Search This Blog

19.9.08

பெரியார் தத்துவம் விஞ்ஞானத் தத்துவம்




சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தந்தை பெரியார் தத்துவம் என்பது ஒரு விஞ்ஞானத் தத்துவம். ஒரு Scientific Theory அதை யாராலும் மறுக்க முடியாது. காரண காரியத் தத்துவம் நீண்ட நெடுநாட்களுக்கு முன்னாலே சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்? என்று தந்தை பெரியார் அவர்கள் புத்தகம் எழுதிய நேரத்திலே அதிலும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்திலே


எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்திலே, கலைஞர் அவர்கள் இளைஞராக இருந்த காலத்திலே அய்யா அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய அந்த காலகட்டத்திலே சுய மரியாதை இயக்கத்தை தோற்றுவித்தது ஏன்? என்று அய்யா அவர்கள் எழுதுகிறபொழுது ஒன்றைச் சொன்னார்கள். துவக்கத்திலே ஒரு கருத்தைச் சொன்னார்கள்.

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம்

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் முழுவதும் ஒப்புக் கொண்டதேயாகும். என்னவென்றால் காரணகாரிய தத்துவ உணர்ச்சியையும், உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும், தோற்றத்திற்கும் காரண காரியத்தை ஜீவன் தேடுகிறது. இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாகிவிட்டது. விவரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான். எந்தக் காரியமானாலும் காரண காரியம் அறிந்து செய்.

சரியா? - தப்பா? ஆராய்ச்சிக்கே விட்டுவிடு

சரியா - தப்பா? என்பதை அந்த காரண காரிய அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் விட்டுவிட்டு, எந்த நிர்ப்பந்த சமயத்திலும், அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கிறது. அதுதான் சுயமரியாதை என்று விளக்கம் சொன்னார்கள். அறிவு ஆசான் இந்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள்.

காரண காரியம் என்பது சயின்ஸ்

காரண காரியம் என்பதுதான் சயின்ஸ். அதுதான் விஞ்ஞானம். அதுதான் அறிவியல். அந்தக் காரண காரியத்தைத்தான் நம்முடைய அரசியல் சட்டம் கூட வலியுறுத்துகிறது. ஆனால், அது ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறதே தவிர, அதை நடைமுறைப்படுத்துகிறவர்கள் நாட்டிலே எங்கேயிருக்கிறார்கள் என்றால், இந்த அரங்கத்திலே இருப்பதைப்போல இந்த மேடையிலே இருக்கிற நம்முடைய முதல்வர் போன்றவர்கள், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள், சுயமரியாதை இயக் கத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள்தான் அமல்படுத்துகின்றார்கள் (பலத்த கைதட்டல்).

பல தரப்பட்ட அறிஞர் பெருமக்கள்

பல வழக்கறிஞர்கள் இங்கேயிருக்கின்றார்கள். மேனாள் நீதியரசர்கள் இருக்கிறார்கள் - இந்த அரங்கத்திலே. சட்டத்துறையைச் சார்ந்தவர்கள், மற்ற துறையைச் சார்ந்தவர்கள், அதிகாரிகள் இங்கேயிருக்கின்றார்கள். பேராசிரியர்கள் இருக்கிறார்கள். நம்முடைய அரசியல் சட்டம் 51 (ஏ) என்ற பிரிவிலே ஒரு பகுதி இணைக்கப்பட்டது. 1976-லே. அந்தப் பிரிவிலேதான் Fundamental Duty அடிப்படைக் கடமை என்ற ஒன்றை இணைத்தார்கள். அடிப்படை உரிமை என்பதுதான் முதலிலே இருந்தது.

உரிமை, கடமையோடு சேர்ந்ததே

ஆனால், உரிமை என்பது அப்பொழுதும், கடமையோடு சேர்ந்ததே தவிர, தனியாக உரிமை இருக்கமுடியாது. கடமையைச் செய்துவிட்டு வேண்டுமானால், உரிமையை வலியுறுத்தலாமே தவிர, உரிமையை மட்டுமே வலியுறுத்தினால் குழப்பம் தான் நாட்டிலே சமூகத்திலே ஏற்படும் என்று நினைத்த காரணத்தால் அரசியல் சட்டத்தை எழுதும்பொழுது ஒரு முக்கியமான பிரிவை இணைத்தார்கள் - புகுத்தினார்கள்.

51 (ஏ) என்பது Fundamental Duty. It shall be the duty of every Citizen of India, to develop the scientific temper spirit of inquiry and humanism and reform என்று நான்கு வார்த்தைகளைப் போட்டார்கள்.
To develop Scientific temper. அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனுடைய கடமை. இந்திய குடிமகனாக இருந்தால் அந்த இந்தியக் குடிமகனுடைய கடமை அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

ஏன்? எதற்கு? என்று கேள்

ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கவேண்டும். அய்யா அவர்கள் காரண காரிய தத்துவம் என்று சொன்னார்களே அந்த காரண காரிய தத்துவம். அதுபோல மனித நேயம். சீர்திருத்தம். இந்த நான்கு வாக்கியத்திற்கும் பெயர்தான் இதனை நடைமுறைப்படுத்துகின்ற தத்துவத்தைக் கொண்ட அமைப்புதான் சுயமரியாதை இயக்கம். அந்த சுயமரியாதை இயக்கம்தான் திராவிடர் கழகம்.


--------------------பெரியார் திடலில் 7-9-2008 அன்று மாலை நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து - "விடுதலை" 16-9-2008

0 comments: