Search This Blog

29.9.08

பார்ப்பனர் அடிக்கும் கொள்ளை

வித்தியாதரப் புராணம்

ரயில்வே பிரயாணம் வெகு ஜனக்கூட்டம், சாஸ்திர சம்பந்தமான தர்க்கம். ஒன்றுக்கொன்று தகவலில்லாப் போராட்டம் பிரயாணிகளிலொருவன் எழுந்து நின்று மகா ஜனங்களே! ஈ.தென்ன ஏக தடபுடல் எல்லோரும் பேசுகின்றீர்களே? யார் வார்த்தையை யார் கேட்கின்றது. நம் தேசாசாரமிப்படி கெட்டுப் போய்விட்டது. யாராவது ஒருவர் பேசினால் அதை முற்றிலும் கவனித்து ஆராய்ச்சி செய்து இதன் பிழை இன்னதென்றறிந்து பதில் சொல்லுகின்ற தேயில்லை. ஒருவர் பேசும்பொழுது பின்னால் சில சங்கதிகளை சொல்ல எண்ணி அதற்காதரவாய் முன்னால் சிலவற்றை சொல்ல வேண்டியதாகவரும், அங்ஙனம் வார்த்தை பயனற்றதாயுமுள்ள அதைக் கவனியாது உடனே தர்க்கம்; அதனால் சண்டை; ஒற்றுமையென்பது செத்தே போய் விட்டது.

உபயோகமான வஸ்து இன்னதென்பது கனவிலும் கூட ஞாபகமில்லை. ஆராய்ச்சியின் குணம் அடியோடு நாசம் யார் எதைச் சொன்னாலும் உடனே நம்பிக்கை. மறு நிமிஷத்திலேயே முற்றிலும் கை விட்டு விடுகின்றோம். ஆரிய தந்திரமென்னும் பாதாளத்தில் அமிழ்ந்துவிட்டோம். கண்டதெல்லாம் தெய்வம், சொன்னதெல்லாம் மந்திரம்; கட்டுவதெல்லாம் கோவில், சோம்பேறியாய் திரிவதே ஞானம்; ஆத்மா ஆரியற்குதானுள்ளதாம். அவர்கள் சொன்னதே வேதம்; தெய்வ பேதமோ கோடி ஜாதி பேதமோ அதற்கு அதிகம் அய்யோ பாவம் ஆரிய தந்திரிகளே! இம்மட்டிலாவது தேச விர்த்தியைத் தேடப்படாதா? உம் மோசத்தை வெளியாக்க லாகாதா? தேசம் க்ஷணித்து சாம்பலாய் போயினபின் யாரை வஞ்சிப்பீர்கள்? எங்கிருந்து பிழைப்பீர்கள்? தீயைக் கக்கின மூங்கில் போல நீங்களும் சேர்ந்துதானே அழிய வேண்டும்! என்ன அறிவு! என்ன சக்தி! எப்படி பிழைப்போம். எந்நாட் கரையேறுவோம். இது யார் செய்த மோசம், ஆ! தெய்வமே, எங்கள் தேசத்தை வெறுத்தாயோ. பன்னாட்டுக்கும் கப்பல் கப்பலாய் போகின்றனையே. எங்களை முற்றிலும் கைவிட்டுவிடுவாயோ. நினைக்க நினைக்க நெருப்பாய் எரிகின்றதே.

அம்மா உலக மாதாவே! உன் பிள்ளைகளை ஏனிப்படி வதைக்கின்றாய். துஷ்டப்பிள்ளைகளை இரக்ஷிக்க வேண்டிய அவசியமானாலும் பட்டினி போட்டுக் கொல்லாதே. ஒரே முகூர்த்தத்தில் விழுங்கிவிடு. இன்னும் நல்ல பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வாய். எல்லாம் மோசம்; எல்லாம் வஞ்சகம்; எத்தனை தெய்வம்; எத்தனை லிங்கம்? எங்கிருக்கின்றது? அக்னி லிங்கமாம்! அதிலிருக்கும் அதிசயம் விக்கிரகத்தில் சந்தனம் பூசினால் காய்ந்து போகின்றதாம். இதிருக்குமிடம் இயற்கையாகவே எரிமலை. ஒர் வகையான அந்தக் கல்லினாலடித்தது விக்கிரகம் இதில் பூசிய சந்தனம் காய்ந்து விட்டதாம்; கண்டவர்கள் இதயங்களித்துவிட்டது. லிங்க மோசடி.

நமக்கென்னத்துக்குப் பணம் போட்டுவிடுங்கள் சாமிக்கே யென்று கொட்டி விட்டு வருகின்றோம். வாய்வு லிங்கமாம், அதிலுண்டாகும் அதிசயம் லிங்கத்தின் சமீபத்தில் எரிகின்ற விளக்கு வாய்வு லிங்கத்தின் விசேடத்தால் ஆடுகின்றதாம் என்ன தீக்ஷண்யம்! லிங்கத்தின் இரு பக்கத்திலும் பொடித் துவாரங்களிட்டிருக்கின்றன. அடி பக்கத்தில் மேலேயிருந்து வாய்வு செல்லும்படியான துவாரமிருக்கின்றன. அதன் வழியே காற்று பிரவேசித்து உச்சியிலுள்ள சிறு துவாரத்தின் வழியாயோடுகின்றது எந்த அறிவாளிகளாவது லிங்கத்தின் மேல்புறத்தை செவ்வனே அடைத்துக் கொண்டு விளக்கு ஆடுகின்றதா என்று பார்த்தீர்களா? பிள்ளை எப்படி விசுவாசித்தீர்கள்? ஆரியருக்கு கேட்டதை கொடுப்பதைதானா விசுவாசித்தீர்கள்? அப்புலிங்கமாம்! அதிலுள்ள அதிசயங்கள் ஜலமூறிக் கொண்டேயிருக்கின்றதாம். மூலஸ்தானத்துக்கு மேல்புரம் தெப்பமொன்றிருக்கிறது. இரண்டிடங்களுக்கும் சுமார் 10 அடி ஏற்றத்தாழ்ட்சியுள்ளது. தெப்பத்திலிருந்து லிங்கத்துக்கு தண்ணீருறும்படி முன்னமே செய்து வைத்த ஆரிய தந்திரத்தை இப்பொழுதுள்ளஸ்தானீசுர் முதலாய் மறந்து போய்விட்டார்கள். சமீபத்தில் இடித்து கட்டிய காலத்தில் மேல் பக்கத்து சுவரை வானம் தோண்டி கான்கிரீட் பலமாய் கட்டியதால் நீருற்று நின்று விட்டது. என்ன லிங்கம், எங்கே போயிருக்கின்றார்! உடனிருந்து செலவிட்டு கட்டிய மஹா புண்ணியவான்களே தெரியாமல் நின்று விழிக்கும் பொழுது மற்றாரை நொந்து கொள்வதில் என்ன பிரயோஜனம்? இன்னும் பரங்குன்றமென்றது அந்த அடையாளமுமிருக்கின்றது. சிலகாலம் விஷ்ணு கோவிலாயி ருந்த அடையாளமுமிருக்கின்றது. தற்காலம் சுப்பிரமணியர் முளைத்திருக்கிறார். இன்னும் எவனை புதைத்துக் கொண்டு திண்டாடுகின்னோமோ தெரியவில்லை. இந்த பயித்தியங்க ளெல்லாம் விட்டு எந்த காலம் முன்னுக்கு வருவோமோ அறிவாளிகளே கவனியுங்கள்.

ஒரு பிரபலஸ்தன் வந்துபுதைத்த இடத்தில் ஆரியர்கள் கூடிப் பெரிய கட்டடங்களை கட்டும்படி ஏமாளியரசர்களை ஏய்த்து கம்மியர்களால் விக்கிரங்களை வார்த்தும் அடிப்பித்தும் வைத்துக் கொண்டு தாங்களே பூசாரிகளாக யேற்பட்டு வரும் காணிக்கைகளை யெல்லாம் விழுங்கி விட்டு, நரரீக்கிரக பிரவேசராய் வேண்டிய சுகத்துடன் இருக்கின்றார்கள். நாமோ ஏமாளிகளாய் அரை வயிறும் கால் வயிறுமாக சாப்பிட்டு மீந்ததை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு தூங்குகின்றோம். கடவுளா? கல்லா?

எவரேனும் கொஞ்சம் விபரந்தெரிந்தோர் அய்யா இதென்ன கல்லை நட்டு வைத்துக் கொண்டு சுவாமி என்கிறீர்களே! கும்பிட பணமும் கேட்கின்றீர்களே. சுவாமியென்றால் எனக் கல்லவா கொடுக்கும்? என்னிடத்தில் வாங்கி பிழைப்பது பயித்தியக் காரனாக்கி பார்வைக்குதான் கல்போலத் தெரியும், அதிலே யிருக்கின்ற உருவென்ன சாமான்யமானதா? பஞ்சாக்ஷரம் பீஜாக்ஷரம் அஷ்டாக்ஷரம் இன்னும் எத்தனையோ மந்திரம் ஏறி ஜோதி சொரூபமாய் பிரகாசிக்கின்ற தாவது தெரியவில்லையா? மந்திர சக்தி என்ன சாமான்யமானதா? அப்படியில்லையானால் இத்தனை அபஷேகங்களையும் இத்தனை நிவேத்தியங்களையும் சாதாரணமான கல் தாங்குமா? வென்று சாங்கோப சாங்கமாய் பேசி வாயெடுக்க வொட்டாமல் செய்து விடுகின்றார்கள். அதிலும் என்போல வாயாடி உங்களூருவும் மந்திரமும் ஏறியதற்கு இதுதானாசாக்ஷி? இதை யார் ஒப்புக் கொள்வார்? முன்னேறிய உருவுடன் இன்னும் ஏற்றிக் கொண்டே நீங்களுக பக்கத்தே இருங்கள் நான் ஒரு கட்டப் பாறையினால் அக்கல்லின் தலையில் ஓங்கி அடிக்கின்றேன். அதனை தடுக்க அக்கல்லுக்கு சக்தி ஏற்பட்டாலல்லவா சரி? ஒரு வேளை இது கலிகாலம். அப்படியெல்லாம் வரமாட்டாதென்பீர்கள். போகட்டும் அக்கல்லாவது உடைந்து போகாமலிருக்குமா? விடாது படித்தால் ரிஷி மூலம் நதி மூலங்களை விசாரிக்கப்படாதென்று பழைய கந்தபுராணம் கூறுகின்ற தென்கிறார்கள். இது நிற்க புதைக்கப்பட்டவன் மீனாட்சி மகனாகிய உக்ர வீரபாண்டியன் என்ற சுப்பிரமணியன்றானே. தனக்கே சந்ததி யில்லாமல் இரண்டு பத்தினிகளை கட்டியும் பின்னும் காணாமல் பழைய தந்திரிகள் நட்டு வைத்த காளி கோவிலண்டையே காத்திருந்தும் பாரிகளிம்சை பொறுக்க மாட்டாமல் சந்யாசம் பூண்டும் படாத பாடெல்லாம் பட்டு இறந்து போனவன் தானே. இஃதாரறியார்? உயிரோடிருக்கும் போது தன்னை ரக்ஷித்துக் கொள்ள மாட்டாமல் இத்தனை பாடுபட்டவன் செத்து பல்லாண்டவன்றபின் ஆரிய தந்திரிகளால் அடித்து வைக்கப்பட்ட கல்லில் நுழைந்து கொண்டு நம்மை ரக்ஷிப் பானாக்கும்! என்ன அறிவு? நாமும் மனுஷ ஜென்மந்தானோ? நம்மைப் போல மனிதன் தானே ஆரியன். இப்படியெல்லாம் ஏமாற்றி சகஜீவியாய் வசிக்கின்றான் அல்லவா? என்றால் அவர்களால் என்ன இருக்கிறது. பாடல் பெற்ற ஸ்தலமல்லவா என்கிறீர்கள். பாடல் பெற்றதுதானே பொய் என்பதற்கு போதுமான சாக்ஷி கூறும் உண்மையுள்ளவனை உண்மையுள்ளவன் என்று சாக்ஷிகளும் ரிகார்டுகளும் செய்து வைக்க வேண்டுமா? ஐயோ! பேதை ஜனங்களே மூளையை தின்று விட்டீர்களா? ஒவ்வொன்றையும் கவனித்துப் பாருங்களேன்.

இஃதிருக்க பழனியில் மச்சகாவடி, சர்க்கரை காவடி, கதை கேட்டதில்லையா? சாவடி எடுத்துச் செல்வோன் கொண்டு போயங்கொரு மண்டபமிருக்கின்றது. அதிலிறக்கி வைத்துவிட வேண்டியது. சுவாமி யுத்தாவானபின் வாவென்றனுப்பிவிட்டு திரையை போட்டு விடுகிறார்கள்.

இராமேசுவர தீர்த்த மோசடி

ஆரிய தந்திரிகள் திரையுட்சென்று காவடியை அவிழ்த்து மணலுக்கு சர்க்கரையையும், கரிமீனுக்கு உயிர்மீனும் வைத்து மறுபடியும் கட்டிவிட்டு உத்திரவாய் விட்டது ஓடிவா? என்று ஓலமிட்டு பேமாயாண்டியின் தோளில் தூக்கி வைத்தோட்டு கின்றார்கள். நடந்த வேலை என்னவென்று கவனிப்பாரைக் காணோம். சர்க்கரை இருந்தது. மீன் துள்ளினது. கொண்டுவந்த பணத்தை கொட்டடா கொட்டு, என்று கொடுத்துவிட்டு வந்தால் எப்படி பிழைப்போம்! எந்நாள் முன்னுக்கு வருவோம். இன்னும் ராமேஸ்வர மென்னும் பாழாழியின் சரிதம் தெரியுமா? மந்திரமில்லை; தந்திரமில்லை; சமுத்திரக்கரையின் பக்கமுள்ள தண்ணீர் கிடங்குகளுக்கு இராமதீர்த்தம்; லக்ஷ்மண தீர்த்தம்; அனுமார்தீர்த்தம் என்று கணக்கிலடங்கா பெயரிட்டு உப்பு தண்ணீரில் மூழ்கடா முழுகு; உங்களப்பனுக்கு உள்ளதை கொட்டடா கொட்டு உள்ளது உரியதை கொடுத்துவிட்டு திரும்பி பாராமல் ஒடடாஓடு என்று வழிப்பறி செய்த சாடையாக ஜனங்களை ஏமாற்றி கூட்டி வந்தவருக்கு பாதி; தங்களுக்குப் பாதியாய் பங்கிட்டு பிழைக்கிறார்கள். எதை சொல்வது; எவரை நோவது? ஐயோ பாவிகள் உயிரோடுதான் இருக்கின்றீர்களா? நடைபிணமாய் அலைகின்றீர்களா? எனக்கு ஒன்றும் தெரிய வில்லையே? இன்னும் ஆகாய லிங்கமொன்று ஒன்று இருக்கிறது. அங்கு செய்வதோ அரைப்பாவாடை, கால்பாவாடை, மூக்கால் பாவாடை, முழப் பாவாடையென்றேய்த்து ஆயிரக்கணக்காய் அபகரிக்கின்றார்கள். பொருள் கொடுத்தோரையும் பலனோ காலித்திரையொன்று கட்டியிருக்கின்றது. திறந்து பார்த்தால் ஆங்காங்கு நட்டிருக்கும் கல்லையும்கூட அங்கு காணோம். தனி ஆகாயந்தான் இருக்கின்றது. இதைப் பார்க்க ஜீவாதாரமாக இருந்த இத்தனை பணத்தையும் செலவிட வேண்டும்.

ஐயோ! ஏழை ஜனங்களே! ஏக வெளியில் நின்று கொண்டு யாதொரு செலவில்லாமல் அண்ணாந்து பாருங்களேன்! ஆகாயம் முழுவதும் தெரியுமே. என்னமதி! எந்நாட்கதி! இது யார் தலைவிதி! இன்னும் கழுக்குன்ற மென்றொன்றிருக்கின்றதே. அதையும் கவனியுங்கள். ஆங்கிரண்டு கழுகுகளுக்கு இரை கொடுத்து காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்.அதுவும் வேளைக் கிரமப்படி வந்து தின்றுவிட்டு போகின்றது. ஒவ்வொரு வேளை களிலே வராமலும் போகின்றது. இதிலென்ன அதிசயமென்று பணத்தை கொட்டுகின்றீர்கள்? கழுகும் ஒருவகை கோழியின் இனந்தானே கோழி வளர்க்கும் வீட்டில் இரை வைக்கும் பெண்களைக் கண்டவுடன் ஓடி வருவதும், காலை காலை சுற்றுவதும் வைத்தவுடன் தின்பதையும் பார்த்தில்லையா?

பார்ப்பனர் அடிக்கும் கொள்ளை

அய்யோ! ஜனங்களே, நம்மிடமே குங்குமம் மணங்கு ஒன்றுக்கு ரூபாய் ஆறு வீதமும், விபூதிபடி ஒன்றுக்கு ஒரு அணா வீதமும் வாங்கிப் போய் அதை மறுபடியும் நமக்கே ஒரு குண்டுமணி எடை விபூதியையும், ஒரு குண்டுமணி எடை குங்குமத்தையும் வைத்து அரை ரூபாய்க்கு விற்று முதல் செய்கின்றார்கள். இதில் ஏற்படக் கூடிய லாபத்தை பார்த்தீர்களா? நாம் ஒரு ரூபாய்க்கு 1 அணா சம்பாதிப்பது எவ்வளவோ கடினம். ஆரிய தந்திரிகள் யாதொரு சிரமமின்றி ஒரு ரூபாய்க்கு 170 ரூபாய் வீதம் நாளடைவில் இதை விற்று சம்பாதிக்கிறார்கள். (1000 ரூ. எடை குங்குமம் விலை ரூ.6-0-0) நம்மிடம் விற்கும் ஒரு குண்டுமணி எடையின் விலையை கவனித்து பாருங்கள். இதைப் போன்ற லாபம் இவ்வுலகத்தில் யாராவது அடைந்ததாய் கேள்விப்பட்டி ருக்கிறீர்களா? இவ்விதம் குங்குமத்தை நாம் மணங்கு 1-க்கு 6 ரூபாய்க்கு விற்று அதை மறுபடியும் நாமே மணங்கு ஒன்றுக்கு 1000 ரூபாய் கிரயத்துக்கு வாங்கினால் நாம் எந்த காலம் பணத்தை சம்பாதித்து முன்னுக்கு வருவோம்?

சிரார்த்தக் கொள்ளை

இன்னும் எத்தனை மோசம்! எத்தனை தந்திரம்! எதற்குத் தப்புவது? கோர்ட்டெல்லாமவர்கள்; நாடெல்லாம் அவர் வைத்த கண்ணி. அதிகாரஸ்தானமெல்லாம் அவர்கள் பார்த்த விடமெல்லாம் படுகுழி, ஐயோ! ஏழை ஜனங்கள் எப்படி கரையேறும்? திதியாம்; சிரார்த்தமாம்; திவசமாம்; நமது பிதாக்களிறந்து மோட்ச லோகத்தில் தொங்குகிறார்களாம். பசி பொறுக்க முடியாமல் இவர்களிடத்தில் சொல்லியனுப்பினார் களாம். அதற்காக நம் பிதுர்க்கள் இறந்த தேதியன்று ஆரியற்கு அரிசி, நெய், பருப்பு, உளுந்து மற்றும் காய்கறி சாமான்களும் சுமக்கு மட்டும் கொடுத்தால் இறந்தோர் பசி தீர்ந்து திருப்தியாவார்களாம். என்ன மதியீனம்! யார் சாப்பிடுகின்றது! யார் பசியடங்குகின்றது! உமக்கென்ன உணர்ச்சியில்லையா? யாராவது சோதித்துப் பார்த்தீர்களா? ஐயரை ஒரு அறையில் அடைத்து வைத்துக் கொண்டு மேற்படி யார் மகனையே திதிகட்கு தலைவனாக்கி மற்றொரு பிராமணனுக்கு வேண்டிய சாப்பாடு போடும்படி செய்து சில வாரங்கள் சென்று அடைபட்டவரை திறந்து விட்டு திருப்தியாயிருக்கிறதா என்று கேட்டால் அல்லவா சிரார்த்த மகிமை வெளியாகும்? பின்னை எப்படி தேசத்தில் ஆராய்ச்சியின் குணம் பரந்து உண்மை வெளியாகும். அறிவாளிகளே! வேதத்தை மாற்றார் பார்க்கப் படாதென்று வைத்த சட்டம் உங்கள் புத்திக்கு சரியாக இருக்கின்றதா? ஆனாலும் இவைகளையெல்லாம் முற்றிலும் கலைந்துவிட வேண்டுமென்ற தென் கருத்தன்று. வீண் மயக்கம் கொள்ளாமல் தேசம் நாகரிகமடைந்து முன்னுக்கு வரும் வழியைத் தேட வேண்டும் என்பதே என்னோக்கம். இப்பொழுது நான் சொல்லியவைகளைக் கவனித்துக் கொண்டு வந்த ஆரியர்களெல்லாம் என்னென்னவோ நயன பாஷையில் பேசிக் கொண்டு வருகின்றார்கள். என்ன செய்தாலும் செய்யட்டும் உண்மையைத்தான் பேசுவேன். இதோ பரங்குன்றம் ஸ்டேஷன் வந்து விட்டது. அநேகமாய் எல்லோரும் இறங்கி விட்டோம். ஊருக்குட் செல்கின்றேன். இந்நேரம் தாழ்ந்தது. ஆரிய தந்திரம் பலமாய் நடந்தது. பழைய வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

-------------------------- "திராவிடன்" 30.7.1917

0 comments: