Search This Blog

Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

25.5.09

பாரதியார் இலக்கணப் பிழையுடன் பாடல்கள் எழுதினாரா?


அங்குப் போனான்

புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது நெருக்கமான நண்பர்களாக, சால்வே கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பூ.ஆ.பெரியசாமி, பங்காரு பத்தர், திருப்புளிசாமிஅய்யா, பாரதிதாசன் போன்றோர் இருந்தனர்.

சில சமயங்களில் பாரதியார் இலக்கணப் பிழையுடன் எழுதுவது கண்டு பூ.ஆ.பெரியசாமிக்கு வருத்தம் இவரெல்லாம் பாட்டெழுத வரலாமா - இலக்கணம் தெரியாமல் என்று குமுறுவாரே தவிர, பாரதியிடம் வெளிப்படையாக சுட்டிக்காட்டத் தயக்கம்.
எவருக்கும் அஞ்சாப் பாவேந்தர் பாரதிதாசன், நால்வரில் இவர் மட்டும் துணிந்தார்.

அங்கு + போனான் என்பதை அங்குப் போனான் என்றே எழுத வேண்டும் எனச் சுட்டிக் காட்டி, சுட்டுச் சொல்லுக்கு பின் வல்லினம் மிகும் என்ற இலக்கண விதியை எடுத்துக்காட்டினார். அதற்கு பாரதி, அங்குப் போனான் என்று எழுதினால் என்னவோ போல் உள்ளதே! இயற் கைக்கு முரணாக ஒலிக்கிறதே! என்றார். அதற்குப் பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார். நீங்க இலக்கணத்திற்குக் கட்டப்பட்டவரே தவிர, இயற்கைக்கு அல்ல என்று பாரதிதாசன் அடித்துக் கூறி, பாரதியை இலக்கண வேலிக்குள் கொண்டு வந்தார்.

--------- சந்தன் - அக்டோபர் 16-31 2008 "உண்மை" இதழிலிருந்து

1.1.09

"சாராயம்", "கஞ்சா" குடித்த ''பாரதியார்"





பாரதியாரைப் பற்றிப் புகழாத பார்ப்பனர்களே இல்லை என்று சொல்லலாம். அதுபோல பொதுவுடமைபேசும் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதவர்களும் சில பட்டிமன்றப் பேச்சாளர்களும் பாரதியின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளாமல் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள். மது,கஞ்சா போதை போல் அவர்களுக்கு "பாரதி" போதை. அந்த போதைதெளியவும், பாரதியின் ஒழுக்கத்தின் யோக்கியதையை அறிந்து கொள்ளவும் இப் பதிவு வெளியிடப்படுகிறது. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழ்காணும் இணைப்பை பயன்படுத்தவும்.

http://www.kalachuvadu.com/issue-108/page27.asp

---------------------------------------------------------------------------------------


பாரதியாரோட பழக்கவழக்கங்கள் பற்றி?

அவருக்குச் சில வீக்னஸும் உண்டு. கஞ்சா குடிக்கறது. வடநாட்டுக்கெல்லாம் போயிருந்திருக்காரு இல்லே. சிறு வயசிலே காசியிலதான் முக்கியமா இருந்திருக்காரு. அங்க கஞ்சா குடிக்கிற பழக்கத்தைப் பாத்திருக்காரு. எங்க ஊர் கடையம் சின்ன கிராமம். அங்கேயும் ஒரு கஞ்சா ஆசாமி. அவன் ஒருத்தன் கிட்டேதான் கிடைக்கும். எங்கேயிருந்தோ அவன் வாங்கிட்டு வந்திடுவான். அவன் பெயர் ஆறுமுகம். கோவில்ல பணி செய்யறான். ஓச்சன்னு சொல்லுவாங்க. அவனைத் தெரிஞ்சு வீட்டுக்கு வரவழைச்சாரு. அவனைக் ‘கஞ்சா கொண்டாறியா’ன்னு கேட்பாரு. அவன் கொண்ணாந்தான். சிலும்பியை (விரல்களை விரிக்கிறார்) அப்ப பார்த்ததுதான். அதுக்கு முன்னாலே அதெல்லாம் தெரியாது. அதை நல்லாக் கசக்கி உள்ளே வைப்பார். அதைப் பத்தவைக்க முக்கியமா தேங்காய் நார் வேணும். அதுக்கு என்ன செய்றது? அவர் வீட்டுக்குப் பின்னாலே ஒரு கிணறு. அந்தக் கிணத்திலே ஒரு ராட்டினம் போட்டிருந்தது. ராட்டினத்தில ஒரு கத்தைக் கயிறு. கிணத்துத் தண்ணீரை இறைக்கிற அளவுக்கு நீளக் கயிறு அது. வர வர அதோட நீளம் குறைஞ்சிருச்சு. அதைக் கட் பண்ணிடுவாரு. இவ்வளவு நீளம் கட் பண்ணினால்தான் கனியும். அப்ப இந்தக் கஞ்சாவை ஊன்னு உறிஞ்சுடுவாரு (சிலும்பியை உறிவதுபோல் பாவனை செய்கிறார்). அப்படி உறியும் போதே பரலோகத்திலே போற மாதிரி கண்ணை மூடிக்குவாரு. அது ஒரு வேடிக்கை. அவரும் இவனும் மாறிமாறிக் குடிப்பாங்க. ஒருநாள் ‘என்ன கிணத்திலே வாளிக் கயிறு எட்டமாட்டேங்குதே’ன்னு செல்லம்மா கேக்கறாங்க ‘அதுக்கு வேற வாங்கிக்கோ. இப்ப அதுக்காக என்ன? கொஞ்சம்தானே எடுத்தேன். இனிமே எடுக்கமாட்டேன்’ அப்படின்னு ஒரு சமாதானம் சொல்லிவிட்டுட்டாரு. இப்படி ஒரு வேடிக்கையான ஆளு அவரு. ...........


....................மது பானத்தை அந்தந்த கிளாஸ்லேதான் ஊத்திச் சாப்பிடணும்னு அவர்கிட்டே ஒரு கண்டிப்பு கிடையாது. சாயந்திரம் வயக்காட்டிலே வேலை செஞ்சிட்டு அரிஜனங்கள் போவாங்க. போற வழியிலே அங்கே சேரிப் பக்கம் கள்ளுக்கடை இருக்கும். அவங்க பட்டையைக் குடிச்சிட்டு அலுப்புத் தீர ஆட்டம் பாட்டம் எல்லாம் போடுவாங்க. ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்னு எங்ககிட்டே சொல்லிட்டு உள்ளே போயிடுவாரு. அவரு பட்டையை நீட்டமாகப் புடிச்சிக்குவார். ‘ஏ சாமி வந்திருக்கார்’னு அதில ரெண்டு மூணு விடுவான். நல்லா நிறையச் சாப்பிடுவாரு. அவங்க எல்லாம் ஆடுவாங்க. பாடுவாங்க. இவரு நேராக் கிளம்பி வந்திடுவார். அந்த ஸ்மெல் மட்டும் கொஞ்சம் இருக்கும். மற்றபடி எந்தவித நடவடிக்கைகளிலும் வித்தியாசம் இருக்காது.


-------------------நன்றி: "காலச்சுவடு" இதழ் -108 டிசம்பர் 2008

18.12.08

பாரதியார் சாதி ஒழிப்பிற்காக எந்த போராட்டத்தை நடத்தினார், நாலுவரிப் பாட்டைத் தவிர!




ஆய்வளார்கள் காட்டும் பாரதி




பாரதியார்- தமிழ் மொழிக் காவலர், விடுதலை வீரர், பொதுவுடைமைவாதி, முற்போக்குவாதி என்றெல்லாம் ஆய்வாளர்கள் பலர் ஆராய்ந்து தம் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இவ்வாய்வாளர்களின் கருத்துகள் சரிதானா? இல்லையா? என்பதைப் பற்றி இங்கு ஆராய்வோம்.

பாரதியைப் பற்றி நூல்கள் எழுதிய ஆய்வாளர்களைப் பொதுவாக நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. பாரதியை முழுக்கப் பொதுவுடமைவாதியாகக் காட்டும் சி.பி.ஐ., சி.பி.அய்.(எம்)கட்சிகளைச் சார்ந்தவர்கள்
.
2. பாரதியைத் தமிழ்மொழிக் காவலராக,தமிழ்மொழி,பண்பாடு, கலை வளர்ச்சிக்காகப் பாடுபட்டவராகக் காட்டும் ம.பொ.சி.போன்றவர்கள்.

3. பாரதியை ஆரியச் சார்பானவர் எனக் காட்டுபவர்கள்.

4. பாரதி புரட்சியாளர் இல்லை என்றாலும் அவர் ஒரு பிற்போக்குவாதி அல்ல எனக் காட்ட முனைபவர்கள் எனப் பிரிக்கலாம்.

பொதுவுடைமைவாதிகள் பாரதியைப் பற்றிக் கூறும் கருத்துகளைப் பார்க்கலாம்.

முதலில் ப.ஜீவா அவர்கள் பாரதியைப் பற்றிக் கூறும் கருத்துகளை எடுத்துக் கொள்வோம். தோழர் ஜீவா அவர்கள் 1935 முதலே பாரதியை மேடைகளில் புகழ்ந்து பேச ஆரம்பித்தார். ஆன்மீகவாதியான பாரதியைப் பொருள் முதல்வாதியாக ஜீவானந்தம் எடுத்துரைத்து விளக்கிய பொழுது சில இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது (1) என்று பெ.சு.மணி குறிப்பிடுகிறார். பாரதியார் சோவியத்தில் ஜார் வீழ்ச்சி குறித்து எழுதிய பாடலான,

மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாளங்கே
ஆகாவென்றெழுந்ததுபார் யுகப் புரட்சி

என்ற பாடலை மேற்கோள் காட்டி, பாரதி அக்டோபர் புரட்சியை ஆதரித்ததாகக் கூறுகிறார். அது உண்மை இல்லை என்பதைப் ‘பொதுவுடைமைப் பற்றிப் பாரதி’ என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

“சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் போகப் போக வெற்றி மேல் வெற்றி சூடிவரும் உலகளாவிய ஜனநாயக- சமதர்ம இயக்கத்தின் முக்கியமான அம்சங்கள் மூன்று. 1) அடிமை நாட்டு மக்கள் விடுதலை, 2) பாட்டாளி மக்கள் விடுதலை, 3) பெண் மக்கள் விடுதலை. இந்த அம்சங்கள் நெஞ்சை அள்ளும் விதத்தில் முழுப்பொலிவோடு, எதிரொலிப்பதைப் பாரதி பாடல்களில் பரவலாகக் காணலாம்.” (2)
என்கிறார் ஜீவா.

பாரதி இதை எந்தக் கட்டத்தில் பாடினார் என்பதுதான் நம்முடைய கேள்வி. தொடக்கக் காலத்தை மட்டுமே சுட்டிக் காட்டுவது எப்படி ஆய்வாகும்? ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்ற பாடலைப் பாடிக்காட்டி, பாரதி சாதியைத் தூள் தூள் ஆக்குவதாக ஜீவா கூறுகிறார். (3)

பாரதி இப்பாடலை அந்த எண்ணத்தில் பாடவில்லை என்பதைப் பாரதியின் பாரதியின் பார்ப்பன இன உண்ர்வு என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளேன். பாரதி, “வர்க்கப் போரைப் போற்றினான், வம்பர் வாழ்வைத் தூற்றினான்” (4) என ஜீவா கூறுவது வெறும் வேடிக்கையாக உள்ளது. பாரதி எப்போது வர்க்கப் போரைப் போற்றிப் பாடினார்? பாரதி வர்க்கப் போரைக் கடுமையாகத் தாக்கி ‘செல்வம்’ என்ற கட்டுரையில் எழுதியுள்ளாரே.

பாரதி கம்பனை ஒரு மானுடன் என்று கூறிவிட்டாராம். இதனால் ஜீவாவின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. இது எத்தனை மெய்? ‘கம்பன் ஒரு மானுடன்; அவன் காவியம் மானிட மகா காவியம்’ (5) என்கிறார் ஜீவா. மதவாதியின் மானுடப் பற்று என்பதுதான் உண்மையானது. கம்பனை ஒரு மானுடன் என ஜீவா கூறுவது சற்றும் பொருத்தமற்றது. கம்பன் காவியத்தில் சோசலித்தைக் காண்கிறார் ஜீவா.

இவரைப் போன்றவர்கள் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டுதான் மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ், ‘கற்பனாவாத சோசலிசமும்,விஞ்ஞான சோசலிசமும்’ என்ற நூலை எழுதினார் போலும். “ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் விஞ்ஞானபூர்வமான நாஸ்திகனே”6 என்கிறார் ஜீவா. இதைத்தான் மார்க்சியத்தின் அடிப்படைச் சித்தாந்தமும் கூறுகிறது. ஆனால் பாரதி போன்றவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்கிறார் ஜீவா.

ஜனசக்தி பொன்விழா மலரில், ‘நான் ஒரு நாஸ்திகன்’ என்ற தலைப்பில் ஜீவா கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பாரதியைப் பற்றி எழுதும் போது ஜீவா கூறுவதாவது: “நான் ஒரு நாஸ்திகனான கம்யூனிஸ்ட். அப்படியானால் ஆஸ்திக உணர்ச்சியுள்ள கம்யுனிஸ்டுகளும் இருக்கிறார்களா? இருக்கக் கூடாது என்றில்லை. ஒரு மதத்திலும் நம்பிக்கையில்லாத நாஸ்திகர்களுக்கு மட்டும்தான் தொழிலாளர்களின் அரசியல் கட்சியாகிய கம்யுனிஸ்ட் கட்சியில் இடமுண்டு என்று கட்சியின் திட்டமோ, கட்சியின் ஸ்தாபன விதிகளோ திட்டவட்டமாக கூறவில்லை. நேர்மாறாக, தொலிழாளர் கட்சி, மத நம்பிக்கைகளைப் பலாத்காரமாக எதிர்ப்பது தவறு என்று மார்க்சிய அறிஞர்கள் கூறியுள்ளனர்” (7) என ஜீவா கூறுகிறார். இது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டமாகும். இப்படி இருந்தால் பொதுவுடைமைக் கட்சி எப்படி உருப்படும்?

பெரியாரை ஒரு சாதி ஒழிப்பு வீரராக ஜீவா ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது குறித்து அவர் கூறுவதாவது: ஆனானப்பட்ட கௌதம புத்தன் ஜாதியை ஒழிக்க முயன்றான். முடியவில்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் முயன்றார்கள்; முடியவில்லை. “நான் ஜாதியை ஒழித்து விடுவேனென்று ஈ.வெ.ரா.கத்தியைக் கையில் எடுக்கிறார். நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதீயப் பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக் கட்டிவிடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்து விட முடியுமென்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்”(8)

இந்த 20ஆம் நூற்றாண்டில் பெரியார் ஒரு பெரிய பட்டாளத்தையெ வத்துக் கொண்டு சாதி ஒழிப்பிற்காகப் பல கிளர்ச்சிகளை நடத்தியவர். அதற்காக அரசியல் சட்டத்தையே எரித்து பல ஆயிரம் பேரை சிறைக்கு அனுப்பியவர். பெரியாரைப் போல இந்த நூற்றாண்டில் சாதி ஒழிப்பிற்காகக் கடுமையாகப் போராடியவர்கள் எவருமில்லை. பாரதியார் சாதி ஒழிப்பிற்காக எந்த போராட்டத்தை நடத்தினார், நாலுவரிப் பாட்டைத் தவிர! சாதி ஒழிப்பிற்காக நேரடிப் போராட்டம் நடத்திய பெரியாரை குருட்டுப் பைத்தியக்காரன் என்கிறார்; நாலு வரிப்பாட்டை எழுதிய பாரதியைச் சாதி ஒழிப்பு வீரன் என்கிறார் ஜீவா. இது ஜீவாவிற்குச் சுயமரியாதை இயக்கத்தின் மீதும், பெரியாரின் மீதும் இருந்த காழ்ப்பைக் காட்டுகிறதே தவிர நடுநிலை ஆய்வாக அமையவில்லை.


பொதுவுடைமைக் கட்சியைச் சேர்த்த பி.இராமமூர்த்தி பாரதியை மாபெரும் புரட்சி வீரர் என்கிறார். “செந்தமிழ் நாடெனும் போதிலே” என்ற பாட்டைச் சுட்டிக் காட்டிக் தமிழ் உணர்வாளர் என்கிறார். இதே பாடலைப் பாரதிதாசன் பாடினால் பிரிவினைவாதி, தேசத்துரோகி என்பார். மேலும் அவர் பாரதி குறித்துக் கூறுவதாவது: “1919க்குப் பிறகு சென்னையில் சுதேசமித்திரனில் பணியாற்றிய காலத்து, நீ திருவல்லிக்கேணி கடற்கரையில் செய்த கர்ஜனைகள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன” (9) என்று கூறுகிறார்.

பாரதி 1918 நவம்பரில் ஆங்கில ஆட்சிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்ட பிறகு அரசியல் கூட்டங்களில் பேசியதே இல்லை. ஆனால் பி.இராமமூர்த்தி 1919க்குப் பிறகும் பாரதி கர்ஜித்த கர்ஜனை தன் காதுகளில் இன்றும் ஒலிப்பதாகக் கூறுவது பொய்யே தவிர உண்மை இல்லை. எம்.ஆர்.வெங்கட்ராமன் என்பவர், ‘தீக்கதிர்’ பாரதி நூற்றாண்டு சிறப்பு மலரில் பாரதி சில நினைவுகள் என்ற கட்டுரையில் எழுதுவதாவது:

“ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தவுடன் நடந்த ஒரு சம்பவத்தைத் துரைசாமி அய்யர் அடிக்கடிக் குறிப்பிடுவார். அச்சம்பவத்தைப் பற்றி அவர் கூறும்போது, மாலை சுமார் ஏழு மணி இருக்கும். மண்ணடி ராமசாமித் தெருவில் உள்ள தன் வீட்டில் துரைசாமி அய்யர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தீடிரென்று பாரதியார் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் கையில் ஒரு கத்தி, கண்களில் கனல் பறக்கிறது. பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று ஆவேசத்துடன் பேச்சு, துரைசாமி அய்யரைச் சாப்பிடவில்லை. அவரைக் கையும் பிடியுமாக அப்படியே இழுத்துக் கொண்டு கடற்கரையை நோக்கி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வாயிலை அடைந்தார். அங்குள்ள வெள்ளைக்கார சிப்பாய்களை சண்டைக்கு இழுக்க வேண்டுமென்பது பாரதியாரின் நோக்கம். வேடிக்கை பார்க்கச் சில சிறுவர்கள் மட்டும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். விளைவு என்ன ஆனாலும் சரி என்று கிளம்பிவிட்டார் பாரதியார். அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர்” (10) என்கிறார். ஜாலியன் வாலபாக் படுகொலை நடந்தது 13.4.1919 இல், அந்நேரத்தில், பாரதி ஆங்கில அரசின் விருப்பப்படி கடயத்தில் வசித்து வந்தார். “அவர் ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து எதையும் எழுதவில்லை என்று ஆய்வாளர் கோ.கேசவனும் கூறியுள்ளார்.”11

பாரதியைப் பற்றி அளவுக்கு மீறிப் பார்ப்பனர்கள் பல பொய் கதைகளைக் கட்டி உண்மைச் சம்பவம் போலவும், தாங்கள் நேரில் பார்த்தது போலவும் எழுதி அவரை உயர்த்திக் கூறியுள்ளனர். உண்மையில் ரௌலட் சட்டத்தையும் ஜாலியன் வாலாபாக் படுகொலையையும் வன்மையாகக் கண்டித்தவர் விடுதலை வீரர் வ.உ.சி.யே.
அன்னிபெசண்ட் அம்மையார் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்தார். அந்த அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கம் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருக்கவே திலகரும், பாரதியும் அன்னிபெசண்டை ஆதரித்தனர். ஆனால் வ.உ.சி. மட்டும் தான் அன்னிபெசண்ட் ஆங்கிலேயரின் கையாள் என்பதைப் புரிந்து கொண்டு அவரை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார்.(12)

அன்னிபெசண்ட் பஞ்சாப் படுகொலையை ஆதரித்தார் என்பதற்குப் பின்வரும் சான்றும் உள்ளது: 1923 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்குத் தலைவர் ஈ.வெ.ரா காரியக் கமிட்டிக் கூட்டத்தில் சத்யமுர்த்தி அய்யர், நீதிக்கட்சித் தலைவர் பி. தியாகராய செட்டியாரை ‘டயர்’ என்றும், பனகல் அரசரை ‘இராட்சசன்’ என்றும் வருணித்தார். இதனைப் பொறுக்காமல் எஸ்.இராமநாதன் எழுந்து, “ஒத்துழையாமையைச் சட்ட விரோதம் என்று கூறிக் காந்தியைக் கைது செய்யச் சொன்ன சீனிவாச அய்யங்காரும், பஞ்சாப் அட்டூழியத்தை ஆதரித்து, செங்கல்லால் அடித்தவர்களை இரும்பு குண்டாலடித்தார்கள் வெள்ளையர்கள். இதிலென்ன தவறு? என்று கூறிய பெசண்டு அம்மையும், டயரும், ராட்சசியும் அல்லவா? என்று பதிலடி கொடுத்தார்.” (13) எஸ்.இராமநாதன்.

மற்றுமொரு பொதுவுடைமையாளார் பி. பரமேசுவரன் கூறுவதாவது: “பாரதி சொல்லிலும் செயலிலும் சாதி வேற்றுமையை வெறுத்தவன். பூணூல் அணிய உரிமையற்றவர்கள் என்று விலக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவனுக்கு அதை அணிவித்தான். பூணூலின் புனிதத் தன்மைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினான் என்கிறார். ஆனால் பாரதி எல்லோரையும் இந்துமதத்துக்கு இழுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பூணூல் அணிவித்துள்ளார். இக்கருத்தைக் கவனத்தில் கொள்ள மறுத்த பரமேசுவரன் அவரைப் புரட்சியாளராகக் காட்டுகிறார். மேலும் இவர் பாரதியைப் பெண் விடுதலையாளராகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரராகவும் காண்கிறார். பாரதி அக்டோபர் புரட்சியை வரவேற்றதாகவும் குறிப்பிட்டு பாரதியை, “பரலோகத்திற்குப் பாதை காட்டியவரல்ல; இம்மண்ணுலகிலேயே புது வாழ்வைக் காணத் துடிக்கும் மக்களின் கவிஞர்” என்று கூறுகிறார். (14)

பொதுவாகப் பாரதியைப் புகழ்ந்து எழுதும் அனைவருமே பாரதியின் தொடக்கக் காலமான 1906 முதல் 1908 வரை உள்ள காலத்தில் எழுதிய பகுதியை மட்டுமே கண்டு ,அவர் வாழ்நாள் முழுதும் அதே நிலைப்பாட்டில் வாழ்ந்தவர் எனக் காட்டுகின்றனர். பாரதியின் அரசியல் வரலாற்றின் தொடக்கத்தையே மீண்டும் மீண்டும் கூறி அவரின் பிற்கால நிலைப்பாடுகளைக் கண்டு கொள்ளாமல் மறைத்து விடுவது நேரிய ஆய்வு முறையன்று. பொதுவுடைமைக் கட்சியினர் அனைவரும் மற்றுமுள்ள முற்போக்காளர்களும் திட்டமிட்டே இதைச் செய்கின்றனர்.

இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர்களை விட ஒருபடி மேலே போய்விட்டார் பேராசிரியர் ந. பிச்சமுத்து. “அரசு பற்றிப் பாரதியார் கூறும் உண்மைகள் வியாசரின் கருத்துகளா அல்லது பாரதியின் கருத்துகளா என்பது மகாபாரதத்தோடு ஒப்பு நோக்கி எடுக்க வேண்டிய முடிவு என்றாலும், பாரதியார் அரசு பற்றிக் கூறும் கருத்துக்கள் மேதை லெனின் அவர்கள் அரசும், புரட்சியும் என்னும் நூலில் கூறும் கருத்துகளோடு ஒத்திருப்பது மனங்கொளத்தக்கது... அரசு பற்றிய லெனினிய கொள்கையைத் தமிழ் மண்ணில் அறிமுகப்படுத்திய முதல் கவிஞர் பாரதி” (15) என்று கூறுகிறார். இது எவ்வளவு பெரிய பொய் ? உண்மையில் பரதியாருக்கு மார்க்சீயத்தின் அடிப்படைகள் எதுவுமே தெரியாது என்று குறிப்பிட்டு செ.கணேசலிங்கன் கூறியுள்ளதாவது:

“பாரதி அக்டோபர் புரட்சியைப் பாடவில்லை. 1917இல் பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சியைத்தான் பாடினார். அவர் ஒரு பொருள் முதல்வாதியல்ல“ என்று மங்களா என்பவர் பாரதியின் கருத்துகளை ஆய்வு செய்து கூறியுள்ளார். (17) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த தொ.மு.சி.ரகுநாதன் “பாரதி அக்டோபர் புரட்சியைப் பாடவில்லை என்று கூறுபவர்கள் அந்தக் கொள்கை மேல் வெறுப்பால் அவ்வாறு கூறுகிறார்கள்” (18) என்கிறார். பாரதியைப் புரட்சிக்காரராகக் காட்டுவதற்காக இவர் ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற தலைப்பில் 550 பக்கங்கள் கொண்ட நூல் ஒன்றை எழுதியுள்ளார். இதில் பாரதியின் தொடக்க காலமான 1906 முதல் 1911 வரை அவர் எழுதியவை மட்டுமே உள்ளன. பாரதியின் கடைசிப் பத்தாண்டுகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இவர் லெனின் கொள்கையை விட, பாரதியின் கொள்கைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

பாரதியைத் தமிழ் வளர்ச்சிக்காக அயாரது பாடுபட்டவர் எனப் பலர் எழுதியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ம.பொ.சி.ஆவார். பாரதி தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டிப் பாரதியைத் தமிழ் இனக் காவலராக உயர்த்திப் பிடிக்கிறார் ம.பொ.சி. பாரதி தம் தம்பி சி.விசுவநாதனுக்கு 3.8.1918 இல் கடிதம் எழுதினார். அதில், “எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எவ்வளவு கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ் கூட எழுத முடியாவிட்டால் சமஸ்கிருதத்திலே காயிதம் எழுது” (19) என்று எழுதியுள்ளார். இதை எப்படிப் பாரதியின் தமிழ்ப் பற்று என்று சொல்ல முடியும்? அவர் தம்பியைத் தமிழில் மட்டும்தானே எழுதச்சொல்லியிருக்க வேண்டும்; இல்லையென்றால் சமஸ்கிருதத்தில் எழுது என்று ஏன் கூற வேண்டும்? இது பாரதிக்கு ஆங்கிலத்தின் மேல் இருந்த வெறுப்பைக் காட்டுகிறதே அன்றி ம.பொ.சி.கூறுவது போல் தமிழ்ப்பற்று அன்று என்பது தெரியவில்லையா?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்

என்ற பாரதியின் பாடலைப் பலர் மேற்கோள் காட்டிப் பாரதியின் தமிழ்ப்பற்றைப் போற்றியுள்ளனர்.டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் இப்பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பாரதியின் தமிழ் உணர்வைப் புகழ்கிறார். (20)

உண்மையில் இப்படலைப் பாரதி மனப்பூர்வமாக எழுதினாரா என்று இன்று வரை யாரும் ஆய்வு செய்யவில்லை. இப்பாடலைப் பாரதி 1915 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்ச்சங்கத்தின் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்தலினால் எழுதினார் என்பதைப் ‘பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா?’ என்ற முதல் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளேன். அதேபோலப் பாரதியின்,

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

என்ற பாரதியின் பாடலையும் பலர் சுட்டிக்காட்டிப் பாரதியின் தமிழ் உணர்வைப் போற்றுகின்றனர். இப்பாடலும் மதுரைத் தமிழ்சங்கம் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்துதலினால் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை
. பாரதியைப் பெண் விடுதலையாளராகப் பெரும்பாலோர் காண்கின்றனர், அவர்கள் பாரதியின் பெண் விடுதலைக்கும் இப்பாடலை மேற்கோளாகக் காட்டுகின்றனர். தி.ச. ராஜீ குறிப்பிடுவதாவது:

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்; அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி (21)

என்ற பாடலைச் சுட்டிக் காட்டிப் பாரதியைப் பெண் விடுதலையாளராகக் காட்டுகிறார். பாரதி தொடக்கக் காலத்தில் சிறந்த பெண் விடுதலையாளராக இருந்தார் என்பதை இப்பாடல் வரிகளால் நாம் அறிகிறோம். ஆனால் பாரதி பிற்காலத்தில் தீவிர மதவாதியாய் மாறிய பின்பு அவருடைய பெண் விடுதலைக் கோட்பாடு போய்விட்டது என்பதே உண்மை. பாரதியே தன் கருத்தைப் பின்னாளில் மாற்றிக் கொண்ட பின்பு நாம் அவர் தொடக்கத்தில் கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது ஆய்வுக்கு அழகல்ல!

20.10.1906 இந்தியா இதழில் பாரதி எழுதும்போது, பம்பாயிலிருந்து ‘ஹிந்தி சுயராஜ்’ என்னும் இதழின் ஆசிரியர் டாணாவாலா எழுதிய கட்டுரை இராஜதுரோகம் உடையதென்றும், ஆங்கில அரசு அவரைத் தண்டித்தது அவர்கள் கடமை என்றும் கூறி எழுதியதாவது: “தைரியம் வேண்டும், பயமில்லாமை வேண்டும்” என்று 3 பக்கம் பிரசங்கம் செய்த பத்திராதிபர், தாம் எழுதியதை ‘ஆமாம் நான் எழுதினதே நியாயமென்று எனக்குப் புலப்பட்டது; அதன் பேரில் எழுதினேன்’ என்று கோர்ட்டார் முன்பு கூறத் தைரியமில்லாமல், ஏதோ வெற்று முகாந்திரங்கள் கூறி மழுப்பிவிட்ட விஷயம் வேடிக்கையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. தாம் செய்ததை ஒத்துக்கொள்ளாத இவர் வியாசத்தை தைரியத்துடன் எழுதும்படி யார் கேட்டுக் கொண்டார்களோ அறியமாட்டோம்” என்று கூறியுள்ளார்.

இந்தியா இதழின் வெளியீட்டாளராகப் பதிவு பெற்றிருந்த சீனிவாசன் ஐந்து ஆண்டுக் கடுங்காவல் விதிக்கப்பட்டதைப் பற்றிப் புதுச்சேரிக்குச் சென்றபின் பாரதி அங்கிருந்து வெளியிட்ட இந்தியா இதழில் ‘இந்தியா கேஸ்’ என்ற ஆசிரியவுரையில்: “ஏதோ பிறர் ஏமாற்றுதலுக்குப்பட்டுப் பிசகி நடந்து விட்டாரென்றும் அவர் செய்தது குற்றம் என்று தீர்ப்பாகி விடும் பசஷத்தில் அதற்காக அனுதாபப்பட்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார் என்றும்... சீனிவாசனின் வழக்கறிஞர் கூறியதைக் குறிப்பிட்டு, ‘நாம் எது செய்யினும் தேசத்துரோகம் செய்யோம். தேசத்துரோகிக்கு என்றும் மீளாத நரகமே பிராப்தம்’; ராஜத்துரோகக் கேசிலகப்பட்டுக் கொள்ளும் ஒவ்வொரு பத்திராதிபரும் சொல்ல வேண்டியதும் அதுவே” என்று கூறியுள்ளார். சீனிவாசனைச் சிக்க வைத்துவிட்டுப் புதுச்சேரி சென்ற பாரதி ஆய்வாளர் முனைவர் ப.இறையரசன் கட்டிக் காட்டியுள்ளார். (22)

தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்து விட்டுத்தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும் என்று எஸ்.ஜி. இராமநுஜலு நாயுடு கூறுயுள்ளார். (23) பாரதியார் எப்போதும் தான் மட்டும் அகப்பட்டுக்கொள்ளக்கூடாது, சிறைக்குப் போகக்கூடாது என்று சந்து பொந்து வழிகளைக் கண்டுபிடித்து ஒளிந்து கொள்கிறார். மற்றவர்கள் இவ்வாறு செய்யும் பொழுது கண்டித்து எழுதுவது எந்த வகையிலும் புரட்சியாளனுக்கு உள்ள குணமாக மாட்டாது.

பாரதி ஒரு மதவாதி என்றாலும் அவர் சர்வ சமயத்தையும் சமமாகக் கருதினார் எனப் பலர் எழுதுகின்றனர்.முன்னாள் நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள் பாரதியின் பாடல் ஒன்றைச் சுட்டிக்காட்டி, அவரைச் சர்வ மதத்திற்கும் பொதுவானவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். அப்பாடல் வருமாறு:

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவை முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் -பொருள்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம் (24)

இந்தப் பாடலுக்குப் பிறகு பாரதி தன் கருத்தை மாற்றிக் கொண்டு இசுலாமியர்களையும் கிறித்தவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பதை ‘மதங்களைப் பற்றிப் பாரதியின் பார்வை’ என்ற என் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளேன். பாரதியார் ஒரு வேதாந்தி. அவர் இயற்கையைப் பற்றி எழுதினால் கூட அதில் வேதாந்தப் பொருள் இருக்கும் எனக் கூறும் டாக்டர் மின்னூர் சீனிவாசன் பாரதியின் குயில் பாட்டுக்கு விளக்கம் எழுதி அதில் வேதாந்தக் கருத்துகள் மிளிர்வதைச் சுட்டிக் காட்டுகிறார்:

நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்
காற்றை முன்னே ஊதினாய்
காணரிய வானவெளி தோற்றுவித்தாய்,
நின்றன் தொழில் வலிமை யாரறிவர்?

என வரும் வருணனையில் (1) ரிக்வேதக் கருத்தும் சாண்டோக்ய உபநிடதக் கருத்தும் மிளிர்வதைக் காணலாம். ரிக்வேதம் பத்தாவது மண்டலம் 1929 ஆம் சூக்தத்தைப் பயின்றால் மேற்காணும் வருணனை மேலும் துலங்கும் (25) என்கிறார் மின்னுர் சீனிவாசன்.

பாரதியை மிகவும் துல்லியமாக ஆய்வு செய்த கோ.கேசவன் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பாரதிக்கு அக்கறை இருந்ததாகக் கண்டு கூறுவதாவது: “பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபுதி நாமத்தைப் பூசு.... அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டை செட்டியார்களே! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள்” என்று பாரதி கூறியௌள்ளதைச் சுட்டிக் காட்டி,பாரதியை மனிதநேயப் பற்றாளரகக் காட்டுகிறார் கேசவன்.உண்மையில் பாரதி மனிதநேயத்தோடு இதைக் கூறவில்லை. “ பறையர்களுக்கு இதைச் செய்யவில்லை என்றால் அவர்கள் முகமதியர்களாகவும், கிறித்துவர்களாகவும் மாறி நமக்கு எதிரிகளாகி விடுவார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். பானியில் கூறியுள்ளார்.”27 ஆனால் கோ.கெசவன் பாரதியை ஓர் ஆர்.எஸ்.எஸ். முன்னோடியாகக் காட்ட விரும்பாமல்,பாரதியின் கருத்தை மாற்றி அவரை மனிதநேயப்பற்றாளராகக் காட்டுகிறார்.

பாரதி பறையர்களைத் தாழ்வாகக் கருதுவதை நியாயப்படுத்தி எழுதி உள்ளதை கோ.கேசவன் அவர்களே ‘ பாரதியாரும் சொசலிச கருத்துகளும்’ என்ற நூலில் சுட்டிக்காட்டியுள்ளார் அவை வருமாறு: “ ஹிந்துக்கள் புராதன கால முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்யாதிருப்பதைக் கண்டு ஜாதிப் பொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம்” 28 எனக் கூறித் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி வைத்ததை நியாயபடுத்தும் பாரதியை ஒரு மனித நேயப் பற்றாளராக எவ்வாறு காண முடியும்?.

பாரதி இந்திய தேசிய இனங்களின் விடுதலையை ஆதரிப்பதாகக் கோ.கேசவன் கூறுவதாவது:

இந்தியப் பகுதிகளை மொழிவாரியாகப் பிரித்து அவற்றை இணைக்கும் போக்கை ‘மாதாவின் துவஜம்’ என்ற பாடலில் காண்கிறோம்.சென்னை மாகாணத்தில் உள்ள கன்னடர், தெலுங்கர், மலையாளர், தமிழர் ஆகிய தேசிய இனங்களைப் பிரித்து அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாயின் மணிக்கொடியை வணங்குவதாகப் பாடுகின்றார்.தேசிய இனமொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுதலையும் ஆதரிக்கின்றார்.ஆனால் இந்தியாவின் அரசியல் விடுதலைக்குப் பிறகே இதைச் செய்ய்ய வேண்டும் என்கிறார்.29

ஆனால், உண்மையில் பாரதி அப்படிக் கூறவில்லை.தெலுங்கர் தனி மாநிலமாகப் பிரிய வேண்டும் என்று 1917இல் தீர்மானம் நிறைவேற்றியபோது பாரதி கூறியதாவது:

“ஆந்திராரைத் தானிப்பிரிவாக ருஜீப்படுத்துவதைக் காட்டிலும் அஸேது ஹிமாசல பர்யந்தம் உள்ள இந்துக்களெல்லாம் ஒன்று என்ற மூலமந்திரத்தை நிலைநாட்டுவதே அவசியமென்று என் புத்திக்குத் தோன்றுகிறது. ஹ்ந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர்.பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள்.நமக்குள் மதபேதம், ஜாதிபேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக்கொள்ளைதான் இந்தக் காலத்துக்கு உத்தமமானது.ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், ஒன்று”30 என்று கூறுகிறார்.

இப்படிப்பட்ட அகண்ட பாரதக் கொள்கை உடைய ஆர்.எஸ்.எஸ். முன்னோடி மூளை கொண்ட பார்ப்பன பாரதி, தேசிய இனங்களின் விடுதலையை ஆதரித்தார் எனக் கோ, கேசவன் கூறுவது விந்தையாக உள்ளது.

பாரதியின் வாழ்வில் சமயம் வகித்த செல்வாக்கு கருதுதற்குரியது. ஓரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் இவரது படைப்புகளில் சமயப்படைப்புகளே அதிகம் இருந்தன. சமயத்தையே தேசியமாகவும் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டார் என வேறு ஓர் இடத்தில் கோ.கேசவன் கூறியுள்ளார்.31

“ பாரதி காலத்தில் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியும் சுரண்டலும் நேரடியாக இருந்து இப்பொழுது அவற்றின் வடிவங்கள் மாறியுள்ளன.

இந்நிலையில் இத்தகைய கோட்பாடுகளின் தேவை பல்கிப் பெருகி உள்ளது. இதை நிறைவேற்ற பாரதி ஓரளவேனும் உதவக் கூடிய நிலையில் உள்ளார்”32 என்று கோ.கெசவனும் கூறுவது மிகவும் வியப்பாக உள்ளது. பாரதி அகண்ட பாரதம் காவிக்கொடி தூக்கிக் கொண்டவர். அவரை கோ.கேசவன் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைக்குத் துணைக்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது. திராவிடர் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்ப்பதில் பாரதியும்,கோ.கேசவனும் தோழர்கள் ஆகிவிட்டனர். எனவே பாரதி எத்தனை முறை மன்னிப்புக்கடிதம் எழுதினாலும் கோ.கெசவன் மிகவும் எளிமையாக அது அவருடைய வாழ்வில் ஏற்பட்ட ஒரு ஊனம் என்ற அளவோடு நிறுத்திவிடுகிறார். இதை எல்லாம் விட ஆர்.எஸ்.எஸ். எண்ணம் கொண்ட பாரதியை அந்தக் கோணத்தில் காட்டாமல் ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரராகவும், மனித நேயப் பற்றாளராகவும், தேசிய இனங்களின் விடுதலைக்குப் பாடுபடவராகவும் பாரதியைக் காட்டுவது கோ.கேசவனின் நேர்மையான ஆய்வு முறையைக் காட்டவில்லை.


பாதகம் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா 33

என்ற பாரதியின் வரிகளைச் சுட்டிக்காட்டி, முனைவர் து.மூர்த்தி, பாரதியை வீர உணர்வுள்ளவராகக் காட்டுகிறார். ஆனால் பாரதி இந்தப் பாப்பாப் பாட்டை எப்போது பாடினார்? வெள்ளையருக்குப் பயந்து மாறுவேடத்தில் புதுவை சென்றபின் அங்கிருந்துதான் பாடினார். பாரதி எந்தக் காலக்கட்டத்திலும் தைரியத்துடனும் துணீச்சலுடன் இருக்கவில்லை.அதற்கு மாறாக ஆங்கிலேயருக்கு அஞ்சி அஞ்சியே அவர் புதுவை சென்றபின்,ஆங்கில அரசுக்கு ஆண்டுதோறும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பாரா?

“பாரதி எவ்வளவு செதுக்கினாலும் காலனிய எதிர்ப்பாளன் என்ற நிலையில் இருந்து அவரை இறக்கிவிட முடியாது”34 என்கிறார் து.மூர்த்தி. நாம் அவரை இறக்க வேண்டிய அவசியமே இல்லை அவரே அந்நிலையில் இருந்து 1910க்குப் பின் தாமாகவே இறங்கிவிட்டார்.

1915க்குப் பின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அவரிடம் துளியும் இல்லை என்பதே உண்மை. மொத்தத்தில் பாரதியின் தொடக்க காலத்தை மட்டுமே சுட்டிக்காட்டுவது எந்த வகையிலும் நேர்மையான அய்வாகாது.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியே, இன்றைய பாரதி என்கிறார் து.முர்த்தி. அந்தப் பாரதி என்றோ மறைந்து விட்டார் நீதிக்கட்சி தொடங்கியவுடன் பாரதியின் பார்ப்பன சுயரூபம் முழுமையாக வெளிப்பட்டு விட்டது. ‘கடல்மேல் வருணாசிரமப் பாலம்’ என்றகட்டுரையில் பாரதி “குலத்தளவே ஆகுமாம் குணம்” என்பதோடு “அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்ளுகிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார். அப்படிப்பட்ட பாரதியை எப்படிச் சாதி எதிர்ப்பாளர் எனக்காட்ட முடியும்?

“பாரதியைப் பார்ப்பான் என்றவொரு காரணத்திற்காக மட்டம் தட்டிய மூடர்கள்,எங்கே இனி தான் உடைப்பட்டுச் சாக நேருமோ, என அஞ்சி, ஒதுங்கிவிட்டனர்”35 எனத் து.மூர்த்தி கூறுவது விந்தையாக உள்ளது.

பாரதி பார்ப்பனக் குலத்தில் பிறந்ததால் மட்டும் நாம் அவ்வாறு கூறவில்லை. பாரதியின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்திலும் தன் சாதிக்குச் சாதகமாகவே அவர் செயல்பட்டுள்ளார் என்பதால்தான் நாம் அவரைக் கண்டிக்க வேண்டியுள்ளது.

சுயமரியாதை இயக்கத்தை ஆய்வு செய்த பேராசிரியர் மங்கள முருகேசன் ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி என்ற பாரதியின் பாடல்களால் பெரியார் ஈர்க்கப்பட்டு அதனால் அவர் ரசியா சென்றார்36 என்று கூறுவது பொருத்தமாக இல்லை. குடியரசு ஏட்டின் தொடக்க காலத்தில் பாரதியின் பாட்டை மேல் அட்டையில் வெளியிட்டு வந்த பெரியார் 8.11.1925 முதல் குடியரசு ஏடு முதல் மூன்றே மாதத்தில் பாரதியின் பாடல் வரிகளைப் பெரியார் நீக்கிவிட்டார். அதன் பிறகு பாரதியைப் பற்றி எங்கும் அவர் எழுதவில்லை. அப்படியிருக்க 1931 ஆம் ஆண்டில், பாரதியின் பாடல்களால் அவர் ஈர்க்கப்பட்டு, இரசியா சென்றார் என்பதை எப்படி ஏற்க இயலும்? பெரியாரே 1929 முதல் பொதுவுடைமைக் கருத்துகளைக் குடி அரசு ஏட்டில் எழுதி வந்தார், அதனால் சோவியத்தை நேரில் பார்க்க விரும்பி அவர் சென்றார் என்பதே உண்மை.

திராவிடர் இயக்கம் பற்றி வரலாற்று ஆய்வு நூலை எழுதியுள்ள் முரசொலிமாறன் அவர்கள் பாரதியார் 1915 இல் அன்னிபெசண்டின் ‘நியூஇந்தியா’ பத்திரிக்கையில் எழுதிய ஒரு கடிதத்தைக் கொண்டு அவரை பார்ப்பன எதிர்ப்பாளர் என்று எழுதியுள்ளார். 37 தென்னிந்தியர் நல உரிமை சங்கம் தொன்றிய பிறகு அன்னி பெசண்டின் ஹோம்ரூல் இயக்கம் தென்னாட்டுப் பார்ப்பனர்களூக்கு அடைக்கல இடமாக இருந்தது என எழுதி உள்ளார். இந்த அடைக்கலத்தில் பாரதியும் ஒருவர் என்பதை ஏனோ எழுதாமல் விட்டு விட்டார்! குறைந்த பட்சம் திராவிட இயக்க வரலாற்று நூலில் பாரதியைப் பார்ப்பன எதிர்ப்பாளர் என்பதைச்சுட்டிக் காட்டாமலாவது இருந்திருக்கலாம்.

பாரதியைப் பற்றி, நான் அறிந்தவரையில், இன்றுவரை ஏறக்குறைய 525 நூல்கள் வெளீவந்துள்ளன. இதில் 500க்கும் மேற்பட்ட நூல்கள் பாரதியை வானாளாவப் புகழ்ந்து கூறுபவையாக உள்ளன. இவை, பெரும்பாலும் பாரதி ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர், பெண் விடுதலை வீரர், சாதிமறுப்பு வீரர், தமிழ் இனத்திற்காகப் பாடுபட்டவர் என்ற கோணத்திலேயே எழுதப்பட்டுள்ளன.

பாரதி 1906 முதல் 1910 வரையிலேதான் அவர் பெண் விடுதலையாளராக இருந்தார்.

அவர் ஆங்கிலத்தை மிகக் கடுமையாக வெறுத்தார்.அதற்குக் காரணம் பார்ப்பனக் கலாசாரத்தை ஆங்கிலம் அழித்து விட்டது என்பதால்தான்.இதனால் தான் அவர் தமிழில் எழுதினார் தமிழின் மீது அவருக்கு உண்மையான பற்று இல்லை என்பதை அவருடைய எழுத்துகளில் காணலாம.

பாரதியார் வள்ளலாரைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. ஆனால் இராஜாராம் மோகன்ராயைப் பற்றி எழுதி உள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி எழுதவில்லை. ஆனால் ஜான்சிராணி லட்சுமிபாயைப் பற்றி எழுதியுள்ளார்; தமிழுக்கு ஆக்கம் சேர்த்த கால்டுவெல்லைப் பற்றியோ, ஜி.யூ.போப்பைப் பற்றியோ, மனொன்மணீயம் சுந்தரனாரைப் பற்றியோ பாரதியார் எழுதவில்லை, ஆனால் ஆரியமொழி உயர்ந்த மொழி என்று கூறிய மாக்ஸ்முல்லரைப் பற்றி எழுதியுள்ளார்; ஆனால் வேத ரிஷிகளின் பாடலுக்கு உரை எழுதி உள்ளார்.

ஜி.யூ.போப் திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கில மொழியாக்கம் செய்து உலகத்தின் பல மூலைகளில் தமிழின் பெருமையைச் சேர்த்தார். ஆனால் பாரதியாரின் ஆங்கில மொழி பெயர்ப்பு Agni and other poems . பாரதி ஆரிய வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் பரவச் செய்தார். பாரதியார் தமிழ் இலக்கியங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறீயுள்ளார். (பார்க்க ; சுத்தானந்த பாரதியின் கவிக்குயில் பாரதியார், பக். 73,74) எல்லாம் புதிது புதிதாகச் செய்வோம் எனக் கூறிய பாரதியார் 1914 முதல் அரவிந்தரின் ஆரியா பத்திரிக்கையில் ஆரியர்களின் வேதங்களின் பெருமைகளைப் பற்றியே தொடராக எழுதி வந்துள்ளார். ஆரியம் கலவாத தனித் தன்மையுடைய தமிழ் ஜாதி; அது ஆரிய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக் குழந்தை என்றெழுது” என்றுதான் எழுதியுள்ளார். ( இனம் என்பதைக் குறிக்க பாரதியார் ஜாதி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். பார்க்க: பாரதியின் கடிதங்கள், ப.158, வானாதி பதிப்பகம்).

பாரதியார் ஆரியச் சார்பானவர் என்பதைப் பாவலரேறு பெருஞ்சித்தரனார் அவர்கள் ‘ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள்’ என்ற தமது நூலில் சுட்டிக் காட்டியுள்ளார். அன்றில் ஆசிரியர் சி.வெற்றிவேந்தன் அவர்கள் தமது ‘பாரதியின் மறுபக்கம்’ என்ற நூலில் பாரதியின் பாடல்களில் உள்ள ஆரியச் சார்பைச் சுட்டிக் காட்டியுள்ளார். தோழர் வெற்றிமணிஅவர்கள் ‘பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே’ என்ற நூலில் பாரதியின் ஆரியச் சார்பைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவர்கள் மூவருமே பாரதியின் கவிதையில் உள்ள ஆரியச் சார்புகளை மட்டுமே சுட்டிக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான நூலாசிரியர்கள் பாரதியின் கவிதைகளை மட்டுமே படித்துவிட்டு பாரதியைப் பெரிய புரட்சியாளராகப் படம் பிடித்துக் காட்டுகின்றனர்.

கு.வெ.கி. ஆசான், ‘பாரதியார், பாரதிதாசன், பெரியார்’ என்ற நூலில் பாரதியின் ஆரியச் சார்பினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரதியின் தமிழ் உணர்வு என்பது ஆங்கில - கிறித்துவ கலாசாரத்திற்கு எதிரான இந்து மதக்காப்பு என்ற தன்மையில் ஆனது . பாரதி கூறுவார் நல்ல தமிழில் படிப்பவன் நல்ல இந்துவாக இருப்பான்;

ஆங்கிலக் கல்வி படிப்பவன். இந்து மதப்பற்று இல்லாதவனாக ஆகிவிடுவான் என்பார். ஆனால் பாரதிதாசனுடைய தமிழ்ப்பற்று என்பது இன ரீதியிலானது. நல்ல தமிழ் படிப்பவன் நல்ல தமிழனாக இருப்பான் என்பார்.


பாரதியின் தமிழ் உணர்வு மதரீதியிலானது. பாரதிதாசனின் தமிழ் உணர்வு இனரீதியிலானது. பாரதி தொடக்கத்தில் முற்போக்காக இருந்து பிறகு மெல்ல மெல்ல இந்துத்துவ உணர்வில் மூழ்கி அதரித்துக் கொண்டே சென்றார். ஆனால் பாரதிதாசன் தொடக்கத்தில் ஆத்திகராக இருந்து சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு முழு நாத்திகராக மாறினார்.

ஆக பாரதியின் பரிணாம வளர்ச்சி என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நோக்கியே தமிழரை அழைத்துச் செல்கிறது. பாரதிதாசனின் பரிணாம வளர்ச்சி என்பது தமிழனின் விடுதலையை நோக்கித் தமிழரை அழைத்துச் செல்கிறது.


பாரதியின் முழுப் படைப்புகளாகிய கவிதை,கட்டுரை,கதை முதலியவற்றை ஒருசேரப் படித்து அவரைப் படம் பிடித்துக் காட்ட வேண்டும்.இதுவே உண்மையான ஆய்வு.

அடிக்குறிப்பு

1. பாரதி புகழ் பரப்பிய முன்னோடிகள்,பெ.சு.மணி, மணிவாசகர், பதிப்பகம்,ப.165
2. பாரதியைப் பற்றி ஜீவா,நி.செ.பு,நி.ப.44
3. மேற்படி நூல், ப.130
4. பாரதிவழி, ஜீவா,நி.செ.பு,நி.,ப.36
5. மேற்படி நூல், ப.70
6. ஜீவா என்றொரு மானுடன்,பொன்னீலன்,நி.செ.பு,நி.,1992 ப.168
7. ஜனசக்தி பொன்விழா மல்ர்,ஜீவா,1987,ப.234
8. ஜீவா என்றொரு மானுடன்,பொன்னீலன்,நி.செ.பு,நி.,1992 ப169
9. தீக்கதிர் பாரதி நூற்றண்டு சிறப்பு மலர் .பி.இராமமூர்த்தி, ப.11
10. தீக்கதிர் பாரதி நூற்றண்டு சிறப்பு மலர் ,எம்.ஆர்.வெங்கட்ராமன்,ப.13,14
11. பாரதியும் அரசியலும்,கோ.கேசவன்,ப.187
12. வ.உ.சிதம்பரம் பிள்ளை,என்.சம்பத்-பெ.சு.மணி,பப்ளிகேஷன் டிவிஷன்,தில்லி,ப.208
13. விடுதலை நாளேடு, 2.5.1968.ப.2
14. தீக்கதிர் பாரதி நூற்றண்டு சிறப்பு மலர் .பி.ஆர்.பரசுவரன், ப39,40,149
15. பாஞ்சாலி சபதம் ஒரு சமுக வரலாற்றுப் பார்வை,பேரா.டாக்டர் ந.பிச்சமுத்து,
16. பாரதியும் ஆங்கிலமும்,ம.பொ.சி.,இன்பநிலையம்,சென்னை-1961,ப.44
17. பல்கலை நோக்கில் பாரதி,பூரம் பப்ளீகேஷன்,சென்னை.ப.7
18. பாரதி ஒரு வாழ்நெறி, தி.ச.ராஜீ,பூம்புகார் பிரசுரம்,சென்னை,1983,ப.86
19. இதழாளர் பாரதி,முனைவர் ப.இறையரசன்,நி.செ.பு.நி.,1995,ப.252
20. மேற்படி நூல், ப253
21.தமிழகம் தந்த மகாகவி, உயர்நீதிபதி மு.மு.இஸ்மாயில்,புவனேசு
பதிப்பகம்,1989,ப.228.
22. பாரதியின் குயில் பாட்டு விளக்கம், டாக்டர் மின்னூர் சீனிவாசன்,
சென்னை, 1985, ப.52.
23. பாரதியும் அரசியலும், கோ.கேசவன், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 1991, ப.
24. பாரதியார் கட்டுரைகள், ப.335
25. சோசலிசக் கருத்துளும் பாரதியாரும், கோ.கேசவன்,
ரசனா புக் அவுஸ், சென்னை, 1977, ப. 125
26. பாரதியும் அரசியலும்,கோ.கேசவன், ப.182
27. மேற்படி நூல், ப.
28. பாரதியின் தத்துவ இயல் கோட்படுகள், து.மூர்த்தி, புலமை,
டிசம்பர் 1994, ப. 39.
29. மேற்படி நூல், ப. 41
30. மேற்படி நூல், ப. 39
31. சுயமரியாதை இயக்கம், ந.மங்கள்மருகேசன், ப.320
32.திராவிட இயக்கம் வரலாறு தொகுதி 1, முரசொலி மாறன், ப.151, 152
*******
--------------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் ஒன்பதாம் அத்தியாயம் -பக்கம்:-82 - 99


-------நன்றி:- கீற்று இணையதளம்

2.12.08

ஆர்,எஸ்.எஸ் அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே


ஆர்.எஸ்.எஸ்.தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி




ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்,எஸ்.எஸ் அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

“இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வெண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை. எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.” (1)

“இந்திரன், அக்கினி, வாயு, வருணண் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளை தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்துமதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன” என பாரதி கூறுகிறார்.

1. “வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.

2. புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும்

3. வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்.” (2)

மதமாற்றம் குறித்து அப்போதே பாரதி மிகவும் கவலைப்பட்டார்.

“இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறித்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது...

ஆம் ... ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்கடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்பு பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போது பார்த்துக்கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போது தூங்குகிறார்கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்” (3) என்றார் பாரதி. பொருளாதார வளர்ச்சிக்கு வழி சொல்லாமல் மதக் கண்ணோட்டத்தில் மக்களைப் பெருக்க வேண்டும் என்கிறார்.

மேலும் இவர் இந்து தர்மத்தைப் பற்றிக் கூறும்போது, “ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை அதனால் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல் அசிரத்தையாக இருப்போமேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை” (4) என்கிறார் பாரதியார். 1917 ம் ஆண்டு நவம்பர் 19 ம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தைப் பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார். சோவியத்தில் அக்டோபர் (நவம்பர்) புரட்சி ஏற்பட்ட பிறகுதான் பாரதி இதை எழுதுகிறார் என்பது குறிப்படத்தக்கது.

“வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஹிந்து தர்மம் பரவும்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா, ஸ்வாமி விவேகானந்தரைப் போலப் பத்துப் பேர் இப்போது இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகமெங்கும் நாட்டலாம்... சண்டை காலந்தான் நமக்கு நல்லது (முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. அந்தச் சமயத்தில்தான் பாரதி இதை எழுதியுள்ளார்). இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக்கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்களையும், செட்டியார்களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.” (5)

சண்டை காலந்தான் நமக்கு நல்ல காலம். மதத்தை வெளிநாடுகளில் நிலைநாட்ட இதுவே ஏற்ற தருணம் என்கிறார் பாரதியார். அவரைப் பின்பற்றித்தான் இன்றைய இராமகோபாலன் போன்றோர் “மூன்றாம் உலகப்போர் மூளுகிறது என்று நினைத்துக் கொள்வோம். அந்த வேளையில் ஆசிய நாடுகள் தங்களைக் காத்துக்கொள்ள ஒன்றுபட்டு நிற்க வேண்டி வரும். அப்போது இயல்பாகவே பாரதம் ஆசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்கும். அந்த நிலையில் அகண்ட பாரதமோ, அதற்குச் சமமான நிலவரமோ உதயமாவது சாத்தியம்” என எழுதியுள்ளார் போலும்.

மேலும், “இப்பொழுது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களையெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கக் கோடாலியாய் இருக்கும்” (6) என்கிறார் பாரதியார்.

இந்தியாவிற்குப் பாரததேசம் என்ற பெயர்தான் வேண்டும் என்பதற்கான காரணத்தை பாரதி கூறுகிறார். “பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த் ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி முனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்றுசேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால் இந்நாட்டிற்கு ‘பாரததேசம்’ என்ற பெயர் உண்டாயிற்று.” (7)

இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தப் பெயர் தான் வேண்டும் என்கின்றனர். பாரதி கூறுவதுபோல் இந்தியா முழுவதையும் பரதன் ஆண்டதாக வரலாற்றுச் சான்று ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் 56 தேசம் இருந்ததாகவும், 56 அரசர்கள் ஆண்டதாகவும் தான் பாரதக் கதையிலும் காண முடிகிறது. ஆங்கிலேயர் வருவதற்கு முன் இந்தியா என்ற ஒரே நாடு இருந்ததற்கான சான்று எதுவுமே இல்லை.

இசுலாமியர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது மதமாற்றம் ஏற்பட்டது குறித்துப் பாரதியார் குறிப்பிடுவதாவது: “திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாதிபதியொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பித்த போது இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கி கோமாமிசம் புசிக்கச் செய்தான்” (8) என்கிறார் பாரதியார்.

ஆனால் உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததற்குச் சான்றாதாரம் நமக்குக் கிடைக்கவில்லை. மாறாக, திப்புசுல்தான் பார்ப்பனர்களை ஆதரித்த செய்திகள்தான் நமக்குக் கிடைக்கின்றன. திப்புவின் ஆட்சியின் 45,000 முதல் 50,000 பார்ப்பனர்கள் அரசுப் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையைக் கூட அவன் ஏற்றுக்கொள்ளாமல் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடமே ஒப்படைத்துள்ளான். திப்பு சிருங்கேரி சங்கரமடத்திற்கு 1791இல் எழுதிய கடிதம் மூலம் இதை அறிய முடிகிறது.

aasu There are more than 45 to 50 thousand Brahmins in our service it is wondered if the Government alone is bestowed with judiciary powers of handing their cases and punishing them for offences like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras. (9)

இன்னும் ஒருபடி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்கச் சாஸ்தரா சண்டி ஜபம் நடத்த திப்பு சிருங்கேரி சங்கராச்சாரியைக் கேட்டுக் கொண்டார். ஓராயிரம் பார்ப்பனர்கள் 40 நாட்கள் ஜபம் செய்தார்கள். அந்தச் செலவு முழுவதையும் திப்புவே ஏற்றுக் கொண்டார். (10)

இப்படிப்பட்ட திப்புவா, பாரதி கூறுவது போல, பார்ப்பனரைக் கொடுமைப்படுத்தியிருப்பார்? பாரதிக்கு இஸ்லாமியரின் மீது இருந்த வெறுப்பையே இது காட்டுகிறது.
பறையர்களின் பேரில் பாரதி இரக்கங்காட்டுவதாகப் பலர் எழுதுகிறார்கள். ஏன் பாரதி அவ்வாறு செய்தார் என்றால், அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்குப் போய்விடுகிறார்கள் என்ற எண்ணத்தில்தான்.

“1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மதம் மாறியவர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது, நம்மவர்களின் இம்சை பொறுக்க முடியாமல் வருத்திக் கொண்டிருந்த பின்னர், பறையர் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்கிறது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது.”

“... எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸந்திதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள், ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து, அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூரண விரோதிகளாக மாறி விடுவார்கள். (11)

சாதிக் கொடுமையினால் ஒடுக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மதம் மாறிய காரணத்தால் பாரதியார் கிழச்சாம்பன் கூறுவதைப் போல மதமாற்றம் வேண்டாம் என்பது பற்றி எழுதியுள்ளார். கிழச்சாம்பான் சொல்லுகிறார்: “ஹிந்து மதத்திலே எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிறதென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லி கிறிஸ்துவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொருவனுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைதான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னோருடைய மதமே பெரிது. கிறிஸ்துவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல் வாங்கல், சம்மந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம்.” (12)

பாரதி இந்து மதத்தை நிலைநிறுத்த எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. ஆக முகமதியர்களையும், கிறித்துவர்களையும் எதிரிகள் என்றே பாரதியார் குறிப்பிடுகிறார். இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். போடுகின்ற பசுவதைத் தடுப்புச் சட்டம் என்ற கூச்சலை அன்றே போட்டவர் பாரதியார் ஆவார். 1917 நவம்பர் 8ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் பசுவதைத் தடுப்பைப் பற்றி எழுதியுள்ளதாவது:

“பசுவின் சாணத்துக்கு நிகரான அசுத்த நிவாரண மருந்து உலகத்தில் அக்னியைத்தான் சொல்லலாம். வீட்டையும், யாகசலையையும், கோவிலையும், நாம் பசுவின் சாணத்தால் மெழுகிச் சுத்தப்படுத்துகிறோம். அதனைச் சாம்பல் ஆக்கி அச்சாம்பலை வீபூதி என்று ஜீவன் முக்தியாக வழங்குகிறோம். பசுமாடு பத்தினிக்கும் மாதாவுக்கும் ஸமானம். அதன் சாணமே வீபூதி. அதன் பால் அமிர்தம், வைத்தியரும், யோகிகளும் பசுவின் பாலை அமிர்தம் என்கிறார்கள். வேதமும் அப்படியேதான் சொல்கிறது.

பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும்பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்தாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும். இதைத்தான் ஆப்கானிஸ்தானத்து அமீர் சாஹெப், தமது தேசத்து முஸல்மான்களிடம் சொல்லிவிட்டுப் போனார். ஹிந்துக்களின் கண்ணுக்குப் படாமல் என்ன எழவு வேண்டுமானாலும் செய்து கொண்டு போங்கள்” (13) என்கிறார் பாரதியார்.

இன்றைக்குக் கிறித்துவ மிஷனரி பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதை, பாரதியார், 18.8.1906 இலேயே மிஷின் பாடசாலைகளை விலக்கி வைத்தல் வேண்டும் என்று கூறி இந்தியா ஏட்டில் தலையங்கம் எழுதியுள்ளார். “அதில் படிப்பவர்கள் இந்து மதக் கடவுள்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு தேசபக்தி வராது. கிறிஸ்துவர்களாக மாறிவிடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வெண்டாமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.” (14)

1906 முதலே பாரதியார் கிறித்தவர்களைத் தேசபக்தி அற்றவர்கள்; இந்து மதத்தைக் கெடுக்க வந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 1909இல் இசுலாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் என்றும் ‘இந்தியா’ ஏட்டில் கருத்துப் படம் போட்டு எழுதியுள்ளார். இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், “இந்தியாவிற்குப் பொது மொழிப்பிரச்சனை தீர ஒரேவழி - சமசுகிருதம்தான் இந்தியாவின் பொது மொழியாக வேண்டும்” (15) என்கின்றனர். இதே கருத்தைப் பாரதி, இந்தியாவிற்குப் பொது மொழியாக சமசுகிருதம்தான் வரவேண்டும் என்று 1920இலேயே எழுதியுள்ளார். (16)

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமசுகிருதம் மட்டும்தான் (தேவ பாஷை)தெய்வமொழி என்கின்றனர். பாரதியும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளார். (17) பாரதி, இன்னும் ஒரு படி மேலே போய், இந்தியாவிற்குச் சுதந்திரம் ஏன் தேவையென்றால் இந்து தர்மத்தைக் காப்பாற்றவே என்று, 1921இல் ‘லோக குரு பாரதமாதா’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

“எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக் கிடக்கிறது. ஆனால் இக்கொள்கையை முற்றும் அனுஷ்டித்தல் அன்னிய ராஜ்ஜியத்தின் கீழே ஸாத்யப்படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி. (18)

பாரதி அகன்ற பாரதக் கொள்கை உடையவர். என்றைக்கும் இந்தியா உடையக் கூடாது என்பதில் மிகவும் உறுதியானவர். பாரதியின் காலத்திலேயே 1917இல் தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாகாணம் தேவை என்ற கொள்கையை முன்வைத்தார்கள். அப்போது பாரதி கீழ்க்கண்ட கருத்துகளை முன் வைக்கிறார்:

“என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கையெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது. ஆனாலும் அந்தச் சமயத்தில் ஆந்திரத்தைத் தனிப்பிரிவாக ருஜுபடுத்துவதைக் காட்டிலும், ஆப்கான் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம், வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர், பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய் வயிற்றுக் குழந்தைகள், நமக்குள் மதபேதம், ஜாதிபேதம், குலபேதம், பாஷாபேதம் ஒன்றும் கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடல், ஒன்று.” (19)

பாரதி பாப்பா பாட்டில் கூட,

சேதமில்லாத இந்துஸ்தானம் அதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா

என்றுதானே கூறியுள்ளார்?

இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் போலவே பாரதியும் உடன்கட்டை ஏறி இறந்து போனவர்களை உத்தமிகள் என்று கூறுகிறார். (20) இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளை அன்றைக்கு வகுத்துக் கொடுத்தவர் பாரதியார் என்று ஆணித்தரமாக நாம் சொல்லலாம்.

சுருங்கக் கூறின் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருதல், இசுலாமியரும் கிறித்துவரும் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள், அவர்கள் தேசபக்தி அற்றவர்கள், கிறித்தவர் பள்ளிகளில் இந்து மாணவர்களைச் சேர்க்கக் கூடாது, முகமதியர்களும் கிறித்துவர்களும் இந்துக்களின் விரோதிகள், இந்தியா முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்து மதத்தைப் பரப்ப வேண்டும்; இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; பிளவுண்டு மடியக் கூடாது, வேதத்தையும், தர்மத்தையும் நிலைக்கச் செய்ய வேண்டும், மீண்டும் நால்வருணம் வரவேண்டும், வகுப்புரிமை கூடாது, ஆரியர், திராவிடர் என்பது பொய், பாரதமாதா லோக குரு, பசுவதை கூடாது, சமஸ்கிருதம் உயர்ந்த மொழி; அது இந்தியாவிற்குப் பொதுமொழியாக வரவேண்டும் முதலான ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் எல்லாக் கொள்கைகளையும் வகுத்துக் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அன்றே கெட்டியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் பாரதியாரே என்பதை அவரது எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது.

அடிக்குறிப்பு

1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்,ப.423
2. மேற்படி நூல், ப.121-123
3. மேற்படி நூல், ப.379
4. மேற்படி நூல், ப.381
5. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன், வானதி பதிப்பகம்,ப.281-282
6. பாரதியார் புதையல் பெருந்திரட்டு,(தொ.ஆ) ரா.அ. பத்மநாபன், வானதி பதிப்பகம், சென்னை 1982,ப.478
7. பாரதியார் கட்டுரைகள்,ப.53
8. மேற்படி நூல், ப.176
9. Tippu Sulran,A Fanatic? V.Jalaja Sakthidasan, Ninhyananda jothi nilayam, P25, chennai-28.
10. மேற்படி நூல், ப
11. பாரதியார் கட்டுரைகள்,ப.334,335
12. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன், வானதி பதிப்பகம்,ப.241
13. மேற்படி நூல், ப.278-280
14. பாரதி தரிசனம் தொகுதி 1,நி.செ.பு.நி, ப.258
15. M.S.Golwaker Bunch of Thoughts. Page 150
16. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.274,275
17. பாரதியார் கட்டுரைகள்,ப.46
18. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.500,501
19. பாரதி தமிழ் (தொ,ஆ) பெ.தூரன்,ப.255
20. பாரதியார் புதையல் பெருந்திரட்டு, ப.331,332

--------------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் எட்டாம் அத்தியாயம் - பக்கம் 73-81


-----------------------நன்றி: "கீற்று"

24.11.08

பாரதியார் எல்லா மதங்களையும் சமமாக மதித்தாரா?


மதங்கள் பற்றிப் பாரதியின் பார்வை

பாரதி ஒரு மதவாதி என்பது அனைவரும் அறிந்த செய்தி. பொதுவாக அவர் எல்லா மதங்களையும் சமமாக மதித்தார் என்று பாரதியையை பற்றிய நூல் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். ஆனால், அது உண்மையா? இல்லையா? என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

பாரதியின் பார்வையில் இந்துமதம் ஒன்றுதான் உலகிலேயே உயர்ந்த மதம், மற்றவையெல்லாம் தாழ்வான மதங்களே. முதலில் பௌத்த மதம் குறித்துப் பாரதியின் கருத்துகளைப் பார்ப்போம்:

“யாகங்களே பெரும்பாலும் பசுவதைகளும், குதிரைக்கொலைகளும், ஆட்டுக் கொலைகளும் முக்கியமாகப் பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான கொலைகளைச் செய்தல் மோஷத்துக்கு வழி என்ற போலி வைதிகரைப் பழிசூட்டி அந்தக் கொலைச் சடங்குகளால் மனிதன் நரகத்துக்குத்தான் போவான் என்பதை நிலைநாட்டிய புத்த பகவானும், அவருடைய மதத்தைத் தழுவிய அரசர்களும், இந்தியாவில் யாகத் தொழிலுக்கு மிகவும் இகழ்ச்சி ஏற்படுத்தி விட்டார்கள். அந்தத் தருணத்தில் புத்த மதத்தை வென்று ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துகளைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரங்களாகச் சேர்த்துக் கொண்டா... ... அவர் ஹிந்து தர்மத்துக்குச் செய்த பேருபகாரத்துக்காக ஹிந்துக்களிலே பெரும்பாலானோர் அவரைப் (ஆதிசங்கரனை) பரமசிவனுடைய அவதாரமாகக் கருதிப் போற்றினார்கள். (1)

பௌத்த மதமே துறவு நெறியை உலகில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சில சில மனிதர் துறவிகளாகவும், சில சில இடங்களில் துறவிக் கூட்டத்தாராகவும், ஓரிரு இடங்களில் வல்லமை உடையவர்களாகவும் இருந்தனர். பௌத்த மதம் தான் எங்கு பார்த்தாலும் இந்தியாவை ஒரே சந்நியாசி வெள்ளமாக ஆக்கியது.

உலக வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்தது. உலகமெல்லாம் பொய்மயம் என்றும், துக்கமயம் என்றும் பிதற்றிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி, மனித நாகரிகத்தை நாசஞ் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்தமதத்துக்கு உண்டு, அதை நல்லவேளையாக இந்தியா உதறித்தள்ளி விட்டது. பின்னிட்டு புத்த தருமத்தின் வாய்ப்பட்ட பர்மா முதலிய தேசங்களிலும் புத்தமதம் இங்ஙனமே மடத்தை வரம்பு மீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.”

பாரதியார் பௌத்த மதத்தின் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம். 1912 ல் பகவத்கீதைக்கு முன்னுரை எழுதும்போது இக்கருத்தை அவர் எழுதியுள்ளார். பௌத்த மதத்துறவிகளை கொலைகள் செய்தே அழித்து ஒழித்த ஆதிசங்கரனைப் பாரதியார், சிவபெருமானின் அவதாரமாகவே காண்கிறார். சோவியத்தில் புரட்சி என்றால் கொலைகள், கொள்ளைகள் அதை ஏற்க முடியாது என்பவர், ஆதிசங்கரனின் கொலைகளை மட்டும் ஆதரிக்கக் காரணம் என்ன? பௌத்தத்தால் ஆட்டங்கண்ட நால்வருணத்தையும் பார்ப்பனர்களின் உயர்வையும், மீண்டும் புத்துயிர் பெறச் செய்தவன் ஆதிசங்கரன் என்பதால்தானோ?

அடுத்து இஸ்லாமிய மதத்தைப் பற்றி பாரதியின் கருத்துக்களைப் பார்ப்போம். இசுலாமியர்கள் பல மனைவியரை மணந்து கொள்வதையும், இசுலாமியப் பெண்கள் தலையின் மேல் முக்காடு துணி (கோஷா) போட்டுக் கொள்வதையும் ‘ரெயில்வே ஸ்தானம்’ என்ற கதையில் பாரதி நையாண்டி செய்கிறார். அவை வருமாறு “ஒருநாள் தென்காசி ரயில்வே ஸ்டேஷன் வெளிப்புறத்தில் பலர் உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும், பாரதியார் அங்கு சென்றதாகவும், இரயில் வண்டி 1 மணி நேரம் தாமதமாக வருவதாகக் கூறினார்களாம். பாரதியார் தண்டவாளத்தின் ஒரமாச் சிறிது தூரம் சென்றாராம். அங்கு ஒரு மரத்தடியில் ஒரு முகமதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டாராம். அவன் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வந்து கொண்டிருந்ததாம். தம்பி ஏன் அழுகிறார்? என்று பாரதியார் உருது மொழியில் அவனிடம் கேட்டதாகவும், அதற்கு அந்த முகமதிய வாலிபன் சொல்லியதாகப் பாரதி எழுதுகிறார்: எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்... என் தந்தை லாட்டரி சீட்டு வாங்கினார். அதில் ஒரு கோடி ரூபாய் விழுந்தது. அதை வைத்து வியாபாரம் செய்து ஏழு கோடி பணம் சேர்த்தார்.

என் தந்தைக்கு நான் ஒரே மகன். எனக்கு 15 வயது ஆகும்போது என் தந்தை இறந்து விட்டார். அந்தச் சொத்து முழுவதும் எனக்கு வந்தது. என் வீட்டை மேற்பார்வை செய்ய என் சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தை இறக்கும் தருவாய்யில் என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார் முதலாவது வேலையாக, தம்முடைய மூன்று குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். என் பிதா இறந்த இரண்டு வருஷங்களுக்குள்ளே மேற்படி விவாகம் நடைபெற்றது.

என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண் பிரஜைதான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்து வெளிக்குடும்பங்களுக்கு போய்விடக் கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. என் தாயாருக்கு எனக்கு ஒரே பெண்ணைத்தான் மணம் புரிவிக்க வேண்டும் என்று எண்ணம். அதனால் சிறிய தகப்பனார் என்னை வேறு ஊருக்கு அழைத்துப் போய் என் தாயாருக்குத் தெரியாமல் அவருடைய மூன்று பெண்களையும் எனக்கு மணமுடித்து வைத்து விட்டார்.

சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையால் ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலேயே உயிர் துறந்து விட்டாள். சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது...

இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும்பாடு சொல்லுந்தரமன்று. அதோ பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தின் முகம்மதிய ஸ்தீரிகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிறதன்றோ? நடுவேயிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மன ஒற்றுமை இல்லை என்பது பிரத்யஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு. அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவளுக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷாபீவி. வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறார். குலாப்பிடம் வார்த்தைப் பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை” (2)

பாரதியார் சுதேசமித்திரனில் மேற்கண்ட கற்பனைச் சித்திரத்தை 22.5.1920 இல் எழுதினார். இதை ஓர் உண்மைச் சம்பவம் போலவே பாரதி எழுதியிருக்கவே ஓர் இசுலாமியர் அதைப் படித்து விட்டு, பாரதியிடம் வந்து , ‘ரெயில்வே ஸ்தானம்’ என்றொரு கதை எழுதியிருந்தீர்களே, அது மெய்யாக நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதைதானா?” என்றார். “வெறும் கற்பனை” என்று நான் சொன்னேன். “என்ன கருத்துடன் எழுதினீர்” என்று கேட்டார் வந்தவர். இந்த ‘இரயிவே ஸ்தானம்’ கதையிலும் ஒரு தர்மக் கொள்கை இருக்கத்தான் செய்கிறது. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால் அதனின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையும் என்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்து கொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மைகளாகும் என்றேன்.

அப்போது அந்த முஸ்லீம் நண்பர் “அந்தக் கதையில் பிழை இருக்கிறது” என்றார். “என்ன பிழை?” என்று கேட்டேன். “அக்கதையில் ஒரு முகமதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்வதாக எழுதியிருந்தீர்கள். அப்படி சகோதரமான மூன்று பெண்(பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடன் இருக்கும்போதே அவருடன் பிறந்த மற்ற ஸ்தீரியை ஒரு முஸ்லீம் மணம் புரிந்து கொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை” என்று அந்த முகமதிய நண்பர் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் நான், “சரிதான் எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாதலால் அது போல் முஹம்மதியர்களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதி விட்டேன். எனவே அந்தக் கதாநாயகனாகிய முகம்மதியப் பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தான் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தாரென்பதை மாற்றித் தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தாரென்று திருத்தி வாசிக்கும்படி ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் எழுதி விடுகிறேன் என்றேன்” என்று பாரதி எழுதியுள்ளார்.
தன்னிடம் வந்தவரிடம் பாரதி, “உங்களுக்குள்ளே ஸ்தீரிகளை அந்தப்புரத்தில் மறைத்து வைப்பதாகிய கோஷா வழக்கம் எக்காலத்தில் ஏற்பட்டது?” என்று கேட்டார்.

அந்த முகம்மதிய நண்பர் “முகம்மது (ஸல்லல்லாஹிஅலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்திற்கு நெடுங்காலம் முன்னே இந்த வழக்கம் அரேபியாவில் இருந்து இடையே மாறிப்போய் விட்டது. பிறகு முகம்மது நபி அதை மீளவும் விதியாக்கினார்” என்றார்.

“அதிலே திருத்தங்கள் செய்யக்கூடாதா?” என்று பாரதி கேட்க, அந்த முஸ்லீம் நண்பர், “கூடாது. ஏனென்றால் முகமதுதான் கடைசி நபி. அவருடைய உத்தரவுகள் கடைசியான உத்திரவுகள். அவற்றை மாற்றுவதற்கு இடமில்லை” என்றார்.

பாரதியார் “தென் ஜில்லாக்களிலே தமிழ் பேசும் முஸ்லீம் (ராவுத்தர்)களுக்குளே கோஷா வழக்கம் காணப்படவில்லையே!” என்று கேட்டார்.... இப்படி பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்றது. பாரதி கடைசியாகத் துருக்கி தேசத்தில் ஸ்தீர்களுக்குள்ளே பிரம்மாண்டமான விடுதலைக் கிளர்ச்சி நடந்து வருவதைப் பற்றியும், ‘கோஷா’ வழக்கத்தை ஒழித்து விட்டு கல்வி கேள்விகளில் தேர்ச்சியடைவதையும் கூறினார். வந்த முஸ்லீம் எனக்குத் தெரியாது என்று கூறிச் சென்றுவிட்டார், (3)

பாரதியார் அல்லாவைப் பற்றிப் பாடல் பாடியுள்ளாரே, அவரை எப்படி நீங்கள் குறை சொல்ல முடியும் எனச் சிலர் கேட்கலாம். 20.6.1920 இல் பாரதி கடயத்தில் இருந்தபோது சில இசுலாமியர்கள் பாரதியை அழைத்து பொட்டல்புதூரில் இசுலாம் மார்க்கம் குறித்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தக் கூறினார்கள். அப்போதுதான் பாரதியார் அல்லா, அல்லா என்ற பாடலைப் பாடினார். நபிகள் நாயகத்தின் வரலாற்றை மிக விரிவாகவும் சிறப்பாகவும் பேசி முடிக்கும் தருவாயில், நபிகள் ஏன் ஏசுநாதரை ஒரு மகானாக, கடவுளின் அவதாரமாக ஏற்றுக் கொள்ளவில்லை? என்ற கேள்வியைக் கேட்டு விட்டுத்தான் வந்தார்.

இசுலாமியர்கள் தேசப்பற்று அற்றவர்கள் என்பது பாரதியின் கருத்து. இதை ‘இந்தியா’ ஏட்டில் ஒரு கருத்துப்படம் வெளியிட்டு பாரதி விளக்கியுள்ளார். மே 1, 1909 இல் இப்படம் வெளியிடப்பட்டது. (4)

கிறித்தவ மதத்தையும் பாரதி கடுமையாக விமர்சனம் செய்கிறார். இந்துமதத்தைப் புகழும் பாதிரிகளை மிக நல்லவர்கள் என்கிறார். இந்து மதத்தைக் குறை கூறும் பாதிரிகளை மூடப்பாதிரிகள் என்கிறார்.

“சென்னை கிருத்து கலாசாலையில் மில்லர் என்று ஒரு பாதிரி இருந்தார். அவர் நல்ல புத்திசாலி என்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்ற எல்லா மதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்து கொண்டார்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்தீர்களை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள். நம்முடைய ஜாதிப்பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை எல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.” (5)

Christ இன்னும் ஒரு படி மேலே போய் பாரதியார், “கிறிஸ்தவ விவிலிய நூலில் வரும் தேவகுமாரன் என்பது வேறு யாருமல்ல; நம்முடைய சுப்ரமணியன் தான்” என்கிறார். ‘வேணு முதலி சரித்திரம்’ என்ற தலைப்பில் இதுகுறித்து அவர் எழுதுகிறார். “வேணு முதலி நேற்று மாலை இருபது, முப்பது கிறிஸ்துவப் புத்தகங்கள், துண்டுப் பத்திரிகைகள், குட்டிப் புஸ்தகங்கள் இவற்றையெல்லாம் ஒரு பெரிய மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து என் மேஜையின் மேலே எள்ளு போட இடமில்லாதபடி விரித்தான்... இதை இவன் ஏன் வாங்கினானென்று எனக்குத் தெரியவில்லை...

‘இவற்றை ஏன் வாங்கினாய்’ என்றேன்.

‘அத்தனையும் சேர்த்து ஒன்றரை ரூபாய்க்கு மேலே போகவில்லை’ என்றான்...

‘பாவமன்னிப்பு தொடர்பான புத்தகங்கள் இனாமாக வாங்கினேன் அறியவும்’ என்றான். நான் புன்னைகை செய்தேன். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறளை எடுத்துச் சொன்னேன்.

வேணுமுதலி சொல்கிறான் : ‘காளிதாஸரே, நான் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே வாங்கினேன்... இந்த யுத்தம் (முதல் உலகப்போர்) முடிந்தவுடன் நான் ஐரோப்பாவுக்குப் போவேன். அங்கே ஹிந்து தர்மத்தை நிலை நிறுத்தப் போகிறேன். ஆதனால் எனக்கு ஐரோப்பாவில் ஏற்கனவே வழங்கிவரும் மதத்தைப் பற்றி ஸம்பூர்ண ஞானம் இருக்க வேண்டுமென்று கருதி இவற்றை வாங்கினேன்’ என்றான். (6)

வேணுமுதலி, மார்க் எழுதின சுவிசேஷத்தில் பதிமூன்றாம் அதிகாரத்தைத் திருப்பி பின்வருமாறு வாசிக்கலானான். “யேசு சொல்லுகிறார்... அந்த நாட்களில் அந்த உபத்திரவத்திற்குப் பிறகு சூரியன் அந்தகாரப்படும். சந்திரன் ஒளி கொடாது. வானத்தின் நஷத்திரங்கள் விழும். வானங்களிலுள்ள சக்திகள் அசைக்கப்படும். அப்போது மனுஷ குமாரன் மிகுந்த வல்லமையோடும் மஹிமையோடும் மேகங்களின் மேல் வருவதை உலகத்தார் காண்பார்கள்’ என்று வாசித்து முடித்தான். பிறகு என்னை நோக்கி ‘காளிதாசரே இந்தக் கதையின் குறிப்பென்ன? மனுஷ குமாரன் யார்?’ என்று கேட்டான். ‘எனக்கொன்னும் சரியாக விளங்கவில்லை’ என்றேன்.

வேணுமுதலி சொல்கிறான்: “ஐரோப்பாவிலுள்ளவர்கள் வெளிப்படையாக அர்த்தம் சொல்லுகிறார்கள். யுக முடிவில் யேசுநாதர் வரப்போவதாகவும், அப்போது மேற்கண்ட உற்பாதங்களெல்லாம் நடக்குமென்றும் நினைக்கிறார்கள். நான் இதற்கெல்லாம் அத்யாத்மப் பொருள் சொல்லுகிறேன். கிறிஸ்து மதம் ஆசியாக் கண்டத்தில் உண்டானது. மதங்களே ஆசியாவில்தான் பிறந்தன. ஐரோப்பாவிற்கு ஞான சாஸ்திரம் ஏற்படுத்தத் தெரியாது. ஆசியாவிலிருந்து கொண்டு போன ஞான சாஸ்திரங்களை அவர்கள் நேரே அர்த்தந் தெரிந்து கொள்ளவில்லை. மேற்படி மார்க் எழுதின வசனங்களில் சொல்லியபடி மனுஷனுக்குள்ளேயே ஆத்மஞானத்தால் பிறப்போனாகிய குமாரதேவன் அதாவது ஸுப்ரமண்ய மூர்த்தியாகிய அக்னிதேவன் மனுஷ்யனுக்குள்ளேயே ஏழு லோகங்களும் இருக்கின்றன.

தேவர், அஸூரர், இராவுசர், சித்தர், நாகர், சாத்தியர், கின்னர், கிம்புருஷர், பூதப்ரேத, பிசாசூர், மனுஷ்ய மிருகபஷி முதலிய சகலமும் நம்முடைய அந்தக் காரணத்திலேயே உள்ளவையாகும். மேற்சொல்லிய யுத்தர்கள் பூமியதிர்ச்சிகள் முதலியன எல்லாம் அந்தக் காரணத்தினால் ஞான குருவாகிய ஸுப்ரமண்ய மூர்த்தி தோன்றி ஜீவன் முக்தியாகிய அமிர்த நிலையைக் கூட்டுவதற்கு முன்பு தனக்குள்ளே தோன்றும் பல உத்பாதங்களாகக் கருதப்படும். இதற்கெல்லாம் ஐரோப்பிய கிறிஸ்தவர் உட்பொருள் கொள்ளாமல் புறப்பொருள் கொள்வது அவர்களுடைய ஞான சாஸ்திர பரிச்சயக் குறைவைக் காட்டுகிறது.”

இதைக்கேட்டவுடன் பாரதி, “தனக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. தலைவலி எல்லாம் பறந்தோடி விட்டது” (7) என்கிறார். பாரதியின் ஆர்.எஸ்.எஸ். மூளை பைபிளை எப்படியெல்லாம் ஆய்கிறது பார்த்தீர்களா? மேற்கண்ட சான்றுகள் மூலம் பாரதிக்குப் புத்தமதம், கிருத்துவ மதம், இசுலாமிய மதம் முதலியவற்றின் வெறுப்பும், இந்து மதத்தின் மேல் அதிக விருப்பமும் இருந்தது என்பதை அறியலாம்.

அடிக்குறிப்பு

1. மகாகவி பாரதியின் பகவத் கீதை (உரைவிளக்கம்) நர்மதா பதிப்பகம், சென்னை 1995, ப.38,39
2. பாரதியார் கட்டுரைகள், ப.295-307
3. மேற்படி நூல், ப.74
4. பாரதியின் கருத்துப்படங்கள் (தொ.ஆ) இரா.வெங்கடாசலபதி, நர்மதா வெளியீடு, சென்னை, 1994, ப.119
5. பாரதியார் கட்டுரைகள், ப.82
6. மேற்படி நூல், ப.411
7. பாரதி புதையல் பெருந்திரட்டு (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், வானதி பதிப்பகம், சென்னை 1982, ப.107, 100

---------------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் ஏழாம் அத்தியாயம் பக்கம் 65-72

------------------நன்றி: "கீற்று" இணையதளம்

24.10.08

பொதுவுடைமை பற்றி பாரதி -லெனின் வழி சரியான வழி இல்லையா?







பொதுவுடைமைக் கொள்கையில் பாரதிக்கு எத்தன்மையான புரிதல் இருந்தது என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

1905இல் ருசியாவில் ஒரு புரட்சி தோன்றி தோல்வியில் முடிவுற்றது. ஆனால் அந்தப் புரட்சி இயக்கம் மேலும் மேலும் வளர்ந்து வந்தது. அவ்வப்போது அங்கு நடந்த நிகழ்ச்சிகளை ராய்ட்டர் என்ற செய்தி நிறுவனம் தந்தி மூலம் பத்திரிக்கை அலுவலகங்களுக்குத் தெரிவித்து வந்தது. அக்காலக்கட்டத்தில் இந்தியா ஏட்டில் பொறுப்பாசிரியராக இருந்த பாரதி 30.6.1906 இல் ருசியாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சி என்ற தலைப்பில் எழுதியதாவது;

“ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சிச் சின்னங்கள் எற்பட்டு வருகின்றன. ஜார் சக்கரவர்த்தியின் அநீதிச் சிங்காதனம் சிதைந்து கொடுங்கோன்மை துண்டுத் துண்டாகக் கழிவுபெற்று வரும் ருஷ்யாவில் அமைதி நிலைக்க இடமில்லை. சில இடங்களில் நிலச் சேனையுடன் சேனைக்காரர்கள், ராணுவமும் கலகம் தொடங்கித் தொழிலாளிகள் கூட்டமும் சேர்ந்து விடுகின்றனர்.” (1). 1906 சூலை 7ஆம் தேதி, ரஷ்யாவில் ஏற்படும் புரட்சி குறித்து அச்சமடைவதாகப் பாரதி எழுதியுள்ளார்:

“சென்ற வாரம் ருஷ்யாவைப் பற்றி எழுதிய குறிப்பிலே அத்தேசமானது ஒரு பெரிய ராஜாங்கப் புரட்சியேற்படும் (நிலையிலுள்ளது) என்று தெரிவித்தோம். அதற்கப்பால் வந்து கொண்டிருக்கும் தந்திகள் நமது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தி விட்டன. கைகலப்புகள் தொடங்கிவிட்டனவென்றால் ராஜாங்கம் எத்தனைத் தூரம் அமைதி கெட்ட நிலையிலிருக்க வேண்டுமென்பதை எளிதாய் ஊகித்து அறிந்து கொள்ளலாம்.” (2)

புரட்சி நடக்கிறது என்றால் நமக்கு உரிமை உணர்ச்சியும், எழுச்சியும் உண்டாகும். ஆனால் பாரதியோ, அச்சமுண்டாகிறது என்பதோடு புரட்சி நடப்பதால் ராஜாங்கம் அமைதி கெட்டுவிடும் என்கிறார். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது யாதெனில் பாரதி போல்ஷ்விக்குகளின் புரட்சியை 1906 முதலே ஆதரிக்கவில்லை என்பதேயாகும். ஆனால் அதே நேரத்தில் ஜாரின் கொடுங்கோன்மையை அவர் எதிர்க்கிறார் என்பதை அவருடைய கட்டுரைகளில் மூலம் அறிய முடிகிறது.

“ஒரு விஷயம் மட்டிலும் இங்குப் பலகாலமாக அறிவுறுத்துதற்குரியது. ருஷ்ய ஜனங்களாகிய ஆடுகள் மேது அரசேற்றும் கடுவாய் அரசனும் அவனது ஓநாய் மந்திரியும் நெடுங்காலமாய்த் தரித்திருக்க மாட்டார்கள். இவர்களின் இறுதிக் காலம் வெகு சமீபமாக நெருங்கிவிட்டதென்பதற்குத் தெளிவான பல சின்னங்கள் புலப்படுகின்றன. நீதி ஸ்வரூபியாகிய சர்வேசனது உலகத்திலே அநீதியும், ருஷ்ய ஓநாய்த் தன்மைகளும் நிலைக்கமாட்டா” (3) என்கிறார்.

1906 இல் போல்ஷ்விக்குகள் நடத்திய புரட்சியைப் பாரதி ராஜாங்கத்திற்கு எதிரான கலகங்கள் என்றே எழுதுகிறார். “இப்பொழுது மறுபடியும் பெரும் கலகம் தொடங்கி விட்டது. ருஷ்ய சக்ரவர்த்தியின் சிங்காதனம் இதுவரை எந்தக் காலக்கட்டத்திலும் ஆடாதவாறு அத்தனைப் பலமாக இருக்க இப்பொது ஆடத்தொடங்கி விட்டது. பிரதம மந்திரியின் வீட்டை, வீட்டின் விருந்தின் போது வெடிகுண்டு எறியப்பட்டதும், சைன்யத்தலைவர்கள் கொலையுண்டதும், ராஜ விரோதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் பிரசுரிப்பதும், எங்கே பார்த்தாலும் தொழில்கள் நிறுத்தப்படுவதும், துருப்புகளிலே ராஜாங்கத்தாருக்கு விரோதமாகக் கலகங்கள் எழுப்புவதும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்வதும் ஆகிய கொடூர விஷயங்களைப் பற்றித் தந்திகள் வந்த வண்ணமாகவேயிருக்கின்றன.” (4)

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், ஜாரின் கொடுங்கொன்மையை எதிர்க்கும் பாரதி, ஜாரின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களைக் கலகக்காரர்கள் என்றும் அவர்கள் கொடூரமான செயல்கள் செய்வதாகவும் காண்கிறார். ஜார் அரசனின் கொடுங்கோன்மையை 1906 இலேயே எதிர்த்த பாரதி, 1917இல் பிப்ரவரியில் நடைபெற்ற முதலாளித்துவப் புரட்சியில் கெரென்ஸ்கி தலைமையில் டூமாவுக்குள் (நாடாளுமன்றத்திற்குள்) சென்றபோது ஜாரை சிறையில் அடைத்தனர். அப்பொதுதான் பாரதி ஜாரின் வீழ்ச்சியைக் குறித்துப் புதிய ருஷ்யா-ஜார் சக்ரவர்த்தியின் விழ்ச்சி என்ற தலைப்பில் பாடல் ஒன்றை எழுதியுளளார் .அப்பாடல் வருமாறு:

மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்தது பார்யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
...
இரணியன்போல் அரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும் பேர்இசைந்த பாவி.
...
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்து விட்டான்
ஜாரரசன்.. (5)


1917 பிப்ரவரியில் நடைபெற்ற இப்புரட்சியில் பாட்டாளிகளும், முதலாளிகளும் செர்ந்தே ஜாரை எதிர்த்துப் புரட்சி நடத்தினர். இதில் முதலாளிகள் தற்காலிகமாக வென்று டூமாவுக்குள் சென்றனர். இப்புரட்சியை ஒரு தெய்விக நிகழ்ச்சியாக்கி “மாகாளி பாரசக்தி கடைக்கண் காட்டியதால் தான் புரட்சி நடந்தது” என்கிறார் பாரதி.

நம் நாட்டுப் பொதுவுடைமைவாதிகள் பலரும் பாரதி அக்டோபர் புரட்சியை வாழ்த்திப் பாடியதாகவே கூறுகின்றார்கள். அதற்கான சான்றாதாரம் இப்பாடலில் எதுவுமில்லை. இப்பாடல் முழுவதுவும், ஜாரின் வீழ்ச்சியைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. ஜார் வீழ்ச்சியுற்றது அக்டோபர் புரட்சியில் அல்ல. அதற்கு முன்னரே நடைபெற்ற பிப்ரவரி புரட்சியிலாகும். அக்டோபர் புரட்சியை ஆதரித்துப் பாடியிருந்தால், லெனின் கொள்கைகளை, அப்போதே கண்டிக்கவேண்டிய அவசியம் இல்லையே.

லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க அரசு நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பிடுங்கி எழை விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்தபோது பாரதி அதை மிக வன்மையாகக் கண்டிக்கிறார்.


“இந்தக் கொள்கையை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிறசெல்வங்களும், தேசத்தில் பிறந்த அனைத்து ஜனங்களுக்கும் பொதுவுடைமை ஆகிவிட்டது. இந்த முறைமை போர் பலத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவதில் எனக்கு சம்மதமில்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடத்தக்கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க சமத்துவம் சகோதரத்துவம் என்ற தெய்வீகத் தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் குறித்து வெட்டு, பீரங்கி, துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கை என்று நான் நினைக்கிறேன்” (6)

மேலும் லெனின் போன்றவர்களை, பாரதி, மறைமுகமாக ஒன்றும் தெரியாத மூடர்கள் என்று கூறுகிறார்.

“கொலையாலும் கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத் தாம் உணராத பரமமூடர்கள் என்று நான் கருதுகிறேன்” என்று கூறிவிட்டு, இதற்கடுத்த வரியிலே பாரதி கூறுகிறார்:

“இதற்கு நாம் என்னச் செய்வோம்! கொலையாளிகளை அழிக்க கொலைகளைத்தானே கைகொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலே அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்கிறார். இது முற்றிலும் தவறானக் கொள்கை.

கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமே ஒழியக் குறைக்காது. பாவத்தைப் புண்ணியத்தாலேத்தான் வெல்ல வேணடும்... கொலையையும், கொள்ளையையும் அன்பினாலும், ஈகையினாலும் தான் மாற்ற முடியும்.இதுதான் கடைசி வரை கைகூடிவரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து”.(7)

மேலே கண்ட பாரதியார் கருத்து மூலம் நாம் அறிந்து கொள்ளவது என்னவென்றால், பாரதி ஒரு மதவாதி; எனவே அவர் புரட்சி வழியை ஆதரிப்பதற்கு பதிலாக ‘தர்மகர்த்தா முறை’ சோசலித்தையே ஆதரிக்கிறார் என்று புலப்படும்.

மேலும் அவர் கூறுகிறார்:

“லெனின் வழி சரியான வழி இல்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோம் ஆதலால் இந்தியாவின் ஸாத்தியா ஸாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும், முதலாளிகளும் ஜரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் எழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள். எனவே கொள்கைகளுடன் கொலைகளும், சண்டைகளும், பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசியைத் தீர்ப்பதற்குரிய வழியைத்தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும்.”(8)

பாரதி மேலே கூறியபடி அதற்கான வழி வகைகளையும் கூறியுள்ளார். இக்கட்டுரையை எழுதும்போது பாரதி கடயத்தில் இருந்தார். எனவே கடயத்தையே உதாரணமாகக் கொண்டு பின்வரும் கருத்தை முன் வைக்கிறார்.

"கடயத்தில் மொத்தம் 30 பெரிய மிராசுதாரர்களும் பல சில்லறை நிலஸ்வான்களும் உள்ளனர். அவர்களாகவே வந்து ஏழைகளிடம் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தம் என்னவென்றால், அதாவது எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி ‘தொழில் நிர்வாக சங்கம்’ என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த்தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில்(மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானா வகைப்பட்ட கைத்தொழில்கள். அவை இந்த கிராமத்திற்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத்தொழில்களுக்கு இன்னின்ன தொழில்களுக்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்றும் மேற்பபடி தொழில் நிர்வாக சங்கத்தினர் தீர்மானம் செய்வார்கள்.

அந்தப்படி கிராமத்திலுள்ள அத்தனை பேரும் தொழில் செய்ய வெண்டும். அந்தத் தொழில்களுக்கு தக்கபபடியாக ஆண்,பெண், குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரிலும் ஒருவர் தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்தப்படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சன்னதியில் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு ப்ரதிக்ஞை செய்து கொடுக்கிறோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஆன விஷயத்தை எங்களில் முக்கியஸ்தர் கையெழுத்திட்டு செப்பு பட்டயம் எழுதி இந்தக் கோவிலில் அடித்து வைக்கிறோம். இங்ஙனம் ப்ரதிக்ஞை செய்து, இதில் கண்ட கொள்கைகளின் படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் கிராமத்தில் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து பின்னர் அதனை உலகத்தெல்லாருங் கைக்கொண்டு நன்மையடைவார்கள்.”(9)

பாரதியின் மேலே கண்ட இந்தப் பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்றினால் அசல் நால்வருணம்தான் நீடிக்கும். நிலம் நில உடைமையாளர்களுக்குச் சொந்தமாகவே இருக்கும். சோற்றுக்காக ஏழைகள் தலைமுறை தலைமுறையாக அவர்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அவரவர் தகுதிக்கேற்ற வேலை என்று பாரதி சொல்வது குலத்தொழில் முறைப்படித் தொழில் நடைபெற வேண்டும் என்பதேயாகும். கூட்டு முயற்சியினால் வரும் பலனை எல்லோருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று பாரதி சொல்லவில்லை. ஆகவே இக்கூட்டு முயற்சியினால் விளையும் பலன் முழுக்கவும் நிலவுடைமையாளருக்கும், சமுதயத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் போய்ச் சேரும் என்பது வெளிப்படை.

நம் நாட்டில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பாரதி காணும் ஒரே தீர்வு “கலியுலகம் ஒழிந்து மீண்டும் கிருதயுகம் வரவேண்டும். அப்போது மீண்டும் நால்வருணம் ஏற்படும். அப்போது மாதம் மும்மாரி பொழியும். அப்போதுதான் பஞ்சமும் இராது என்பதுதான் அவரின் இறுதிகாலக் கொள்கையாகும்.” (10)

பாரதி, லெனினின் கொள்கையைக் கண்டித்து பல மாற்று வழிகள் கூறிக் கொண்டிருந்த காலத்தில்தான், பாரதியுடன் நெருங்கிப் பழகிய கனக.சுப்புரத்தினம் (பின்னாளில் பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டார்.) லெனின் புரட்சி ஏற்படுத்தியவுடன், லெனினைப் புகழ்ந்து பாடல் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாடல் வரிகளாவன:

யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்
உறவாகி நின்ற லெனினே!
அகமாகி நின்ற லெனின் அறிவாகி நின்ற லெனின்
அரசாள வந்த லெனினே!
சுகமாகி வந்த லெனின் துணையாகி வந்த லெனின்
சுதந்திர மான லெனினே!
இகமாகி நின்ற லெனின் எமையாள வந்த லெனின்
இறையாகி வந்த லெனினே!
நறவூறுகின்ற மொழி பொருளர்க்கும் என்றவ்ழி
நடை கொண்டு வந்த லெனினே!
உறவாகி உலகெங்கும் உழைப்பாளர் ஆட்சிநெறி
உரமாக்கி வைத்த லெனினே! (11)


இப்பாடலை, பாரதிதாசன் பாரதியோடு புதுவையிலிருந்த போதே, 1918 பிப்ரவரி மாதத்தில் ‘ஜனவிநோதினி’ எனும் ஏட்டில் எழுதியுள்ளார் எனப் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து எழுதியுள்ள கோ.கிருஷ்ணமுர்த்தி குறிப்பிட்டுள்ளார். (12) லெனின் அக்டோபர் புரட்சியை ஏற்படுத்தியதற்காக அவர் உயிருடன் இருக்கும் போதே அவரைப் பாரட்டிக் கவிதை எழுதிய ஒரே தமிழ்க் கவிஞன் கனக.சுப்புரத்தினம் ஒருவர்தான் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும்.

மேலும் 1924 இல் லெனின் மறைவுற்றபோது லெனினுக்கு இரங்கற்பா எழுதிய தமிழ் கவிஞர் பாரதிதாசன் ஒருவரே ஆவார்!

ஆனால் நம்நாட்டு பொதுவுடைமைவாதிகளோ, லெனின் கருத்துக்கு முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட பாரதியாரைப் புகழ்ந்து பேசுவதையும், எழுதுவதையுமே தொழிலாகக் கொண்டுள்ளார். ஆனால் பாரதிதாசனைப் பற்றி இவர்கள் கண்டு கொள்வதே இல்லை. அதற்குக் காரணம் என்ன என்பதை நான் கூறுவதைவிட நம் புரட்சிக் கவிஞர் கூறியுள்ளதே சிறப்பாக உள்ளது. அவை பின் வருமாறு:

நான் போதுவுடைமைக்குப் பகைவனா?

இது அறிவெனத் தெறிந்த நாள் முதல் புதுவையில்
சுதந்திரம் சமத்துவம் சகோத ரத்துவம்
மூன்றும் என்னுயிர் உண்ர்வில் ஊறியவை
என்பாட் டாலே வளர்ந்த இயக்கம்
தன்பாட் டுக்குத் தப்புத் தாளம்
பின்பாட்டுப் பாடும் பிழைப்புக் கெல்லாம்
என்னை விற்காத தால்ஏதும் அறியாத
கொள்ளைப் பயல்களைக் கொண்டேசுகின்றனர்
இவர்கள் யாரென எனக்குத் தெரியும்
புரட்சியின் பேரால் புரட்டு செய்பவர்கள்
தொழிற்சங் கத்தால் தோழர்கள் உழைப்பை
வழிப்பறி செய்யும் வலஇட சாரிகள்
தாய்மொழிப் பற்றும் தன்இனப் பற்றும்
தாய்நாட்டுப் பற்றும் சற்றும் இல்லதவர்கள்
முடிந்த வரைக்கும் முந்நூல் கொள்கையில்
அடிதொழு திருக்கும் அடிமைகள் மார்ச்சு லெனின்
நூல்களை எல்லாம் நுனிப்புல் மேய்ந்து
கால்படித் தமிழால் மேற்படி யாரின்
விளக்கெண்ணெய் மொழியால் விளங்காது செய்பவர்
உருசியன் ஒதுக்கும் ஒரு கோடிப்பணத்தையும்
வரிசையாய்ப் பகுத்து வாழ்வு நடத்திடும்
பொறுக்கி களாகப் போன தினாலே
குறீக்கொள் உயர்ந்த பொதுமைக் கொள்கை
வெறிச்சென்று பொனது; வெற்றியில் தாழ்ந்தது
பாட்டா ளிகளின் கூட்டம் குறைந்தது
மூட்டிய போர்க்குண்ம் முடம்கொண் டழிந்து
கண்டிதனைக் கழறுவ தாலே அறிவிலா
முண்டங்கள் என்ன முழுக்க முழுக்க
பொதுவுடைமைக் கெதிரி என்று முழங்குவர்.(13)

மேற்கண்ட சான்றுகாளால் பாரதியார் தொடக்கம் முதல் இறுதிவரை பொதுவுடைமைக் கொள்கையினை எதிர்த்து வந்தார் என்பதனை அறியலாம். இப்படிப்பட்ட பாரதியைத்தான் பொதுவுடைமைவாதிகள் தூக்கிப் பிடிக்கின்றனார். தீக்கதிர் பாரதி நூற்றாண்டுச் சிறப்பு மலரை வெளியிட்டது. ஆனால் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை கண்டுகொள்ளவேயில்லை. இப்படி இருந்தால் பொதுவுடைமை இயக்கம் எப்படி வளரும்.

அடிக்குறிப்புகள்

1. பாரதி தரிசனம் தொகுதி(1)நி.செ.பு.நி.ப.300
2. பாரதி தரிசனம் தொகுதி(1),ப.301
3. மேற்படி நூல், ப.302
4. மேற்படி நூல், ப.303
5. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.நி.ப.123
6. பாரதியார் கட்டுரைகள், ப.451
7. மேற்படி நூல், ப.453
8. மேற்படி நூல், ப.456
9. மேற்படி நூல், ப.454-458
10. பெ.தூரன்,பாரதி தமிழ், ப.244
11. பாரதிதாசன் கவிதைகள்,பெருமக்கள்,மணிவாசகர் பதிப்பகம்,ப.19
12. கோ.கிருட்டிணமூர்த்தி, பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு,ப.65
13. புரட்சி ஏடு 1.1.1963.

----------------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் ஆறாம் அத்தியாயம் - பக்கம் 57 - 64

---------------நன்றி: "கீற்று"

18.10.08

பாரதி விரும்பிய பெண் விடுதலை எத்தகையது?



1904 ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் இதழில் பாரதி மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியபோது சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த வைத்தியநாத அய்யர் என்பவர் ‘சக்ரவர்த்தினி’ என்னும் பெயரில் பெண்களுக்கான மாத இதழை நடத்தினார். இந்த இதழில் பாரதியார் 1904 முதல் 1906 வரை ஆசிரியராக இருந்து வந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில்தான் பாரதியார் பெண் விடுதலைக்காக மிகத் தீவிரமாக எழுதியுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் காணலாம்.

“பரிபூரண ஸமத்துவம் இல்லாத இடத்தில், நாம் ஆண் மக்களுடன் வாழ மாட்டோம் என்று சொல்லுவதனால் நமக்கு நம்முடைய புருஷராலும், புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தகையோயாகினும், எத்தன்மை உடையனவாயினும் நாம் அஞ்சக்கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்திற்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள்! நாம் வெற்றி பெறுவோம்” (1) எனப் பாரதி பெண் விடுதலைக்காகப் பாடுபட, பெண்களை அழைக்கிறார்.

மேலும் தீவிரமாகப் பாரதி கூறுகிறார். “நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால், இன்று ராத்திரி சமையல் செய்ய மாட்டேன்; எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன்; நீ அடித்து வெளியே தள்ளினால் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிடவும் வேண்டும்.” (2)

பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஆண்கள் தான் ஒழுங்காக இருக்க வேண்டும் என்கிறார் பாரதி.

“அடப்பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்தீரிகள் பதிவிரதைகளாக எப்படி இருக்க முடியும்? பதிவிரதயத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்தீரிகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகிறது. சீச்சி! மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு அநியாயமும், கொடுமையும் செய்து பயனில்லை.” (3)

தொடக்க காலத்தில் உடன்கட்டை ஏறும் சதியைப் பாரதி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார்.

“எண்ணிறந்த ஸ்த்ரிஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் அரக்கனை மிதித்துக் கொல்லும்படியாக முதலிலே துக்கப்பட்ட ராம்மோஹனரின் திருவடியை நாம் மறந்துவிட்டால் நமக்கு உய்வுண்டாமா?” (4) எனப் பெண்களிடம் கேட்கிறார் பாரதியார்.

பாரதியார் இன்னும் ஒருபடி மேலே போய் ஸதியின் எரிக்கத் தயார் நிலையில் சுடுகாட்டில் இருந்த ஒரு இராசபுத்திரப் பெண்ணை(அக்பர் ஆட்சியில் சதிக்குத் தடையிருந்தது எனப் பாரதி குறிப்பிட்டுள்ளார்), ஒரு முகமதிய வாலிபன் அந்த இராசபுத்திரர்களைக் கொன்று அந்தப் பெண்ணை மீட்டுச் செல்கிறான்; அந்த முசுலீம் வாலிபனுக்கும், அந்த இராசபுத்திரப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நடப்பதாகத் துளஸிபாயி என்னும் கதையில் பாரதி கூறியுள்ளார்.

தொடக்கக் கலத்தில் பாரதியார் குழந்தை மணத்தை எதிர்த்தார்; கலப்புத் திருமணங்களை ஆதரித்தார்; பெண்கள் விவாகரத்து செய்து கொள்வதையும் ஆதரித்துள்ளார். ஏன், பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை என்றால் திருமணமே செய்து கொள்ளாமல் கூட விட்டுவிடலாம் என்று கூறியவர், பிற்காலத்தில் தன் கருத்துக்களைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொள்கிறார்.

“கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு
கஷிக்கும் அஃதுபொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்” (கும்மி)

இப்படிப் பெண் விடுதலைக் கும்மிப் பாடலை இயற்றிய பாரதிதான் பின்வருமாறும் எழுதுகிறார்:

“ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை முதலிய பெண்களின் சரிதைகளைக் கேட்கும் போது, இத்தகையோர்களுக்கு இம்மாதிரி மனப்ப்போக்கு எவ்விதம் ஏற்பட்டதென்று நினைத்து நினைத்து மிகுந்த ஆச்சரியமுண்டாகிறாது. இம்மாதிரியான கற்புடை இத்தேசத்துப் பெண்களுக்கு என்றும் ஒரு சிறந்த புவனமாக விளங்கி நின்றமை நமது நாட்டிற்கே ஒரு பெருமை ஆகும்.” (7)


மேலே, பாரதி மாதிரிக்குக் காட்டியிருக்கும் பெண்கள் தங்கள் கணவனுக்காகவே வாழ்ந்தவர்கள்; பல இன்னல்களை அனுபவித்தவர்கள். அவர்களைத்தான் பாரதி கற்புடைய பெண்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறார்.

1908 வரை பெண்விடுதலை பற்றிப் பாடிய பாரதி, புதுவைக்குச் சென்று வாழ்ந்த காலத்தில், மதவாதியாகவும் பெண்விடுதலையுணர்வு அற்றவராகவும் வாழ்ந்ததைச் சில சான்றுகள் முலம் அறிய முடிகிறது. கற்பு என்பதை எப்பாடுபட்டாவது பெண்கள் காக்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்துகிறார். “தமிழ்நாட்டு மாதர்க்கு மட்டுமேயன்றி உலகத்து நாகரிக தேசங்களிலுள்ள ஸ்திரீகளுக்கெல்லாம் கற்பு மிகச் சிறந்த கடமையாகக் கருதப்படுகிறது. அதைக் காக்கும் பொருட்டாக ஒரு ஸ்திரி எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் தகும்.”(8)

பாரதி ஒரு மதவாதி. எனவே பதிவிரதத் தன்மையில் அதிக நம்பிக்கை கொள்கிறார்.

“ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மை உண்டாகும். பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. சாவித்திரி தனது கணவனை எமன் கையிலிருந்து மீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது” (9) எனக் கூறுகிறார்.

1906இல் சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் துளஸிபாயி என்னும் கதையின் முலம் வன்மையாகக் கண்டித்த பாரதி புதுவை சென்ற பின், தீவிர மதவாதியாக மாறிய காரணத்தினால் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

1910 பிப்ரவரியில் ‘கர்மயோகி’ இதழில் பாரதி எழுதியதாவது:

“நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகவேத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரிகளே மஹா ஸ்திரிகளாவார்கள்.”(10) 1909 ஆகஸ்ட் ‘இந்தியா` இதழில், ஒழுக்கம் உள்ள பெண்களைப் பற்றிப் பாரதி கூறும்போது, “ஓ இந்தியனே! சீதை, சாவித்ரி, தமயந்தி இவர்களும், இன்னும் இவர்களைப் போன்ற ஸ்திரி ரத்தினங்களும் உன் பெண்மணிகளாவர். ஒழுக்கத்திற்கு இவர்களை நமக்கு முன்மதிரியாக வைத்துக் கொள்ளலாம்”(11) என்கிறார்.

இன்னும் பிற்காலத்தில் 1920 மே மாதத்தில் ‘தேசிய கல்வி’ என்ற தலைப்பில் பாரதி எழுதும்போது பெண்கள் விவாகரத்து செய்து கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதுகுறித்து இவர் கூறுவதாவது: “காதல் விடுதலை வேண்டுமென்று கூறும் கஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அக்னி சாஷி வைத்து ‘உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை’ என்று சத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் சஹிக்கத்தக்க அல்லது சஹிக்கத் தாகாத பந்தங்களாகவே முடிகின்றனவென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்வதென்பதும், ஆதலால் ‘விவாகம் சாச்வபந்தம்’ என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கஷியார் சொல்கிறார்கள்...

...ஆனால் தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம், மேற்படி விடுதலைக் காதற்கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை... விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மணவாழ்க்கைக்கும் பொருந்தாது. மண வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும். இன்று ஒரு மனைவி, நாளை வேறு மனைவி என்றால் குழந்தைகலின் நிலைமை என்ன ஆகும்? குழந்தைகளை எப்படி நாம் சம்ரஷணை பண்ணமுடியும்? ஆதலால் குழந்தைகளுடைய சம்ரஷணையை நாடி ஏகபத்னிவிரதம் சரியான அனுஷ்டானம் என்னு முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது.”(12)

இந்துக் கலாச்சாரத்தைக் காக்க வேண்டிய கடமையைப் பாரதி நம் நாட்டுப் பெண்களிடம் ஒப்படைக்கிறார். பிறகு அவர்கள் எப்படி விடுதலையடைய முடியும்? “தமிழ்நாட்டு மாதராகிய என் அன்புக்குரிய சகோதரிகளே! இத்தனைப் பழமையும், மேன்மையுஞ் சான்ற இரண்டு பகுதிகளின் கலப்பாகுந் தன்மையால் பாரத தேசத்திலேயே மற்றப் பிரதேசங்களிலுள்ள நாகரிகத்தைக் காட்டிலும் கூட ஒருவாறு சிறப்புடையதாகக் கருதுவதற்குரிய ஆரிய, திராவிட நாகரிகம் உங்களுடைய பாதுகாப்பிலிருக்கிறது. இதனை மேன்மேலும் போஷித்து வளர்க்கும் கடமை உங்களைச் சார்ந்தது.”(13)

தமிழர் நாகரிகம் அல்லது திராவிடர் நாகரிகம் உயர்ந்த நாகரிகம் என்று கூற மனமில்லாமல் ஆரிய, திராவிட நாகரிகம் உங்கள் பாதுகாப்பில் உள்ளது என்கிறார். முன்பு ஆரியர்-திராவிடர் என்பதே பொய் என்று கூறியவர் இப்போது அதை எற்றுக் கொள்கிறார்.

பாரதியின் கதைகளில் கூடப் பெண்களுக்கு விடுதலை அளிப்பதாக இல்லை.


ஏழைப் பெற்றோர் வசதியின்மை காரணமாக ஒரு முதிய பிராமணனுக்குத் தம் மகளை மணம் முடித்து வைக்கின்றனர். முதிய வயதான கணவன் இருக்கும் போதே, கந்தாமணி என்ற அந்த பிராமணப் பெண் வேறு ஒரு கணவனைத் தேடிக் கொண்டு அவனுடன் வாழ்வதை பாரதியாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவளைக் கிறித்துவ மதத்திற்ககு மாற்றி விடுகிறார் என்று பாரதியின் கதைமகளிரின் பாத்திரங்களை ஆய்வு செய்த வ.உமாராணி கூறுகிறார். (14)

பாரதி இறுதிக் காலத்தில் எழுதிய கதையாகிய ‘சந்திரிகையின் கதை’யில் வரும் விசாலாட்சி என்பவள் ஒரு இளம் விதவை. அவள் மறுமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள். அவ்வாறே மறுமணம் செய்து கொள்கிறாள். அவள் கணவன் பெயர் விசுவநாத சர்மா. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் அவனுக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது. இருந்த போதிலும் அவள் கணவனுக்கு பணிவிடை செய்து வருகிறாள். இதைத் தெய்வீகக் காதல் என்கிறார் பாரதியார்.

இதில் என்ன தெய்வீகத் தன்மை இருக்கிறது?

அந்தக் காலத்திலேயே பாரதி இவ்வளவு முற்போக்காகப் பெண் விடுதலையைப் போற்றி இருக்கிறாரே என்று காட்டுபவர்கள் அவருடைய தொடக்க காலக் கட்டுரைகளையே காட்டுகின்றனர். அவருடைய பிற்கால எழுத்துகள் என்பவவை முழுக்க முழுக்க மதம் சார்ந்தவை. எனவே அதில் பெண்கள் விடுதலை குற்த்துச் சிறப்பாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றெ சொல்லலாம்.

பெண் விடுதலையைப் பற்றிப் பாட்டும், கட்டுரையும் எழுதிய பாரதி, தன்னுடைய குடும்பத்திலுள்ள பெண்களுக்கு விடுதலை கொடுத்தாரா? இதோ பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன் கூறுகிறார்: “மாதர் சுதந்திரம் பாடிய கவிஞர் வீட்டில் அவர் இட்டதே சட்டம். செல்லம்மா தவிப்பு சொல்லி மாளாது” (16) என்கிறார்.

“ஒருநாள் பாரதி, 14 வயதான தமது மூத்த மகள் தங்கம்மாவைத் தம்முடன் கடையத்திலிருந்து ஐந்து மைலில் உள்ள ஒரு அய்யனார் கோயிலுக்கு வருமாறு உத்தரவிட்டார். அக்கோவில் மலைச்சாரலில் காட்டு நடுவே உள்ளது...தங்கம்மா தயங்கி வரமறுத்ததால் பாரதிக்கு கோபம் வந்து விட்டது. மகள் கன்னத்தில் விரல் பதிய அறைந்து விட்டார். தடுக்க வந்த மைத்துன்ர் மீதும் இளைய மாமனார் மீதும் காறி உமிழ்ந்தார்”.(17)


பாரதிதாசன் பெண் விடுதலைக்கு முதன் முதலாக ஓங்கிக் குரல் கொடுத்தவர் என்று கூறுவாருமுளர். ஆனால் அவருக்கும் முன்னால் தமிழகத்தில் 1882 இல் இந்து ‘சுயக்கியான சங்கம்’ (Hindu Free Thought union) என்ற ஒரு அமைப்பு பாடுபட்டு இருக்கிறது. இந்து மதத்தில் சீர்திருத்தம், பார்ப்பனர் புறக்கணிப்பு, விதவைத் திருமணம், கலப்புத் திருமணம், பெண்கல்வி பேணல் போன்றவை இச்சங்கத்தின் நோக்கங்களாக இருந்துள்ளன. அதற்காக இச்சங்கத்தாரால் ‘தத்துவவிசாரிணி’, தத்துவ விவேசினி’ என்ற தமிழ் ஏடுகளும்,ஆங்கிலத்தில் ‘The Thinker’ என்ற ஏடும் நடத்தப்பட்டுள்ளன.

விதவைத் திருமணம் குறித்து அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு : “பக்குவ காலத்தில் மணம் செய்யாமல் சிறு வயதிலேயே மணத்தை முடித்து யவ்வனப் பருவம் வருவதற்கு முன்னே பெண் காலம் சென்றால் பிள்ளைக்கு மறுவிவாகம் புரியலாமென்றும், பிள்ளை காலம் சென்றால் பெண் மறு விவாகம் புரியப்படாதென்றும் கருதி நமது தேசத்தில் சில வகுப்பினர் தவிர பிராமணர் முதலிய சில வகுப்பினர் மறுமணம் செய்யாது வருகின்றனர். இப்படிச் செய்யாதிருந்தாலுண்டாகிய தீங்குகள் எண்ணிறந்தன...

யவ்வனப் பருவமடைந்த பிறகுதான் பெண்களுக்கு விவாகம் செய்யலாமென்றும், கணவரையிழந்த சிறுமியர்களுக்குப் புணர்விவாகம் செய்யலாமென்றும், இடந்தராது போன காரணம் யாதோ! அறிவிற் சிறந்த மகான்களே! யோசியுங்கள்!.” (18)

(‘தத்துவ விவேசினி’,17.2.1881)

இப்படிப் பாரதிக்கு முன்பே பு.முனிசாமி நாயகர், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், ’தமிழன்’ ஏடு நடத்திய அயோத்திய தாசபண்டிதர் மற்றும் பலர் சேர்ந்து இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்து புதிய சமுகம் அமையவும் பெண் விடுதலையடையவும் படுபட்டனர். இந்து மதத்திலுள்ள ஆபாசங்களைப் படம் பிடித்துக் காட்டுகிற தன்மையில், ‘இந்துமத ஆசார ஆபாச தாசினி’ என்னும் கவிதை நூலை அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர் 1890 களிலேயே எழுதி வெளிப்படுத்தினார். ஆனால் பாரதியோ 1904 முதல் 1908 வரையில் பெண்விடுதலையில் தீவிரமாக இருந்தது,1908க்கு பிறகு மிதவாதியாகிவிட்டார்.

1920 கால கட்டத்தில் தீவிர இந்து மதவாதியாகிவிட்ட காரணத்தால் அவரால் பெண்விடுதலை குறித்து எதையும் எழுத இயலாமல் போய்விட்டது பாரதி கடைசிக் காலத்தில் பெண்விடுதலை பற்றிய நோக்கம் இன்றி இருந்ததோடு பெண்ணடிமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது.


அடிக்குறிப்பு

1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.243
2. மேற்படி நூல், ப.258, 59
3. மேற்படி நூல், ப.245
4. மகாகவி பாரதியார் சக்ரவர்த்தினி கட்டுரைகள், (தொ.ஆ) சீனிவிசுவநாதன், வானவில் பிரசுரம், ப.95
5. மேற்படி நூல், ப.101
6. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.நி., ப.359
7. மகாகவி பாரதியார், சக்ரவர்த்தினி கட்டுரைகள், ப.87
8. பாரதியார் கட்டுரைகள், ப.271
9. பாரதியார் கட்டுரைகள், ப.244
10. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.331,332
11. மேற்படி நூல், ப.379
12. பாரதியார் கட்டுரைகள், ப.350, 351
13. மேற்படி நூல், ப.265
14. பாரதியின் கதை மகளிர், ப.36-38
15. பாரதியார் கதைகள், வானதி பதிப்பகம், ப.246-251
16. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.121
17. மேற்படி நூல், ப.140
18. 110 ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைச் சிந்தனைகள், வே.ஆனைமுத்து, பெரியார் 115 வது பிறந்தநாள் மலர், 1993, ப.12,13


----------------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் ஐந்தாம் அத்தியாயம் -பக்கம் 50 - 56

---------------நன்றி "கீற்று" இணையதளம்

10.10.08

பாரதியின் பார்வையில் திராவிடர் இயக்கம்



1916 ஆம் ஆண்டின் கடைசியில் சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர்.சி.நடேசனார் மற்றும் பலர் ஒன்றாகச் சேர்ந்து அரசியலிலும், சமூகத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பார்ப்பனரல்லாதார் இயக்கமான “தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த இயக்கம் பார்ப்பனரல்லாதார் உயர்விற்காகவும் உரிமைக்காகவும் பாடுபட்டது. அந்தக் காலகட்டத்தில் பாரதி இவ்வியக்கத்தைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை இங்கே காண்போம்.

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றிப் பாரதியார் 1917 இல் சுதேசமித்திரனில் எழுதியதாவது:

“இந்தப் பிராமணரல்லாதார் கிளர்ச்சி கால கதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. இதில் உண்மை இல்லை. உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்கள் இல்லாமல் செய்து விட வேண்டுமென்ற ஐக்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும், ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, முனிசிபாலிடி, சட்டசபை முதலியவற்றில் கவுரவ ஸ்தானங்களையும் தாமே அடைய வேண்டுமென்ற ஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள்.

‘பிராமணரல்லாதோர்’ என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது. ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து கொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது; எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறையால் பந்தப்பட்டிருக்கிறார்கள்.

பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம் சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன. ‘பிராமணரல்லாதார்’ என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு, இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்...”


“பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும்” (1) என்று பாரதி கூறியுள்ளது எவ்வளவு பெரிய ஏமாற்று, புரட்டுத்தனம்! இந்தப் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சி பொய்யான கிளர்ச்சியாம்; அதன் தலைவர்கள் பதவி வெறி பிடித்தவர்களாம்; ஆரியர்கள், திராவிடர்கள் என்று கூறி அபாண்டமான அர்த்தம் கற்பித்துக் கொண்டார்களாம். அந்தக் கிளர்ச்சியில் உண்மை இல்லாததால் விரைவில் அழிந்து விடும் என்று பாரதி கூறியுள்ளார்.

ஆனால் அவ்வியக்கம் அன்று தென்னாட்டில் மட்டும் தான் இருந்தது. இன்றோ அது இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் பாரதியின் கணிப்பில்தான் உண்மையில்லை என்பது தெரிகிறது. பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சனை வந்தவுடன் பாரதி பார்ப்பனர்களைக் காப்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். பாணியில் வேண்டுமென்றே ஒரு குழப்பமான கருத்தை எழுதுகிறார்.

பிராமணர் யார்? ஓர் உபநிஷத்தின் கருத்து என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு பாரதி எழுதியுள்ளார்:

“பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்று பரிசோதிக்கத் தக்கதாகும்... பிராமணன் வெள்ளை நிறமுடையவன்; ஷத்திரியன் செந்நிறமுடையவன்; வைசியன் மஞ்சள் நிறமுடையவன்; சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று. ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துகளுக்குப் பிறந்திருக்கிறார்கள். ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று.

அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.”
(2)

வேதம், உபநிடதம், மனுநீதி முதலியவற்றை நன்கு படித்த பாரதியாருக்குப் பிறப்பினால் தான் பிராமணன் என்பது தெரியாதா என்ன? தெரியும். நம் முன்னோர்கள் பிராமணர் அல்லாதார் வளர்ச்சிக்கு என ஒரு கட்சி வைத்தவுடன் நம் மக்களைக் குழப்பத்தில் தள்ளவே பாரதி இக்கருத்தை எழுதியுள்ளார். இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பாரதியின் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள். பாரதியியைப் பின்பற்றித்தான் துக்ளக் சோ ‘எங்கே பிராமணன்?’ என்று எழுதினார் போலும்!

1920 டிசம்பர் 1 ஆம் தேதியன்று பாரதியார் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘திராவிடக் கஷி’ என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆரியர்-திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றும், கிறித்தவப் பாதிரிகள் இந்து மதத்தை அழிக்க இக்கதைகளைக் கட்டி விட்டதாகவும் கூறுகிறார்.

“ஹிந்து மதத்தை வேரறுத்து, இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வேலை செய்து வரும் அப்பாதிரிகள், ஹிந்து மதத்துக்குப் பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்து வருதல் கண்டு அந்தப் பிராமணரை மற்ற ஜாதியார் பகைக்கும்படிச் செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனம் மற்ற ஜாதிப் பிள்ளைகளுக்கு ஹிந்து மதத்தில் துவேஷ புத்தியுண்டாக்குவதற்கு அடிப்படையாகப் பிராமணத் துவேசம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடையார் சென்னை நகரத்து முக்கியமான கல்விஸ்தலங்கள் சிலவற்றிலுமிருந்து நெடுங்காலமாக வேலை செய்து வருகிறார்கள்.

காமம், குரோதம் முதலிய தீய குணங்களை வேதம், அஸுரரென்று சொல்லி அவற்றைப் பரமாத்மாவின் அருள்வடிவங்களாகிய தேவர்களின் உதவியால், ஆரியர் வெற்றி பெறுவதற்குரிய வழிகளைப் பற்றிப் பேசுகிறது; இந்த உண்மையறியாத ஐரோப்பிய ஸம்ஸ்க்ருத வித்வான்கள் சிலர் அஸுரர் என்று முற்காலத்தில் ஒரு வகுப்பு மனிதர் இந்தியாவில் இருந்தார்களென்றும், அவர்களை ஆரியர் ஜயித்து இந்தியாவின் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டு அதன் பூர்வ குடிகளைத் தாழ்த்தி விட்டனரென்றும் அபாண்டமான கதை கட்டி விட்டார்கள். இதை மேற்கூறிய கிறிஸ்துவப் பாதிரிகள் மிக்க ஆவலுடன் மனனம் செய்து வைத்துக் கொண்டு தம்மிடம் இங்கிலீஸ் படிப்புக்காக வரும் பிள்ளைகளில் பிராமணரைத் தவிர மற்ற வகுப்பினர் தென்னிந்தியாவில் மாத்திரம் அஸுர வம்சத்தாரென்றும், ஆதலால் பிராமணர் இவர்களுக்குப் போன யுகத்தில் (வேதமெழுதிய காலத்தில்) விரோதிகளாக இருந்தனரென்றும், ஆதலால் இக்காலத்தில் அந்தப் பிள்ளைகள் அஸுரக் கொடியை மீளவும் தூக்கிப் பிராமணரைப் பகைக்க வேண்டுமென்ன்றும் போதிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் இதில் மற்றொரு விநோதமுண்டு. அஃதியாதென்றால் இந்தியாவில் பிராமணர்களிலேயே முக்கால் பங்குக்கு மேல் பழைய சுத்தமான ஆரியர்கள் அல்லரென்றும் விசேஷமாகத் தென்னிந்த்தியாவில் இவர்கள் பெரும்பகுதி அஸுர வம்சத்தாருடன் கலந்து போனவர்களின் சந்ததியாரென்றும், அப்பாதிரிகளும் அவர்களுக்கு இந்த அம்சத்தில் குருக்களான ஐரோப்பியப் பண்டிதரும் தெரிவிக்கிறார்கள். எனவே பிராமணராகிய நாங்கள் இப்போது உங்களைப் போல் அஸுரராய் விட்ட பிறகும் நீங்கள் எங்களைப் பகைக்க வேண்டுமென்று அந்தப் பாதிரிகள் போதிப்பது முன்னுக்குப் பின் முரண்படுகின்றதன்றோ?

மேலும் இந்தத் திராவிடர் என்போர், அஸுர, ராஷஸர்களின் ஸந்ததியாரென்பதும், அவர்களிடமிருந்து பிராமணர் ராஜ்யம் பிடித்த கதையும் யதார்த்தமென்று வேடிக்கைக்காக ஒரு ஷணம் பாவனை செய்து கொள்வோம். அப்படிக்கிருந்தாலும் அந்த ஸம்பவத்தின் பிராமணரின் மந்திரத்தால் அஸுரர்களை ஜயித்ததாகத் தெரிகிறதேயன்றி மாக்ஸ்முல்லரின் கருத்துப் படிக்கும் பிராமணர் அரசாண்டதாகத் தெரியவில்லை. பிராமணர்களையடுத்து ஷத்திரியர்களே ராஜ்யமாண்டனரென்று தெரிவிக்கப்படுகிறது. இது நடந்தது ஐரோப்பிய பண்டிதரின் கணக்குப்படிப் பார்த்தாலும் எண்ணாயிர வருஷங்களுக்குக் குறையவில்லை. இப்படியிருக்க அந்தச் சண்டை மறுபடி மூட்டுவது என்ன பயனைக் கருதி?
” (3)

இப்போது தெரிகிறதா பாரதி எந்த முகாமில் இருந்தார் என்று? அன்று பாரதி கூறிய இந்தக் கருத்தைத்தான் இன்றைய ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் வேதவாக்காகக் கொண்டுள்ளனர். பாரதி தன் சாதிக்கு உயர்வு வேண்டும் என்கிற போது மூச்சுக்கு முந்நூறு தரம் ஆரியர் வீரத்தைப் பற்றிப் பேசுகிறார். அதற்கு எதிர்ப்பாகத் திராவிடர்கள் கட்சியைத் தொடங்கியவுடன் ஆரியர்-திராவிடர் போராட்டம் பொய்க்கதை என்றும் கிறித்துவப் பாதிரிகளின் தூண்டுதல் என்றும் கதை அளக்கிறார்.

பாரதிக்குத் திராவிடர் இயக்கத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தது என்பதை, அவர் நண்பர் ஆர்.சீனிவாசவரதன் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. அவர் 1920 இல் திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசு மாநாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்புகையில் கடயத்தில் பாரதியைச் சந்தித்தபோது நடந்த சம்பவம் இது.

“பாரதியிடம் அவ்வூர் அன்பர்கள் சிலர் வந்தனர். நடந்த சம்பாஷணையிலிருந்து அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்தவர்கள் போலத் தோன்றிற்று. ‘அன்பர்களே! ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள்; அவர்களுக்கு முன்னால் ஆதித்திராவிடர்கள். அதற்கு முன் இருந்தது மிருகங்கள்; ஜீவராசிகள். அவை வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டிப் பயிர் செய்து நாம் வாழ்கின்றோம். அவை உரிமை கொண்டாடினால் அனைவரும் அவைகளிடம் விட்டு விட்டுப் போகவேண்டியதுதான்!” என்று பாரதி கூறினார்” (4) என்கிறார்.

டாக்டர்.எ.எம்.நாயர் ‘ஜஸ்டிஸ்’ இதழில் திராவிடருக்குத் தனிநாடு கொடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதை கிண்டலடித்துப் பாரதி கூறியது இது. இப்படிப்பட்ட பாரதியைத்தான் நம்மில் பலர் போற்றுகிறார்கள் என்பது வேதனையாக உள்ளது.

திராவிட இயக்கத்தின் தலைவர்களைத் தேச விரோதிகள் என்கிறார் பாரதியார். “டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கஷியார் என்ற போலிப்பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது” (5) என்று கூறுகிறார் பாரதியார். டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் போன்றவர்களெல்லாம் 1916 வரையில் காங்கிரஸில் இருந்தவர்கள்தான். அதில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் கண்டு சகிக்க முடியாமல் தான் 1916 இல் திராவிடர் இயக்கத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். டாக்டர் நாயர் சுயநலமே இல்லாதவர் என்பதைப் பாரதியே 1906 இல் எழுதியுள்ளார்.

1906 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர்களில் இருந்து ஒருவரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். அன்று 32 உறுப்பினர்கள் வந்திருந்தனர். அவர்களில் நால்வர் போட்டியிட்டனர். முதல் முறை ஓட்டு வாங்கிய விவரம்:

டாக்டர் டி.எம்.நாயர் 10
பி.எம்.சிவஞானமுதலியார் 10
ஸர்.வி.ஸி.தேஸிகாச்சாரி 6
சர்.பிட்டி.தியாகராய செட்டியார் 5
கூடுதல் 31

16 ஓட்டுக்கு மேல் வாங்கினால்தான் ஒருவராவது சட்டமன்றத்திற்குச் செல்ல முடியும். எனவே தியாகராய செட்டியார் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இரண்டாம் முறை ஓட்டுகள் பெற்ற விவரம்:

டாக்டர் டி.எம்.நாயர் 14
பி.எம்.சிவஞான முதலியார் 11
ஸர்.வி.ஸி.தேஸிகாச்சாரி 7
கூடுதல் 32

சபைத்தலைவர், குறைவாக ஓட்டு வாங்கிய தேசிகாச்சாரியாரை விலகிக் கொள்கிறாரா என்றார். அவர் விலக மறுத்து விட்டார். இதேநிலை நீடித்தால் மாநகராட்சியின் சார்பாக ஒருவரும் சட்டமன்றம் செல்ல முடியாது. எனவே டாக்டர் டி.எம்.நாயர் அதிக வாக்குகள் பெற்றும் தான் போட்டியிலிருந்து விலகிவிட்டார். அந்த நேரத்தில் பாரதி எழுதியதாவது:

“தக்க சமயத்தில் டாக்டர் நாயர் விலகிக் கொள்ளாவிட்டால் சரியான மெஜாரிட்டி (16 வோட்டு) எவருக்கும் கிடைக்காமல் கார்ப்பரேஷன் மெம்பர் சட்டசபையில் இருப்பதற்கே இடமில்லாமல் போயிருக்கும். அதனால் கார்ப்பரேஷனுக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கும். அந்த அவமானம் ஏற்படாமல் தடுத்த பெருமை டாக்டர் நாயருக்கே உரித்தாகும். என்றபோதிலும் மிகவும் தகுதி பெற்றவரும் அதிக வோட்டுகள் பெற்றவருமாகிய டாக்டர் நாயர் விலகிக் கொண்டமை மிகுந்த வருத்தமுண்டாக்குகிறது.”

இப்படி 1906 இல் டாக்டர் நாயரைப் பற்றிப் பெருமையாக எழுதிய பாரதி 1917 இல் நாயரைத் தேசவிரோதி என்று எழுதுகிறார் என்றால் என்ன காரணம்? திராவிடர்கள் தனிய இயக்கம் தொடங்கிவிட்டார்களே என்ற ஆத்திரம் தானே? வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 1916 காலக்கட்டத்தில் பாரதி பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரரா என்ன? இல்லையே! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் 1916 டிசம்பர் 26 இல் பாரதி, சுதேசமித்திரன் ஏட்டில் ஆங்கிலேயர் வெளியேற வேண்டாம் என்றுதானே எழுதியுள்ளார்!

“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான்; மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை” (7) என்கிறார் பாரதி. 1916 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன பாரதி நீதிக்கட்சித் தலைவர்களைத் தேசவிரோதிகள் என்று கூறுவது பார்ப்பனச் சாதி வெறி ஒன்றைத் தவிர வேறென்ன?

நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்தபோது அதையும் கிண்டலாகவும், குத்தலாகவும் எழுதுகிறார் பாரதி.

“புதிய யுகம் வரப்போகிறது; மாண்டேகு ஸ்வராஜ்யக் குட்டி போடப்போகிறார் என்று சத்தம் போட்டதெல்லாம் கடைசியாக வெங்கட்ட ரெட்டி, ஸுப்பராயலு ரெட்டி, ராமராயனிங்கார் என்ற மூவரும் நம்முடைய மாகாணத்துக்கு மந்திரிகளாக வந்திருக்கிறார்கள். இஃதென்ன விநோதம்!” என்கிறார் பாரதியார்.

பாரதியார் டிராம் வண்டியில் செல்வது போலவும் எதிரிலே இரண்டு பேர் உரையாடுவது போலவும் ஒரு கற்பனைச் சித்திரம் வரைந்துள்ளார். அதிலே ஒரு முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுகிறார். “பிராமணர்கள் வந்தால் அதிகமாக ஆங்கிலேய உத்தியோகஸ்தருக்கு அடிமைப்பட மாட்டார்கள். எனவே ஜனங்களுக்குக் கொஞ்சம் நியாயம் கிடைக்கும். மற்றக் கூட்டத்தார் இன்னும் சரியாகப் படிக்கவில்லை.”

கலாசாலை மாணாக்கராகிய ஒரு அய்யர் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது:

“பிராமணரைத் தவிர வேறு ஜாதியாரை நியமிப்பதில் பிராமண துவேஷம் ஒன்றையே பெருங்கடமையாகவும் பரம தர்மமாகவும், ஜன்ம லஷ்யமாகவும் நினைக்கிறவர்களை விட்டு, இதர ஜாதியாரிலும் பிராமண துவேஷமில்லாதவர்களையே லார்ட் வில்லிங்டன் நியமித்திருக்க வேண்டும்’ என்றார்.

மீண்டும் முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது:

‘இதுவரை பிராமணரைப் பகைத்துக் கொண்டிருந்த போதிலும் இப்போது மந்திரி ஸ்தானம் கிடைத்ததிலிருந்தேனும், இவர்கள் அதிகப் பொறுப்புணர்ச்சியுடன் விசால புத்தி உடையவர்களாய்த் தமது பெயரைக் காத்துக்கொள்ள வேணும். இயன்றவரை எல்லா வகுப்பினருள்ளும் பஷாபாதமில்லாமல் பொதுவாக நடந்து வர முயற்சி செய்வார்களென்று நம்புகிறேன்’ இவர் சொல்லியதில் ஒருவித உண்மையிருக்கக் கூடுமென்று என் புத்திக்குப் புலப்பட்டது” என்கிறார் பாரதி. (8)

இது நீதிக்கட்சி அமைச்சரவைக்குப் பாரதி விடுத்த எச்சரிக்கை என்றே கொள்ளலாம். வகுப்புரிமையைக் கண்டித்து பாரதி எழுதியதாவது: “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முறையை ஒழித்து விடவேண்டும். அது வெறும் சதி, ஏமாற்றென்பது ருஸுவாய் விட்டது. பிராமணரல்லாதாருக்குத் தனியாக ஸ்தானங்கள் ஏற்படுத்தியது புத்தியில்லாத குழந்தை விளையாட்டன்றி மாற்றில்லை” (9) என்கிறார் பாரதி.

பாரதி வகுப்புரிமையை எதிர்த்த காரணம் அது பார்ப்பனர்களுக்குப் பாதகமாக இருந்தது என்பதால்தான். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த காலத்தில் வகுப்புரிமையை எதிர்த்ததாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் அக்காலக் கட்டத்தில் பாரதிக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பது துளியும் இல்லை. மாறாக வருணாசிரமத்தில் அக்கறையுள்ளவராய் இருந்தார்.

இவரை விடத் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த வ.உ.சி. 1920லேயே வகுப்புரிமையை ஆதரித்துத் திருநெல்வேலி காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அது வருமாறு : “இந்த மாநிலத்தில் நிலவும் தற்பொழுதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு பொது வேலைகளிலும், கவுரவ உத்தியோகங்களிலும் பிராமணன், பிராமணரல்லாத சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்” (10) என்கிறார் வ.உ.சி. (இந்து 25.6.1920)

மேற்கண்ட ஆதாரங்களால் 1916 முதல் 1921 வரை (அதாவது அவர் சாகும்வரை) பாரதியார் பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய திராவிடர் இயக்கத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தும், பார்ப்பனியத்தை ஆதரித்தும் வந்துள்ளார் என்பதை அறியலாம்.

அடிக்குறிப்பு

1. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.402,404
2. மேற்படி நூல், ப.404-407
3. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.349-351
4. பாரதியைப் பற்றி நண்பர்கள் (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், வானதி பதிப்பகம், ப.185
5. பாரதியார் கட்டுரைகள், ப.352
6. பாரதி தரிசனம் முதல் தொகுதி, நி.செ.பு.அ. ப.348,349
7. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.223
8. மேற்படி நூல், ப.381
9. மேற்படி நூல், ப.393
10. வ.உ.சிதம்பரம் பிள்ளை, என்.சம்பத்-பெ.சு.மணி, பப்ளிகேசன்ஸ் டிவிசன், 1995, புதுதில்லி- ப.224,225



-----------------------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் நான்காம் அத்தியாயம் பக்கம் 41-49

----------------நன்றி: "கீற்று" இணையதளம்