Search This Blog
27.9.08
பெரியார் பயணம் இன்னும் முடியவில்லை
ஒரு மனிதன் தோன்றித் தமிழ்நாட்டு மக்களிடையே வந்து தமிழா! நீ மனிதனா? என்ற வினாவை எழுப்பி! மானம் இருக் கிறதா? எனக் கேள்வி கேட்டு, சொரணை வேண்டாமா? சோற்றுப் பிண்டமாய் வாழ்வதா? நீ யார்? உன் நிலை என்ன? உன்னையே நீ அறிந்து கொள்ள வேண்டாமா? என்று தன் இனத்தவனையே விழிப்புறச் செய்யப் புறப்பட்டார் தந்தை பெரியார்! விவரம் தெரியாதவன் திகைத்தான்! விபரந் தெரிந்தவன் பெரியாரைச் சபித்தான்!
விவரந் தெரியாதவன் எண்ணிக்கையில் அதிகம்! விவரந் தெரிந்தவனோ மிக மிகக் குறைவு! ஆனாலும் அவரை புத்திசாலி பிழைக்கத் தெரிந்தவன்! விவரம் தெரியாத பெருங்கூட்டமோ, அனைத்தையும் உருவாக்கினவன் அனைத்துக்கும் அவனே உடைமையாளன்!
ஆனால் விவரந் தெரிந்தவன் எந்த உடைமைக்கும் உரியவனல்லன் பிழைக்க வந்தவன்! ஆனாலும் எப்படியோ ஏற்றம் பெற்றுவிட்டான். வலிமை பெற்று, வசதி பெற்று, ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப் படைக்கும் திறன் பெற்றுவிட்டான்.
விவரந் தெரியாத திருப்பெருங்கூட்டம் விழியிருந்தும் குருடராய், வழி தவறித் தடுமாறி அடிமைகளாய் நடமாடும் உருவமாய்த் தத்தளித்தான். அவனைப் பார்த்துத்தான் பெரியார் ஆயிரங்கேள்விகள் கேட்டாரி. அந்த அறியாப் பெருங்கூட்டத்தையே ஆயுதமாக்கிக் கொண்டு அறிந்த சிறு கூட்டம் பெரியார் மீது தாக்கியது! அவமானப்படுத்தியது! அசிங்கப்படுத்தியது!
ஆனாலும் பெரியார் சளைக்கவில்லை, தொடர்ந்து போராடினார். அந்த அறியாப் பெருங்கூட்டம்தான் தமிழர் இனம்! அடிமைப்பட்ட இனம்! அறிந்தவனாய் இருந்த ஆதிக்கம் செய்தது ஆரிய இனம்!
இதனைத் தன்னந்தனியாய்ச் சுற்றிப் பறந்து சூறாவளியாய் வீசி போராடினார். தலைவர் கலைஞர் அவர்கள் கூறியது போல எரிமலையாய் சுடுதழலாய் தகித்தார்!
திகைத்தது ஆரியம்! அதிர்ந்தது அய்தீகம்! இந்தக் காலக் கட்டத்தில்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், பெரியார் அவர்களோடு இணைந்தார். அவரது புரட்சிப் பயணத்தில் ஆட்சியாளர் துணை இல்லை! மாறாக அவர்தம் அடக்கு முறையும் அடாவடித்தனமும் தான் தொடர்ந்தது. நீதி மன்றங்கள் அழைத்தது! நீர் செய்தது குற்றம்தானே என்று கேட்டது! இல்லை அது நியாயம்? ஆகவே, நான் தொடர்ந்து செய்வேன்! என்றார். நாங்கள் உங்களைத் தண்டிப்போம் என்றார்கள். அதற்கு அவர் பார்ப்பான் ஆட்சி செய்யும் நாடும் - கடும் புலி வாழும் காடும் ஒன்றேயாகும். நான் புலி வேட்டையாடப் புறப்பட்டு விட்டேன். புலிகள் என்மீது சாய்ந்து காயப்படுத்தலாம். கவலை இல்லை! பார்ப்பன நீதிபதிகளாகிய தாங்கள் எனக்கு எவ்வளவு அதிகமான தண்டனை கொடுக்க முடியுமோ கொடுங்கள் என்று கூண்டிலே நின்று சங்கநாதம் செய்தவர் நம் தலைவர் பெரியார்.
அவர் 70 ஆண்டு காலம் தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார். நிற்காத பயணம்! ஓயாத பேச்சு! சளைக்காத உழைப்பு! அவர் இந்த பூமியில் வாழ்நாள் முழுதும் பயணம் செய்த மொத்தத் தொலைவு 8,20,200 மைல்கள். இது இந்தப் பரந்த பூமிக் கோளத்தை மூன்று முறை சுற்றி வருவதற்கொப்பாகும்! அவர் பேசிய கூட்டங்கள் 21,400. உயிர் விடுவதற்கு முதல் நாள் வரை பேசினார்! எழுச்சியுகம் காண்பதற்கு எழுந்து வாரீர்! என இளைஞர்களை அழைத்தார்!
இறுதியாக அய்யா தியாகராயர் நகரில் ஆற்றிய இறுதிச் சொற்பொழிவு அழிக்க முடியாத அறிவுச் சாசனமாகும்! அதனை மரண சாசனம் என்றே நாடு போற்றியது!
அறிவுலக மேதை அண்ணா சொன்னார்:
ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்து வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை.
இதைவிட யார் மதிப்பிடத் தக்கவல்லார்?
எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்
எத்தனையோ கருத்துகளை உரையாடல் மூலம் தந்திருக்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதை நான் கற்றுணரும் வாய்ப்புத் தந்தார். பொதுத் தொண்டு ஆற்றுவதில் ஓர் அகமகிழ்வும், ஆர்வமும், மன நிறைவும் பெற்றிடச் செய்தார். நான் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.
(பெரியர் ஒரு சகாப்தம் என்ற நூலில் அறிஞர் அண்ணா)
நீ நினைக்கிற கடவுள் ஒருவனால் உண்டாக்கப் பட்டது என்கிறாயா? அல்லது ஒருவனால் கண்டு பிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது யாராலும் உண்டாக்கப்படாமல் யாராரும் கண்டுபிடிக்கப் படாமல் தானாக, இயற்கையாக கடவுள் இஷ்டப்படி கடவுளாகவே தோன்றிற்று என்கிறாயா?
நான் சொல்லுவதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால் எதற்காக வரும்? கடவுள் ஒருவானால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால் தானே! உண்டாக்கினவனை நான் முட்டாள் என்கிறேனே என்று நீ கோபித்துக் கொள்ள வேண்டும்.
மற்றும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே ஆத்திரம் வரவேண்டும்? நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீயே ஒப்புக் கொள்கிறாய் என்றுதானே அர்த்தம்.
அது மாத்திரமல்லாமல் நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்றுதான் கருத்தாகிறது!
இப்போது நீ நினைத்துப் பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா- Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா-Invention) அல்லது நேச்சுரலா- (Natural) ? கடவுள் இயற்கையாகத் தோன்றியதா?
இதை முதலில் முடிவு செய்து கொள்! இவ்வாறு தந்தை பெரியார் அறிவு பூர்வமான வினாவை எழுப்புகிறார். பெரியார் கடவுளைச் சாடுவதற்குக் காரணம் அதன் மீதுள்ள கோபமோ வெறுப்போ அல்ல!
சமூக நலன் கருதியே! மக்களை அறியாமை இருளிலிருந்து மீட்டெடுக்கவேயாகும் (ஆதாரம் பெரியார் களஞ்சியம்).
அவர் திராவிட இனத்துக்காகவே கவலைப் படுகிறார்! தான் இந்த விவகாரத்தை அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக கையிலெடுத்தார் என்பதைப் பற்றிக் கவலையோடு கூறுகிறார்!
ஏனெனில் இந்த நாட்டில் பொது வாழ்வில் எல்லா மக்களையும் பொறுத்தவரையில் பொதுத் தொண்டில் சிறிதும் சுய நலமில்லாமல் சகலத்தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல் உண்மையாகவே என்னை ஒரு தொண்டன், ஒரு தொண்டனுக்காகவே வாழ்பவன், வாழவேண்டியவன் என்று கருதிக் கொண்டு உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாரும் இல்லை, யாருமில்லை யென்னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் எனத் தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை, அதாவது நம் மக்களில் யோக்யமானவன், நாணயமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக் கூடக் காண முடிவதில்லை, இருப்பதாகக் கருதக் கூட முடிவதில்லை, என்பவனவற்றை கருதக்கூடியவனாக கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகிறேன். (பெரியர் களஞ்சியம்)
இந்தப் பகுதியைக் கழகத் தோழர்களும், சிந்தனையாளர்களும் பொறுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும்! கவலையே தன்னிடம் நெருங்கிடாத புரட்சி வீரராக போர்க்குணமே பொது வாழ்வாக அமைத்துக் கொண்ட அந்த மாபெரும் தத்துவ மேதையின் நெஞ்சச் சுமை யாரால்? எதனால்? சிந்திக்க வேண்டாமா?
இந்தக் கவலையை நெஞ்சில் சுமந்தவாறே தனது மூச்சையடக்கிக் கொண்டார்! ஆனால் அந்தக் கவலை போக்குவதே தம் வாழ்நாள் கடமையாகக் கொண்ட அவரது இலட்சியத் தொண்டர் கலைஞர்!
தந்தை பெரியார் மறைவினால் எந்த அளவு மனம் பாதிக்கப்பட்டார்! எந்த அளவு அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிக்குச் செயல் வடிவம் தந்தார் என்பதற்கு
அய்யா மறைந்தவுடன் முரசொலி ஏட்டில் உடன் பிறப்புக்கு எழுதிய கடிதம் இதோ...!
அன்புத் தந்தை!
உன்னையும் என்னையும் நம் இருவரையும் உடன் புறப்புகளாக ஆக்கி வைத்த நம் அருமை அண்ணனையும் அரசியலுக்கு ஈந்த நம் அன்புத் தந்தை ஓய்வெடுத்துக் கொள்ளப் புறப்பட்டுச் சென்று விட்டார்.
பொது வாழ்வில் புகுந்தது முதல் அவர் கண்டறியாத ஒன்றை இப்போது காண்பதென்று தீர்மானித்து விட்டார்.
எதை நினைத்து நான் வேதனைப்படுவது? இளம் பிஞ்சுப் பருவத்திலேயே என்னை நான் அவரிடத்திலே ஒப்படைத்துக் கொண்டு தன்மானத் தமிழகம் காண தலை நிமிர்ந்து நிற்கும் சமுதாயத்தை உருவாக்க அணி வகுத்து நின்ற பெரும்படையில் ஒரு துளியானேன்.
சரித்திரத் தலைவன் கடவுள், மதம், புராணம் இவைகளின் தூய்மையைப் பரப்பாமல் தீமைக்கு வித்திட்டவர்களின் கொடுமை களைவதற்காகக் குமுறிய கோடை இடி!
பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் இடிந்து போய் எழுந்த ஈரோட்டுப் பூகம்பம்! புன்னகையா? புதுக்கருத்தா? புரட்சிக்கனலா? என்ன வேண்டும்? எல்லாம் தந்தை எந்தை பெரியார் எங்கே போய்விட்டார்? அன்பின் உருவம், அறிவின் சுரங்கம், அவரது மூத்த மகன் அண்ணாவைப் பார்க்கவா?
வாழ்க்கை முழுதும் போரட்டத்திலேயே கழித்த அவர், வைர நெஞ்சன். இப்போதும் ஒரு போராட்டத்தை அறிவித்து விட்டல்லவா கண்களை மூடியிருக்கிறார்!
சிந்தனைச் சிற்பி! சிறைக்கு அஞ்சாத சிங்கம் நிந்தனைகளைப் புகழாரம் எனக் கருதிப் போர்க்கொடி தூக்கிடும் கிழப்புலி!
அய்யகோ! அந்தக் கர்ச்சனை அடங்கிவிட்டதே! முழக்கம் ஓய்ந்து போய்விட்டதே!
தமிழகம் தவிப்பு
உலகம் ஒரு சிந்தனையாளனை இழந்து விட்டது. இந்தியா ஒரு சீர்திருத்தச் செம்மலையைப் பறி கொடுத்துவிட்டது. தமிழ் நாடு தனிப்பெருங் காவலனை இழந்து தவிக்கிறது. பெரியார் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார் - நாம் தொடருவோம் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு!
என்று முடிக்கிறார் நம் அருமைத் தலைவர் கலைஞர். ஆம்! பொரியார் பயணம் இன்னும் முடியவில்லை!
----------------------- பரமத்தி சண்முகம் அவர்கள் எழுதிய கட்டுரை -நன்றி: "விடுதலை"
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பயணத்தைத் தொடர்ந்து இன்றைய இளைய தலை முறைக்கும் மற்ற உலக அறிவாளிகட்கும் பரப்பிடப் பணியாற்றுவோம்.
மற்ற மொழிகளில் மொழி பெய்ர்த்து அனுப்பிட வேண்டும். ஆர்வமுள்ளவர்கள்
periyarinternational@yahoo.com
தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
நன்றி தோழரே
Post a Comment