இந்த விஷயத்தைக் கூறினார். அதை என் தமையனார் கேட்டு, பாரதியாரைப் போய்ப் பார்த்து, அவருக்குத் தேவையான துணிமணி முதலியவற்றை வாங்கிக் கொடுத்து விட்டு சென்னைக்கு வந்து என்னை அழைத்துப் போய் எங்கள் ஊராகிய கடயத்தில் கொண்டு விட்டார்.” (16)

‘இந்தியா’ இதழின் பதிவு பெற்ற ஆசிரியர் முரப்பாக்கம் சீனிவாசன் என்பவர் 21.8.1908 இல் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உண்மையில் எதையும் எழுதத் தெரியாது. பெயருக்குத்தான் அவர் ஆசிரியர். எனவே 12.9.1908 இல் இந்தியா ஏட்டின் உண்மையான உரிமையாளர் எஸ்.என்.திருமலாச்சாரியும், உண்மையான ஆசிரியரான சி.சுப்பிரமணிய பாரதியும் விசாரணைக்குப் பயந்து புதுச்சேரிக்கு ஓடினர் எனக் காவல்துறை குறிப்பு எழுதி உள்ளனர். (17)

பாரதியார் புதுவை சென்ற சில நாட்கள் கழித்து எஸ்.என்.திருமலாச்சாரியும் அங்கு சென்றார். மீண்டும் புதுவையில் இந்தியா இதழை அச்சடிக்கத் தொடங்கினர். தமிழக அரசினர் 1910 இல் ‘இந்தியா இதழை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் செய்யவே, அது நின்று போயிற்று. இந்தக் காலகட்டத்தில் 1910 ஏப்ரல் 4 ஆம் தேதி அரவிந்தர் புகலிடம் தேடிப் புதுவை வந்து சேர்ந்தார். அதே ஆண்டு அக்டோபரில் வ.வே.சு. அய்யரும் புதுவை வந்து சேர்ந்தார். இவர்களை பாரதி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தித்து உரையாடி வந்தார். இவர்கள் வேதம், உபநிடதம் இவற்றின் பொருட்களைப் புரிந்து கொள்வது குறித்து விவாதம் செய்து வந்ததாக செல்லம்மாள் கூறுகிறார். (18)

புதுவையில் இவர்கள் மீது போலீஸ் கண்காணிப்பு இருந்து வந்தது. 1911ல் வாஞ்சிநாதன் புதுவை சென்றார். ஆஷ்துரையைக் கொல்வதற்கு வ.வே.சு. அய்யர் வாஞ்சிநாதனுக்கு அங்கு ஒரு மாதம் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார். தினந்தோறும் விடியற்காலை 4 மணிக்குக் கரடிக்குப்பம் ஓடையில் நேராக குறிபார்த்துச் சுடுவதற்கு வ.வே.சு.அய்யர் வாஞ்சிக்குப் பயிற்சி கொடுத்துள்ளார். (19)

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொலை செய்ய முயன்றது பாரதிக்குத் தெரியும் என்பதைப் பலர் கூறியுள்ளனர். “புதுச்சேரி கிருஷ்ணப்பிள்ளை தோட்டம். நாற்பது பாரத மாதா சங்க வீரர்கள் ஒரு மரத்தடியிலே கூடியிருக்கின்றனர். 14.6.1911 அன்று காளி பூஜை நடக்கிறது. பாரதியின் காளிப்பாட்டு முழங்குகிறது. உள்ளே ஒற்றர் புகாமல் மாடசாமி தோட்டத்தைக் காத்து நிற்கிறான். பாரதியார் ஆவேசத்துடன் பாடுகிறார்...” என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளதை பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் சுட்டிக் காட்டியுள்ளார். (20)

வாஞ்சிநாதன் ஆஷைக் கொலை செய்வது என்று துணிந்து விட்டதை நீலகண்டர் ஏற்கவில்லை. “இதனால் புதுவையில் நீலகண்டருக்கும் வாஞ்சிக்கும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கவி பாரதியாரும் வாஞ்சியின் பக்கம் தான் ஆதரவைத் தெரிவித்தார்” என்று நீலகண்டரின் தம்பி லட்சுமி நாராயண சாஸ்திரி கூறியுள்ளார். (21)

7.6.1911 அன்று ஆஷ் துரையைக் கொலை செய்து விட்டுத் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் பாரதியின் மறவன் பாட்டும், ஒரு கடிதமும் இருந்தன. எனவே இக்கொலைக்கு பாரதியாரும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது. (22) பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1000 பரிசு என அரசு அறிவித்தது.

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் ஏன் சுட்டுக் கொன்றான் என்பதை அவன் சட்டைப் பையில் இருந்த கடிதம் மூலம் அறிய முடிகிறது. அக்கடிதத்தில் பின் வருமாறு கூறப்பட்டிருந்தது:

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு

R. வாஞ்சி அய்யர்”


என்ற கடிதம் அவனது சட்டைப்பையில் இருந்தது. (23)

ஆஷ் துரையைக் கொன்றதனால் வாஞ்சிநாதனைப் பெரிய தியாகி என்று பலர் கூறுகின்றனர். விடுதலைப் போராட்ட வீரன் வாஞ்சி என்றும் கூறுகின்றனர். ஆனால் வாஞ்சி எழுதியுள்ள கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இந்து தர்மம் ஆங்கிலேயர்களால் அழிகிறதே என்ற எண்ணத்தினால் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறதே தவிர உண்மையான தேச விடுதலையின் பொருட்டன்று என்பதேயாகும்.

ஆஷ் கொலைக்கும் பாரதிக்கும் தொடர்பு உள்ளது என்பதை முன்பு சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால் பாரதியார் தண்டனைக்குப் பயந்து, தனக்கும் அக்கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என 8.4.1914 இல் இங்கிலாந்தின் தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மெக்டனால்டுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“ஆஷ் வழக்கு விசாரணையில் வெளியான மற்றொரு விஷயம், கொலைக்குப் பல மாதங்களுக்கு முன்பு அவர் புதுச்சேரி வந்தார் என்பதாகும், ஆனால் அவரைப் புதுவையில் பார்த்ததாகச் சாட்சியம் அளித்த தபால் ஆபீஸ் குமாஸ்தா கூட வாஞ்சி அய்யர் வீட்டுக்கு வந்தார் என்றோ... என்னைச் சந்தித்து என்னுடன் காணப்பட்டார் என்றோ சொல்லத் துணியவில்லை.” (24)

இக்கடிதத்தில் மேலும் பாரதி எழுதியிருப்பது என்னவென்றால், 1912இலேயே தன் நிலையை விளக்கி சென்னை கவர்னராக இருந்த லார்டு கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். (25)

சென்னை கவர்னராக லார்டு பெண்ட்லாண்டு வந்ததும் பாரதி தன் நிலையை விளக்கி அவருக்கும் ஒரு நீண்ட கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். (26)

“நான் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி மூன்று வருஷங்களுக்குப் பிறகு, தொலைதூரத்திலுள்ள ஒரு மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் யாரோ ஒருவர், கொடுங்கோன்மைக்குப் பெயர் வாங்கிவிட்ட ஒரு கலெக்டரைச் சுட்டுக் கொன்றாரென்பதால், போலீஸ் கீழ்மட்ட ஆட்களது யோசனையின் பேரில் பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை அந்தக் கொலைச் சதிக்கு உடந்தையாக்கி என் மீது வாரண்டு பிறப்பித்தது. ஆனால் மேன்மை தாங்கிய கவர்னரின் விருப்பம் கூட அவருடைய பிற்போக்கான சகாக்களால் தடுக்கப்படுகிறதென நான் கருத வேண்டியிருக்கிறது. ஆகையால் பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவராகிய உங்களுக்கு நான் இந்த வேண்டுகோளை அனுப்புகிறேன்... எனக்கு லார்டு பெண்ட்லாண்ட் நீதி வழங்க நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்.” (27)

பாரதியின் இக்கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்ன? பாரதி ஆங்கிலேயரின் தயவின் மூலம் வழக்கு எதுவும் இல்லாமல் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். இப்போது அவரிடமிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பதே போய் விட்டது. மேலே கண்ட கடிதத்தை எழுதிய அதே 1914 ஆம் ஆண்டில்தான், பாரதி அச்சமில்லை என்ற பாடலை இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதினும்
... ... ... ...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! (28)

பாரதி ஆங்கிலேய ஆட்சியின் தயவை நாடி 1912, 1913, 1914 என்று தொடர்ந்து அவர்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தபோதுதான் இப்பாடலை அவர் இயற்றியுள்ளார். பெரும்பாலான தமிழறிஞர்களும், பாரதி ஆய்வாளர்களும் இப்பாடலை மேற்கோள் காட்டி பாரதியின் வீரத்தைப் புகழ்கின்றனர். ஆனால் உண்மையில் பாரதி வீரமுடன் வாழ்ந்தாரா என்றால் இல்லை என்பதுதான் இதன் மூலம் நமக்கு விடையாகக் கிடைக்கிறது.

1916 மே 25ல் சுதேசமித்திரனில் ‘சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கருத்து வருமாறு:

“பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த ஷணமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” (29) என்ற முடிவுக்கு வந்து விட்டார். பாரதிக்கு ஆங்கிலேயரைத் துரத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மாறிவிட்டது. 1916ல் ஆங்கிலேயர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே அவர் கருத்து கொண்டிருக்கிறார். 1916 டிசம்பர் 26ம் தேதி சுதேசிமித்திரன் ஏட்டில் அவர் எழுதுகிறார்:

“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங்களுக்கும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம்.” (30)

பாரதிக்குப் புதுவை வாழ்க்கை கசந்தது. முதல் உலகப் போரின் முடிவினால் பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் எனக்கருதி பாரதி தமிழகம் வர சென்னை அரசுக்கு எழுதி, கேட்டுக் கொண்டு, 20.11.1918 அதிகாலை தன் மனைவி, மைத்துனர் ஆகியோருடன் புதுவை எல்லையைக் கடந்து விடுகிறார். சென்னை மாகாணப் போலீஸ் திருப்பாதிரிப்புலியூரில் பாரதியை மட்டும் கைது செய்து, கடலூர் துணை நீதிபதி முன் கொணர்ந்தனர். 1914 ஆம் ஆண்டு இந்திய நுழைவுத் தடைச்சட்டத்தின் கீழ் பாரதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. (31) கடலூர் வழக்கறிஞர்கள் சடகோபாச்சாரியும், நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் விடுவிக்க முயன்று தோற்றனர்.

பாரதிக்குக் கடலூர் சப்-ஜெயில் வசதியற்றது என்று பாரதி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கேப்பர் குவாரியிலுள்ள கடலூர் ஜில்லா மத்திய சிறைக்கு மாற்றினார்கள். (32)

பின்னர் பாரதி கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:

Om Sakthi

District Jail, Cuddalore,
28 November-1918

To,
His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George, Madras.

The Humble petition of C.Subramania Bharathi,

May it please your excellency,

It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurance on my part as your excellency may well remember, the Dy.I.G (C.I.D) was sent by your Excellency’s Government a few months back, to interview me at Pondicheery. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.

Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.

I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding. I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.

I beg to remain Your Excellency’s most obedient Servant

C.Subramaia Bharathi.
(G.O.No.1331 dt.18.12.1918 Public) (32)

இக்கடிதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி புதுவையில் இருந்தபோதே சென்னை கவர்னருக்கு கடிதம் எழுதி, சென்னை அரசு டி.ஐ.ஜி.யைப் புதுவைக்கு அனுப்பி பாரதியை விசாரித்து, அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இல்லை என்று தெரிந்து அரசுக்குத் தெரிவித்த பிறகுதான் பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் பாரதி வந்ததாகக் கூறுகிறார் என்பதே. அரசியலை விட்டு அறவே ஒதுங்கி சட்டத்துக்குட்பட்டு அமைதியான பிரிட்டிஷ் குடிமகனாக வாழ ஒப்புக்கொள்கிறார். ஆங்கில ஆளுநர் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறார். (33)

கடலூர் சிறைக்கு ரங்கசாமி அய்யங்கார் வந்து பாரதியைக் கண்டார். பின் ரங்கசாமியின் முன் முயற்சியால் அன்னிபெசண்டு, சி.பி. இராமசாமி அய்யர், நீதிபதி மணி அய்யர் ஆகியோர் பாரதியின் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்து வேண்டினர். (34) மாநில அரசு மீண்டும் டி.ஐ.ஜி.யை அனுப்பியது. கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில் பாரதி விடுதலை செய்யப்பட்டார். அவை:

1. நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில் எதிலாவது ஒன்றில் மட்டுமே வாழ்க்கை நடத்த வேண்டும்.

2. பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன்கூட்டியே குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அவற்றைத் தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டும்.

3. அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பாரதி நீங்கி விட வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளையும் எழுத்துப்பூர்வமாகப் பாரதி ஒப்புக்கொண்ட பின்னர் மாவட்ட நீதிபதி 14.12.1918 இல் பாரதியை விடுதலை செய்தார். (35) ஆகவே, பாரதி சிறையில் இருந்த மொத்த நாட்கள் 20.11.1918 முதல் 14.12.1918 வரையுள்ள 25 நாட்களேயாகும். அதற்குள் அன்றைய பார்ப்பன உலகமே அதிர்ந்து போய் அவருடைய விடுதலைக்குப் பாடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே கண்ட நிபந்தனைகளைப் பாரதி ஏற்றுக் கொண்டு நேராகக் கடயம் சென்று விட்டார். அங்கே சமயத் தொடர்பாகப் பேசியும், எழுதியும் வந்தார். அரசியல் வாடை என்பதே அவரிடம் துளியும் இல்லை.

மேலே கண்ட நிபந்தனைகளைத் தாம் ஏற்றுக் கொண்டுள்ளதைப் பற்றிப் பரலி சு.நெல்லையப்பருக்குப் பாரதி எழுதியுள்ள கடிதத்திலும் குறித்துள்ளார். 21 டிசம்பர் 1918 இல் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

“ஸ்ரீமான் நெல்லையப்ப பிள்ளைக்கு, நமஸ்காரம்.
நான் ஸௌக்யமாகக் கடயத்துக்கு வந்து சேர்ந்தேன்...

‘பாஞ்சாலி சபதம்’ இரண்டு பாகங்களையும் ஒன்றாகச் சேர்த்து அச்சடிப்பதற்குரிய ஏற்பாடு எதுவரை நடந்திருக்கிறதென்ற விஷயம் தெரியவில்லை. இனிமேல் சிறிது காலம் வரை நான் ப்ரசுரம் செய்யும் புஸ்தகங்களை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி அவருடைய அனுமதி பெற்றுக் கொண்ட பிறகே ப்ரசுரம் செய்வதாக ராஜாங்கத்தாருக்கு நான் ஒப்பந்தமெழுதிக் கொடுத்திருக்கிறேன்...

அப்படியே காண்பித்தாலும் தவறில்லை; நமது நூல் மாசற்றது. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஹானிங்டன் எனக்கு மிகவும் அன்புள்ள ஸ்நேகிதர். தங்கமான மனுஷன். ஆதலால் அநாவசியமான ஆஷேபங் கற்பித்து நமது கார்யத்தைத் தடை செய்பவரல்லர். நீயே மேற்படி நூலை அவரிடங் காட்டி அனுமதி பெற்றுக் கொள்ளுக...”

உனதன்புள்ள

சி.சுப்பிரமணிய பாரதி. (36)


பாரதி, காந்தியைச் சந்தித்தாரா?

முதலில், இது குறித்து வ.ரா. கூறுவதைப் பார்ப்போம்.

“1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜி கத்தீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் குடியிருந்தார். காந்தி வழக்கம்போல் திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தார். ஒரு பக்கத்துச் சுவரில் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்து நின்று கொண்டிருந்தனர். அந்தச் சுவருக்கு எதிர் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார்கள். நான் வாயில் காப்போன் யாரையும் உள்ளே விடக்கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு.

அந்தச் சமயத்தில் பாரதியார் மடமடவென வந்தார். “என்ன ஓய்” என்று சொல்லிக்கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து விட்டார். உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

பாரதியார் : மிஸ்டர் காந்தி, இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப்போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி : மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ : இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நாம் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி : அப்படியானால் இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?

பாரதி : முடியாது, நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி. தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் போய்விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன். பாரதியார் வெளியே போனதும், “இவர் யார்?” என்று காந்தி கேட்டார். ராஜாஜிதான் அவர் எங்கள் தமிழ்நாட்டுக்கவி என்று சொன்னார்.

அதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா? என்றார் காந்தி” என்று வ.ரா. கூறுகிறார். (37)

காந்தி சென்னைக்கு வந்தது 18.3.1919 இல். அன்று மாலையே கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் காந்தி பேசிய பின் மூன்று பேர் மூன்று மொழிகளில் சொற்பொழிவாற்றினார்கள். மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆங்கிலத்திலும், வ.உ.சி. தமிழிலும், ஹரி சர்வோத்தமராவ் தெலுங்கிலும் பேசினார்கள். (38)

20.3.1919 இல் காந்தியின் வருகைக்கு நன்றி தெரிவித்து கடற்கரையில் ஒரு பெரும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சரோஜினி நாயுடு, டி.வி.கோபாலசாமி முதலியார், எஸ்.சோமசுந்தர பாரதி (இவர் தமிழில் பேசினார்). சத்தியமூர்த்தி தீர்மானங் கொண்டு வந்தார். (39)

இந்தக் காலகட்டத்தில் பாரதியார் காவல்துறைக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி கடயத்தில் இருந்தார். 1919 மே மாதத்தில் தான் பாரதி அரசிடம் நிபந்தனை தளர்வு பெற்றதாக கோ.கேசவன் குறிப்பிட்டுள்ளார். (40) அப்படியிருக்கும்போது 1919 மார்ச்சில் காந்தி சென்னை வந்தபோது, பாரதி எப்படி சென்னைக்கு வந்திருக்க முடியும்? 1919 பிப்ரவரியில் பாரதி காந்தியைச் சென்னையில் சந்தித்தார் என்பது எப்படிச் சரியாகும்? பாரதி 1919 இல் சென்னை வந்தார் என்றால் எத்தனை நாள் இருந்தார்? எங்கே தங்கினார். என்பதற்கு அவருடைய வாழ்க்கை வரலாற்றில் எங்குமே சான்றுகள் கிடைக்கவில்லையே!

மேலும் காந்தி வந்திருந்தபோது ராஜாஜி, சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார் எல்லாரும் வீட்டில் இருந்தனர் என்றும் அதே நேரத்தில் அவர்கள் யாரையும் கேட்காமலேயே பாரதி நேரடியாக முன்பின் பார்த்திராத காந்தியிடம் தாம் பேசவிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்க அழைத்ததாகவும் வ.ரா.கூறுகிறார். அப்படியானால் சென்னையில் பாரதிக்குக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கொடுத்தது யார்? பாரதிக்கு அப்போது எந்த வகையான அரசியல் உணர்வு இருந்தது? சென்னையில் தனியாகக் கூட்டம் நடத்த அவருக்கு என்ன வாய்ப்பு இருந்தது?

காந்திக்கு ராஜாஜிதான் பாரதியை அறிமுகப்படுத்தினார் என வ.ரா.கூறுகிறார். ஆனால் காந்தியோ ராஜாஜியைப் பற்றிக் கூறும்போது, சென்னையில் அவரோடேயே நாங்கள் தங்கினோம். ஆனால் அவருடன் இரு தினங்கள் தங்கியிருந்ததற்குப் பின்னாலேயே இதை நான் கண்டுபிடித்தேன். ஏனெனில் நாங்கள் தங்கியிருந்தது ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காருக்கு சொந்தமான பங்களாவாகையால் அவருடைய விருந்தினராகவே நாங்கள் தங்கியிருக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால் மகாதேவ தேசாய் எனக்கு விஷயத்தைக் கூறினார். அவர் வெகு சீக்கிரத்தில் இராஜகோபாலாச்சாரியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டுவிட்டார். இராஜகோபாலாச்சாரியாரோ தமது சங்கோஜத் தன்மையினால் எப்பொழுதும் பின்னுக்கே இருந்து வந்தார். ஆனால் மகாதேவ தேசாய் இவருடன் நீங்கள் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒருநாள் சொன்னார் என்று காந்தி கூறுகிறார். (41)

இதிலிருந்து காந்தியும், இராஜாஜியும் அப்போதுதான் முதல் முறையாகச் சந்தித்தார்கள்; எனவே சரியான பேச்சுப் பழக்கம் இல்லை என்பது தெரிகிறது. அப்படி இருக்கும்போது ராஜாஜி எப்படி பாரதியை காந்திக்கு அறிமுகப்படுத்தியிருக்க முடியும்? பாரதி காந்தியைச் சந்தித்தார் என்றும் பாரதி ஒரு பெரிய மஹான் அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்தி கூறினார் என்றும் வ.ரா. கூறுவது பாரதிக்குப் புகழ் வரவேண்டும் என்பதற்காக ஜோடிக்கப்பட்ட ஒரு கற்பனையேயாகும் என்றால் அது மிகையாகாது.

உண்மையிலேயே பாரதியை காந்தி அப்படிப் போற்றியிருந்தால், பாரதியின் மறைவு 11.9.1921இல் நேர்ந்த சில நாள்கள் கழித்து 15.9.1921 இல் காந்தி சென்னைக்கு வந்து 10 நாள்களுக்கு மேல் தமிழகத்தில் தங்கிப் பல இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசியிருந்தும், பாரதியைப் பற்றி காந்தி எங்குமே குறிப்பிடவில்லை எனத் ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலாசிரியர் அ.இராமசாமி குறிப்பிடுகிறார். (42) உண்மையில் பாரதி மீது காந்தி உயர்ந்த மதிப்பு வைத்திருந்தால் அவரைப் பற்றிப் பேசியிருக்க மாட்டாரா?

திலகர் மறைந்த போது, 1.8.1920 இல் அங்கு சென்றார் காந்தி. திலகரின் பாடையைத் தூக்குவதற்குத் தோள்கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த பார்ப்பனர்கள், “நீ வைசியன், இந்தப் பாடையைத் தொடக்கூடாது” எனக்கூறி, அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். (43)

திலகரின் மறைவிற்குக் காங்கிரசில் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தனர். காந்தியும் நேருவும் நேரில் சென்றிருந்தனர். ஆனால் இதுபோன்ற எதுவுமே பாரதிக்குக் காந்தியால் நடைபெறவில்லையே!

27.8.1920 இல் திருநெல்வேலியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாகாண மாநாடு நடந்தது. அப்போது பாரதி கடையத்தில் தான் இருந்தார். திருநெல்வேலி அங்கிருந்து மிக அருகில் தான் உள்ளது. எனினும் அம்மாநாட்டிற்கு பாரதியார் செல்லவில்லையே ஏன்? (44)


பாரதி காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்டாரா?

பாரதி காந்தியைப் புகழ்ந்து பாடல் எழுதியுள்ளார் என்பது உண்மை. ஆனால் காந்தியின் ஒத்துழையாமைக் கொள்கையைப் பாரதி ஏற்றுக்கொள்ளவில்லை. 12.8.1920 இல் காந்தி சென்னையில் பேசும்போது, ஒத்துழையாமையை மிகத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். “பதினாறு வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் தாய்-தந்தை அனுமதியளிக்காவிட்டாலுங் கூடத் தங்கள் மனசாட்சி ஏற்றுக் கொள்வதானால் கல்லூரிகளையும், பள்ளிகளையும் புறக்கணிக்க வேண்டும்” (45) எனக் கூறினார்.

பாரதி இதை மறுத்து 30.12.1920 இல் சுதேசமித்திரன் ஏட்டில் எழுதியதாவது:

“இப்போது காண்பிக்கப்பட்டிருப்பதாகிய முதற்படியின் முறைகளால், அந்தப் பயன் எய்துவது சாத்தியமில்லை. தேசாபிமானிகள் மாத்திரமே சட்டசபை ஸ்தானங்களைப் பகிஷ்காரம் செய்ய, மற்ற வகுப்பினர் அந்த ஸ்தானங்களையெல்லாம் பிடித்துக் கொள்வார்கள். இந்தியாவில் ஆங்கில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்தல் அரிதென்று தோன்றுகிறது. இங்ஙனமே வக்கீல்கள் தம் உத்தியோகங்களையும், பிள்ளைகள் படிப்பையும் விடும்படிச் செய்தல் இப்போது நம்மால் முற்றிலும் ஸாதிக்க முடியாத விஷயமாகத் தோன்றுவதுடன் குறிப்பிட்ட பயனெய்தி விடுமென்று தீர்மானிக்கவும் இடமில்லை.” (46)

1921இல் பாரதி சென்னை மாகாணத்தில் அரசியல் வளர்ச்சி என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். அதில் புதுவையில் “நான் எவ்வளவோ தடுத்தும் கூட இந்தியா ஏட்டில் தீவிரமான கருத்துகள் வெளிவர அனுமதிக்கப்பட்டன” (47) என்று எழுதியுள்ளார்.

மேற்கண்ட சான்றுகளின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி 1906 முதல் 1908 வரை ஏகாதிபத்திய எதிர்ப்பில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்றும் 1908 இல் புகலிடம் தேடிப் புதுவைக்குச் சென்றவுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைய ஆரம்பித்து, பாரதியின் கடைசிக் காலத்தில் அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வே இல்லாமல் போயிற்று என்பதே உண்மையாகும்.

அடிக்குறிப்பு

1. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும். ப.76
2. மேற்படி நூல்.ப.77,78
3. வ.உ.சி.யும் பாரதியும் (தொ.ஆ) இரா.வெங்கடாசலபதி, மக்கள் வெளியீடு, சென்னை, ப.31,32
4. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும், ப.79
5. என்.சம்பத், பெ.சு.மணி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ப.98
6. மேற்படி நூல் ப.102
7. மேற்படி நூல் ப 105
8. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும். ப.77
9. மேற்படி நூல் ப.80
10. என்.சம்பத், பெ.சு.மணி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ப.173-183
11. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும். ப.108
12. பிரேமா நந்தகுமார், சுப்பிரமணிய பாரதி, ப.32
13. வ.உ.சி.யும் பாரதியும், ப.152
14. பாரதியைப் பற்றி நண்பர்கள் (தொ.ஆ) இரா.அ.பத்மநாபன், ப.58
15. பாரதியார் சரித்திரம், செல்லம்மா, ப.55
16. மேற்படி நூல், ப.57
17. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும் ப.209
18. பாரதியார் சரித்திரம், செல்லம்மா, ப.65
19. V.V.S.Iyer. R.A.Padmanaban, P.111
20. தொ.மு.சி.ரகுநாதன், பாரதி காலமும் கருத்தும், ப.410
21. மேற்படி நூல், ப.411
22. பாரதி புதையல் பெருந்திரட்டு (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், ப.22
23. ஆ.சிவசுப்பிரமணியன், ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும், மக்கள் வெளியீடு, ப.30
24. பாரதியின் கடிதங்கள் (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், ப.47
25. மேற்படி நூல் ப.51
26. மேற்படி நூல் ப.53
27. மேற்படி நூல் ப.55
28. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ.1994, ப.254
29. பாரதித் தமிழ் (தொ.ஆ) பெ.தூரன். ப.175
30. மேற்படி நூல் ப.223
31. கோ.கேசவன், பாரதியும் அரசியலும் ப.130
32. பாரதியின் கடிதங்கள், ப.57
33. ப.இறையரசன், இதழாளார் பாரதி, நி.செ.பு.அ. ப.396, 398
34. ரா.அ.பத்மநாபன், சித்திரபாரதி, ப.138
35. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.130,131
36. பெ.தூரன், பாரதித் தமிழ் (தொ.ஆ) ப.297, 298
37. வ.ரா, மகாகவி பாரதியார், பழனியப்பா பிரதர்ஸ், ப.163-165
38. அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.235-237
39. மேற்படி நூல் ப.239
40. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.214
41. அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.245
42. மேற்படி நூல், ப.319
43. தனஞ்செய்கீர் லோக்மான்ய திலகர், பாப்புலர் பிரகாசன், பம்பாய் (ஆங்கில நூல்) ப.442
44. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.214
45. அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.274
46. பெ.தூரன், பாரதித்தமிழ் (தொ.ஆ) ப.340
47. பாரதிப் புதையல் பெருந்திரட்டு ப.553

-------------------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் இரண்டாம் அத்தியாயம் பக்கம் -13-29

------------------நன்றி: "கீற்று" இணையதளம்

0 comments: