Search This Blog

16.9.08

கீழ்வெண்மணிச் சம்பவத்தின்போது அண்ணாவின் உள்ளம்




மனிதகுல வரலாற்றில் வீரத்தாலும், விவேகத்தாலும் இடம்பெறுபவர்களைக் காட்டிலும், இதயத்தால் சிந்தித்து, மூளையால் செயல்பட்ட மனிதநேயர்களே மக்களால் என்றென்றும் மதிக்கப்படக் கூடியவர்களாக நிலை பெற்றுள்ளார்கள்!

பிறர் நிலையில் தன்னை வைத்து பிறரது துன்பத்தை தனதாக்கி, அந்தப் பிறராகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒத்தது அறியும் தன்மைதான் ஆங்கிலச் சொல்லான Empathy என்பதாகும்.

ஒருவருக்காக இரங்குவது, வருத்தப்படுவது வேறு; அவராகவே மாறி அவர்படும் துன்பத்தை உணர்வது என்பது வேறு. அந்நிலைதான் மனிதர்களை உயர்த்தி, தரம் பிரித்துக் காட்டுவது.

அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி; எல்லா பகுத்தறிவாளர்களும், சுயமரியாதைக்காரர்களும் தலைசிறந்த மனிதநேயர்களாவார்கள்.

மனிதர்களை மதிக்கக் கற்றுக்கொண்டு அவர்களை சமமாகக் கருதி, அவர்களின் அறிவை, ஆற்றலை, உழைப்பை மனந்திறந்து பாராட்டுவது, உதவவேண்டிய நேரத்தில் அவர்களுக்கு ஓடோடி உதவுவதுதான் மனிதநேயம்!

இன்று நூற்றாண்டு விழா நாயகராகக் காட்சியளிக்கும் அறிஞர் அண்ணாவை அவரது பகுத்தறிவு, அரசியல் மற்றும் பல்வேறு அரிய சாதனைகளால் அளப்பதைவிட, அவருடைய மனிதநேயப் பண்பால் அளந்து பார்ப்பதே அவருக்கு அடுத்த தலைமுறை செய்யும் சரியான நீதியாக அமையும்.

1953 ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு ரொம்பத் துன்பம் ஏற்பட்டது.

நெய்த துணிகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்ததினால் நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியை நாடும் அவல நிலை; சிலர் பிச்சைக்காரர்களாகி விட்ட கொடுமை!

இதை எண்ணி கைத்தறி நெசவுத் துணிகளை, தானே தோளில் சுமந்து - காங்கிரசிலிருந்தபோது அவரது தலைவர் பெரியார் கதர்மூட்டையை தலையில் சுமந்து ஊர் ஊராகச் சென்றது போல, இவரும், இவரது கட்சியின் தம்பிமார்களும் நாடு பூராவும் விற்பனை செய்து, தி.மு.க.வினர் அனைவரும் குடும்பத்தினரும் கைத்தறித் துணிகளையே அணியவேண்டும் என்று ஒரு அன்பு ஆணை பிறப்பித்தார்! இன்னமும் கைத்தறி நெசவாளர்கள் நன்றியோடு அண்ணாவை அவரது ஏழைக் கிரங்கும் மனிதநேயத்தை நினைத்துப் பாராட்டுகின்றனர் - வாழ்த்துகின்றனர்!

1961 இல் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஒரு மாநாடு. அதற்குத் தலைமை தாங்கிய அண்ணா, தஞ்சை மாவட்டத்திலே பெரிய வெள்ளம் ஏற்பட்டு ஆறுகள் உடைந்து ஊரெல்லாம் பாழாகி மக்கள் தவிக்கின்றனர் என்ற செய்தி கேட்டுத் துடித்து, நேரே தஞ்சை மாவட்டத்திற்கு வந்து, சாலைப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்ட நிலையிலும் படகுகளில் ஏறி, நாகப்பட்டினம் வரை சென்று அந்தந்த ஊர் மக்களைப் பார்த்து ஆறுதல் கூறியது மறக்க முடியாத மற்றொரு மனிதநேய நிகழ்ச்சி!

சென்னையில் ஏழைகளுடைய குடிசைகளுக்குத் திட்டமிட்டு தீ வைத்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் கேட்டு துடித்து, சாப்பிடவே மனமின்றி இருப்பார் முதலமைச்சர் அண்ணா!

கீழ்வெண்மணிச் சம்பவத்தின்போது அவர் உள்ளம் பட்டபாடு ஊர் அறியும், உலகறியும்; தோழர் பி. இராமமூர்த்தி போன்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அறிவார்கள். பல் துலக்காமல் கூட பரிதாபத்தினால் கண்ணீர் விட்டவர், முதல்வர் ஆன பிறகும்கூட!


அண்ணா ரோமாபுரி வாட்டிகனுக்குச் சென்று போப் ஆண்டவரை சந்தித்தார்; கோவா நாட்டு விடுதலை வீரர் திரு. ரானடே என்பவர் நீண்ட காலமாகவே சிறை பிடிக்கப்பட்டு சிறையிலே வாடிக் கொண்டிருந்தவர். அவர் தமிழ்நாட்டுக்காரரோ, அண்ணாவுக்கு அறிமுகம் ஆனவரோ அல்ல. போர்ச்சுகீசிய அரசிடம், அந்த மதத்தைப் பின்பற்றுவோர் அரசாக அவ்வரசு இருந்ததால், போப் அவர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் ரானடேவை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்; அது பலித்தது! விடுதலை பெற்று நன்றி கூறினார் ரானடே -அண்ணாவுக்கு - அவர் மறைந்த நிலையில்!

குடந்தையிலே ஒரு நோயாளி. ஒரு அவசியமான உயிர் காக்கும் மருந்து அமெரிக்காவிலேதான் கிடைக்கும் என்பதால், அமெரிக்காவிற்குச் சிகிச்சைக்காகப் போன அண்ணாவுக்குக் கடிதம் எழுதினார். அதைப் படித்த அண்ணா, அந்த மருந்தை அங்கிருந்து வாங்கி அனுப்பி, நோய் தீர்த்தார்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை

என்ற குறளுக்கு ஒரு அருமையான சான்று அல்லவா அறிஞர் அண்ணாவின் மனிதநேயம்!

அண்ணா அமெரிக்காவில் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தபோது, இங்கே தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு சிறைக் கைதி, அப்புக்குட்டன் என்ற மரண தண்டனைக் கைதி - ஆயுள் தண்டனையாக மாற்றிடக் கேட்டு விண்ணப்பத்தை அனுப்பியதை ஏற்று, அதை ஆயுள் தண்டனையாக்கிய மனிதநேயர் அண்ணா அவர்கள்!

இப்படி அண்ணாவின் வாழ்வில் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.

தஞ்சையில் அண்ணாவின் 53 ஆவது பிறந்த நாளில், 53 பொருள்களை அளித்தார்கள் - நகர தி.மு.க. சார்பில்.

அப்பரிசுகளைப் பெற்றுக்கொண்டு அண்ணா அவர்கள், இந்தப் பரிசுகளை எனக்கு அளித்தது பெரிதல்ல. இவைகளைவிடப் பெரும் பரிசு ஒன்றை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். உங்களது கண்ணீரை என் கல்லறையின்மீது சிந்துவீர்களாயின், அதுவே எனக்கு மகத்தான பரிசு என்று கூறியது கேட்டு உள்ளமுருகிவிட்டனர் மக்கள்!

இயற்கையின் கோணல் புத்தியால் 60 ஆம் ஆண்டின் நிறைவினைக் கூடக் கொண்டாட இயலாது அண்ணா அவர்கள் மறைந்து புகழ் உடம்பு அடைந்து வரலாறாகி விட்டார்!

பல லட்ச மக்களின் கண்ணீரோடு, அவரை ஆளாக்கிய தலைவர் தந்தை பெரியார்தம் கண்ணீர்த் துளிகளும், அவரது சடலத்தின்மீது விழுந்தனவே - அவை வள்ளுவர் குறளை அல்லவா நினைவூட்டியது!

புரந்தார்கண் நீர்மல்ச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து (குறள் 780)

படைத்தலைவனின் கண்ணீர் படைத்தளபதியின் உடல்மீது விழுவதைவிட பெரும் பேறு வேறு என்னதான் இருக்க முடியும்!

தன்னால் வளர்க்கப்பட்டு ஆளாக்கப்பட்ட அருமைத் தளபதிக்கு வீர வணக்கம் செலுத்தினார் - அவர் கண்ட - கொண்ட ஒரே தலைவர் பெரியார். அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதே - இருவரின் மனிதநேயத்திற்கு மகத்தான சான்றுகள் அல்லவா!

--------------நன்றி: " விடுதலை" 15-9-2008

2 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

வணக்கம்.

எனது 'திருமன்றில்' திரட்டியில் தங்களின் வலைப்பதிவை இணைத்துள்ளேன். பார்க்கவும்.

http://thirumandril.blogspot.com/

தாங்கள் விரும்பினால் திருமன்றிலுக்கு உங்கள் வலைப்பதிவில் தொடுப்பு கொடுக்கலாம்.

நன்றி.

தமிழ் ஓவியா said...

நன்றி அய்யா.
தங்களின் உதவிக்கு மிக்க நன்ரி. நானும் இணைப்புக் கொடுக்கிறேன்.