Search This Blog

23.9.08

நாடா - கடும்புலி வாழும் காடா?

குஜராத், ஒரிசா ... அடுத்து கருநாடகமா?

பா.ஜ.க. என்னும் அரசியல் வடிவத்தின் ஊற்றுக்கண்களான ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட சங் பரிவார் என்னும் அராஜகக் கும்பல் நாட்டை அமளிக்காடாக மாற்றியே தீருவது என்பதில் மிகவும் உக்கிரமமாக இருப்பது விளங்கிவிட்டது.

1992 டிசம்பர் 6 இல் அவர்கள் அயோத்தியில் தொடங்கிக் கொடுத்த வன்முறை தொடர் ஓட்டம் போல இந்தியாவின் பல பகுதிகளிலும் வக்கிரத்தோடு திமிராட்டம் போடுகிறது.

அவர்களின் முதல் பரிசோதனைக் கூடமாக குஜராத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆடு ஓநாய் கதையாக கோத்ரா என்னும் தொடர்வண்டி நிலையத்தில் நின்ற சபர்மதி இரயில் - எஸ்-6 என்ற பயணிகளின் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் பலியான 56 பிணங்களை அரசியல் மூலதனமாக்கி, அம்மாநிலத்தையே இந்துக்கள், முசுலிம்கள் என்று இரு தனித்தனி கூறுகளாகப் பிரித்து, அந்த இந்து வாக்கு வங்கியைத் தங்களுக்குச் சாதகமாக தங்கள் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு விட்டனர்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட முசுலிம் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் இதுவரை பொடா சட்டத்தின் அடிப்படையில் சிறைக்குள் கிடக்கின்றனர். பாதிப்புக்குக் காரணமான ஒரே ஓர் இந்துகூட இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவில்லை. பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற பி.ஜே.பி.யின் யோக்கியதை இதுதான் - நாடு தெரிந்துகொள்ளவேண்டும்.

"பொடா" சட்டத்தின்கீழ் சிறையில் உள்ள 84 முசுலிம்களும், அந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு இருப்பது பொருந்தாது என்று மத்திய ஆய்வுக் குழு (Central Review Committee) 2005 மே மாதத்தில் தீர்ப்பு வழங்கியும்கூட, அவர்கள் பிணையில்கூட இந்நாள் வரை வெளியில் வர முடியாத இறுக்கத்தை - உச்சநீதி மன்றத்தால் நீரோ மன்னன் என்று பட்டம் சூட்டப்பட்ட நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏற்படுத்தியுள்ளது.

14 வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்றால், குஜராத் மாநில பா.ஜ.க. ஆட்சியின் பாசிச குணத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஒரிசாவைத் தங்களின் சோதனைக் களமாக சங் பரிவார் கும்பல் எடுத்துக்கொண்டுள்ளது.

78,000 கிறித்துவ மக்கள் ஒரிசாவின் காடுகளுக்குள் தஞ்சைமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அது நாடா - கடும்புலி வாழும் காடா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கருநாடகத்திலும் தங்களின் வன்முறை ஆயுதத்துக்குக் கூர் தீட்டிப் பதம் பார்த்து வருகிறார்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் இதே நிலைதான்.

கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா மத்திய அரசு வைத்துள்ள குற்றச்சாற்றுக்குப் பதில் சொல்ல யோக்கியதை இல்லாமல், அமர்நாத் பனி லிங்கம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த கலவரத்தை எடுத்துக்காட்டி, அப்பொழுதெல்லாம் மத்திய அரசு இந்த அளவு 355 பிரிவை எல்லாம் காட்டி அச்சுறுத்தவில்லையே - ஏன்? என்று நீட்டி முழங்கியிருக்கிறார்.

இது பிரச்சினையைத் திசை திருப்பும் எத்து வேலையாகும். மறைமுகமாக கருநாடக மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்திருப்பது உண்மைதான் என்பதை இதன்மூலம் எடியூரப்பா ஒப்புக்கொண்டு விட்டார் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கதாகும்!

சென்னையில் கூடிய கிறித்துவ அமைப்புகள், கலவரங்களுக்குக் காரணமாக இருக்கிற பஜ்ரங் தள் என்கிற அமைப்பைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.

பஜ்ரங் தள் என்றால் அதன் பொருள் குரங்குப்படை என்பதாகும். குஜராத்தில் கலவரங்களுக்குக் காரணமானவர்கள் யார் யார் என்பதை தெகல்கா புலனாய்வு நிறுவனம் ஆதாரப்பூர்வமாக ஆள்களை அடையாளம் காட்டியும், அத்தகையவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை இல்லை.

அதேபோல, 1992 இல் பாபர் மசூதியை இடித்து நொறுக்கிய பா.ஜ.க. (அத்வானி உள்பட) சங் பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் தண்டனைக்கு ஆளாகாமல் ராஜநடை போட்டுத் திரிகின்றனர்.

இந்த நிலை நீடிக்கும்வரை சங் பரிவார்க் கும்பல் ஒவ்வொரு மாநிலமாக தன்னுடைய வன்முறைக் கலாச்சாரத்தை அரங் கேற்றிக் கொண்டுதானிருக்கும்.

பாபர் மசூதி இடிப்பில் முதல் குற்றவாளியான அத்வானியை மேலும் தாமதம் செய்யாமல் - சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுத்தால், இந்தக் கும்பலின் வால் ஒட்ட நறுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் பதுங்கிவிடும். இந்த சூட்சுமத்தை மத்திய அரசு உணரவில்லை என்பதுதான் ஆச்சரியமாகும்.

----------------------- நன்றி - "விடுதலை" தலையங்கம் 23-9-2008

0 comments: