Search This Blog

16.9.08

அண்ணா நூற்றாண்டு: கண்களைத் திறக்கட்டும்!




இன்று அறிஞர் அண்ணா அவர்கள் நூற்றாண்டு - திராவிடர் இயக்கத்தவர் மட்டுமல்ல - உலகம் முழுவதும் உள்ள பகுத்தறி வாளர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் எண்ணங்களிலும் அறிஞர் அண்ணா அவர்கள் இன்று கோலோச்சுவார் என்பதில் அய்யமில்லை.

அறிஞர் அண்ணாவின் பொது வாழ்வு என்பது தந்தை பெரியார் அவர்களிடத்திலிருந்து தொடங்குகிறது. ஒரு பதினைந்து ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்களின் நேரிடைக் கண்காணிப்பின் கீழும், கட்டளைக்குக் கீழும் பணியாற்றிய அனுபவம் அவருக்கிருந்தது.

தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை அண்ணா. அவர்கள் தனக்கே உரித்தான தனி வசீகரத்துடனும், ஆற்றலுடனும் மேடைப் பேச்சு வாயிலாகவும், ஏடுகளின் வாயிலாகவும் கொண்டு செலுத்தி யிருக்கிறார். இளைஞர்கள், மாணவர்கள், தமிழாபிமானிகள், ஆசிரியர்கள் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர்.

நீண்ட காலமாக மக்கள் நம்பி வந்த, மதிப்பு வைத்திருந்த மேல்ஜாதி ஆதிக்கம், ஜாதிய உணர்வு, ஜாதி பழக்கவழக்கம், வழிபாடுகள், சடங்குகள் ஒவ்வொன்றின்மீதும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஆயுதம் கொண்டு போர் தொடுத்தார்.

காரண காரியங்களோடு அவை நடந்தன. சிந்தனையைத் தூண்டும் வகையில் அந்த மறுப்புகள் கம்பீரமாக நடை போட்டன. அத்தகைய காலகட்டத்தில் ஒரு இயக்கத்திற்கு சிறப்பான பிரச்சாரர்கள் தேவை. அதில் அண்ணா முன்னிலை வகித்தார்.

கம்ப ராமாயணத்தைக் கொளுத்தலாமா? கூடாதா? பெரிய புராணத்தை எரிக்கலாமா? கூடாதா? என்கிற பட்டிமன்றங்கள், சட்டக் கல்லூரிகளில் நடக்கும் அளவுக்கு அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் புதிய சிந்தனை கிளர்ந்து எழச் செய்தார்.

அண்ணாவுடன், சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட ரா.பி. சேதுப்பிள்ளை வாதாடிப் பார்த்தார். நாவலர் சோமசுந்தர பாரதியார் சொற்போர் நடத்தினார்.


அண்ணாவின் வாயிலாக அய்யாவின் கொள்கைகள்தான் அங்கெல்லாம் ஏற்றம் பெற்றன. இளைஞர்கள் மத்தியில் பசுமரத்தாணி போலப் பதிந்தன.

ஈரோட்டில் அய்யாவின் குடிஅரசு இதழின் பொறுப்பாளர் ஆனார். அதன்பின் காஞ்சியிலிருந்து திராவிட நாடு என்ற வார இதழைத் தொடங்கி நடத்தினார்.

தனக்கே உரித்த ஆற்றலால் நாடகங்களை உருவாக்கி, அந்த நாடகங்களில் அவரே பாத்திரங்களை ஏற்று நடித்தார். பகுத்தறிவு எண்ணங்கள் பொதுமக்கள் மத்தியிலே வேர்ப் பிடிக்கும் பணியிலே வெற்றிகள் குவிந்தன.

அவர் அரசியலில் நுழைந்தார். அங்கு சென்றாலும், தாய்க் கழகத்தின் கொள்கைதான் தம் கொள்கை என்று அறிவித்தார். தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று வருணித்தார்.

அரசியலில் பார்ப்பனர்களை சாணக்கியர்கள் என்பார்கள். அந்த சாணக்கியர்களை மண் கவ்வச் செய்த சாதனை அண்ணாவைச் சார்ந்ததாகும்.

ஆட்சியைப் பிடித்தார் என்றாலும், அங்கும் - அவர் அய்யாவிடம் கற்ற, தெளிந்த, உள்ளத்தில் ஊறிப்போயிருந்த அந்தச் சமுதாய சுய மரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகள்தான் அப்பொழுதும் அவரிடத்தில் ஏற்றம் பெற்றிருந்தன.

அரசு அலுவலகங்களில் எந்தவித மதச் சின்னங்களுக்கும் இட மில்லை என்று ஆணை பிறப்பித்தார். சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்று சட்டமியற்றி தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றியைக் காணிக்கையாக்கினார். இந்த ஆட்சியே தந்தை பெரியா ருக்குக் காணிக்கை என்று சட்டப்பேரவையிலேயே பிரகடனப்படுத்தினார்.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை. இங்கு இருமொழிதான் ஆட்சிமொழி என்பதை சட்ட ரீதியாக ஆக்கினார்!

குறைந்த காலம் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், அடிப்படையில் சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர், திராவிடர் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ற எண்ணம்தான் அவரை ஆட்கொண்டது.


ஆட்சி ஆசனத்தில் அமர்ந்த நிலையிலும், நாகரசப்பட்டி பெரியார் இராமசாமி உயர்நிலைப்பள்ளி விழாவில் தந்தை பெரியாரோடு முதலமைச்சராக அவர் கலந்துகொண்ட நேரத்தில், ஆட்சிப் பொறுப்பில் தொடரவா - இல்லை மீண்டும் அய்யாவுடன் வந்து சமுதாயப் பணியை ஆற்றலா? அய்யா ஆணையிடட்டும்! என்று சொன்னார் என்றால், அந்த அண்ணாவை அந்தச் சமுதாய ஊற்றுக்கண்ணை எந்த வகையில் தான் புகழுவது - பாராட்டுவது!

பதவிதான் பொதுவாழ்வு, அதிகாரம் பெறுவதுதான் அரசியல் என்ற எண்ணத்தைத் தூக்கி எறிந்து, பொதுத் தொண்டு ஆற்றிட இளைஞர்கள் முன்வரவேண்டும் என்பதுதான் அண்ணாவின் நூற்றாண்டு நாளில் உறுதி எடுக்கவேண்டும்.

திராவிட இயக்கம் என்பது இன்றைய தினம் திராவிடர் கழகமும் - தி.மு.க.வும்தான். இளைஞர்கள் இந்த இரு இயக்கங்களையும் சார்ந்து, திராவிட இயக்கத் தத்துவங்களை உள்வாங்கி, சமூகத்தைப் பின்னிப் பிணைத்துக் கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வு என்னும் முள்செடிகளை அகற்றி, தந்தை பெரியார் காண விரும்பிய, அறிஞர் அண்ணா பிரச்சாரம் செய்த அந்த பேதமற்ற சுயமரியாதை - சமதர்ம சமத்துவ ஒப்புரவுச் சமுதாயத்தைப் படைக்க உறுதி கொள்வோமாக!

வாழ்க பெரியார்! வாழ்க அறிஞர் அண்ணா!!

--------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 15-9-2008

0 comments: