Search This Blog
4.6.14
கலைஞர்பற்றி பெரியார்-அண்ணா- பேராசிரியர்
3.6.14
கலைஞர் பிறந்த நாள்- ஜூன் 3 -சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?
கலைஞரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி
(தி.மு.க. தலைவர் கலைஞரின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி ”தமிழ் ஓவியா” வலைப்பூ பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது )
தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சி, அண்ணா அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி கொள்கை வழி நடந்து வருகிறேன்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி
2.6.13
வாரியாருக்கு வாயடைப்பு! -ராமர் பாலம் பற்றி கலைஞர்
கலைஞர்: இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் இப்படி அறியாமையாக இருக்கிறாரே! இவர் கூறுகிற அய்ந்து பாதைகளும் ஏற்கத்தக்கதல்ல என்று விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சுற்றுப்புறச் சூழல் ரீதியாகவும் ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டு விட்டது. இப்போது போய் அந்தத் திட்டங்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார் ஜெயலலிதா.
அதுமாத்திரமல்ல; திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டிற்குப் பிறகு, திட்டத்தை மாற்றலாம் என்றால் எவ்வளவு நிதி விரயமாகும், மீண்டும் எவ்வளவு காலம் தாமதமாகும் என்பதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் கூறுகிறார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டிருப்பது _ இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 6ஆவது பாதையைத்தானே? அப்போது அவர்கள் கேட்டுக் கொண்ட பாதையில்தானே இப்போது திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பாதையில் ராமர் பாலம் உள்ளது என்றால் _ அதிமுக தேர்தல் அறிக்கையில் அந்தப் பாதை வழியாக சேது திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டது ஏன்?
கலைஞர்: அது தேவையே இல்லை. அதை உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. உடைப்பது ராமர் கட்டிய பாலமும் அல்ல. நான் இன்னும் சொல்கிறேன்; அப்படியே இருந்தாலும் என்ன, அதனை அகற்றக் கூடாதா? நாட்டு மக்களின் நலனுக்காக அதை அகற்றிவிட்டு புதுப்பாலம் கட்டக் கூடாதா?
காலட்சேபத்தில் கதை கூறும்போது திருவாரியார் அவர்கள், உயிருள்ள ஒன்றையும்_ மிருகங்களையோ, பறவைகளையோ கொன்று மனிதன் சாப்பிடுவதற்காக கடவுள் படைக்க வில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத்திற்கு கடவுள் என்ன உணவைப் படைத்தார் என அவரிடம் கேட்டேன்.
வாரியார் என்னை உட்காரும்படி அடக்கிவிட்டு தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிடலாமா? என்று மாமிசம் உண்போர் கேட்பார்கள். காய்கறிகளை பறித்தபின் அவைகளின் வளர்ச்சி தடைப்படுவதில்லை. ஆனால், மனிதன் காய்கறிகளைத் தாராளமாக உண்ணலாம். இது யாருக்கும் தெரியாது என்றார்.
உடனே நான் எழுந்து, கீரைத்தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி? என்று கேட்டேன். மறுபடியும் என்னை அடக்கி உட்கார வைத்தார் வாரியார்.
அன்று நான் எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. அதனால் நானும் என் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.
சுயமரியாதை எங்கள் சொத்து, நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் பிள்ளைகள். முழுக்க முழுக்க சுயமரியாதை இயக்கத்திலேயே வளர்ந்தவர்கள்தான் என்று குறிப்பிட்டார். (8.8.1973)
கர்ணனையும் காதலித்தாள் பாஞ்சாலி!
அடடா, இலக்குமியும், பார்வதியும்
இசைச்செல்வி கலைமகளும்
கடலை தனை வறுக்க வில்லை
கற்பிழந்த காரணத்தால்
கைச்சரக்கல்ல கதையுண்டு
இத்தனைப் புராணத்தினையும் இந்நாட்டுப் பண்டிதர்கள்
முத்தமிழில் விரித்துத் தந்தார்,
மலை வந்து எதிர்த்தபோதும்
கற்புக் குலையோமென வீரமொழி பேசும் பெண்டிர்
மேற்சொன்ன பெண்களெல்லாம் தெய்வம் என்றால்
ஏற்பாரோ பானத்தார் உங்கள் பேச்சை?
26.8.12
பெரியார் இல்லாவிட்டாலும் வீரமணி இருக்கிறார்
விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கி!
பெரியார் விட்டுச் சென்ற கொள்கை உட்பட எல்லா உடைமைகளையும் காப்பாற்றுபவர் வீரமணியார்! வீரமணியார்!! வீரமணியார்!!!
விடுதலை ஆசிரியராக அரை நூற்றாண்டுத் தொண்டாற்றிய தமிழர் தலைவரைப் பாராட்டி கலைஞர் பெருமிதம்!
கலைஞர் அவர்களுக்குச் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளிக்கிறார் விடுதலை ஆசிரியர்.
பெரியார் விட்டுச் சென்ற எல்லா உடைமைகளையும், கொள்கைகள் உட்பட எதையும் காப்பாற்றுகின்ற திறன் உடையோர் யார் யார் என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில் வீரமணியார்! வீரமணியார்!! வீரமணி யார்!!! என்று திமுக தலைவர் கலைஞர் அவர்கள் புகழாரம் சூட்டினார்.
சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை கலைஞர் அவர்கள் ஆற்றிய தலைமை உரை வருமாறு:-
தமிழ்ப் பெருங்குடி மக்களின் - திராவிடப் பெருங்குடி மக்களின் தலைவர்களில் ஒருவராக - என்னுடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வராக - இன்றையதினம் ஏற்றுக் கொண்ட பொறுப்பிலே அய்ம்பதாண்டுகள் நிறைவு பெற்ற வராக - அதற்கான நாளைக் கொண்டாடுகின்ற நேரத்தில் - இந்த விழாவின் தலைமகனாக அமர்ந்திருக்கின்ற விடுதலை ஏட்டின் ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு இளவல் வீரமணி அவர்களே, இந்த விழாவில் பாராட்டுரை வழங்கிய திரு. பொன்னீலன் அவர்களே, திரு. ரமேஷ் பிரபா அவர்களே, திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களே, பேராசிரியர் ஜெக்மோகன்சிங் வர்மா அவர்களே, அறிமுக உரையாற்றிய அறிவுக்கரசு அவர்களே, வரவேற்புரை ஆற்றிய கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, இணைப்புரை மொழிந்த டெய்சி மணியம்மை அவர்களே, நன்றியுரை ஆற்றிய தம்பி அன்புராஜ் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,
விடுதலை ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளிக்கிறார் கலைஞர்.
இன்று நடைபெறுகின்ற இந்த விழா உங்களுக் கெல்லாம் என்ன உணர்வை ஊட்டியிருக்கிறதோ; அந்த உணர்வைவிட ஒரு படி மேலாக ஏன் ஆயிரம் படிகள் மேலாக எனக்கு உணர்வை ஊட்டி யிருக்கின்ற விழாவாகும். `விடுதலை, `குடியரசு, `பகுத்தறிவு என்றெல்லாம் ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்த அந்தக் காலம் தொட்டு இன்று அந்த ஏடுகளுடைய பயனை அனுபவித்துக் கொண்டி ருக்கின்ற இந்தக் காலம் வரையில் இந்த ஏடுகள் எவ்வளவு சங்கடங்களுக் கிடையே, இடர்ப்பாடு களுக்கிடையே வெளிவருகின் றன, வெளிவந்தன என்பதை நினைவு கூர்ந்திடுவது தான், யாரை இன்றைக்கு நாம் பாராட்டுகிறோமோ, யாருக்கு வாழ்த்து வழங்குகிறோமோ அதற்கு உரிய பயனை தரக்கூடிய ஒன்றாக அமையும்.
என்னைப் பொறுத்தவரையில், இங்கே வந்த விருந்தினர்கள், பாராட்டிய அன்பர்கள் யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக் கூடாது. என் வீடு இது; (பலத்த கைதட்டல்). என் வீட்டிற்குள்ளேயே வந்து என்னுடைய தம்பியை - என்னுடைய ஆருயிர் இளவலை நான் பாராட்டுகிற நேரத்தில், என்ன உணர்வு எனக்கும், பாராட்டப்படுகின்றவருக்கும் ஏற்படுமோ அந்த உணர்வில் இம்மியும் குறைவில்லாமல் இன்றைய தினம் நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதை துடிக்கின்ற எங்களது இதயங்களைக் கேட்டால் அது சொல்லும் (கைதட்டல்).
இரட்டைக் குழல் துப்பாக்கி
விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்றைக்கு பத்திரிகை உலகத்தில் திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுகின்ற - திராவிட இயக்கத்திற்காகக் குரல் கொடுக்கின்ற இரண்டு மாபெரும் சக்திகளாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணருவார்கள். நான் விடுதலையிலே நம்முடைய இளவல் வீரமணி அவர்களைப் போல 50 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தவன் என்று மார்தட்டிக் கொள்கின்ற அந்தப் பெருமையை பெறாவிட்டாலும்கூட, விடுதலை பத்திரிகையை தினந்தோறும் படிக்கின்ற ஒருவன் நான் (கைதட்டல்). அதைப் படித்த பிறகு தான் அடுத்த பத்திரிகையை எடுப்பது என்கின்ற வழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவன் நான்.
இன்னும் சொல்லப் போனால், சில நேரங்களில் அவசரத்தின் காரணமாக விடுதலை இதழிலே வருகின்ற பிழைகளைக் கூட - எப்போதாவது வருகின்ற ஒன்றிரண்டு பிழைகளைக் கூட உடனடியாக நான் அதைத் திருத்தி தொலைபேசி மூலமாக உரியவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பிழையை திருத்திக் கொள்ளுங்கள், கருத்துப் பிழை அல்ல, எழுத்துப் பிழை என்று குறிப்பிடத் தவறாதவன். அந்த அளவிற்கு இன்றைக்கும் விடுதலையோடு சொந்தம் கொண்டாடிக் கொண்டு, உரிமை ஏற்படுத்திக் கொண்டு வாழ்பவன் நான். (கைதட்டல்)
தி.மு.கழக ஆட்சியில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி
இன்றைக்கு இங்கே பேசிய நம்முடைய நண்பர் பன்னீர் செல்வம் அவர்கள், சில செய்திகளை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலே பொருளாதாரத் துறையிலே, தொழில் துறையிலே, வேறு பல மறு மலர்ச்சித் துறைகளிலே ஏற்பட்ட வளர்ச்சி விகிதாச் சாரத்தை நாம் பதிய வைக்கத் தவறிவிட்டோம் என்று குறிப்பிட்டார்கள். நாம் பதிய வைக்கக் கூடாது என்று அல்ல, பதிய வைப்பதற்கு நம்மிடத்திலே பிரபலமான பத்திரிகைகள் இல்லை என்பதுதான்.
எந்த வானொலியோ, தொலைக்காட்சியோ அப்படி நாம் பதிய வைப்பதற்கு பயன்படாமலே ஆகிவிட்டன என்பதுதான் முக்கியமான காரணமேதவிர, பதிய வைக்கக் கூடாது என்பதல்ல. இருந்தாலும் எனக்குள்ள மகிழ்ச்சி, பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதிய வைக்க வேண்டிய காரியங்கள் கழக அரசிலே நிரம்ப உண்டு என்பதை உணர்ந்து, அப்படி பதிய வைக்கத் தவறிவிட்டோம் என்று நம்மிடம் கூறாமல் கூறி அந்தக் குறையை எடுத்துக் காட்டினார்களே அதுவே நமக்கு நிறைவான ஒன்று என்று நான் கருதுகின்றேன்.
திராவிட இயக்கத்தினுடைய பல கருத்துக்கள் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னது, பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னது, என்னுடைய அருமை இளவல் வீரமணி அவர்கள் எடுத்து இயம்பி வருவது இவைகளெல்லாம் நாங்கள் நடத்துகின்ற ஏடுகளோடு நின்று விடுகின்றன.
உண்மைதான். காரணம், இது மற்றவர்களால் வெளியிடப்படாமல் இருட்டடிப்புக்கு உள்ளாக்கப் படுகிறது. அதையும் இங்கே குழுமியிருக்கின்ற நீங்கள் உணர்ந்து கொண்டால் மாத்திரம் போதாது, நம்முடைய பன்னீர் செல்வத்தைப் போன்றவர்கள் தங்களுக்குள்ள வாய்ப்புக்களை, வசதிகளை, தங்களுக்குள்ள தொடர்புகளை பயன்படுத்தி அதை நாட்டுக்கு ஏட்டாளர்களுக்கு இதழாளர்களுக்கு எடுத்துச் சொல்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதைத்தான் நான் இந்த விழாவிலே ஒரு வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றேன்; எனக்காக அல்ல, நாட்டுக்காக. சமுதாயத்திற்காக. இந்தச் சமுதாயம் ஏற்றம் பெற வேண்டும் என்ப தற்காக. ஒரு ஆட்சி எந்த அடிப்படையிலே உருவாகிறது, எந்த அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறது, தொண்டாற்றுகிறது என்பதை தொகுத்துச் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதைப் போல், பத்திரிகைகாரர்களுக்கும் இருக்கிறது.
நாம் எங்களுடைய ஏடுகளைப் பற்றிய வளர்ச்சியைப் பற்றிச் சொல்ல வேண்டுமேயானால் இன்றைக்கு விடுதலை 4 பக்கங்களில் வண்ண முகப் போடும், வண்ண எழுத்துக்களோடும், இன்னும் சொல்லப் போனால் பல்வேறு விஞ்ஞான புதுமை களை எடுத்துச் சொல்கின்ற ஏடாகவும் இன்றைக்கு விளங் குகின்றது. நான் ஆசிரியர் அவர்களிடத்திலே சொன்னேன், இப்பொழுதெல்லாம் விடுதலையை இயக்கத்திலே ஆர்வம் கொண்டவர்கள் மாத்திர மல்ல, உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள வேண் டும் என்று கருதுகின்றவர்களும், உடற்கூறுகள் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றவர்களும், மருத்துவத் துறை யிலே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் அக்கறை செலுத்துபவர்களும் படிக்கக் கூடிய ஏடாக விடுதலை ஏடு மாறி வருகிறது என்று நான் அவர்களிடத்திலே சொன்னேன்.
இதைச் சொல்வதால், இந்தச் செய்திகளோடு நீங்கள் விடுதலையைப் பார்த்து நிம்மதி அடைந்து விடக் கூடாது. இவைகளோடு ஏற்கனவே வந்து கொண்டிருக்கின்ற செய்திகளும் நம்முடைய சமுதாயத்தை சீரழிக்கின்ற உயர் ஜாதியின ருடைய ஆணவங்கள், அட்டகா சங்கள், அவர்களுடைய நிதானமற்றப் போக்குகள், அவர்களுடைய நெறியை நம்முடைய நெறியோடு கலப்பதற்கு நடத்துகின்ற நரித் தந்திரங்கள் இவை களையும், அதே நேரத்தில் நம்முடைய ஏடுகளின் மூலமாகச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின் றோம். அதை முரசொலி முடிந்த வரை செய்யும்.
விடுதலை நிச்சயமாக எப்போதும் செய்யும். முரசொலி முடிந்த வரை செய்யும் என்று சொல்வதற்குக் காரணம், அது ஒரு முழுக்க முழுக்க அரசியல் கட்சியினுடைய ஏடாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செய்திகளை எடுத்துச் சொல்கின்ற ஏடாகவும் அது நடைபெறுகின்ற காரணத்தால், அப்படி பழகி விட்ட காரணத்தால் முடிந்த வரையில் என்று சொன்னேன். விடுதலை அப்படியல்ல. எடுத்த எடுப்பிலேயே சனாதனத்தை, மதத்தை, மதவெறியை, மடாதிபதிகளின் கொட் டத்தை இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி, அவைகளையெல்லாம் அடையாளம் காட்டி எச்சரித்த, எச்சரித்துக் கொண்டிருக்கின்ற புரட்சி ஏடுதான் விடுதலை இதழ் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
புரட்சி என்றால் என்ன பொருள்? புரட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் மாத்திரம் அது புரட்சி ஆகிவிடாது. (கைதட்டல்) புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று சொன்னால் தான் பொருந்துகிறது. எல்லோரையும் புரட்சிக் கவிஞர் என்று சொல்லி விட்டால், அது பொருந் தாது. அதைப் போல புரட்சி ஏடாக விளங்குவது விடுதலைப் பத்திரிகை.
அந்த விடுதலைப் பத்திரிகை அளவுக்குக் கூட இல்லாமல் நான் 1942ஆம் ஆண்டு முரசொலி என்கிற கையேட்டைத் தொடங்கி, அதை துண்டு அறிக்கைகளாக வெளியிட்டு எல்லோரி டத்திலும் இனாமாகவே அதை வழங்கி - வரட்டுமே வடலூர் வள்ளலார் என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை! சிதம்பரத்திலே வர்ணாசிரம மாநாடு நடைபெற்ற போது, அதை எதிர்த்து ஒரு கட்டுரை. இவைகள் எல்லாம் முரசொலியில் எழுதிய காலம் ஒன்று உண்டு.
நன்றாக எனக்கு நினைவு இருக்கிறது. வருணமா? மரணமா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. எதற்காகத் தெரியுமா? சிதம்பரத்திலே உள்ள பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி, வர்ணாஸ்ரம மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாட்டை எதிர்த்து முரசொலி என்கிற அந்தத் துண்டு தாளில் நான் எழுதிய நீண்ட அறிக்கை - நீண்ட கட்டுரைக்குத் தலைப்பு தான் வருணமா? மரணமா? என்பதாகும்.
பரணி பல பாடிப் பாங்குடன்
வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில்
சொரணை சிறிதுமிலாச் சுயநலத்துச்
சோதாக்கள் சில கூடி
வருணத்தை நிலை நாட்ட வகையின்றிக் கரணங்கள் போட்டாலும்
மரணத்தின் உச்சியிலே மானங் காக்க
மறத்தமிழா போராடு! (கைதட்டல்)
இதிலே ஆயிரம் துண்டு அறிக்கைகள் தயாரித்து சிதம்பரம் வீதிகளிலே விநியோகிக்கச் சொன்னேன். அன்றையதினம் நான் சிதம்பரம் செல்ல வேண்டும். காரணம், என்னுடைய திருமணம் முடிந்து முதல் இரவு நாள். அதற்கு நான் சிதம்பரம் செல்ல வேண் டும். திருவாரூரில் ரெயில் ஏறி, என்னுடைய நண்பன் தென்னனோடு சிதம்பரத்தில் இறங்கினேன். புகை வண்டி நிலையத்திலேயே போலீசார் வந்து, நகருக்குள் போகக் கூடாது என்றார்கள். ஏன் என்று கேட்டேன், உங்களுக்கு 144 தடை உத்தரவு. காரணம் இந்த நோட் டீஸ். மாநாட்டிற்கு எதிராக, வர்ணாஸ்ரம மாநாட் டிற்கு எதிராக நான் எழுதி அச்சிட்டுத் தந்த வருணமா? மரணமா? என்ற அந்த நோட்டீசை வைத்து சிதம்பரத்திற்குள் நுழையக் கூடாது என்றார்கள்.
என்னோடு வந்த தென்னன், அய்யா அவருக்கு இன்றைக்கு முதல் இரவு, தயவு செய்து விடுங்கள் என்று சொல்லியும், போலீசார் விடவில்லை. திரும்பி மறு ரெயிலிலே ஏறி திருவாரூர் வந்து சேர்ந்தோம். முதல் இரவு இப்படி முடிந்தது. (சிரிப்பு) ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் ஒரு பத்திரிகையில் கருத்துக்களை வெளியிடக் கூட எவ்வளவு கர்ணக் கடூரமான, கடுமையான அடக்கு முறைகள் வைதீகத்தைக் காப்பாற்ற இருந்தன என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதை நான் நினைவூட்டுகின்றேன்.
இயக்கத்தை எப்படி எல்லாம் வளர்த்தோம்?
அதற்குப் பிறகு இப்படி பல கஷ்டங்கள் - பத்திரி கையை நடத்த முடியாமல்! நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்களும், நானும் அப்போதெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் கட்டளைப்படி சுற்றுப் பயணம் - கூட்டங்களுக்குச் செல்வோம். அந்தக் கூட்டங்கள், மாணவர்கள் சுற்றுப் பயணம் என்ற பெயரால் நடை பெற்றது. அப்படி நடைபெற்ற அந்தச் சுற்றுப் பயணங்களில் அவரும் நானும் எங்களோடு ஈரோடு சுப்பையா போன்ற வர்களும் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தக் கூடிய தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் சொல்கின்ற பெரும் பணியிலே நாங்கள் ஈடுபட்டோம். இவைகளைச் சொல்வதற்குக் காரணம், இந்த இயக்கத்தை சுலபமாக யாரும் வளர்த்து விடவில்லை.
இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு ஏதோ சொன்னோம், எழுதினோம், பேசினோம் என்ற அளவோடு யாரும் இருந்து விடவில்லை. அடிகள் பட்டிருக்கிறோம், தாக்குண் டிருக்கிறோம், காயப்பட்டிருக்கிறோம், கல்லடி பட்டிருக்கிறோம், இன்னும் சொல்லப் போனால் நாம் கண்ணெனப் போற்றிப் பாராட்டு கின்ற தந்தை பெரியார் அவர்கள் மீது சில காலிகள் கடலூரிலே செருப்பையே வீசினார்கள்.
அந்தச் செருப்பை எடுத்து தந்தை பெரியார் அவர்கள், இன்னொரு செருப்பையும் தேடிப் பாருங்கள், கிடைத்தால் இரண்டையும் சேர்த்து மாட்டிக் கொள்ளலாம் என்று சொல்கின்ற அளவிற்கு தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய பெருந்தன்மையைக் காட்டினார்கள். சாதி வெறியர்களை அடையாளம் காட்டினார்கள்.
இப்படியெல்லாம் இந்த இயக்கத்தை நாங்கள் வளர்த்தோம். அப்படி வளர்க்கப்பட்ட இந்தப் பேரியக்கம் இன்றைக்கும் மற்றவர்கள் பார்த்து அஞ்சுகின்ற அளவிற்கு நடை போடுகிறது என்றால், காட்சி அளிக்கிறது என்றால், பெரியார் இல்லா விட்டாலும் என்னுடைய இளவல் வீரமணியைப் போன்றவர்கள் (கைதட்டல்) இருக்கின்ற காரணத்தினாலேதான். பெரியார் விட்டுச் சென்ற எந்த உடை மைகளையும், கொள்கை உட்பட எதையும் காப் பாற்றுவதற்கு திறன் உடையவர் யார் யார் யார் என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில் - வீரமணியார்! வீரமணியார்! வீரமணியார்! என்பது தான்.
அத்தகைய அரும் பெரும் ஆற்றலாளர் என்னுடைய அன்புக்குரிய இளவல் வீரமணி அவர்கள் . அண்மையிலே நம்முடைய டெசோ மாநாடு நடைபெற்ற நேரத்தில் - விரைவில் திரும்பி விடுவேன் என்று சொல்லி அமெரிக்கா சென்றார். ஆனால் அவர் சொன்னபடி விரைவிலே திரும்ப வில்லை. என்ன காரணம் என்று நானும் விசாரித் துக் கொண்டிருக்கிறேன். தம்பி அன்புராஜைக் கேட்டாலும் அல்லது பூங்குன்றனைக் கேட்டா லும் வந்து விடுவார் என்று சொன்னார்களே தவிர, எதையோ மறைத்து இவர்கள் பேசுகிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதற்குப் பிறகு தான் வீரமணி அவர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து என்னைச் சந்தித்த போதுதான் நடந்தவைகளை சொன்னார்.
நடந்தவைகளாக அவர் சமாதானமாகச் சொல்லப்பட்டது, இனி என்றைக்கும் நடப்பவை களாக இருக்கக் கூடாது என்கின்ற அந்த உணர்வோடுதான் அந்தச் செய்திகளைக் கேட்டேன். அவர் மீண்டும் நம்மோடு வந்து இன்றைக்கு அவரு டைய அய்ம்பதாவது விடுதலை ஆசிரியாகப் பொறுப்பேற்றிருந்த விழாவை நடத்துகின்ற அளவிற்கு இருக்கிறார் என்றால் இது நாமெல்லாம் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும். (கைதட்டல்)
அத்தகைய பேறு நமக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கின்றது. அவர் வாழ வேண்டும். எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் உண்டு. என்னை விட இளையவர். இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும். வாழப் போகிறவர் (கைதட்டல்) அப்படி அவர் வாழ்கின்ற நேரத்தில் - தமிழ் நாட்டிற்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, அடித்தட்டு மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பணியாற்ற வேண் டும்.
அந்தப் பணிக்கு நான் இருந்தால், நானும் அவருக்கு உதவியாக இருப்பேன் என்று கூறி இன்றைய விழாவில் பங்கெடுத்துக் கொண்டதை ஒரு பெரும் பேறாகக் கருதி அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை மேலும் மேலும் குவித்து விடைபெற்றுக் கொள்கிறேன். -இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்
16.4.12
தைமுதல்நாள்தமிழ்ப்புத்தாண்டுஇல்லையா?தமிழறிஞர்கள் சொன்னதுஎன்ன?
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லையா?
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட
வாழ்வியற் களஞ்சியம் என்ன சொல்கிறது?
முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கலைஞர் பதில்
சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று கூறும் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தரும் ஆதார பூர்வமான பதிலடி இதோ!
உடன்பிறப்பே,
அரசியலுக்காகவும் - சுய விளம்பரத்துக்காகவும் நான் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதாக - தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிய விழாவில் என்னைப் பற்றிய அர்ச்சனையைத்தான் ஜெயலலிதா முழு நேரமும் பாடியிருக்கிறார். தை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதைச் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஜெயலலிதா மாற்றியிருக்கிறார்.
அதற்கு என்ன ஆதாரம் சொல்லியிருக்கிறார் என்றால், சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா என்று சொல்லும் மரபு இருக்கிற காரணத் தால் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதீனம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்று ஜெய லலிதா பேசியிருக்கிறார். மதுரை ஆதீனம் குறிப்பிட்டு விட்டாராம்! எப்படிப்பட்ட ஆதாரம்?
சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு இதுதான் ஆதாரமா?
மேலும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று நானே கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன் என்பதை ஜெயலலிதா ஆதாரமாகச் சொல்கிறார். தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று தி.மு. கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு அறிவித்து அதனைச் சட்டமாக ஆக்கும் வரை - சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாக அதிகார பூர்வமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் சித்திரைத் திருநாள்தானே தமிழ்ப் புத் தாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் அப்படித்தானே அழைத்திருக்க முடியும்!
தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகச் சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தார் கருணாநிதி. யார் கேட்டது இந்தச் சட்டத்தை? இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? என்று ஜெயலலிதா பேசி யிருக்கிறார்.
ஜெயலலிதாவிடம் கேட்டது யார்?
தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றி ஜெயலலிதா வந்ததும் வராததுமாக சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் கொண்டு வந்தாரே, அவரிடம் யார் கேட்டது இந்தச் சட்டம் வேண்டும் என்று? அவர் மாற்றிய சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? என்று நாம் திருப்பிக் கேட்க முடியாதா?
சென்னைப் பல்கலைக் கழக நூற் றாண்டு மண்டபம் அரசு விழாக்களுக்குத்தான் வழங்கப்படும். கட்சி நிகழ்ச்சிகளுக்குத் தரப்பட மாட்டாது. நடை பெற்றதோ அரசு விழா. 13ஆம் தேதி அங்கே நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா என்னென்ன பேசியிருக்கிறார்?
அரசு விழாவில் பேசியதெல்லாம் எனக்காக செய்யப்பட்ட அர்ச்சனைகள் தான்!
முதலமைச்சர் என்றால் அதுவும் ஜெயலலிதா என்றால் எங்கே வேண்டுமானா லும், எது வேண்டுமானாலும் பேசலாமா?
தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத் தில் மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்களாம்! ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
தி.மு. கழக ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அல்லவா? கோவை மாநாட்டிற்குப் பெயரே தமிழ்ச் செம்மொழி மாநாடுதானே?
தஞ்சையில் ஜெயலலிதா முதலமைச்ச ராக இருந்த போது நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின் லட்சணம் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியாதா?
அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளி நாட்டுத் தமிழறிஞர்கள், கா. சிவத்தம்பி உட்பட எந்த அளவிற்கு அவ மானப்படுத்தப்பட்டார்கள்? மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
மத உணர்வை புண்படுத்துவதாம்
23-8-2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பேசும்போதே, ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டைத் தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி, தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப் பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.
பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ஆதாரபூர்வமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு, சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும். உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதே போன்று வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப் படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் பேச்சு எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பார்க்கலாம்! தை மாதத்தில் பௌர்ணமி பூசம் நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா? மாசி மாதத்தில் பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்கு மகம் என்று பெயர் இல்லையே? பங்குனி மாதத்தில் பௌர்ணமி உத்திரம் நட்சத்திரத்தில்தான் வரும். அந்த மாதத்திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே; இதற்கெல்லாம் முதலமைச்சர் நாளை சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் அறிக்கை படிப்பார் என்று நம்புவோமாக!
சென்னைப் பல்கலைக் கழகத்தால் 1912ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பேரகராதியில் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
வாழ்வியற் களஞ்சியம் என்ன சொல்கிறது?
ஆனால் அவரே கூறியபடி அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் - முதலமைச்சர் ஜெயலலிதா புரவலராக இருந்த நேரத்தில் - வெளியிடப்பட்ட வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 13 - பக்கம் 43இல் ஆடிப் பட்டத்தில் தேடி விதைத்து உழைத்து உணவுப் பொருள்களைத் திரட்டிய மக்கள் உத்தராயணம் தொடக்க முறும் தைத் திங்கள் முதல் நாளன்று நன்றியுணர்வுடன் மழைக்கும் வேளாண்மைப் பெருக்கத்திற்கும் காரணமான சூரியனை வழிபடுகின்றனர். சங்கராந்தி யன்று கடவுளுக்குச் சிறப்பான வழி பாடுகள், விழாக்கள் ஆகியன செய்ய வேண்டுமென்று பிருகுசங்கிதை என்னும் நூல் கூறுகின்றது. ஒரு தேவநாள் என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அத்தேவநாளின் பகற்பொழுதின் தொடக் கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படு கின்றது என்றும் ஆகமங்களிலிருந்து அறிய முடிகின்றது. என்று கூறப்பட்டி ருக்கிறது என்பதை அம்மையாருக்கு மிகவும் பிடித்த ஆகம உதாரணத் திலிருந்தே குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.
2004ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து, அவரே அணிந்துரையும் வழங்கியுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - நான்காம் மடலம் - மூன்றாம் பாகம் - 111ஆவது பக்கத்தில் தை என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பேச்சு தயாரித்துக் கொடுத்தவர்கள் அந்த நூலையாவது வாங்கி அம்மையாரிடம் காட்டி யிருக்கலாம் அல்லது அவர்களே படித்துப் பார்த்திருக்கலாம். அந்த நூலில் தை என்பதற்குப் பொருளாக தமிழாண்டின் தொடக்க மாதம்(first month of Tamil era)திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம் (first month of Tiruvalluvar era) என்றுள்ளது. மேலும் அங்கேயே இச் சுறவ மாதமே தமிழாண்டின் தொடக்கம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
அதுபோலவே செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகரமுதலி - மூன்றாம் மடலம் - இரண்டாம் பாகம் நூலும் அம்மையாரின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அங்கேயும் சித்திரை என்பதற்குப் பொருளாக தமிழாண்டின் முதல் மாதமாகக் கருதப்படும் மேழம் என்று கூறிவிட்டு - சுறவமே தமிழாண்டின் தொடக்கம்; மேழத்தைக் கொள்வது பொருத்த மன்று என்று எழுதியுள்ளார்கள். சுறவம் என்றால் தை மாதம்; மேழம் என்றால் சித்திரை மாதமாகும்.
மறைமலை அடிகளாரின் திட்ட வட்டம்
மேலும் ஜெயலலிதா பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசும்போது, 1935ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில், திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும் என மறைமலை அடிகளார் கூறியதாக அய்ந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில் சிறுவை நச்சினார்க் கினியன் கூறியிருக்கிறார் என்று குறிப்பிட் டிருக்கிறார். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்ல, 31 ஆண்டுகளுக்கு முன்புதான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதுதான் மறைமலை அடிகளாரின் கருத்துமாகும். அந்தக் கருத்தைத்தான் அரசு ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகின்றது. இதைத்தான் மறைமலை அடிகளாரின் மகனும், மறைமலையடிகள் வரலாற்றினை நமக்குத் தொகுத்து வழங்கியவருமான மறை. திருநாவுக்கரசு அவர்கள், மறைமலை அடிகளின் கருத்துப் படி திருவள்ளுவர், கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர் என்று திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார்.
அம்மையார் குறிப்பிட்டுள்ள 1981ஆம் ஆண்டு மதுரையில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்திய அய்ந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டிய மலரினை என் வீட்டிலே உள்ள நூலகத்திலிருந்து தேடிப்பிடித்து சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய கட்டுரை 407ஆம் பக்கத்தில் வந்ததை முழுவதும் படித்தேன். அதில் அம்மையார் குறிப்பிட்ட பகுதி 408ஆம் பக்கத்தில் இருந்தாலும், 407ஆம் பக்கத்திலே அவரே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
தை பிறந்தால் வழி பிறக்கும்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழகத்தின் நெடுநாளைய பழமொழி. சூரியன் சுற்றும் நிலையின் கணக்கினைக் கொண்டு, அந்நாளில் தை முதல் ஆனி ஈறாக ஒரு பகுதியும் ஆடி முதல் மார்கழி ஈறாக மற்றொரு பகுதியும் விளங்கின. ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலம் இருள் நிலை கொண்டது. தை முதல் ஆனி ஈறாகக் கொண்ட காலம் பகல் நிலை கொண்டது. ஆண்டின் இரவுக் காலமாகிய ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலத்தில் - அதாவது ஆடிக் காற்றிலும், அடுத்துள்ள அய்ப்பசி மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் இடர்ப்படும் பொழுது மக்கள் உள்ளத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை ஒலி பேரொலியாய்க் கேட்கிறது. இந்த இரவு நிலை மாறிப் பகல்நிலை பெற்றுப் பயன்தரும் தைப் பிறப்பு நாளைப் புத்தாண்டின் புனித நாளாய், பிறப்பு நாளாய்ப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர்.
இன்றுங்கூட, தைப் பிறப்பைத் தனிப் பெருஞ்சிறப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆகவே நாம் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்துவோம் என்று அவரே எழுதியிருப்பதை அம்மையாருக்குப் பேச்சு எழுதிக் கொடுத்தவர்கள் பார்க்க மறந்து விட்டார்களா? அல்லது பார்த்து விட்டு அம்மையார் மாட்டிக் கொண்டு விழிக்கட்டும் என்று மறைத்து விட்டார்களா?
திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறி ஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் - தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது என்று 23-1-2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப் பட்டது. 1-2-2008 அன்று சட்டப் பேரவையில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.
செம்மொழிக்கும் ஆபத்தோ
இதே நிலை தொடருமேயானால் தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை எப்படி கொடுக்கலாம்? அது கருணாநிதி செய்து கொண்ட சுய விளம்பரம், அரசியலுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடு என்று சொன்னாலும் சொல்லக்கூடும். ஏனென்றால் செம்மொழி என்றாலே, அம்மையாருக்கு அவ்வளவு பாசம்! எட்டிக்காய் தின்றது போல! ஆட் சிக்கு வந்த முதல் நாள் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தையே தூக்கி வெளியிலே போட்டவர் ஜெயலலிதா. இன்றளவும் அந்த நூலகத் திற்கு இடம் கொடுத்தபாடில்லை.
சென்னைத் தீவுத் திடலில் 6.3.2006 அன்று நடைபெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திருமதி.சோனியாகாந்தி அவர்கள், மத்தியிலே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்பட்டவுடன் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்திருக்கிறோம். அதன்மூலம் வரலாற்றுப் புகழ்மிக்க தமிழ் மொழிக்கு பாரம்பரியமும் கலாச்சாரப் பெருமையும் தரக்கூடிய மிகப் பெரிய தகுதியினை இந்திய அரசு தந்திருக்கிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிய அந்த வரலாற்றுச் சாதனையின் முழுப் பெரு மையும், பங்கும் டாக்டர் கலைஞர் அவர்களையே சாரும். தமிழைச் செம்மொழியாக்குவதில் அவரது பங்கு மகத்தான ஒன்று என்பதை இந்த மேடையிலே நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று பாராட்டினார். இப்படி யெல்லாம் இவனுக்குப் பாராட்டுக் கிடைக்கலாமா என்ற வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் தேடித் தேடிப் பார்த்து கழக ஆட்சியில் நம்மால் செய்யப் பட்ட சாதனைகளையெல்லாம் மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளார். அதிலே ஒன்றுதான் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நாளை மாற்றுகின்ற செயலாகும்.
புரட்சிக் கவிஞர் என்ன சொன்னார்?
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத் தாண்டா? தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா? என்ற கேள்வியை எழுப்பி, நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபதாண்டுக் கணக்கு தரணியாண்ட தமிழருக்குத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
என்று பாட்டிலே பாடி வைத்த பாவேந்தர் பாரதிதாசன், என்னுடைய சுய விளம்பரத்திற்காக அவர் பாடியதா இக்கவிதை!
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில், அ.தி.மு.க. அரசு திருவள்ளுவர் ஆண்டினை என்ன செய்யப் போகிறது? தி.மு.கழக ஆட்சியில்தான் 1969இல் திருவள்ளுவர் ஆண்டு ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 1972இல் கழக ஆட்சி நடைபெற்ற போதுதான் திருவள்ளுவர் ஆண்டு என்பதை ஏற்று, அரசு இனிமேல் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் மற்றும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் இன்றளவும் கழக நாளிதழ் முரசொலியின் முகப்பில் திருவள்ளுவர் ஆண்டு 2043 என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் தை முதல் நாள்தான் தமிழர்க்குப் புத்தாண்டு நாள்.
டாக்டர் மு.வ. என்ன சொன்னார்?
மலேசியா நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண் டாடி வருகிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்த தில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தி வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல் லாம் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப் பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள் - என்று விளக்கியிருக்கிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, தன் பேச்சுக்கு ஆதாரமாக விஞ்ஞான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, சித்திரை மாதம் வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படை யாகக் கொண்டது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
அதற்கு விடையளிப்பது போல, சவுதி மன்னர் பல்கலைக் கழக லேசர் துறை பேராசிரியர் விஞ்ஞானி டாக்டர் வ. மாசிலாமணி அவர்கள் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்ட தொரு கட்டுரையில்,
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகச் சூழலில், கிராமத்து வானியல் விஞ்ஞானிகளின் கணக்குப்படி தைத் திங்கள் வையத்திற்கு எல்லாம் புத்துணர்வு கிட்டும் மாதம் என்று சரியாகவே கணக்கிட்டிருக் கிறார்கள். அதனால்தான் மார்கழி கடைசி நாள் பழையனவும், சோம் பலும் கழியும் போகியாகவும் தை முதல் நாளை சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கலாகவும் கொண் டாடியிருக்கிறார்கள். ...... சூரியன் தென்கோடி சென்று நின்று திரும்பி நம்மையெல்லாம் நோக்கும் நாள் தான் உலக உயிர்கள் புத்துணர்ச்சி பெறும் நாள். அந்த நாள் ஜனவரி 14. அந்த நாளைக் கொண்டு துவங்குவது தான் வானியல் வழியான சரியான ஆண்டுத் துவக்கம். ஜனவரி 14-க்கு அதாவது தை முதல் நாளுக்கு இத் துணை சிறப்பு இருக்கிறது. இந்தக் கட்டுரை படிக்கும் விஞ்ஞான ஆர்வலர்கள் மற்றும் மாணவர் களுக்கு ஒரு வேண்டுகோள். இண்டர் நெட் போய் யீநசாநடடி என்று தட்டுங்கள். கட்டாயம் புத்தாண்டுக்கு தைத் திங்களே பொருத்தம் என்பீர்கள் -என்று விளக்கியிருக்கிறார்.
காழ்ப்புணர்ச்சியே காரணம்!
எனவே தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டின் துவக்கம் என்பதை மாற்றி சித்திரை என்று ஜெயலலிதா அறிவித்துள்ள செயல் வழக்கம் போலவே அவருடைய காழ்ப்புணர்ச்சி, கழக அரசு நடைமுறைப்படுத்திய செயல்களுக் கெல்லாம் ஊறு தேட முற்படுகின்ற சூழ்ச்சிகளிலே ஒன்றே தவிர வேறல்ல!
தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள் என்று நான், சுய விளம்பரத்திற்காகச் செய்தேனா? அல்லது அதை மாற்றி சித்திரைத் திங்கள் என்று தற்போது அறிவிக்கும் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, சுய விளம்பரத்திற்காகச் செய்கிறாரா என்பதை; பல்கலைக் கழக நூற் றாண்டு விழா மண்டபத்தை என்று மில்லாமல் இப்போது புதிதாக தி.மு.க.வினரையும் முன்னாள் முதல மைச்சரையும் ஏசிப் பேசி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ள அநாகரிகச் செயல் குறித்து ஜெயலலிதாவின் கும்பல்தான் விளக்க வேண்டும்!
அன்புள்ள,
மு.க.
-----------------------------------------”விடுதலை” 15-4-2012
3.6.11
கடவுளை நம்புகிறீர்களா? -கலைஞர் பதில்
சுயமரியாதைக்காரரின் மானமிகு முத்திரைகள்!
பெரியாருக்கு இணை வேறு யார்?
என்னை இங்கே பாராட்டுவதாகக் கூறி அவர்கள் தலைமை யேற்றிருக் கின்ற திராவிடர் கழகத்தின் சார்பாக பாராட்டு என்று கூறி, இந்த விழாவிற்கு அமெரிக்காவில் இருந்து கூட நண்பர்களெல்லாம் வருகை தந்து, ஆன் றோரும், சான்றோரும், கவிஞர் பெருமக்களும் திரண்டிருக்கின்ற இந்தப் புகழ் பெற்ற மைதானத்தில் மேலும் எனக்குப் புகழ் சேர்க்கின்ற வகையில் பல கருத்துகளை வாரி இறைத்திருக்கிறார்கள்.
நான் இதற்கு உரியவன்தானா? இதை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு எனக்குத் தகுதி உண்டா? என்பதெல்லாம் வேறு விஷயம்.
ஆனால் தகுதி உண்டு, உரியவன் எப்படி என்றால், இவையெல்லாம் தந்தை பெரியார் அவர்களைச் சேரக் கூடியவை - பெரியார் அவர்களுக்கே உரியவை என்பது ஒத்துக் கொள்ளப்படுமேயானால் இவை எனக்கும் உரியவை என்று கூறுவதிலே எந்த வித அய்யப்பாடும் எனக்கில்லை.
இடமருகு என்ற எழுத்தாளரால் வரையப்பட்ட அருமையான நூல். நூலுக்குத் தலைப்பு இவர்தான் நாராயணகுரு. நாராயண குரு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் கேரளத்தில் பெரியாருக்குச் சமமாக என்று சொல்லமாட்டேன். பெரியார் அளவுக்கு என்று நான் கூறமாட்டேன். ஏனென்றால், பெரியார் எனக்குத் தலைவர் என்ற காரணத் தால் அல்ல. பெரியார் செய்த புரட்சி உலகத்திலேயே எங்கும், யாரும் இது வரையிலே செய்யவில்லை என்ற காரணத்தினால் யாரையும் நான் பெரியாருக்கு ஒப்பிட்டுக் கூறமாட்டேன்.
(தஞ்சையில் 12-6-2006 அன்று நடை பெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்.)
கலைஞர் பதில்
கேள்வி: திராவிட இயக்கங் களுக்கு இன்று பெரியார் என்னவாக இருக்கிறார்?
கலைஞர்: திராவிட இயக்கங் களுக்கு தந்தை பெரியார் ஆதர்ச சக்தியாக விளங்கி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை தந்தை பெரியார் எல்லாமாக விளங்குகிறார். திராவிட இயக்கம் என்று பெயர் அளவில் சொல்லிக் கொண்டிருக்கின்ற இயக்கங்களுக்குப் பெரியார் பெயர் அளவில் இருக்கிறார். அதாவது ஊறுகாய் போல உபயோகப்படுத்தப்படுகிறார்.
கேள்வி: திராவிட இயக்கங்களில் பெரியார் கொள்கைகள் மீது பெண்களின் பெருமளவு கவனத்தைக் கவர முடியாதது ஏன்?
கலைஞர்: பெரியாரின் கொள்கைகளில் தொடக்கக் காலத்தில் தாலி மறுப்பு, விதவைத் திருமணம், கடவுள் மறுப்பு, கலப்புத் திருமணம் போன்றவற்றை ஏற்றுக் கொள் வதில் பெண்களுக்கு சற்று தயக்கம் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போதெல்லாம் இந்தக் கொள்கைகளில் ஆண்களை விட பெண்கள்தான் மிகத் தீவிரமாக ஆதரித்து வருகிறார்கள் என்பதை நாங்கள் கண்டு வருகிறோம்.
(புத்தகம் பேசுகிறது இதழ் பேட்டியில் கலைஞர். முரசொலி 22-1-2008)
சேகர் குப்தா: நீங்கள் உங்களது அறிக்கை ஒன்றில், ராமர் எந்தப் பொறியியல் கல்லூரி யில் படித்தார்? என்று கேட்டிருக் கிறீர்களே?
கலைஞர்: அது என்ன ஒரு பெரிய கேள்வியா?
சேகர் குப்தா: இவ்விஷயத்தில் காங்கிரசில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் தேவையற்ற அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறார்கள். வால்மீகி ராமாயணத்தை மேற்கோள் காட்டி ராமர் குடித்தார் என்று கூறினீர்கள்.
கலைஞர்: ஆமாம். நான் வால்மீகி ராமாயணத்தைத் தருகிறேன். நீங்கள் தயவு செய்து அதைப் படித்துப் பாருங்கள். எங்களுக்கு அந்தத் திட்டம் (சேது சமுத்திரம்) வேண்டும்! நான் இப்பொழுது முதலமைச்சராக இருக்கிறேன். ஆனாலும், நான் ஒரு சுயமரியாதைக்காரன்! நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்! பெரியாரின் மாணவர்கள்!
சேகர் குப்தா: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?
கலைஞர்: ஆமாம். ஒரே ஒரு கடவுளை நம்புகிறேன்.
சேகர் குப்தா: எந்தக் கடவுளை நம்புகிறீர்கள்?
கலைஞர்: எனது மனச்சாட்சியை.
(என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முதலமைச்சராக கலைஞர் அளித்த பேட்டியிலிருந்து, 130ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் மலரிலிருந்து)
நாங்கள் பெரியார் கட்சிக்குக் காரண கர்த்தாக்கள் என்றால், பெரியாருடைய மாட்சிக்குக் காரணகர்த்தாவாக இன்றைக்கு விளங்குபவர் என்னுடைய ஆருயில் இளவல் வீரமணி என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது.
நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே ஊடல் ஏற்பட்டு, ஏன் பேச்சு வார்த்தை இல்லாத சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம் கூட அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தவன். ஏனென்றால், அப்படி எட்டிப் பார்த்தது, சதிக் குணத்தால் அல்ல. துர்குணம் என்பார்களே அந்தக் குணத்தால் அல்ல எட்டிப் பார்த்தது. நாம் அந்த வீட்டைத் தாய் வீடாகக் கொண்டவர்களாயிற்றே. அந்தத் தாய் வீட்டில் நடக்கின்ற காரியங்களை யொட்டித்தானே நம்முடைய வீட்டி லும் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்பதற்காக. சுருக்கமாகச் சொன்னால், புரியும்படி சொன்னால், அதைப் பார்த்து நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வதற்காக எட்டிப் பார்ப்பதுண்டு. அது ஒன்றும் குற்றமல்ல.
(29-9-2007 பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் தொடக்க விழா உரையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்)
கருவூலம் வீரமணி நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும் முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள, தந்தை பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள, அண்ணாவைப் பற்றித் தெரிந்து கொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன. எப்படியெல்லாம் நம்முடைய வரலாறு முன்னாள் இருந்தது. பின்னாள் அமைந்தது என்பதையெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும், அதற்கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்குகிறார்கள் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது.
இதே என் கையில் உள்ள இந்தப் புத்தகம் செங்கற்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாடு 1929 ஒரு வரலாற் றுத் தொகுப்பு. நான் நிச்சயமாகச் சொல் கிறேன். அவர் மாத்திரம் இன்றைக்கு திராவிடர் கழகத்திலே தந்தை பெரியா ருடைய வழித் தோன்றலாக அமையாமல் இருந்திருப்பாரேயானால் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்திருக்காது.
இதிலே உண்மைகள், வரலாற்றுச் சான்றுகள், இங்கே நடைபெற்ற மாநாடு, அந்த மாநாட்டிலே கலந்து கொண்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குக் கிடைத்திருக்காது. இதிலே சவுந்தரபாண்டியனா ருடைய உருவத்தைப் பார்க் கிறேன். வி.வி. ராமசாமி நாடார் உருவப் படத்தைப் பார்க்கிறேன். அவ்வளவு ஏன்? இதே செங்கற்பட்டிலே இருந்த வேதாசலம் முதலியார் படத் தையும் அதிலே பார்க்கிறேன். வேதாசல முதலியார் உங் களுக்குத் தெரியும். வேலைக் காரி படத்திலே அறிஞர் அண்ணா அவர்களால் உரு வாக்கப்பட்ட ஒரு கதாபாத் திரம். அந்த வேதாசல முதலி யார் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார்.
ஒரு முக்கிய பொறுப்பேற்றார் என்கின்ற இந்தச் செய்தியெல்லாம் எங்கள் சிந்தனையைச் செதுக்கச் செய்கின்ற செய்திகளாகும். இந்தச் செய்திகள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட புத்தகத் தொகுப்பு மாத்திரம் இல்லாவிட்டால். நான் உலகத்தில் உள்ள எல்லாக் கட்சி களையும் ஒப்பிட்டு இப்படிச் சொல்ல வேண்டுமேயானால், அவர் என்னைப் பாராட்டியதற்காக, நான் அவரைப் பாராட்டுவதாக அர்த்தமல்ல.
உலகத்தில் உள்ள எல்லாக் கட்சி அமைப்புகளைப் பற்றியும் சொல்ல வேண்டு மேயானால் எந்த ஓர் அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களைச் சேகரித்து வைத்து, அதை எதிர் காலத்திற்குத் தரக் கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணியாருக்க இருப்பதைப் போல வேறு யாருக்கம் இருப்பதாக நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவரி டத்திலே எங்களைப் போன்ற கட்சி களெல்லாம் பாடம் படிக்க வேண்டும் என்று எங்களுடைய முன்னோடிகள் கூட இங்கே வந்திருக்கிறார்கள்.
மூத்த தம்பிமார்கள் எல்லாம் வந்திருக் கிறார்கள். அவர்கள் எல்லாம் கூட இன்று முதல் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடக்கத் தோடு அவர்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக் கிறேன்.
(செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டின் 80-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அன்றை தமிழக முதல்வர் கலைஞர் 18-2-2008)
கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர், தமிழறிஞர் கலைஞர். இதில் எதை அதிகம் விரும்புகிறீர்கள்?
கலைஞர்: இந்த இரண்டையும் விட அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகின்றவன் நான்.
(தினகரன் பேட்டி 6-5-2006)
------------------ நன்றி: - “விடுதலை” 3-6-2011
6.2.11
ஏ, சூத்திரா, பஞ்சமா - எட்டி நில் என்ற காலம் போய்விட்டது!
மாவலி வழி வந்த நல்லாட்சி நடத்துகின்ற இந்தச் சூத்திரர்களின் ஆட்சியை ஒழித்திட சதி!
சதியை முறியடிப்போம், திராவிடத்தைக் காப்போம்!
சூத்திரர்களின் ஆட்சியை ஒழிக்க குறிப்பிட்ட ஒரு கூட்டம் சதி செய்கிறது. அதனை வீழ்த்தி திராவிடர் இனத்தைக் காப்போம் என்றார் முதல் அமைச்சர் கலைஞர். சென்னை சைதாப்பேட்டை - ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற திமுக பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி வருமாறு:
எங்கே சூத்திரர்கள், திராவிடர்கள் - அவர்கள் தஸ்யூக்கள் என்று அழைக்கப்பட்ட மக்கள் நல்லாட்சி நடத்துகிறார்களோ அவர்களை யெல்லாம் வீழ்த்திவிட்டு, அங்கே தாங்கள் வந்து அமர்ந்து கொள்ள ஒரு கதையை ஜோடிப்பார்கள்.
அந்தக் கதையை ஜோடித்து விட்டு அதற்கு ஒரு பண்டிகையின் பெயரை இடுவார்கள். அது போலத்தான் தமிழ்நாட்டிலே நடைபெறுகின்ற இந்த ஆட்சி நான் மாவலி அல்ல - அவ்வளவு வலிமை பொருந்தியவன் அல்ல - மாவலி மரபின் ஆட்சி (கைதட்டல்) அவ்வளவு தான் - மாவலி மன்னனுடைய மரபு ஆட்சி.
அந்த ஆட்சியில் ஒருவனாக நான் இருக்கிறேன் என்றால் என் தலைமையிலே இருக்கின்ற இந்த ஆட்சியை வீழ்த்த ஒழிக்க அகற்ற புறம் கூறி இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட என்னென்ன தில்லுமுல்லுகள் உண்டோ, திருகு தாளங்கள் உண்டோ அவ்வளவையும் செய்து பார்க்க ஒரு கூட்டம் தயாராகியிருக்கின்றது.
ஏனென்றால் அவர்கள் கையை விட்டு அதிகாரம் போய், ஆட்சி போய்; ஏ சூத்திரா, எட்டி நில்! ஏ பஞ்சமா! பக்கத்திலே வராதே என்றெல்லாம் ஆணையிட்ட அந்தக் காலம் போய் பல ஆண்டுகள் ஆகிறது. அதை மீண்டும் பெறுவதற்காக ஒரு கூட்டம் இன்றைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.
அந்த முயற்சிக்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள சாதனமாக இருப்பது செய்திப் பத்திரிகைகள் - தொலைக்காட்சிகள் - இவைகள் தான் அவர்களுக்குப் பக்க பலமாக இருக்கின்றன.
பொய்ப் பிரச் சாரத்தைச் செய்தே, இந்த ஆட் சியை வீழ்த்தி விட்டு, நாம் வந்து அமர்ந்து விடலாம் என்று கருதுகிறார்கள் என்றால், அது முடியுமா, நடக்குமா என்பதுதான் கேள்வி. ஆனால், அந்த முயற்சி இப்போது நடக்கிறதே - அதை நாம் இப்போது அனுமதித்துக் கொண்டிருக்கிறோமே - இதனுடைய விளைவு களையும் நாம் அனுபவித்துத் தானே ஆக வேண்டும் என்ற அந்த நிலையை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.
அப்படி எண்ணிப் பார்ப்பதன் அடையாளமாகத்தான் அந்தக் கருத்துகளை உள்ளடக்கித்தான் காலையிலே நடைபெற்ற பொதுக் குழுவிலே - 21 தீர்மானங்களை நாம் நிறைவேற் றியிருக்கிறோம். மாவலி மன்னன் எப்படியெல்லாம் மக்களை வாழ வைத்தான், எப்படியெல்லாம் சாதனை புரிந்து, அவர்களை சந்தோஷப்படுத்தினான் - அவர் களுடைய வாழ்விலே ஒளி பெறச் செய்தான் என்பதைப்போல, இந்த ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் எத்தகைய நலன்களையெல் லாம் பெற்றார்கள் என்பதை அடுக்கடுக்காக - வரிசை வரிசையாக எடுத்துச் சொல்ல நிலை இருந்த போதிலும், வாய்ப்பிருந்த போதிலும், நேரமில்லாத காரணத்தால், நான் அவைகளையெல்லாம் சுருக்கமாக உங்களுக்குச் சொல்ல விரும்பு கிறேன்.
நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். புராணக் கதை போலத்தான் தெரியும். ஆனால் ஒரு வரலாறு, நம்முடைய பக்கத்து மாநிலம் கேரளத்தில் நடைபெறுகின்ற ஓணம் பண்டிகையைப் பற்றிய ஒரு வரலாறு.
ஓணம் என்றால் நம்முடைய தமிழகத்தில் நடைபெறுகின்ற, ஆயுத பூஜை, தீபாவளி இதைப் போன்ற ஒரு பண்டிகை அங்கே நடைபெறுகிறது என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு உண்மை தெரிந்தது. ஓணம் என்பது - மாவலிச் சக்கரவர்த்தி என்று ஒருவர் கேரளத்தை ஆண்டார் என்றும், அவருடைய ஆட்சி எல்லா மக்களாலும் விரும்பப்பட்ட ஆட்சி என்றும், அந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று அந்த மக்கள் எல்லாம் வாழ்த்துகிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் ஒரு நிலை ஏற்பட்டபோது அங்கிருந்த உயர் ஜாதி மக்கள் இப்படியே இந்த ஆட்சியை விட்டுக் கொண்டு போனால் உயர் ஜாதி மக்களாகிய நாம் என்றைக்கு ஆட்சி பீடத்திலே அமர்வது என்பதற்காக சூழ்ச்சி செய்து மகா விஷ்ணுவிடத்திலே சென்று கேட்டார்களாம். இப்படி ஒரு ஆட்சி நடக்கிறது, அதை ஒழிக்க வேண்டும் என்று. மகாவிஷ்ணு கேட்டாராம்.
ஏன்? என்ன அநியாயம் செய்கிறார்கள் அந்த ஆட்சி யாளர்கள்? என்று! சொல்லும்படியாக ஒன்றும் இல்லை, அவர்களே ஆண்டு கொண்டிருக்கிறார் கள். எங்களுக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை என்று சொன்னார்களாம்.
அவனே ஆண்டால் உங்களுக்கு என்ன ஆகிவிடும் என்று கேட்டார் கடவுள். ஒன்றும் இல்லை; பிறகு நாமெல்லாம் ஆட்சிப் பீடத்துக்கு வருவது என்பதை எண்ணிக் கூட பார்க்க முடியாது என்றார்களாம். சரி பரவாயில்லை உங்களுக்கு அந்த ஆட்சியை மாற்றித் தருகிறேன் என்று சொல்லி, மாவலி சக்கரவர்த்தி யிடம் சென்று - அவர் பெயரே மாவலி - மிகப் பிரமாண்டமான பலம் பொருந்திய மன்னன். அவனிடத்திலே கேட்டுத்தான் பெற முடியுமே தவிர, போரிட்டு அந்த ஆட்சியைப் பெற முடியாது என்பதால் கேட்டுப் பெறுவதற்காக தந்திரம் செய்து, யாகங்களைச் செய்து, யாசகம் கேட்டு, மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டு, அவன் மூன்றடி மண்ணுக்கு விருப்பம் தெரிவித்து வழங்கியபோது இரண்டடி அளந்து பார்த்து விட்டு, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று கேட்டு வேறு வழியில்லாமல் மாவலி மன்னனுடைய தலையி லேயே காலை வைத்து - அப்படி காலை வைத்த நேரத்தில் பலம் கொண்ட வரையில் அழுத்தி அவனை அழித்தார், ஒழித்தார்!
அன்றே நடந்த சூழ்ச்சிகள்!
அவன் சாகும்போது கடவுளிடம் கேட்ட வரம் ஆண்டவனே, நான் இந்த மாநிலத்தை ஆண்டவன், நீ என்னை ஒழித்து விட்டு வேறொரு ஆட்சிக்கு இன்றைக்கு விதை தூவிவிட்டாய், இருந்தாலும் எனக்கொரு வரம் வேண்டும், அதைக் கொடு, நான் சாகத் தயார் என்றான். என்ன வரம் கேள் என்றான் ஆண்டவன். பெரிய வரம் ஒன்றுமில்லை, என்னால் வாழ வைக்கப்பட்ட மக்கள், என்னால் முன்னேறிய மக்கள், என்னால் வளம் பெற்ற மக்கள், என்னால் நலம் பெற்ற குடிபடைகள் - நான் இப்போது இறந்து போனாலும் - ஆண்டுக்கு ஒரு முறை நான் இங்கே வந்து அவர்களையெல்லாம் நான் ஆசை தீரப் பார்த்து, அவர்களின் வாழ்த்தைப் பெற வேண்டும், அந்த வரம் மாத்திரம் கொடு என் றானாம். பரவாயில்லை, அவன் ஒழிந்தால் சரி என்று அந்த வரத்தைக் கொடுத்து விட்டு ஆண்டவன் மறைந்து விட்டாராம்.
அந்த மக்களைக் காண அவர்களிடத்தில் வாழ்த்து பெற ஆண்டுதோறும் மாவலி வருகின்ற நாள் தான் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்ற நாள் என்று இன்றைக்கும் கேரளத்தில் கதை வழங்குகிறது, புராணமாக அல்ல, வரலாறாகவே அந்தக் கதை அங்கே வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் - நான் புராணங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம். கொடுமை புரிகின்ற அசுரர்களைத்தான் தேவர்கள் அழிப்பார்கள் என்று. மக்களை கொலை செய்கின்ற, மக்களிடத்தில் கொள்ளை அடிக்கின்ற, அவர்களை இம்சைப்படுத்துகின்ற மன்னர்களைத் தான் தேவர்கள் அழிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் நல்லவனாக, மக்களிடத்திலே அன்பைப் பெற்று நீதான் எங்களுக்குத் தொடர்ந்து மன்னராக இருக்க வேண்டுமென்று வாழ்த்தைப் பெற்ற ஒருவனை அழிக்கிறான் ஒரு ஆண்டவன் என்றால், அந்த ஆண்டவனுக்காக ஒரு விழா, அது ஓணம் பண்டிகை என்றால், அப்படிக் கொண்டாடப்படுகின்ற அந்த ஓணம் பண்டிகை, நல்லவனுக்காக அவன் நல்ல ஆட்சி நடத்தியதற்காக பாராட்டி நடத்தப்படுகின்ற விழா என்ற அளவில் அது கொண்டாடப்படுகின்றது.
ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். நான் இல்லாத காலத்திலேகூட, இன்னும் ஒரு நூறாண்டுக் காலத்திற்குப் பிறகு - கருணாநிதி என்று ஒருவன் இருந்தான் என்று வரலாறு சொன்னாலும், சொல்லாவிட்டாலும் - அவன் எழுப்பிய மாளிகைகள் - அவன் உருவாக்கிய கோபுரங்கள் - அவன் சித்திரித்த சின்னங்கள் - இவைகள் எல்லாம் இருந்து என் பெயரைச் சொல்லும். (பலத்த கைதட்டல்) ஆனால், என் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இவை அல்ல.
என் பெயர் பரவ வேண்டும் என்பதற்காக அல்ல. என் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நான் ஆற்றிய காரியங்கள் தமிழனுக்காக, தமிழ் மக்களுக்காக, தமிழ்ச் சாதி மக்களுக்காக, தமிழ்ச் சமுதாயத்திற்காக, நான் ஆற்றிய பணிகள் இவைகள் வரலாற்றில் இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் நிலைக்கத்தான் போகிறது. அதை யாரும் மறுத்து விட முடியாது.
யாரும் அழித்து விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு வரலாற்றை உருவாக்குகிற தனி மனிதனாக அல்ல, இங்கே இருக்கின்ற நம்முடைய கழகத்தினுடைய காவலர்கள், பொதுச் செயலாளரிலிருந்து, துணைப் பொதுச் செயலாளர்களிலிருந்து மற்றும் கழக முன்னோடிகள் எங்களை யெல்லாம் இன்றைக்கு வாழ்த்திப் பாராட்டி எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கின்ற எங்களுடைய ரத்தங்களாக, எங்க ளுடைய உதிரங்களாக எங்களுடைய உயிர் மூச்சுக்களாக என் எதிரே அமர்ந்திருக்கின்ற தமிழ் பெருமக்களாகிய நீங்கள் - நீங்கள் நினைத்தால் போதும். யாரோ, பெரியார் சொன்னதைப்போல, ஒரு மேல்சாதிக்காரன் - ஒரு பத்திரிகைக்காரன் எங்களைப் பாராட்டி எழுதிவிட்டால், அது தான் எங்களுக்கு வைத்த மகுடம் என்று நாங்கள் கருத மாட்டோம். எங்களை ஒரு சாதாரண தாய், தமிழ்க் கிழவி, அப்பா, எங்களுக்கு வயிறாரச் சோறு கொடுத்தாயே, வாழ்க என்று சொன்னால் தமிழ்த் தாயே உருவெடுத்து வந்து வாழ்த்தியதாக நாங்கள் கருதிக் கொள்வோம்.
எனவே, யாருடைய பாராட்டையும் அல்ல - யாருடைய மதிப்பு மரியாதையையும் அல்ல. நான் வேண்டி விரும்புவது நான் என் காலத்தில் ஆற்றிய இந்தப் பணிகளையெல்லாம் பாராட்டுவதற்கு கடல் போல் திரண்டிருக்கின்ற நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள். உங்களை நான் என்றைக்கும் மறக்காமல் இருப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் தமிழகத்திலே செய்து முடித்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன்.
செய்யத் தொடங்கியிருக்கிறேன். (கைதட்டல்) இந்தத் தொடக்கத்தைத் தொடர்ந்து முற்றாக முடிக்க வேண்டிய கடமை, கண்ணின் மணிகளே, தமிழ்த் தாய் பெற்றெடுத்த தங்கங்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்த ஓட்டமே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடி நரம்புகளே, ஒரு முடிவு எனக்கேற்படுமானால், அப்பொழுது கூட, இந்தப் பொறுப்புகளை எல்லாம் அண்ணா எப்படி என்னிடத்திலே ஒப்படைத்து விட்டுப் போனாரோ அதைப் போல இந்தப் பொறுப்பையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்பு களே, உங்களிடத்திலே ஒப்படைத்திருப்பதாகக் கருதிக் கொண்டு இந்தக் கழகத்தைக் காப்பாற் றுங்கள், திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுங்கள், திராவிட இனத்தைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்.
-இவ்வாறு கலைஞர் உரையாற்றினார்.
-------------- சைதைப் பொதுக் கூட்டத்தில் முதல் அமைச்சர் கலைஞர்-"விடுதலை” 5-2-2011
28.6.10
கருணாநிதியைப் பத்தி கண்டவனெல்லாம் கன்னா பின்னான்னு பேசிக்கிட்டிருக்கான்!
கலைஞரை பற்றி காமராசர் சொன்னது
ஸ்தாபனக் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தி.மு.கழகம் நெருக்கடி நிலையைக் கண்டித்த போதிலும், திமுக அரசு இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது பற்றி மனக் கசப்புடன் பேசினார். கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார். அதைக் கேட்டதும் காமராசுக்கு கோபம் வந்து விட்டது.
அட சும்மாக் கெடப்பா ரொம்பத் தெரிஞ்சவன் போல... இந்த நேரத்துலே எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் கருணாநிதி நடத்துக்கிட்டாரு. அது ஒம் மூளைக்கி எப்படி எட்டும்னேன்... சும்மா வீறாப்புக் காட்டினா ஆச்சா... அதுனால என்ன லாபங்கறேன்... அந்தம்மா டி.எம்.கே.கவர்மெண்டை டிஸ்மிஸ் பண்ணும், இப்ப இங்க மிஞ்சியிருக்கிற சுதந்திரமும் இல்லாமல் போகும். வேற என்ன நடக்கும்னேன்? இந்த நேரத்துக்கு இங்க கருணாநிதி தொடர்ந்து பதவியில் நீடிச்சுக்கிட்டு இருக்கறது ரொம்ப அவசியம். அதை மறந்துடாதே. பிரை மினிஸ்டரைப் பத்தி ஆரும் எதுவும் பேசக்கூடாதுன்னு உத்தரவு வருது. அங்கங்க இருக்கற சீப் மினிஸ்டரெல்லாம் அந்த உத்தரவிலேயே தன்னைப் பத்தியும் ஆரும் எதுவும் பேசக்கூடாதுன்னு சேர்த்துக்கறான். பார்க்கப்போனா இப்ப கருணாநிதியைப் பத்தித்தான் கண்டவனெல்லாம் கன்னா பின்னான்னு பேசிக்கிட்டிருக்கான். கருணாநிதி நினைச்சா இந்த உத்தரவைப் பயன்படுத்தி அதை தடுக்க முடியும். ஆனா அவரு அப்படிச் செய்யல அதை மறந்துடாதே. கருணாநிதி விரும்பினா ப்ரை மினிஸ்டரோட ஒத்துப் போயி நிம்மதியா இருந்துக்கிட்டிருக்க முடியும். அதையும் அவரு செய்யல. இதையெல்லாம் நினைச்சுப் பார்க்காம ஏதோ வாயிருக்குதுன்னு பேசிட்டா ஆச்சா என பொரிந்து தள்ளினார் காமராசர். கொஞ்ச நேரத்துக்கு அறையில் ஒரே நிசப்தமாக இருந்தது.
------------------- மதுரைமணி, 2.6.2008
கொள்கையா? பதவியா?
இந்தித் திணிப்பை எதிர்த்து இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவுக்குத் தீ மூட்டும் போராட்டக் கட்டத்தில் மதுரையில் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூறியது. (1986 டிசம்பர்)
ஒரு கொள்கைக்காக ஒரு கோட்பாட்டிற்காக - இந்த இயக்கத்தைப் பெரியார் உருவாக்கி, அது அரசியல் ரீதியிலும் மக்களுக்குப் பணியாற்ற வாய்ப்புகள் உருவாக வேண்டும் என்ற காரணத்தால் அண்ணா அவர்களால் தி.மு.கழகம் உருவாக்கப்பட்டு 18 ஆண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்து, 9 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து, அதற்குப் பிறகு ஆட்சி போய்விட்டதே என்ற ஏக்கப் பெருமூச்சு விடாமல், ஆட்சியில் இருந்தாலும் இதுதான் கொள்கை, இல்லா-விட்டாலும் இதுதான் கொள்கை என்றுதான் நம் இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
சிலரோ, பதவிக்காகக் கொள்கைளை இழப்பார்கள், நாம் கொள்கைகளுக்காகப் பதவியை இழப்பவர்கள்; உயிரைக்கூட இழக்கத் துணிந்தவர்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் பதவிக்காக கொள்கையை இழந்தவர்களுக்கும் கொள்கைக்காகப் பதவியை இழந்தவர்களுக்கும் இடையில் நடக்கின்ற போராட்டம்.
3.6.10
சட்டமன்றத்தில் கலைஞரின் நகைச்சுவைகள்!
இந்த 50 ஆண்டுகளில் சட்டசபையில் கலைஞர் உதிர்த்த நகைச்சுவை முத்துக்கள் பலப் பல. அவற்றில் சில முத்துக்கள் மலரும் நினைவுகளாக இங்கே!
பீர் முகம்மது: விவசாயக் கூலிகளுக்குக் கருத்தடை ஆபரேஷன்கள் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவரும் ஆபத்து இருக்கிறது. அரசு இதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்!
கலைஞர்: கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பீர் முகம்மதுகூட அவரது தந்தைக்கு 33வது பிள்ளை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.விநாயகம்: மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?
கலைஞர்: இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் (14.3.1969)
ஜேம்ஸ்: மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதுபற்றி ஆராய அமைக்கப்பட்டு இருக்கும் ராஜமன்னார் குழு, ஒன் சைடெட் லவ் போலத்தான் இருக்கிறது.
கலைஞர்: ஒன் சைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை! (26.2.1970).
அப்துல் லத்தீப்: கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவதுபற்றி ஆலோசிக்குமா?
கலைஞர்: ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலை கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது. (8.12.1971)
கோவை செழியன்: ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசிய மயமாக்கிவிட்டால் பிரச்சினை இருக்காது அல்லவா?
கலைஞர்: ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனைவரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்! (18.12.71)
காமாட்சி: மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை.. இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?
கலைஞர்: மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே! (14.3.73)
கலைஞர்: நாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ்காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.
அனந்தநாயகி: அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன்றைக்கு இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?
கலைஞர்: அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம். (23.3.1973)
சோனையா: தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அரிய விரும்புகிறேன்
கலைஞர்: பல பேர்மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களைக் கூறி, உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்ட நான் விரும்பவில்லை. (27.3.73)
பி.ஹெச் பாண்டியன்: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது!
கலைஞர்: புல் என்பது புல்லா?(16.2.1989)
பி.ஹெச்.பாண்டியன்: ஹை கோர்ட்டில் நீதிபதிகள் என்றைக்கு ஓய்வு பெறுகிறார்கள் என்ற செய்தியை ஓர் ஆண்டுக்கு முன்பே வாங்கி விட்டால், வழக்குகள் தேங்காது. இதற்கு முதல்வர் என்ன சொல்கிறார்?
கலைஞர்: காலிகள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பாண்டியன் சொன்னது நல்ல யோசனைதான்! (7.4.1989)
ஆர். சிங்காரம்: இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானே? புதிய வித்வான்களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான்கள்!
கலைஞர்: நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா? (4.5.1989)
நூர்முகம்மது: கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல்வருடைய கருணை கொண்ட-கடைக்கண் பார்வை குமரியின்மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலயை அமைக்க, முதல்வர் முன்வருவாரா?
கலைஞர்: குமரியின்மீது கடைக் கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது! (6.5.1989)
பி.வி. ராஜேந்திரன்: உப்பு உற்பத்தி மரணப் படுக்கையில் கிடக்கிறது. மரணமே அடைந்து, அது சவப் பெட்டிக்குள் சென்று கொண்டு இருப்பதை உணர்கிறீர்களா?!
கலைஞர்: தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சவப் பெட்டிக்குள் போய்விட்டதா என்று கேட்கிறார்கள். சவப்பெட்டிக்குள் போனாலும் அது அழுகாமல் இருக்க, அதற்கும் உப்புதான் தேவை! (20.1.90)
ரகுமான்கான்: இந்திராகாந்தியைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம்கூட ஜாமீனில்தான் இருக்கிறார்கள்!
கலைஞர்: தவறான தகவல்! என்னையும் பேராசிரியரையும் அந்த வழக்கில் விடுதலை செய்து விட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக்கிறார். (9.4.90)
வி.பி. துரைசாமி: ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?
கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்! (24.4.1990).
குமரி அனந்தன்: நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர்செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு அய்யப்பாடு...
கலைஞர்: குமரி அனந்தனுக்கு அப்படியொரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம்.. அதையும் முயற்சித்துப் பாருங்கள். (7.5.1990).
தொகுப்பு: எம். பரக்கத்அலி
நன்றி: ஆனந்தவிகடன்
--------------நன்றி:- “விடுதலை” 2-6-2010

