Search This Blog

30.4.13

திராவிடர் கழகம் தொழிலாளர் ஸ்தாபனமே!-திராவிடர் உணர்ச்சி வலுத்தால்...


பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்மார்களே! தோழர்களே!! இன்று நடைபெறும் இவ்வாண்டு விழாவிலே நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் என்னைப் பெருமைப்படுத்தி வாழ்த்துரைகள் வழங்கிய தொழிற் சங்கங்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள் ளுகிறேன். பெருமைப்படுகிறேன் தொழிலாளர் நிறைந்த இப்பகுதியிலே திராவிடர் வாலிபர் கழகம் 8 ஆண்டுகளாக வேலை செய்து வருவதையறிந்து நான் பெருமைப்படுகிறேன். காரணம் என்ன? தொழிலாளருக்கு உள்ளபடியே பாடுபடும் ஸ்தாபனம் திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதுவே யாகும். மற்ற ஸ்தாபனங்கள் தொழிலாளர்க்கும் - முதலாளிக்கும் இடையேயிருந்து தங்கள் தங்கள் நலனைச் சாதித்துக் கொள்பவைகள் என்பதே எனது அழுத்தந்திருத்தமான எண்ணமாகும். இவ்வபிப் பிராயம் இன்று நேற்றல்ல எனக்கு ஏற்பட்டது, கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தக் கருத்து எனக்கு இருந்துவருகிறது. இன்றைய நிலையில் அவ்வெண் ணம் மேலும் ஊர்ஜிதமாகிவிட்டதை நான் காண் கிறேன்.

இஷ்டமில்லை என்றாலும்...

சில மாதங்களுக்குமுன் நடைபெறுவதாயிருந்த அகிலஇந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தின்போது பத்திரிகைக்காரர்கள் அதுபற்றி எனது அபிப்பிராயம் கேட்டனர். அது சமயம் நான் திருச்சியில் நமது கழக நிர்வாகத் தலைவர் தோழர் டி.பி.வேதாசலம் அவர்கள் இல்லத்தில் தங்கியி ருந்தேன். அங்குதான் பத்திரிகை நிருபர்கள் என்னைச் சந்தித்தது. வேலை நிறுத்தம் செய்வது எனக்கு இஷ்ட மில்லை. ஆனால், வேலை நிறுத்தம் தொடங்கி விட்டால் அதைத்தான் நான் ஆதரிப்பேன் என்றேன். இவ்வாறு கூறுவது எங்களுக்குப் புரியவில்லையே என்றனர் பத்திரிகை நிருபர்கள்.
உங்களுக்குப் புரியாதுதான், நான் புரியும்படி விளக்கம் கூறுகிறேன் என்று மேலும் அவர்களிடம் நான் சொன்னேன், நமது குழந்தைகள் இருக்கின்றன; நெருப்புக்கிட்டே போகாதே என்று எவ்வளவோ பயப் படுத்தித்தான் வைக்கிறோம். எனினும் அக்குழந்தை தீயில் குதித்துவிட்டு, அய்யயோ சுடுதே! சுடுதே!! என்று அலறும்போது, பெற்றெடுத்த தாயோ, தகப் பனாரோ அந்தக் குழந்தையை மேலும் ஏன் தீயில் குதித்தாய் என்று கடிந்து இரண்டு உதை கொடுப்பது அறிவுடைமையாகுமா? அவர்கள் செய்தது தவறா யிருப்பினும் அந்தச் சமயத்தில் நாம் அவர்களைக் கடிந்து தண்டிப்பது நியாயமில்லையல்லவா? அதேபோன்று வேலை நிறுத்தம் கூடாதென்று கடைசி நேரம்வரை நான் ஒவ்வொரு வேலைநிறுத்தக் காலங்களிலும் கூறி வந்திருக்கிறேன். இதனால் நான் தொழிலாளிக்கும் துரோகி என்றுகூடக் கெட்ட பெயர் சூட்டப்பட்டேன். ஆனால் வேறு வழியின்றி வேலை நிறுத்தம் துவக்கப்பட்டுவிட்டால், மற்றவர்களைக் காட்டிலும் நானே அதில் அதிக கவலைப்பட்டு என்னாலியன்ற தொண்டு புரிந்து வந்திருக்கிறேன். அத்தன்மையிலேயே அனைத்து இந்திய ரெயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் அறவே கூடாதென் பதும், எக்காரணத்தாலேனும் துவக்கப்பட்டு விட்டால் நானும் எனது இயக்கத்தாராகிய திராவிடர் கழகத்தினரும் ஆதரித்தே தீருவோம் என்பதும் என்று கூறினேன். இவையனைத்தையும் பத்திரிகை நிருபர்கள் எழுதிக் கொண்டார்கள். ஆனால் அதைச் சிறிதுகூட வெளியிடவேயில்லை.

பத்திரிகைகளின் மோசடி

சில நாள்கழித்து மற்றொரு காரியமாக அதே நிருபர்கள் என்னிடம் வந்தனர். என்னையா! முன்பு தாங்கள் எடுத்துக் கொண்ட செய்தி வெளியிடவே யில்லை. மீண்டும் வேறு காரியத்துக்காக என்னை அபிப்பிராயம் கேட்க வந்துவிட்டீர்களே என்று சற்று கோபமாகக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்; நாங்கள் என்ன செய்வது? நீங்கள் தொழிலாளரின் வேலை நிறுத்தத்திற்கு எதிரிடையாக அபிப்பிராயம் கூறுவீர்கள் என்று பத்திரிகை உலகத்தார் நினைத் தார்கள்போலும். ஆகவேதான் நாங்கள் அனுப்பிய செய்தியை கத்திரித்து விட்டார்கள். அது எங்கள் குற்றமல்ல, பத்திராதிபர்களின் குற்றமாகும் என்றனர்.

நம் தொண்டின் முக்கியம்

இதை ஏன் கூறுகிறேன் என்றால், சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், அது பாடு பட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என் பதை எடுத்துக்காட்டவே யாகும். இதைத் தவிர, எங்களுக்கு பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவை களில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காக தொழிலாளர் தயவைப் பெற அவர்களிடத்திலே வீண் படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக் கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங்களிடத்தில் கிடையாது.

தொழிலாளரின் குறைகள்

பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்துவிட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின்பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, சோசிய லிஸ்ட்டு, தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும், அடி தடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றையத் தொழிலாளர் இயக்கமாக இருந்துவருகிறது.

இன்றைய தொழிலாளர் தலைவர்கள் எனப்படு வோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரிவினை களை உண்டாக்கித், தமது சுயநலத்துக்காகப் பயன் படுத்திக் கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக்கட்சிப் போட்டிகளால் தொழிலாளர்களுக்கு இம்மியளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூற முடியுமா? என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும். எனவே தான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதைவிட மக்களுக்கு வேண்டிய அறிவுத் துறையிலே பாடுபட்டுவருவதின் கருத் தாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டுழைத்தும் பலனறியாத பாட்டாளி மக்களுக்கும் பொதுவாக நம் நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலை திட்டங்களுமாகும்.

ஆரியச் சூழ்ச்சி


நம் நாட்டுக்கு கி.மு.2000 ஆண்டு காலத்தில் திராவிடம் என்றே பெயர் இருந்தது. இராமாயணங்களிலும் புராணங்களிலுங்கூட நம் நாட்டுக்கு திராவிடம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரியர் இந்நாட்டுக்குக் குடியேறிய பின்னர்தான் திராவிடம் என்பதற்குப் பதிலாக தென்னாடு என்று பெயர் கொடுக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு என்றும் வழங்கி வரலாயிற்று. திராவிடம், திராவிடர் என்பதால் ஆரியர் ஆதிக்கத்துக்கு என்றும் எதிர்ப்பு இருக்கும். ஆதலால் திராவிடம் என்ற உணர்ச் சியை அறவே அழித்தொழிக்கச் சூழ்ச்சி செய்துவரலாயினர். ஆனால் தற்சமயம் இந்நாட்டிலுள்ள பார்ப்பனர் கூறலாம்; நாங்கள் ஆரியரல்ல நாங்களும் இந்நாட்டினர் தானென்று. ஆனால் இதே சமயத்தில், நம் நாட்டுப் பற்றோ, மொழிப்பற்றோ சிறிதும் கிடையாது. ஆரியக் கலாசாரத்தையே பின்பற்றி வருவதோடல்லாமல், நமது முன்னேற்றத்தையும் முயற்சியையும் ஒழிப்பதையே அவர்களது முழுமுயற்சியாகக் கொண்டிருக்கின்றனர். இவைகளைக் கைவிடாமல் நாங்கள் ஆரியரல்ல என்று கூறிவிட்டால் போதுமா?

உதாரணமாக ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ இந்தியர்கள், நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள்தானே! ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சியிருக்கிறதா? நமது மக்களைப்பார்த்தால் டேய்! தமிழ் மனுசா என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் எப்படிப் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல், தான் ஏதோ நேராக அய்ரோப்பாவில்  பிறந்து இங்கு குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவோ நடக் கிறார்கள்.

அதைப்போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும், மேல் நாட்டி லிருந்து குடியேறிய ஆரியர் களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாயிருந்தும் கூட, ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக, அடிமைகளாக மதித்து நடத்துவதும், அதற்கேற்ப நம் நாட்டு மன்னர்களை ஏமாற்றி ஜாதி-மதம்-கடவுள்-புராணம்-இதிகாசம் பேரால் தங்களுக்குத் தனிச்சலுகைகளும் பெற்று, பாடுபட்டு உழைக்கும் ஏழை மக்களுக்கு வாழ்வில் வறுமையும் தொல்லையும் இருக்க, பாடுபட்டுழைக்காத ஒரு கூட்டத்துக்கு வாழ்க்கையிலே மிதமிஞ்சிய ஆதிக்கமும் இருந்து வருகிறது.

திராவிடர் உணர்ச்சி வலுத்தால்... இன்றுகூட எந்தப் பார்ப்பனனையாவது பார்த்து நீ என்னையா பிராமணனா என்று கேட்டால், இன்றைய நிலையில் அவ்வாறு கூறிக்கொள்ளச் சற்று அச்சம் கொண்டாலும், நான் பிராமணனல்ல என்று கூறுவானேயன்றி நானும் திராவிடன்தான் என்று கூற முன்வரமாட்டார்களே ஏன்? திராவிடர் என்ற உணர்ச்சி வலுத்துவிட்டால் பார்ப்பனிய ஆதிக்கத் துக்கு, அன்றே அழிவு ஏற்பட்டுவிடும் என்பதாலேயாகும்.

எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள் பார்ப்பனர்களுக்குத் தனிப்பட்ட தொல்லையோ தீங்கோ விளைவிப்பதென்பது எங்கள் கொள்கை யல்ல; பார்ப்பனியத்தை அறவே ஒழித்து மக்களிடையே ஒன்றுபட்ட சமுதாய உணர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்பதாகும் என்று கூறுகிறோம். இதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் இனியாவது அறிந்து தம் தவறுதலைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து எங்களது முயற்சியை அழிக்க மேலும் சூழ்ச்சிகள் செய்வார்களேயானால் அது தமக்குத் தாமே அழிவு தேடிக்கொள்வதாக முடியும். பார்ப்பனர்களுக்கு தனித் தொழிலாளர் கழகம் என்று ஒன்று இருக்கிறதா? காரணம் என்ன? உழைக்கும்வேலை அவர்களுக்குக் கிடையாது. எதற்கும் லாயக்கற்ற பார்ப்பனனாயிருப்பினும் கடவுள் பேரால் பாடுபடாமலேயே சுகவாழ்வு வாழ்வதேன்? பிறவியின் பேரால், ஜாதியின் பேரால் ஒரு கூட்டம் ஆதிக்கம் செலுத்தும் அக்கிரமம் இந்நாட்டைத் தவிர வேறு நாட்டில் இருக்கிறதா? அதுவும் சுயராஜ்யம் பெற்றபின்னரும் இந்த அக்கிரமம் இருக்கலாமா? அறிவின் பேரால், உழைப்பின் அருமையின் பேரால் ஒருவனுக்கு உயர்வும் நல்ல பலனும் இருக்க வேண் டுமா? ஜாதியின் பேரால் பதவியின் பேரால் சோம் பேறிகளெல்லாம் உயர்ந்தவர்கள் என்று புகழப்படுவதா என்று கேட்கிறேன்? தொழிலாளத் தோழர்களே! இந்த உணர்ச்சியும், மானமும், ரோஷமும் உங்களுக்கு ஏற்படாமல், உங்களுக்கு என்னதான் கூலி உயர்ந் தாலும் பயன் என்ன?

சமுதாய அமைப்பு

சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைப் பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.
சமுதாய அமைப்புப் பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டார சன்னதிகள் வரைதான் தெரியுமா? சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.

ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடியவில்லை என்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும். அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி-பட்டம் ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?

சமுதாயமும் அரசியலும் வெவ்வேறல்ல

சமுதாயம் வேறு, அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவது தானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்து வமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால் நமது மதமிருக்கிறதே அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல் லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம். எனவே நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால் சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது.

வாலிபர் பங்கு

இவ்வித சமுதாயப் புரட்சியை உண்டாக்குவதில் தீவிரப்பங்கு கொள்ள வேண்டியவர்கள் வாலிபர்களே யாகும். அவ்வித தன்மையில் பொன்மலை திராவிடர் வாலிபர் கழகத்தார் மேலும் தமது தொண்டினை ஆற்ற வேண்டும். அதற்கு இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் ஆதரவு தரவேண்டும். கம்யூனிஸ்டுகளும், சோஷியலிஸ்டுகளும் மறைமுகமாகப் பார்ப்பனியத் துக்கு ஆதரவு தரும் சூழ்ச்சியை விட்டொழிக்க வேண்டும். கழகக்கொள்கைக்கிணங்க அதாவது பார்ப்பனியத்தை, மூடப் பழக்க வழக்கங்களை தொழி லாளர் இடையேயிருந்து அகற்றுதல் என்பதை விட்டுவிட்டு, வேறு என்னதான் தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கு நிரந்தர உரிமை ஏற்படாது. வேண்டு மானால் தொழிலாளர் பேரால் சுயநல வேட்டையும் அல்லது தத்தமது அரசியல் ஆதிக்க வேட்கையையும் பூர்த்திசெய்து கொள்ள முடியுமேயல்லாது பயன் ஒன்றும் காணமுடியாது. இதை இனியாவது கம்யூனிஸ்டுகளும், சோசியலிஸ்டுகளும், தீவிரவாதிகள் எனப்படுவோரும் உணர வேண்டும்.

எச்சரிக்கை!

தொழிலாளரும் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை யாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்களுக்குத் தொழிலாளர்கள் தங்கள் சக்தியை வீணாக்குவதிலும், குறிப்பாகத் தேசியத்தின்பேரால் ஏமாறுவதிலும் நீங்கள் உஷாராயிருக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளத் தோழர்களே! எதிர்காலத்தில் மேலும் மேலும் நீங்கள் பலவிதத் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். தவிர, இனிப் பொதுத் தொண்டில் கூட நமக்குள் கட்சி பிரதிகட்சி, வீண் எதிர்ப்புகள் இருத்தல் கூடாது. சகோதரத்துவ முறையிலேயே தொண்டாற்ற வேண்டும். என்னைக் கேட்டால் ஒரே மேடையில் ஒரு ராமாயணக்காரரும், ஒரு பெரிய புராணக்காரரும், காங்கிரஸ்காரரும், நாமும் கலந்து பேசவேண்டும். பார்ப்பனரும் நம் மேடையில் பேசவேண்டும் அவரவர்கள் கருத்தை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் அதைக் கேட்கவேண்டும். சிந்தித்து அவரவர்களின் முடிவுக்குச் செயலாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடத்திலே மனமாறுதல் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.

நாம் வழிகாட்டுவோம்

நம்மை வேண்டுமானால், காங்கிரஸ்காரரோ, மதவாதிகளோ அவர்கள் மேடையில் அனுமதிக்க மாட் டார்கள். ஆனால் நாம் அதற்கு வழி காட்டவேண்டும். ஏனென்றால் நம்மிடம் ஒன்றும் ஒளிவுமறைவு கிடையாது. அரசியல் லாபத்துக்காக இயக்கத்தை நடத்துபவர் களல்ல நாம்; எனவே, தோழர்களே! எதிர்காலத்தில் நமக்குப் பொறுப்பு அதிகமிருப்பதால், திராவிடர் அனைவரும் ஒன்றுபட்டு வாழவும், உழைப்பாளிகளுக்கு உள்ளபடியே உரிமை ஏற்படவும் பாடுபட வாலிபர்கள் முன்வரவேண்டும். பார்ப்பனத் தோழர்களும் கால நிலையை அறிந்து, மனமாற்றம் அடைந்து திராவிட நாட்டின் நலனுக்காக ஆவன செய்ய வேண்டுகிறேன். அதுவே திராவிடர் இயக்கத்தின் கொள்கையாகும். இனிப்பொதுத் தொண்டில் மக்களிடையே ஒரு சிறிதும் துவேஷ உணர்ச்சி கூடாது. கனம் ஆச்சாரியாரும் நானும் சந்தித்த வாய்ப்பு இதற்கு வழிகாட்டியாகவும், அனுகூலமாகவும் இருக்குமென்பதே எனது எண்ண மாகும்.

-----------------------------------22.05.1949ஆம் நாளில் பொன்மலை திராவிடர் கழக 8ஆம் ஆண்டு விழாவில் பெரியார் ஆற்றிய பேருரை - "குடிஅரசு' - சொற்பொழிவு - 28.05.1949

28.4.13

புரட்சிக் கவிஞரின் சிந்தனைகள்!

புரட்சிக் கவிஞர்
புரட்சிக் கவிஞர் பிறந்த நாள்: 29.4.1891 மறைவு: 21.4.1964

ஆதி சைவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் - ஆதிக்குப் பின் யார் என்றால் காதில் வாங்காத வர் போல் சென்று விடுவார்கள் என்பதை
-ஆதி சைவர்கள் என்பார்      ஆதிக்குப்பின் யார்? என்றால் காதினில்  வாங்காரடி -சகியே       காதினில் வாங்காரடி -    எனக் கவிஞர்  குலத்தால் தம்மை உயர்ந்தவர் என்று சொல்லிக் கொண் டிருப்பவரை  எள்ளி நகையாடுகிறார்.
பொருளே குறிக்கோள்  பார்ப்பனர்கள் நடத்தும் சடங்கும், மந்திரமும் அவர் தம் வயிறு வளர்ப்பதற்கேயன்றி உண்மையான பயனை நல்குவன அல்ல என்னும் கருத்தை,
பெரிய தொரு சடங்குண்டே ! மந்திரமுண்டே அந்த எலாம்  செய்யத்தான் வேண்டும் ஆனால்
பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும் எந்த மட்டும்  கொடுக்கணுமோ  குடுக்கவேணும்  என்றுரைத்தான் எல்லோரும் சிரிப்பில் ஆழ்ந்தார்
-எனக்கவிஞர் மந்திரத்தை விடப் பொருளிலேயே கருத்தாய் இருக்கும் பார்ப்பானின் செயலை எள்ளி நகை யாடுவது நகைப்பை விளைக்கிறது.
*************
தமிழ்த் திரைப்படம்
தமிழ்த்திரைப்படத்தின் தகுதியைத் திறனாய்வு செய்யும் போக்கில் எள்ளி நகையாடுகிறார்,  அத்திம்பேர், அம்மாமி எனப் பேசும் ஆரியத்தமிழும் , கடவுளர்கள் அட்டை முடி , காகிதப் பூஞ்சோலை,   கண்ணாடி, முத்து வடம் முதலான காட்சிகளும் தமிழ் படத்தில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கின்றன புதுமை சிறிதும் இல்லை பரமசிவன் அருள் புரிய வந்து வந்து போவார், கற்புடைய பெண் களுக்குத் துன்பம் வரும் பின் தீரும்     இதுதான் இன்றைய தமிழ்த் திரைப் படங்களின் நிலை என உரைப்பதன் வாயிலாக நகைச்சுவை  புகட்டுகிறார் கவிஞர்.
*************
அறியாமை
பாண்டியன்  பரிசு காப்பியத்தில் வேலன் பேழையுடன் வருவதை எதிர் நோக்கியிருக்கும் வீரர்களின் அறி யாமையை காட்டும் பகுதி நகைச்சுவை மிக்கது . கழுதையிடம் உதைபட்டு விழுபவனையும், கல்தூணை மற் போருக்கு அழைப்பவனையும், ஆலடியில் நின்றிருந்த கழுதை தன்னை அங்கொருவன் தொட்டுதையும் பட்டு வீழ்ந்தான்
காலடி ஓசை காட்டாதொருவன் சென்று
கல்தூணை மற்போருக் கழைக்க  லானான்
-எனக்காட்டி நிலவு ஒளியிலும் இப்படி
என்றால் மிகு  இருட்டென்றால் என்ன ஆவாரோ?  எனக் கவிஞர் உசா வுவது நகைச்சுவையை மிகுவிக்கின்றது.
*************
பண்டிதர்கள்  பழைய மனப் போக்குடையவர்கள்;  பகுத்தறிவுக்குப் பொருந்தி வராத பழைய கதைகளின் குறைகளுக்கெல்லாம் விளக்கம் சொல் லிச் சரி செய்ய முயல்வது அவர்கள் இயல்பு . இதனை இல்லத்தலைவி வீட்டுப் பணிகள் அனைத்தையும் தணிக்கை செய்வதற்கு ஒப்பிடுகிறார்.
பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக்  கெல்லாம்
பணிக்கையிடல் போல்  அனைத்தும்                   தணிக்கை  செய்தே
-எனக்  காட்டும்போது பழமையை எள்ளுவதன் வாயிலாகப் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்துவதோடு நகைச் சுவையும் தோன்ற வைக்கிறார்.
*************
பாயவந்த சிறுத்தையின் மேல் பாய்ச்சுவதற்கும் கத்தியை எடுத்ததும் சிறுத்தை ஓடி விடுகிறது. அதன் ஓட்டத்திற்குப் பத்தரிசி என்றதும் ஓடிப் பெறுகின்ற பார்ப்பானின் ஓட்டத்தினை உவமையாக்குகிறார் கவிஞர்.
கத்தியினை மேலெடுத்துக்
காட்டினையோ இல்லையோ
பத்திரிக் கோடுகின்ற
பார்ப்பான் போல் ஓடிற்று
வந்த சிறுத்தையது
வாலடங்க ஓடியது _ எனக் கூறுவது பெருஞ் சிரிப்பை நல்குகிறது.
*************
உடம்பில் மட்டுமல்லாது உலகிலு ள்ள எல்லாப் பொருளிலும் முப்பட்டை போடும் அறியாமையைக் கவிஞர் -_
காடி உப்புச்சட்டி கூழ்ப்பானை சீப்பே,
கண்ணாடி குமிழ்ஊசி அரிவாள் கத்தி
கரியடுப்பு மின்விசிறி மின் விளக்கு
நண்ணுமதின் மேற்கவிழ்ப்புத் துடைப்பக் கட்டை
நடையன்கள் மாடாடுதொழுவம் தொட்டி
பிண்ணாக்கு வைக்கோற் போர் பந்தற் கால்கள்
பின்னியபாய் தலையணைகள் போர்வை வேட்டி
தண்ணீர்ச்சால் கிணறு சாக்கடைகள் திண்ணை
தப்பாமல் முப்பட்டை போட வேண்டும்
-_ எனக் காட்டிச் சிரிப்போடு சிந்தனையையும் தூண்டுகிறார்.
இயற்கையின் படைப்பாகிய மலைமீதும் நாமத்தைப் போட்டு, பல நூற்றாண்டுகளாய் மலை வைணவருக்கே உரியது எனக் கூறுவோரையும் நெற்றியில் மார்பில் தோளில் நெடுங்கழுத்தில் சுண்ணாம்பு பற்றிடப் பூசிச் செம்மண் கோடுகள் பாய்ச்சி மூளை அற்றான் போல் வான் பருந்தை அரிகரீ என்றண்ணாந்து
மற்றுமோர் பேதை நானும் மனிதன்தான்
என்று வந்தான்.
எனப் பழமையிலும் அறியாமையி லும் ஆழ்ந்து கிடக்கும் நிலையினைக் கூறுவது சிறப்புக்குரியது.
*************
கற்கண்டு நாடகத்தில் சிறு தொண் டப்பத்தன் கதை சொல்லப்படுகிறது. கதையில் இறைவனுக்கும் சிறு தொண்டப் பத்தனுக்கும் நடக்கும் உரையாடல் நகைச்சுவை பயக்கிறது. சிறு தொண்டப்பத்தன் வீட்டில் சமையல் செய்யப்பட்டிருக்கும் பூசனிக் காய் அய்யருடைய தொப்பையாகவும் கத்திரிக்காய் அய்யருடைய பூசை மணியாகவும் இறைவனுக்குத் தோன்று கிறது. இதனை, பூசனிக்கா அய்யரோட
தொப்பையல்லோ பக்தா - அது
தொப்பையல்லோ பக்தா பூசனிக்கா கறி எனக்கு
வேண்டாமென்றார்
எனக் கவிஞர் காட்டுகிறார்.
*************
இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தில் இரணியன் தூணை உதைத்தவுடன் நாராயணனாக வேடமிட்டு ஒருவன் வெளிப்படுகிறான். அவனைப் பார்த்து, அடே! நான் தூணை உதைத்தேன் நாராயணனாகிய நீ வந்தாய்! உன்னை உடைத்தால் உன்னிடமிருந்து தூண் வெளி வருமா பார்க்கிறேன்! என்று கூறுவது வீரத் தால் விளைந்த வெகுளிநகை எனலாம்.
*************
மதத்தின் பேரால் தேவையற்ற குறியீடுகளை உடம்பில் இட்டுக் கொள்வதை, சைவன் சுயமரியாதைக் காரனானபின், அவனை நிறுத்துப் பார்த்ததில், நிறையில் காற்பலம் குறைவு ஏற்பட்டது. விபூதியிடுவது நீக்கியதால் எனக் கவிஞர் சுட்டிக்காட்டுவது நகைச்சுவை பயக்கிறது.
*************
நினைக்க நினைக்க எனக்குக் கோபம் வருகிறது. ராமனுடைய கணை யாழியைக் கடலைத் தாண்டிச் சென்று சீதையிடம் கொடுத்த குரங்குகள் உள்ள இந்த தேசத்தில், புதுச்சேரியிலிருந்து நேஷனல் சிகரெட்டைக் கொண்டு போய்த் தோழர் அழகிரிசாமியிடம் கொடுக்க ஒரு குரங்குகூட அகப்பட வில்லையே என்பதில் கவிஞரின் நகைச்சுவை தெரிகிறது.
*************
கண்ணபிரானைப் பற்றிய சொற் பொழிவு (உபந்நியாசம்) நடக்கிறது கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரெழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்த ஒருவர் கேள்வி கேட்கிறார்.
ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும், புகைபோல தெரிந்தனவா? திருத்தமாகவா?
உபந்நியாசகர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.
மற்றொரு வேண்டுகோள் அய்யா! உபந்நியாசகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை பாரிஸ் வெங்கடாசல அய்யர் வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டுவிடச் சொன்னால்போதும், அவசரமான லெட்டர் ஸ்டாம்பு வாங்கச் காசில்லை.
சிறுவன் வாயில் முழுமையும் தெரி யுமா? எவ்வளவு அறியாமை! மக்களின் அறியாமையைக் கிண்டல் செய்யும் துணுக்குகளில் ஒன்று இது.

                  ----------------------நன்றி:- “விடுதலை” ஞாயிறுமலர் 28-4-2013

27.4.13

இப்பொழுது சொல்லுங்கள் கங்கை புனித நீரா?

எதற்காக மன்னிப்பு? கங்கை நதியை பழித்துப் பேசியதற்காக, மலேசிய தலைவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மலேசியாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி, பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மலேசியா சுதந்திரம் அடைந்த நாள் முதல், பாரிசான் தேசியக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்தக் கட்சியில் தற்போது பெர்காசா கட்சி இணைந்துள்ளது.

இந்தக் கட்சியின் துணைத் தலைவர் சுல்கிபிலி நூருதீன், 10 ஆண்டுகளுக்கு முன், கங்கை நதியைப் பழித்துப் பேசியிருந்தார். கங்கை நதியைப் பழித்துப் பேசி, இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதற்காக தற்போது தேர்தலில் போட்டியிடும் நூருதீன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், 10 ஆண்டு களுக்கு முன் நான் எதிர்க்கட்சியில் இருந்தேன். அப்போது, உணர்ச்சி வேகத்தில் நான் பேசியது தவறுதான் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன் என்றார். இப்படி ஒரு செய்தி நேற்றைய ஏடுகளில் வெளிவந்துள்ளது.

சொன்னவர் முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் ஏன் வீண் பிரச்சினை என்று கருதி மன்னிப்புக் கோரி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

உண்மையைச் சொல்லப் போனால் அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்பட்டுக் கொல்லப்படுகின்றன - மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் மாண்டனர்.

இன்னொரு புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தைகள் மரணம் நூற்றுக்கு 94 என்றால் கங்கை பாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.

பீகாரில் துர்காபூர், பொகாரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும், உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அம்மோனியா, சயனைடு நைட்ரேட், முதலிய நச்சுக் கழிவுகள் ஏராளமாகக் கலக்கின்றன. பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்சத்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக(?) அந்தச் சாம்பல் கங்கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.
 
கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற்சாலை களின் ஒட்டு மொத்த கழிவுகளும் சங்கமம் ஆவது இந்துக்கள் புனிதம் என்று கூறுகிறார்களே - அந்தக் கங்கையில் தான்.

இவற்றை எல்லாம்விட இன்னும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு. கங்கை புனித நதி பாயும் பகுதிகளில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சியான தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. (தி பயணியர் 27.7.1997).
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003) வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரி வாரி இறைத்துள்ளது.

காலையில் புனித கங்கையில் முழுக்கு இரவோ மது, மாது, மாமிச விருந்து தடபுடல்கள்!

சிரகான் இடைத் தேர்தலுக்காகக் கடுமையான பிரச்சாரத்தில் நாள் முழுவதும் ஈடுபட பிரச்சாரகர்கள் ஒரு பெருங் கொண்டாட்டத்தை எதிர் நோக்கியிருந் தனர். இந்தப் பெரு விருந்து வேறு எந்த ஓட்டலிலும் நடைபெறவில்லை. கங்கையில் குளிக்கும் இடத்தில் இருந்த இரு தோணிகள் மற்றும் ஒரு பெரிய படகில்தான் அந்த விருந்து நடந்தது. மது, பீர், கோழிக் கறி, புலவு, ரொட்டி மற்றும் இனிப்பு வகைகள் மிகப் பொருத்தமாக இருந்தன என்று விலா வாரியாக எழுதியது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
 
இப்பொழுது சொல்லுங்கள் கங்கை புனித நீரா?

உண்மையைக் கூறிய மலேசியாவைச் சேர்ந்த ஒரு கட்சித் தலைவர் மன்னிப்புக்கோருகிறாராம். எப்படி இருக்கிறது? உண்மை என்னவென்றால் உலகில் மிகவும் மாசு அடைந்த  ஆறுகளின் பட்டியலில் கங்கை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்பதுதான்.
                      --------------------------------------”விடுதலை” தலையங்கம் 27-4-2013

26.4.13

ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா?-பெரியார்

சோதிடம்
இந்தியாவில் இந்துக்கள் என்பவர்கள் சாமி ஆடுதல் வாக்குச்சொல்லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்கு துன்பம் சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டி சாத்தான், கருப்பு முதலியவைகளைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை ஸ்வாதீனப் படுத்தல், முன் ஜன்மம் பின் ஜன்மம் உண்டெனல் இவை முதலாகிய விஷயங்களில் நம்பிக்கைக் கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும், எதிரிகளின் கேட்டிற்கு என்றும் எப்படித் தங்கள் பணத்தையும் நேரத்தையும் உபயோகிக்கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை வைத்து பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பி ராயம் முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க்கின்றோம். 

சாதாரணமாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக்களின் பேராசைக்கும் முட்டாள் தனத்திற்கும் சரிபங்கு தாயாதிகளேயாவார்கள். எப்படி எனில் முதலில் ஜோசியன் ஒருவனுடைய ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுவதன் மூலம் கண்டம் நீங்க சாந்தியும் கிரகதோஷ பரிகாரத்திற்கு சாமிகளுக்கு அர்ச்சனை அபிஷேகங்களும் செய்யும்படி சொல்லுவான். இதைக் கேட்ட அந்த மனிதன் தனது முட்டாள் தனத்தினால் ஏற்பட்ட பயத்திற்காகவும், ஆசைக்காகவும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச்சொல்லுவான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தியர் களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்க கடைச்சாமான் பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள்) அரைமண்டலம் நவகிரகங் களுக்கோ அல்லது குறிப்பிட்ட சனி செவ்வாய் முதலிய ஏதாவது ஒரு கிரகத்திற்கோ ஒருசாமிக்கோ, அர்ச்சனை, எள்ளு, பருத்திக்கொட்டை முதலிய தானம், விளக்கு வைத்தல் அபிஷேகம் செய்தல் ஆகியவைகளையும், ஏதாவது புண்ணிய புராணம் படித்தல் முதலியவைகளையும் சொல்லிவிடுவான். இவைகளை எல்லாம் செய்வதால் மந்திரவாதிக்கும் அர்ச்சகனுக்கும் புராண பிரசங்கிக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் ஜோசியனுக்குச் சேர்ந்து விடும்.

இந்தப்படியே எங்கும் இப்போதும் நடப்பது வழக்கம். ஆகவே இந்த விஷயத்தில் மந்திரம் அர்ச்சனை ஆகியவைகளைப் பற்றி விசாரிக்குமுன் ஜோசியம் என்பதைப் பற்றியே முதலில் யோசிப்போம்.

அதாவது:- ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா? என்பன முதலாகிய விஷயங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.

ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை, அதன் சம்பவம், பலன் முதலாகியவைகளை மொத்தமாய் வருஷப் பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும், அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும், இஷ்ட சித்திக்கு ஏதாவது விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோதத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் - கேள்க்கப்பட்ட நேரம், கேட்ப வரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசியனுக்கு எட்டும் நேரம், கேட்பவ ரின் தாய், தகப்பன் சகோதரம் பந்து முதலானவர்களின் பிறந்தகால ஜாதகம் முதலியவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவைகளைக் கேட்டல், ஒரு அங்கத்தை தொடுதல் முதலாகிய வைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே மேல்கண்ட எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்துப் பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆறாய்வோம்.

பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரை நாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டு கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலை ஆகிய யெல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போ மானாலும் அந்த நேரத்தை சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும் என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருட னிருக்கிறதா? இல்லையா? ஆ™h பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்தச் சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தை குறிக்க அங்கேயே அவனுக்கு கடிகாரம் வேண்டும். அந்த கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்கு பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புரமிக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும். மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங்களின் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 226666 (இரண்டு லட்சத்து இருபத்தாராயிரத்து அறுநூற்று அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது. (இந்தக் கணக்கானது ஐந்து லட்சம் ஜனத்துகை உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70 - எழுபது குழந்தைகள் - பிறப்பதாக கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில் இல்லாத ஸ்ரீகளின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்குப் பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டுப் பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது. இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம் பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகிறது. ஆகவே இந்த 33 குழந்தைகளுக்கு மாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்ப தாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்கு போதுமான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும் என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம்.

சாதாரணமாய் ஒரு ஜாதகம் என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாளிகை) அந்த சமயத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகிய வைகளைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2-ந் தேதி புதன் கிழமை காலை சுமார் 10 1/2 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டு சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லிவிடக் கூடும் என்பதே அநேகமாக ஜோசியத்தின் லட்சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாளிகை உடையதாகும். இந்த ஐந்தே கால் நாளிகைக்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20160(இருபதாயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக்கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக் கண் ணாடிப் பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள்பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும். இதுவுமொரு புறமிருக்க,

இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப் பட்ட கணக்குப் படிக்கு 4158 (நாலாயிரத்து நூற்று ஐம்பத்தெட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும்.

ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத்திற்காக மேற்படி 4158 பேருக்கும் வாழ்க்கையில் ஒரு விதமான பலன் அனுபவமிருக்க முடியுமா? அந்தப்படி இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.

தவிர இந்த பலன் அனுபவங்கள் மனிதனுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது ரக்ஷிக்கிற கடவுள்களின் தன்மையால் ஏற்படுவதா? அல்லது முன் ஜென்மத்தில் செய்த கர்மத்தின் பலனாய் பலன் ஏற்படுவதா? அல்லது விதியின் பயனாய் பலன்கள் ஏற்படுவதா? என்பவைகளையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந் நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த இஷ்டத்தால் செய்கையால் தற்சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டியவைகளில் அது தவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டுப்போகும். கிரகங்களின் தன்மை யினால் ஏற்படும் என்றால் இதைத் தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். முன் ஜன்ம கர்மத்தின்படி என்றால் இது தவிர மற்ற மூன்றும் அடிபட்டுப் போகும். மூலைவிதிப்படி என்றால் இதுதவிர மற்ற மூன்றும் அடிபட்டுப் போகும். ஆகவே மனிதனுடைய அனுபவ பலனுக்கு இவற்றுள் ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடியுமே தவிர இன் நான்கும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்க முடியாது. இது ஒரு புறமிருக்க இந்த வியாசத்திற்கு அவசியமான பிறந்த நேர லக்கினத்தால் ஏற்பட்ட கிரகத் தன்மைப் பலனைப் பற்றியே மேலும் ஆராய்வோம்.

உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்ப தாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரியான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப்பட்ட ஜாதகன் ஒருவனுக்கு சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்ளுவோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்ட வனுடைய ஜாதகத்திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தாலொழிய ஒருக்காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது உறுதியானதாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்டதாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா? என்றால் ஒருக் காலமும் முடியவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண்டால் சோதிடம் பொய்யாய் விடும். அன்றியும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் ஜாதகத்திலும் “இந்த சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாய் இருப்பதின் மூலம் இருவருக்கும் அந்தக் காலத்தில் அந்த சம்பவங்களால் கொலையோ சிறைவாசமோ கண்டிப்பாய் ஏற்படாது” என்று தான் அந்த ஜாதகத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படி இருக்கு மானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதையாயிருந் தாலும் தெரியாமல் கவலையற்றே அஜாக்கிரதையாயிருந்தாலும் இருவருக் கும் கொலையும் சிறைவாசமும் கிடைக்க முடியவே முடியா என்பதிலும் சந்தேகமில்லை. ஏனெனில் ஜாதகத்தில் ஏற்கனவே இருக்கின்றபடி நடந்து தானே தீரும்.

இதற்கு சாந்தி தோஷ பகிஷ்காரம் என்பவைகள் செய்வதன் மூலமா வது ஏதாவது பலனை மாற்றி விட முடியுமா என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்ப தால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தி யாகும் என்று ஜோசியன் சொல்வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிரகங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா அல்லது அவைகள் மாறுமா என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திர மில்லாமல் இம்மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பக்ஷம் எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய்யென்றே தீர்மானமாகி விடும்.

நிற்க, முடிவாக எந்தக் காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம் என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?

ஜாதகபலன்படி நடவடிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம்சொல்லுவது மடமையும் யோக்கியப் பொருப்பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்க்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்கு திருட்டுத் தொழிலில் பொருள் லாபம் கிடைக்கும் என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அதுமாத்திரமல்லாமல் திருட்டுக் கொடுத்தவனுக்கு பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந் தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்கு பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனிடமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில் இன்னான் இன்னாரிடம் திருடு வதால் இன்ன இன்னாருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதக பலனும் இருந்தாக வேண்டும்.

ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜன்ம வினைப்பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைப் பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.

இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்புவதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடியோடு விட்டுத்தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு சமயம் விரிப்போம்.

--------------------------தந்தைபெரியார் -”குடி அரசு” - தலையங்கம் - 06.07.1930

24.4.13

புத்தகர்-பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! -2

 
தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் படிப்பார் - பல்வகைப்பட்ட நூல்களை.
பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதானகோசம், பல் வகைப் புராண நூல்கள் - வால்மீகி இராமாயணம், இதர இராமாயணங்கள் - பாகவதம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் - இலக்கியங்கள் முதற்கொண்டு பலவற்றைப் படிப்பதோடு - அடிக்கோடிட்டு, அதனைப்பற்றிய ஆய்வினையும், கட்டு ரைகளாகவும், சீரிய விமர்சனங்களாக வும்கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைகளைக் கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிட முடியாத சுயசிந்தனை மலர்களான தோட்டம் ஆகும்!

1930-களிலும் அதற்கு முன்னரும் அவர்தம் பகுத்தறிவு நூற்பதிப்பு கழகத்திலும் சரி, குடிஅரசுப் பதிப்பகத்திலும் சரி, தான் எழுதிய ஒப்பற்ற சுயசிந்தனை நூல்களான பெண் ஏன் அடிமை ஆனாள்? பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம் உரைத் தொகுப்பு நூலான தத்துவ விளக்கம் - இராமாயண பாத்திரங்கள் - இராமாயண குறிப்புகள், கடவுள், மதம் பற்றிய பல்வேறு ஆய்வுகள் ஒருபுறம். பெண் ஏன் அடிமையானாள்? மறுபுறம்!

இன்னொருபுறம் வெளிநாட்டுச் சிந்தனையாளர்களான அமெரிக்க இங்கர்சால், கருத்துரைத் தொகுப்புகள், பெர்ட்ராண்ட் ரசல், லெனின் கருத்துகள், லெனினும் மதமும் பெர்னாட்ஷாவின் உபதேசம், இன்னும் பலப்பல; அக்காலத் தில் அந்த ஆங்கில நூல்களை அனுமதி பெற்று தமிழில் மொழி பெயர்த்து மலிவு விலைக்கு, நாலணா, எட்டணா (அதா வது கால் ரூபாய், அரை ரூபாய்) விலை யில் வெளியிட்டுப் பரப்பினார்கள் என்பது எவராலும் நினைக்க முடியாதது அல்லவா?

தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தம் என்பது மொழி வளர்ச்சிக்கு எவ்வளவு தேவையான ஒன்று!

பல்வேறு தமிழ் மொழி அறிஞர்கள், பன்மொழிப் புலவர்கள் செய்யாததை - பெரியார் அவர்கள் கல்லூரி, பல்கலைக் கழகத்திற்கே செல்லாத படிப்பற்றவர் என்று கூறப்பட்ட தந்தை பெரியார் கொணர்ந்த எழுத்துப் புரட்சிதான் - இன்றைய கணினி புரட்சி யுகத்தில் மிகவும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக் கியமாக உதவக் கூடியதாகி உள்ளதே!

247 எழுத்துகளைச் சுருக்கி, தமிழை, ஆங்கிலம்போல் 26 எழுத்துகளாகக் குறுக்க இயலாவிட்டாலும், 32, 34-க்குள் நிறுத்தினால் தமிழ்மொழி எளிதில் உலகம் முழுவதும் பரவிடுமே என்று காட்டியதோடு, அதை, எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாது, தனது விடுதலை நாளேட்டில் குடிஅரசு ஏட்டில் 1935 முதலே பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலை நாளேட்டிற்கு லை என்பது - முந்தைய  ல என்ற யானைக் கொம்பு போன்று போடாமல், லை என்று எழுதலாம். கை என்பதுபோல என்று காட்டி, இதனால் எழுத்துகள் எண் ணிக்கை குறையும்; எளிதில் எழுதிப் படிக்க ஏதுவாகும் என்றார்.

புலவர்கள், பண்டிதர்கள் இதை எதிர்த் தார்கள்; ஆகா! பழைமையை மாற்றினால் மொழி - இலக்கணம் என்னாவது என்றார்கள்.
அப்படியா ஓலைச் சுவடியையா இப்போது நாம் பயன்படுத்துகின்றோம்? அச்சிட்ட காகிதத்தைத்தானே தேடுகி றோம் என்றார் பெரியார்!
அறிவு, வளர்ச்சியை நோக்கித்தான் செல்லவேண்டுமே தவிர, பழைமை என்பதற்காக தீவட்டியையும், அகல் விளக்கையும் இன்று பயன்படுத்திட முடியுமா? என்று பொறிதட்டக் கேள்வி போட்டு சிந்திக்க வைத்தார்கள்.
அவர் நடத்திய ஏடுகளில் இந்த எழுத்துச் சீர்திருத்தம் இடம்பெறுவதில் பிடிவாதமாக இருந்தார்கள்.

விளைவு, பெரியாரே வெற்றி கண்டார்! 1977 இல் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல மைச்சராக வந்தபொழுது, பெரியார் நூற் றாண்டு விழாவை அரசு ஓராண்டு முழு வதும் கொண்டாடிய விழாவாக அமைத்த போது, (அரசாணை 449 நாள்:19.10.1978) இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை அரசு ஆணையாகவே வெளியிட்டார்.

இதன் காரணமாக, சிங்கப்பூர் நாட் டின் அரசு, இந்தத் தமிழ் எழுத்துச் சீர் திருத்தத்தை ஏற்றுப் பின்பற்றி வருகிறது.

அதனையொட்டியே மலேசிய அரசும் இந்தத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை வெற்றியோடு பின்பற்றி வருகிறது!

படிக்காத பெரியார் செய்த இந்தப் புரட்சிக்கே அவருக்கு நோபல் பரிசு போன்ற ஒன்றை வழங்கியிருக்க வேண்டாமா?

தந்தை பெரியார் அவர்கள் எந்தச் செயலையும் அதன் வேர்மூலம் என்ன வென்றே ஆய்வு செய்து மற்றவர்க ளோடு விவாதம் செய்வார்கள்.
கைவல்ய சாமியார் என்று அழைக் கப்பட்ட (உண்மைப் பெயர் பொன்னு சாமி) சுயசிந்தனையும், சீரிய ஆய்வாளருமான கைவல்யம் அவர்களை குடிஅரசு தனது படை வீர எழுத்துத் தளபதிகளில் முக்கியமாக வைத்தி ருந்தாரே!
சிந்தனைச் சிற்பி, ம.சிங்காரவேல ரின் பொதுவுடைமைச் சித்தாந்தங்கள், அறிவியல் மனப்பான்மையைப் பரப்பு தல், மூட நம்பிக்கைகளைச் சாடுதல் பற்றிய கட்டுரைகளைப் பதிப்பித்த தோடு, அவற்றைச் சிறு வெளியீடு களாக வெளியிட்டுப் பரப்பி, புத்தகங் களை அறிவாயுதங்களாக ஆக்கி மகிழ்ந்த பகுத்தறிவுப் பாசறை பதிப் பாளர் புத்தகராக திகழ்ந்தார்களே!

இந்த வெளிச்சத்தை மறைத்துத் தான் இன்னும் பெரியார் அவர்களை சிலர் குறுகிய சிமிழுக்குள் அடைத்து மகிழ்கின்றனர்!

இது நியாயந்தானா? சிந்தியுங்கள்!

---------------------- கி.வீரமணி- அவர்கள்  எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் பகுதி-”விடுதலை” 24-4-201323.4.13

புத்தகர் - பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்!

இன்று (ஏப்ரல் 23ஆம் நாள்) உலகப் புத்தக நாள்! நல்ல புத்தகங்கள் அறிவு நீர்வீழ்ச்சிகளாகும். அறியாமை இருளில் சிக்கியுள்ள மனித குலத்தை அறிவு வெளிச்சத்திற்கு அழைத்துச் சென்று மனிதர்களின் சிறப்பு அம்சமான ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைச் சாணை தீட்டி முனை மழுங்காமல், எப்போதும் கூர்மையுடன் வைத்திருக்க உதவும் சாணை தீட்டும் அருமையான கருவிகளாகும்.

எழுத்துக்களைக் கண்டு அறிவதற்கு முன்பு இப்படி ஒரு வசதி இல்லை.
கருத்துக்களை வாய்மொழி மூலம் கூறித்தான் அக்கால அறிஞர்களும், மதம் பரப்பி தமது பிரச்சாரங்களைச் சீடர்கள் மூலம் செய்தனர்!

இதனால் குருவின் மொழிகளும் அறிவுரைகளும்கூட விடப்பட்டவை களாகவும், மாற்றப்பட்டவைகளாகவும், திரித்துச் சொல்லப்பட்டவைகளாகவும் ஆகிய ஆபத்து உருவாகி, அவர்களது அறிவுரைகள், அனுபவ விளக்கங்கள் எல்லாம் இதைக் கொண்டு சென்று பரப்பினார்கள். விருப்பு, வெறுப்பு,  நினைவாற்றல் இன்மை மக்களிடம் இவற்றை எடுத்துச் சென்றால் ஏற்பார்களோ என்ற பயம் கலந்த தயக்கம் - அதன் காரணமாக பின்வாங்கிய நிலையும் உண்டு.  இதனால் புத்தரின் பகுத்தறிவு நெறிகூட தனி துவக்க அடையாளத்தை இழந்தது. பல பிரிவுகள் உருவாகி, கடவுள் இல்லை  என்று புத்தர் சொன்ன அந்த மார்க்கத்திலேயே அவரே கடவுளாக்கப் பட்டு, மகாவிஷ்ணுவின் 9ஆவது அவதாரமாகவும் ஆக்கப்பட்ட நிலைகூட ஏற்பட்டது!

ஆனால் அச்சு இயந்திரத்தை ஜெர்மெனியில் கூட்டன்பர்க் என்பவர் கண்டுபிடித்தபின், அச்சுக்கலை மூலம் புத்தகங்கள் வாய்மொழி மற்றும் ஓலைச் சுவடிகள் கட்டத்தைத் தாண்டி, அச்சு மூலம் பல நூறு படிவங்கள் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கின.

பாதுகாத்து பல தலைமுறைகளுக்கு அவைகளை அளிக்கும் தொழில் நுட்பம்(Technology) மூலம் பல கட்ட வளர்ச்சி களை அடைந்து விட்டது தற்போதைய நவீன உலகில்.

மின்னஞ்சல்போலவே மின் புத்தகங்கள் ’ E-Books கூட இப்போது ஏராளம் வந்து விட்டன! எழுத்துப் புரட்சி, இணையப்புரட்சி என்றெல்லாம் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் போய்க் கொண்டுள்ளதே!

மக்களிடையே கல்வி அறிவைப் பரப்ப அரும் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு, புரட்சி, Revolt, உண்மை போன்ற ஏடுகளை துவக்கி நடத்தினார். அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே 1925-லேயே - அதாவது இன்றைக்கு 88 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து அவர் வார ஏட்டினைத் துவக்கி கருத்துப் புரட்சி, அறிவுப் புரட்சியைச்  செய்தார்.
அவரையும் காமராசர் போன்ற  தலைவர்களையும் படிக்காதவர்கள் என்ற பட்டியலில் வைத்துக் குறிப்பிடுகிறார்கள்.

கல்லூரியில் சேர்ந்து பட்டம் வாங்க வில்லை என்பதாலே அவர்களைப் படிக்காதவர்கள் என்று கூறி, படிப்பு என்பதற்கு குறுகிய ஒரு பொருளைத் தருவதுதான் இந்நாட்டவர் வழக்கம்.

தந்தை பெரியார் அவர்கள் படித்த நூல்களும் சுய சிந்தனை - ஆராய்ச்சி இவைகளை அவர்கள் பயன்படுத்தியதும் பலரும் அறியாத அதிசயங்கள்!
தந்தை பெரியார் அவர்கள் பன்திறன் ஆற்றல் - பலரும் அறியாதவைகளாகும்.
அவர் எழுத்தாளர்; கருத்தாளர்; பேச்சாளர் சுயசிந்தனைப் பட்டறையின் வார்ப்புகளை வரலாற்றினை உருவாக்கிய பத்திரிக்கையாளர்; அச்சு எழுத்து - கோர்ப்பு - கம்போசிங்களை பற்றிய கடல் அனுபவம் உள்ளவர். எத்தனை எம் (M)  என்று கூறுவது Galley Proof - என்ற மெய்ப்பை அவர் அறிக்கையில் அவரே 95 வயது வரை திருத்தும் பணியைச் சிறிதும் சோம்பல் இன்றிச் செய்தவர்; அச்சுக்கோர்க்கும் பகுதி மேலாளரை (Foreman)  அழைத்து - இதில் ஓவர் Over எழுத்து எழுதியுள்ள திருத்தங்களைச் சரி பார்த்து போட்டு, பிறகு என்னிடம் காட்டுங்கள் என்று கூறுவார்கள். எத்தனை பாயிண்ட் எழுத்துக்களை - தலைப்புக்குப் போட வேண்டும்? கூறுவார் அய்யா அவர்கள்!

பதிப்பகங்கள் நடத்தி - மலிவு விலையில் மக்களுக்குச் சேர்ப்பதை தனது வாழ்நாள் தொண்டாகச் செய்து வந்தவர் அந்த வைக்கம் வீரர்! எந்தப் புத்தகத்தை தந்தை பெரியாரிடம் கொடுத்தாலும் அதனை வாங்கியவுடன் கடைசிப் பக்கத்தைத் தான் முதலில் பார்ப்பார். முன்பக்கம் திருப்புவார் - விலை எவ்வளவு போடப்பட்டுள்ளது என்பதை யும் பார்த்து, எத்தனை பாரம் (புத்தக அளவு 16 பக்கம்) (குடிசஅ) என்று மனக் கணக்குப் போட்டுப் பார்த்து, விலையை ஒப்பிட்டுப் பார்த்து, என்ன இவ்வளவு விலையா? இதென்ன கொள்ளையாக உள்ளதே என்று கூறி வேதனைப்படுவார்கள்!

புத்தகத்தின் பைண்டு பற்றிக் கூடக் கவலையுடன் பார்ப்பார். பின் (Pin) அடிப்பது பிடிக்காது; நூல் போட்டு தைத்து, பாரங்களை (Forms)இணைக்கக் கூறுவார்கள் - இப்படி நூல் வெளியீட்டில் பரந்த அனுபவம் மிக்க பதிப்பாளராக இருப்பார்.
தான் பேசிய கூட்டங்களில் முதலில் கொள்கைப் புத்தகங்களை அறிமுகப் படுத்தி, அதில் அன்று தள்ளுபடி சலுகை விலை உண்டு என்று அறிவிப் பார்கள்;  வியாபாரத்திற்கு அல்ல ; மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்! பேசுவதற்கு முன்பு இயக்க வெளியீடுகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி, அதில் அடங்கியுள்ள கருத்துக்களையும், தகவல்களையும் விரிவாக எடுத்துக்கூறி, அதன் பிறகே தன் சொற்பொழிவைத் தொடங்குவார். இதன் காரணமாக மக்கள் மத்தியில் புத்தகங்களை வாங்கவும், படிக்கவுமான ஆர்வத்தை வளரச் செய்தார் அய்யா!

கூட்டம் முடிந்து வேனில் ஏறிய வுடன் முதற்கேள்வி - எவ்வளவு புத்தகம் விற்றது? என்று கேட்பார்கள்; அது வருவாய்க்கல்ல; சொன்னவுடன், பரவாயில்லையே நமது புத்தகங்கள் எவ்வளவு பேர்களிடம் சென்றுள்ளது! என்று எண்ணி எண்ணி மகிழ்வார்கள்!

அது மட்டுமா? அவர்களே ஏராள மான நூல்களைப் படித்தவர்; மற்றவர் களையும் படிக்க வைக்க ஊக்கப் படுத்திய உலகத் தலைவர் ஆயிற்றே! அது பற்றி நாளை எழுதுவோம்!

                                                ------------------ கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல்சிந்தனைகள் - “விடுதலை” 23-4-2013

22.4.13

அருவிக்குத்தி சிறையில் பெரியார்


இதே நாளில் தான் (1924) தந்தை பெரியார் வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்காக அருவிக் குத்தியில் சிறை வைக்கப்பட்ட நாள்.

தீயர், ஈழவர்கள், புலையர்கள் என்னும் மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்கள் கோயில் வீதிகளில் நடக்கக் கூடாது என்ற கொடுமையை எதிர்த் தும் எழுந்ததே வைக்கம் போராட்டம்!

விவரம் தெரிந்தவர்கள் என்று கருதப்படக் கூடியவர் கள்கூட இதற்கு மாறாகக் கோயில் நுழைவுப் போராட் டம் என்று கூறுவது அறி யாமையே!

தீண்டாமை ஒழிப்புக்காக வைக்கம் கோயில் வீதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது போராட்ட வசதி கருதியே என்பதுதான் உண்மை.

வைக்கம் ஆலயத்தில் இருந்து நூறு கஜம் தூரத்தில் ஒரு விளம்பரப் பலகை தொங்கிற்று தீண்டத் தகாத ஜாதியினர் இதற் கப்பால் பிரவேசிக்கக் கூடாது என்ற அறிவிப்பு இது.

கேரளாவைச் சேர்ந்த பிரமுகர்களின் அழைப்பின் பெயரில் தந்தை பெரியார் வைக்கம் வந்து சேர்ந்தார் (11.4.1924).

பெரியாரின் பிரச்சாரப் பீரங்கியின் வேட்டுச் சத்தம் நாலாத் திசைகளும் கேட்க ஆரம்பித்தது.

மக்கள் மத்தியில் கிளர்ச் சித் தீ வெடித்துக் கிளம் பியது. 10 நாட்கள் அமைதி காத்த திருவனந்தபுரம் அரசர், பெரியாரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.

தந்தை பெரியாரும், கோவை அய்யாமுத்தும் கைது செய்யப்பட்டனர். அதுதான் இந்நாள் (22.4.1924)

இந்த இடத்தில் இன்னொன்றும் நினைவுபடுத் தப்பட வேண்டும். அருவிக் குத்தி சிறைச்சாலைக்கு இவர்களைக் கொண்டு சென்ற போது கடும் புயல் சீற்றத்தின் காரணமாக இவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. அதை சரி செய்து மீள்வதற்கு பணியாட்களுக்கும், காவலர்களுக்கும் பெரியார் உதவி செய்தார் என்று குறிப்பிடப்படுகிறது. (கைதியான நிலையிலும்கூட தொண்டுதானோ!) ஒரு மாத காலம் அருவிக் குத்தி சிறையில் வைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு மேலும் தீவிரமாகப் பேச ஆரம்பித் தார். கீழ் ஜாதி மக்கள் தெருவில் போவதால் அது தீட்டுப்பட்டு விடும் என்று சொல்லும் வைக்கத்தப்பனை (மகாதேவரை) கீழே போட்டுத் துணி துவைக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்.

அரசன் கை சும்மா இருக்குமா? இப்பொழுது கடுங்காவல் தண்டனை! சிறையோ திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலை; கால்களில் விலங்கு சங்கிலி, தலையில் கைதிக் குல்லா, கொலைக் குற்றவாளி களோடு மற்றவர்களைவிட இரு மடங்கு வேலை செய்தார் சிறையில் என்று கூறு கிறது வரலாறு. வைக்கம் வீரர் - என்று மகுடம் சூட்டி தலையங்கம் தீட்டினார் திரு.வி.க., (நவ சக்தி 24.5.1924).

                 --------------------------------------------- மயிலாடன் அவர்கள் 22-4-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

மாரியம்மன் பற்றி பெரியார்வரவேற்கின்றோம்

மக்கள் மாரியம்மன் பண்டிகையின் பேரால் காட்டுமிராண்டித்தனமாக தப்புகளைக் கொட்டிக் கொண்டும் மலைவாச லம்பாடிகள் ஆடுவதுபோன்ற ஆட்டங்களையும் ஆடிக்கொண்டும் கீழ் மக்கள் நடப்பதுபோன்ற வேஷங் களைப் போட்டுக்கொண்டும், ஆபாசமான பேச்சுகளைப் பேசிக்கொண்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பாழாக்கிக்கொண்டும் செய்துவரும் அக்கிரமம் இந்த நாட்டில் அறியாதார் யாரும் இல்லை.

இது நாளாக நாளாக அதிகமாகின்றதே தவிர மக்களுக்கு அறிவு வந்து, இந்த பழயகால நிலைமை சிறிதாவது மாறி இருக்கின்றதென்று சொல்லுவதற்கே இல்லை.

முழுமுதற் கடவுளென்று சொல்லப்பட்ட விஷ்ணு, சிவன் என்கின்ற கடவுள்களின் “பாடல் பெற்ற ஸ்தல” உற்சவம் பூசை முதலியவைகள் எல்லாம் கூட இப்பொழுது பெரிதும் குறைந்து வருகின்றன. இந்த உற்சவ வரும்படிகளும் சரி பகுதிக்கு குறைந்தும் வருகின்றன.

ஒரே கடவுள் என்று சொல்லுகின்ற அல்லாசாமியின் உற்சவமும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஆனால் இந்தமாரிகருப்பன், காத்த வராயன் என்று சொல்லப்பட்ட “கீழ்த்தர பரிவார தேவதைகள், என்று சொல்லப்படும் சாமிகளின் பக்தர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் இப்போது அளவுகிடையாது. இந்த “தேவதைகளை” வணங்குவதும் இவைகளுக்கு உற்சவம் செய்வதும் கீழ் மக்களாயிருப்பவர்களது செய்கை என்று அனேக சைவ வைணவ பண்டிதர்கள் எழுதி இருக்கின்றார்கள். அன்றியும் மாரி என்றால் என்ன அது எப்படிப்பட்ட தெய்வம் அதன் கதை என்ன என்பது யாருக்காவது தெரியுமா? அது அறிவுள்ள மக்களால் ஒப்புக் கொள்ளக் கூடியதா? என்று பார்த்தால் அது கடைசியில் சைபராகத்தான் முடியும், இம் மாதிரி அர்த்தமற்றதும் அனாகரீகமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமான காரியங்களை மதத்தின் பேரால், கடவுள்களின் பேரால் சற்றும் மான வெட்க மில்லாமல் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் நம்மை நாஸ்திகமென்றும், மத தூஷணை என்றும், கடவுள் தூஷணை என்றும் சொல்லுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த லட்சணத்தில் இந்த மாரியாயி என்கின்ற சாமிகள் ஒரு ஊருக்கு இரண்டு மூன்று இருந்துகொண்டு ஏககாலத்தில் உற்சவம் செய்து சிறுபிள்ளைகளின் புத்தியை மூடமாக்கி அவர்களையும் காட்டுமிராண்டிகள் போல குதிக்கும்படி செய்வது மிகவும் அக்கிரமமான காரியமாகும். இதற்கு வியாபாரிகள் என்று சொல்லப்படுவோர்கள் கடைகடைக்கு 10-ம் 5-ம் கொடுத்து இதை வளர்ப்பது என்பது அதி மூடத்தனமும் அக்கிரமுமான காரியமாகும்,

மற்றும் இப்படிப்பட்ட காரியங்கள் பொது ஜனங்கள் சுகாதாரத்திற்கு எவ்வளவு கெடுதி என்றும் கட்சிப்பிரதி கட்சிகளால் பொதுஜன அமைதிக்கு எவ்வளவு பங்கம் என்றும் நாம் எடுத்துக்காட்டவேண்டியதில்லை.

உதாரணமாக ஈரோட்டில் 3 மாரியம்மன்கள் உண்டு. இவைகள் கட்சி யில்லாமல் நடந்த காலமே அருமை. தவிர ஒவ்வொரு கோவிலும் ஊருக்குள் வீடுகளுக்கு மத்தியில் இருக்கின்றது. உற்சவ காலத்தில் இரவு எல்லாம் தப்புக்கொட்டுவது அக்கம் பக்கத்திய ஜனங்களுக்கு தூக்கம் இல்லாமல் செய்துவிடுகிறது. இவற்றுள் ஒன்று குழந்தைகள் பெண்கள் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் இருக்கிறது. இதற்குப் பெரிய மாரியம்மன் என்று பெயர். இந்த கோவிலில் தப்பட்டை அடிப்பதால் ஆஸ்பத்திரி வியாதியஸ்தர்களுக்கு அதிக தொல்லை உண்டு. ஆதலால் இந்த வருஷம் ஆஸ்பத்திரி நிர்வாகஸ்தர் சர்க்காருக்கு விண்ணப்பம் போட்டு இரவு பத்து மணிக்கு மேல் கோவிலில் தப்புக் கொட்டக்கூடாது என்ற உத்திரவை கோவில் அதிகாரிகளுக்கு சார்வு செய்திருப்பதாய்த் தெரிகின்றது. இந்தப் பெரிய மாரி இந்த உத்திரவு போட்ட வர்களையும் கேட்டவர்களையும் என்ன செய்யுமென்பது இனிமேல் பார்க்கக் கூடிய விஷயமானாலும் இந்த உத்திரவை நாம் இப்போது மனமார வரவேற் கின்றோம்.

போலீசுக்கு ஒரு வார்த்தை

கடைசியாக போலீசுக்கு ஒரு வார்த்தை. இந்த பண்டிகையை உத்தேசித்து வாலிபர்களில் பலர் பலவித ஆபாசமான வேஷம் போட்டு பொது ஜனங்களை பணம் கொடுக்கும்படி தொந்திரவு செய்வதும் குடித்து விட்டு கண்டபடி தப்புக்கொட்டிக்கொண்டு ஆபாசமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டு திரிவதுமான காரியங்களை போலீசார் கவனித்து நியூ சென்சுக்கு சார்ஜ் செய்வதன் மூலம் இக்காரியங்களைச் செய்தால் அதனாலும் வாலிபர் களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் இப்படிச் செய்வதையும் மனமார வரவேற்போம் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

------------------------------- தந்தைபெரியார் -”குடி அரசு” - துணைத் தலையங்கம் - 02.04.1933

21.4.13

ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், பறையன் ரத்தம் என்ற பிரிவுண்டா? ஜாதிக்கு அடையாளம் என்ன?

தருமபுரி வன்கொடுமை - வெறி - ஆவணப் படம் வெளியீடு 

ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், பறையன் ரத்தம் என்ற பிரிவுண்டா? ஜாதிக்கு அடையாளம் என்ன?

அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்துக!

தமிழர் தலைவர் ஆற்றிய எழுச்சியுரை
சென்னை, ஏப்.21- இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள தீண்டாமை ஒழி க்கப் படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப் படுகிறது என்று திருத்தம் செய்ய வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

20.4.2013 சனியன்று காலை 11.30 மணியளவில் சென்னை தியாகராயர் நகர், தியாகராயர் அரங்கில் வெறி ஆவணத் திரைப்படம் (தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் கிராமங்களை தீயிட்டுக் கொளுத்தப் பட்டது பற்றிய - விவரம்) வெளியீட்டு விழா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர். எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் நடை பெற்றது.
ஆவணப்படத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட சி.பி.எம். மாநில செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் பெற்றுக் கொண் டார். கு.க. பாவலன் வரவேற்புரை யாற்றினார். பசுமைத் தாயகம் நிறுவனர் பேராசிரியர் தீரன், இயக் குநர் சமுத்திரக்கனி, முகம்மதுயூசுப், சிந்தனைசெல்வன், பாலாஜி முதலியோர் பங்கு கொண்டனர்.

ஆவணப்படத்தை வெளியிட்டு திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றியதாவது:

தருமபுரியில் ஜாதி வெறியர்களால் கொளுத்தப்பட்ட கிராமப் பகுதி களையும், பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலைகளையும் நேரில் பார்த் தவர்கள் நாங்கள். அந்தத் துயரங் களை விவரிக்க வார்த்தைகள் கிடையாது.

வெறி எனும் தலைப்பு

அந்தக் கொடுமைகளையெல்லாம் ஆவணப்படுத்தும் வகையில் வெறி எனும் சரியான தலைப்பின் கீழ் செய்திப் படமாகத் தயாரித்திருப்பது மிகவும் சரியான நடவடிக்கையே! பிறவியிலேயே பேதம் எனும் வருணாசிரம ஜாதிக் கொடுமை இந்த நாட்டில்தான் உள்ளது.

கிட்டவரக் கூடாதவன், தொடக் கூடாதாவன், திருமண உறவு கொள்ளக் கூடாதவன் என்று ஆக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது சிலர் இந்த ஜாதியை வைத்து அரசியல் நடத்தலாமா என்று புறப்பட்டுள்ளனர்.

புதிய தலைமுறையினருக்கு

புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் களுக்குச் சில அடிப்படையான உண் மைகளைத் தெரிவிக்க வேண்டும்.

ஜாதி ஒழிப்புக்காக எவ்வளவுக் கடுமையான விலை கொடுத்து வந்துள்ளோம் - கொஞ்சம் அசந்தால் மீண்டும் பழைய நிலைக்குத்தான் தள்ளப்படுவோம்! மறந்து விடாதீர்கள்.

நல்ல தலைப்பு கொடுக்கப்பட்டுள் ளது; வெறி இருக்கலாமா? இருக்க லாம் என்று எவரேனும் சொல்லு வார்களேயானால் அவர்கள் இருக்க வேண்டிய இடமே வேறு! அது மன நல மருத்துவமனையே! கொஞ்சம் புரியும்படிச் சொன்னால் பைத்தியக்கார ஆஸ்பத்திரிதான்.

முன்பெல்லாம் ஒரு வார்த்தையைச் சொல்லுவார்கள்; என்ன கீழ்ப்பாக் கத்திலிருந்து வந்துள்ளீர்களா? என்று சிலரைப் பார்த்துக் கேட்பதுண்டு.
என்ன கீழ்ப்பாக்கமா?

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல மருத்துவமனையின் நூற்றாண்டை ஒட்டி சிறப்புமலர் வெளியிடப்பட்டது.

அதிலே இடம் பெற்றிருந்த ஒரு தகவல் என்ன தெரியுமா?

பிராமின் வார்டு என்பதாகும். பைத்தியக்காரர்களுக்கான மருத்துவ மனையில்கூட பிராமின் வார்டு, பைத்தியத்தில்கூட ஜாதி வந்து விடு கிறது பிராமணப் பைத்தியம், சூத்திரப் பைத்தியம், பஞ்சமப் பைத்தியம் என்றா இருக்கிறது?

தந்தை பெரியாரும் -  அண்ணல் அம்பேத்கரும்

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் யாரென்றால் ஜாதிப் பைத்தியங்களைத் தெளிய வைக்கும் மனநல மருத்துவர்கள் ஆவார்கள்.
மனிதனுக்கு வெறி பிடித்தாலும் ஆபத்து, நாய்க்கு வெறி பிடித்தாலும் ஆபத்து. கடிபட்டவனுக்கு ஊசி போடு வது ஒருமுறை, கடிக்கும் பிராணி வெறி வராமல் தடுப்பூசி போடுவது அதைவிட முக்கியமானதாகக் கருதப் படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்து விட்டதாகச் சொன்னார்கள். சுதந்திர நாட்டில் ஜாதி தாண்டவமாடுகிறது; வெறி பிடித்துத் திரிகிறது.

பெரியார் நிறைவேற்றிய தீர்மானம்

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக ஒரு மாநாட்டை 1973 டிசம்பரில் சென்னை - பெரியார் திடலில் நடத்தினார். அதில்  பெரியார் அவர்களே ஒரு தீர்மானத்தை உருவாக்கினார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று உள்ளது.
அந்தத் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள்.

ஜாதி வெறியும் - மத வெறியும்

ஜாதி வெறியாக இருந்தாலும் சரி, மதவெறியாக இருந்தாலும் சரி, அவை ஒழிக்கப்பட்டாக வேண்டும். எவ்வளவு நாள்களுக்குப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்?

வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அதே நேரத்தில் இந்த இழிவை இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும் என்பதும் முக்கியம்தானே?

ஜாதி என்பதற்கு விஞ்ஞான ரீதியாக ஆதாரம் உண்டா?

அய்யங்கார் ரத்தம், பறையர் ரத்தம் என்று உள்ளதோ?

உயிருக்கு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சை உடனடியாகத் தேவை என்கிறபோது குருதி தேவைப் படுகிறது.

குருதியில் அய்யர் ரத்தம், அய்யங்கார் ரத்தம், முதலியார் ரத்தம், நாடார் ரத்தம், வன்னியர் ரத்தம், பறையன் ரத்தம் என்ற பிரிவுகளா இருக்கிறது?

என்ன குரூப் ரத்தம் என்று கேட் டால் நாயுடு குரூப், கவுண்டர் குரூப் என்று யாரும் சொல்லுவதில்லை. அப்படி எந்தப் பிரிவும் கிடையாது.

இப்பொழுதெல்லாம் கண் கொடை, குருதிக் கொடை என்பது போல சிறுநீர்க் கொடை, இருதயக் கொடை என்றெல்லாம் வந்து விட்டதே!

இதற்குப் பிறகும் ஜாதி பேசு கிறார்கள் என்றால் அதனை அனு மதிக்கலாமா?

விஞ்ஞானம் ஜாதியின் அடிப் படையையே மாற்றிடவில்லையா? 

விஞ்ஞானத்தையும் அனுபவித்துக் கொண்டு ஜாதியையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கலாமா?

ஜாதி அரசியல்

இப்பொழுது கையில் எந்த சரக்கும் இல்லாதவர்கள், கொள்கை வற்றிப் போனவர்கள் அரசியலில் ஜாதியைப் பிடித்துக் கரையேறலாம் என்று ஆசைப்படுகிறார்கள்.

இனிமேல் இங்கு மனிதன் பிறக்க வேண்டுமே தவிர, பார்ப்பானும் பிறக்கக் கூடாது, பறையனும் பிறக்கக் கூடாது.

ஜாதியைக் காப்பாற்ற கடவுளும், மதமும் சாஸ்திரமும் குறுக்கே வருமானால் அவற்றையும் எதிர்த்து அழிப்பது என்பது நமது கடமையாகும்.

இனியும் தருமபுரிகள் நடக்கக் கூடாது?

தருமபுரிகள் நடக்க இனியும் அனுமதிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட அந்த பகுதிக்கு நாங்கள் சென்ற போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இருபது ஆண்டு களுக்கும் மேலாக நல்ல முறையில் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக எங்களிடம் சொன்னார்கள்.

முதலில் கொள்ளை - பிறகு தீ வைப்பு!

அந்தப் பகுதியில் ஜாதி வித்தியாசமின்றி மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும்போது, வெளியில் உள்ளவர்களுக்கு என்ன வந்தது?
பீரோவை உடைத்து நகைகளை யும், பணத்தையும் பொருள்களையும் கொள்ளையடிப்பது, அதற்குப் பிறகு வீட்டைக் கொளுத்துவது என்று ஒரு முறையை வகுத்துக் கொண்டல்லவா வேட்டையாடியிருக்கிறார்கள்.

பொருளாதாரம் இருந்தால் போதுமா?

இவ்வளவுக்கும் அந்தப் பகுதி மக்கள் வெறும் குடிசைகளிலும் வாழ வில்லை, ஓரளவு வசதி வாய்ப்போடு தான் வாழுகிறார்கள் - பிள்ளைகள் எல்லாம் கல்லூரிகளில் படிக்கி றார்கள், அரசுப் பணிகளிலும் இருக்கிறார்கள் - பெங்களூருக்கு சென்று சம்பாதிக்கிறார்கள்.

இந்த இடத்தில் இன்னொன் றையும் கவனிக்கத் தவறக் கூடாது. 

பொருளாதாரம் வளர்ந்தால் ஜாதி போய்விடும் என்று கூறுவோரும் உண்டு. அப்பகுதி மக்கள் பொருளா தாரத்தில் ஓரளவு வளர்ந்தவர்கள் தான்; அதனைக் கண்டு ஜாதி வெறி யர்களுக்குப் பொறுக்கவில்லையே!

இப்பொழுது ஒன்றைக் கூறு கிறார்கள். தீண்டாமை ஒழிப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்டு. எழுதுபவர்கள் உண்டு.

சட்டத்தை அமல் செய்வதில் மென்மை கூடாது!

உண்மையைச் சொல்ல வேண்டு மானால், முன்பு எப்பொழுதையும்விட அந்தச் சட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டியது இந்தக் கால கட்டத்தில்தான்.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு வெறும் பண உதவி அளித்தால் மட்டும் போதாது; கொளுத்தப்பட்ட இடிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதில் புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். சுயமரியாதையுடன் சமத்துவத்துடன் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்திடப் பாதுகாப்புகள் அவசியம்.

ஆங்கிலத்திலும் வரட்டும்

இங்கே தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப்படம் தமிழில் இருந்தால் மட்டும் போதாது; ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து மற்றவர்களுக்கும் கூடத் தெரியும்படிச் செய்ய வேண்டும். ஜாதியை ஒழிக்கக் கூடிய வர்கள் எங்கிருந்தாலும் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே கூடியிருக்கிற நாங்கள் அரசியல் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அல்ல; சமூக அநீதிகளை அழிக்க நினைக்கும் சமத்துவ சமூகக் கூட்டணியாகும்.
வேண்டாம் வெறி விளையாட்டு வெறிகள் உலவக் கூடாது. மனித நேயம் சமத்துவம், பகுத்தறிவுணர்வு செழிக்க வேண்டும். அதனை முன்னெடுத்துச் செல்லுவோம் என்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

                            ---------------------------”விடுதலை” 21-4-2013

மறியலால் கள் குடியை நிறுத்த முடியுமா? பெரியார் பதில்

நாகை முதலாவது சுயமரியாதை மகாநாடு
தலைவர் அவர்களே! நண்பர்களே!! *இத்தீர்மானத்தை எதிர்த்துப் பேசியவர்களால் தான் இத்தீர்மானத்திற்கு பெருத்த ஆதரவளிக்கப் பட்டதாக கருதுகின்றேன். திரு.சிவஞானம் எதிர்த்ததால் தான் அத் தீர்மானத்தை உங்களுக்கு விளக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரு சமயம் ஒருவர் இருவராவது தாக்ஷண்ணியத்திற்காக கைதூக்கவேண்டியிருக்கும். ஆதலால் நான் சொல்வதை நன்றாய் கவனித்து உங்கள் இஷ்டத்தை தெரிவியுங்கள். தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் மீது கோபிப்பது கோழைத்தனமாகும். தீர்மானத்தில் உண்மையும், வீரமும் இல்லை என்று கருத வேண்டியதாகும்.

தவிர எதிர்ப்பவர்கள் அநேகர் உண்மையாகவே அவர்களுக்கு விளங்காமல் எதிர்த்தாலும் எதிர்க்கலாம். அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியது நமது கடமை. அதனால் மற்றவர்களுக்கும் விளங்கும். அன்றி யும் அவ்விளக்கம் மற்றவர்களுக்கு பிரசாரம் செய்யவும் உதவும்.

நண்பர்களே! கள்ளுக்கடை மறியலானது குடி நிறுத்துவற்காக செய்யப்படுவதில்லை என்பது எனது அனுபவ ஞானமான முடிவு.

நான் தென்னாட்டில் மறியலை நடத்தி இருக்கின்றேன். என் மனைவி யையும், சகோதரியையும், என் பந்து சிநேகிதர்களின் தாயார், மகள் முதலிய வர்களையும் கொண்டு நடத்தினேன். அநேக கடைகளை மூடினேன். எனது 600 தென்னை மரங்களை வெட்டினேன். 300,400 மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் தானகவே காய்ந்து போகும்படி செய்தேன். மறியலுக்காக நானும் எனது ஈரோட்டு நண்பர்கள் சுமார் 100 பேரும் ஜெயிலுக்குப் போனோம். திருச்சியில் நூற்றுக்கணக்கான பேர்களை எம்.ஏ., பி.எல்., உட்பட சிறைக்கு அனுப்பினேன். கையில் 500 தொண்டர்களை வைத்துக் கொண்டு, ஆயிரம் தொண்டர்களை லிஸ்டில் வைத்துக் கொண்டு நானும் நண்பர் திரு.இராமநாதனும் மதுரையில் தினம் நான்கு நான்கு பேர்களாக 100 தொண்டர்கள் வரை ஒவ்வொரு வருஷ தண்டனைக்கு அனுப்பினேன். மதுரை சர்க்காரார் தினறினார்கள். அந்த சமயத்தில் திடீரென்று திரு.சி.இராஜ கோபாலாச்சாரியார் மறியலை நிறுத்தும்படி உத்திரவு செய்தார். அடிதடி, வசவு, பலாத்காரம் ஒன்றுமே நாங்கள் செய்யவில்லை. தொண்டர்கள் தண்டிக்கப்பட்டவுடன் அதிகாரி என்னிடம் வந்து பேசுவார். போலீசார் எனக்கு வெகுமரியாதை செய்வார்கள். அதிகாரிகள் வெட்கப்படுவார்களே யொழிய நம்மீது குரோதமோ, துவேஷமோ இல்லை. அப்படிப்பட்ட சமயத்தில் மறியலை நிறுத்த நானும் திரு.இராமநாதனும் சம்மதிக்க வில்லை. அப்படியிருக்க நாங்கள் மறியலை நிறுத்த சம்மதிக்காவிட்டால் தான் இராஜினாமா செய்து தனது தலைவர் பதவியை திரு.எஸ்.சீனிவாசய் யங்காருக்கு அளித்து விடப்போவதாய்ச் சொல்லி பயமுறுத்தி மறியலை நிறுத்தி விட்டார். 100 பேர் சிறையில் ஒரு வருஷம் தண்டிக்கப்பட்டிருக்க, 500 பேர் தயாராய் இருக்க மறியலை நிறுத்திய உடன் எங்கள் மனம் கஷ்டப் பட்டு விட்டது. காரணம் என்ன என்று பார்த்தபோது நாகப்பூர் கொடி சத்தியாக்கிரகத்திற்கு தொண்டர்கள் போதவில்லை என்றும் ஜமநாத பஜாஜ் ஆரம்பித்த சத்தியாக்கிரகம் தோல்வி அடைந்ததால் அவருக்கு அவ மானம் என்றும், அவர் வேலையை விட்ட வக்கீல்களுக்கு பல லக்ஷ ரூபாய் கொடுத்தவர் என்றும் திரு.இராஜகோபா லாச்சாரியார் சமாதானம் சொன்னார். அந்தக் காரணமாக எல்லா மறியலும் நிறுத்தப்பட்டது. இதனால், மறியலுக்கு பயந்து கள்ளுக்கடை ஏலமெடுக்காதவர் நஷ்டப்படவும், துணிந்து குறைந்த துகைக்கு ஏலத்தில் எடுத்தவர் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் சர்க்காரார் இந்த நஷ்டத்தின் சாக்காய் இந்திய மக்களின் ஆரம்பக்கல்வியின் வாயில் மண்ணைப் போடவுமே ஏற்பட்டது. மற்ற பெரிய கல்வி இலாகா அதிகாரி கள் சம்பளம் சிறிதும் குறையவில்லை. மறியலால் கள்குடி குறைபாடு குறை யாது, முக்காலும் குறையாது என்று உறுதி கூறுவேன்.

இத்தீர்மானத்தை எதிர்த்தவரே தான் பேசும் போது ஒரு வார்த்தை சொன்னார். அதாவது தங்கள் மறியலால் கடையில் வியாபாரம் குறைந்து விட்டதாகவும், ஆனால் தெருக்களில் பலகாரம் விற்பதுபோல் பாட்டல் பாட்டல்களாய் எடுத்துச் சென்று விற்கப்படுகிறதென்றும் சொன்னார். ஆகவே மறியல்காரர்களை நான் ஒன்று கேட்கின்றேன், அதாவது தங்கள் மறியலின் காரணமாக கள்ளுக்கடைகளில் கள்ளு விற்பதைத் தடுத்து, வீதி வீதியாய் விற்கும்படியான நிலைமை ஏற்பட்டதற்கு மறியல் தொண்டர் களோ அவர்களது “உலகம் போற்றும்” ஒப்பற்ற தலைவரோ என்ன பரிகாரம் செய்ய போகிறார்கள்? என்று கேட்கின்றேன். கள்ளு இலாகாவை நடாத்தும் மந்திரியையாவது, கள்ளு இலாகா அதிகாரிகளையாவது வீதியில் கள் விற்கும் மக்களையாவது இந்த மறியலின் மூலமாக அசைக்க முடியுமா? என்று கேட்கின்றேன். கள்ளுக்கடை மூடிவிட்டால் தெரு விற்பனைகள் எங்கு போய்விடும்? லைசென்சு இல்லாமல் மரம் கட்டி இறக்கும் கள் எங்கு போய்விடும்? ஆகவே, மறியல் குடியை நிறுத்துவதற்காகவா? அல்லது வயிற்றுப் பிழைப்புக்கோ விளம்பரத்திற்கோ, கள்ளுக் கடைக்காரரிடம் வியாபாரம் பேசி, ஆச்சிரமம் வைத்து, கொடிதூக்கிக் கொண்டு திரிந்து, பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் ஓட்டு வாங்கி கொடுப்ப தற்காகவா? என்று உங்களை கேட்கின்றேன்.

மறிய லால் கள் குடி நிறுத்த முடியாது என்று நான்மாத்திரம் சொல்ல வரவில்லை, திரு. இராஜகோபாலாச்சாரியார் சொன்னதையும் இப்போது நான் சொல்ல வரவில்லை. ஆனால் திரு.காந்தி- உங்களால் ‘மகாத்மா’ என்று சொல்லப் படும் உங்கள் தலைவரான திரு.காந்தி அவர்கள் திருவாய் மலர்ந்தருளி யதை சொல்லுகின்றேன் கேளுங்கள்.

அதாவது “குடிகாரர்கள் தாங்களாகவே குடியை விட்டாலொழிய குடியை நிறுத்த முடியாது. கள்ளுக்கடைகளை மூடிவிடச் செய்வது நம் வேலை அல்ல. மூடினாலும் திருட்டுத்தனமாக இப்பொழுது இருப்பது போலவே வியாபாரமும், குடியும் இருந்துதான் வரும். சரீரத்தால் தொழில் செய்கிற மிருகங்களைப்போன்ற உழைப்பாளிகட்கு கள்ளு அவசியமானது. நானே வாங்கிக் கொடுத்திருக்கிறேன்” என்று திரு.காந்தியே சொல்லியிருக் கிறார். இதிலிருந்து சட்டங்களின் மூலம் கூட மதுபானத்தை நிறுத்தி விட முடியாது என்பதே அவரது அபிப்பிராயமாகும். இப்படியிருக்க இந்த மறியல் என்பது நாடகம் என்றும், பாமரமக்களை ஏய்ப்பதின் மூலம் தாங்கள் தலைவர்களாகவும், தேசபக்தர்களாகவும் ஆவதற்கு செய்யப்படும் சூக்ஷி என்பதல்லாமல் வேறு என்ன வித உண்மையோ, நாணையமோ இந்த மறியலில் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள்.

 இப்பொழுது அநேக ஊர்களில் கள்ளு குத்தகைக்காரர்களுடன் வியாபாரம் பேசிக் கொண்டு மறியலை நிறுத்திக் கொண்டார்கள். சிலர் பலாத்காரத்திற்கு பயந்து கொண்டு நிறுத்தி விட்டார்கள். சிலர் பொதுஜனங்களிடம் வாங்கிய பணத்தை பங்கு போடுவதில் சண்டை போட்டு கொண்டு நிறுத்திவிட்டார் கள். சிலர் தேர்தலில் ஓட்டு பெற கூலி கொடுத்து நடத்துவதால் எதிர் அபேக்ஷகர்கள் உண்மையை வெளிப்படுத்துவதால் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலைமையில் ‘மறியல், மறியல்’ என்று ஏன் இளம் வாலிபர்களை அயோக்கியர்களாகவும் வாழ்க்கைக்கு உதவாதவர்களுமாகவும் ஆக்க வேண்டும்? என்று கேட்கின்றேன். தவிரவும் இந்துமதக் கடவுள்களில் சிலவற்றிற்கு குடம் குடமாய் கள் வைத்துப் படைத்து குடிப்பவர்களை எப்படி நிறுத்தி விட முடியும்? தவிர வட்டமேஜை மகாநாடு திரு.காந்தி இஷ்டப்படி முடிவு பெற்று விட்டால் மறியல் நடக்குமா?என்று யோசித்துப் பாருங்கள். அப்பொழுது இவர்கள் என்ன சொல்லுவார்கள்? “சர்க்காரா ரோடு ராஜி ஏற்பட்டு விட்டது. ஆதலால் மறியல் வேண்டாம். மறியலால் மது நின்று விடாது. ஒன்றோ சட்டத்தாலோ அல்லது வேறு உபாயத்தாலோ நிறுத்தலாம்” என்று தானே சொல்லுவார்கள். மற்றும் சமூக சம்பந்தமான குறைகளைப் பற்றி பேசி காங்கிரசுக்காரர் ஏன் அவ்விஷயத்திற்குப் பொது ஜனங்களிடம் வசூலிக்கும் 10 லக்ஷக்கணக்கான பணத்தில் ஒரு காசும் செலவு செய்வதில்லை என்றும், ஒரு வேலையும் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை திட்டத்தில் இல்லை என்றும் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்பதை கவனியுங்கள். “அதெல்லாம் சுயராஜ்ஜியம் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றும் “ஒரு வரியில் சரிப்படுத்தி விடலாம்” என்றும் சொல்லுகின்றார்கள். அப்பேற்பட்ட சமூக சம்பந்தமான பழக்க வழக்கங்களை சுயராஜ்ஜியம் வந்த பிறகு ஒரு வரியில் சரிப்படுத்தி விடுவதானால், அது சாத்தியமானால் - உண்மையானால் கள்ளு குடியை நிறுத்த மாத்திரம் தானா பல வரிகளாலும் முடியாமல் போய் விடும்? என்று கேட்கின்றேன்.

தவிரவும் தீர்மானமானது யாரையும் குடிக்கும்படி சொல்லவில்லை. கள்ளுக்கடைக்கு குடிகாரர்களை கூட்டிக் கொண்டு போகும்படியும் சொல்லவில்லை. மறியல் மறியல் என்று சொல்லிக் கொண்டு செய்யும் முட்டாள்தனமான காரியத்தால் கள்ளு வியாபாரிகளை கொள்ளையடிக் கும்படியாகவும், தெருக்களில் எல்லாம் கள்ளு சாராயம் விற்கும் படியாக வும், பாமர ஜனங்கள் இந்த முட்டாள் தனமும் சூட்சி நிரம்பியதுமான வார்த்தை களை நம்பி பொறுத்தமும், நாணயமும், யோக்கியப் பொறுப்பும் அற்ற சுயநலமிகளை ஜனப் பிரதிநிதியாக்க விடாமலும் செய்ய வேண்டு மென்பதுதான் இத்தீர்மானத்தின் தத்துவமாகும். நமது மக்கள் பாமர மக்களானதினாலும், 100 க்கு 90 பேர் எழுத்து வாசனை அறியாத மக்களான தினாலும், அவர்களை மூட நம்பிக்கையிலும், பகுத்தறிவற்ற தன்மையிலும் பார்ப்பனர்களும், அரசாங்கத்தாரும் வைத்திருக்கின்றார்களானதினாலும், காந்தி, காங்கிரஸ், கதர், பகிஷ்காரம், தேசீயம், மறியல் முதலிய காரியங்க ளால் ஏமாந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கின்றதே தவிர வேறில்லை என்று சொல்லுகின்றேன். நமது வாலிபர்களிடமிருக்கும் அபிமானமே என்னை இப்படிச்சொல்லச் செய்கின்றது. எழுச்சியான-வேடிக்கையான- பரபரப்பை உண்டாக்கத் தக்க எதுவானாலும் இளம் வாலிபர்களின் மனதைக் கவர்வது இயற்கை. புரட்டாசி மாதம் வந்தால் அநேக வாலிபர்கள் நாமம் போட்டு, பஜனைக்குப் போய் விடுவார்கள். அல்லா பண்டிகை வந்தால் அநேக வாலிபர்கள் தங்களை மிருகமாக்கி புலிவேஷம் போட்டுக் கொள்ளு வார்கள். வேடிக்கைப் பார்த்த ஒன்றுமறியா சிறு குழந்தைகளும் பண்டிகை நின்று ஒரு மாதம் வரை இவர்களைப் போல் ஆடிக்கொண்டே இருப்பார்கள். ஆதலால் ஒவ்வொருவரும் தங்கள் அறிவைக் கொண்டு யோசித்துப் பார்த்து சரியென்று தோன்றியபடி நடவுங்கள்

--------------------------- 03,04.10.1931 நாட்களில் நடைபெற்ற நாகை வட்ட முதலாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தை விளக்கி தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை.”குடி அரசு ”- சொற்பொழிவு - 18.10.1931

20.4.13

மனிதத்துவத்தை மலர்விக்கும் மதமற்ற உலகம் தேவை! தேவை!!

ராஜபாளையத்தில் ஒரு ராஜப்பாட்டை!
திருவில்லிபுத்தூர் சுயமரியாதை மாநாடு -_ 5.4.1930
விருதுநகர் 3ஆவது சுயமரியாதை மாநாடு _ 8,9.8.1931.
இராநமாதபுரம் ஜில்லா 2ஆவது சுயமரியாதை மாநாடு _ 17.7.1932
சிவகங்கை 3ஆவது சுயமரியாதை மாநாடு _ 2.12.1933
திருப்பத்தூர் தாலுகா சுயமரியாதை மாநாடு _ 11.3.1934
இராமநாதபுரம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாடு _ 19,20.1.1935
அருப்புக்கோட்டை சுயமரியாதை மாநாடு _ 29,30.3.1935.  இராமநாதபுரம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாடு 19,20.1.1935
அருப்புக்கோட்டை சுயமரியாதை மாநாடு 29,30.3.1935
விருதுநகர் ஜஸ்டிஸ் தொண்டர்கள் மாநாடு _ 13.10.1935
இராமநாதபுரம் 2ஆவது ஜஸ்டிஸ் கட்சி மாநாடு _ 23.8.1936
திருவில்லிபுத்தூர் சுயமரியாதை மாநாடு -_ 11.7.1937.
திருப்பத்தூர் தாலுகா 2ஆவது சு.ம. மாநாடு _ 14.11.1937
விருதுநகர் முதல் தமிழர் மாநாடு _ 19.6.1938
இராமநாதபுரம் ஜில்லா 3ஆவது தமிழர் மாநாடு _ 16.7.1939
விருதுநகர் திராவிடர் மாணவர் முதல் மாநாடு _ 12.6.1944

மேற்கண்ட மாநாடுகள் அனைத்தும் முகவை மாவட்டம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இராம நாதபுரம் மாவட்டத்தில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட மாநாடு களின் பட்டியலாகும்.

அந்தப் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளை யத்தில்தான் வரும் மே 4ஆம் தேதி யன்று திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு ஓகோ என்று நடைபெற உள்ளது.

1931இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாடும் அதன் தீர்மானங்களும் என்றென்றும் பேசப்படக் கூடியவையே!

மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால், அப்படிப்பட்ட  எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென் றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவமும் வளராதென்றும் இம் மாநாடு அபிப்ராயப் படுகிறது

இன்றைக்கு 82 ஆண்டுகளுக்குமுன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்றைக்கும் பொருத்தக் கூடியது என்று தோன்ற வில்லையா?
உலகில் மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போல வேறு காரணங்களுக்காக சிந்தப்பட்ட தில்லை என்பதுதான் வரலாறு கூறும் முக்கிய சேதியாகும்.

ஈராக்குப் போராக இருந்தாலும் சரி, பாகிஸ்தானில் 12 வயது மலாலா சுடப் பட்டதும் சரி, பாபர் மசூதி இடிக்கப் பட்டதும் சரி, இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவோம் என்று கேட்டும் குரலிலும் சரி, குஜராத்தில் கோத்ரா நிகழ்வைத் தொடங்கி கூத் தாடிய கொடூரப் படுகொலைகளிலும் சரி, புத்தர் சிலைகளைத் தமிழன் ரத்தத்தால் குளிப்பாட்டுவோம் என்று கொலை வெறித் தாண்டவமாடிய குரூரத்திலும் சரி, காந்தியார் படு கொலையிலும் சரி, - மதவெறி என்னும் மதயானையல்லவாதறி கெட்டுத் தாண்டவமாடுகிறது _- மறுக்க முடியுமா?

இலங்கையிலே ஈழத் தமிழர்களின் மாமிசக் கடையை நடத்திய சிங்கள வெறியர்கள் இப்பொழுது முஸ்லிம் களை நோக்கி முண்டா தட்டு கிறார்கள். 

மியான்மரிலும் முஸ்லிம்கள் தாக்கப்படும் நிலை! 28000 பேர்கள் வெளியேற்றம்! பாகிஸ்தானில் இந்துக் கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்று கூக்குரல்கள் இன்னொரு புறம்.

2012 டிசம்பரில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கும் பணியில் ஈடுபட்ட அய்ந்து பெண் ஊழியர்கள் தாலிபன்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை!

வட நைஜிரியாவில் தேவாலயத் தாக்குதல், மாலத்தீவில் மத அடிப்படைவாதம் தலைதூக்குதல்கள்.

கிறிஸ்துவின்மீது தாங்கள் கொண் டுள்ள விசுவாசத்திற்காக ஆண்டு தோறும் 1,50,000 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று அய்ரோப்பிய ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பிரதிநிதி மசிமோ இண்ட்ரோவிஜின் தெரிவிப்பு!

ஒவ்வொரு அய்ந்து நிமிடத்திற்கும் ஒருவர் எனும் விகிதத்தில் கிறித்தவர்கள் தங்களின் தளரா விசுவாசத்திற்காகக் கொல்லப்படுகின்றனர் என்கிற நிலை!

2011 முடிந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா வில் நடந்த மத வன் முறைகள் 2420, பலி யானோர் 427, மதம் யானைக்குப் பிடிப்பதோடு நிற்கக் கூடாதா? மனி தனுக்கும் பிடித்து கோரத் தாண்டவம் ஆட வேண்டுமா?

மதம் - இன்னொரு மதத்தைப் பார்த்து முறைக்கிறது. மதம் திரிசூலங்களை மக்களிடம் அளித்து வருகிறது.

இந்த நிலையில் மனித சமூகத்தில் சகோதரத்துவம் பரவ வேண்டுமானால், மனிதநேயம் மலர்ந்து மணம் வீச வேண்டுமானால், அனைவருக்கும் அனைத்தும் என்னும் அன்பு மழை பொழிய வேண்டுமானால், ஆண் - பெண் சமத்துவம் என்னும் சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிய வேண்டுமானால், மதமற்ற உலகம் ஒன்று உருவாக வேண்டும். மதம் வளர்த்த ரத்தவெறி போதும்! போதுமடா போதும்!!

மனிதத்துவத்தை மலர்விக்கும் மதமற்ற உலகம் தேவை! தேவை!!
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் தத்துவம் அதைத்தான் கூறுகிறது.

மதம் மதத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் தொடர்புக் கொண் டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது என்கிறார் தந்தை பெரியார் (விடுதலை 14.10.1971).

இப்பொழுது விருதுநகர் 1931ஆம் ஆண்டு மாநாட்டுத் தீர்மானத்தை ஒரு முறை புரட்டிப் பாருங்கள் புத்தறிவோடு அதன்மீது பொய் -சூது அற்ற புத்தியைக் கொஞ்சம் செலுத்திப் பாருங்கள்!

மனிதத் தன்மையைக் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால், அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மாநாடு அபிப்ராயப்படுகிறது

அந்த முகவை மாவட்டத்தில் (இன்றைய விருதுநகர் மாவட்டத்தில்) ராஜபாளையத்தில் வரும் மே 4ஆம் நாள் நடக்கும் மாநில இளை ஞரணி மாநில மாநாட்டில் அதனைப் புதுப்பிப் போம் வாருங்கள்! வாருங்கள்!!

பூவுலகிற்குப் புதுப் பாதை கொடுப்போம் கூடுங்கள்! கூடுங்கள்!!
 சண்டைக்களைச் சாய்த்து சகோதரத்துவத்தை விதைப்போம்
புறப்படுங்கள்! புறப்படுங்கள்!!
குடும்பம் குடும்பமாகப் புறப்படுங்கள்!
ராஜபாளையம் புதிய ராஜபாட்டையைத் திறக் கட்டும்! - தமிழினம் திரளட்டும்! தனி வழியைக் காணட்டும்!    காணட்டும்! காணட்டும்!

    ---------------- மின்சாரம் அவர்கள் 20-04-2013    ”விடுதலை”ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை