Search This Blog

3.9.08

இளைஞர் பற்றி தந்தைபெரியார்




இளைஞர் கூட்டுறவும், அவர்களிடம் எனக் குள்ள நம்பிக்கையும் எனது தொண்டிற்கோ கொள்கைக்கோ எப்படிப்பட்ட எதிர்ப்பு ஏற்பட்டாலும், எப்படிப்பட்டவர்கள் எதிர்த்தாலும், யார் பிரிந்து போனாலும், சிறிதும் மன முறிவோ சலிப்போ இல்லாமல் எவ்வித எதிர்ப்புகளும் அடிக்கும் பந்து உயருவது போல் எனது உணர்ச்சிகளையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்பக் கூடியதாகவே முடிகிறது.

*********************** *********************

இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால்பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடையவர்கள்.

******************8 88888888888 ******************

வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகப் புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை தீமை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், காலதேச வர்த்தமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் குணமும், ஆய்ந்து ஆய்ந்து பார்க்கும் தன்மையும் ஆகியவைகள் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சுயநலச் சூழ்ச்சிக்கு இரையாகிவிடுவார்கள்.

**************** ****************************8

வாலிபப் பருவம் அபாயகரமான பருவம். சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய பொருளைப்போல் மிகப் பத்திரமாய்க் காப்பாற்றப்பட வேண்டிய பருவம். அப்பருவத்தைப் பொறுப்பற்ற தற்கால விளம்பரக் காரியங்களுக்கு அடிமைப்படுத்தி விடாமலும், பின்னால் சலிப்பும் துக்கமும் பட வேண்டிய காரியங்களுக்குச் சம்பந்தப்படுத்தி விடாமலும் நன்றாய் ஆய்ந்து ஆய்ந்து பார்த்து அவசியமானதும், நிலையானதும், காரியத்தில் செய்யவும் பயனளிக் கவும் கூடியதுமான காரியத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.



வாலிபர்களைச் சுயமாகச் சிந்திக்குமாறு பழக்கப்படுத்துவதே யில்லை; பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படுவதே யில்லை; அறிவுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்தப் பழக் குவதேயில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து தாங்களே ஒரு முடிவுக்கு வருவது ஒரு நாளுக்கு ஆகாது.

************** ***********************

வாலிபர்களுக்குப் புதுமை சீக்கரம் தோன்றும்; சீக்கிரம் பிடிக்கும். காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால் முன்னால் பதிந்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவைகள் சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப் பதிந்து போயிருக்கும்.

********************* *********************

வாலிபர்கள் ஒரு செல்வாக்கையோ, ஒரு பிரச்சாரத்தையோ, காதலையோ கண்டுவிட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில் பற்றாய் இருப்பது மிகச் சங்கடமாகத் தோன் றும். பொது மக்கள் ஆதரவு, புகழ், உற்சாகமான காரியங்களில் இருக் கும் அவா, ஒரு தேக்கமான காரியத்தில் உற்சாகம் காட்ட இடம் தராது.

******************* **************************

எதிர்காலம் அறிவும், அனுபவமும், கட்டுப்பாடும் உடைய நம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. இவர்கள் தன்னலம் விட்டுப் பொது நலப் பணியாற்ற முன்வர வேண்டும். பொது நலப் பணி என்பது விளம்பரத்துக்கோ சுயநல வாழ்க்கைத் துறைக்கோ இடமானதல்ல. துன்பத்திற்கும், சுயநலக்காரர்கள், பாமர மக்கள், விசமிகள் ஆகியவர்களின் பழிப்புக்கும் இடமானது என்பதை மனதில் இருத்தி பொதுநலப் பணியில் ஈடுபட வேண்டும்.

***************** *******************

இது பிரச்சாரக் காலம். எக்காரியமும் பிரச்சாரம் மூலம்தான் நடைபெறுவது சாத்தியமாயிருக்கிறது. எனவே பிரச்சாரம் செய்ய ஏராளமான வாலிபர்கள் முன்வர வேண்டும். பிரச்சாரம் செய்ய முற்படுவோர் விசமப் பிரச்சாரம் செய்ய ஆளாகாமல் ஒழுக்கத்தோடும் நிறைந்த கட்டுப்பாட்டோடும் நடந்து கொள்ள வேண்டும். இன்றேல் பிரச்சாரம் கோரிய பலனை அளிக்காது.

********************* ***************

இளைஞர்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தமிழன் என்ற இன உணர்ச்சியோடு பழக வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒழுக்கம் நாணயத்தோடு நடந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு நடப்பே மாறுதலடைய வேண்டும்.

*************** *******************


-------------நன்றி: "விடுதலை" 3-9-2008

0 comments: