Search This Blog

29.9.08

பிரம்மாவை மிரள வைத்த பெரியார்




தமிழகத்தில் முதன்முதலில் கர்ப்பத்தடைப் பிரச்சாரம் செய்தவர், அரசாங்கத்தை அப்படிப் பிரச்சாரம் செய்யச் சொன்னார். பெரியாராகத்தான் இருப்பார் போலும். 1928 லேயே இதுபற்றி எழுதினார். அப்போது. அது, அநேகருக்கு திடுக்கிடும்படியான செய்தியாய் இருந்தது; ஆனால், இப்போது சிறிது காலமாய் அது எங்கும் பிரஸ்தவிக்கப்படும் ஒரு சாதாரண சேதியாய் விட்டது என்று பெரியார் 1930-ல் எழுதினார். இது மதவிரோதம் என்றும் எதிர்க்கப் பட்டது. பெரியாரோ இது பெண் விடுதலைக்கு ஒரு முன்தேவை என்றார். மக்கள் தொகைப் பெருக்க கண்ணோட்டத்திலிருந்து அல்ல. பெண்ணிய நோக்கிலிருந்து கர்ப்ப ஆட்சி பற்றி பேசினார்.

பெரியாருக்கு மிகவும் பிடித்தவர் இங்கிலாந்து தத்துவஞானியாகிய பெட்ரண்டு ரஸ்ஸல்.. நான் ஏன் கிறிஸ்தவனல்ல? என்கிற அவரின் பிரபலமான உரையை தமிழில் வெளியிட்டவர். கர்ப்பத் தடைப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று அப்போது அவர் கூறியிருந்ததை மேற்கோள் காட்டி எழுதினார் பெரியார், மிதமிஞ்சிய குழந்தை களைப் பெறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார் ரஸ்ஸல். பெரியாரோ அவரிலும் மேலாக காரியார்த் தமாகச் சிந்தித்தார். அது - மருந்தின் மூலம் நோயைத் தடுப்பது எவ்வாறு தவறில்லையோ அதுபோலவே சிகிச்சை மூலம் மிதமிஞ்சிய பிள்ளைப் பேற்றைத் தடுத்து நிறுத்துவதும் தவறில்லை. இந்த நாட்டைப் பொறுத்தமட்டும் பெட்ரண்டு ரஸ்ஸல் யோசனை பயன்படாது. ஏனெனில் மிதமிஞ்சிய குழந்தைகளைப் பெறுகிறவர்களுக்குத் தனி அபராதம் எதுவும் தேவையில்லை. அவர்களது வேதனை ததும்பும் வாழ்க்கையே போதும்.

பள்ளிப் படிப்புக்கூட முடிக்காத நம்மூர்காரர் உலகத்திலே ஞானியாகத் திகழ்ந்த ரஸ்ஸல் பேச்சுக்கு கச்சிதமான எதிர்பாட்டுப் பாடியிருப்பதை ரசிக்கலாம். அதிகப் பிள்ளைகள் பெறுவோர்க்கு தனியாக எதற்கு அபராதம்? பிள்ளைப்பேறே பெரும் அபராதம் அன்றோ! பிறகு என்ன செய்யவேண்டும்? பெரியாரின் தீர்க்க தரிசனத்தை நோக்குங்கள்.

மூன்று குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு இலவச கர்ப்பதடை சிகிச்சை செய்யப்படும் என்று ஆஸ்பத்திரிகளில் அறிவிக்கப்படுமேயானால், இன்றைய மூடநம்பிக்கை வழிந்தோடும் நிலையிலும் கூட, மாதம் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் சிகிச்சை பெறுவார்கள் என்பது நிச்சயம்.

இரண்டு குழந்தைகள் பெற்றவர்களுக்கு இன்று இலவசமாக கர்ப்பத்தடை அறுவைசிகிச்சை நடக்கிறது. இதற்கு அன்றே வழி வகுத்துக் கொடுத்தவர் பெரியார். பிள்ளைபேறு என்பது கடவுள் கொடுத்தது. அதைத் தடுப்பது பாவம் என்றிருந்த காலத்தில் ஒரு கத்திரிக்கோலால் சிருஷ்டித் தொழிலையே நிறுத்தச் சொன்னவர் அவர், பிரம்ம தேவனையே மிரள வைத்தவர்!

------------------ தோழர் அருணன் எழுதிய
"பெரியாரின் பெண்ணியம்" பக்கம் 57, மற்றும் 104.

0 comments: